சுப்ரமணியன் சந்திரசேகர்


வானியல் இயற்பியலாளர், சுப்ரமணியன் சந்திரசேகர், பிரிக்கப்படாத அன்றைய இந்தியாவின் லாகூரில் அக்டோபர் 19, 1910-ல் பிறந்தார். அப்பா சுப்ரமணியன்! லாகூரில் ரயில்வேயில் ஆடிட்டராக இருந்தார். நன்றாக வயலின் வாசிப்பார். அம்மா சீதாலஷ்மி மெத்தப் படித்தவர். உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் இப்செனின் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர். ‘அம்மாவின் தூண்டுதலே அறிவியல் மீதான எனது ஆர்வத்துக்குக் காரணம்’ என்பார் சந்திரசேகர்.

இவரது மாமாதான் சர் சி.வி.ராமன். இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த ஆண் பிள்ளை என்பதால், சந்திரசேகருக்கு செல்லம் அதிகம். தன் பொம்மைகளை உடைத்துவிட்டு, சகோதரிகளின் பொம்மைகளைப் பிடுங்கிக்கொள்வார். வீட்டிலேயே ஆரம்பக் கல்வியைக் கற்றார். 11 வயதில் திருவல்லிக்கேணி, ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். படிப்பு ஆர்வத்தில், அடுத்த வருடப் பாடங்களை முன்னரே படித்துவிடுவார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படித்தார். அப்போதுதான் ‘குவான்டம் இயற்பியல்’ என்கிற புதிய துறையை நோக்கி இயற்பியல் பயணிக்க ஆரம்பித்து இருந்தது.அப்போது நோபல் பரிசு பெற்ற சோமர்ஃபீல்ட் (Sommerfeld) அவர்களைச் சந்தித்தது இவர் வாழ்வில் திருப்புமுனை.

மாநிலக் கல்லூரியில் முதல் மாணவராகத் தேறினார் சந்திரசேகர். மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல சிறப்பு ஸ்காலர்ஷிப் இவருக்காகவே ஏற்படுத்தப்பட்டு, கேம்ப்ரிட்ஜ் போனார். இந்தியாவில் இருந்து கேம்ப்ரிட்ஜ் நோக்கிக் கப்பலில் போகும்போதுதான் புகழ்பெற்ற ‘சந்திரசேகர் எல்லை’ என்ற அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் வயது 20.

நட்சத்திரங்களின் வாழ்நாளைப் பற்றி ஆய்வு செய்து, ‘சூரியனின் நிறையைபோல 1.4 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட நிறை கொண்ட நட்சத்திரங்கள், எரிபொருள் தீர்ந்ததும் மற்ற நட்சத்திரங்கள், வான்வெளியில் உள்ள இன்னபிறவற்றைத் தம்முள் இழுத்துக்கொள்ள முயற்சிக்கும்’ என அறிவித்தார்.இதுவே ‘சந்திரசேகர் எல்லை’ எனப்படுகிறது.

இந்த ஆய்வுகளை உலகப் புகழ்பெற்ற வானியல் இயற்பியலாளர், ஆர்தர் எடிங்டன் (Arthur eddington) அடிப்படை அற்றது என ஏற்க மறுத்துவிட்டார். சந்திரசேகரின் கட்டுரையைச் சில அறிவியல் இதழ்களும் நிராகரித்தன. மனம் வருந்தினார் சந்திரசேகர். கேம்ப்ரிட்ஜ் படிப்பு முடிந்ததும் அமெரிக்கா சென்று, சிகாகோ பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் ஆனார். தன் மரணம் வரையில் அங்கேயே இருந்தார்.

தலைசிறந்த ஆசிரியர் எனப் பெயர் பெற்ற சந்திரசேகர், தன்னை மாணவர்கள் ‘சார்’ என அழைக்கத் தடை விதித்தார். சந்திரா என்றே அழைக்கலாம் என அறிவித்தார். ‘மாணவர்கள் அடிமைகள் இல்லை, அவர்கள் ஆசிரியர்களின் நண்பர்கள்’ என்பது அவர் கொள்கை. 200 மைல் தொலைவில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் வெறும் இரண்டே மாணவர்களுக்குக் பாடம் நடத்தக் கொட்டுகிற பனியில் செல்வார். ”அந்த இரண்டு மாணவர்கள் எனக்கு மிகவும் முக்கியமானவர்கள்.’என்பார்.அவரின் நம்பிக்கையைக் காப்பாற்றிய அந்த மாணவர்கள் சந்திரசேகருக்கு முன்னமே 1957-ல் நோபல் பரிசு பெற்றனர். அவர்களின் பெயர் லீ மற்றும் யாங்.மேலும் ஜேம்ஸ் க்ரோனின் என்பவருக்கு நோபல் பரிசை அறிவித்ததும் பேட்டி காண அனைவரும் காத்துக்கொண்டு இருக்க ,”இருங்கள் சந்திரசேகரின் சார்பியல் வகுப்பு இருக்கிறது முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் !”என்றார் 

