பக்கிங்காம் படகு சவாரி…


”என் பூர்வீகம் தாமிரபரணி ஓடும் முந்நீர்பள்ளம் என்னும் கிராமம். நான் பிறந்தது அம்மாவின் சொந்த ஊரான சிதம்பரம். ஆனாலும் என் ஊர் என்றால் நெஞ்ச மெல்லாம் நிறைந்து தெரிவது சென்னைதான்!”-சென்னை பற்றி சிலாகித்துப் பேசுகிறார் முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநர் ஆர்.நடராஜ்.


”சென்னையின் பல்வேறு பகுதியில் என் வாழ்க்கை கழிந்து இருக்கிறது. அதில் முதலில் நினைவுக்கு வருவது கோபாலபுரம். அங்கே கிருஷ்ணன் கோயில் தொடங்கி கணேஷ் தெரு வழியாகக் கடக்கும் மார்கழி மாத பஜனைகள் அன்று தெருவின் அடையாளம். இன்றும் அந்த நிகழ்வு தொடர்கிறது. ஆனால், அன்று இருந்ததுபோல் இன்று சிறுவர்கள் அதிகமாக வருவது இல்லை. அங்கு தரப்படும் சர்க்கரைப் பொங்கலுக்கும், வெண்பொங்கலுக்கும் தனி சுவை உண்டு.

அன்றைய என் ஆசிரியர்கள் அனைவரும் அற்புதமானவர்கள். அதிலும் பிளட்சர் எனும் ஆங்கிலேய தலைமை ஆசிரியரின் பிரம்பின் வேகத்துக்குப் பள்ளியே கட்டுப்பட்டுக் கிடக்கும். அதேபள்ளியில் இருந்த கோவில்பிள்ளை அப்படியே நேர்மாறானவர். அன்பில் உருகவைத்துவிடுவார். நான் படித்த திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில்தான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உட்பட பல பிரபலங்கள் படித்தனர். இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் தலைமை ஆசிரியர் ஸ்ரீனிவாச  சாஸ்திரி. அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆழ்ந்த புலமை உள்ளவர். அதேபோல், பூவாழூர் சுந்தரராமன் எனும் தமிழ் ஆசிரியர் எடுத்த பாடங்கள் இன்றும் காதுகளில் ஒலித்தபடி உள்ளன.

தங்கத்தை அரசிடம் ஒப்படைப்பது, அரசே மக்களை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கச் சொன்னது என, எங்கள் இளமைப் பருவம் நெருக்கடி நிரம்பியதாக இருந்தது. அன்று சென்னைவாசிகள் தங்கள் பிள்ளைகளிடம் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றைக் கொடுத்து தெருக்களில் உலவவிடுவார்கள். ஏதாவது ரேஷன் கடை திறந்தால் அரைக் கிலோ சர்க்கரை, ரவையை உடனடியாக வாங்கத்தான் இந்த ஏற்பாடு.

தண்டையர்பேட்டை அப்போது திகிலான ஏரியா. அங்கு அடிக்கடி நடக்கும் கொலைகளால் அதை ‘கொலைகாரன்பேட்டை’ என்பார்கள். அங்கே நடக்கும் கரும்பு உடைக்கும் போட்டிகள், ரத்தத்தை உறைய வைப்பவை. மொத்தமாகக் கரும்புகளை ஒன்றுசேர்த்து முட்டியில் அடித்து உடைப்பார்கள். கரும்பு உடையவில்லை என்றால் முட்டி உடைந்துவிடும். இதைவைத்து சூதாட்டம் நடக்கும்.

பெசன்ட் நகரில் வசித்தபோது, தசரா கொலு பார்க்க வீடு வீடாகச் செல்வார்கள். கொலுவைக்கும் சாக்கில் பெண் தேடுதல், மாப்பிள்ளை தேடுதல் வேட்டை நடக்கும். மழைக் கால பெசன்ட் நகர் ரம்யமாக இருக்கும். அன்று மெரினாவைவிட அழகாக, அமைதியாக இந்தக் கடற்கரை இருந்தது. கார்ல் ஸ்மிடிட் எனும் டச்சு மாலுமியின் பெயரில் ஒரு நினைவுச் சின்னம் உண்டு. ஒரு பெரும் வெள்ளத்தின்போது ஏகப்பட்டோரைக் காப்பாற்றிவிட்டு உயிரை இழந்த அந்த மனிதரின் நினைவாக அந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டதாகச் சொல்வார்கள். மரியாதை நிமித்தமாக அந்த இடத்துக்குப் போகும்போது யாரும் செருப்பு அணிந்து செல்ல மாட்டார்கள்.

நேரு கபே, வசந்த் விகார், குப்தா ஹோட்டல் முதலியன அன்று பலதரப்பட்ட உணவுப் பழக்கங்களை அறிமுகப்படுத்தின. பெசன்ட் நகர் அன்று சுடுகாடாக இருந்தது. அங்கே வீடு வாங்கவே மக்கள் யோசிப்பார்கள். அன்று கோட்டூர்புரம் போக பெசன்ட் நகரில் இருந்து பக்கிங்காம் கால்வாய் வழியா கப் படகு போக்குவரத்து மட்டுமே இருந்தது. இரண்டு ரூபாய் கொடுத்தால் ஆனந்தமான சவாரி. அதில் காய்கறி, உப்பு என ஏகப்பட்ட பொருட்களை சுமந்து செல்வார்கள்.

இதே பெசன்ட் நகரில் 1980-களில் அன்டன் பாலசிங்கம் தன் மனைவியோடு தங்கி இருந்தபோது, அவர் வீட்டில் வெடிகுண்டு வெடித்த வழக்குக்காக அவரைச் சந்தித்ததும்; விசாரணைக்காக அடையாறு போய் புலிகள் தலைவர் பிரபாகரனோடு பேசியதும் நேற்று நடந்ததைப் போல் நினைவில் இருக்கிறது. இந்தக் கடல் அலைகள் நமக்குத்தான் எவ்வளவு கதைகள் சொல்கின்றன. கண்களை மூடி நன்றாகக் கேட்டுப் பாருங்கள், அது ஒரு கடலின் வரலாறு மட்டும் அல்ல; ஒரு தலைமுறையின் எச்சங்கள்!”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s