தேவதைகள் சபிக்கட்டும்


பெயர்ந்து விழும் பெருமரம் போல என்றைக்காவது 
என் தேவதைகள் 
பேசவேண்டும் 
தடதடக்கும் கண்ணீர் திவலைகள் நாதமாகி 
இரைச்சல் மிகுந்த உலகை 
மூழ்கடிக்கட்டும் 
திசைகாட்டி பறவையின் மொழிபோல !
மவுனத்தை எம் அன்னைகளுக்கு 
சாசனம் செய்யும் மானிடரின் 
வான்வெளியை 
எப்பொழுதும் தாழிடப்பட்ட கட்டுச்சாளரங்கள் 
கட்டிவிடட்டும்…
பேரிடிகள் எங்கள் தலைமீது விழட்டும் 
பின்னலிட்ட பிரவாகங்கள் …
உச்சுகொட்டிய 
உலகிற்கு உப்பிட வேண்டுமா
என யோசிக்கட்டும் 
அப்படியே ஊமைகளின் உலகை 
நகர்த்தி பிரபஞ்சத்தில் 
தள்ளிவிட ஒரே ஒரு 
நெம்புக்கோலை கரங்களில் 
திணிக்கும் கண்டுபிடிப்பாளனை 
சாத்தானிடம் இருந்து பெற்றுவர பயணசீட்டு வேண்டுமெனக்கு

தப்பிப்போன பிரியங்களின் பரிமாறல்


 

எடை பார்த்தலிலும்
தடை நகர்த்தலிலும்
விடை தருதலிலும்
கடை பூச்சுகளிலும்
கழிந்து
நசிந்து போகிறது
அழகியலுக்கான அர்த்தங்கள்
என்றைக்காவது சொல்லிவிட வேண்டும்
அதீத அழகு நீ என்று
எப்பொழுது ?
மரணித்தல் நிகழும் அக்க(ன)ணமாக இருக்கலாம்

எதாகவாவது ஆகி
உறைந்து சிலிர்க்க
உன் வானின்பரப்பை
கண்ணீர் மையில் ஒற்றி
எப்பொழுதும் உதிரும்
மழலை நறுமணம்
பூசி கரைவிக்கிற நுகர்வில் திகைக்கிறேன் நான்
சாதலைக்கூட சரிவர செய்யாமல்
சலனமாகிறேன் கடந்த மௌனப்போர்களில் !

நியான் விளக்குக்கும்
நிலவுக்கும் இடையே
மாறுதல் எச்சில்லாமல்
முத்தமிட
மவுனத்தின் மடியில்
கதைத்துக்கொண்டே
தியானம் புகுகிறது
ஊடலுக்கான ஆரம்பங்கள்
இசையாகி கரைகிறது வானம் 🙂 🙂

எதிலெதிலோ தொலைந்து போனாலும்
கோவித்து,பகைத்து,மோகித்து
காலங்களை காணடித்தாலும்
எங்காவது மீட்சி கிடைக்கும்
என்பதற்காகவே
பயணிக்கிறேன் நான் ;
முள்க்ரீடமும்,குண்டுகளும் திணிக்கப்படாமல்
பாவியாக இருத்தல் இனித்தம்

கடந்து போகும் கண்ணீரையும்
கவிந்துக்கிடக்கும் மவுனங்களையும்
சில்லறை காசுகளைப்போல
கிணுகிணுக்கும் ரகசியங்களையும்
தொலைக்க
கணமொன்றின் தழுவல் வாய்க்காத நமக்குள்

நிலா பார்த்தல்
நட்சத்திரம் எண்ணல்
வானவில் ரசித்தல்
பட்டக்கயிறு தேடுதல்
மழைநனைதல் நீர்வராமல் அழுதல்
காகித மிருகங்களோடு உலாப்போதல்
தேவதைகளை சிறைப்பிடித்தல்
எவ்வளவு கவலைகள்
குட்டிதேவதைக்கு
அவையெல்லாம் நீர் நழுவி பெருநகர கடைஓரம்
மாய்ந்துகிடக்கும்
மீன் போல
வீட்டுப்பாடத்தெருவில் கசங்கி கிடக்கின்றன

சாயங்கள்


வலசை பறவையின் நழுவும்
சிறகின் ரேகை மொழியாக,
… வானவில்லின் துளிக்கண்ணீராக
முயங்குதலின் திரைச்சீலையாக
கருப்பு வெள்ளையின் பிள்ளையாக
அகஒளி கொண்டவரின் எதிராளியாக
கன்னங்கள்-கணங்கள் தோறும்
விதவிதமாக சாயங்கள் வாழ்வெங்கும்
மாறி மாறி ஒரே இடத்தில்
நின்றே நில்லாமலும் ஊசலாடி ,ஊஞ்சலாடி சப்தித்தும் ,மௌனித்தும்
கலைந்து போகும் சாயங்களின்  சாசுவதமான சாபங்களை யாரேனும் குடுவையில் அடைத்து தாருங்களேன் 🙂