எடிங்டன் எதைத் தவறு என நிராகரித்தாரோ, அதை உலகம் 40 வருடங்கள் கழித்து ஏற்றுக்கொண்டது. அதற்கான நோபல் பரிசு 1983-ல் அறிவிக்கப்பட்டது. ஒரே ஒரு துறையில் தன் ஆர்வத்தை நிறுத்திக்கொள்ளாமல், பல்வேறு தளங்களில் ஆய்வுகள் செய்தவர். அவற்றை அற்புதமான நூல்களாகவும் வடித்தார். 1995 ஆகஸ்ட் 21-ல் மரணமடைகிற அன்றுகூடப் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார் சந்திரசேகர்.

”என்னைப்பற்றி சமகால மனிதர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குக் கவலை இல்லை. வருங்கால சந்ததிகளுக்கு என் செயல்கள் நல்ல பலன்களைக் கொடுக்கும். இப்போது நான் செய்ய வேண்டியது, எனக்குள் இருக்கும் அறிவு ஒளியை, மனதை வேறு எதிலும் பறிகொடுக்காமல் காத்தலில்தான் உள்ளது” என்றார்.

நகை முரண் அஞ்சலி


நிலை குத்தி நிற்கிறது 

அம்மாவின் கரங்களில் 

துள்ளி அழுத தருணங்கள் 

உறைந்து போய் நிறைகின்றன

அப்பாவின் தோள் பற்றி 

மாட்டு வண்டியில் காற்றோடு 

கரைந்த பொழுதுகள் 

நாக்கின் நுனியில் ஒட்டிக் கொண்டு

இனிப்பும் புளிப்புமாய் வெளியேற மறுக்கிறது 

எதிர் வீட்டு தோழி தந்த கொடுக்காப்புளிஉடனான உறவு 

கனிந்தும் கவிந்தும் முதுகை சொரிந்து 

விட்டு போன மாலை சூரியனின்

கதிர்களோடான உராய்வுகள் 

குழாய் அடி தண்ணீரில்

தவம் கிடந்த காலங்கள் 

சாணி உருண்டையில் 

ஒளிந்து கொண்டு 

தேட வைத்த உதிர்ந்த பற்கள் 

மருதாணி மலரின் எல்லா பரப்பிலும் 

வியாபித்து இருந்த 

வெட்டுக்கிளிகளின் குதிப்புகள்

சுண்ணகட்டியில் அழித்து அழித்து 

தோய்த்து எடுக்கப்பட்ட பூச்சாண்டிகள் 

நிழலை பிடித்து விளையாடி வீதிகளை

விழாக்கோலம் பூண விட்ட விந்தை பொழுதுகள் 

அமைதியான குளிர் குளத்தின்

உள் எறியப்பட்ட கல் போல 

சலனத்தோடு பயணிக்கிறது 

நகரின் வேகப்படுதலில் மரணித்து போன 

துள்ளல்களும் மனிதங்களும்

பீட்சாவிலும் ,நுரைத்து நரைத்து போன 

ஆடம்பரங்களிலும் நலமாக இருப்பதாக

மறைந்து போன என் கிராமத்திற்கு 

அஞ்சலி செலுத்துகிறேன்

நான் பிளாஸ்டிக் பூங்கொத்துகளால்

கொஞ்சம் புயல்…கொஞ்சம் கண்ணீர்..மீதம் …?


