கல்லூரி கிறுக்கல்கள்


கடைசி சொற்கள் ஒவ்வொரு இடத்திலும் முக்கியத்துவம் பெறுகின்றன இல்லையா ?மாபெரும் இசைகலைஞன் எல்விஸ் பிரிஸ்லீ “நான் உங்களை மகிழ்வாகவே வைத்து இருந்தேன் என நம்புகிறேன் !”என்ற பொழுது அவனின் இசையின் இளமை வேகம் அதில் தெரிகிறது ;மாபெரும் போராளி மால்கம் எக்ஸ் “சகோதரர்களே அமைதியாக இருங்கள் !”என சொன்னபொழுது மரணம் துப்பாக்கி முனையில் அவனை நெருங்குகிறது என அவனுக்கு தெரியும் ;வறுமையிலேயே சாவை நெருங்கிய ஓ ஹென்றி”விளக்கை போடுங்கள் !நான் என் சொந்த தாய்வீட்டிற்கு போகும் பொழுது இருட்டாக இருக்கலாமா ?”என ஆவல் தொனிக்க கேட்டதை என்ன என சொல்வது ?கடைசி வார்த்தை என்பது எதையும் சொல்லாத முட்டாள்களுக்கு தான் !எனக்கில்லை வெளியேறுங்கள் மூடர்களே!” என்ற மார்க்சின் அளவில்லா சிந்தனைப்பெருக்கின் உச்சத்தை நினைத்து நினைத்து வியக்கிறேன்.என் கேள்வி எல்லாம் மரணத்தை விடுங்கள்,கல்லூரி கடைசி நாளில் . உங்கள் உற்றவர்களிடம் உங்கள் இறுதி வார்த்தை என்னவாக இருக்கும் .இருந்து இருக்கிறது ?”போய் வருகிறேன் என்றா ?”…”என்னால முடியலைடா” என்றா ,”மச்சான் மறந்துடாதே” என்றா ?”அழாதே” என்றா எது எது ?

 

 

ஏற்கனவே கல்லூரி கடைசி நாளும் கடவுளின் திரும்பி பார்த்தலும் கவிதை படித்து கண்ணீர் விட்டோம் என என்னுடைய சீனியர்கள் பலர் சொன்னார்கள்;இந்த நிலையில் பிரியப்போகும் நட்பில் என்னவெல்லாம் சொல்லாமல் விட்டு விடுவோம் என எண்ணி நான் எழுதிய இந்த புதுக்கவிதையால் இன்னமும் பலரின் கண்கள் கலங்கி இருப்பது புரிகிறது அவர்களின் குறுஞ்செய்திகளில் !அழுங்கள் …இனி இதை எல்லாம் காண எங்களுக்கு கொடுப்பினை கிடையாதே !அன்பிற்காக அழுதல் ஆனந்தம் !அதிலும் அதை எழுதுபவனுக்கு பேரானந்தம் …நான் இதை சாவகாசமாக எழுதிவிட வில்லை ஜெயகாந்தன் ஒரு வரி எழுதி இருப்பார் சில நேரங்களில் சில மனிதர்களில் ,”ஒரு கதாப்பாத்திரத்தை சாகடிக்கிற பொழுது கதாசிரியன் மற்ற எல்லாரையும் விட அதிகம் கதறி இருப்பான்!”.அதே தான் என் நிலையும் !

 

அழகான பல அனுபவங்களை கடைசி கல்லூரி நாட்கள் எல்லாருக்கும் பரிசளிக்கிறது !இரவில் கிரிக்கெட் விளையாடும் சீனியர்களை காரணம் கேட்க முடியவில்லை ;அவர்களின் இறுதி சில பொழுதுகள் அல்லவா இவை ?சுரங்கவியல் துறையில் சமீபத்தில் நடந்த சம்பவம் நெஞ்சை உருக வைத்து விட்டது.ஸ்ரீனிவாசன் எனும் மூத்த பேராசிரியர் அவர்.ஒற்றை பார்வையாலே பயத்தை விதைப்பவர் என்கிற அளவிற்கு கெடுபிடிக்காரர் எனப்பெயர் எடுத்தவர்.அவர் சொல்கிற வார்த்தைகள் தவறை உருவி எடுத்து கையில் கொடுக்கும்.FAREWELL கொடுக்கப்பட்ட பொழுது அவரும் வந்து இருக்கிறார்.தன் பிள்ளைகள் போன்ற கடைசி ஆண்டு பிள்ளைகளுக்கு தன் கையால் கேக் எடுத்து ஒவ்வொருவருக்கும் அவ்வளவு வாஞ்சையோடு ஊட்டி இருக்கிறார்.அதையே மூன்றாம் ஆண்டு பிள்ளைகளுக்கும் செய்து இருக்கிறார்.மென்மையாக தட்டிக்கொடுத்த பொழுது அந்த கரடுமுரடான மனிதருக்குள் இருக்கும் நெகிழ்வு தெரிந்து இருக்கிறது .பலரின் கண்கள் கலங்கிய பொழுதும் அதே கம்பீரப்பார்வை அன்பு கனிந்த பார்வையாக பாய்ந்து இருக்கிறது.#உலகம் சுழல்வதற்கு ஆயிரம் காரணங்கள் அறிவியல் சொல்லலாம் ,ஆனால் அன்பே காரணம் என்பேன் நான் !

 

Happy to see that this yr many farewells are happening in my college:)it started with our dept.,n followed by heart moving moments for sports seniors n EEE ppl electrified the final moments of their seniors:)SQC to follow tomorrow:)gudos to all:)hoping tat seeing all this our coll itself announces farewell for all from next yr:):-D#Sweet moments to share and store:)

 

அன்பான ஒரு நாள் இன்றைக்கு !நான் எப்பொழுதும் மனதுக்கு இணக்கமானவர்களுக்கு புத்தகங்களை பரிசளிப்பதற்கு முன் அதை முழுதும் வசித்து அது அவர்களுக்கு தர உகந்ததா என பார்த்தே தருவேன் !அப்படி இன்று புத்தகத்தை பரிசளித்த அண்ணன் ரொம்பவே ஸ்பெஷல் !நாங்கள் எப்பொழுது பேசினாலும் அதில் தீப்பொறி பறக்கும் !ஆனால் அதில் வன்மம் இருக்காது !திடீர் என ஒரு நாள் ,”நீ ரொம்ப நல்ல பையன்டா!நாங்க அப்பப்ப பிரெண்ட்ஸ் பேசிக்கிட்டு இருக்கப்ப நீ வந்தா கோவம் வந்துடும் அவ்ளோ தான் …ஹர்ட் பண்ணி இருந்தா சாரி !”என்றார்.இது போல ஒரு பத்து சீனியர்கள் சொல்லி விட்டார்கள் !ஆனால் உண்மையில் இவர்கள் யார் மீதும் எனக்கு எவ்வகையான வெறுப்பும் ஏற்பட்டது இல்லை !எல்லோரும் அன்பின் உச்சங்கள் !அதை வெளிப்படுத்துவதில் தான் சிக்கல்.அது எல்லாருக்கும் உள்ளது தானே !எல்டொராடோ எனும் சுஜாதாவின் கதையில் பல வருடம் கழித்து மரணப்படுக்கையில் இருக்கும் தந்தையின் கரம் பதித்து எட்டு வருடம் பிரிந்துபோன மகன் கண்ணீர் மல்க பேசுவான் !தந்தை நிம்மதியாக உயிர் விடுவார் !இந்த கல்லூரியின் மீது உள்ள பந்தம் என்றைக்கும் அற்றுப்போய் விடக்கூடாது என இவர்கள் படுகிற அக்கறை என்னை மலைக்க வைக்கிறது .அந்த தந்தையின் மறைவை போல தான் இவர்களின் கல்லூரி கடைசி நாள் அமையும்,இல்லையா ?

 

இதை விட நீண்ட நெடிய உரைகளை .இதை விட பத்துமடங்கு பெரிய கூட்டத்திடம் உரையாற்றி இருக்கிறேன் !ஆனால் இன்றைக்கு என் துறை சீனியர்கள் முன் பேசிய ஏழு நிமிடத்தை போல நிறைவாக வெகு சில கூட்டங்களில் உணர்ந்து இருக்கிறேன்.இன்றைக்கு பிரிவு உபசார விழாவின் பொழுது ஒவ்வொருவரின் கண்ணிலும் பிரிவின் சாயல் சத்தமில்லாமல் படர்ந்தது,விளையாட்டுகள் நடந்த பொழுது தோற்றவரும் ஜெயித்தவரும் இல்லாத சமநிலை அவர்கள் முகத்தில் குடிகொண்டுஇருந்தது,கிண்டலடிக்கும் ஒளிக்கோர்வை படர்ந்த பொழுது அதன் ஏளனம் அவர்களை ஏகாந்தம் போல தாக்கியது அவர்கள் முகத்தில் தெரிந்தது ,தங்கள் தோழமைகள் பற்றி சொல்லும் பொழுது அவர்கள் எவ்வளவு குமுறி இருப்பார்கள் என புரிந்தது ,பலர் வார்த்தைகள் இல்லாமல் அவதிப்பட்டாலும் அவர்களின் மொழி அனைவருக்கும் புரிந்தது புதுமை ,என் கவிதை அவர்களின் கண்ணீரில் மேலும் புனிதம் அடைந்தது ,இறுதில் மெழுகின் ஒளியில் நட்பின் பாடல்களில் அவர்கள் அழுது எங்களை தழுவிக்கொண்ட பொழுது இப்படி ஒரு பிரிவு உபசார விழா வேறு யாருக்கும் எங்கள் கல்லூரியில் வாய்த்து இருக்காது என எங்களுக்கு புரிந்தது ;பலர் கைகுலுக்கிய பொழுது இல்லாத யார் மீதோ கோபம் கோபமாக வந்தது !ஒரு வேளை அவர்கள் நம்பும் கடவுள் மீதாக இருக்கலாம்

