சூப்பர் மார்க்கெட் சோகம்… காணாமல் போன பேரம்!


 
 

”மேற்கு மாம்பலத்தில் நாங்க குடி இருந்த ஆதிகேசவ பிள்ளைத் தெருவின் பெயரிலேயே ஒரு வரலாறு இருக்கு. தெருக்களுக்கு சாதிப் பெயர்கள் வைக்கக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்ட சமயத்தில் எங்க தெருப் பெயர் ‘விவேகானந்தர் தெரு’ என்று மாறியது” – வரலாறோடுத் தொடங்குகிறார் பின்னணிப் பாடகி சைந்தவி. தான் வசித்த மேற்கு மாம்பலம் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.  

”எங்கள் தெருவில் வீடுங்க நல்ல  இட வசதியோட விசாலமா இருக்கும். அப்பலாம் மேற்கு மாம்பலத்தில் விளையாட்டு திடல்னு எதுவுமே இல்லை. அதனால், குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே விளையாடத்தான் இந்த ஏற்பாடு. விடுமுறை நாட்களில்கூட வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் போரடிக்காது. சென்னைப் பசங்களுக்கு கிரிக்கெட் மோகம் உச்சத்துக்குப் போனது எங்க காலத்தில்தான். அந்த கிரிக்கெட் மோகத்துக்கு நாங்களும் தப்பிக்கலை. ‘எங்களையும் சேர்த்துக்கிட்டாத்தான் உங்களை விளை யாடவேவிடுவோம்’னு அடம்பிடிப்போம். ஆனால், பசங்க அசைஞ்சு கொடுக்க மாட்டாங்க. வீட்டு பெரியவங்களைச் சிபாரிசுக்குக் கூட்டிட்டு வருவோம். அப்போ வேண்டா வெறுப்பாக டீம்ல சேர்த்துப்பாங்க. ‘போ… போய் அப்புடி ஓரமா நில்லு’னு சொல்லி பந்து வராத இடமாகப் பார்த்து டம்மியாக நிக்கவெச்சிருவாங்க.  

அந்த சமயத்துலதான் நாங்க பேட்மிட்டன் விளையாட ஆரம்பிச்சோம். இதில் ஆண்களுக்கு நோ என்ட்ரி. அப்ப பொண்ணுங்க லேடி பேர்ட் சைக்கிள்ல போறதே தனி அடையாளம்தான். காற்றோட்டமா வெறிச்சோடிக்கிடந்த சாலைகளில் கூட்டம் கூட்டமா சைக்கிள்ல போனதை நினைச்சா, இப்பவும் மனசுக்குள்ள ஜில்லுன்னு இருக்கும்.  மேற்கு மாம்பல அடையாளங்கள்ல அயோத்தியா மண்டபமும்  ஒண்ணு. இந்த மண்டபத்தில் ராமருக்கு வருஷம் முழுக்க பூஜை நடக்கும். அங்கே நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் ஏகப்பட்ட ஜாம்பவான்களின் பாட்டைக் கேட்டு இருக்கேன். அவங்க பாடுறதை வீட்டு மொட்டை மாடியில் அம்மா மடியில் படுத்துக் கிட்டே கேட்டு ரசிச்சது இன்னமும் அப்படியே ஞாபகத்தில் இருக்கு. அதேபோல ராமநவமி கோலாகலமும் என்னைக்கும் மனசை விட்டுப் போகாது.

மேற்கு மாம்பலத்தின் இன்னொரு சிறப்பு, கூட்டுக் குடும்பங்கள். காலப்போக்கில் ஒவ்வொரு வீடும் இடிக்கப்பட்டு ஃப்ளாட்டா மாறினப்ப, ‘அடுக்கு மாடி வீடு வரப்போகுது’னு அன்னைக்கு சந்தோஷமா பேசிட்டு இருப்போம். ஆனால்,  இன்னைக்கு ‘பழைய வீடுகளை எல்லாம் இழந்துட்டோமே’னு வருத்தமா இருக்கு. அப்போ ஒவ்வொரு வீட்டுக்குப் பின்னாலும்  கிணறு இருக்கும். அந்தக் கிணத்துல தண்ணி எடுத்து செடிகளுக்கு விடுறது, தண்ணீரை எடுத்து மத்தவங்க மேல தெளிச்சு விளையாடுறதுன்னு ஜாலியா இருக்கும்.

கால் வலிக்க வலிக்க ஓடிப்பிடிச்சு  விளையாடின சோமசுந்தரம் மைதானமும் சப்புக்கொட்டி போளி சாப்பிட்ட வெங்கட்ரமணா போளிக் கடையும் இன்னமும் அப்படியே இருக்கு. தெரு முழுக்க இருந்த டைலர் கடைகள், அழகான ஆடைகள் இருந்த தங்கம் சாரீஸ், பொம்மைகள் வாங்கிய முருகன் ஃபேன்ஸி ஸ்டோர்ஸ் எல்லாம் இன்னைக்கு இல்லை. அது பெரிய வருத்தம்.  பொங்கல் அன்னிக்கு மேற்கு மாம்பலம் ஒரு மினி கிராமமா மாறிடும். கரும்பு, மஞ்சள் கொத்து, பானைகள்னு  எல்லா இடத்துலேயும் குவிஞ்சுக்கிடக்கும். அப்போ புதுசாத் தொடங்குன அருண் ஐஸ் க்ரீமின் அத்தனை ஃப்ளேவர்களும் எனக்கு அத்துப்படி. சாரதா அப்பளக் கடையில் அப்பளம், ஊறுகாய், வத்தல்கள் வாங்கியதும், அந்த அப்பளங்களை நொறுக்கியபடி போட்ட ஆட்டமும் தனிக் கதை.

எங்க ஏரியா சின்னச் சின்ன மளிகைக் கடைகள் கண்முன்னே திடுதிப்பென காணாமல் போனதும், அடுத்தடுத்த நாட்கள்ல அதே இடத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு அஸ்திவாரம் போடுறதும் அன்னைக்கு வாடிக்கையான விஷயம். கடைகளை வித்த குடும்பங்கள் அந்த இடத்தைப் பிரிய மனசே இல்லாமல் கிளம்பிப் போவாங்க. மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும். தம்பையா ரெட்டித் தெருவில் இருந்த, பல கடைகள் காணாமல் போனப்ப முளைத்த முதல் சூப்பர் மார்க்கெட் ‘வைபவ் சூப்பர் மார்க்கெட்’. அது வந்தப்பிறகு, பேரம் பேசிப் பொருட்களை வாங்குற பழக்கமே மறைஞ்சு போச்சு.  

இப்பவும் இங்க இருந்து தேனாம்பேட்டைக்கு வீடு மாறினப்ப, அழுதபடி காரில் ஏறிப்போனது கூட இன்றைக்கும் நாபகத்தில் இருக்கிறது!”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s