உழைக்கின்றவனின் ரத்தம் மீது ஒப்பந்தம்


உழைக்கின்றவனின் ரத்தம் கேட்டார்கள்
அதன் மீது ஒப்பந்தம் என்றார்கள்
கல்லில் கரைந்து போனவனின் கரங்கள் கேட்டார்கள்
அதில் கீதம் இசைக்கப்போவதாக
குழைந்தார்கள்

வியர்வை சிந்தியவனின் காப்புகளை கேட்டார்கள்
அதில் வலியின் ஓவியம் வரையப்போவதாக வாக்குறுதி தந்தார்கள்
தூக்கத்தின் நடுவேயும் கவலைகள் தாங்கும் அவனின் தூக்கம் சுமக்கும் அவனின்
இதயம் கேட்டார்கள் அருங்காட்சியகம் அமைக்க போவதாக சொன்னார்கள்
யார் நீங்கள் என கேட்டேன்,”அரசாங்கம் !”என்றார்கள்
நான் எனக்கு பேச வராது என்று மௌனித்து காற்றோடு கலந்துப்போனேன்

நிலாவும்,வானவில்லும் வேண்டாம்


கடலின் நுரைப்பை அள்ளி
என் கண் நோக்கி நீட்டினாள் அவள்,
வானவில்லின் கரைப்பை
கன்னத்தின் கரையோரம் தீற்றினேன்
கிளைபரப்பிய நிலாமரத்தில் பூவாக பூத்தது

பிச்சைபாத்திரத்தில் விழுந்தது
பிரிவிற்கான பைசாக்கண்ணீராக
மிச்சசொச்ச கோலவெளியில்
வெறுமையின் முடியின் சிடுக்கெடுக்க எத்தனிக்கிறோம்
நாங்கள் இருவரும் அதற்கு மொட்டைத்தலை என தெரிந்தும்
காதுமடல்களின் ஓட்டைகள் ஊடே
இது தான் அதுவோ ? என பகர்கிறேன்
“எதுவோ ?”என கேட்கிறாளோ அவள் ?
தன் வயிற்றை மெள்ள
பொம்மை செய்ய களிமண்
பிசைவதை போல தடவி
என் நெஞ்சை பிசைகிறாள்
“அதுதான் !”என்பதற்கு மேல்
என் மொழியில் வார்த்தைகள் இல்லை !
உங்களிடம் உள்ளதா மகள்களின்
மழலைமொழிக்கு அகராதி ?
அப்படியே வாய்த்தாலும் பசிக்கான பொருளை சோறில்லாமல் தரமுடியுமா உங்களால் ?
நிலாவும்,வானவில்லும் வேண்டாம்
என அரசுக்கு சொல்லச்சொன்னால்
என் மகள்
அனேகமாக
அவளும்,”தீவிரவாதி!”
என கைது செய்யப்படலாம்
அவள் கல்லறை மீதான…………………………………………… கைது வாரன்ட் உடன் !
அழகான அரசாங்கம் ,அற்புதமான உலகம் !
வேறென்ன சொல்ல ?

ஆங் சாங் சூ கி.


ஆங் சாங் சூ கி, 1945-ஆம் ஆண்டு, ஜூன் 19-ஆம் தேதி ரங்கூனில் பிறந்தார். அப்பா, பர்மாவின் நவீன ராணுவத்தை உருவாக்கிய பெருமைக்கு உரியவர். ஆங்கிலேயரிடம் இருந்து பர்மா விடுதலை பெற, முக்கியக் காரணமாக இருந்தவர். விடுதலை பெற்ற ஆண்டே எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது சோகத்தின் உச்சம். சூ கி-க்கு அப்போது இரண்டு வயது.


உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள்.இவரின் அன்னை இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டதால், பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு இந்தியாவில் கழிந்தது. அதனால், ‘இந்தியாவையும் என் அன்னை மண் போலவே உணர்கிறேன்’ எனச் சிலாகித்துக் குறிப்பிட்டு உள்ளார். லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் அரசியலில் பட்டம் பெற்று, ஆக்ஸ்ஃபோர்டு நகரில் தொடர்ந்து படித்தார். அதற்குப் பின், ஐ.நா சபையில் வேலை பார்த்தார். கல்லூரிக் காலத்தில் பழக்கமான மைக்கேல் ஆரிஸை மணந்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.

தாய்க்கு உடல்நிலை சரியில்லை என அறிந்து அவரைப் பார்க்கச் சொந்த நாட்டுக்கு வந்தார். பர்மா மக்களை வறுமையும் துன்பமும் வாட்டி எடுப்பதையும், அதைப் பற்றிக் கவலைப்படமால் ராணுவ அரசாங்கம் செயல்படுவதையும் கண்டு வருந்தினார். தாய் நாட்டிலேயே தங்கி இருந்து போராடுவது என அன்னையின் மரணத்தின்போது முடிவு எடுத்தார்.

‘மக்களுக்கு முதலில் ஜனநாயகம் தேவை’ என்று நினைத்தவர், தைரியமாக ஜனநாயக லீக் கட்சியைத் தொடங்கினார். அதனை மக்கள் அன்போடு வரவேற்றனர். ராணுவ அரசாங்கம் இவருக்கு உண்டான ஆதரவைப் பார்த்துக் கொதித்தது. இவரை வீட்டுச் சிறையில் வைத்தது.

அதுவரை ஆயுதம் ஏந்தியும் வன்முறையில் நம்பிக்கைகொண்டும் இருந்த மக்களை அமைதி வழிக்குத் திருப்பினார். அரசாங்கம், தேசம் ஆகியவற்றையும் தாண்டி அற்புதங்களைச் செய்யக்கூடியது அமைதி மட்டும்தான் என மக்களுக்கு அறிவுறுத்தினார். தான் இந்தப் போராட்ட முறையைக் கைக்கொள்வதற்குக் காரணமாக அமைந்தது மகாத்மா காந்தியின் வாழ்க்கை எனப் பெருமையோடு குறிப்பிடுவார்.

யாரையும் பார்க்கக் கூடாது, தொலைபேசி வசதியும் கிடையாது, சேதம் அடைந்த, பழமையான வீட்டில் பல சமயம் மின்சாரம் இருக்காது. பெரும்பாலும் மெழுகுவத்தி வெளிச்சம்தான். வயதான இரண்டு பெண்கள்தான் உதவிக்கு என்ற நிலையில் 20 ஆண்டுகள் அந்தத் தனிமைச் சிறையில் வாடினார்.