 

அண்ணனிடம் அளித்து இருந்த ஸ்லாம்புத்தகம் வெகுநாட்கள் கழித்து தான் என் கைகளுக்கு வந்து சேர்ந்தது !அதில் என்னைப்பற்றி அச்சுப்பிசகாமல் அவ்வளவு அழகாக எழுதி இருந்தான் !எனக்கு ஆச்சரியம் ஒரே பாசிடிவ் ஆன தகவல்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தது அதில் !காரணம் கேட்ட பொழுது,:கல்லூரியை விட்டு போகப்போகிறோம் !எதுக்காக யார் மனதையும் புண்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும் !வாழ்க்கையில மறக்க முடியாத திரும்பவே வராத கட்டம் இதுடா!ரொம்பவே மிஸ் பண்ணபோறோம் இதை எல்லாம் !”என்றார்.ஒவ்வொரு ஸ்லாம்புத்தகத்திலும் என்ன எழுத எண்ணி இருப்பார்கள் கல்லூரியை விட்டு பிரிகின்ற நண்பர்கள் !அவர்களின் நட்பிற்கு நன்றியா,பிரிவின் கண்ணீரை சொல்லும் சோக வரிகளையா?திரும்பவே வராத ஓசி வாழ்க்கையா?இந்த பருவத்தின் மிச்சங்கள் என்றைக்கும் பழுப்பேறிப்போன ஸ்லாம்புக்கை போல அழகானதாக,ரம்மியமானதாக,சலனப்படுத்த போகிறது !கல்லூரி கடைசி நாள் சொர்க்கத்தின் இறுதி நாள்,அவர்கள் சொல்லாமல் விட்டதை அந்த வெறுமையான தாள்கள் சொல்லுமோ என்னமோ #ஸ்லாம்புக் சோகம்

 

டிகிரி வாங்கிக்கொண்டு மஞ்சள் உடை அணிந்து கொண்டு பல்வேறு படங்களுக்கு போஸ் கொடுத்தப்பொழுது அருகில் இருந்த நான்காமாண்டு அண்ணன் ஒருவர் அடித்த கமென்ட் இன்னமும் எதிரொலிக்கிறது ,”இந்த ஒத்தை தாளோடு இந்த கல்லூரிக்கும் உனக்கும் உள்ள தொடர்பு அந்து போச்சுன்னு சொல்றாங்க இல்ல ?”என கேட்ட பொழுது அடுத்தது நாங்கள் அதற்கடுத்தது நீங்கள் என அவரின் மனம் உள்ளுக்குள் சொல்லிக்கொள்வதாகபட்டது எனக்கு .எவ்வளவோ உறவுகளை கடந்த போனாலும் கல்லூரியும் நம் நண்பர்களில் ஒன்றாக இருந்து இருக்கிறது.எத்தனை நட்புகளை இமைக்கொட்டாமல் கண்டு இருக்கிறது ,எத்தனை காதலர்களின் கைவருடல்களை வெட்கப்படாமல் கடந்து இருக்கிறது ,எத்தனை கத்தல்களை கதை பொத்தாமல் கேட்டு இருக்கிறது,கடைசியில் அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பை முறிக்கும் சோக தினத்தை எவ்வளவு கோலாகலமாக கொண்டாடுகிறோம் #முரண்

 

என்னவோ இப்போதெல்லாம் கண்ணில் படுபவை எல்லாம் மனதை பிசைகின்றன …இன்றைக்கு மைதானத்தில் சீனியர்கள் கிரிக்கெட் ஆடுவதை பார்த்தேன் …அதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா ?இது வரை ஸ்கோர் வைத்து கொண்டு ஆடிய புண்ணியவான்கள் இன்றைக்கு சும்மாவே ஓயாமல் விளையாடி கொண்டு இருந்தார்கள் ….”இன்னும் கொஞ்ச நாள் தானே மச்சி !அப்புறம் இங்க விளையாட முடியாதில்லே ?”என ஒருவர் கேட்ட கேள்விக்கு,தலையில் தட்டி சிரித்தார் மற்றொருவர் ..அது என்னமோ பிரிவின் உச்சபட்ச வெளிப்பாடாக பட்டது எனக்கு !

 

 

என் சீனியர்களின் வாழ்க்கையை பார்த்து வியக்கிறேன் கல்லூரியில் …இறுதி ஆண்டுகளில் இருக்கிற பொழுது தங்களின் போதிமரங்கள் ஆன கல்லூரியின் பச்சை பெஞ்சுக்களில் பொழுதை கழிக்கிறார்கள் …இரண்டே வகுப்புகள் இருந்தாலும் கல்லூரியை மீண்டும்,மீண்டும் வளம் வருகிறார்கள் …அன்பை பரிமாறுகிறார்கள் …கண்களில் கவலை பொங்க சிரிக்கிறார்கள்,கண்ணீரை மெதுவாக மறைத்து கொள்கிறார்கள் …அவர்களை இந்த கல்லூரியின் கேலரிக்கள் இழந்து நிற்கும் …farewell கலாசாரம் இந்த கல்லூரியில் இல்லாமல் இருக்கிறது …ஆனாலும் ,நெகிழ்வும்,நட்பின் மிச்சங்களும் இவர்களிடம் கொட்டிகிடைக்கிறது …அடுத்தது நீங்க தான் என சொல்லாமல் சொல்கிறதோ இவர்களின் கல்லூரி இறுதி நாட்கள் #நட்பும்,பிரிவும்

ஒரு தேவதையும் சில மரணங்களும்


அது அனேகமாக ஒரு இலையுதிர் காலம்
அம்மா இலைகளை சன்னமாக சறுக்கி தள்ளினாள்
அவளின் கரங்களில் வெடிப்புகளில்
கந்தக பூமி மழை
போல பாய்கிறது
வியர்வையின்
துளிகள்
நீர்க்கும் வலிகளை சற்றே நீவிப்பாருங்கள்
நீங்கள் பிரசவ வேதனையை உணர்வீர்கள்
கடக்கட்டும்
அக்காவின் சமையல் வேலைகளுக்கு
இடையே அவள் கண்கள்
கலர்கலராக பறக்கும் பட்டத்தை காதலிப்பதை
என்றாவது அவதானித்து
அந்த நூலை கொடுத்து இருக்கிறீர்களா’
அதை கொடுக்காமல் போனதால்
தான் அந்நூல் அவளின் கனவின் தூக்கு
கயிறானது என அவளின் தேய்ந்த கொலுசு முணுமுணுக்கிறது

அழகான செல்ல மகளின்
சுவர் ஓவியங்களை கிறுக்கல் என திட்டி
தார்க்குச்சியால்
நீங்கள் விளாசிய தருணத்தில்
தான் ப்ரீடா மரணித்து போனாள் அவளுள்

எதிர் வீட்டு அம்மாளின் கோலத்தை
வண்டியேற்றி அழிக்கிற  தருணத்தில்
அவளின் அத்தனை முன்னெடுப்புகளும்
முடுக்கென்று முறிந்துப்போகிறது

மனைவி ஆசையாக வாங்கிய புடவையை
சற்றும் ஆர்வம் இல்லாமல் செய்தித்தாளை பார்க்கிற
ஏளனத்தோடு பார்க்கிற பார்வையில்
அவளின் புன்னகை  மகிழ்வற்று மரணிக்கிறது

தெருவில் சேலையின் கிழிசலை மறைத்து
காமக்கழுகுகளின்
உணவாக எத்தனிக்கும் கொக்கிப்புழு
வாழ்வு வாழும்
யுவதியின் கனவுகள்
வண்ணமயமானவை
அவற்றில் சேறள்ளி
எவ்வளவு இயல்பாக
வேசி என்கிற ஒற்றைசொல்லில்
தெளிக்கிறோம் நாம்

ஒற்றை பார்வை,
ஒரு சொல் ,
ஒரு வேக முடுக்கம்,
ஒரு விளாசல்
எல்லாவற்றையும் ஒரே நொடியில் முடித்துவிடும் உங்களுக்கு தெரியுமா அங்கே ஒரு உயிர்ப்பு
ஒரு பெண்ணின் மென்மை மரணிக்கிறது என்று ?


பள்ளி மாணவர்களிடமும் பளபளக்கும் செல்போன் !

 

வளர்ச்சியா… வீழ்ச்சியா ?
(இந்த கட்டுரை அவள் விகடனில் வெளிவந்த ஓரிரு வாரங்களில் அரசு பள்ளிகளில் செல்போனை தடை செய்தது !)

செல்போன் எனும் சாதனத்தின் அபரிமிதமான வளர்ச்சி… இன்றைக்கு உலகையே உள்ளங்கைக்குள் கொண்டுவந்துவிட்டது… யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதேசமயம், அதன் எதிர்விளைவுகள்தான் பகீர் கிளப்புகின்றன.சமீபத்தில் செய்தித்தாள்களில் தென்பட்ட அதிர்ச்சி செய்தி அது! நடந்து முடிந்த ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் 1100-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவன் அவன். ‘திறமைசாலி’ என்று பாராட்டு பெற வேண்டிய சென்னையைச் சேர்ந்த அந்த மாணவன், இன்று ‘அயோக்கியன்’ என்கிற அவப்பெயருடன் நிற்கிறான். காரணம், ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு, குறிப்பாக… பள்ளி ஆசிரியைகளுக்கு பல்வேறு எண்களில் இருந்து ஆபாசமான, அருவருக்கத்தக்க குறுஞ்செய்திகளை அவன் அனுப்பி இருக்கிறான். கூடவே, அநாகரிகமாகவும் பேசி இருக்கிறான்.