அழுதலும்,சிரித்தலும் இன்றி
கனிதலும் நெகிழ்தலும் வடிந்து …  ஊடலும் ,சுகித்தலும் மடிந்து
பிரிவும்,துன்பமும்,பாவங்களும்
இன்றி உன்னதம் என
சொர்க்கத்தை கையளித்த
கடவுளுக்கே மீண்டும் அதை கிரயம் செய்தாயிற்று ! ♥
உதிரத்தின் துளிகளை
கண்ணீரின் மணிகளை
நீரின் மிச்சங்களை
கோர்த்து வார்த்து செய்யப்படும்
வாக்குறுதி மாலைகளில்
எத்தனை நூற்றாண்டின் ஏக்கங்களின்
நூல் நைந்துபோய் கிடக்கிறது எ
ன தொட்டுணர முடிந்திருக்கிறதா உங்களால் ?
ஜன்னலின் ஓரம் காதல்களையும்
வீட்டுக்கு வெளியே கோபங்களையும்
முற்றத்தில் பால்யத்தின் பொழுதுகளையும்
தாழ்வாரத்தில் குதூகலத்தின் எச்சங்களையும்
தேக்கி வைத்திருக்கும் வீட்டோடு
கதைத்து இருக்கிறீர்களா என்றாவது ? ♥
ஏமாற்றங்கள் பத்தாயத்தில்
காதுமடல்
வருடி சிலிர்க்க
கொலுசு சத்தங்கள் புறவாசல் பொழுதுகளை
கலைத்து நடக்க
மணல்வெளிகளில் பேரிசை
மௌனப்பாதம் பதித்து கடக்க
காற்றில் கரைகிறது பருவம்
தப்பிப்போன அவர்(க)ளுக்கான பிரியங்கள் ♥
பேனாக்களால் நிறைக்கிறார்கள் என்னுலகை
பென்சில்களை ஒளித்து கண்ணாமூச்சி
ஆடும் காலத்தை வண்ணம் பூசி பழிதீர்க்க
பால்யத்தூரிகையேந்தி
குதூகலிக்கிறேன் ♥
ஆதலால்
நெருக்கியடிக்கும் பேருந்துகளிலும்
முண்டியடிக்கும் கூட்டங்களிலும்
ஒரு சொல் தவறி விழுகிறது ,
மாநகரத்து நெரிசல்களில்
ஒரு புன்னகை காணாமல் போகிறது ,
பெருங்கடைக்களில் வியர்வைகள்
வழிந்தோடி கரைகின்றன
ஒடுங்கிக்கிடக்கும் காதலின் சுவரில்
ஊறும் ஊடலின் மிச்சம்
மின்னி மங்குகின்றது
எல்லாவற்றையும் கண்டும் காணாமல்
மனம் திருவிழாவின் இரைச்சல்களில்
நசுங்கிப்போகும் குழந்தையின் அழுகை
போல மாறி மரணிக்கிறது !
♥ உருண்டு விழும் தாயம் போல
வந்து சேர்கிறது உன் முத்தங்கள்
மன்மோகனின் வாய்திறப்பு
போல உராய்ந்து ஒட்டிக்கொள்கின்றன
கண்ணாடி ஸ்பரிசங்கள்
உடைக்கத்தான் எத்தனிக்கிறேன்
உருண்டோடி விடுகிறது பிரியங்கள்

”வெயில் மனிதர்களின் ஊர் விருதுகள்!”


 

 

                       

த்தனை ஊருக்குப் பயணப்பட்டாலும் என் ஊரின் தனித்துவம் வேறு எங்கும் காணக்கிடைப்பது இல்லை!” – பேசத் தொடங்கும்போதே பெருமிதம் பொங்குகிறது இயக்குநர் வசந்தபாலனின் வார்த்தைகளில்.

 

       

‘ஒவ்வோர் ஊருக்கும் ஓர் அடையாளம் இருக்கும் இல்லையா? விருது நகருக்கான அடையாளம் புழுதிதான்! என் ஊரின் முக்கியமான பகுதி தேசபந்து மைதானம். அந்த நடுவாந்திரப் பகுதியில்தான் ஊரின் முக்கியத் தலமான முருகன் கோயில், மாரியம்மன் கோயில், வெயிலுக்குகந்த அம்மன் கோயில்கள் இருக்கு. வெயில் உகந்தப்பட்டினம் என்பதுதான் என் ஊரின் பழைய பெயர். காலப்போக்கில் மருவி விருதுப்பட்டி ஆகி, பிறகு விருதுநகர் ஆகிடுச்சு. விருதுநகரின் சிறப்பு அதன் உணவகங்கள். ஆரோக்கியராஜ் சேவுக் கடைக்கு நான் இப்போதும் ரசிகன். அங்கே கிடைக்கும் கருப்பட்டி மிட்டாய், வெள்ளை மிட்டாய், சேவு, சீவல் எல்லாமே அவ்வளவு ருசி!

விருதுநகர் எண்ணெய் பரோட்டா ஊரோட தனி அடையாளங்களில் ஒண்ணு. பெரியவடை சட்டியில் நல்லெண்ணெயைக் காயவெச்சு பரோட்டாவைப் போட்டு முறுக்கு மாதிரி பொரிச்சு எடுப்பாங்க. மொறு மொறு பரோட் டாவுக்கு மட்டன் அல்லது சிக்கன் சால்னா தொட்டுச் சாப்பிடறது சுகமான அனுபவம். அதே மாதிரி ஆட்டுக் கறியைப் பொடிசா நறுக்கி, கொழுப்போட சேர்த்து வதக்கி, அலுமினியக் கிண்ணத்துல தருவாங்க. உலகத்தின் அற்புதமான சாப்பாடு இதுதானோனு தோணும்.

