சாய்னா நெஹ்வால்-இறகுப் பந்தின் வெற்றிச் சிறகு…


 
 

 
 
 

சாய்னா நெஹ்வால், மார்ச் 17, 1990-ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிஸ்ஸாரில் பிறந்தார். அப்பா, அம்மா இருவருமே இளம் வயதில் தேசிய அளவில் பாட்மின்டனில் ஜொலித்தவர்கள். பெண் குழந்தை பிறந்துவிட்டதே என சாய்னாவின் பாட்டிக்கு ஏகத்துக்கும் வருத்தம். அதனால் தன் மகளை ஆண் பிள்ளை போலத் தைரியமாக வளர்க்க எண்ணி முதலில் கராத்தே கற்றுக்கொள்ள அனுப்பினார் அம்மா உஷா ராணி.

கராத்தேவில் பிரவுன் பெல்ட் தகுதி பெற்ற சாய்னா, எட்டாவது வயதில் பாட்மின்டன் மட்டையைக் கையில் எடுத்தார். அப்பா ஹைதராபாத்துக்கு மாற்றல் ஆக, நானி பிரசாத் என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றார் சாய்னா. தினமும் காலையில் 4 மணிக்கு எழுந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் லால் பகதூர் மைதானத்துக்கு தந்தையுடன் பயிற்சிக்காகச் செல்வார்.

14 வயதில் தேசிய ஜூனியர் சாம்பியன் பட்டம் வாங்கி, அனைவரையும் அசத்தினார். ‘நான் திறமையுடன் பிறந்த ஆட்டக்காரி இல்லை. இன்னும் சொல்லப்போனால், கராத்தே பிடிக்காமல்தான் இங்கே வந்தேன். ஓயாமல் உழைத்தேன். ஆசிரியரை மதித்தேன். அதனால்தான் இவ்வளவு தூரம் உயர முடிந்தது’- சாம்பியன் ஆனதும் சாய்னா சொன்னது இது.

காமன்வெல்த் போட்டிகளில் குட்டியூண்டு பெண்ணாகக் கலந்துகொண்டு முழு அணியையும் ஊக்குவித்து, வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒற்றையர் பிரிவில் வெண்கலம் கிடைத்தது. ஒலிம்பிக்கில் கால் இறுதி வரை சென்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தான். உலகின் மிகக் கடினமான மூன்று சூப்பர் சீரீஸ் பட்டங்களைத் தொடர்ந்து வென்றார். அப்போது இவரின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்து ‘ஒரு பேரனால்கூட இவ்வளவு பெருமை வந்து இருக்காது’ என இவரது பாட்டி சொன்னபோது கண் கலங்கியதாகச் சொல்வார் சாய்னா.

அமைதியாகப் பேசும் சாய்னா, ஆட்டத்தில் அசுரப் பாய்ச்சல் காட்டுவார். ”விளையாட்டில் மனம் சலனப்படாமல், எதிராளி யார் எனக் கவலைப்படாமல் இயல்பாக ஆடுவதே நான் தொடர்ந்து ஜெயிக்கக் காரணம்” என்று தனது வெற்றியின் ரகசியத்தைச் சொல்கிறார்.

டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப்-ஐ எனக்கு ரொம்பப் பிடிக்கும். தோழிகள் எல்லோரும் ஸ்டெஃபி சாய்னா என்றே அழைப்பார்கள். பாட்மின்டனில் பெரிய அளவில் பெயர் பெற்றதும் அந்தப் பெயரில் கூப்பிடுவதை நிறுத்தச் சொல்லி தோழிகளுக்கு அன்புக் கட்டளை போட்டுவிட்டார்.

செல்போன்கள் மீது ஆர்வம் அதிகம். மரியா ஷரபோவா தோன்றிய மொபைல் விளம்பரத்தில் மனதைப் பறிக்கொடுத்து, அப்பாவிடம் அந்த  மொபைல் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கினார். தற்போது ஐ போன் சாய்னாவின் ஃபேவரிட். நாளைக்கே இது மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவ்வளவு வெரைட்டிகளில் விதம் விதமாக போன்கள் இவரிடம் உண்டு.

இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பெறும் மிக உயரிய விருதான ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருதை இவர் பெற்றபோது, வயது 19 மட்டுமே. உலக அளவில் இரண்டாவது ரேங்க் வரை உயர்ந்து இருக்கிறார். ”ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது கனவு, உலக அளவில் முதல் ரேங்க்கும் என் இலக்கு!’ என்கிறார் உறுதியாக.

பாட்மின்டனில் ஜொலிப்பதற்காக சாய்னா தியாகம் செய்தவை ஏராளம்.பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதாமல் போட்டியில் பங்கேற்று இருக்கிறார். கடந்த எட்டு வருடங்களாகப் பெற்றோருடன் சினிமா, கடற்கரை, ஹோட்டல், சுற்றுலா என எங்கும் சென்றது இல்லை. ஓயாமல் பயிற்சி, போட்டி என எப்போதும் இலக்கை நோக்கி உழைப்புதான்.