1990-ல் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், 485 இடங்களில் போட்டியிட்டு, 392 இடங்களில் ஜெயித்துக் காட்டினார். ஆனால், இந்தத் தேர்தல் செல்லாது என்று அறிவித்த ராணுவ ஆட்சியாளர்கள், ஆங் சாங் சூ கியின் கட்சிக்குத் தடை விதித்தனர். எனினும், மக்கள் தொடர்ந்து தங்களின் நம்பிக்கை நாயகிக்கு ஆதரவு தந்தனர். அகிம்சை வழியில் போராடியதற்காக, 1992-ஆம் வருடம் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1995-ஆண்டில் தன் கணவர் உயிர் பிரியும் நிலையில் இருந்ததால், லண்டனில் உள்ள கணவரைப் பார்க்க அரசாங்கத்திடம் அனுமதி கேட்டார். ”போகலாம். ஆனால், திரும்பி வரக் கூடாது’ என உறுதிமொழி கேட்டது அரசு. தீர்க்கமாக மறுத்து, கணவரின் மரணத்திற்குக்கூடப் போகாமல் வீட்டுச் சிறையிலேயே கம்பீரமாக இருந்தார்.

உலக நாடுகளின் பார்வையில் விழுந்த ஆங் சாங் சூ கியை விடுதலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான ராணுவ அரசு, கடந்த 2010-ல் அவரை விடுதலை செய்தது. சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் மொத்தம் இருந்த 45 தொகுதிகளில் 42-ல் இவரின் கட்சி வென்றது.

”வாழ்க்கை முழுக்கப் போராட்டத்தில் கழிந்ததில் வருத்தம் இல்லை. என் மக்களின் வாழ்க்கை என்றைக்காவது ஒரு நாள் மாறும் என்கிற நம்பிக்கையில் தொடர்கின்றன என் செயல்கள்” என்கிறார் ஆங் சாங் சூ கி.

மயில்சாமி அண்ணாதுரை


நிலவு நாயகன் மயில்சாமி அண்ணாதுரை பழகுவதற்கு இனிமையான ,எளிமையான மனிதர் அவர் !அவருடன் உரையாடிய இரவு என்னை ஈர்த்த பிள்ளை என என்னைப்போன்ற எளியவனை எல்லாம் குறித்த பரந்த மனதுக்காரர் !அவரிடம் பேசி அவரைப்பற்றி சுட்டிவிகடனில் வெளியான என் டென் இதோ உங்கள் அனைவருக்கும் !
நிலவை நோக்கி கனவுகளை முடுக்கிய நாயகன் …இளைஞர்களின் அறிவியல் திசைகாட்டி மயில்சாமி அண்ணாதுரை, பொள்ளாச்சி அருகி

ல் உள்ள கோதவாடி கிராமத்தில் ஜூலை 2, 1958-ல் பிறந்தார். தந்தை, மயில்சாமி, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். மாலையில் தையல் வேலையும் செய்வார். அறிஞர் அண்ணாவின் மீதான ஈடுபாட்டால், தன் பிள்ளைக்கு ‘அண்ணாதுரை’ எனப் பெயர் சூட்டினார்.

மயில்சாமி அண்ணாதுரையின் பள்ளிப் பருவம், அரசுப் பள்ளியிலே அமைந்தது. ஒழுங்கான வகுப்பு அறைகள்கூட கிடையாது. ‘மாட்டுக் கொட்டகையில் ஒரு வருஷம், கோயில் திண்ணையில் மறு வருஷம், கோணிப் பையே குடையாக, செருப்பே இல்லா நடைப் பயணம்’ எனக் கவிதை மூலம் குறிப்பிட்டு இருக்கிறார். ஆறாம் வகுப்பு படிக்க, 5 கிலோ மீட்டர் நடந்து செல்வார்.

தினமும் ‘பகவத் கீதை’ படிப்பதை வழக்கமாகக்கொண்டு இருக்கிறார். திருக்குறளின் மீது எல்லையற்ற பற்றுதல் உண்டு. பள்ளிக் காலத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட குறள்களை வெகுவேகமாகச் சொல்வார். ‘அரசாங்கத்தின் பிற்படுத்தப்பட்டோர் ஊக்கத் தொகையைப் பெறக் கூடாது’ என்ற அப்பாவின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து கொண்டாலும், 11-ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக, அரசாங்கம் ­­தங்கப் பதக்கம் வழங்கி, படிப்புச் செலவையும் முழுமையாக ஏற்றுக்கொண்டது.

‘நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம்’ கல்லூரியில் எம்.ஏ. மின்னணுவியல் பயின்றார். தமிழ் வழியில் இருந்து, ஆங்கில வழிக் கல்விக்கு மாறியதால் முதலில் சிரமப்பட்டார். பிறகு, தமிழ் ஆசிரியர் சிற்பி அய்யாவின் ஊக்குவிப்பால், முதன்மையான மாணவனாக ஜொலித்தார். தான் எழுதிய ‘கையருகே நிலா’ என்கிற கட்டுரைத் தொகுப்புக்கு, முன்னுரையை சிற்பியிடம் இருந்தே பெற்றார்.

இளநிலைக் கல்வி படிக்கும்போது, மற்ற மாணவர்கள் ஒரு புராஜெக்ட் செய்யவே திணறியபோது, நான்கு புராஜெக்ட்கள் மற்றும் முதுநிலைக் கல்வியில் மூன்று புராஜெக்ட்கள் செய்தவர் மயில்சாமி அண்ணாதுரை. ‘இதற்குக் காரணம், அன்னைத் தமிழ் வழி கற்ற கல்வியே’ எனப் பெருமிதத்தோடு குறிப்பிடுவார்.

‘ஆரோலேக்’ என்கிற ஃப்ரெஞ்ச் கம்பெனியில் வேலை கிடைத்தபோதும், அதைவிடக் குறைந்த ஊதியம் கிடைக்கும் இஸ்ரோவில் பணியாற்றினார். பிறகு, நாசாவில் வேலை வாய்ப்பு வந்தது. அன்னை நாட்டுக்குப் பணியாற்றுவதே நிறைவு’ என்று அதை மறுத்துவிட்டார்.

இஸ்ரோவில் பணியாற்ற நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது, நுண்செயலியைப் (Microprocessor) பற்றிய இவரின் அறிவு, அங்கே இருந்தவர்களைப் பிரமிக்கவைத்தது. வேலைக்குச் சேர்ந்த ஆறாவது மாதத்திலேயே, செயற்கைக்கோள்களின் இயக்கத்துக்கான மென்பொருள் முன்மாதிரியை உருவாக்கலாம் எனச் சொன்னார். அதை, வெற்றிகரமாகவும் செய்து முடித்தார். இதன் மூலம், சென்ஸார் செயல் இழந்தாலும் செயற்கைக்கோள் செயலாற்ற முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தினார்.

விஞ்ஞானிகள் கூட்டத்தில்… பிறரின் கருத்துக்களில் தவறு இருந்தால், உடனே சுட்டிக்காட்டிவிடுவார். ‘இது சரியான அணுகுமுறை அல்ல. தனியே அந்த அறிஞரிடம் சென்று விளக்க வேண்டும்’ என்ற முனைவர் நாகபூஷணம் அவர்களின் அறிவுரை, தன் வாழ்வைத் திருப்பியது என்பார். இவரின் புதிய அணுகுமுறை, சந்திராயனின் இயக்குனராக இவரை உயர்த்தியது.

