நாமசூத்திரர்கள் இயக்கம்!


சேகர் பண்டோபாத்தியாயா நவீன இந்தியாவின் மிகமுக்கியமான வரலாற்று ஆசிரியர்களில் முதன்மையானவர். ஜவகர்லால் நேரு பல்கலையைச் சேர்ந்த மார்க்சிய பேராசிரியர்கள் குழு இந்திய விடுதலைப் போரை பெருமளவில் காங்கிரசை மையப்படுத்தி எழுதினார்கள். ரனஜித் குஹா, டேவிட் ஹார்டிமான், சுமித் சர்க்கார் முதலியோர் விளிம்புநிலை மக்களைக் கொண்டு நவீன இந்திய வரலாற்றைக் கட்டமைத்தார்கள். சேகர் பண்டோபாத்தியாயா இரு குழுவையும் சாராமல், அதேசமயம் விளிம்புநிலை, காங்கிரஸ், கவனத்தில் கொள்ளப்படாத பிற மக்கள் இயக்கங்கள் ஆகியவற்றை இணைத்து அவர் தன்னுடைய நூல்களைக் கட்டமைத்தார். அவரின் நாமசூத்திரர்கள் இயக்கம் நூலும் இப்படிப்பட்ட வங்கத்தில் ஜாதியத்துக்கு எதிராக எழுந்த மிகமுக்கியமான ஒரு மக்கள் புரட்சியைக் கண் முன் நிறுத்துகிறது.

காங்கிரஸ் ஆங்கிலேய அரசை எதிர்த்தது என்பதால் ஆங்கிலேய அரசோடு இணக்கமாக இருந்தவர்கள் தேசத்துரோகிகள் என்கிற பார்வை முன்வைக்கப்படுகிறது. இதில் ஒருசாரார் மீதான குற்றச்சாட்டு உண்மைதான் எனினும், எண்ணற்ற விளிம்புநிலை மக்கள் வர்ணாசிரம ஒடுக்குமுறையைத் தாண்டி முன்னேற ஆங்கிலேய ஆட்சியே உதவியது. மேற்கத்திய கல்வி முறை, தொழில்மயமாக்கம், வர்ணாசிரம அடிமை முறை சாராத முறைகளில் தங்களுக்கான தொழிலை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள், இந்தியாவை ஒருங்கிணைத்த ஒரே அரசு ஆகியன அவர்களுக்கான வெளியை, வாய்ப்புகளை வழங்கின..

 

கிழக்கு வங்கத்தின் கழிமுகத்தில் வாழ்ந்து வந்தவர்கள் சண்டாளர்கள் என்று அறியப்பட்ட மக்கள். அவர்கள் ஜாதிய அடுக்கில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டார்கள். வங்கத்தின் கழிமுகத்தில் மீனவர்களாக, பரிசல்காரர்களாக இருந்த இவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் விவசாய நிலங்கள் அதிகமானதால் விவசாயத்தில் பங்குபெறும் வாய்ப்பு உண்டானது. எனினும், அவர்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகளாகவே வயிற்றுப் பிழைப்பை மேற்கொள்ள நேரிட்டது.

வங்கத்தின் பாகர்கஞ்ச், தெற்கு பாரித்பூர், குல்னா, செஸ்ஸோர் மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருந்தார்கள் இம்மக்கள். தொல்குடியான இவர்கள் வர்ணாசிரம முறையில் சிக்கி சண்டாளர்கள் என்று அறியப்பட்டார்கள். முடிவெட்டுபவர்கள், துணி வெளுப்பவர்கள் கூட அவர்களுக்குச் சேவகம் செய்ய மறுக்கிற அளவுக்குக் கடைநிலையில் வைத்துப் பார்க்கப்பட்டார்கள். இவர்களுக்குச் சடங்குங்கள் செய்ய என்று தனியாகச் சண்டாள பிராமணர்கள் என்றொரு இழிவாகக் கருதப்படும் பிரிவு ஒன்று ஏற்பட்டது. சாதியக் கொடுமை தாங்காமல் எண்ணற்றோர் கிறிஸ்துவ, இஸ்லாமிய மதத்தைத் தழுவவதும் இப்பிரிவில்
நடைபெற்றது.