இளம் வயதில் விளையாடிக்கொண்டு இருக்கும்போது சக ஆண் பிள்ளை கள் தங்களின் முஷ்டியை மடக்கிக் காண்பித்து சாய்னாவைப் பயமுறுத்து வார்கள். கோபமேபடாமல் அவர் களையும் விளையாடக் கூப்பிட்டு, குறைந்த நேரத்துக்குள் தோற்கடிப் பார். புன்னகை மாறாமல் கைகொடுத்து அனுப்பிவைப்பார். அதுதான் சாய்னா!

 

நெல்சன் மண்டேலா


 

 

 

நெல்சன் மண்டேலா… ஜூலை 18, 1918-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள  முவெசோ என்ற ஊரில் பிறந்தார். முழுப் பெயர் ‘நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா’  ரோலிஹ்லாலா என்றால், தொல்லைகள் கொடுப்பவன் என்று அர்த்தம். இவரது தந்தை சோசா, பழங்குடி இன மக்களின் தலைவர்.

 

ஆடு மாடு மேய்த்துக்கொண்டே  குத்துச் சண்டையையும், பல்வேறு போர்க் கலைகளையும் பயின்றார். அவற்றை, ஆடு மாடு மேய்க்க வரும் மற்ற பிள்ளைகளுடன் பயிற்சி செய்வார். அப்போது ஏகப்பட்ட பழங்குடியினர் கதைகளைக் கேட்டு, தன் நாடு எப்படி ஆங்கிலேயர் வசம் போனது என அறிந்துகொண்டார்.

ஒன்பது வயதிலேயே தந்தையை இழந்தார். பின்னர் உறவுக்காரரான ஜோன்கின்தபா என்பவரின் பாதுகாப்பில் வளர்ந்தார். தன் இனத்திலேயே முதன் முதலில் பள்ளிக்குச் சென்ற மண்டேலா, படிப்பில் சுட்டியாக இருந்தார்.

ஜோன்கின்தபா இவருக்கும் இவரின் தம்பிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தார். இதை விரும்பாத நெல்சன் மண்டேலா, வீட்டைவிட்டு ஓடிப்போய் சுரங்கத்தில் காவலாளியாகவும் தோட்டக்காரராகவும் வேலைபார்த்தார்.

நெல்சன் மண்டேலா, கல்லூரிக் காலத்தில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ராணுவப் பிரிவை உருவாக்கினார். கல்லூரியில் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி, ஆயுதக் கலகம் விளைவிக்க முயன்றார். அதனால் கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டார்.

  ஒரு வழியாக சட்டம் பயின்று முடித்தார். அப்போது கறுப்பின மக்களை அடக்கி ஆளும் தேசியக் கட்சி, தேர்தலில் வென்றதால், பல்வேறு போராட்டங்களில் கல்லூரித் தோழர்களுடன் ஈடுபட்டார்.  இலவசமாக சட்ட மையம் ஒன்றை ஆரம்பித்து, ஏழை மற்றும் அப்பாவிக் கறுப்பின மக்களுக்குச் சட்ட உதவி செய்தார்.

முதலில் அமைதி வழியில் செயல்பட்ட மண்டேலா, பிறகு ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்தார். அதனால், குற்றம்சாட்டப்பட்டு ஐந்து வருடங்கள் வழக்கு நடைபெற்றது. அப்போது பல மாறுவேடங்களில்  சுற்றினார். இங்கிலாந்து மக்களைப் ஃபிரான்ஸில் இருந்து காப்பாற்றிய நாயகன் பிம்பெர்னல் போல மாறுவேடம் பூண்டபோது, மக்கள் கறுப்பு பிம்பெர்னல் என அழைத்தனர்.

தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, 1964 ஜுன் 12-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 46. கடந்த நூற்றாண்டில் அதிக ஆண்டு காலம் சிறையில் இருந்த அரசியல் தலைவர் நெல்சன் மண்டேலாதான். 27 வருடங்கள் சிறையில் இருந்தார். உடன் இருக்கும் கைதிகளுடன் பேசவும் அனுமதி இவருக்கு இல்லை.

இவரது மூத்த மகன் விபத்தில் இறந்தபோது,  ‘மன்னிப்புக் கேட்டால் வெளியே விடுகிறோம்’ என்ற நிபந்தனை விதித்தது அரசு. கம்பீரமாக மறுத்தார் மண்டேலா. காந்தியின் சத்திய சோதனையைப் பொறுமையாக வாசித்தார். காந்தி மீது அபிமானம் ஏற்பட்டது. ‘எனக்கு எல்லை இல்லாத மன தைரியம் வழங்கியது காந்திஜியின் சத்திய சோதனைதான்’ என்றார். 1990-ல் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி கிளார்க் முயற்சியால் விடுதலை ஆனார்.

அரசாங்கத்துடன் நடந்த பல்வேறுகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, அனைத்து மக்களும் இணைந்து ஓட்டு அளிக்கும் முறைக்கு ஒப்புக்கொண்டனர். அப்போது நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஜனாதிபதி ஆனார்.  இவருக்கு 1993-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ”நான் கறுப்பின மக்களின் விடுதலையை விரும்புகிறேன். அதே சமயம் வெள்ளையர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் வெறுக்கிறேன். நிறங்களைக் கடந்து மனிதர்களாக அன்பு செய்பவர்களாக என் நாட்டு மக்கள் திகழ வேண்டும்” என்றார் மண்டேலா.