ஸ்கூல் லீவு நாட்கள்ல கடைக்கு வேலை பார்க்கக் கிளம்பிடுவோம். அப்ப எல்லாம் ஒட்டுமொத்த விருதுநகரையும் எட்டே தெரு வழியா  சுத்தி வந்துடுவோம். சம்பளக் காசை சேர்த்துவெச்சு படம் பார்ப்போம். அப்போ பெரிய நகரத்தில்கூட நாலு ஷோதான் போடு வாங்க. ஆனா, விருதுநகர்ல அஞ்சு ஷோ உண்டு. ஞாயிற்றுக்கிழமைகள்ல  அஞ்சுஷோவை யும் தொடர்ந்து பார்த்த அனுபவம் எல்லாம் உண்டு.

சின்ன வயசுல நான் விருதுநகரில் பார்த்தவங்க எல்லாருக்குமே ஏதாவது ஒரு தனித் தன்மை இருக்கும். தந்தி மரத் தெருவுல  சலூன் கடை வைத்திருப்பவரின் தம்பி, போலியோ வால் பாதிக்கப்பட்டவர். அவரிடம் அபாரத் திறமை ஒண்ணு இருந்தது. ஒரு ஆள் இப்படி இருப்பார் என்று வர்ணிச்சால் போதும். அச்சு அசலா அவரை அப்படியே வாட்டர் கலர்ல வரைந்துடுவார். கடைசி வரைக்கும் புகைப்படம் எடுக்காமலே இறந்துபோன பல பேருடைய உருவங்களை அவர்தான் வரைஞ்சுகொடுத்தார்.

அப்போது எங்கள் ஊரில் வீட்டுக்கெல்லாம் வெள்ளை அடிக்கிறதுக்குன்னே ஒருத்தர் இருந்தார். எம்.ஜி.ஆர்.  மேல உள்ள அபிமானத் தால தன்னோட பெயரை எம்.ஜி.ஆர். என்றே மாற்றிக்கொண்டார். எம்.ஜி.ஆர்- படத்தைத் தொடர்ந்து பார்ப்பதற்காகவே தியேட்டரில் வேலை பார்த்தார். எம்.ஜி.ஆர். இறந்தப்ப  சென்னை சென்றவர், இரண்டு மாதம் அவரு டைய சமாதி அருகிலேயே சுற்றிவிட்டுதான் ஊர் திரும்பினார். எங்க ஊரில் ‘முறுக்கு முறுக்கு அஞ்சு பைசா முறுக்கு’ என ராகம் போட்டுப் பாடிகிட்டே முட்டிவரைக்கும் கட்டுன வேட்டி, மேல கசமுசா சட்டையோட முறுக்கு விற்ற திருநங்கையை மறக்கவே முடியாது. நான் பார்த்து ரசிச்ச ஒருத்தர்கூட இப்போ உயிரோட இல்லை. இது புழுதிக் காடு. வெயில் பூமி. வெள்ளரிப் பிஞ்சுல ஆரம்பிச்சு கோயில் கோபுர சிலை வரைக்கும் எல்லாமே புழுதியா இருக்கும். என் ஊரும் கூட அந்தப் புழுதி மாதிரியே என்னுள் எங்கும் பரவிப் படிஞ்சிருக்கு!”

 

பூ.கொ.சரவணன்
படங்கள்: பா.காளிமுத்து

 

ஞாயிற்றுக்கிழமை மட்டன் சால்னா!


 
 

ண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் மன்னர் ஜவஹர், தன் ஊரான பாலமேடு குறித்த நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

 

”மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது பாலமேடு. 60 ஆண்டுகளுக்கு முன் ஊரின் ஒட்டுமொத்த மக்கள்தொகையே வெறும் 800 பேர்தான். பாலமேடு என்றதும் உடனே ஞாபகத்துக்கு வருவது  மஞ்சமலை ஆறுதான். எங்கள் ஊரின் நடுவில் பாய்ந்த அந்த ஆற்றில் பெரும்பாலான நாட்களில் நீர் வரத்து இருக்காது. ஆற்றின் ஒரு கரையில் ஆதிக்கச் சாதியினரும் இன்னொரு பக்கம் தலித் மக்களும் வசித்துவந்தார்கள். தெருக்கள் சாதியின் பெயரால் பிரிக்கப்பட்டு இருந்தன. இப்போது அந்தத் தெருக்களின் பெயர்களில் சாதி ஒழிந்து விட்டது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்குச் சற்றும் குறையாத கம்பீரம் உடையது, பாலமேடு ஜல்லிக்கட்டு. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மஞ்சமலை ஆற்றங்கரையில் ஜல்லிக்கட்டு நடக்கும். அதற்கான தயாரிப்புகள் அலாதியானவை. மாடுகளுக்குக் கொம்பை நன்றாகச் சீவிவிட்டு, அடர் வண்ணத் துணி ஒன்றை ஆட்டி முட்டவைத்து பயிற்சி கொடுப்பார்கள். நடுவில் போனால் ஆள் அம்பேல்தான்.

மின்சாரம் கிராமங்களுக்கும் வரத் தொடங்கி இருந்த காலம். எங்கள் கிராமத்தில் குண்டு பல்பு மாட்ட வந்த நாளில் ஊரே பரபரப்பாக இருந்தது. எதை எதையோ முடுக்கிவிட்டு, மஞ்சள் நிறத்தில் பல்பு ஒளிர்ந்தபோது, நாங்கள் போட்ட கூச்சல் இன்னமும் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