சந்திராயன் மூலம் நிலவில் தண்ணீர் உருவான இடத்தைக் கண்டறிந்து, உலகைத் திரும்பிப் பார்க்கவைத்தார். அந்த செயற்கைக்கோள் எடுத்த படங்களின் துல்லியம், உலக நாடுகளைப் பிரமிக்கவைத்தது. ‘இது கூட்டு முயற்சியின் வெற்றி’ என்று அடக்கத்துடன் குறிப்பிட்டார். மேலும், ‘சாதாரணக் கிராமங்களில் இருந்து கிளம்பிய நாம், இந்த வெற்றியை… நாம் புறப்பட்ட மண்ணில் உள்ள இளம் பிள்ளைகளுக்குச் சொல்லி உத்வேகப்படுத்த வேண்டும்” என்று தன் குழுவினருக்குச் சொன்னார்.

விடுமுறை நாட்களில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களோடு உரையாற்றி உத்வேகப்படுத்துகிறார் மயில்சாமி அண்ணாதுரை. அன்னைத் தமிழில் பயிலும் மாணவர்களுக்கு வளமான எதிர்காலம் உண்டு என்பார். இதையே…

‘அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்’
எனத் தன் கவிதை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

ஓங்குங்க ஒழிப்புகள்


வெட்டுக்காயங்களின் வெளி இது
ரத்தமும்,அழுகையும் பிசுபிசுத்து
அழுக்கேறிய மணல்வெளிகள் இவை
உரிமைக்காக கதறியழுத
தொண்டை நரம்புகள் கத்தரிக்கப்படும் களம் இது !

கண்ணீர் சரங்கள் தெறித்தவுடனே
காய்த்தல் புரியும் அதிகாரச்சூரியனின் பரப்பு இது !

ஏழை என்பதால் நியாயம் நிழலின் வெளிச்சம் போலத்தான் -நிராசை
எளியவன் என்பதால் விடுதலை- விடுகதை !
எதைச்சொன்னாலும் எதிர்க்காத மௌனம் மட்டுமே நமக்குண்டு !

தந்தியறுந்த வீணையின் இசைபோல
என்றைக்கும் கேட்பதில்லை எங்கள் வலியின் நாதம்
பட்டுப்போன நிலத்தின் பலாமரங்களுக்கு அவை கேட்கலாம் !
நீட்டித்து வளர்ந்த பிச்சை வயல்களின்
பாளவெடிப்புகளில் பெருகிக் கிடக்கிறது
வெறுமையின் வார்ப்புகள் !
வெட்டுக்காயங்களின் வெளி இது !
தழும்புகளின் தடங்கள் கூட நமக்கானது இல்லை !
போராட்டம் ,புரட்சி என
அறிவாளிகளின் அகராதி இவற்றை அர்த்தப்படுத்தலாம்
இது என்றைக்கும் எழவே முடியாதவர்களின்
வாழ்தலுக்கான எத்தனிப்பு…
அவ்வளவே !

ஏதுமற்ற வெளி


விண்ணப்ப நாடு அது !
மெலிதாக உங்கள் சகோதரனின் ரத்தத்தை கோப்பையில் தருவார்கள்;
ஆஹா என அதை கறுப்பு வெள்ளை பூமியில்
முன்னேற்றம் என கவிழ்க்கிறார்கள்
இலவசமாக எளியவனான உங்களின் கோவணத்தை திரித்து திரியாக்கி

சொர்க்கம் புக கயிறு
எனக்கையில் திணிப்பார்கள் வரியை விதித்தபடியே !
குழந்தைகளின் கனவுக்கோட்டைகளின் தகர்ப்புகளின் மண்ணெடுத்து
தற்கொலைகளின் வேர்நீர் வார்த்து
“மாபெரும் மாற்றத்தின் பின்விளைவுகள் !”என்பார்கள்
மழலைகள் இல்லா மௌனஏகாந்தம் தரப்போகும் ஏவலர்கள்
நீங்கள் பிறப்பதற்கும்,இறப்பதற்கும்
நடுவில் வாழ்கிறோமா நாங்கள் என்கிற விண்ணப்பதிற்கான
புதிர் அவிழவே வழி இல்லாமல்
அறிக்கைகளின் நாடாமுடிச்சுகளில் –
பிரஜைகளின் உயிர்குடிக்கும் வித்தியாச
தேசம் இது !
கொஞ்சம் இருங்கள் இது கவிதையா என விண்ணப்பித்து அறிந்துகொண்டு வருகிறேன்

சமந்தா ! ! !


கடவுள் இன்னும் மனித இனத்தின் மீது நம்பிக்கை இழக்கவில்லை என்பதைத் தான், மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பிஞ்சுக் குழந்தையும் நினைவுபடுத்துகிறது என்பது மகாகவி தாகூரின் வரிகள். அப்படி அமைதியின் சின்னமாக… பதினொரு வயதிலே உருவெடுத்த சமந்தா ஸ்மித் எனும் சுட்டியின் கதை உங்களுக்காக இதோ…

1972-ல் அமெரிக்காவின் மெய்ன் நகரத்தில் பிறந்து, தன்னுடைய ஐந்து வயதிலே இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்குக் கடிதம் எழுதிய சமத்துப் பொண்ணுதான் இந்த சமந்தா. அப்பொழுது, அமெரிக்காவும் ரஷ்யாவும் பகைமை கொண்டு, டிஷ்யூம் டிஷ்யூம் பண்ணிக் கொண்டு இருந்தன. சமந்தா பதினொரு வயது சிறுமியாய் இருக்கும் போது, யூரி அன்ட்ரபோவ் சோவியத் ரஷ்யாவின் தலைவராக இருந்தார். ரொம்பவும் ஸ்ட்ரிக்ட், இரு நாட்டுக்கும் இவராலே சண்டை வந்துவிடும் என்று அமெரிக்க பத்திரிகைகள் அவரை வில்லனா சுட்டிக் காட்டின. இப்படி ஒரு கட்டுரையைப் படித்த சமந்தா, தன் அம்மாவிடம்… ”அம்மா… சண்டை போடறதுதான் அவரோட வேலைனா அதைத் தப்புன்னு அவருக்குப் புரியவைக்கணும். யார் அவருக்கு இதைச் சொல்றது?” எனக் கேட்டாள். ”நீயே கடிதமா எழுதேன் சமந்தா!” என்றார் அம்மா. அஞ்சே வரிகளில் சமந்தா எழுதிய கடிதம் இதுதான்…

மதிப்பிற்குரிய அன்ட்ரபோவ்!

உங்களுடைய புதிய பொறுப்புக்கு வாழ்த்துகள்! உங்கள் நாடும் அமெரிக்காவும் சண்டை போடப்போவதாக அறிகிறேன். ஏன் நீங்கள் சண்டையை விரும்புகிறீர்கள்? எப்படி அதைச் செய்வீர்கள் எனச் சொல்லவும். இரண்டாவது கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. அந்தக் கேள்வி இதுதான்… ஏன் நீங்கள் என் நாட்டையும், உலகையும் பிடிக்கத் துடிக்கிறீர்கள்?