 

நீல் ஆம்ஸ்ட்ராங்


பாட்டி வடை சுடுகிறார் என்று நமக்கு அறிமுகமான நிலாவில், முதன்முதலில் இறங்கி சாதனை படைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆகஸ்ட் 25-ல் காலமானார். வாழ்க்கை முழுக்க ஒரு ஹீரோவாகவே வாழ்ந்த அவரின் கதை அற்புதமானது.

ஆம்ஸ்ட்ராங் தன் அப்பாவுடன் ஆறு வயதில் விமானத்தில் பறந்ததே முதல் வான்வெளி அனுபவம். ‘வானில் பறக்க வேண்டும், பைலட் ஆக வேண்டும்’ என்கிற ஆசை அவரை உந்தித்தள்ளியது. 15 வயதில் விமானம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றார்.

அப்போது அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா பல விஷயங்களில் போட்டி நாடுகளாக இருந்தன. விண்வெளிக்கு யார் முதலில் மனிதனை அனுப்புவது என்பதில் முந்திக்கொண்டது ரஷ்யா. ஆள் இல்லாத விண்கலத்தையும் நிலவுக்கு அனுப்பிக் கலக்கியது. அமெரிக்காவின் விண்வெளி முயற்சிகள் பல தடைகளைச் சந்தித்தன. அப்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த கென்னடி, ‘நிலவுக்கு மனிதனை அனுப்புகிற முதல் நாடாக நாங்கள் இருப்போம்’ என்றதும் அமெரிக்கர்களே சிரித்தார்கள். ஆனால், அதை எட்டே வருடங்களில் நிகழ்த்திக் காண்பித்தார் ஆம்ஸ்ட்ராங். நிலவுக்கு காட்வின் அல்ட்ரின் உடன் பயணம் போனார். 50 சதவிகிதமே வெற்றி வாய்ப்பு என உள்ளுக்குள் கணித்தாலும் வெற்றிகரமாக நிலவில் இறங்கினார்.

அதை உலகே 1969 ஜூலை 20 அன்று தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்தது. அப்போது ”நிலவில் நான் எடுத்துவைக்கும் ஒரு அடி மனித குலத்தின் மிகப் பெரிய பாய்ச்சல்” எனக் குறிப்பிட்டார். ‘அமைதியை விரும்பும் மக்கள் நாங்கள்’ என்கிற வரிகளை வைத்து, அமெரிக்காவின் கொடியை நட்டுவிட்டுத் திரும்பியவரை நாடே கொண்டாடியது. அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் நிற்க அவரை அழைத்தபோது மறுத்துவிட்டு, சின்சினாட்டி பல்கலையில் பொறியியல் பாடம் நடத்தப் போய்விட்டார்.

தன்னைப் பற்றி பெரும்பாலும் பேட்டிகள் தராமல் ஒதுங்கியே இருந்தார். தன் பெயரை விளம்பரத்துக்கு யாரும் பயன்படுத்தவும் அனுமதித்தது இல்லை. அப்படிப் பயன்படுத்தியவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து, அதன் மூலம் அவர்களை பல நற்காரியங்களுக்கு பணம் தரச் செய்தார். நிதிப் பற்றாக்குறையில் பாதிக்கப்பட்ட க்ரைஸ்லர் கார் நிறுவனத்தை மீட்க இலவசமாக விளம்பரத்தில் தோன்றினார். இறுதிக் காலங்களில் கேன்சர் நோயால் பாதிகப்பட்டு மிகப் பெரிய போராட்டத்தைச் சந்தித்தார்.

”எனக்குப் பிடித்த துறையில் ஆர்வத்தோடு செயலாற்றினேன். பல பிள்ளைகளுக்கு என் ஆர்வத்தைக் கடத்தி இருக்கிறேன். வேறென்ன வேண்டும்?” எனத் தன் வாழ்கை வரலாற்று நூலில் கேட்டு இருக்கிறார் ஆம்ஸ்ட்ராங்.

உலகம் முழுவதும் நிலவு மற்றும் விண்வெளி மீதான ஆர்வத்தைப் பெருக்கெடுக்கவைத்த நாயகனை நிலவு உள்ளவரை மக்கள் நினைவில்வைத்து இருப்பார்கள்.

 

நடக்க முடியாது… ஆனால் ஓடுவேன் !


 

 

இந்து எனும் இளம் நம்பிக்கை !
 
 

சென்னை, சைதாப்பேட்டையின் குறுகலான சந்தில் இருக்கும் மிக எளிமையான வீடு அது. ”இதெல்லாம் நான் வாங்கின மெடல்ஸ் அண்ணா!” என்று மலர்ந்து பேசுகிறாள் இந்து… மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுக் களத்தில் மாநில, தேசிய அளவில் விருதுகளை குவித்துக் கொண்டிருப்பவர்.

 

”என் கால்கள் ரெண்டும் வளைஞ்சுருக்குனு, பிறந்த ஒன்பதாவது மாசத்துலேயே ஆபரேஷன் பண்ணினாங்களாம். ஆனாலும் சரியாகல. கால்கள தரையில் ஊன்றி நேரா நடக்க முடியாதுனு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அப்பாவும், அம்மாவும் அழுதிருக்காங்க. நான் தத்தித் தத்தி நடந்தேன்… வளர்ந்தேன்.