டென்ட் கொட்டகையில் அடித்துப் பிடித்து 20 அணா கொடுத்து, மணலில் உட்கார்ந்து படம் பார்த்த அனுபவங்கள் அற்புதமானவை. 75 காசு கொடுத்தால் நாற்காலியில் உட்காரலாம். ஆனால், நண்பர்களோடு படுத்துக்கொண்டே  படம் பார்த்த சுகமான அனுபவம் எங்கள் தலைமுறைக்கு மட்டுமே கிடைத்த சுகமான அனுபவம். அப்படிப் பார்த்த ‘நானும் ஒரு பெண்’, ‘காவல் தெய்வம்’ போன்ற படங்கள் இன்னமும் மனதுக்குள் பசுமை மாறாமல் நிழலாடுகின்றன. மாரியம்மன் கோயில் திருவிழா கொண்டாட்டங்கள் பரவசம் கொடுப்பவை. அப்போது எங்களுக்குக் கொடுக்கப்படும் தினையும் தேனும் கலந்த தினைமாவின் இனிப்பும், பிசுபிசுப்பும் இன்னமும் நாக்கில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. கும்மி அடித்துப் பாடும் பெண்களின் வளையல் ஓசை வருடங்கள் கடந்தும் கேட்டுக்கொண்டு இருக்கிறது.

பாலமேடு என்றாலே முருங்கை மரங்கள் நிறைந்து இருக்கும்.  அப்போது சென்னைக்கே நிறைய முருங்கைக் கீரைகளை ஏற்றுமதி செய்தார்கள். எங்கள் ஊரின் பிரபலமான இன்னொரு உணவு… கேப்பைக் களி. அதை நன்றாகக் கரைத்து பச்சை மிளகாயோடு நறுக்கென்று தொண்டைக்குள் இறக்கும்போது உண்டாகும் காரமும், எங்கள் அன்னைமார்களின் அன்பும் திரும்ப வராதவை. எங்கள் ஊர் கிராமம் என்பதால் சனிக்கிழமை சந்தை கூடும். அன்றைக்கு மட்டுமே கிடைக்கும் காரச்சேவு, சீனிச்சேவு, ஜீராபோளிக்காக, சந்தையைச் சுற்றிச் சுற்றி வருவோம். அப்போது எங்கள் ஊரில் இருந்த ஒரே ஹோட்டல் ராமு பரோட்டாக் கடை. அங்கே ஞாயிற்றுக் கிழமை மட்டும் மட்டன் சால்னா கிடைக்கும். அதற்காகப் பெரிய வரிசையில் தூக்குவாளிகளோடு காத்து இருப்பார்கள் மக்கள். வால்வு ரேடியோவைத் திருகி அதில் இரவு 10 முதல் 11 மணி வரை கேட்ட இசைப் பாடல்கள் எல்லாமே ஆனந்த ராகம்தான்.

என் கிராமத்தில் கிணறுகள் மட்டுமே நூற்றுக்கு மேல் இருந்தன. அதில் தண்ணீர் 10, 15 அடியில் நிரம்பி இருக்கும். அதில் அடிமண் எடுப்பது தொடர்பாக, பந்தயம் வைப்போம். சேந்தமங்கலம் வரை வயல்வெளிகளின் ஊடாக நடந்துபோகும்போது, வழி எங்கும் வளர்ந்து நிற்கும் புளிய மரங்கள் ஆயிரம் கதை சொல்லும். 800  பேரோடு இருந்த என் ஊர், இன்றைக்கு 15 ஆயிரம் பேரோடு பெருகி நிற்கிறது. ஆனாலும் அன்றைக்கு எங்களுக்குள் இருந்த நேசமும், மண்ணோடு ஒட்டி வாழ்ந்த வாழ்வும், கிணறும், மஞ்சமலை ஆற்றின் நினைவுகளும் இப்போதைய தலைமுறைக்கு வாய்க்காமல் போனது காலத்தின் சுழற்சிதான். வேறென்ன சொல்ல?”

சூப்பர் மார்க்கெட் சோகம்… காணாமல் போன பேரம்!


 
 

”மேற்கு மாம்பலத்தில் நாங்க குடி இருந்த ஆதிகேசவ பிள்ளைத் தெருவின் பெயரிலேயே ஒரு வரலாறு இருக்கு. தெருக்களுக்கு சாதிப் பெயர்கள் வைக்கக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்ட சமயத்தில் எங்க தெருப் பெயர் ‘விவேகானந்தர் தெரு’ என்று மாறியது” – வரலாறோடுத் தொடங்குகிறார் பின்னணிப் பாடகி சைந்தவி. தான் வசித்த மேற்கு மாம்பலம் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.  

”எங்கள் தெருவில் வீடுங்க நல்ல  இட வசதியோட விசாலமா இருக்கும். அப்பலாம் மேற்கு மாம்பலத்தில் விளையாட்டு திடல்னு எதுவுமே இல்லை. அதனால், குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே விளையாடத்தான் இந்த ஏற்பாடு. விடுமுறை நாட்களில்கூட வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் போரடிக்காது. சென்னைப் பசங்களுக்கு கிரிக்கெட் மோகம் உச்சத்துக்குப் போனது எங்க காலத்தில்தான். அந்த கிரிக்கெட் மோகத்துக்கு நாங்களும் தப்பிக்கலை. ‘எங்களையும் சேர்த்துக்கிட்டாத்தான் உங்களை விளை யாடவேவிடுவோம்’னு அடம்பிடிப்போம். ஆனால், பசங்க அசைஞ்சு கொடுக்க மாட்டாங்க. வீட்டு பெரியவங்களைச் சிபாரிசுக்குக் கூட்டிட்டு வருவோம். அப்போ வேண்டா வெறுப்பாக டீம்ல சேர்த்துப்பாங்க. ‘போ… போய் அப்புடி ஓரமா நில்லு’னு சொல்லி பந்து வராத இடமாகப் பார்த்து டம்மியாக நிக்கவெச்சிருவாங்க.  