‘அந்தக் கருவி, உண்மையில் நல்ல பாதையில்தான் நம் பிள்ளைகளைச் செலுத்துகிறதா? செல்போன் பயன்பாடு நம்மையே தின்றுவிட்டதா? பெண்களுக்கான சிக்கல்களை அது அதிகப்படுத்திவிட்டதா?’ என்பது போன்ற கேள்விகளோடு சிலரைச் சந்தித்தபோது…

பவித்ரா, சமூகவியல் மாணவி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, சென்னை:

”கல்லூரி, அலுவலகம் என்று செல்லும்போதும், மாலை நேரம் கழித்து வீடு திரும்ப நேரிடும் சமயங்களிலும் பெண்களுக்குத் துணை யாகவும், தன் நிலை பற்றி வீட்டுக்கு அறிவிக்கும் கருவியாகவும் இருப்பது செல்போன்தான்.

இன்னொரு பக்கம் வீட்டில் இருக்கும் சமயங்களில் அப்பா, அம்மாவிடம்கூட பேசாமல் செல்போனில் தொலையும் பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். பெற்றோருக்குத் தெரியாமல் போர்வைக்குள் மறைத்துக் கொண்டு எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். மேலும், அறியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கும் ‘கம்பெனி’ கொடுத்து, சில பெண்கள் சிக்கலை வரவழைத்துக் கொள்கிறார்கள்.

மொத்தத்தில், செல்போன் எந்தளவுக்கு நமக்குப் பாதுகாப்பாகவும், துணையாகவும் இருக்கிறதோ… அதே அளவுக்கு உள்ளங்கைக்குள் அது கொண்டு வந்து சேர்க்கும் பிரச்னைகளும் அதிகமாகவே இருக்கின்றன!”

தரணி ஸ்ரீ, இ.சி.இ. மாணவி, எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி,

காஞ்சிபுரம்:

”இன்றைய இளைஞர்கள், டெக்னாலஜிக்கல் மாய உலகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்றே சொல்ல வேண்டும். ஒரு மெஸேஜ் வந்தால்… அதற்கு ரிப்ளை அனுப்பாமல் எங்களால் இருக்க முடியாது. மொபைல், மெசேஜ், ஃபேஸ்புக், ட்விட்டர் இதெல்லாம்தான் எங்களின் உலகமாக இருக்கிறது. நண்பர்களிடம் எப்போதும் தொடர்பில் இருக்க இவை எல்லாம்தான் எங்களுக்கு வழி. டெக்னாலஜியில் பல ஆபத்துகள் உள்ளன என்பது எங்களுக்கும் தெரியும்; அதிலிருந்து தற்காத்துக்கொள்ள உள்ள ‘பிளாக்’ ஆப்ஷன்களையும் நாங்கள் அறிவோம்!”

ஹேமா வரதராஜன், இல்லத்தரசி, மந்தைவெளி:

”ஸ்கூல் படிக்கும்போதே இப்போதெல்லாம் பிள்ளைகள் செல்போன் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ‘கிளாஸ்ல எல்லா பிள்ளைகளும் வெச்சுருக்காங்கப்பா…’ என்று அவர்கள் மறுகும்போது, குழந்தைகளுக்கு சகல வசதிகளையும் செய்துகொடுப்பதாக நினைத்து, சில பெற்றோர்களும் செல்போன் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். ஆனால், பிள்ளைகள் அதில் தங்கள் பொழுதுகளை எல்லாம் வீண் செய்யும்போது, பெற்றோர்களின் வலியையும் வேதனையையும் அவர்கள் உணர்வதில்லை. எங்கேயாவது… ஏதாவது வில்லங் கத்தில் சிக்கிக் கொள்வார்களோ என்கிற நம் தவிப்பின் நியாயமும் அவர்களுக்குப் புரிவதில்லை. ஆறாவது விரல் போலாகிவிட்ட அந்த செல்போனில் செலவழிக்கும் நேரத்தில், துளிகூட தங்கள் பெற்றோர்களுடன் செலவழிப்பதில்லை.

தவிர, லேட்டஸ்ட் வெர்ஷன் மொபைலாக மாற்றிக் கொண்டே இருப்பது இப்போது டிரெண்டாகி உள்ளது. தேவையற்ற மொபைல், தேவையற்ற ரீ-சார்ஜ் எல்லாவற்றின் மூலமாகவும் கரைவது பெற்றோரின் பணம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”

நமச்சிவாயம், இயற்பியல் துறைத்தலைவர், குருநானக் கல்லூரி, சென்னை:

”பிள்ளைகளுக்கு மரியாதை என்கிற  விஷயத்தை மறக்கடிக்கிற விஷயமாக செல்போன் இருக்கிறது. யார் என்ன கேள்வி கேட்டாலும், செல்போனில் நோண்டியபடியேதான் பேசுகிறார்கள். அதிலும் வகுப்பு நேரங்களில் இந்த செல்போனை வைத்து அவர்கள் செய்யும் அட்டூழியம் அதிகம். ஆசிரியர் வகுப்பில் இருக்கும்போதே தங்களுக்குள் எஸ்.எம்.எஸ். அனுப்பி முடித்ததும், ஏதோ காளையை அடக்கிவிட்ட சாகச சந்தோஷம் அவர்கள் முகத்தில்! இதையெல்லாம் செய்வதன் மூலம் எங்களை முட்டாளாக்குவதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இந்த செல்போன் சேட்டைகள் எல்லாம் அவர்களின் படிப்பை, பண்பைத்தான் குறைக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

குறுஞ்செய்திகளுக்காக ஆங்கிலத்தைச் சுருக்கி சுருக்கி டைப் செய்து பழகி, ஷ்வீபீ, ஷ்s, ளீ, றீஹ்ளீ என அந்த மொழிதான் தேர்வுத்தாள்களிலும் எதிரொலிக்கிறது. இதெல்லாம் போதாதென்று, வகுப்பில் இருக்கும் அப்பாவிப் பிள்ளைகளுக்கும் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை எம்.எம்.எஸ்-ல் அனுப்பி அவர்களையும் சீரழிக்கிறார்கள். இதன் அபாய விளைவுகள் மிக அருகில் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.”

லக்ஷ்மி விஜயகுமார், மனநல மருத்துவர், சென்னை:

”செல்போன் பிள்ளைகளை மனதளவில் மட்டுமல்ல… உடலளவிலும் பாதிக்கிறது. அதன் காந்தக் கதிர்வீச்சு, மூளையின் சர்க்யூட் மற்றும்  சர்க்குலேஷனை பெரிய அளவில் பாதிக்கிறது. மொபைல் இல்லாமல் ஒருநாள்கூட இருக்க முடியாது எனும் அளவுக்கு, இது ஒரு போதையாகவே மாறிவிட்டது.

இன்னுமொரு அவலம்… மொபைல்களால் பரிமாறப்படும் செய்தியின் தரம் குறைந்துவிட்டது. நேரடியாகப் பேசும்போது ஒருவரின் கருத்தோடு முரண்பட்டால்… இரண்டு பேரும் பேசித் தீர்த்துக்கொள்ளும் குணம் முன்பிருந்தது. இப்போது அந்த இங்கிதம் தொலைந்து உடனடியாக அந்தக் ‘கால்’ஐ கட் செய்வது, அல்லது அவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதை நிறுத்துவது, அல்லது அந்த எண்ணையே மொபைலில் ‘பிளாக்’ செய்வது என்று முடிகிறது. இதெல்லாம், மனதளவில் சிக்கல் மிகுந்த அல்லது வலிமிகுந்த தருணங்களில் இந்தப் பிள்ளைகள் எல்லாம் போராட்டக் குணத்தை இழந்து நிற்பதற்கே அவர்களை இழுத்துச் செல்லும்.

சமயங்களில் தெரியாத எண்ணில் இருந்து ஆபாச எஸ்.எம்.எஸ் வந்து தற்கொலை வரை போன பல கேஸ்களையும் பார்த்து இருக்கிறேன். செல்போன் பயன்பாட்டைக் குறைத்து, அவசியங்களுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்துவது என்று பழகிக் கொண்டால் மட்டுமே இதனால் விளையும் சிக்கல்கள் மட்டுப்படும்!’

லஷ்மி… தொண்ணூறு வயதில் ஒரு தொண்டுள்ளம்!


”இருங்க செல்லங்களா… வரிசையா வாங்கிக் கோங்க…” என்று கண்களில் கருணை பொங்க, கை நீட்டும் பிள்ளைகளுக்கு இனிப்புகள் தந்து கொண்டிருந்தவருக்கு… வணக்கம் வைத்தோம். புன்னகையுடன் பதில் வணக்கம் சொன்னார். ஆதரவற்ற பல குழந்தைகளுக்கும், பெரியவர் களுக்கும் பற்றாக இருக்கும் அந்த பெண்மணியின் பேச்சு ஆரம்பித்தபோது, நம் வார்த்தைகள் அடங்கின.தாம்பரத்தை அடுத்து உள்ள லட்சுமி புரத்தில் இருக்கிறது அந்தச் சின்னஞ் சிறிய வீடு. பிஞ்சுக் குழந்தைகளின் ஆரவார சத்தங்களுக்கு இடையே அமர்ந்திருக்கிறார் 90 வயது லஷ்மி அம்மாள்.