ஏழு வயசு இருக்கும்போது ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே வந்தப்போ, ஓட்டப் பந்தயத்துக்குப் பேர் கொடுத்தேன். ‘உன்னால முடியுமா?’னு வீட்டுல வேதனைப்பட்டாங்க. வெளியில சிலர் கேலி செய்தாங்க. எதையும் சட்டை செய்யாம, நார்மலான பொண்ணுங்களோட போட்டி போட்டு நானும் ஓடினேன். நீங்க நம்பித்தான் ஆகணும்… ஜெயிச்சேன். என் மேல எனக்கே நம்பிக்கை வந்தது அப்போதான். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சந்தோஷம் தாங்கல. அதை நிரந்தரமாக்கத்தான் இன்னும் ஓடிக்கிட்டிருக்கேன்!” எனும் இந்து, சென்னை, மாந்தோப்பு அரசுப் பள்ளியின் பதினோராம் வகுப்பு மாணவி. ஓட்டப் பந்தயம், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் என்று பதக்கங்கள் குவிக்கும் இளம் எனர்ஜி.

”அப்பா புக் பைண்டிங் வேலை செய்றார். அம்மா தெருத்தெருவாய் போய் புடவை விக்கறாங்க. எல்லாம் எனக்காகத்தான். இப்படி வறுமைக்கு நடுவுல வாழ்க்கையை நகர்த்திட்டு இருந்தப்போ, நாகராஜன் சாரை பார்க்க நேர்ந்ததுதான்… கடவுள் எங்களுக்குக் காட்டின வெளிச்சம். ‘பாரா ஒலிம்பிக்ஸ்’ விளையாட்டில் ஒருங்கிணைப்பாளரா இருந்த அவர்தான் என் திறமையை அடையாளம் கண்டு, வேளச்சேரியில இருக்குற தன்னோட ‘ஜிம்’முக்கு கூட்டிட்டுப் போய் பயிற்சி கொடுத்து, போட்டிகளுக்குத் தயார்படுத்தினார். மாவட்ட, மாநிலப் போட்டிகள்ல ஜெயித்த மெடல்கள் மூலமா அவருக்கு நன்றி சொன்னேன்” என்று சொல்லி ஆச்சர்யப்படுத்திய இந்து, தன்னால் மறக்க முடியாத அந்தப் போட்டியைக் குறிப்பிட்டார்.

”கர்நாடகா மாநிலம், பீஜாப்பூர்ல தேசிய அளவுப் போட்டிகள் நடந்தது. எல்லாரும் நிறைய நவீனக் கருவிகள் எடுத்துட்டு வந்து பயிற்சி செய்துட்டு இருந்தாங்க. டிரெயின் டிக்கெட் எடுக்கவே திண்டாடிப் போய்ச் சேர்ந்த எனக்கு அதெல்லாம் எங்கே கிடைக்கும்? அங்கே கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து வட்டு எறிதலுக்கும், நீளமான குச்சியை ஈட்டி எறிதலுக்கும் பிராக்டீஸ் பண்ணிட்டு, வெறியோட விளையாடினேன். ஓட்டப் பந்தயத்துல ரெண்டு தங்கம், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல்னு எல்லாத்துலயும் வெள்ளி அள்ளினேன். பயிற்சிக்கு கருவியைவிட மன உறுதி முக்கியம்னு அப்போ புரிஞ்சுக்கிட்டேன்!” என்றவர், இடைவெளி விட, அவருடைய அம்மா சுதா தொடர்ந்தார்.

”ஒருமுறை ஒரு தேசிய அளவிலான போட்டிக்காக இவளை டிரெயின்ல ஜெய்ப்பூர் கூட்டிட்டுப் போனோம். பயணத்துலயே பெரிய மனுஷி ஆயிட்டா. ‘இந்தப் போட்டியில விளையாட வேண்டாம்னு சொல்லிடுவீங்களாம்மா?’னு பயந்துபோய் கேட்டா. நான் அழுகையை அடக்கிக்க, அவ அப்பா, ‘கண்ணா… உன்னால விளையாட முடியுமாடா?’னு கேட்டார். பலமா தலையை ஆட்டினா. அந்தப் போட்டியில ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்னு அடிச்சா. அவங்க அப்பா கையில மெடல்களைக் கொடுத்து அவ சிரிக்க, நாங்க ரெண்டு பேரும் ஆனந்தமா அழுதோம். இவளால நாங்க அடைஞ்சுருக்குற பெருமை நிறைய!” என்றார் நா தழுதழுக்க.

இன்னும், மாற்றுத் திறனாளிகளுக்கான தென்னிந்திய அளவுப் போட்டியில் இரண்டு தங்கங்கள், ஒரு வெள்ளி, சர்வதேச ஓட்டப்பந்தய போட்டியில் தங்கம் உட்பட, அறுபதுக்கும் மேற்பட்ட மெடல்கள் குவித்துள்ளார் இந்து.