1911 கணக்கெடுப்பின்படி ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இம்மக்களில் 77.9 சதவிகிதம் பேர் விவசாயக் குடிகளாக இருந்தார்கள். அவர்களில் ஐந்து சதவிகிதத்தினரை தவிர்த்து மற்றையோர் எல்லாம் அடிமை விவசாயிகளாக இருந்தார்கள். சணல் வியாபாரம் ஓரளவுக்கு வருமானம் ஈட்டித்தந்தது. ஆங்கில அரசின் கீழ் பலர் கல்வி கற்றார்கள். தங்களுக்குள் இருக்கும் உட்பிரிவுகள் இடையே ஜாதி வேறுபாடு பாராட்டக்கூடாது என்று முடிவெடுத்தார்கள் எனினும் அது நடைமுறைக்குப் பெரும்பாலும் வரவில்லை.

1872-ல் சண்டாளர் இயக்கம் வலுவாக எழுந்து நின்றது. கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களின் தாக்கத்தோடு, இயற்கை வழிபாடான கர்த்தபஜாஸ் இயக்கமும் சமூக நீதிக்கு போராட அவர்களுக்குத் தூண்டுகோலானது. தங்களை விலக்கி வைக்கும் பத்ரோலக் முதலிய ஆதிக்க ஜாதிகளுக்கு எந்தச் சேவையும் செய்யக்கூடாது என்று தீர்மானம் இயற்றினார்கள். நான்கு மாதங்களில் இயக்கம் மிகப்பெரிய சமூகப் புறக்கணிப்பு இயக்கமாக எழுந்து நின்றது. பின்னர்ப் படிப்படியாகத் தன்னுடைய ஆதரவை இழந்தது.

ஹரிசந் தாகூர் எனும் இப்பிரிவை சேர்ந்தவர் ‘மதுவா’ எனும் வைணவப்பிரிவை உருவாக்கினார். ஜாதி வேறுபாடுகள் அற்றதாக அந்த வைணவப்பிரிவை உருவாக்கி அதில் தன் மக்களை அவர் இணைத்தார். ஆதிக்க ஜாதி இந்துக்கள் அந்தப் பிரிவை நிராகரித்தார்கள். ஹரிச்சந்தின் மகன் குருசந்த் அடுத்து களத்துக்கு வந்தார். சமூகச் சீர்திருத்த இயக்கமாக மதுவா இயக்கத்தைக் கட்டமைத்தார். பெருமாளே ஒரு கடவுள் எனச் சொல்லப்பட்டு, கூட்டு வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன. சுய கற்றல், வருவாய் ஈட்டுதல், பொறுப்புணர்வு ஆகிய மூன்று கொள்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேல் எழுப்புதல் கூட்டங்கள் இம்மக்களால் கூட்டப்பட்டுப் பல்வேறு சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சண்டாளர்கள் என்கிற தங்களை அழைப்பதை மாற்றி, ‘நாமசூத்திரர்கள்’ என அழைக்க வேண்டும் என்று கோரினார்கள். மேலும், இருபத்தி இரண்டு சதவிகிதம் என்கிற அளவுக்கு நிலவிய குழந்தைத் திருமணம் குறைக்கப்படவும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. கல்வி கற்பிப்பதும் அரசின் உதவியோடு நடக்க ஆரம்பித்தது. இந்திய விடுதலைப் போரை செலுத்த முயற்சித்துக் கொண்டிருந்த தேசியவாதிகள் முந்தைய காலம் பொற்காலம், தற்காலம் கொடியது என்று சொல்லிக்கொண்டிருக்க நாமசூத்திரர்களின் இதழான ‘பாதுகா’ ‘இந்து சமூகத்தை இந்து அரசர்கள் ஆட்சி செய்த பொழுது தூங்கிக் கொண்டு இருந்தோம். மனிதரின் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்ட ஆங்கிலேயரின் கருணையால் நீண்ட உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டோம்.’ என எழுதியது.

