நடக்க முடியாது… ஆனால் ஓடுவேன் !


 

 

இந்து எனும் இளம் நம்பிக்கை !
 
 

சென்னை, சைதாப்பேட்டையின் குறுகலான சந்தில் இருக்கும் மிக எளிமையான வீடு அது. ”இதெல்லாம் நான் வாங்கின மெடல்ஸ் அண்ணா!” என்று மலர்ந்து பேசுகிறாள் இந்து… மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுக் களத்தில் மாநில, தேசிய அளவில் விருதுகளை குவித்துக் கொண்டிருப்பவர்.

 

”என் கால்கள் ரெண்டும் வளைஞ்சுருக்குனு, பிறந்த ஒன்பதாவது மாசத்துலேயே ஆபரேஷன் பண்ணினாங்களாம். ஆனாலும் சரியாகல. கால்கள தரையில் ஊன்றி நேரா நடக்க முடியாதுனு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அப்பாவும், அம்மாவும் அழுதிருக்காங்க. நான் தத்தித் தத்தி நடந்தேன்… வளர்ந்தேன்.

ஏழு வயசு இருக்கும்போது ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே வந்தப்போ, ஓட்டப் பந்தயத்துக்குப் பேர் கொடுத்தேன். ‘உன்னால முடியுமா?’னு வீட்டுல வேதனைப்பட்டாங்க. வெளியில சிலர் கேலி செய்தாங்க. எதையும் சட்டை செய்யாம, நார்மலான பொண்ணுங்களோட போட்டி போட்டு நானும் ஓடினேன். நீங்க நம்பித்தான் ஆகணும்… ஜெயிச்சேன். என் மேல எனக்கே நம்பிக்கை வந்தது அப்போதான். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சந்தோஷம் தாங்கல. அதை நிரந்தரமாக்கத்தான் இன்னும் ஓடிக்கிட்டிருக்கேன்!” எனும் இந்து, சென்னை, மாந்தோப்பு அரசுப் பள்ளியின் பதினோராம் வகுப்பு மாணவி. ஓட்டப் பந்தயம், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் என்று பதக்கங்கள் குவிக்கும் இளம் எனர்ஜி.

”அப்பா புக் பைண்டிங் வேலை செய்றார். அம்மா தெருத்தெருவாய் போய் புடவை விக்கறாங்க. எல்லாம் எனக்காகத்தான். இப்படி வறுமைக்கு நடுவுல வாழ்க்கையை நகர்த்திட்டு இருந்தப்போ, நாகராஜன் சாரை பார்க்க நேர்ந்ததுதான்… கடவுள் எங்களுக்குக் காட்டின வெளிச்சம். ‘பாரா ஒலிம்பிக்ஸ்’ விளையாட்டில் ஒருங்கிணைப்பாளரா இருந்த அவர்தான் என் திறமையை அடையாளம் கண்டு, வேளச்சேரியில இருக்குற தன்னோட ‘ஜிம்’முக்கு கூட்டிட்டுப் போய் பயிற்சி கொடுத்து, போட்டிகளுக்குத் தயார்படுத்தினார். மாவட்ட, மாநிலப் போட்டிகள்ல ஜெயித்த மெடல்கள் மூலமா அவருக்கு நன்றி சொன்னேன்” என்று சொல்லி ஆச்சர்யப்படுத்திய இந்து, தன்னால் மறக்க முடியாத அந்தப் போட்டியைக் குறிப்பிட்டார்.