கொஞ்சமாக வானம் தன் கோர
எல்லைகளை விரிக்கிறது ..
சின்னச்சிட்டு ஒன்று சிறகொடிந்து
ஓவியத்திற்குள் தஞ்சம் புகுந்துக்கொண்டது

மெலிதாக சொட்டும் குழாயில் 
நனைத்த தன் நாக்கை சிறுமி
ஏமாற்றத்தோடு சிலுப்பிக்கொள்கிறாள்…
ஒடிந்த முந்திரியின் கனிகளை
பிய்த்து அழுகிறான் 
கோவணம் தரித்த
பொக்கைவாய் நாயகன் ….
காலம் மாறி பூத்த 
மலர் போல தத்தளிக்கிறது 
காற்றினில் களைந்து கிடக்கும் 
வரப்பு வெளிகள் …
பொங்கி வழிந்த உணர்வு தப்பி 
மயங்கிய சாலையோர சிந்தனையாளன் போல 
நீரால் நிரம்பிய வயல்கள் 
கொதிக்கின்றன சலனில்லாமல்…
கரிப்பு மணிகள் வேதனையை 
வெளிக்காட்டாமல் பொங்கி ஓடுகின்றன 
எதிர்காலத்தின் விடுகதையை 
நிகழ்காலத்தில் அவிழ்க்க 
முயலும் அப்பாவிகளின் ஊடாக ..
ஒற்றைக்கவளம்,
ஒண்டிக்கொள்ள ஒரு தெரு முனை,
கொஞ்சம் நீர்
இல்லாமல் போன மானம் நிலைக்க கந்தல் துணிகள் 
எல்லாமும் உண்டு என்கிறார்கள்..
அனேகமாக தூர்ந்து போன கடைசி வேர்ப்பலாவினை 
ஏந்தியப்படியே உயிர் விட்ட சகோதரர்களுக்கான
நினைவிடத்தில் இவை கிடைக்கலாம்…
கொஞ்சம் காத்திருங்கள் 
விருது வாங்கும் ஒரு படமும் வரலாம் 
எல்லாரும் கண்ணீர் விடுவோம் … 
எல்லாமே அரிதாரம் பூசிய
நாடக உலகின் தேவைகள் இல்லையா ?
காலம் கைக்கொட்டி சிரிக்கிறது 
மழை எப்போதும் போல அழுகிறது 
வெறுமையோடு நகர்கிறது நம்பிக்கை 
யாவும் இல்லாத அமைதி நோக்கி

பூப்பெய்த கிராமமும்,செத்து போன காதல்களும்


வெயில் பூத்த கரிசல் காட்டின்
மணலின் கண்ணீர் கரிக்கிறது 
மழை தூறி சிரித்த அல்லி குளங்களில் நிறைந்து இருந்த

கொலுசுகளின் ஒலி ஓய்ந்து விட்டது …
முற்றத்து தெருக்களில் சிகப்பு கயிறில் சுழன்ற 
மர பம்பரங்களின் இடத்தை இன்றைக்கு மனிதர்கள் பிடித்து கொண்டார்கள் 
உறிகளின் உயர அடுக்குகள் ஏழைக்கு கிட்டும் கடன் போல தூர போய் விட்டன 
நெசவு தறிகளின் தாளங்கள் மௌனத்தில் உறைந்து போன பிரிவை போல 
கவனிப்பார் அற்று அமைதியுற்றன 
மத்துக்களின் மிச்சங்கள் அருங்கட்சியகங்களிலும்,புதிய பால் பாக்கெட்களிலும் 
கிடைக்கலாம் 
வலை வீசியும் ,துணி வீசியும் பிடித்த மீன்கள் 
வண்ண தொட்டிகளில்
உள்ள காற்று குழாய்களின் வேகத்தில் கரைந்து போயின 
திண்ணைகளின் அடையாளங்களை இடம் இல்லாத நெருக்கத்தால் 
பிளாட்கள் பிடித்து கொண்டு ஹிப் ஹாப் ஆடுகின்றன 
மொட்டை மாடி முத்தங்கள் குறுஞ்செய்திகளில் சுவாரசியம் குறைந்து பரிமாறபடுகின்றன…
கிராமம் பூப்பெய்து நகராகிற பொழுது 
பெண்ணை போலவே அழுகிறது உள்ளுக்குள் 
ஆனாலும்,அழகாக இருப்பதாக பூரிக்கிறோம் நாம் 
செத்து போன நம் ஊரின் அழகை 
எங்கோ தொண்டைக்குழிக்குள் தேக்கி கொண்டு …
ஆனாலும்,சிரிக்கிறோம் சாக போகிற வீரனை போல …
ஆனால் கொப்பளிகிறது கோழைத்தனம் தெருவெங்கும்

ஒரு ஊர்,சில தெய்வங்கள்,பல ஹெட்செட் செவிடர்கள்


தலையை கோதி 
நெற்றியை நீவி விடும்
சகோதரியின் கரங்களின் 

மென்மையை மலர்களில் 
தேடினால்
நீங்கள் அஞ்ஞானி ;