”போட்டிக்குப் போனா, ஒரு மெடலாச்சும் வாங்காம திரும்பினதே இல்லை. ஆனா… நான் தங்க மெடல் களா வாங்க வாங்க, அம்மாவோட கொஞ்சம் தங்க நகைகளும் அடகுக் கடைக்குப் போயிருச்சு. அத்தனை பொருளாதார சிரமத்தோடதான் போட்டிகளுக்கு கூட்டிட்டுப் போறாங்க. ரசம் சாதம், ஒரு முட்டைதான் என்னோட அதிகபட்ச சத்துணவு. மிஞ்சிப் போனா சிக்கன்” எனும்போதும் புன்னகை மாறவில்லை இந்துவுக்கு.

”தாயுள்ளம்ங்கிற அமைப்பு தர்மபுரியில நடத்தின நிகழ்ச்சியில எனக்கு விருது கொடுத்து, என்னை மாதிரியே அங்கே குழுமியிருந்த மாணவர்கள்கிட்ட ‘இந்துவை மாதிரி நீங்க எல்லாம் நிறைய சாதிக்கணும்!’னு சொன்னாங்க. கவர்னர் கையால் ‘சாதனையாளர்’ விருது வாங்கினேன். அப்போ எல்லாம் என் அப்பா, அம்மா கண்ணுல தளும்புற கண்ணீரையும், பெருமையையும் பார்க்கும்போது அவ்ளோ சந்தோஷமா இருக்கும். ஒலிம்பிக்ஸில் தங்கம் அடிக்கணும், ஃபேஷன் டிசைனர் ஆகணும், அம்மாவையும் அப்பாவையும் நல்லா பார்த்துக்கணும். இதுதான் லட்சியம்!”

– கண்களில் கனவுகள் சுமந்து முடிக்கிறாள் இந்து

‘ஆஹா..இதோ ஒரு ரவிவர்மி !’


 

”கோலம் போடலாம் வாங்க..!”
– அழைத்தோம் சென்னை யுவதிகளை! 
ஏதோ மாடியில் இருந்து குதிக்கச் சொன்னதுபோல, 
”ஐயோ!”, 
”நானா..?!”, 
”நெவர்!”

– இப்படி விதம்விதமாக ஜெர்க் ஆனார்கள் டீன் டிக்கெட்டுகள். 10 பேரைக் கஷ்டப்பட்டு தேற்றுவதற்குள் 1,000 புள்ளி வைத்துக் கோலம் போட்டதுபோல சோர்வாகிவிட்டோம் நாம்!

கோலப்பொடியை நாம் கையில் கொடுக்க, அதை வெறித்து வெறித்துப் பார்த்தார் ருச்சிகா. ”இந்தப் பவுடர்(!)லதான் கோலம் போடணுமா..?” என்று கேட்டு முதல் ரவுண்டிலேயே நம் பி.பி-யை எகிற வைக்க, அங்கிருந்து நகர்ந்தோம்.சுடிதார்கள் வந்து சேர, கிரவுண்ட் களைகட்டியது. ரங்கோலி ரணகளங்கள் ஆரம்பமானது. 10 பேரை இரண்டு இரண்டாக ‘பேர்’ சேர்த்து, கோலம் போடச் சொன்னோம்.

தன்னிடம் கொடுக்கப்பட்ட கோலப்பொடியை, கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டுஇருந்த பையன்களுக்கு ‘க்ரீஸ்’ போடுவதற்காக செம கூலாக தானம் செய்த ருச்சிகா, ”கோலம் போடலைனா என்ன..? நல்லது பண்ணின திருப்தி இருக்கு எனக்கு!” என டயலாக் வேறு பேசி டரியலாக்கினார்.  

இந்தப் பக்கம் திரும்பினால், நாம் பிரித்துவிட்ட டீம்களின் ‘பில்ட்-அப்’கள் ஆரம்பமாகியிருந்தன. ஏதோ ஜெ. அம்மாவும், அமைச்சரும் போல, ஒவ்வொரு டீமிலும் ஒருவர் சீரியஸாக ஏதோ சொல்லிக்கொண்டு இருக்க, அதை தலை குனிந்தவாறு பவ்யமாகக் கேட்டுக் கொண்டுஇருந்தார் மற்றொருவர். வெற்றி யூகம் அமைக்கிறார்களாம். நடக்கட்டும்… நடக்கட்டும்!

நேரம் கரைந்ததே தவிர, யாரும் கோலம் போட்டபாடில்லை.

”ஹலோ… புள்ளி வைக்கலாமே..?” என நாம் நினைவுபடுத்த, ”ஓ… ஓ.கே!” என்று களத்துக்கு வந்தார்கள் கேர்ள்ஸ். புள்ளி இல்லை மக்களே… பெண்கள் வைத்தது எல்லாம் பூலோக மாதிரிகள். அந்தளவுக்கு ஒவ்வொன்றும் படா சைஸ்!

”ஹலோ… நாங்கள்லாம் பெரும்புள்ளினு சொல்லாம சொல்றோம்!” என்று அதற்கு அருமையான விளக்கம் தந்தது, ஐஸ்வர்யா!

இந்தப் பக்கம் திரும்பினால்… ‘ஐயோ… இதென்ன கன்னாபின்னாவென்று முறுக்குப் பிழிந்ததுபோல..?!’