அன்புடன்,
சமந்தா

நவம்பர் மாதம் எழுதிய இந்தக் கடிதத்தை அப்படியே மறந்து போனாள் சமந்தா. ஆனால், அடுத்த வருடம் ஏப்ரலில் ரஷ்யாவின் தலைவரிடம் இருந்து பதில் வந்தது.

அன்புள்ள சமந்தா…

உன் கடிதம் கிடைத்தது. உன்னுடைய நேர்மையும் தைரியமும் என்னைக் கவர்கிறது. நீ டாம் சாயரின் நேர்மையான நண்பனான பெக்கியை ஞாபகப்படுத்துகிறாய். நீ கேட்டது போல், நாங்கள் போரை விரும்பவில்லை. ஹிட்லரின் நாஜி படைகள் எங்கள் நாட்டைச் சூறை ஆடியபோதே… நாங்கள் போரின் வலியை நன்கு உணர்ந்து இருக்கிறோம். நாங்கள் முதலில் போர் செய்ய விரும்புவது இல்லை. மேலும், நீ கேட்ட இரண்டாவது கேள்விக்கு எளிமையாக பதில் தருகிறேன். எங்கள் நாட்டில் உள்ள விவசாயிகள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள் என அனைவரும் அமைதியையே விரும்புகிறோம். கோதுமை விளைவிக்கிறோம், கட்டடங்கள் கட்டுகிறோம், வானில் பறக்கிறோம்… நாங்கள் அமைதி விரும்பிகள். எங்கள் நாடு அமைதியின் பூமி என அறிய, நீ ஏன் எங்கள் நாட்டுக்கு வரக் கூடாது? இங்கிருக்கும் ‘அர்டேக்’ எனும் சுட்டிகளுக்கான கேம்ப்பை நீ நிச்சயம் விரும்புவாய். கூடவே உன் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு வா!

அன்புடன்
அன்ட்ரபோவ்.

என அந்தக் கடிதம் முடிந்தது. சமந்தா ரஷ்யா போனாள். அங்கே அவளுக்கு மாபெரும் வரவேற்பு. ரஷ்ய சுட்டிகளோடு தங்கி, பொழுதைப் போக்கினாள். வானில் முதலில் பறந்த பெண் மணியான வாலன்டினாவைச் சந்தித்துப் பேசினாள். ஆனால், அன்ட்ரபோவ் உடல்நலமின்மையால் அவளைச் சந்திக்க முடியாமல், போனில் பேசினார். சமந்தா ரஷ்ய மக்களும் நம்மைப் போன்றவர்கள்தான் என்று புரிந்துகொண்டாள். அதே வருடம் ஜப்பானில் அமெரிக்காவின் இளைய அமைதித் தூதராய் கலந்து கொண்டு, அன்பைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் அமைதியை வளர்க்க முடியும் என ஐடியா சொன்னாள். அதை, இரண்டு நாடுகளும் செயல்படுத்தின.

சமந்தா, லைம் ஸ்ட்ரீட் எனும் நாடகத் தொடரில் நடித்துவிட்டு, விமானத்தில் வந்து கொண்டு இருக்கும்போது… இயந்திரக் கோளாறால் பற்றிய நெருப்பில் அவளின் கள்ளமில்லாச் சிரிப்பு அடங்கிப் போனது. ஒரு அமெரிக்கச் சிறுமிக்காக ரஷ்யாவே கண்ணீர்விட்டு அழுதது. அவளின் நினைவாக ஒரு நினைவுச் சின்னத்தை ரஷ்யா எழுப்பியது. அவளுக்காக ஒரு அஞ்சல்தலையையும் வெளியிட்டது. மெய்ன் நகரில் ஒரு கரடிக் குட்டியோடு பளபளக்கும் கண்களோடு, அன்பின் அற்புதச் சின்னமாக சமந்தா சிரித்துக்கொண்டு நிற்கிறாள். ஆகஸ்ட் 25. அவளுடைய நினைவு \

தினம்.

கடிதத்தின் மூலம் இரு நாடுகளையும் அன்பாலே பிணைத்த சமந்தா இன்றும் எல்லோரின் நினைவுகளில் வாழ்கிறாள்

`கடவுளோடு ஒரு கோப்பை மது அருந்தல்


எப்பொழுதும் குடிக்கும் மதுக்கடை
வெளி இருக்கையின் முனையில்
சப்பனமிட்டு கடவுள் அமர்ந்து இருந்தார்

மரணங்கள்,காயங்கள்,வலிகள்
கொடுத்து கொடுத்து சலித்து விட்டதென
ஒரு மடக்கு திரவத்தை
உள்ளே தள்ளுகிறார்
அமுதை விட நன்றாக இருப்பதாக சிரிக்கிறார்

நாட்டில் பெண்களின் நிலை
மோசம் என சொல்லியபடியே
இன்னொரு கோப்பை கேட்கிறார்
தானே பற்றி ,”நாடே அப்படி !”
என தள்ளாடி முறுவலிக்கிறார்

நொறுக்குதீனியை
வாயில் அடைக்கிறார்
கொஞ்சம் இடம் கிடைக்குமா
பூமியில் ? என கேட்கிறார்
“நிலா அபகரிப்பு சொர்க்கத்தில் முற்றிவிட்டதாக ”
முனகுகிறார்

“தார் ரோட்டில்
படுத்தாலும் உறக்கம் வருகிறதா?” என
சக குடியானவரிடம் விசாரிக்கிறார்
அவனின் மௌனத்தின் விளிம்பில்
நின்று வெறித்து பார்க்கிறார்

அழுதபடியே வரும் பெண்களின்
கண்ணீரின் அளவெடுக்க
கருவிகள் தயாரிக்க வேண்டும் என
முணுமுணுக்கிறார்

சியர்ஸ் என்கிற வார்த்தையை
சொர்க்க அகராதியில் சேர்க்கலாமா
என யோசித்தபடியே
செய்தி தாளை புரட்டுகிறார்
தமிழகம் தீர்ந்தது என நிம்மதியாக சொல்லியபடியே
இன்னுமொரு மடக்கு குடிக்கிறார்

அப்படியே கவிழ்ந்தவரை யார் கேட்பது
“மயக்கம் என்ன ?”என்று
அல்லது யார் சேர்ப்பது மருத்துவமனையில் ?

பேருந்தில் ஓட்டை
மருத்துவமனையில் எலிகள்
பாவம் கடவுள்
மீண்டும் மதுக்கடை வாசலில்
மறுநாளும் அதே முனையில்
சப்பனமிட்ட கடவுளை பார்த்தேன்
ஒருநாள் தாடியுடனும்,அரை பாட்டில் மதுவுடனும்….
கடவுளும் தீர்ந்தார் !