கருப்பு சட்டமிட்ட கண்ணாடியை 
கள்ளமில்லாமல் பிடுங்கும்
பிஞ்சு சிறுவனின் 
இதழ் சிரிப்பை பெருங்கடைகளில் தேடினால் 
உணர்வற்றவர் தாங்கள்

வேலை கிடைக்காத 
மகனின் சட்டைப்பையில் 
இரவின் இடுக்கில் 
தந்தை சொருகும் ரூபாய் நோட்டின்
மதிப்பு 
கணக்கீடுகளில் சிக்காதது 

உதட்டு சாயம் கூட பூசாத 
தோழி கனிவோடு 
நெற்றியில் பூசும் விபூதி தீற்றலில் 
உறையும் கடவுள் கோயில்களில் காணக்கிடைக்காதவர் 

கடியாரம் கட்ட மறந்து விடும் கூட்டு களவாணிகள் 
நமக்கான அலாரமாக மாறி 
முதுகை பதம் பார்க்கும் தருணங்கள் 
அன்புக்கலவரங்களின் அச்சுக்கள் 

முகத்தை ஒழுங்காக சவரம் செய்ய 
அலட்டிக்கொள்ளாத எதிர்வீட்டு மாமா 
கவனமாக நாம் உட்கார கனிவு கலந்து துடைக்கும் 
வண்டி இருக்கையின் சுத்தம் 
எந்த அழுக்கு நீக்கியிலும் காணக்கிடைக்காதது 

பிள்ளைக்கு பிடிக்குமென்று முள் நீக்கி 
கொஞ்சம் உப்பிட்டு ,மிச்சம் அன்பிட்டு
சைவ அம்மா சமைக்கும் மீன்பிட்டு 
உணவு மால்களில் பரிமாறப்படாதது

பதிவு செய்யப்படாத 
இவர்களின் அன்பின் மௌன ஒலிகள் 
ஹெட்செட் இரைச்சல்களிலும்,
பெருநகர கூச்சல்களிலும் 
நம்மால் புறந்தள்ளப்படும் பொழுது……..
உங்களை விட நல்இதயங்கள் யாரோ ?
என அங்கதமாய் சிரிக்கிறது 
செத்துக்கொண்டு இருக்கும் 
மனிதர்கள் நிறைந்த கனவு ஊர்

அதன் நசுங்கலில் தான் நாம் நடக்கிறோம் அனுதினமும் 
நாளைக்கு கொஞ்சம் 
அந்த சிரிப்பை சற்றே குசலம் விசாரியுங்கள் 
அதற்கும் நேரம் கிட்டாது போகலாம்…
போகட்டும் …சுடுகாட்டின் சூன்யங்கள் அல்லவா நாம் ?

கல்லூரி கடைசி நாளும் ,கடவுளின் திரும்பிப்பார்த்தலும்


நாளைக்கு அந்த இருக்கைகள் காலியாகி கிடக்கும் 
மௌனங்கள் அந்த இடத்தை நிரப்பும் 
அனேகமாக,காற்றில் சலசலப்பில் இலைகளும் ,குப்பைகளும் அங்கே விழலாம் 

ஆனாலும்,தெறித்து விழுந்து நட்பின் குறும்பு சிதறல்கள்
அழுக்கடையாமல் அப்படியே இருக்கும் 
நடந்து போன கல்லூரி சாலைகள் மற்றவரால் நிரப்பப்படும் 
ஆனாலும்,அன்றைக்கு வெறுமையாகி விடும் நம் மனது 
சுரத்தே இல்லாத மெஸ் உணவில் அவ்வளவு சுவை இருக்கும் 
நண்பனின் கதை அளப்பால்…
இல்லாத காதல்களை உருவாக்கி உலவ விடும் பொழுதுகளில் 
கொஞ்சமாவது அன்பின் தேவதைகள் நின்று வியக்கும் 
மழை பொழியும் காலங்களில் தொப்பலாக நனைந்து கொண்டே கடக்கும் 
கட்டங்களை தடவி பாருங்கள் ஒவ்வொன்றிலும் நம் சிரிப்பு உறைந்து போய் இருக்கும் 
மைதானங்களில் உருண்ட பந்துகளையும் ,பறந்த புழுதிகளையும்
சற்றே எண்ணத்தால் தொட்டு பாருங்கள் 
ஏகாந்தத்தின் அர்த்தம் தொலையாது அங்கிருக்கும் 
நடந்து போன பாதைகளில் சற்றே பறவைகளின் 
அன்பின் அடையாளங்களும்,மச்சானும் ,இல்லடியும் ஒலியற்ற கீதமாக கேட்கும் 
தலையை தட்டி விட்டு ஓடும் தோழமைகள்
அரியர் விழுந்தாலும் அறியார் போல நடிக்கும் நிதானங்களும் 
பன்னிரண்டு மணிக்கு ஆலையின் சங்கொலி போல பிறந்த நாள் அன்று ஒலிக்கும்
அலைபேசி நிச்சயம் ஒரு பறையிசை….
கணினியிலும் ,காதலிலும் இல்லாத சுவாரசியமோ,மன்னித்தலோ 
இங்கே உண்டு !
 