”திருவாரூர், நான் பிறந்த மண். பி.ஏ. ஹானர்ஸ் முடித்து, ராணுவத்தில் வேலை பார்த்தவரை திருமணம் செய்துகொண்டேன். மூன்று வருடங்கள் மட்டுமே நீடித்தது வாழ்க்கை. சீனப் போரில் அவர் மரணம் அடைந்துவிட்டார். ஒன்றரை வயதில் ஒன்று, ஆறு மாதத்தில் ஒன்று என கையில் இரண்டு ஆண் பிள்ளைகள். என் அண்ணனின் அரவணைப்புடன், அத்தியாவசிய பொருள் விநியோக அலுவலராக வேலை பார்த்து, பிள்ளைகளைக் காப்பாற்றினேன். கூடவே, பிறருக்கு உதவும் காரியங்களையும் செய்தேன். தெருக்குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் மனு கொடுப்பது தொடங்கி, தீ விபத்தில் காயம்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது வரை விரிந்திருந்தன என் பணிகள்.

அரசியல் மீதிருந்த நம்பிக்கையினால் அ.தி.மு.க-வில் இணைந்து, மகளிரணி மாநிலச் செய லாளர் பதவியில் பணி யாற்றினேன். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின், காங்கிரஸில் இணைந்தேன். பல மொழிகள் தெரியும் என்பதால், ராஜீவ் காந்தியின் அமேதி தொகுதியில் களப்பணி ஆற்றும் வாய்ப்பு பெற்றேன். அப்போதுதான் ஜி.கே. மூப்பனாரின் அறிமுகமும் அன்பும் கிடைத்தது. இடையில், என் பிள்ளைகளும் படிப்பு முடித்து நல்ல வேலைகளில் அமர்ந் தனர்.

இந்த நிலையில்தான் என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்த நிகழ்வை எதிர்கொண் டேன். இதயத்தின் நான்கு வால்வுகளும் பழுதடைந்துவிட்டன. ‘இனி அவ்வளவுதான்’ என்று கைவிடப்பட்ட நிலை. எனக்கான முழுச் செலவையும் மூப்பனார் ஏற்றுக்கொள்ள, நான்கு வால்வுகளையும் நீக்கிவிட்டு, செயற்கை வால்வுகள் பொருத்தப்பட்டன. மருத்துவ அற்புதத்தால் மீண்டும் உயிர்த்தெழுந்தேன்.

மறுஜென்மத்தை நன்முறையில், பிறருக்கு உதவும் வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, அதற்கான வேலைகளில் இறங்கினேன். வெளிநாட்டில் இருந்த என் பிள்ளைகள் ‘எதற்கு அதெல்லாம்..?’ என்றார்கள். 80 வயதான பிறகும், யாருக்கும் நான் கட்டுப்படத் தேவையில்லை என என் முடிவில் உறுதியாக இருந்தேன். ஆதரவற்ற குழந்தைகளுக்கு ‘அன்னை தெரசா இல்லம்’, முதியவர்களுக்கு ‘இந்திரா காந்தி இல்லம்’ ஆரம்பித்தேன். அப்போது ஆயிரம் ரூபாய்தான் என்னிடமிருந்த முதலீடு. வாய் பேச முடியாத ஒரு சிறுமியும், பெற்றோர் அற்ற ஒரு இஸ்லாமியச் சிறுமியும்தான் என் இல்லத்துக்கான துன்பமான முதல் நல்வரவு.

ஆர்வத்தில் இல்லங்களை ஆரம்பித்து விட்டாலும், தொடக்கத்தில் அதை கொண்டு செலுத்த மிகவும் சிரமப்பட்டேன். பலசமயங்களில் பேருந்துக்குக்கூட காசில்லாமல் என் பாதங்கள் நடந்திருக்கும் தூரம் அதிகம். பலரின் உதவியோடு அதையெல்லாம் சமாளித்தேன். நாளாக ஆக, இல்லங்களின் வரவுகள் கூடினர். 83 குழந்தைகள் 62 முதியவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

தினமும் காலையில் மூன்று மணிக் கெல்லாம் எழுந்து  குழந்தைகளுக்குச் சமைத்தது; வெள்ளம் வந்தபோது குழந்தைகளை கூடையில் வைத்து தலைக்கு மேல் தூக்கிச் சென்று காப்பாற்றியது… என்று முழு அர்ப்பணிப்புடன் உழைத்த நிறைவு என்னிடம் இருக்கிறது. பொருளா தார உதவிகளைப் பகிர்ந்து கொள்ள சில நல்லவர்களும், சமையல், பிற வேலைகள் என உடல் உழைப்பை பகிர்ந்துகொள்ள சில ஆதரவற்ற தொண்டுள்ளப் பெண்களும் என்னுடன் இணைந்து இந்த இல்லங்களை இப்போது சுவாசிக்க வைக்கிறார்கள். சுற்றி இருக்கும் கல்லூரி மாணவர்கள், கடைக்காரர்கள், மக்கள் ஆகியோரின் உதவிக்கு நான் கடமைப் பட்டுள்ளேன். காலையில் இருபது பாக்கெட்டுகள் பால் போடுகிற பால்காரர், தன் பங்குக்கு இலவசமாக ஒரு பாக்கெட் பால் போடுவார். இப்படிச் சின்ன சின்ன உதவிகளால் இயங்குகிறது எங்களின் உலகம்.

பெற்றோரால் குப்பைப் தொட்டியில் எறியப்பட்டு, பன்றி கடித்து இங்கே வந்து சேர்ந்தான் ஹரிஷ் என்ற சிறுவன். அவனுக்கு இருந்த உடல் குறையைக் கேள்விப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்தார்கள். ‘மியாட்’ மருத்துமனை, இலவசமாகவே அறுவை சிகிச்சை நடத்தியது. அந்தப் பணம் இப்போது ஹரிஷ் பெயரில் வங்கியில் வளர்கிறது.

என் பிள்ளைகளுடனான தொடர்பு அறுந்துவிட்டது. ‘உதவியே வாழ்க்கை’ என்று இருக்கும் இந்த அம்மா, அவர்களுக்குப் பிடிக்கவில்லையாம். இருந்தால் என்ன… இந்த இல்லக் குழந்தைகள் எல்லாம் என் பேரன், பேத்திகள்தான். இவர்கள் எல்லாம் தரையில் உறங்குவதுதான் இப்போது எனக்கிருக்கும் கவலை. கொஞ்சம் பெரிய இடம் கிடைத்தால் இவர்களைக் கட்டிலில் படுக்க வைக்கலாம்.

ஒன்று தெரியுமா… நான் உட்பட இல்லத்தில் இருக்கும் அனைவரின் கண்களையும் கண் தானத்துத்துக்கு எழுதி வைத்திருக்கிறோம். விருப்பம் உள்ளவர்கள், தங்கள் உடலை மருத்துவக் கல்லூரிகளுக்கு உடல் தானமும் செய்திருக்கிறோம். இருக்கும் வரை மட்டுமல்ல… அதற்குப் பின்பும் பிறருக்கு உதவக் காத்திருக்கிறோம் நாங்கள்!” என்று நம்மிடம் முடித்தவர்,

‘இந்தாங்கய்யா..!’ என்று இல்லத்தில் புதுவரவாக இணைந்திருக்கும் அந்த முதியவருக்கு இரண்டு வேட்டி – சட்டைகளைத் தந்தார்.

செயற்கை வால்வுகள் கொண்ட அவரின் இதயத்தில், ஊற்றெடுக்கிறது இயற்கையான அன்பும், கனிவும்!

 

அப்துல் கலாம்-10


ஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம். இதுதான் கலாமின் முழுப் பெயர். அக்டோபர் 15,1931-ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார். தந்தை ஜெயுனுல்லாபுதீன், தாய் ஆஷியம்மா. தந்தையார் படகு கட்டும் தொழில் செய்துவந்தார். கலாம் படிக்கும் காலத்தில் செய்தித்தாள் போட்டும், புளியங்கொட்டை விற்றும் வீட்டுக்கு உதவினார். நேர்மையான பண்பை தன் அப்பாவிடம் இருந்து பெற்றதாக சிலாகிப்பார் கலாம்.

 உயர்நிலைக் கல்வியை முடித்தப் பின், திருச்சியில் ஒரு கல்லூரியில் இயற்பியல் துறையில் பயின்றார். எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் ஏரோனாடிக்கல் பொறியியல் துறையில் இடம் கிடைத்து, பணம் கட்ட முடியாமல் இருந்தபொழுது இவரின் சகோதரிதான் நகைகளைக் கொடுத்து படிக்க அனுப்பினார். கல்லூரி வந்த சில நாட்களிலேயே, தொழிலில் ஏற்பட்ட பாதிப்பில் அப்பா, திரும்ப ஊருக்கு வரச்சொல்லியதால் தன் புத்தகங்களை  எடைக்கு போட்டு பணம் திரட்டப்போன இடத்தில் புத்தகங்களை வாங்காமல் பணத்தை மட்டும் கொடுத்து மேலே படிக்கச் சொன்ன பேப்பர்காரரை இன்னமும் நன்றியோடு குறிப்பிடுவார் கலாம்.

கல்லூரியில் உணவுச் செலவை குறைக்க சைவத்துக்கு மாறினார். அதுவே இப்போதும் தொடர்கிறது. பொறியியல் கல்வியை முடித்ததும் விமானி ஆகவே ஆசைப்பட்டார். ஆனால், ஓர் இடம் பின்தங்கி வாய்ப்பை இழந்தார். கண்ணீரோடு நின்றவரை சுவாமி சிவானந்தரின் ”இதைவிட பெரிதான ஒன்றுக்காக நீ அனுப்பப்பட்டு இருக்கிறாய்” என்ற வரிகள் உத்வேகப்படுத்தின.