அந்த சமயத்துலதான் நாங்க பேட்மிட்டன் விளையாட ஆரம்பிச்சோம். இதில் ஆண்களுக்கு நோ என்ட்ரி. அப்ப பொண்ணுங்க லேடி பேர்ட் சைக்கிள்ல போறதே தனி அடையாளம்தான். காற்றோட்டமா வெறிச்சோடிக்கிடந்த சாலைகளில் கூட்டம் கூட்டமா சைக்கிள்ல போனதை நினைச்சா, இப்பவும் மனசுக்குள்ள ஜில்லுன்னு இருக்கும்.  மேற்கு மாம்பல அடையாளங்கள்ல அயோத்தியா மண்டபமும்  ஒண்ணு. இந்த மண்டபத்தில் ராமருக்கு வருஷம் முழுக்க பூஜை நடக்கும். அங்கே நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் ஏகப்பட்ட ஜாம்பவான்களின் பாட்டைக் கேட்டு இருக்கேன். அவங்க பாடுறதை வீட்டு மொட்டை மாடியில் அம்மா மடியில் படுத்துக் கிட்டே கேட்டு ரசிச்சது இன்னமும் அப்படியே ஞாபகத்தில் இருக்கு. அதேபோல ராமநவமி கோலாகலமும் என்னைக்கும் மனசை விட்டுப் போகாது.

மேற்கு மாம்பலத்தின் இன்னொரு சிறப்பு, கூட்டுக் குடும்பங்கள். காலப்போக்கில் ஒவ்வொரு வீடும் இடிக்கப்பட்டு ஃப்ளாட்டா மாறினப்ப, ‘அடுக்கு மாடி வீடு வரப்போகுது’னு அன்னைக்கு சந்தோஷமா பேசிட்டு இருப்போம். ஆனால்,  இன்னைக்கு ‘பழைய வீடுகளை எல்லாம் இழந்துட்டோமே’னு வருத்தமா இருக்கு. அப்போ ஒவ்வொரு வீட்டுக்குப் பின்னாலும்  கிணறு இருக்கும். அந்தக் கிணத்துல தண்ணி எடுத்து செடிகளுக்கு விடுறது, தண்ணீரை எடுத்து மத்தவங்க மேல தெளிச்சு விளையாடுறதுன்னு ஜாலியா இருக்கும்.

கால் வலிக்க வலிக்க ஓடிப்பிடிச்சு  விளையாடின சோமசுந்தரம் மைதானமும் சப்புக்கொட்டி போளி சாப்பிட்ட வெங்கட்ரமணா போளிக் கடையும் இன்னமும் அப்படியே இருக்கு. தெரு முழுக்க இருந்த டைலர் கடைகள், அழகான ஆடைகள் இருந்த தங்கம் சாரீஸ், பொம்மைகள் வாங்கிய முருகன் ஃபேன்ஸி ஸ்டோர்ஸ் எல்லாம் இன்னைக்கு இல்லை. அது பெரிய வருத்தம்.  பொங்கல் அன்னிக்கு மேற்கு மாம்பலம் ஒரு மினி கிராமமா மாறிடும். கரும்பு, மஞ்சள் கொத்து, பானைகள்னு  எல்லா இடத்துலேயும் குவிஞ்சுக்கிடக்கும். அப்போ புதுசாத் தொடங்குன அருண் ஐஸ் க்ரீமின் அத்தனை ஃப்ளேவர்களும் எனக்கு அத்துப்படி. சாரதா அப்பளக் கடையில் அப்பளம், ஊறுகாய், வத்தல்கள் வாங்கியதும், அந்த அப்பளங்களை நொறுக்கியபடி போட்ட ஆட்டமும் தனிக் கதை.

எங்க ஏரியா சின்னச் சின்ன மளிகைக் கடைகள் கண்முன்னே திடுதிப்பென காணாமல் போனதும், அடுத்தடுத்த நாட்கள்ல அதே இடத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு அஸ்திவாரம் போடுறதும் அன்னைக்கு வாடிக்கையான விஷயம். கடைகளை வித்த குடும்பங்கள் அந்த இடத்தைப் பிரிய மனசே இல்லாமல் கிளம்பிப் போவாங்க. மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும். தம்பையா ரெட்டித் தெருவில் இருந்த, பல கடைகள் காணாமல் போனப்ப முளைத்த முதல் சூப்பர் மார்க்கெட் ‘வைபவ் சூப்பர் மார்க்கெட்’. அது வந்தப்பிறகு, பேரம் பேசிப் பொருட்களை வாங்குற பழக்கமே மறைஞ்சு போச்சு.  

இப்பவும் இங்க இருந்து தேனாம்பேட்டைக்கு வீடு மாறினப்ப, அழுதபடி காரில் ஏறிப்போனது கூட இன்றைக்கும் நாபகத்தில் இருக்கிறது!”

சுட்டிகளின் ரோல் மாடல் !


 
 

 

 ரோல் தால் என்ற பெயர் கேட்டதும், சுட்டி விகடனில் வெளியான ‘சார்லி அண்ட் சாக்லேட் ஃபாக்டரி’ கதை நினைவுக்கு வரும். ரோல் தால் தன் முதல் கதையை எழுதி, இந்த வருடத்தோடு ஐம்பது ஆண்டுகள் ஆகிறது.