பால்ய காலமும்,சில கண்ணாமூச்சிகளும்


காற்றாடிகள் குவித்து குதூகலம் இரவல்தந்த
எதிர் வீட்டு மாமாவையும்
கேட்காமலே நீர் குமிழிபோல கன்னம் ஒட்டி

மென்மையான முத்தம் பதித்த
பால்ய கால தோழியையும்
வான நீரை அலகில் தேக்கி
முகமெல்லாம் பிய்ச்சி அடித்து
கைமீது ஏறிநின்ற குருவியின் ஸ்பரிசத்தையும்
தெருவெல்லாம் புதிதாக முகவரி தேடும்
அசலூரான் போல சந்துவழி இடுக்குகளில்
சொந்த ஊரில் வளர்ந்தபின் தேடிப்போனால்
சன்னமாக ஆனால் சுளீரென்று ஒலிக்கிறது
மகனின் குரல் ,”காலம் மாறிப்போச்சு அப்பா !”என்று
அவலங்கள்,அவசரங்கள்
தொலைப்புகள் ,கவலைகள் எல்லாமும் விட்டு
காலத்தின் கட்டிய கண்களை தொட்டு
பால்யத்துக்குள்
ஓடிப்போக ஆசை யாரேனும் கூட்டிப்போவீர்களா ?

காதல்- கணிதம்! புனிதம்…. மனிதம்!


முக்கியமான முன்குறிப்பு :இது ஏற்கனவே நான் பகுதி பகுதியாக முகநூலில் வெளியிட்ட காதல் கதைகளின் தொகுப்பு !தொகுத்து தந்து இருக்கிறேன் .சுவாரசியத்திற்காக சில பகுதிகளை நீக்கி இருக்கிறேன் !

 

முதல் காதல் கணிதக்காதல் …கல்லூரியில் கணிதத்துறையில் உள்ள ஒரு பெண் விரிவுரையாளர் ஏகத்துக்கும் திட்டிக்கொண்டே இருப்பார் .ஏகத்துக்கும் சிடுசிடு பார்ட்டி என நினைத்தேன் …அவர் கல்லூரியை விட்டு திடீரென விலக நேர்ந்தது .போய் பார்த்தேன்…ஏதேதோ பேசிய பொழுது ,”நான் ஆந்திராவுல விஜயவாடாவில் வளர்ந்தவ ,என் வீட்டுக்காரர் கும்பகோணம் தெரியுமா ?ஐ.ஐ.டி.யில் படிக்கும் பொழுது உண்டான காதல் …இப்போ நான் உன் அளவுக்கு தமிழில் கவிதை எல்லாம் எழுதுவேன் தெரியுமா ..அவர் அப்படியே தெலுங்கில் எழுதுவார் !.எல்லாம் கத்து தருவது தானே காதல் …ஆனால்.இன்னைய வரைக்கும் உங்களை நான் என்னைக்காவது காதலிக்காதீங்க அப்படின்னு சொல்லி இருக்க மாட்டேனே !காதல் அற்புதமான விஷயம் !It has no borders…its endless!”என்ற பொழுது என்றைக்கும் பிடிக்காத அவரை அன்றைக்கு ஏகத்துக்கும் பிடித்துப்போனது #காதல் எல்லை இல்லாதது

 

வரலாற்று காதல்களை சற்றே தொட்டு வர ஆசை ..தெரியாதகாதல்களை சொன்னால் இன்னமும் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .எட்டாம் எட்வர்ட் எனும் இங்கிலாந்தின் மன்னருக்கு வாலீஸ் சிம்ப்சன் என்கிற எளிய பெண்ணின் மீது காதல் பொங்கியது ….வெகுஜனத்தை திருமணம் செய்துக்கொள்ள அன்றைய தேவாலய நடைமுறை இடம் தராது என்பதால் தன் அரியணையை உதறி விட்டு ஜாலியாக டூயட் பாட கிளம்பி விட்டார் எட்வர்ட் .அவுரங்கசீபிர்க்கு ஆட்சியின் மீது ஆசை வந்ததற்கு பல்வேறு கரணங்கள் சொல்கிறார்கள் ..அதில் கவனம் பெறாமல் போகிற ஒரு கதை அவரின் மெல்லிய காதல் கதை .மராத்தியர்களின் பகுதியில் அவர்களை ஒடுக்க தங்கி இருந்த இளம் வயதில் ஒரு மராத்திய ஹிந்து பெண்ணோடு அவருக்கு காதல் arumbiyathu …கவி பாடினார்,காரணமில்லாமல் சிரித்தார் ..எல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருந்த பொழுது திடீரென ஒரு நாள் கண் முன்னமே அவள் இறந்து போனாள்…சாவதற்கு முன் தன தனத்தை மராத்திய ஒற்றாள் என்றும் அவரை கொள்வதற்காகவே தன்னை நடிக்க சொன்னதாகவும் ,ஆனால்,அவுரங்கசீபை உண்மையாக காதலித்த அவளால் அதை செய்ய முடியாததால் அவருக்கு கொடுக்கப்பட இருந்த விஷம் கலந்த உணவை தானே உண்டு விட்டதாக சொல்லி விட்டு மறைந்தாள்….கண்ணீரோடு அன்றைக்கு அழுத அவுரங்கசீபின் வாழ்க்கையில் அதற்கு பின் அழவேண்டிய தருணமே வராமல் போக்கி விட்டது #காதல் வலிமை தருவது

 

 

இந்த கதை திருமணம் ஆன பின்னும் காதலிக்கும் ஒரு சிலரின் வகைக்குள் அடங்கும் கதை .அவர் ஒரு கம்பெனியில் மேலாளராக பணி புரிகிறார் .மனைவி தாவரவியல் படித்தவர் .வீட்டில் பார்த்து செய்து வாய்த்த திருமணம் ,மனிதர் ஆரம்பத்தில் இருந்தே அன்பை பொழிந்து தள்ளி இருக்கிறார்.அவரின் மனைவிக்கோ ஏகத்துக்கும் சங்கோஜம் ஆட்டிப்படைத்து இருக்கிறது .ஒரு வருடம் ரெண்டு வருடம் இல்லை எட்டு வருடம் இப்படியே இருந்து இருக்கிறார் .இதில் என்ன ஆச்சரியம் என கேட்க தோன்றுமே ;அவர்களுக்கு இந்த எட்டு வருட காலமாக பிளளை பேறு இல்லை.மனிதர் ஒரு வார்த்தை அதைப்பற்றி பேச மாட்டார் .மருத்துவர்கள் எந்த குறையும் இல்லை என்று சொல்லியும் பாக்கியம் கிட்டவில்லை .அவர் எதுவும் திட்டவே மாட்டார்.ஆனால் இவரே சின்ன சின்ன விசயத்துக்கு எல்லாம் அவர் முன்னமே அலுத்து சங்கடப்படுதுவார் ,அவர் “குட்டிம ஒன்னும் இல்ல ..அழாதமா ” என்பதே தனி காதல் அத்தியாயம்.இவரே துக்கம் அடக்கமாட்டாமல் “எங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்குங்க !”என சொன்ன பொழுது ,”உன்னை தவிர வேற யாரும் பெஸ்ட் பார்ட்னர் இல்லைமா !”என்றார்.குழந்தையை தத்தெடுக்க வீட்டில் ஒப்பவில்லை .எட்டு வருட காலத்திற்கு பின் மழலை சத்தம் கேட்கும் தருணம் வந்தது ,”அப்பொழுதும் இவர் அழுதார் அவர் இப்பவும்,”குட்டிமா அழாதே !என்ன இது சின்ன பிள்ளையாட்டும் ?”என கேட்க ,”ஆமா நான் உங்க பிள்ளை தானே !”என அவர் அழுகையை அடக்க முடியாமல் சொன்னது அப்படியே உறைந்து போன கவிதை.இப்பொழுது அவர்களின் செல்ல மகள் தவழ்கிறாள்,அவளையும் “சின்னக்குட்டி “என்கிறார் குட்டிமாவுடன் சின்னக்குட்டியும் சிரிக்கிறார் ,#காதல்கள் கல்யாணத்திற்கு பிறகும் ….கல்லறை வரைக்கும்

