பார்வையற்றவர் இனி எல்லாமே படிக்கலாம்!


 
 

சாதனைகள் இரு வகை. ஒன்று, சாதிப்பதன் மூலம் தன்னை உயர்த்திக்கொள்வது. மற்றொன்று, சாதிப்பதின் மூலம் இயலாதவரை உயர்த்துவது. கோவை – பார்க் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி பயிலும் மாணவர் உஜ்வல் குமார் புச்சா மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து செய்த சாதனை, இரண்டாம் வகை.

 பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் புத்தகங்களில் உள்ள வார்த்தைகளையும் பிரெய்லி முறையிலான வார்த்தைகளையும் கம்ப்யூட்டரில் ஏற்றி, ஒலி வடிவமாகக் கேட்கவும் உணரவும் கூடிய வகையில் தொழில்நுட்பத்தைத் தயாரித்திருக்கிறார்கள் இவர்கள். மைக்ரோ சாஃப்ட் நிறுவனம், இந்தியாவில் தலைசிறந்த ஐந்து கண்டுபிடிப்புகளில் இதை ஒன்றாக அங்கீகரித்துள்ளது, நம் மாணவர்களுக்குக் கிடைத்த வெற்றி!

”ஏதாச்சும் சாதிக்கணும்னு எனக்கு உத்வேகம் கொடுத்தது என்னோட சீனியர் சரண்யராஜ்தான். அவர்தான் என்னையும் என் நண்பர்களையும் பல்வேறு தொழில்நுட்ப விழாக்களுக்குக் கூட்டிட்டுப் போவார். அப்படி ஒரு நிகழ்ச்சியில்தான் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் ‘இமாஜின்’ கோப்பைக்கான அறிவிப்பைப் பார்த்தோம். உலக அளவில் சமூகத்தின் முன்னேற்றத்துக்குத் தேவையான எட்டு விஷயங்களை அந்த நிறுவனம் வரையறுத்திருந்தது. அவற்றில் ஏதாவது ஒரு விஷயத்தில் நாம் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிச்சு சமர்ப்பிக்கணும். அவங்க வரையறுத்திருந்த எட்டு விஷயங்களில் ஒன்று, ‘உலகம் முழுக்க 16 கோடி பேர் பார்வை இழந்தவர்கள் இருக்கிறார்கள். அதில் மூன்றில் ஒரு நபர் இந்தியாவில் இருக்கிறார். அவர்கள் பயன் பெறும் வகையில் ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்பை உருவாக்கவேண்டும்’ என்று” பேசத் தொடங்கினார் உஜ்வல் குமார் புச்சா.

”நாங்கள், பார்வையற்றவர்கள் கற்றுக்கொள்வதற்கு உதவலாம் என்று முடிவுசெய்தோம். இதில் சரண்யராஜ், கமலேஷ் பாபு, அர்ஜுன் மற்றும் நான் ஆகிய நான்கு பேரும் இணைந்தோம். பார்வையற்றவர்கள் படிக்க இதுவரை பிரெய்லி முறை மட்டுமே இருக்கிறது. கம்ப்யூட்டர் துறையின் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் எங்கள் கண்டுபிடிப்பு சாத்தியமாகும் என்று சொல்லி, அதற்கான திட்ட அறிக்கை மாதிரியை மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துக்கு அனுப்பினோம். இப்படி அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான திட்ட அறிக்கைகளில் 15 மட்டுமே அந்த நிறுவனம் தேர்வு செய்தது. அதில் எங்களுடையதும் ஒன்று. கூடவே, எங்கள் கண்டுபிடிப்புக்கு ஊக்கத் தொகையாக 25 ஆயிரமும் ஒரு சி.பி.யு-வையும் அந்த நிறுவனம் அளித்தது!

நாம் படிக்கும் பெரும்பாலான புத்தகங்கள் பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி முறையில் கிடைப்பது இல்லை. கடிதம், பத்திரங்கள் போன்ற கையெழுத்துப் பிரதிகளையும் அவர்களால் உணர இயலாது. முதலில் புத்தகங்களை கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்து, அவர்களுக்கு ஒலி வடிவில் உணர்த்தத் திட்டமிட்டோம். இதற்காக உலக அளவில் வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் ஆப்ஜெக்ட் கேரக்டர் ரெகக்னிஷன் (OCR) மென்பொருளைப் பயன்படுத்தி னோம்.

இதில் புத்தகத்தில் உள்ள எழுத்துக்களை கம்ப்யூட்டர் எளிதில் உள்வாங்கிக்கொள்ளும். ஆனால், எங்களுக்குச் சவாலாக இருந்தவை கையெழுத்துப் பிரதிகள்தான். அதற்காக நூற்றுக்கணக்கான கையெழுத்து மாதிரிகளை எடுத்து, கம்ப்யூட்டர் மெமரியில் பதிவிறக்கம் செய்தோம். அவ்வாறு செய்யும்போது பல்வேறு நபர்களின் கையெழுத்துகளுடன் ஓரளவு நெருங்கிப் பொருந்திவருகிற எழுத்துக்கள் இருந்தாலும்கூட, கம்ப்யூட்டர் அதை உடனே கிரகித்து உள்வாங்கிக்கொள்ளும்படி ஒரு புரொகிராமை எழுதினோம். இதில் எங்களுக்கு வெற்றி கிடைத்தது.

பிறகு அச்சு மற்றும் கையெழுத்து வடிவை உணர்ந்துகொண்ட கம்ப்யூட்டர், அதை ஒலி வடிவத்துக்கு மாற்ற மின் பேச்சு (இஸ்பீக்) என்ற புரொகிராமை நாங்களே  சி மொழியில் எழுதினோம். இப்போது பார்வையற்றவர்கள் கம்ப்யூட்டரில் எங்களுடைய மென்பொருளை ஏற்றிவிட்டு தாங்கள் படிக்க விரும்பும் புத்தகத்தை ஸ்கேன் செய்து அவர்கள் விரும்பும்போது ஒலி வடிவத்தில் கேட்கலாம். இதை மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் பல்வேறு வழிகளில் சோதித்துப் பார்த்து, இறுதியில் எங்களுடைய கண்டுபிடிப்பை இந்திய அளவில் முதல் ஐந்தில் ஒன்றாக அங்கீகரித்தது. தவிர, உலக அளவில் பிரபலமான ஐ.இ.இ.இ. (இன்ஸ்டியூட் ஆஃப் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்) அமைப்பு அமெரிக்காவில் நடத்திய மாநாட்டில் எங்களுடைய கண்டுபிடிப்புக்குப் பாராட்டுத் தெரிவித்தது. துபாயிலும் இதற்கு ஏக வரவேற்பு. விரைவில் இன்னும் நிறைய மாற்றங்கள் செய்து, எளிமையாகவும் மலிவான விலையிலும் பார்வையற்றவர்களுக் குக் கிடைக்கச் செய்வதே எங்கள் நோக்கம்…” என்கிறார்கள் உறுதியுடன்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s