ஆனாலும் எதையும் சொல்லாமல் சொல்லும் வானம் போல விரவிக்கிடைக்கிறது நட்பு 
கல்லூரி கடைசி நாள் மட்டும் வெயில் கால மழை போல அழுகிறது அது 
அப்பொழுது கேட்கும் இடிகளுக்கு பின் வெறுமையாகிறது கல்லூரியின் சாலைகள்
அடுத்த மழைக்காக குடையோடு காத்து இருக்கிறான் கவிஞன் 
எப்பொழுதும் அவனை ஏமாற்றுவதில்லை நட்பின் கடைசி கல்லூரி நாட்கள் 
என் நண்பனை போல யாருமில்லை! என உரக்க கத்துங்கள் 
அங்கே சற்றே கடந்து போகும் கடவுள் திரும்பிப்பார்ப்பார்
அவருக்கு கண்ணீர் கலந்த கட்டி அணைத்தல்களிலும்,
கடைசி நாள் அடிகளிலும் நன்றி சொல்வோம் 
நட்பிற்கு யாரையும் மனதார திட்டி பழக்கம் இல்லை அல்லவா ?
அனேகமாக அப்பொழுது கடவுளும் அழலாம்
அவருக்கு நட்போடு கைக்குட்டை தருவோம்
முடிந்தால் நம் ஜூனியர் ஆக ஆக்கி கொள்வோம்

முருகனுக்கும் உங்களுக்கும் நடுவில் ஒரு கடிதம்


அது முருகனின் கடிதம் 
நீலநிற உறையில் நிசப்தமான கால வெள்ளத்தில் 
பழுப்பேறிப்போன கடிதம் அது 
முதல் பத்தி கள்ளமில்லாமல் வணக்கம் சொல்கிறது 

அன்போடு உறவுகளை விசாரிக்கிறது 
வாழ்வே தள்ளாடும் தருணத்திலும் நலமே என பணிவாக பொய் சொல்கிறது 

அடுத்து மெதுவாக கண்ணை நகற்றுங்கள் 
அவன் பார்த்து பார்த்து எழுதிய வரிகள் அவை 
தன் அம்முவின் பொம்மைக்கு காய்ச்சல் சரியாகி விட்டதா என கேட்கிறான் 
மெதுவாக ஆமென்று சொல்லுங்கள் 
அவனின் செல்ல நாய்க்குட்டி மணி ஒழுங்காக தூங்குகிறானா என கேட்கிறான் 
கவனம் இதை கண்கள் சிவக்க உறக்கம் இழந்த கொசுக்களுக்கு நடுவில் இருந்து அவன் எழுதுகிறான் 
ஆகவே சத்தம் போடாமல் படியுங்கள் 

வீட்டின் பின்புறம் உள்ள நந்தியாவட்டை பூத்து விட்டதா 
என மணி மணியான கையெழுத்தில் கேட்கிறான் 
கண்ணினில் ஒற்றிக்கொள்கிறோம் என சுருக்கமாக சொல்லுங்கள் 
அவனுக்கு பிளாஸ்டிக் பூக்களை பற்றி தெரியாது 

முதல் பக்கம் முடிந்து விட்டது 
பக்கத்தை திருப்புங்கள் 
தோட்டத்து முற்றத்தில் அணில்களின் சத்தம் இன்னமும் கேட்கிறதா 
என ஆவலாக கேட்கிறான் 
வண்டி சத்தங்களுக்கு நடுவில் அழகாக ஆடுகின்றன என அதிராமல் சொல்லுங்கள் 