முதல் கதையின் பெயர், ‘ஜேம்ஸ் அண்ட் பிக் பீச்.’ குட்டி ஜேம்ஸின் பெற்றோர்களை ஒரு பெரிய காண்டாமிருகம் விழுங்கிவிடுகிறது.  நம்ம ஹீரோ, ஸ்பைக்கர் மற்றும் ஸ்பான்ஞ் என்னும் கொடுமைக்கார அத்தைகளிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும்போது, அவனுக்கு பெரிய பீச் பழத்தில் பயணம் செய்யும் அற்புத அனுபவம் கிடைக்கிறது. பீச் பழத்தில் பறந்து… பரவசம் அடையும் ஜேம்ஸின் கதையைச் சுவைபட விவரிக்கிறது இந்த நாவல்.

கொடுமைக்கார பெற்றோர்கள், அதி பயங்கரமான பிரின்சிபால், அன்பின் உருவாய் வரும் ஸ்கூல் மிஸ்… என ஒரு சுட்டித்தனமான கதைக் களத்தில் பயணம் செய்யும் அனுபவமான ‘மட்டில்டா’ குழந்தைகளுக்கான நூல்களில்… உலக அளவில் தலைசிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்டது. இதனை எழுதியதும் நம்ம ரோல் தால்தான்.

”குழந்தைகளின் உலகில் வசிப்பதையே பெருமையாகக் கருதுகிறேன். சுட்டிகளுக்குக் கதை சொல்வது ரொம்பக் கஷ்டம். ஏன்னா, அவங்க பெரியவங்க மாதிரி கவனிச்சி உட்கார மாட்டாங்க.  அவங்களுக்குக் கதை சொல்ல, நம் ரெண்டு கையும் தரையில் ஊன்றி, கால்களையும் குழந்தை மாதிரி வச்சிக்கிட்டுத் தவழணும்” எனச் சொன்ன ரோல் தால் வாழ்க்கையில் கொட்டிக் கிடக்கும் சோகம்…

ரோல் தாலின் மூத்த பெண் ஒலிவியா, மூளைக் காய்ச்சலால் இறந்து போனாள். அவரின் குட்டிப் பையன் தியோவின் மூளையும் சேதம் அடைந்தது. அவனை அதில் இருந்து மீட்க, ஒரு இன்ஜினீயர் மற்றும் நரம்பியல் நிபுணரோடு சேர்ந்து போராடி, அவன் தலையில் இருந்த திரவத்தை ஒரு வால்வைக் கொண்டு வெளியேற்றி, காப்பாற்றிய கதையைக் கேட்டாலே சிலிர்க்கும். அவருடைய மனைவி, மகள் லூசியை வயிற்றில் சுமக்கும்போது… மூன்று முறை ரத்தக் குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டார். தினம் ஆறு மணி நேரம் கதை சொல்லியும், பேசியும் மனைவியையும் மகளை யும் காப்பாற்றினார் ரோல் தால். ஆனாலும், சோகம் தொடர்ந்தது. அவரின் வளர்ப்பு மகள் லோரினா, மூளைக் கேன்சரால் இறந்தாள். அதுபோல், வேறு சுட்டிகளுக்கு வரக்கூடாது என எண்ணினார். அவர் எழுதிய புத்தகங்களின் மூலம் வரும் வருமானத்தைக் குழந்தைகளின் நலனுக்காக செலவு செய்ய அறக்கட்டளையை நிறுவி, சுட்டிகளின் ரோல் மாடலாகத் திகழ்கிறார் ரோல் தால்.

பார்வையற்றவர் இனி எல்லாமே படிக்கலாம்!


 
 

சாதனைகள் இரு வகை. ஒன்று, சாதிப்பதன் மூலம் தன்னை உயர்த்திக்கொள்வது. மற்றொன்று, சாதிப்பதின் மூலம் இயலாதவரை உயர்த்துவது. கோவை – பார்க் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி பயிலும் மாணவர் உஜ்வல் குமார் புச்சா மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து செய்த சாதனை, இரண்டாம் வகை.

 பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் புத்தகங்களில் உள்ள வார்த்தைகளையும் பிரெய்லி முறையிலான வார்த்தைகளையும் கம்ப்யூட்டரில் ஏற்றி, ஒலி வடிவமாகக் கேட்கவும் உணரவும் கூடிய வகையில் தொழில்நுட்பத்தைத் தயாரித்திருக்கிறார்கள் இவர்கள். மைக்ரோ சாஃப்ட் நிறுவனம், இந்தியாவில் தலைசிறந்த ஐந்து கண்டுபிடிப்புகளில் இதை ஒன்றாக அங்கீகரித்துள்ளது, நம் மாணவர்களுக்குக் கிடைத்த வெற்றி!

”ஏதாச்சும் சாதிக்கணும்னு எனக்கு உத்வேகம் கொடுத்தது என்னோட சீனியர் சரண்யராஜ்தான். அவர்தான் என்னையும் என் நண்பர்களையும் பல்வேறு தொழில்நுட்ப விழாக்களுக்குக் கூட்டிட்டுப் போவார். அப்படி ஒரு நிகழ்ச்சியில்தான் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் ‘இமாஜின்’ கோப்பைக்கான அறிவிப்பைப் பார்த்தோம். உலக அளவில் சமூகத்தின் முன்னேற்றத்துக்குத் தேவையான எட்டு விஷயங்களை அந்த நிறுவனம் வரையறுத்திருந்தது. அவற்றில் ஏதாவது ஒரு விஷயத்தில் நாம் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிச்சு சமர்ப்பிக்கணும். அவங்க வரையறுத்திருந்த எட்டு விஷயங்களில் ஒன்று, ‘உலகம் முழுக்க 16 கோடி பேர் பார்வை இழந்தவர்கள் இருக்கிறார்கள். அதில் மூன்றில் ஒரு நபர் இந்தியாவில் இருக்கிறார். அவர்கள் பயன் பெறும் வகையில் ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்பை உருவாக்கவேண்டும்’ என்று” பேசத் தொடங்கினார் உஜ்வல் குமார் புச்சா.