நாமசூத்திரர்கள் தங்களுக்கான அமைப்புகளை உருவாக்கிக் கொண்டார்கள். நிதி வசூலித்து அதைத் தங்களின் மேம்பாட்டுக்கு செலவழித்தார்கள். ஒரு கைப்பிடி அரிசி பெற்று உணவிடவும் செய்தார்கள். சடங்குகள் செய்யவும் ஆட்களைப் பெற்றார்கள். கல்விக்கூடங்களை அமைத்தார்கள். குழந்தைத் திருமணத்தை எதிர்த்துப் பேசினார்கள். இப்படி அவர்களின் சீர்திருத்தங்கள் விரிவடைந்தன.
1906-ல் வங்கத்தில் பஞ்சம் ஏற்பட்ட பொழுது எண்ணற்ற விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். அஸ்வினி குமார் தத் தலைமையிலான சுதேசி பந்தோபத் சமிதி நிவாரணங்களை வழங்கியது என்றாலும் அது பெரும்பாலும் பத்ரோலக் விவசாயிகளுக்கே சென்றது.

கிறிஸ்துவ மிஷனரிக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உதவிகள் செய்தன. பள்ளிகள் கல்விக்காக இயங்கின. மருந்தகம் துவங்கப்பட்டது. கைம்பெண் இல்லமும் துவங்கப்பட்டது. பல நாமசூத்திரர்கள் மதம் மாறுவதும் நிகழ்ந்தது.
1905-ல் நிகழ்ந்த வங்கப்பிரிவினை விடுதலைப் போரில் தீவிரம் செலுத்திய வங்கத்தை மதரீதியாகப் பிளவுபடுத்த எண்ணியது என்று ஒரு பக்கம் சொல்லப்படுகிறது. அது ஆதிக்க ஜாதிகளான பிராமணர்கள், பத்ரோலக்கள், பைடியாஸ் பிடியில் நடந்த ‘வகுப்பு ஆட்சியை’ அழிக்க முயன்றது என்கிறார் ரிச்சர்ட் குரோன். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நிகழ்ந்த இந்தப் பிரிவினையைக் கவனமாக நோக்கினார்கள் நாமசூத்திரர்கள்.

நாமசூத்திரர்களின் ஆதரவைப் பெற்றுவிட வங்கப்பிரிவினையை ஒட்டி எழுந்த சுதேசி இயக்கம் முயன்றது. மலிவான விலையில் ஆடைகளோ, பொருட்களோ சுதேசிகளிடம் இருந்து கிடைக்காத சூழலில் நாமசூத்திரர்கள் அந்நிய பொருட்களையே வறுமையால் பயன்படுத்தினார்கள். அரசும் லிவர்பூல் உப்பை அவர்களுக்கு இலவசமாக வழங்கியது. பண உதவி செய்து சில இடங்களில் நாமசூத்திரர்கள் ஆதரவை சுதேசி இயக்கத்தினர் பெற்றார்கள். பரீசலில் நடந்த கூட்டத்தில் வண்ணார், நாவிதர் முதலியோர் நாமசூத்திரர்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டது. அதேசமயம் தங்களின் கையால் உணவு, தண்ணீர் வாங்கி உயர்சாதியினர் தீண்டாமையைக் கைவிட வேண்டும் என்ற நாமசூத்திரர்களின் முக்கியக் கோரிக்கை பற்றி மூச்சுகூட விடவில்லை சுதேசி பந்தாப் சமிதி இயக்கத்தினர் நடத்திய அக்கூட்டம். ஒடுக்கப்பட்ட பிற மக்களின் மீது நாமசூத்திரர்களை மதிக்கும் பணியைத் திணித்தது.