 

அதிரி புதிரி காமெடி காதல் கதை ஒன்று உண்டு .அண்ணன் முறை எனக்கு அவன்.வகுப்பில் யாருடனும் பேச மாட்டான்.அவன் பாட்ச்சில் இருந்த வேறு துறை அக்காவிற்கு அதுவும் சென்னை பொண்ணுக்கு இவனை பிடித்துப்போனது .முதல் வருட பாதியிலேயே அவரவர் துறைக்கு போன பிறகு இவனை ஓயாமல் சுற்றி வந்தது அந்த பெண் .இத்தனைக்கும் அவன் யாரிடமும் தப்பிக்கூட பேசாத அப்பாவி .ரெண்டே மாதத்தில் இவனை மிரட்டி பைக்கில் உட்கார வைத்து கூட்டுப்போகிற அளவிற்கு முனேற்றம் .இவன் போவான் பீச்சில் உட்கார்ந்து அம்மணி காசில் கடலை,சுண்டல் கொறிப்பான்.போனிற்கு அந்த புண்ணியவதியின் காசிலேயே ரீசார்ஜ் வேறு .போகிற இடமெல்லாம் இவனுக்கு செலவு செய்து செய்து அந்த அக்கா பல ஆயிரங்களை இழந்தது தனிக்கதை ஆனால் அண்ணன் அவர்கள் ஒரே ஒரு முப்பது ருபாய் டிக்கெட் மட்டும் எடுத்து வைத்துக்கொள்வான் .எங்கேயாவது விட்டால் பஸ் ஏறி வர ..ஒரு நாள் அந்த பெண்ணே வாயை திறந்து காதலை சொன்ன பொழுது ,”உங்களுக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்று சொல்லி விட்டு போய் விட்டான் .அக்கா ஓயாமல் அவனுடன் பழக்கத்தை தொடர்ந்தார் .சில சமயம் கேட்டால் தின்று கொண்டு இதே பதிலை சொல்வான் .அக்கா இவனுக்காக சைவத்தை விடுத்தது அசைவம் சமைக்க வேறு கற்றுக்கொண்டார் கடைசியில் ஒரு நாள் கண்ணீரோடு அக்கா கேட்க அப்பொழுதும் அதையே சொன்னான்.பளார் என ஒரு சத்தம் கேட்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் தெரிவிக்கின்றன .அன்றைக்கு விழுந்த அண்ணன் தற்போது வரை எழுந்திருக்க வில்லை ,இரண்டு குட்டிஸ்கள் நடுவில் குடும்ப சமேதமாக யாவும் சுபம்.அண்ணன் இன்னமும் கன்னத்தை தேய்த்து கொள்வதன் மர்மம் புரியவில்லை .அடிதடிகள் நிறைந்தது காதல் இல்லையா ?

 

என்றைக்கும் என் அப்பா என்னை திட்டியது இல்லை .அதிகப்பட்சம் “ஏன் சரவணா ?இப்படி!” என்பதையே அத்தனை மெதுவாகத்தான் கேட்பார் .அவர் கல்லூரி காலங்களில் மிகப்பெரிய கேங்கின் தலைவர் .ஹாக்கி மட்டையும்,கட்டைகளும் உருண்ட கரங்கள் அவருடையவை என அவர் நண்பர்கள் சொல்ல கேட்டு இருக்கின்றேன் எப்படி அப்பா இப்படி என கேட்டேன் .பதிலே சொல்லாமல் வெகு நாள் காக வைத்தவர்.ஒரு நாள் ஒரு வீட்டிற்கு போன பொழுது சிதம்பரத்தில் இருந்து வந்திருந்த ஒரு பெண்மணியோடு திடீர் என்று உரையாட நேர்ந்தது .எல்லாம் முடிந்த பின் நாங்கள் கிளம்பும் பொழுது “இந்த மேடம் இருபது வயது பெண்ணாக இருக்கும் எனக்கு இருபத்தைந்து வயது இருக்கும் .நான் அப்ப தான் சொந்தமா வேலை செய்ய ஆரம்பிச்சு இருந்தேன் .இந்த பெண் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனை .இவங்க டீச்சர் ட்ரைனிங் முடிச்சு இருந்தாங்க .என்னை கல்யாணம் பண்ணிக்குங்க அப்படின்னு கேட்டாங்க .நான் முதலில் எதுவும் சொல்லலை .என காரணம்னு கேட்டப்ப நீங்க ரொம்ப தைரியசாலி அது எனக்கு பிடிக்கும் “.என்றார்..கொஞ்சம் மௌனம்.” நான் அவங்களுக்கு பெட்டெர் ஆன மாப்பிள்ளை கிடைப்பாங்க அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டேன் .அப்பறம் எங்க பார்த்தாலும் தலையை குனுஞ்சுப்பாங்க .எனக்கே ஒரு மாதிரி ஆனது .இந்த பகுதி பக்கம் அதுக்கப்புறம் கிளம்பி வந்து ஆட்டம் போடறதை நிறுத்தியாச்சு .”என்றார் .அ”அப்பா நீங்க அவங்கள காதலீச்சங்கள?”என நான் கேட்க,அவர் தலையை வருடி கொடுத்து விட்டு ,”காதல் தானே !அது கெடக்குது கழுதை “என என் அப்பா என் தலையை கோதி விட்டு சிரித்த பொழுது கண்கள் கலங்கி விட்டன எனக்கு !இதே மாதிரி ஒரு காட்சியை என் வாழ்விலும் நடந்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன் ,அதுவே வலித்தது ,அப்பா யூ ஆர் சிம்ப்லி கிரேட் என சொல்லாமல் இருக்க முடியவில்லை