விக்ரம் சாராபாயின் ஊக்கத்தில் இந்திய விண்வெளிக் கழகத்தில் இணைந்தார். அங்கேதான் முதல் சுதேசி விண்கலமான எஸ்.எல்.வியை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ரோகினி, திரிசூல், ப்ரித்வி, ஆகாஷ் என இந்தியாவின் விஞ்ஞான வலிமையை உலகுக்கு உரக்கச் சொல்லும் ஏவுகணைகளை உருவாக்கி ‘இந்தியாவின் ஏவுகணைத் தொழில்நுட்பத் தந்தை’ என அழைக்கப்பட்டார்.

புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் அதிகம்.திருக்குறள், குரான் எப்பொழுதும் உடன் இருக்கும். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்கள் பிடிக்கும். வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.

பிடித்த நிறம் கருநீலம். ஆடைகள் அதே நிறத்தில் இருக்கும். எளிமையான ஆடைகளையே அணிவார். எஸ்.எல்.வி-3 வெற்றிக்குப் பிறகு இந்திரா காந்தி, கலாமைச் சந்திக்க நினைத்தார். அப்பொழுது ”என்னிடம் நல்ல ஆடைகளே இல்லையே” என கலாம் சொல்ல, ”வெற்றி என்கிற அழகான ஆடையை அணிந்து இருக்கிறீர்கள்!’ என  மூத்த விஞ்ஞானி சதீஷ் தவான் சொன்னார்.

இந்தியா முழுக்க மாணவர்களை சந்திப்பதிலும் பாடம் நடத்துவதிலும் தன் நேரத்தை செலவழித்து வந்தார். தன்னிடம் அற்புதமான ஒரு கேள்வி கேட்டதற்காக தமிழ்நாட்டு சுட்டி ஒருவரை டெல்லி வரை அழைத்து மரியாதை செய்தார்.

ஜனாதிபதியாக இருந்தபோது, ராஷ்ட்ரபதி பவனில் இருக்கும் மொகல் தோட்டத்தை மக்கள் பார்வைக்குத் திறந்துவிட்டார். தன் பதவி ஏற்பு விழாவுக்கு சுட்டிகளை வரவழைத்தார். பதவிக் காலம் முடிந்து வெளியேறும்போது எந்த பரிசுப் பொருளையும் எடுத்து செல்லவில்லை. இரண்டே சூட்கேஸ்களில் அவரின் அத்தனை உடமைகளும் அடங்கிவிட்டன. தன் உறவினர்கள் டெல்லி வந்து தங்கியபோதுது அதற்கான செலவை ஜனாதிபதி மாளிகை கணக்கில் வைக்காமல் தானே செலுத்தினார்.

இந்தியாவின் உயரிய கௌரவமாகக் கருதப்படும் பாரத ரத்னா விருது பெற்றவர். ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் கிலோ கணக்கில் செயற்கை கால்களை அணிந்துகொண்டு இருந்த சுட்டிகளுக்கு வெறும் நானூறு கிராம் எடையில் செயற்கை கால்களை வடிவமைத்துத் தந்தார்.

தான் எழுதிய அக்னிச் சிறகுகள் நூலில் ”என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்த பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை, என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன்-என் 10


டாக்டர் ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 5, 1888-ல் திருத்தணியில் பிறந்தார். அப்பா, வீராசாமி. அம்மா, சித்தம்மா. இவரது தாய்மொழி தெலுங்கு. மிகவும் வறுமையான குடும்பம். கல்வி கற்க வேண்டும் என்கிற ஆர்வம் உந்தித்தள்ளியது. புத்தகம் வாங்கப் பணம் இல்லாமல், இவரின் உறவுக்காரர் பயன்படுத்திய புத்தகங்களை இரவல் பெற்றுப் படித்தார்.

வேலூர் ஊரிசு கல்லூரியிலும் பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் பயின்றார். பேராசிரியர் ஏ.ஜி.ஹெக்கின் வழிகாட்டுதலின்படி சிறப்பாகப் படிப்பை முடித்தவர், தன்னுடைய எம்.ஏ. தத்துவப் பாடத்தின் புராஜெக்ட்டை புத்தகமாக வெளியிட்டார். இதன் மூலம் தத்துவவாதிகள் உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். அப்போது அவருக்கு வயது 20.

சிவகாமு அம்மா எனும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ஒரு சமயம் வறுமை தாங்க முடியாமல், கல்லூரியில் தான் பெற்ற பதக்கங்களை அடகுவைத்து செலவுகளைச் சமாளித்து இருக்கிறார்.

சில ஆண்டுகள் கழித்து, மைசூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். மாணவர்களிடம் தலைசிறந்த ஆசிரியர் எனப் பெயர் பெற்றார்.

1931-ல் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் நியமிக்கப்பட்டார். 1939-ல் உ.பி.யில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார். பல்கலைக்கழக மாணவர்கள் ‘வெள்ளையனே நீ’ இயக்கத்தில் ஈடுபட்டதால், கவர்னர் மாரிஸ் ஹல்லேட் பல்கலைக்கழகத்தைப் போர் மருத்துவமனையாக மாற்ற முயற்சித்தார். ராதாகிருஷ்ணன், வைஸ்ராயைச் சந்தித்து அதனைத் தடுத்தார். பின்னர், அரசு நிதி உதவி தராது என அறிவித்ததும் தெருத்தெருவாகச் சென்று நிதி திரட்டி, பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து நடத்தினார்.

ஆங்கிலேய அரசாங்கம் வழங்கிய சர் பட்டத்தைத் துறந்தார். தன்னை முனைவர் என்று அழைத்தாலே போதும் எனப் பெருமிதத்தோடு சொன்னார். விடுதலை பெறுவதற்கு முன்னரே யுனெஸ்கோவுக்கான இந்தியப் பிரதிநிதி ஆனார். இந்தியா விடுதலை பெற்றதும் கல்வி ஆணையத் தலைவர் ஆனார். கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்துப் பல்வேறு யோசனைகளை இவரின் குழு வழங்கியது.

1952-ல் இருந்து இரண்டு முறை துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 1962-ல் ஜனாதிபதி ஆனார். அப்போது தனது சம்பளமான 10,000 ரூபாயில் 2,500 ரூபாயை  மட்டும் பெற்றுக்கொண்டு மீதியைப் பிரதமரின் நிவாரண நிதிக்குக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

ஜனாதிபதி ஆனதும் இவரைச் சந்தித்த இவருடைய மாணவர்கள் சிலர், இவரது பிறந்த நாளைக் கொண்டாட அனுமதி கேட்டனர். ‘என்னுடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் நான் மகிழ்வேன்’ என்றார். அதன்படி, 1962-ல் உதயமானது ஆசிரியர் தினம். செப்டம்பர் 5, 2012… ஆசிரியர் தினத்துக்கு இது பொன் விழா ஆண்டு.

இவருக்கும் அப்துல் கலாமுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் ஆசிரியர்களாக இருந்து குடியரசுத் தலைவர் அரியணையில் ஏறியவர்கள். எந்த அரசியல் கட்சியையும் சாராமல், அனைத்துத் தரப்பினராலும் குடியரசுத் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள்.

1954-ல் பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் முதல் பாரத ரத்னாவை சி.வி.ராமன், ராஜாஜி ஆகியோருடன் இவரும் பெற்றுக்கொண்டார். ஏப்ரல் 17, 1975 அன்று ராதாகிருஷ்ணன் மறைந்தார்.

பில்கேட்ஸ்…


பில்கேட்ஸ்…
கணினி உலகின் சிகரம்!
ளியவர்களும் நுழையும் வகையில் கணிப்பொறியின் ஜன்னல்களைத் திறந்தவர். ஓயாத உழைப்பின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்கவைத்தவர்.

 பில் கேட்ஸின் தந்தை, அரசாங்க அட்டர்னி ஜெனரல். தாய், பிரபல வங்கியின் இயக்குனர்களில் ஒருவர். பில் கேட்ஸ் சுட்டிப் பையனாக இருந்த பொழுது அதிகமாகப் படித்தது என்சைக்ளோபீடியா.  அதன் மீதே சாய்ந்து தூங்கிவிடுவார். படிப்பில் கெட்டியாக இருந்தாலும், அடிக்கடி வகுப்பை கட் அடிப்பது உண்டு. அதனால், சியாட்டில் நகரில் உள்ள படு ஸ்ட்ரிக்ட்டான பள்ளியில் பெற்றோர் சேர்த்தார்கள். ‘அங்கேதான் பரந்த உலகின் அற்புதங்களை ரசிக்கக் கற்றுக்கொண்டேன்’ என்பார் கேட்ஸ்.

 தமது 13-ஆம் வயதில், ‘டிக் டாக் டோ’ எனும் விளையாட்டுக்கு புரோக்ராம் செய்தார் கேட்ஸ். அதன் வெற்றி, கணினி மீதான ஆர்வத்தைத் தூண்டியது.

 பள்ளியில் கேட்ஸ் விரும்பிப் படித்தது, அறிவியல் மற்றும் கணிதம். கல்லூரியில் நுழைவதற்கான தேர்வில் 1600-க்கு 1590 மதிப்பெண்கள் எடுத்தார். தந்தையைப் போல வக்கீல் ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. அங்கே, அவரைவிட இரண்டு வயது பெரியவரான பால் ஆலனின் நட்புக் கிடைத்தது.

 இருவரும் குணத்தால் பெரிதும் மாறுபட்டவர்கள் என்றாலும், கணினி மீதான ஆர்வம் ஒன்று சேர்த்தது. இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு புரோகிராம்களை உருவாக்கினார்கள். பல நேரம் கணினி முன் உட்கார்ந்து இருப்பார்கள். இதற்காக, தனக்கு விருப்பமான பல கணக்கு வகுப்புகளையும் கட் அடித்துள்ளார் பில் கேட்ஸ்.  கல்லூரிப் படிப்பு சலிப்பைத் தந்தது. பெற்றோரின் அனுமதியோடு கல்லூரியைவிட்டு பாதியிலேயே வெளியேறினார்.