”நாங்கள், பார்வையற்றவர்கள் கற்றுக்கொள்வதற்கு உதவலாம் என்று முடிவுசெய்தோம். இதில் சரண்யராஜ், கமலேஷ் பாபு, அர்ஜுன் மற்றும் நான் ஆகிய நான்கு பேரும் இணைந்தோம். பார்வையற்றவர்கள் படிக்க இதுவரை பிரெய்லி முறை மட்டுமே இருக்கிறது. கம்ப்யூட்டர் துறையின் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் எங்கள் கண்டுபிடிப்பு சாத்தியமாகும் என்று சொல்லி, அதற்கான திட்ட அறிக்கை மாதிரியை மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துக்கு அனுப்பினோம். இப்படி அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான திட்ட அறிக்கைகளில் 15 மட்டுமே அந்த நிறுவனம் தேர்வு செய்தது. அதில் எங்களுடையதும் ஒன்று. கூடவே, எங்கள் கண்டுபிடிப்புக்கு ஊக்கத் தொகையாக 25 ஆயிரமும் ஒரு சி.பி.யு-வையும் அந்த நிறுவனம் அளித்தது!

நாம் படிக்கும் பெரும்பாலான புத்தகங்கள் பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி முறையில் கிடைப்பது இல்லை. கடிதம், பத்திரங்கள் போன்ற கையெழுத்துப் பிரதிகளையும் அவர்களால் உணர இயலாது. முதலில் புத்தகங்களை கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்து, அவர்களுக்கு ஒலி வடிவில் உணர்த்தத் திட்டமிட்டோம். இதற்காக உலக அளவில் வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் ஆப்ஜெக்ட் கேரக்டர் ரெகக்னிஷன் (OCR) மென்பொருளைப் பயன்படுத்தி னோம்.

இதில் புத்தகத்தில் உள்ள எழுத்துக்களை கம்ப்யூட்டர் எளிதில் உள்வாங்கிக்கொள்ளும். ஆனால், எங்களுக்குச் சவாலாக இருந்தவை கையெழுத்துப் பிரதிகள்தான். அதற்காக நூற்றுக்கணக்கான கையெழுத்து மாதிரிகளை எடுத்து, கம்ப்யூட்டர் மெமரியில் பதிவிறக்கம் செய்தோம். அவ்வாறு செய்யும்போது பல்வேறு நபர்களின் கையெழுத்துகளுடன் ஓரளவு நெருங்கிப் பொருந்திவருகிற எழுத்துக்கள் இருந்தாலும்கூட, கம்ப்யூட்டர் அதை உடனே கிரகித்து உள்வாங்கிக்கொள்ளும்படி ஒரு புரொகிராமை எழுதினோம். இதில் எங்களுக்கு வெற்றி கிடைத்தது.

பிறகு அச்சு மற்றும் கையெழுத்து வடிவை உணர்ந்துகொண்ட கம்ப்யூட்டர், அதை ஒலி வடிவத்துக்கு மாற்ற மின் பேச்சு (இஸ்பீக்) என்ற புரொகிராமை நாங்களே  சி மொழியில் எழுதினோம். இப்போது பார்வையற்றவர்கள் கம்ப்யூட்டரில் எங்களுடைய மென்பொருளை ஏற்றிவிட்டு தாங்கள் படிக்க விரும்பும் புத்தகத்தை ஸ்கேன் செய்து அவர்கள் விரும்பும்போது ஒலி வடிவத்தில் கேட்கலாம். இதை மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் பல்வேறு வழிகளில் சோதித்துப் பார்த்து, இறுதியில் எங்களுடைய கண்டுபிடிப்பை இந்திய அளவில் முதல் ஐந்தில் ஒன்றாக அங்கீகரித்தது. தவிர, உலக அளவில் பிரபலமான ஐ.இ.இ.இ. (இன்ஸ்டியூட் ஆஃப் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்) அமைப்பு அமெரிக்காவில் நடத்திய மாநாட்டில் எங்களுடைய கண்டுபிடிப்புக்குப் பாராட்டுத் தெரிவித்தது. துபாயிலும் இதற்கு ஏக வரவேற்பு. விரைவில் இன்னும் நிறைய மாற்றங்கள் செய்து, எளிமையாகவும் மலிவான விலையிலும் பார்வையற்றவர்களுக் குக் கிடைக்கச் செய்வதே எங்கள் நோக்கம்…” என்கிறார்கள் உறுதியுடன்!

பக்கிங்காம் படகு சவாரி…


”என் பூர்வீகம் தாமிரபரணி ஓடும் முந்நீர்பள்ளம் என்னும் கிராமம். நான் பிறந்தது அம்மாவின் சொந்த ஊரான சிதம்பரம். ஆனாலும் என் ஊர் என்றால் நெஞ்ச மெல்லாம் நிறைந்து தெரிவது சென்னைதான்!”-சென்னை பற்றி சிலாகித்துப் பேசுகிறார் முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநர் ஆர்.நடராஜ்.