இன்னமும் பக்கத்துக்கு வீட்டு சோமு சடுகுடு ஆடுகிறானா என முனைப்பில் 
வினவுகிறான் 
பாதகமில்லை இதற்கும் ஆம் என்றே சொல்லுங்கள் 
சோமு இப்பொழுது ஐ போனில் விளையாடுவதை பார்த்துக்கொண்டே 
கடிதம் முடிய போகிறது 

காற்றில் பறக்காமல் காதலுடன் கடிதத்தை பிடியுங்கள் 
இன்னமும் ரேடியோ ஒலிக்கிறதா என கேட்கிறான் 
பரணில் விழுந்து எலி ஓடும் சத்தத்தை காதில் வாங்காமல்
நன்றாக பாடுகிறது என எழுதவும் 

எப்பொழுது ஊர் வருவேன் என தெரியாது 
ஆனால் வருவேன் வெகு சிக்கிரம் 
என்கிற வரிக்கு பின் கொட்டு கிறுக்கல் போல கார்டூன் ஆக விரிகிறது 
முருகனின் கையெழுத்து 
நீல நிறத்தில் பொதிக்கப்பட்ட கடிதம் அது 
தபால்துறையின் அலட்சியத்தால் 
பல வருடம் தப்பி வந்துள்ளது 
அதனிடமும் சொல்லுங்கள் 
மின்னஞ்சல் அதற்கு இறுதி விடை தரும் என்று 
முருகனை போலவே அஞ்சல் அட்டையும் சிரிக்கிறது 
அநேகமாக முருகனை பற்றி அதற்கு தெரியலாம் 
திரவியம் தேடி திரைகடல் போனவனின் கடைசி மடல் அது
பொய்கள் சொன்னதால் காணாமல் போனானோ அவன் ?
நீல கடிதத்தின் மேலுறையை தடவுங்கள் 
அது அழுவது போல இருக்கிறது 
விசாரிப்போம் 
முருகனின் கடைசி கடிதம் அதுவா என்று 
அரசாங்கங்களை விட கடிதங்கள் பொறுப்பாகவே பதில் சொல்லும்

காதலின் காலடிகள் தேடி


எட்டாம் வகுப்பில் 
எட்டி நின்று கண்ணை மூடி 
வரட்டுமா? “என கேட்கிறது அது 

“வெளியே நில்” என சொல்லி விட்டு 
அதன் முதுகில் ஏறி சவாரி போகிறோம் நாம் 
சுகமாக யுவதிகள் சிரிப்பார்கள் 
இறங்கட்டுமா என கேட்காமலே ஓடிப்போவோம் நாம் 
அங்கே வெறும் சிரிப்பின் தடங்கள் மட்டுமே இருக்கும் 
திரும்பி வந்தால் சவாரி வந்த காதல் தோழன் காணாமல் போய் இருப்பான்

தேடல் தொடங்கி விட்டது 
தலைமுடியை கலைத்து விடுங்கள் 
இதயத்தை அன்பால் நன்றாக கசக்குங்கள் 
வருகிறவர்களை எல்லாம் பார்த்து அன்பு தோன்றச்சிரியுங்கள் 
முடிந்தால் மௌனத்திற்கு முத்தம் கொடுத்து அழுங்கள் 

மிதிவண்டி பயணங்களில் மெதுவாக 
தேவதைகள் வாழும் மொட்டைமாடிகள் ஊடாக 
அவர்கள் பார்வைகள் துளைப்பதற்காக 
நடைவண்டி பாலகனை விட மெதுவாக நகரும் கால்கள் 
கவனம் பெறுவோமோ என ஏங்கும் கண்கள்
எல்லாம் சுகம் என்பது போல முதல் தேவதை சிரிப்பாள்
காதலின் கால் நகத்தின் கீறல் அது 
அதன் உதிரத்தை முதல் தேவதையின் மருதாணி கரங்களில் காணலாம் 

அவளையும் கடப்போம் ,
பள்ளியில் பேனாவில் அன்பை கடத்தும் சாகசங்கள் நடக்கும் 
திட்டமிடல் இல்லாமலே 
அவர்களின் பேச்சில் காதலின் காலடி சத்தம் கேட்கும் 
தேவாலய மணிக்கு இந்த தேவதைகள் வணக்கம் சொல்லும்பொழுது 
நம் காதல் கர்த்தர் உயிர்த்து இருப்பார் 
அங்கேயும் முள் கிரீடம் காதலுக்கு தான்

