23 வருடங்களில் எல்லா தலைமுறையையும் குதூகலிக்க வைக்கிற ஒரு கச்சிதமான ஆட்டக்காரராக அவர் இருந்திருக்கிறா…ர் -“a perfect entertainer !”.கிரிக்கெட்டுடன் ஆன எந்த என் வயது இளைஞனின் ஞாபகமும் சச்சினோடு தான் ஆரம்பமாகி இருக்கும் .டிவி ஹால்களில் கண்ணிடுக்கி ஹே சச்சின் போர் அடிச்சுட்டார் என குதித்த தருணத்தில் எத்தனையோ பேரை குழந்தை ஆக்கிய அபார ஆட்டம் அவருடையது .யோசித்து பார்க்கையில் நூறு கோடிக்கும் மேற்பட்ட இத்தனை ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தூக்கி கொண்டு வலித்துக்கொண்டிருந்த அவரின் தோள்களுக்கு ஓய்வை வயது தந்திருக்கிறது
ஆஸ்திரேலியாவின் எகிறி வரும் பிட்ச்களில் இளம் வயதில் அடித்து ஆடிய சச்சின் ,சறுக்கிப்போகும் பனி விளையாட்டு வீரன் போல சுழற்பந்துவீச்சை காதலோடு அணுகி ஆடிய அந்த ஜாலக்காரன் .ஜெயித்துக்கொண்டே இருந்த நாயகர்கள் உலகில் எங்கேயுமில்லை .தோற்ற பொழுதெல்லாம் இன்னுமொரு நாளிருக்கிறது நமக்கு என்கிற நம்பிக்கையை இருபதாண்டு காலம் தன் ஆட்டத்தின் மூலம் இந்தியர்களின் மனதில் விதைத்ததே ஒரு உளவியல் சாதனை தான் .
பலபேர் என்ன பெரிய கடவுள் எனக்கேட்கலாம்;ஒன்று வய்சாகிப்போன ஆட்களாக இருப்பர்.அல்லது சச்சினின் ஆட்டத்தை விமர்சனப்பார்வையோடு பார்த்தவர்களாக இருப்பர் .தரை டிக்கெட்டாக உட்கார்ந்து கொண்டு எந்த நுணுக்கமும் தெரியாமல் ஆட்டம் பார்க்கிற ரசிகனாக அத்தனைபேரையும் மாற்றிய வசீகரம் அந்த ஆட்டத்தில் இருந்தது .கண்ணீரோடு தான் இதை அடிக்கிறேன் .எந்த வகையான தனிமனித ஆராதனையையும் விமர்சிக்கிற நான் காலம் முழுக்க சச்சின் காதலன் .இன்னும் பலரும் .ஒரு பதிமூன்று வருடகாலம் அவர் ஆடியதை பார்த்தேன் என நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு கண்ணிடுக்கி சொல்லும் பொழுது அவர்களுக்கு புரியாமல் போகாது என்கிற நம்பிக்கை இருக்கிறது -காலங்கள் சிலரைத்தான் காலங்களை கடந்து நிலைக்க வைக்கிறது .கிரிக்கெட்டில் டான் பிராட்மானுக்கு பின் அந்த கிரீடம் இவருக்கு தான் .
டென்னிசை விட்டு வெளியேற்றம் ,வேகப்பந்து வீச்சை துறந்த தருணம் ,முதுகு வலி ,ஷேன் வார்னேவை நொறுக்கி எடுத்த தருணம் ,1996 இன் ஸ்டம்பிங் ,கேப்டன் பதவியும் -வலிகளும்,ஷார்ஜாவில் சூறாவளி,அப்பாவின் மரணம்,கைநழுவிப்போன 203 உலகக்கோப்பை , டென்னிஸ் எல்போ,முதுகுவலி,2007 இல் மீண்டும் ஒரு பெருந்தோல்வி ,ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஒரு ஊழித்தாண்டவம் ,200,2011 இல் உலகக்கோப்பை,செஞ்சுரியில் நூறு -நாயகனில்லை இவர் -வார்த்தைகளில் அடக்க முடியாத சாகசப்பயணம் கூட்டிப்போன தேவன் .ராஜா ஹரிச்சந்திராஸ் பாக்டரியில் ஒரு காட்சி வரும் படம் முதன்முதலில் தயாரானதும் அதை பார்க்கும் பால்கேவின் மன உணர்வை ப்ரொஜக்டரின் ஒளிக்கீற்றுகளை காண்பித்து நம்மை உணர வைப்பார்கள் .அப்படித்தான் இந்த கட்டுரையும் ..இப்படி சில வரிகளில் கதையை அடக்குகிற பொழுது படிக்கிற பொழுது அவர் ஆடிய ஏதோ ஒரு இன்னிங்க்ஸ் நிழலாடும் .நெருடா எதையெல்லாமோ தான் கண்டதாக ஒரு கவிதையில் சொல்வார் suddenly I saw the heavens unfastened and open, planets, palpitating planations, shadow perforated, riddled with arrows, fire and flowers, the winding night, the universe.
அவற்றை காட்டிய நாயகன் சச்சின் தான் பலருக்கு கண்ணீரோடு விடைக்கொடுக்கிறோம் சச்சின்