என் நண்பன் அவன் …பள்ளிப்பருவத்தில் ஓயாமால் குறும்புகள் செய்வான் ..பக்கத்து அறையில் எப்பொழுதெல்லாம் பொழுது போகவில்லையோ அப்பொழுது எல்லாம் என்னை அழைத்து ஒட்டி பொழுதை போக்குவான் …ஒரே கல்லூரி வந்ததும் அவனிடம் ஏகப்பட்ட மாற்றங்கள் ….திடீர் திடீர் என்று சிரிப்பான் ,தலை முடியை அடிக்கடி கலைத்து விட்டுக்கொள்வான் ,அடிக்கடி வயிற்று கடுப்பு வந்தவன் போலவே ஓடுவான்…ஒரு பக்கம் தலையை சாய்த்து கொண்டே திரிந்தான்,கருமம் காக்காவை கூட அதிகபட்ச பீலிங்கோடு ரசித்தான் ..எல்லாம் ஒரு ஆறு மாதத்திற்கு…இவை எல்லாம் காதலின் அறிகுறிகள் என எனக்கு சொல்ல ஆட்கள் இல்லாமல் போனது..அவனின் சிரிப்பு மங்கியது ,எப்போது பார்த்தாலும் பேசியவன் இப்பொழுது எப்போது பேசுவான் என்கிற அளவிற்கு ஆகி விட்டது…அவனின் காதல் முறிந்து விட்டதாக சொன்னார்கள் …பல நாள் பேசாத அவன் என்னை ஒரு நாள் அழைத்தான் ,கையில் ஒரு தாளை திணித்தான் ,முத்து முத்தான கையெழுத்தில் கவிதை ஒன்று …நிச்சயம் அது ஒரு மாஸ்டர் பீஸ் !அவனுக்கு இத்தனைக்கும் கவிதைகள் வாசிக்கும் பழக்கம் கிடையாது …#காதலினால் பல கவிதை செய்க .

காதல்களில் சண்டைகள் ஒரு அற்புதமான அதிகாரம் .இன்னமும் கல்லூரி,பீச்,ரயில்வே நிலையம் எங்கு வேண்டுமானாலும் பாருங்கள் ஒரு பெண்ணோ,பயனோ முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருப்பன்,இன்னொருவர் கெஞ்சலாக குழைய ,மற்றவர் சிணுங்க அதை அடடா என ரசிக்க ஆரம்பித்தாலே போதும் ,உலகமே அழகாகி விடும் .தேடல் இல்லா வாழ்வு கூட சுகமாக இருக்கலாம் ,ஊடல் இல்லாத காதல் நிச்சயம் சுவைக்காது .சண்டை என்றதும் எத்தனையோ ஜோடிகள் கண்முன் தோன்றினாலும் எப்பொழுதும் முந்திக்கொண்டு நிற்பது அந்த ஜோடி தான் .இதற்கெல்லாமா சண்டை போடுவார்கள் என கடுப்பாகிற அளவிற்கு சண்டைகள் பறக்கும்.உச்சபட்சமாக தன்னவர் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்பதற்காக கல்லூரி தேர்வை எழுதாமல் அடம் பிடித்து நின்றதை எல்லாம் என்ன என்று சொல்வது ?எல்லா காதலிலும் நிச்சயம் இருக்கிற ஒரு விஷயம் கழிவிரக்கம் என்கிற அந்த possessiveness,தான் முன்னே வேறொருவருடன் பேசும் பொழுது அப்படியே கண்ணால் மிரட்டும் காதலிகளின் உருட்டலும் ,கலகலத்து போய் விடும் காதலர்களின் முக பாவமும் செமையான ஹைக்கூ .அதிலும் இந்த ஜோடியில் தலைவி எங்கேனும் இவர் கடலை வறுப்பதை பார்த்தால் துரத்தி துரத்தி அடிப்பார் .சண்டை உச்சத்துக்கு போய் காதலன் மௌனசாமியாகி விட ஹீரோவின் வீட்டில் அவரின் மாமாப்பெண்ணின் தோழி என அம்மணி நுழைந்து செய்த அலப்பறைகள் தான் ஹைலைட் .இப்போதும் சண்டை போட்டுக்கொண்டு தான் இருக்கிறது அந்த சண்டை,பிரிக்க போனால் உங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை !

 

காதலை சொல்லாமல்,சொல்லாமலே கடந்து தவிக்கும் புண்ணியவான்களை பற்றி சொல்லாமல் போனால் பெரும் பாவம் என்னை ஒட்டிக்கொள்ளும் .கிட்டத்தட்ட ஏழு வருடம் பழகி இருப்பான்,தோழியை காதலியாக உணர்ந்த தருணம் பேசுவதை நிறுத்திக்கொண்டு பள்ளி மாறிய தோழனை எனக்கு தெரியும் .இன்னொருவன் ரொம்பவும் நெருக்கமான பெண்ணுக்கு பிறர் அனுப்பும் காதல் தூதுகளை எந்த சலனமில்லாமல் சுமந்தவன் தன் காதலை சொல்ல எண்ணி வாயெடுத்த தருணம் வாயில் காற்றும்,கண்ணில் கண்ணீரும் வந்தது ,அதற்கு பிறகு அவன் காதலுக்கு துணை ஏக்கமும் ,மௌனமும் தான்.நன்றாக பழகிய தோழனிடம் காரணமே இல்லாமல் சண்டையிட்டு ,அவன் எண்ணை அழித்து விட்டும் அவன் நினைவை காதலுக்கு பரிசளித்து ,இப்பொழுதும் அதை சொல்லாமலே வலியோடு அவனோடு சிரித்து உரையாடும் அக்காவையும் எனக்கு தெரியும் .பிடித்தாலும்,விருப்பமிருந்தாலும் சரிப்பட்டு வராது என போலித்தேற்றலோடு கடக்கும் நண்பர்கள் நூறு பேர் இருப்பார்கள் .#சொல்லாத காதல்கள் சொர்க்கத்தில்

 

சின்ன சைக்கிளை உருட்டிக்கொண்டு போகும் அந்த பேராசிரியர் ,கிருஸ்துவ பாதிரியார் அவர் பின்னே ஒரு ரெண்டு நாயாவது தினமும் ஓடும் .அவைகளுக்கு அனுதினமும் உணவிடும் அம்மைஅப்பன் அவர் .மாறாத சிரிப்போடு நிற்கும் அவர் அதிர்ந்துக்கூட பேச மாட்டார் . தனக்கு தெரிந்த மாணவர்களை அன்போடு அழைத்து இரண்டு நிமிடமாவது பேசி விட்டுப்போகும் புண்ணியவான் அவர் .ஷோ மீ யுவர் ஹான்ட் என்று கையில் செல்லமாக கையால் அவர் அடிக்கும் பொழுதுஎந்த கவலை இருந்தாலும் பறந்து விடும் .மனிதர் அப்துல் கலாமிடம் முதன்முதலில் ஆய்வு பட்டம் பெற்றவர் அவர் .ஒரு நாள் அவருடன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தான் தெரிந்தது .அவருக்கு இன்னுமொரு முகம் இருந்தது ;தான் சம்பளத்தில் பெரும் பகுதியை ஆதரவற்ற குழந்தைகளுக்கு செலவிடும் வித்தியசமானவர் ,அவருடன் ஒரு நாள் பேசும் பொழுது தான் தெரிந்தது ,அவருக்கும் காதல் இருந்தது “எனக்கு கல்யாணம் ஆகி இருந்தது …அவள் ஒரு தேவதை …குழந்தைகள் என்றால் அவளுக்கு மிகவும் விருப்பம்,கர்த்தர் அவளை கூட்டிக்கொண்டார் .ஆனாலும் அவளின் ஆசை முடிந்தவரை குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்பதே .கடவுள் கூட காதலிக்க தான் சொல்கிறார் !அதனால் ஒரு முறையாவது காதலித்து பாரேன் !”என்ற பொழுது காதலுக்கு மற்றுமொரு முறை வணக்கம் சொன்னேன் #காதலித்தால் கண்ணீரும் சேவையாகும்