”சென்னையின் பல்வேறு பகுதியில் என் வாழ்க்கை கழிந்து இருக்கிறது. அதில் முதலில் நினைவுக்கு வருவது கோபாலபுரம். அங்கே கிருஷ்ணன் கோயில் தொடங்கி கணேஷ் தெரு வழியாகக் கடக்கும் மார்கழி மாத பஜனைகள் அன்று தெருவின் அடையாளம். இன்றும் அந்த நிகழ்வு தொடர்கிறது. ஆனால், அன்று இருந்ததுபோல் இன்று சிறுவர்கள் அதிகமாக வருவது இல்லை. அங்கு தரப்படும் சர்க்கரைப் பொங்கலுக்கும், வெண்பொங்கலுக்கும் தனி சுவை உண்டு.

அன்றைய என் ஆசிரியர்கள் அனைவரும் அற்புதமானவர்கள். அதிலும் பிளட்சர் எனும் ஆங்கிலேய தலைமை ஆசிரியரின் பிரம்பின் வேகத்துக்குப் பள்ளியே கட்டுப்பட்டுக் கிடக்கும். அதேபள்ளியில் இருந்த கோவில்பிள்ளை அப்படியே நேர்மாறானவர். அன்பில் உருகவைத்துவிடுவார். நான் படித்த திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில்தான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உட்பட பல பிரபலங்கள் படித்தனர். இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் தலைமை ஆசிரியர் ஸ்ரீனிவாச  சாஸ்திரி. அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆழ்ந்த புலமை உள்ளவர். அதேபோல், பூவாழூர் சுந்தரராமன் எனும் தமிழ் ஆசிரியர் எடுத்த பாடங்கள் இன்றும் காதுகளில் ஒலித்தபடி உள்ளன.

தங்கத்தை அரசிடம் ஒப்படைப்பது, அரசே மக்களை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கச் சொன்னது என, எங்கள் இளமைப் பருவம் நெருக்கடி நிரம்பியதாக இருந்தது. அன்று சென்னைவாசிகள் தங்கள் பிள்ளைகளிடம் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றைக் கொடுத்து தெருக்களில் உலவவிடுவார்கள். ஏதாவது ரேஷன் கடை திறந்தால் அரைக் கிலோ சர்க்கரை, ரவையை உடனடியாக வாங்கத்தான் இந்த ஏற்பாடு.

தண்டையர்பேட்டை அப்போது திகிலான ஏரியா. அங்கு அடிக்கடி நடக்கும் கொலைகளால் அதை ‘கொலைகாரன்பேட்டை’ என்பார்கள். அங்கே நடக்கும் கரும்பு உடைக்கும் போட்டிகள், ரத்தத்தை உறைய வைப்பவை. மொத்தமாகக் கரும்புகளை ஒன்றுசேர்த்து முட்டியில் அடித்து உடைப்பார்கள். கரும்பு உடையவில்லை என்றால் முட்டி உடைந்துவிடும். இதைவைத்து சூதாட்டம் நடக்கும்.

பெசன்ட் நகரில் வசித்தபோது, தசரா கொலு பார்க்க வீடு வீடாகச் செல்வார்கள். கொலுவைக்கும் சாக்கில் பெண் தேடுதல், மாப்பிள்ளை தேடுதல் வேட்டை நடக்கும். மழைக் கால பெசன்ட் நகர் ரம்யமாக இருக்கும். அன்று மெரினாவைவிட அழகாக, அமைதியாக இந்தக் கடற்கரை இருந்தது. கார்ல் ஸ்மிடிட் எனும் டச்சு மாலுமியின் பெயரில் ஒரு நினைவுச் சின்னம் உண்டு. ஒரு பெரும் வெள்ளத்தின்போது ஏகப்பட்டோரைக் காப்பாற்றிவிட்டு உயிரை இழந்த அந்த மனிதரின் நினைவாக அந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டதாகச் சொல்வார்கள். மரியாதை நிமித்தமாக அந்த இடத்துக்குப் போகும்போது யாரும் செருப்பு அணிந்து செல்ல மாட்டார்கள்.

நேரு கபே, வசந்த் விகார், குப்தா ஹோட்டல் முதலியன அன்று பலதரப்பட்ட உணவுப் பழக்கங்களை அறிமுகப்படுத்தின. பெசன்ட் நகர் அன்று சுடுகாடாக இருந்தது. அங்கே வீடு வாங்கவே மக்கள் யோசிப்பார்கள். அன்று கோட்டூர்புரம் போக பெசன்ட் நகரில் இருந்து பக்கிங்காம் கால்வாய் வழியா கப் படகு போக்குவரத்து மட்டுமே இருந்தது. இரண்டு ரூபாய் கொடுத்தால் ஆனந்தமான சவாரி. அதில் காய்கறி, உப்பு என ஏகப்பட்ட பொருட்களை சுமந்து செல்வார்கள்.

இதே பெசன்ட் நகரில் 1980-களில் அன்டன் பாலசிங்கம் தன் மனைவியோடு தங்கி இருந்தபோது, அவர் வீட்டில் வெடிகுண்டு வெடித்த வழக்குக்காக அவரைச் சந்தித்ததும்; விசாரணைக்காக அடையாறு போய் புலிகள் தலைவர் பிரபாகரனோடு பேசியதும் நேற்று நடந்ததைப் போல் நினைவில் இருக்கிறது. இந்தக் கடல் அலைகள் நமக்குத்தான் எவ்வளவு கதைகள் சொல்கின்றன. கண்களை மூடி நன்றாகக் கேட்டுப் பாருங்கள், அது ஒரு கடலின் வரலாறு மட்டும் அல்ல; ஒரு தலைமுறையின் எச்சங்கள்!”