”கர்நாடகா மாநிலம், பீஜாப்பூர்ல தேசிய அளவுப் போட்டிகள் நடந்தது. எல்லாரும் நிறைய நவீனக் கருவிகள் எடுத்துட்டு வந்து பயிற்சி செய்துட்டு இருந்தாங்க. டிரெயின் டிக்கெட் எடுக்கவே திண்டாடிப் போய்ச் சேர்ந்த எனக்கு அதெல்லாம் எங்கே கிடைக்கும்? அங்கே கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து வட்டு எறிதலுக்கும், நீளமான குச்சியை ஈட்டி எறிதலுக்கும் பிராக்டீஸ் பண்ணிட்டு, வெறியோட விளையாடினேன். ஓட்டப் பந்தயத்துல ரெண்டு தங்கம், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல்னு எல்லாத்துலயும் வெள்ளி அள்ளினேன். பயிற்சிக்கு கருவியைவிட மன உறுதி முக்கியம்னு அப்போ புரிஞ்சுக்கிட்டேன்!” என்றவர், இடைவெளி விட, அவருடைய அம்மா சுதா தொடர்ந்தார்.

”ஒருமுறை ஒரு தேசிய அளவிலான போட்டிக்காக இவளை டிரெயின்ல ஜெய்ப்பூர் கூட்டிட்டுப் போனோம். பயணத்துலயே பெரிய மனுஷி ஆயிட்டா. ‘இந்தப் போட்டியில விளையாட வேண்டாம்னு சொல்லிடுவீங்களாம்மா?’னு பயந்துபோய் கேட்டா. நான் அழுகையை அடக்கிக்க, அவ அப்பா, ‘கண்ணா… உன்னால விளையாட முடியுமாடா?’னு கேட்டார். பலமா தலையை ஆட்டினா. அந்தப் போட்டியில ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்னு அடிச்சா. அவங்க அப்பா கையில மெடல்களைக் கொடுத்து அவ சிரிக்க, நாங்க ரெண்டு பேரும் ஆனந்தமா அழுதோம். இவளால நாங்க அடைஞ்சுருக்குற பெருமை நிறைய!” என்றார் நா தழுதழுக்க.

இன்னும், மாற்றுத் திறனாளிகளுக்கான தென்னிந்திய அளவுப் போட்டியில் இரண்டு தங்கங்கள், ஒரு வெள்ளி, சர்வதேச ஓட்டப்பந்தய போட்டியில் தங்கம் உட்பட, அறுபதுக்கும் மேற்பட்ட மெடல்கள் குவித்துள்ளார் இந்து.

”போட்டிக்குப் போனா, ஒரு மெடலாச்சும் வாங்காம திரும்பினதே இல்லை. ஆனா… நான் தங்க மெடல் களா வாங்க வாங்க, அம்மாவோட கொஞ்சம் தங்க நகைகளும் அடகுக் கடைக்குப் போயிருச்சு. அத்தனை பொருளாதார சிரமத்தோடதான் போட்டிகளுக்கு கூட்டிட்டுப் போறாங்க. ரசம் சாதம், ஒரு முட்டைதான் என்னோட அதிகபட்ச சத்துணவு. மிஞ்சிப் போனா சிக்கன்” எனும்போதும் புன்னகை மாறவில்லை இந்துவுக்கு.

”தாயுள்ளம்ங்கிற அமைப்பு தர்மபுரியில நடத்தின நிகழ்ச்சியில எனக்கு விருது கொடுத்து, என்னை மாதிரியே அங்கே குழுமியிருந்த மாணவர்கள்கிட்ட ‘இந்துவை மாதிரி நீங்க எல்லாம் நிறைய சாதிக்கணும்!’னு சொன்னாங்க. கவர்னர் கையால் ‘சாதனையாளர்’ விருது வாங்கினேன். அப்போ எல்லாம் என் அப்பா, அம்மா கண்ணுல தளும்புற கண்ணீரையும், பெருமையையும் பார்க்கும்போது அவ்ளோ சந்தோஷமா இருக்கும். ஒலிம்பிக்ஸில் தங்கம் அடிக்கணும், ஃபேஷன் டிசைனர் ஆகணும், அம்மாவையும் அப்பாவையும் நல்லா பார்த்துக்கணும். இதுதான் லட்சியம்!”

– கண்களில் கனவுகள் சுமந்து முடிக்கிறாள் இந்து

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s