 HONEYWELL  என்ற நிறுவனத்தில் சில காலம் புரோகிராம் உருவாக்குபவராக பால் ஆலனுடன் சேர்ந்து பணிபுரிந்தார் பில் கேட்ஸ். அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறிய பின், ஒரு நிறுவனத்தைத் தொடங்க முடிவுசெய்தார். MICRO COMPUTER மற்றும் SOFTWARE ஆகிய இரண்டு பதங்களை இணைத்து, MICROSOFT எனப் பெயர் வைத்தார். பால் ஆலன் உடன் இணைந்து, சொந்த நிறுவனத்தைத் தொடங்கியபோது கேட்ஸ் சொன்னது, ‘முப்பது வயதிற்குள் நான் கோடீஸ்வரனாகிக் காட்டுவேன்!”

 அம்மா மீது ஏகத்துக்கும் பாசம் வைத்து இருந்தவர். அவரின் அம்மா பல்வேறு அனாதைச் சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகளுக்கு நிதி திரட்டியவர். அவர், மார்பகப் புற்றுநோயால் இறந்த போது நொறுங்கிப்போனார் பில் கேட்ஸ். புற்றுநோய், எய்ட்ஸ், போலியோ நோய்களுக்கு எதிராக நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு ஏராளமான நிதி வழங்கி உள்ளார்.

 மிகவும் எளிமையான பழக்கங்கள் உடையவர்.கடுமையான உழைப்பாளி. அலுவலகத்தில் பல மணி நேரம் வேலை செய்வார். ஒரு நாள் காலை அவரின் அறைக்குள் வந்த உதவியாளர், யாரோ டேபிளுக்கு அடியில்  தூங்கிக்கொண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போய், அருகில் சென்று பார்த்தார். பில்கேட்ஸ்தான், இரவு வேலையை முடித்துவிட்டு அங்கேயே படுத்துக்கொண்டு இருந்திருக்கிறார்.

 நல்ல ஓவியங்கள், பழங்கால பொருட்கள் மீது ஆர்வம் அதிகம். மில்க் சாக்லேட்களிலும் மனதைப் பறிகொடுப்பவர். குழந்தைகளின் மீது அளவு கடந்த ப்ரியம் உண்டு. தன்னைச் சந்திக்கும் சுட்டிகள் கேட்கும் குறும்பான கேள்விகளுக்கு முகம் கோணாமல் பதில் சொல்வார்.

 ஹார்வர்டு கல்லூரியில் இருந்து பட்டம் பெறாமல்  வெளியேறினாலும் அதே பல்கலைக்கழகம்,  அவருக்கு கௌரவப் பட்டம் வழங்கி இருக்கிறது. தன் நிறுவனத்தில் பட்டங்கள் அதிகம் பெற்றவர்களைவிட, மாற்றிச் சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார்.

 தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இல்லை. ‘மெலிண்டா கேட்ஸ்’ என்கிற அமைப்பின் சார்பாக, உலகம் முழுக்க பயணம் செய்து, மக்களின் பிரச்னைகளுக்கு உதவும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய  மூன்று பிள்ளைகளுக்கும் தன் சொத்தில் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவாகவே கொடுத்து இருக்கிறார். மிச்ச சொத்துக்களை, சமூகப் பணிகளுக்காக ஒதுக்கி இருக்கிறார் பில் கேட்ஸ்.

அமீர் கான் என் 10


மும்பையில் மார்ச் 14, 1965-ஆம் ஆண்டு தாஹிர் உசேன் மற்றும் ஜீனத் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் அமீர் கான். அப்பா, இந்தி சினிமா தயாரிப்பாளர். மாமா நாசர் உசேன், பிரபலமான இயக்குநர், நடிகர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்த அமீர், படிப்பிலும் சுட்டியாக இருந்தார். நன்றாக டென்னிஸ் ஆடுவார். மகாராஷ்டிரா மாநில டென்னிஸ் சாம்பியன் இவர்.

குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், 11 வருட இடைவெளிக்குப் பின் நாயகனாக மீண்டும் சினிமாவில் நுழைந்தார். ஐந்து வருடங்களுக்குப் பிறகே முதல் வெற்றியைப் பிடித்தார். இவருக்கு மூன்று குழந்தைகள்.

2001-ல் ‘லகான்’ படம் வெளிவந்தது. கிரிக்கெட் விளையாட்டின் மூலம் ஆங்கிலேயர்களுடன் மோதும் கதை. அந்தப் படம் தேசிய விருது பெற்றது. ஆஸ்கருக்குப் பிற மொழிப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. நடுவில் நான்கு வருடங்கள் நடிப்பதை நிறுத்திக்கொண்டார் அமீர். ‘இனி அமீர் அவ்வளவுதானா?’ என நினைத்தபோது, மங்கள் பாண்டே என்ற சுதந்திரப் போராட்ட வீரனின் கதையில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் ஹிட்!

சமூகம் சார்ந்த பார்வை உள்ளவர். மேதா பட்கருடன் இணைந்து நர்மதா அணையின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்க்கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். குழந்தைகள் நலத் துறையின் சார்பாக பிள்ளைகளின் ஊட்டச் சத்துக் குறைபாட்டைப் போக்கும் தூதுவராகச் செயல்படுகிறார். யுனிசெஃப் நிறுவனத்துடனும் இணைந்து குழந்தைகள் நல முன்னேற்றத்துக்காகப் பணியாற்றுகிறார். 2001-ல் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தைத் தத்து எடுத்துக்கொண்டார். பாகிஸ்தானில் புற்றுநோய் மருத்துவமனை ஒன்றின் நிதி திரட்டலுக்காகச் சென்று அந்த விழாவில் கலந்துகொண்டார். கண் தானம் போன்ற சமூகம் சார்ந்த விளம்பரங்களிலும் தோன்றினார்.

இயக்குனராக இவர் அறிமுகமான முதல் படம் ‘தாரே ஜாமீன் பர்’. கற்றல் குறைபாடு எனும் டிஸ்லெக்சியா உள்ள ஒரு சிறுவன் பற்றிய அந்தப் படம், அமீர் கானுக்கு பெரும் புகழைப் பெற்றுத்தந்தது. படம் ஆங்கிலத்தில் ‘லைக் ஸ்டார் ஆன் எர்த்’ என்கிற பெயரில் வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் டி.வி.டி. ஆக வெளியிடப்பட்டது.இப்படி வெளியான முதல் இந்தியப் படம் இதுவே.

ஆடம்பரம் தவிர்ப்பார். பெரும்பாலும் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள மாட்டார். குழந்தைகள் மற்றும் ரசிகர்களைவிட விருதுகள் ஒன்றும் முக்கியமானது இல்லை என்பார். உலகப் புகழ் பெற்ற லண்டன் டுஸாட் அருங்காட்சியகம் இவரின் மெழுகுச் சிலையை வைக்க விரும்பியபோது மறுத்துவிட்டார்.

அடிக்கடி மாறுவேடத்தில் ஊர் சுற்றக் கிளம்பி விடுவார். கிழவன், விவசாயிபோல பேருந்துகளில் பயணம் செய்து இருக்கிறார்.

கல்வி முறை மீதான விமர்சனத்தை ஆழமாக வைத்த ‘த்ரீ இடியட்ஸ்’ படத்தில் 18 வயது இளைஞனாக நடிக்க ரொம்பவே யோசித்தார். காரணம், அவரின் வயது 45. எனினும் மக்களுக்கு  நல்ல கருத்தைச் சொல்லும் படம் என்பதால் நடித்தார். அதன் வசூல், இந்திய அளவில் எந்தப் படமும் இதுவரை செய்யாதது.

சத்யமேவ ஜெயதே எனும் தொலைக்காட்சித் தொடரில்… பெண் சிசுக்கொலை, குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள், தீண்டாமை போன்ற தலைப்புகளின் மூலம் 13 வாரங்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வை உண்டு செய்தார். தற்போது தி ஹிந்து நாளிதழில் திங்கள் தோறும் சமூகப் பிரச்னைகள் பற்றி எழுதிவருகிறார்.

‘பத்ம பூஷன்’ மற்றும் ‘பத்மஸ்ரீ’ விருதுகளைப் பெற்று இருக்கிறார். ‘டைம்’ பத்திரிகை இவரை இந்தியாவின் ஷான் பென்  (sean penn) என அழைத்துச் சிறப்பித்தது. ஷான் பென், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்.

 


அருந்ததி ராய்  சென்னை வந்த பொழுது விகடனுக்காக சந்திக்கும் வாய்ப்பு உண்டானது ;மென்மையாக ஆனால் தீர்க்கமாக அவர் பேசியதன் தொகுப்பு இது

அண்ணா ஹஜாரே ஊழலை ஒழிக்க மாட்டார்!
அலர்ட் அருந்ததி ராய்
டைந்த குடியரசு’. தேசத்தின் மனசாட்சியாகத் திகழும் அருந்ததி ராயின் சமீபத்திய கட்டுரைகளின் தொகுப்பு இது. காலச்சுவடு பதிப்பகம் சார்பில் வெளியாகி இருக்கும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

 ”இந்தியா உடைந்துவிடும் என்று முடிவே செய்து விட்டீர்களா?”