தாவணிகள் மறைந்து சுடிதார்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்கும்
கறுப்பிலும் வெள்ளையிலும் காதலித்த நாயகர்களை விட 
அதிகம் ஒதுங்கி நின்று முறுவலிப்போம் 
ஆனால் மனமோ உன்னவளை போர்த்தி இருக்கும் 
துப்பட்டாவின் இழையாக மாறி நர்த்தனம் ஆடிக்கொண்டு இருக்கும் 
அனேகமாக அது காணாமல் போன காதலின் நரம்பாக இருக்கலாம் 

சற்றே நிதானிக்கவும் ,கல்லூரி வாசல் வந்து விட்டது 
காதலின் செருப்பு தென்படுகிறது 
இங்கே தான் இருக்கிறது அதன் காலடிகள் 
தேடுவோம் என கிளம்புகிறீர்கள் 
“என்னடா!” என தலை கோதி 
என்னமோ!என மனம் மோதி 
சன்னமாக தினம் வீதி தோறும் அலைய விடும் 
அணங்குகள் சோதியாய் சுடரிடுவார்கள் 
அங்கே ஒரு மெழுகை ஏந்திக்கொண்டு மண்டியிட்டு காத்து இருப்போம் 
காதலை தேடுகிறோம் என சொல்ல முடியாமல் 
இல்லாத இருளில் வெளிச்சப்புள்ளியாக சிரிக்கும் நட்பு 
அது உள்ளுக்குள் நம் வேண்டுதலை நிறைவேற்றச்சொல்லி
அழுது கொண்டு இருக்கிறது 
பாதகம் இல்லை 
வேகமாக ஓடுங்கள் 

அலுவலகம் வந்து விட்டது 
பொத்தானை போட்டுக்கொள்ளலாம் 
பணத்தாள்களை தடவிக்கொள்ளவும் 
பரிவோடு சிரிக்கவும் 
காதல் அடுத்த தெருவின் முனையில் பேருந்து நிலையத்தில் காத்து இருப்பதாக அறிகிறீர்கள் 
போய் நிற்கின்றீர்கள் 
விபத்துக்களாக நிறைகிறது அங்கு 
காதல் மரணம் அடைந்து விட்டதோ என பதறுகிறீர்கள் 
அலங்கோல காமஉதிரிகளில் காதலை தேடுங்கள் 
அங்கேயும் அதன் துணித்துண்டுகள் கிடக்கின்றன 
சேகரம் செய்யவும் 
காதலை காணப்போகின்றீர்கள்

மாநகர நெரிசல் போல நெரிக்கிறது கூட்டம்
கண்களை அகல விரியுங்கள் 
ஆனால் காதலால் கண்மணியை மூடுங்கள்
காதை நன்றாக பொத்திக்கொள்ளவும் 
சொல்லாமல் போனக்காதல்களை கண்ணீரால் சொல்லவும் 
சிரிப்பாலே நசுங்கியவற்றை கைக்குட்டையின் பதுக்கலில் இருந்து மீட்டு எடுக்கவும் 
அவ்வளவு தான் !
காதல் தென்பட்டு விட்டது 
காலடிகளை அவசரமாகத்தேடுகிறோம் 
காலே இல்லாமல் காற்றில் மிதக்கிறது அது 
அதை பற்றிக்கொள்ளவும் 
அடடா கண்ணீரில் கலந்து விட்டதே அது 
பாதகமில்லை 

திருமண மண்டபத்தின் மையத்தில் தேடுவோம் வாருங்கள் 
என்றைக்கும் கையில் அகப்படப்போவதில்லை 
ஆனாலும் தேடுவோம் 
ஓடுவோம் 
என்றைக்கும் இல்லாத மைதானத்தில் 
நடக்காத போட்டியில் தோற்றாலும் 
ஜெயித்ததைப்போல் உணரும் காதல் வியர்வையில் நனைந்து கொண்டே 
காதலின் காலடிகளை தேடி 
அநேகமாக புத்தன் தான் நடுவர் என்பதாக கேள்வி

நட்போடு நண்பனுக்கு


நட்போடு நண்பனுக்கு எதையாவது சொல்லிவிட எண்ணம்.
இன்னும் ஐம்பது ஏழு நிமிடங்கள் 
சொச்சம் மிச்சம் இருக்கிறது 
எதையாவது சொல்லி அவனோடு பேச வேண்டும் ;
என்ன பேசுவது ?