 

காதல் கரடுமுரடானவர்களுக்குள்ளும் தன் தொய்ந்து போய் இருக்கிறது .அவர் எங்கள் ஊரின் பெரிய மனிதர் …அவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வேண்டிய அவசியமே இல்லை …அந்த அறுபது கிராம் மீசையே போதும்…”டேய் ëனா அவர் செருமினால் பலபேருக்கு ஏதேதோ கழண்டு இருக்கும்,மனிதர் வண்டியில் ஒரு ரவுண்டு போனார் என்றாலே பல இளவட்டங்களுக்கு உதறிப்போகும் .அப்படி பட்டவரின் உறவுக்காரன் காதலித்தான்…இவரின் எதிர்வினை எப்படி இருக்கும் என எல்லோரும் பயந்தோம் –அவரின் காதுக்கு விஷயம் போனது -அவனின் கூட்டாளிகள் எல்லாரையம் கூப்பிட்டு அனுப்பினார்,”ஏன்டா காதலிக்கிறியா?யோக்கியமா பாத்துப்பியா?களவாணி காலாலே வட்டம் போடுறான் பாரு…முதல்ல படிச்சு முடி !பொறவு பாத்துக்கலாம் !” என அவர் சொன்னபொழுது எங்களுக்கு செமையான அதிர்ச்சி .அப்பொழுது தான் அங்கிருந்த கிழவி சொன்னது ,”டேய் அவனும் காதலிச்சான் டா…ஊரே கண்ணு வைக்கிற காதல் …அவ்வளவு பதவிசா பொன்னை பாத்துக்கிட்டான்….ஏதோ பொறுக்கலை அவளை கொள்ளை நோய் கொண்டு போய்டுச்சு …பாவிப்பய அதிலிருந்து இன்னைய வரைக்கும் கல்யாணம் பண்ணிக்கலையே …எவனாச்சும் காதல்னு வந்து நின்னா முதல கெளம்புற புல்லட் அவனுது தான் ….கோவக்காரன் அவன் …இப்பலாம் அவன் கோவமே படறது இல்ல …அப்படி பட்ட அந்த கண்ணிலாத கடவுளை பாத்து தான் படணும் ..என்னத்த சொல்ல ! ” என சொல்லிக்கொண்டே இருக்கும் பொழுதே “போலீஸ் காரங்க கூப்பிடறாங்க, எல்லாம் நமக்கு கைகூடாத விஷயம் தான்” என அவர் சொன்னபொழுது கலங்கி விட்டோம் நாங்கள் கல்லுக்குள்ளும் கள்ளிப்பூ…வேறென்ன சொல்ல ?

காதல் கரடும்,கசடும் மிகுந்த வாழ்வில் கூட கனிவையும்,கவலையையும் ஒருங்கே பொதிந்து விட்டு பயணிக்கிறது !வாழ்நாள் முழுக்க மண்,போர் என வாழ்ந்த நெப்போலியன் மற்றும் ஹிட்லரின் காதல் கடிதங்கள் எல்லாமே தனிக்காவியம் !காரல் மார்க்சை காத்தது ஜெனியின் அளவில்லாத காதல் தான் !பிள்ளைக்கு பால் வாங்க காசில்லாத பொழுதும் கணவன் ஜீவிக்க சுருட்டு வாங்குவதை நிறுத்தாத மகா மனுஷி அவள் !பெனிடோ முசொலினியை காதலித்து நடுவில் ஓடாமல் இறுதியில் அவன் முன்னே தன்னை துப்பாக்கிகளுக்கு கொடுக்க துணிந்த க்ளாரட்டா பெடாக்கி காதலின் அதீத சொரூபம் !காப்ரியல் நூற்றாண்டு காலத்தனிமை எழுதிய காலமெல்லாம் அவருக்கு அளவில்லா தனிமையை பரிசளித்த அவரின் மனைவி தான் உன்னதமானவள்.இதில் ஆணாதிக்கம்,அடக்குமுறை,கம்யூனிசம்,மன்னராட்சி எதுவும் பிரித்தெடுக்க முடியாத ஒரு உணர்வாக காதல் கசிந்து பாய்ந்து இருக்கிறது ;இன்னமும் பூக்களின் கருக்கலுக்கு பின்னும் சொட்டும் துளித்தேன் போல சுயநல வாழ்விலும் ஆங்காங்கு இனிக்கிறது !நின்று ருசித்து தான் பாருங்களேன் !

 

இனிமையான பொழுதுகளால் ததும்பி வழிகிறது காதல் ;தெருவோர நிழல் மரங்களின் அடியில் சொன்ன காதல்கள் நெஞ்சை நிறைக்கட்டும்.கிணற்று முறறங்களிலும்,பாதையோர நடைகளிலும்,ஆற்றின் கரைகளிலும் உறைந்து போன தேவதைகளின் கொலுசு சத்தங்கள் ஜதியாக சிலிர்க்க வைக்கின்றனவா ?கண்ணை மூடினால் இல்லாத ஏதோ ஒன்று உள்ளதை கணக்கா வைக்கின்றதா?திருப்பும் எழுத்துக்கள் நிறைந்த தாட்கள் வெறுமையாகவும் ,வெறுமையான வானம் முழுமையாகவும் தோன்றுகிறதா ?அழாமல்,பதறாமல்,கதறாமல்,மிரட்டாமல் கண் சிமிட்டலில் மரண தண்டனை விதிக்கும் காதலுக்கு ஆதரவாக தான் நீதிபதிகள் செயல்படுகிறார்கள் !கொஞ்சம் பின்னோக்கி போங்கள்,,,காதலித்த தேவதைகளுக்கும்,அழுக்கன்களுக்கும் மனதார நன்றி சொல்லுங்கள் .தள்ளி நின்று இன்னமும் ஒற்றை ரோஜாவோடு காதல் காத்து இருப்பதாக சொல்லுங்கள் !காதலித்துக்கொண்டே இருங்கள்