”இதுக்கே நாங்க படற பாடு எங்களுக்குத்தான் தெரியும். நாங்க கம்பி இழுத்தா, கம்பி எங்களை இழுக்குது. ம்… பாட்டி, அம்மா எல்லாம் எப்படித்தான் அப்படி அச்சு மாதிரி கோலம் போடுறாங்களோ..?!” என்றபடி விடாது முறுக்குப் பிழிந்து கொண்டிருந்தார் அலிஷா.

”ஆக்சுவலி… கோலத்துல நிறைய வகைகள் இருக்கு. நீங்க எந்த மாதிரி கோலம் எதிர்பார்க்கிறீங்க..?” என்று மகாகீர்த்தி கேட்க, ‘ஆஹா… இதோ ஒரு ரவிவர்மி கிடைச்சுட்டாங்க!’ என்று சந்தோஷப்பட்ட நாம், ”மயில் கோலம்!”

என்றோம். ”பேஷா போட்டுடலாம். ஆனால், மயில் கோல அச்சு எங்க கிடைக்கும்னு ஏதாவது ஐடியா இருக்கா…. ப்ளீஸ்!” என்று நம்மிடமே கேட்க… ”அவளா நீ!”

சுப்ரியாவின் கோலத்தில் ஏதோ சிவப்பும், மஞ்சளுமாக வண்ணங்கள் தெறித்திருக்க, கஷ்டப்பட்டுக் கணித்து ‘ஓ… தீப கோலமா?’ என்றோம். ”நோ நோ! இது டிராகன் றெக்கை விரிக்கிற கோலம்!” என்றார். தலை சுற்றியது.

”சே… மாடர்ன் ஆர்ட்போல இருக்குப்பா! ரியலி கிரேட்!” என்று கண்மணியும், ஜீவிதாவும் அநியாயத்துக்கு அதை ரசிக்க, ‘கிர்’ரானோம் நாம்.

சுரக்காய்போல இருந்ததை ‘ராமர் பாதம்!’ என்றும், குச்சி குச்சியாக நீட்டிக் கொண்டிருந்ததை ‘ஸ்டார் கோலம்’ என்றும் ஆளாளுக்கு அலம்பல் விட்டுக் கொண்டிருக்க, அடுக்கடுக்காக செங்கல்லை அடுக்கியது போல இருந்த தன் கோலத்துக்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் கிருத்திகா விழித்துக் கொண்டிருக்க, கிரவுண்ட் கதறிக் கொண்டிருந்தது!

”சரி சரி… எல்லாரும் கலர் பொடியை கை, முகம்னு பூசிக்கோங்க. அப்போதான் வீட்டுல ‘அவள் விகடன்’ கோலப் போட்டிக்கு போயிட்டு வந்தோம்னு நம்புவாங்க” என்று எவிடன்ஸ் கிரியேட் பண்ணுவதில் மும்முரமானார் பவானி.

சட்டென அந்த இடம் ஜாலி ஹோலி ஸ்பாட் ஆக, அனைவரும் ஒருவரின் முகத்தில் மற்றொருவர் வண்ணப்பொடிப் பூசி மகிழ்ந்தனர்.

”சார்… இன்னும் எத்தனை கோலம் போடணும்..!” என்று கூட்டம் நம்மிடம் திரும்ப, ‘இதுவரை போட்டதே போதும் அம்மணிகளா!’ என… எஸ்கேப்!

சதுரங்க கில்லி !


 

 

 

கறுப்பு, வெள்ளைக் கட்டங்களில் விளையாடி, வெற்றிகள் குவிக்கும் இளம் திறமை… பொன்.கிருத்திகா!

 

சதுரங்கத்தில் மூன்று முறை காமன்வெல்த் போட்டிகளில் தங்கம், இரண்டு முறை உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளி, பலமுறை ஆசிய, இந்திய அளவில் சாம்பியன்ஷிப் பதக்கங்கள் என்று நிமிர்ந்து வரும் கிருத்திகா படிப்பது… சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ்!

நான் படிச்ச நங்கநல்லூர் மாடர்ன் ஸ்கூல்ல ஏதாவது ஒரு ‘எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி’ தேர்ந்தெடுக்கச் சொல்லி, சிறப்புக் கோச்சிங் கொடுப்பாங்க. நான் தேர்ந்தெடுத்தது… செஸ்! ரவிச்சந்திரன் மாஸ்டர்தான் என் குரு. ஸ்கூல் பிரின்ஸிபால் சீதாலக்ஷ்மி மேடம், அந்த வயதில் என் முயற்சிகளுக்குப் போட்ட பெட்ரோல்லதான்… இவ்வளவு தூரம் நான் ஓடி வந்திருக்கேன்னு நம்புறேன்.”அப்பா, குருநானக் கல்லூரியில் பேராசிரி யர். அம்மா, ஹோம் மேக்கர். சின்ன வயசில் எனக்கு செஸ் விளையாடக் கற்றுக்கொடுத்து, அதில் ஆர்வத்தை ஏற்படுத்தினது… என் பாட்டி. வேணும்னே தான் தோற்று, என்னை ஜெயிக்க வெச்சு, ‘சூப்பரா விளையாடுறியே!’னு உற்சாகப்படுத்துவாங்க.

ஆறாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தப்ப, கொல்கத்தாவில் நடந்த நேஷனல் லெவல் டோர்னமென்ட்டுக்கு, ஒரு மாதம் ஸ்பெஷல் லீவ் கொடுத்து அனுப்பினாங்க பிரின்ஸிபால். நம்ம ஸ்டேட்டில் இருந்து போனவங்கள்ல நான்தான் முதல் இடம். ஆனா, ஒட்டுமொத்தமா பார்த்தா… 23-வது இடம். மேடம் திட்டுவாங்களேங்கிற பயத்தோட ஸ்கூல் போனேன். ‘பார்டிஸிபேஷன்தான் முக்கியம். அந்த ஸ்பிரிட் இருந்தா, பிரைஸ் தானா வரும்!’னு அணைச்சுக்கிட்டாங்க.

அடுத்ததா நான் தொடர்ந்து மூணு டோர்னமென்ட்கள்ல வின் பண்ணிட்டு, கப்களோட மேடம் முன்னாடி போய் நின்னப்போ, அவங்க முகத்தில் மலர்ந்த பரவசம்… இப்பவும் என் கண்ணுக்குள் இருக்கு. மேடம் கொஞ்ச நாளைக்கு முன்ன தவறிட்டாங்க”

– வருத்தம் படர்கிறது கிருத்திகாவின் குரலில்.

”ஆர்வமா மட்டுமே எனக்குள்ள இருந்த செஸ், வெறியா மாறினது… விஸ்வநாதன் ஆனந்த் சாரைப் பார்த்தப்போதான். அவர் ஒருமுறை சாம்பியன்ஷிப் வின் பண்ணிட்டு வந்தப்போ, சென்னை ஏர்போர்ட்ல அவரை வரவேற்ற கூட்டத்தில் நானும் நின்னேன். ஹய்யோ… அவரைக் கூட்டம் கொண்டாடினதில் அசந்தே போயிட்டேன். ‘நாமளும் இந்த மாதிரி பெஸ்ட் பிளேயர் ஆகணும்!’னு வைராக்கியத்தை ஏத்திக்கிட்டேன்.

தினமும் 8 – 12 மணி நேரம் பயிற்சி எடுப்பேன். அப்போ செஸ்ல பரபரப்பா இருந்த விஜயலட்சுமி மேடம், எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். அவங்க பொதுவா தடுத்து ஆட மாட்டாங்க. எதிராளியை அட்டாக் பண்ணி திக்குமுக்காட வெச்சுடுவாங்க. நானும் அந்த ஸ்டைல்ல ஜெயிச்ச போட்டிகள் நிறைய.

2005-ல் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் எனக்கு 17-வது இடம்தான் கிடைச்சுது. சோர்ந்து போகாம, அடுத்த வருஷமும் கலந்துக்கிட்டேன். டேபிள் டாப்பரா இருந்த ஒரு பொண்ணுகூட, எனக்கு கடைசி ரவுண்ட். பயத்தை தூக்கி தூர வெச்சுட்டு விளையாடினேன். பல இழுபறிக்கு அப்புறம் ‘டிரா’ ஆச்சு. அடுத்ததா மூணு பேர்கூட மோதி, இடையில் பிரேக் பண்ணி, 4-வது இடம் ஜெயிச்சேன். 17-வது இடத்தோட சோர்ந்து போயிருந்தா, மறு வருஷமே இந்த 4-வது இடம் கிடைச்சு இருக்குமா!”

– உணர்ந்து சொல்கிறார் கிருத்திகா.

”பல பதக்கங்கள் ஜெயிச்சு இருந்தா லும், எனக்கு மறக்க முடியாத சந்தோஷம், என்னோட இன்ஜினீயரிங் கவுன்சிலிங்தான். ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல எனக்காக ஒதுக்கப்பட்ட தினத்தன்னிக்கு, டோர்னமென்ட்டுக்காக நான் பாரீஸ் போயிட்டேன். அப்பாவும், அம்மாவும்தான் கவுன்சிலிங்க்ல கலந்துகிட்டு, எனக்கான ஸீட்டை உறுதிப்படுத்தினாங்க. அப்ப அவங்க பட்ட சந்தோஷம்… அதுதான் என்னை இத்தனை தூரம் வளர்த்து ஆளாக்கினவங்களுக்கு என்னால் திருப்பிக் கொடுக்க முடிஞ்ச சின்ன பரிசு!

பிள்ளைங்களோட ஆர்வத்தை, திறமையைப் புரிஞ்சு பெற்றோர்கள் ஊக்குவிச்சா, எல்லா வீட்டுலயும் கல்பனா சாவ்லா, சானியா உருவாவாங்க!”

– மெஸேஜ் சொல்லி முடிக்கிறார் கிருத்திகா!

 

கிரீட மங்கை !


”இப்போதான் பிராக்டீஸ் முடிச்சுட்டு வர்றேன்!” என்று உற்சாகமாக நம் எதிரில் அமர்ந்தார் ரீத் ரிஷ்யா… டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தேசிய ஜூனியர் சாம்பியன் மற்றும் தேசிய ஜூனியர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை! சென்னை, மான்ட்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. விளையாட்டில் வேகம் காட்டும்

 

இந்த இளம் எனர்ஜி, பேச்சில் காட்டும் நிதானம்… ரசிக்க வைக்கும் முரண்!