”இந்தியா ஏற்கெனவே உடைந்துவிட்டது. இந்தியர்கள் எல்லோருமே மனதளவில் உடைந்து, பிரிந்துதான் நிற்கிறார்கள். இங்கு யாருக்குமே மற்றவர்களின் பிரச்னைகளில் கவலை இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகப் பேசுபவர்கள் காஷ்மீர்பற்றிப் பேசுவது இல்லை. தண்டகாரண்யக் கொடுமைகளை எதிர்த்துப் போராடுபவர் கள் கூடங்குள மக்களுக்காகக் குரல் கொடுப்பது இல்லை. இதற்கு முக்கியக் காரணம், இங்கு ஒவ்வொருவரும் அவரவர் பிரச்னையை மட்டுமே முக்கியமானதாகக் கருதுவதுதான். ஒரு வகையில், இந்தப் பிரிவுக்கு அரசுதான் காரணம். என்னைக் கேட்டால், இந்தியாவின் மிகப் பெரிய பிரிவினைவாத இயக்கம் இந்தியாவை ஆளும் அரசாங்கம்தான்!”

”ஒருபுறம் அரசாங்கத்தைப் பிரிவினைவாத இயக்கம் என்கிறீர்கள். மறுபுறம் மாவோயிஸ்ட்டுகளைக் காந்தியவாதிகள், தேச பக்தர்கள் என்கிறீர்கள்?”

”நக்சலைட்டுகள் இயற்கையோடு ஒட்டி வாழ்கிறார்கள். துப்பாக்கிக் குண்டுகளைக்கூட அவர்கள் மறுசுழற்சி செய்து பயன்படுத்துகிறார் கள். காந்தியின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை என்ற கோட் பாட்டை இன்றைக்கு ஓரள வேனும் பின்பற்றுவது நக்ச லைட்டுகள்தான் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந் தேன். அதைத்தான் நீங்கள் குறிப்பிடுவதுபோலச் சிலர் திரித்துவிட்டனர். பயங்கர வாதத்தை ஒருபோதும் நான் நியாயப்படுத்தியது இல்லை.

ஆனால், நக்சலைட்டுகள் பக்கமும் நியாயம் இருப்பதை நான் பேசினேன். நீங்கள் நக்சலைட்டுகள் என்று குறிப்பிடும் தண்டகாரண்யப் பகுதியில் ஆயுதங்களைத் தூக்கிப் போராடும் போராளிகள் உண்மையில் யார்? அவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் ஆதிவாசிகள். பழங்குடிகள். அந்த மண்ணின் பூர்வக் குடிகள். அவர்கள் யாருக்காகப் போராடுகிறார்கள்? தங்கள் நிலத்துக்காக மட்டும் அல்ல… இந்த தேசத்தின் அரிய சொத்துக் களான கனிம வளங்களைக் காக்கப் போராடுகிறார்கள்.

நீங்கள் இது இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நாம் அரசு என்று குறிப்பிடும் அமைப்பு பன்னாட்டுப் பெரு நிறுவனங்களிடம் தேசத்தின் சொத்துக்களைக் கூறுபோட்டு விற்கத் துடிக்கிறது. நாம் பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுபவர்களோ அதைக் காக்கப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களில் யாருடைய நியாயத்தை நான் பேச வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? மாவோயிஸ்ட்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடுவதை நான் சரி என்று சொல்லவில்லை. ஆனால், அவர்களுடைய போராட்டத்தின் நோக்கம் நியாயமானது என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.”

”மாவோயிஸ்ட்டுகளின் ஆயுதப் பாதையை நீங்கள் ஏற்கவில்லை சரி. ஆனால், அண்ணா ஹஜாரே வின் இயக்கத்தையும் நீங்கள் நிராகரிக்கிறீர் களே?”

”அண்ணா ஹஜாரே குழு எப்போது தலை எடுத்தது? இந்த நாட்டின் ஒட்டு மொத்த மக்களும் இரண்டாம் தலை முறை ஊழலை மிகப் பெரிய பிரச்னை யாகப் பார்க்க ஆரம்பித்த தருணத்தில், மன்மோகன் அரசை எல்லா இயக் கங்களும் கடுமையாகத் தாக்க ஆரம்பித்த தருணத்தில்தான் உருவெடுத்தார் ஹஜாரே. சரியாகச் சொன்னால், மக்களின் வெறுப்பைச் சரியான தருணத்தில் திசை திருப்பினார் ஹஜாரே.

வெறும் சட்டங்களால் மட்டுமே ஊழலை ஒழித்துவிட முடியுமா? அது ஒரு போலி நம்பிக்கை. சம கால இந்தியாவின் மிகப் பெரிய அபாயம் – பெரு நிறுவனங்கள். இரண்டாம் அலைக்கற்றை ஊழல் உட்பட, இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்களில் அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு.

அவர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாத ஹஜாரே குழு, இன்னும் சொல்லப்போனால், அவர்களுடைய முழு ஆதரவுடன் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் ஹஜாரே குழு – ஊழலை ஒழிக்கும் என நம்புவது மிகப் பெரிய மடத்தனம்!”

”எதையுமே அவ நம்பிக்கையுடன் பார்க் கிறீர்கள்… மக்களுக்கு என்ன வழிதான் இருக்கிறது? நீங்கள் ஓர் அவநம்பிக்கைவாதியா?”

”இதை நான் ஆட்சேபிக்கிறேன். எங்கெல்லாம் மக்கள் நியாயத்துக்காகப் போராடுகிறார்களோ… அங்கெல்லாம் – குறிப்பாக யாரெல்லாம் புறக்கணிப்புகளோடு போராடுகிறார்களோ அங்கெல்லாம் நான் கை கோத்து இருக்கிறேன் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.”

”தமிழகத்தில் மூவர் தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு பெரும் மக்கள் அலை எழுந்தது. ஆனால், தேசிய அளவில் பல அறிவுஜீவிகள் இந்தப் போராட்டம் தொடர்பாக வாயே திறக்க வில்லை. நீங்கள் உட்பட?”

”மனிதனை மனிதனே கொல்லும் காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக நான் எப்போதுமே குரல் கொடுத்துவருகிறேன். ஒரு நாகரிகச் சமூகத்தில் மரண தண்டனை அவமானகரமான ஒரு செயல்பாடு. தீவிரவாதிகள் ஒரு குறிப்பிட்ட அமைப் பின் மூலமாகக் கொலை செய்கிறார்கள். ஆனால், தூக்குத் தண்டனை நம் மக்களின் பெயரால் அரசாங்கம் செய்யும் கொலை. அரசாங்கமும் கொலைகாரர்களும் ஒன்றா? தூக்குத் தண்டனை கண்டிப்பாகக் கூடாது… அது யாருக்காக இருந்தா லும் சரிஎன்பதே என் நிலைப்பாடு.

அதே சமயம், நான் வாயை மூடிக்கொண்டு இல்லை. நீங்கள் குறிப்பிடும் காலகட்டத்தில் பெரும்பான்மையினரால் பொருட்படுத்தப்படாத வட கிழக்கு மாநில மக்கள் போராட் டங்களில் நான் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தேன்.”

”புகுஷிமாவுக்குப் பிந்தைய சூழலில், அணு சக்தி தொடர்பான இந்திய அரசின் நிலைப்பாடு சரியா? குறிப்பாக, கூடங்குளம் விவகாரத்தில்?”

”ஜப்பானில் நில நடுக்கம் ஏற்பட்டபோது நான் அங்கேதான் இருந்தேன். இந்த நில நடுக்கம், சுனாமி, அணு உலை விபத்துக் களால் ஜப்பான் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் இழப்புகள் சொல்லி மாளாதவை. மிகக் கொடுமையானவை. ஆனால், பல விஷயங்களை ஜப்பானிய அரசு மறைத்துவிட்டது. நமக்கு இங்கு தெரியும் தகவல்கள் ரொம்பவும் குறைவானவை என்பதே உண்மை.

புகுஷிமா விபத்துக்குப் பிறகு, பல நாடுகள் தங்கள் அணு மின் திட்டங்களை நிறுத்திவிட்டன. அணு சக்திப் பயன்பாடு குறித்தே மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துவிட்டன. நம்முடைய அரசுதான் எந்த உறுத்தலும் இல்லாமல் இன்னும் பல அணு மின் நிலையங்களைத் திறக்க உள்ளது. அரசியல் கட்சிகளும் இதில் இரட்டை வேடம் போடுகின்றன.

ஒரு சாதாரண பிளாஸ்டிக் குப்பையைக்கூட ஒழுங்காகக் கையாளத் தெரியாத இந்த அரசாங்கம், அணு உலைகளைப் பராமரித்து, கழிவுகளைப் பத்திரமாக வெளியேற்றப்போவதாகக் கூறுவது நகைப்புக்கு உரியது.”

”காவிரியைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. இந்தச் சூழலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர் கள்?”

”இரு மாநில மக்கள் இடையே கொந்தளிப்பான உணர்ச்சி கள் நிலவும் இந்தச் சூழலில், நான் என்ன சொன்னாலும் அது நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்யும். அதனால், இப்போது இதுபற்றி நான் பேச விரும்ப வில்லை.”

”சரி, உடைந்துகொண்டு இருக்கும் இந்தியாவை எப்படித்தான் காப்பது?”

”மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டுமாயின், மக்கள் தாங்களே ஒன்றிணைந்து போராட வேண்டும். பெரிய தலைவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருப்பது உதவாது. கூடங்குளம் மக்களின் போராட்டம் அதற்கு ஒரு நல்ல உதாரணம்!”

[ Top ]

உங்களுக்கும் எனக்கும் வரலாறு உண்டு!