விழியோரம் தூக்கம் தேக்கி தேர்வுநேரங்களில் 
எழுப்பியதற்கு நன்றி சொல்லலாமா ?
கோபப்படுவான் ..போகட்டும்
பெயரையை மறக்கிற அளவிற்கு மச்சான் என்றானே 
இன்றைக்கு பெயர் சொல்லி கூப்பிடலாமா ?
அவன் கண்களை நோக்கி குறும்பாக சிரித்தால் 
அவனை நான் கூப்பிடுகிறேன் என புரிந்து கொள்வான் 
பெயர்கள் பெயர்த்து எரியும் 
நட்பின் அடையாளங்களோ என்னவோ ?
இருக்கட்டும் 
விடைதெரியா பொழுதுகளாக காலம் கழிகிறது 
அதில் தலை சாயும் மின்சார தூறலாக 
தலை துவட்டினாய் நீ என சொல்லலாமா 
போடா துண்டு வியாபாரி என்பான் 
குறும்பன் !
கொஞ்சம் அழுக்கு,கொஞ்சம் சோம்பல்,கொஞ்சம் வாழ்வு 
மிச்சம் மரணம் சொச்சம் சொர்க்கம் என 
நகர நகர்வு போல வேகமாக போகும் பொழுது 
மகிழமலரின் காய்வுப்போல மனம் வீசும் 
நினைவுகள் நீ தந்தாய் எனலாமா ?
வார்த்தையால் வானை அளக்காதே 
புளுகு மூட்டை என நையாண்டி தொனிக்க 
முதுகில் குத்தி சொல்வான் 
வண்ணத்தில் என் வாழ்க்கையை வியர்வை படிந்த அவன் 
கடன் தந்த ஆடைகள் தொய்த்தன என 
சொல்லலாமா ?
ஓசி ஒய்யாரம் நீ என்பான் !
இன்னமும் இருபது சொச்சம் நிமிடங்கள் 
வேகமாக ஏதேதோ பேசலாம் ,என்னென்னவோ மௌனித்தோம் 
எதிலோ உலகின் புதிர்களை துறந்தோம் 
காதலின் கதவுகளை பூட்டு இல்லாமலே பூட்டினோம் 
என சொல்லி விடலாமா ?
இல்லை என வேகமாக தலை அசைப்பான் கிராதகன் 
இதோ மூன்றே நிமிடங்கள் 
கிட்டே வந்தாயிற்று 
அவனின் பெட்டியை தொடுகிறேன் 
குழந்தையின் மென் விரல்களை போல நீவுகிறேன் 
திரும்பி பார்க்கிறான் அவன் 
அவனின் கண்கள் என் முகவானை பார்க்கிறது
நான் அவனின் நகை மின்னலை நோக்குகிறேன் 
ஆனால்,கண்ணீர் மழை சற்றே எட்டிப்பார்க்கிறது 
வானவில்லாய் “மறந்துடாதே !” என்கிற ஒற்றை வார்த்தை 
அவன் சொல்லாமலே புரிகிறது 
கைகள் அசைகின்றன 
கண்கள் நனைகின்றன 
கால்கள் தள்ளாடுகின்றன 
உலகமே உறைந்து நிற்கிறது 
அவன் மட்டும் விரைகிறான் 
என் நண்பனுக்கு நான் பேச நினைத்தது என்ன என 
தெரியாதா என்ன ?
உன் நேரம் முடிந்தது என கடியாரம் சலசலக்கிறது 
நொடி முள்ளாய் எங்கள் பயணம் 
தெரிதலும்,புரிதலும் இருந்தும் 
இல்லை என மறுத்து

ஒரு பொய்யும்,சில சொர்க்கங்களும்


மரக்குதிரை பயணம் 
சேற்று வயல் நீர் குளியல் 
கூட்டாஞ்சோறு சமையல் 
வரப்பு நடை உயிர்ப்பு 

தேன்குழலில் நாத்தேய்ப்பு 
கொலுசோடு குதிப்பு 
மிதந்து மின்னிய கிராமத்து 
கூரைவழி நட்சத்திரங்கள் 
நகரத்து கானற்பூக்கள் 
இவற்றை காணடித்த 
பின்னும் 
இவ்வாழ்க்கை சொர்க்கம் என நாம்
குறிக்கிற பொழுது 
சிரிக்கின்றாள் 
சிறுமி …
அந்த சிரிப்பில் பொய்ப்பெண் 
நாணி ஒளிகிறாள் காலக்கூட்டில்