நாமசூத்திரர்கள் அரசின் பக்கம் பிரிவினையின் பொழுது பெருமளவில் இஸ்லாமியார்களுடன் தங்களைச் சுரண்டிய நிலச்சுவான்தார்களுக்கு எதிராகக் கைகோர்த்தார்கள். கடும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. டாக்கா பகுதியில் ஒரு பெண்ணின் ஆடையைக் களைந்து சோதனை செய்கிற கொடுமை நிகழ்ந்தது. செருப்படியும் தரப்படும் அநியாயமும் நடந்தது. 1911-ல் நடைபெற்ற மக்கள் தொகை பொதுக் கணக்கெடுப்பில் சண்டாளர் என்கிற சொல் நீக்கப்பட்டு, ‘நாமசூத்திரர்கள்’ என்றே தங்களை இம்மக்கள் முழுக்கப் பதிந்து கொண்டார்கள். ஒடுக்கப்பட்ட மக்களான அவர்கள் பிற்படுத்தப்பட்டோராகக் கருதப்படுவது நிகழ்ந்தது.

மூன்று இடங்களில் நாமசூத்திரர், இஸ்லாமியர் இடையே கலவரங்கள் ஏற்பட்டன.. இரண்டு இடங்களில் சாதாரண மோதல் பெரும் சச்சரவாக உருவெடுத்தது. சில்ஹெட்டில் மட்டும் பலகாலமாக இருந்த பகைமை கலவரக மாறியது. இதைத் தேசியவாத இயக்கம் பயன்படுத்திக்கொள்ளத் தவறவில்லை. ‘பசு-இந்து-முசல்மான்’ எனப் பெயரிடப்பட்ட துண்டறிக்கை நாமசூத்திரர்கள்-இஸ்லாமியர்கள் ஆகியோரிடையே பகைமையை மேலும் கூட்டப்பார்த்தது. பிரம்ம சமாஜம் ஒடுக்கப்பட்டோர் உதவி மிஷனை நாமசூத்திரர்கள் பகுதியில் துவங்கி சேவைகள் செய்தது. என்றாலும், அது மிஷனரிகள் அளவுக்குப் பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டிருக்கவில்லை.

1916-ல் கோகலே கட்டாயத் தொடக்கக்கல்வி திட்டத்தை அமல்படுத்தும் தீர்மானத்தைக் கொண்டுவந்த பொழுது அது தங்களை மேம்படுத்தும் என்பதால் நாமசூத்திரர்கள் தங்களின் ஆதரவை வழங்கினார்கள். சனதான இந்துக்கள் நடத்திய இதழ்கள் இதைக் கடுமையாக எதிர்த்தன. எனினும், இதற்குப் பிறகும் நாமசூத்திரர்களின் ஆதரவை தேசிய இயக்கம் முழுமையாகப் பெறமுடியவில்லை. ஹரிசந்த் எனும் அவர்களின் தலைவரை ஆங்கிலேய அரசு கவுரவித்தது. காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்தும் அவர்கள் விலகியே இருந்தார்கள்.

அப்பணசாமி மொழிபெயர்ப்பில் இந்நூல் சிறப்பாகப் புலம் வெளியீடாக வந்துள்ளது. அருமையான வரலாற்றுப்பதிவு. 1911-க்கு முன்னர் நடந்த நாமசூத்திர பெண்ணின் மீதான வன்முறைக்கு அப்பொழுது இந்திய அரசியல் களத்துக்கே வந்திராத காந்தியின் அகிம்சையைக் காரணம் காட்டுகிறார் மொழிபெயர்ப்பாளர். சிறப்பான மொழிபெயர்ப்பில் உறுத்தலான தருணம் இது. பொறுப்புடன் எழுதியிருக்கலாம்.

பக்கங்கள்: 64
விலை: 50

பின்னூட்டமொன்றை இடுக