”என்னோட அப்பா, இப்போ அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். தன்னுடைய இளம் வயதில் மாவட்ட அளவில் டேபிள் டென்னிஸ் விளையாடிய வர். அண்ணனை டேபிள் டென்னிஸ் விளையாட அப்பா அழைத்துச் சென்ற போது, நானும் உடன் செல்வேன். திடீ ரென ஒரு நாள் என் கையிலும் ராக்கெட்டை அப்பா கொடுத்தபோது, எனக்கு ஏழு வயது. ஆர்வமாகப் பயிற்சிகள் எடுத்தேன்.

அடிப்படையில்… டென்னிஸ், டேபிள் டென்னிஸ் இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. டென்னிஸில் பந்தைக் கணிக்க அதிக நேரம் கிடைக்கும். டேபிள் டென்னிஸில் கண் சிமிட்டும் நேரம்தான். இந்த கேமில் துல்லியம், வேகம், உடல் மொழி என எல்லாம் முக்கியம்.

பெரும்பாலும் இந்த கேமில், ஆட்டத்தின் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடுவார்கள் பெண்கள். போகப் போக வேகம் எடுப்பார்கள். ஆனால், முதல் ஷாட்டிலேயே எதிரியை தாக்க ஆரம்பித்துவிடுவதுதான் என் ஸ்டைல். அந்த உத்திதான் என்னை பத்து வயதுக்குள் ஜூனியர் கேடட் பிரிவில் தேசிய சாம்பியன் ஆக்கியது. வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு என்று தொடர்ந்து வெற்றிக் கோப்பைகள் வசமாகிக் கொண்டே இருக்கின்றன.

வெற்றிகளைவிட, தோல்விகளில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் அதிகம். இரண்டு வருடங்களுக்கு முன் சப் ஜூனியர் பிரிவின் தேசிய சாம்பியன் போட்டியின் ஃபைனலில் என்னுடன் எதிர்த்து விளையாடியவர், டாப் ரேங்கரான மல்லிகா பாண்டரிகர். மற்றவர்களிடம் எல்லாம் ஐந்து ரேலியில் பாயின்ட் எடுக்க முடிந்த என்னால், இவரிடம் குறைந்தது பதினைந்து ரேலியாவது போக வேண்டி இருந்தது. மூன்று செட்டில் அவர் வென்றார். விடாமல் போராடி, அடுத்த மூன்று செட்டில் நான் வென்றேன். கடைசி செட்டில் 10-7 என்கிற அளவில் நான் முன்னணியில் இருந்தேன். ஆனால், இயல்பான ஆட்டத்தைவிட்டு, தற்காத்து ஆட ஆரம்பித்தேன். தோற்க வேண்டிய மல்லிகா, என் தவறால் 13-11 என்று வென்றார்.

நேஷனல் ரேங்க்கிங் போட்டியில் மீண்டும் மல்லிகாவும், நானும். முதலில் இருந்தே அடித்து ஆடினேன். எதிராளிக்கு யோசிக்க நேரம் கொடுக்காத துல்லியம், பெண்கள் அவ்வளவாக விளையாடாத பேக் ஹேண்ட் ஷாட் என அதிரடி ஆட்டம் ஆடினேன். நம்புவீர்களா..? அந்தப் போட்டியில் ஒரு செட் கூட விட்டுக் கொடுக்காமல், 40-0 என்று ஜெயித்தேன். ‘தோற்றால், அடுத்த முறை இன்னும் பலமாகத் திருப்பி அடிக்க வேண்டும்’ என்பதே நழுவவிட்ட வெற்றிகளில் நான் கற்றுக்கொண்ட பாடம். 2011-ல் நடந்த தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பதின்மூன்றாவது ரேங்க்கோடு நுழைந்தேன். இரண்டு வருடங்களாக ஏங்க வைத்த கோப்பை, இம்முறை என் கைகளில் கிடைத்தது. தேசிய அளவில் ‘நம்பர் ஒன் ரேங்க்’கும் கைவசமானது!

இந்த வெற்றிகளுக்கும், அங்கீகாரங்களுக்கும் தினமும் நான் செய்யும் எட்டு மணி நேர பயிற்சி மட்டுமே காரணமில்லை; என் அப்பா, எப்போது கேட்டாலும் பெர்மிஷன் கொடுக்கும் என் பள்ளி, ஒவ்வொரு போட்டிக்கும் என் உடலையும், மனதையும் செதுக்கும் கோச் வாசு சார், ஸ்பான்ஸர் தரும் மகரிஷி வித்யா மந்திர் பயிற்சிக் கூடம் என அனைவரும்தான். அத்தனை பேருக்கும் நன்றிகள்.

சென்ற வருடம் குழுப்போட்டியில் உலக சாம்பியன்ஷிப்பிலும், தேசியப் போட்டிகளிலும் வெண்கலம் கிடைத்தது. ஆனால், எனக்கு தங்கம் வேண்டும். நேஷனல், ஒலிம்பிக், உலகக் கோப்பை எல்லாவற்றிலும் தங்கம் வேண்டும்!”

– அதற்கான உறுதியான உழைப்பில் இருக்கிறார் ரீத் ரிஷ்யா.

‘ரீத்’ என்றால் கிரீடம் என்று பொருளாம். கிரீடங்கள் பல கிடைக்கட்டும்!