ந்தப் புத்தகக் கண்காட்சியில் கவனம் ஈர்த்தவர்களில் முக்கியமானவர் உசிலம்பட்டியைச் சேர்ந்த சுந்தர வந்தியத்தேவன்.’ ‘பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்’ என்ற அவருடைய புத்தகம் ஒரு சமூகத்தின் வரலாறு என்பதைத் தாண்டி, நல்ல படைப்பாக வந்திருக்கிறது. புத்தகத்தில் வந்திருக்கும் கதையைக் காட்டி லும், அந்தப் புத்தகம் வந்த கதையே முக்கிய மானது என்கிறார்கள் சுந்தர வந்தியத்தேவனை அறிந்தவர்கள்.

”என் அம்மா ‘பொன்னியின் செல்வன்’ வந்தியத்தேவனின் தீவிர ரசிகை. அதனால், எனக்கு இந்தப் பெயர் வைத்தார்கள். வந்தியத்தேவன்போல நான் வீராதிவீரனாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், நானோ பிறக்கும்போதே குறைபாட்டோடு பிறந்தேன். ‘பிளாஸ்டிக் பேபி’ என்பார்கள் என்னைப் போலப் பிறந்தவர் களை!

உடலின் தசைகள் இறுகிப்போய் கை கால்களை அசைக்கவே மிகவும் கஷ்டமாக இருக்கும். இதனால், நான் நடக்க ஆரம் பிக்கவே ஐந்து வயதாகிவிட்டது.

நடக்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களுக்குள் அடுத்த சிக்கல். உடல் உறுப்புகளின் எடையைத் தாங்கும் சக்தி தசைகளுக்கு இல்லை. அதனால், என் ஒட்டுமொத்த உடல் எடையும் முதுகெலும்பில் இறங்கி, முதுகெலும்பு வளைந்துவிட்டது. உணவை எடுத்துச் சாப்பிடவே கஷ்டம்.

அம்மா ஆசிரியையாகப் பணியாற்றிய பள்ளியிலேயே நான் படித்ததால், வகுப்பறைச் சங்கடங்களை ஓரளவுக் குச் சமாளிக்க முடிந்தது. பேனாவைப் பிடித்து எழுதுவதற்குக்கூட முடியாது. அப்புறம் கையெழுத்து எப்படி இருக்கும்? யாருக்குமே புரியாது!

எல்லோருக்கும் புரிவதுபோல எழுதவே ரொம்ப காலம் எடுத்துக்கொண்டேன். அப்போது எல்லாம் தேர்வுகளை நினைத்தாலே, மனம் நடுங்கும். ஆனால், பேச்சு கை கொடுத்தது. பேச்சுப் போட்டிகளில் பெயர் எடுத்தேன். கட்டுரைப் போட்டிகளில் நான் பங்கெடுத்துக்கொள்ள முடியாத நிலையில், என் கருத்துக்களை நண்பர்களிடம் சொல்லி அவர்களைப் பங்கெடுத் துக்கொள்ளச் சொன்னேன். அவர்களுடைய அழகிய கையெழுத்துக்களில் என் கருத்துக் கள் பரிசுகளை அள்ளின. ஒரு வழியாகச் சட்டம் படித்து முடித்தேன். வாசிப்பும் படிப்பும் பெரும் ஆறுதலாக இருந்தன. ஆனால், எழுத்து என்பது என்னைப் பொறுத்த அளவில் ஒரு பெரும் கனவாகவே இருந்தது.

இந்த நிலையில், என்னை எழுத்தை நோக்கித் தள்ளியது ஒரு புத்தகம். அது, ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதிய ‘கள்ளர் சரித்திரம்’. அந்த நூலை வாசிக்க வாசிக்க… நான் அதிர்ந்துபோனேன். வெறும் கொள்ளையர்களாகவும் குற்றப் பரம்பரையினராகவும் மட்டுமே ஓர் இனத்தைச் சித்திரித்து அந்த வரலாறு எழுதப்பட்டு இருந்தது. இந்த மண்ணின் பூர்வகுடிகளான பிறமலைக் கள்ளர்பற்றியோ, அவர்களுடைய எண்ணற்ற பழக்கவழக்கங்கள்பற்றியோ, வாழ்வியல் பண்புகள்பற்றியோ அதில் துளி அளவும் விஷயம் இல்லை.

ஒரு வேலை விஷயமாக மதுரைக்கு பால்டிமோரில் இருந்து வந்திருந்த பேராசிரியர் ஆனந்த பாண்டியனைச் சந்தித்தேன். அவருக்குப் பூர்வீகம் கம்பம் பள்ளத்தாக்கு. பிறமலைக் கள்ளர்பற்றி அவர் ஆய்வு செய்துவந்தார். அப்போது ‘கள்ளர் சரித்திரம்’ எனக்குள் ஏற்படுத்திஇருந்த பாதிப்பு அவருடைய ஆய்வில் என்னை நாட்டம்கொள்ளச் செய்தது. ஆய்வுப் பணி என்றால் என்ன என்று அவரிடம் கற்றுக்கொண்டேன்.

இதனிடையே சென்னையில் என் மாமாவின் முயற்சியால், தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சத்தியநாராயணன் அவர்களிடம் ஜூனியராகச் சேர்ந்தேன். என்னால் விரைந்து பணிகளை முடிக்க முடியாது. நான் ரொம்பவும் மெதுவாகவே வேலைகளைச் செய்வேன். இருந்தாலும், அவர் எனக்கு மிகப் பெரிய உற்சாகத்தை அளித்தார். என் வளர்ச்சியில் பெரிய அக்கறை எடுத்துக்கொண்டார்.

ஆனாலும், என் மனம் முழுவதும் என் மக்களின் வரலாற்றைத் தேடித் தொகுக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது. என் அம்மாவின் ஓய்வூதியப் பணத்தை மட்டுமே நம்பி நடந்த என் ஜீவனத்தையும் பேருந்தில் ஏறக்கூடப் பிறர் துணை தேவைப்படும் என் உடல்நிலையையும் சுட்டிக்காட்டி, என் ஆய்வுக்குத் தடை போட்டார்கள் சொந்தக்காரர்கள்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வக்கீல் தொழில் செய்யப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, யாரையாவது துணைக்கு அழைத்துக்கொண்டு ஆய்வுப் பணிக்காக கிராமம் கிராமமாகச் சுற்றத் தொடங்கினேன்.

சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்… கிராமத்து மக்கள் ஓடி ஓடி உதவினார்கள். தங்கள் ஊரார் வாழ்க்கை, தங்கள் முன்னோரின் வரலாறு பதிவுசெய்யப்படுகிறது என்கிற ஆர்வம்!

இதை ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்வாகப் பார்க்கக் கூடாது. நம் சமூகத்தில் எந்த இனத்தவரும் தனி வாழ்க்கை வாழ்ந்துவிடவில்லையே? கள்ளர் இன மக்களின் வாழ்வும் பிற இன மக்களின் வாழ்வோடு ஒருங்கிணைந்தே அமைந்து இருந்தது. அதனால், இந்த வரலாற்றுப் பதிவு பல்வேறு இன மக்கள் வாழ்வோடும் இணைந்ததுதான். இதை யார் புரிந்துகொண்டார்களோ இல்லையோ… கிராமத்து மக்கள் நன்றாகப் புரிந்துவைத்திருந்தார்கள். எனக்கு எல்லா இன மக்களின் ஆதரவும் கிடைத்தது. அனைத்துத் தரப்பினருமே உதவினார்கள்.

ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்… ஒரு நாள் என் காலில் இருந்து செருப்பு நழுவி விழுந்துவிட்டது. என்னால் கால் விரலை நகற்றி செருப்பை அணிந்துகொள்ள முடியாது. அப்போது ஒரு பெரியவர் தன் கைகளால் என் கால் விரல்களை விலக்கி செருப்பைப் போட்டுவிட்டார். என்னை நெகிழவைத்து, அழவைத்த சம்பவம் அது!

எட்டாண்டு காலம் எவ்வளவோ கஷ்டங்களுக்குப் பிறகுதான் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைத் தேடிப்போய் என் ஆய்வுப் பணியை முடித்தேன். மக்களின் குரல்களைப் பதிவுசெய்தேன்.

ஆனால், அப்போது எல்லாம் ஏற்படாத சவால், நான் பதிவுசெய்ததை எழுத உட்கார்ந்தபோது ஏற்பட்டது. பேனா என்னைப் பயமுறுத்தியது. அப்போதுதான் கொச்சம்மாள் எனக்கு உதவ முன்வந்தார். தலித் பெண்ணான அவருடைய அழகான கையெழுத்தில்தான் என்னுடைய எழுத்துக் கனவு சாத்தியமானது. பல்வேறு தடைகள், அவமானங்கள், துரோகங்களைத் தாண்டி இந்த நூல் வெளிவந்து உள்ளது.

இந்த ஆய்வுக்காகப் பல விஷயங்களை விரும்பி ஏற்றுக்கொண்டேன். என் வயது நாற்பதை எட்டவிருக்கிறது. இன்னமும் திருமணம் முடியவில்லை. வருமானம் என்று அம்மாவின் ஓய்வூதியத்தைத் தவிர, வேறு எதுவும் இல்லை. ஆனாலும் ஒரு திருப்தி இருக்கிறது!

இதுவரை நம்முடைய வரலாறு சேர, சோழ, பாண்டியர்களின் வரலாறாகத்தான் இருக்கிறது. மக்களின் வரலாற்றுக்கு அதில் இடமே இல்லை. நான் ஒரு சின்ன முன்னெடுப்பை ஆரம்பித்துவைத்திருக்கிறேன். இன்னமும் நிறைய எழுத வேண்டி இருக்கிறது. மக்கள் கதைகளுக்குப் பஞ்சமா என்ன?” – வலியை மீறி வார்த்தை கள் வெளிப்படுகின்றன சுந்தர வந்தியத்தேவனிடம் இருந்து!

(ஆனந்த விகடன் 1 பிப்ரவரி 2012)