அனைத்துத் தகவல்களும் அலைபேசியில் கிடைக்கும்!


 

தகவல்

 

எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம், யுனெஸ்கோ, பம்பாய் ஐ.ஐ.டி. ஆகியவற்றுடன் இணைந்து சென்னை தரமணியில் ‘மொபைல் பிளஸ்’ என்ற மூன்று நாள் சர்வதேச மாநாட்டை அண்மையில் நடத்தியது. மாநாட்டுக்கு பல்வேறு நாட்டு நிபுணர்கள் வந்திருந்தனர்.  

நிகழ்வின்போது… மகாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா, புதுச்சேரி, தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் மதுரை என இந்தியாவின் எட்டு பகுதிகளில்

உள்ள விவசாயிகளை 3-ஜி வசதியின் மூலம் இணைத்து, வீடியோ கால் மூலம் முகம் பார்த்து பேசும் வசதியை செயல்படுத்தி காட்டினார்கள்.

இந்த முயற்சி பற்றி நம்மிடம் பேசிய எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில்குமரன், ”மொபைல்போன் தொழில்நுட்பத்தை விவசாயம் மற்றும் விவசாயிகள் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தும் அரிய முயற்சியின் ஒரு சிறு மாதிரி வடிவமே இது. பல்வேறு பகுதியிலிருக்கும் விவசாயிகளின் தேவைகளை அறிந்து விவசாயம், ஆடு, மாடு வளர்ப்பு, பால் உற்பத்தி, மீன் பிடித்தல் முதலிய பல்வேறு துறைகளில் அவர்களுக்கு உதவுகிறோம்.

பத்து ரூபாய்க்கு நாங்கள் கொடுக்கும் சிம் கார்டு மூலம் தினமும் மூன்று முதல் ஐந்து முறை குரல் குறுஞ்செய்தியை அனுப்புகிறோம். அதில் மண்ணின் தரம், தேவையான உரம், தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நாள், என்பது போன்ற பல்வேறு வழிகாட்டுதல்களைத் தருகிறோம். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலையில் விவசாயிகளின் கேள்விகளைப் பெற்றுக்கொண்டு… அன்று மதியமே சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மூலம் பதில்களை வழங்குகிறோம்” என்று சொன்னார்

சுகநிவாஸ் தயிர் சேமியாவும் மனிதனை அரிக்கும் ராட்சத மீனும்!


 
 

”மைலாப்பூர்காரன்னு சொல்லிக்கிறதுல எனக்கு எப்பவுமே தனிப் பெருமை உண்டு. என் உயிரோடும், உணர்வோடும், மனதோடும் கலந்த ஊர் இது” என்று மைலாப்பூர் பற்றிய நினைவுகளில் மூழ்குகிறார் நடிகர் எஸ்.வி.சேகர்.

”ஒரு காலத்துல மேடை நாடகங்கள் என்றால் மைலாப்பூர்தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும். இங்கே ஓயாமல் நாடகங்கள் நடந்துகிட்டே இருக்கும். அதிலும் சென்னையின் பழமையான சபாக்களில் ஒன்றான பார்த்தசாரதி சபாவில் டிராமாக்கள் பார்த்த பொழுதுகள் அப்படியே கண்ணுல நிக்குது. ஆர்.எஸ்.மனோகரா, புரசை தம்பிரான் என எத்தனையோ பேரின் நாடகங்களையும், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகங்களையும் பார்க்கிற பாக்கியம் எங்களுக்குக் கிடைச்சது. இன்னைக்கு மாதிரி அன்றைக்கு நெரிசலோ, டிராஃபிக்கோ இல்லாததால வீட்டில் உட்கார்ந்தே ஓசியில் முழு நாடகத்தையும் நெடுந்தூரத்துக்குக் கேட்க முடியும்.

மாடவீதி அப்படினு சொன்னாலே ஒரு கம்பீரம் வந்து ஒட்டிக்கும். அங்கே நடக்கிற அறுபத்து மூவர் உலாவில் கலந்துகிட்டா தனி திருப்தி. இங்கேதான் கம்பீரமா கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவுகள் ஒலிக்கும். மொட்டை மாடியிலும் செட்டு வீடுகளிலும் கழிந்த எங்களோட பால்யங்களின் ரம்மியான பொழுதுகள் அது. இந்தத் தலைமுறைக்குப் புரியாத சந்தோஷத்தை எங்களுக்குத் தந்தது அது. விவித பாரதியில் பாட்டுக் கேட்டும், நாடகங்களில் டேப் ரெக்கார்டரை வெச்சுக்கிட்டு சவுண்ட் எஃபெக்ட் கொடுத்த அந்தச் சின்ன வயசுக்கான சந்தோஷங்கள் இப்பவும் பிரமிப்பைத் தருது.

மைலாப்பூர் குளத்தில் ஒரு ராட்சத மீன் இனத்தை வளர்க்கவிட்டு அது வளர்ந்து பெரியத் தொல்லையாக உருவெடுத்தது. பெரிய பெரிய அளவுகளில் இருந்த அவை, குளத்தில் விழுந்து இறந்துபோன ஒரு மனிதரை முழுசாக தின்று தீர்த்து விட்டன. மீன்களை விற்றுவிட வேண்டும் என்றபோது கோயில் மீன்களை எடுக்கக்கூடாது எனப் பிரச்னையெல்லாம் கிளம்பியது. காசிமேட்டில் இருந்து படகைக் கொண்டு வந்து அந்த மீன்களை அள்ளிக்கொண்டு போனார்கள்.

காற்றாட நாங்கள் நடந்த நடைபாதைகள் இன்றைக்கு ஆக்கிரமிப்புகளில் சுருங்கிக் கிடக்கின்றன. நான் படிச்ச பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில்தான் தமிழக முன்னாள் முதல்வர் பக்தவச்சலம், சோ என நிறைய வி.ஐ.பி-கள் படிச்சாங்க. இங்கே இருந்த கோகுல பாலசர்மா என்கிற வாத்தியார் ஜிப்பாவுக்குள் பிரம்பை வெச்சு இருப்பார், எடுக்கிறதும் தெரியாது, விளாசுறதும் தெரியாது. அப்படி ஒரு அசுர வேகம்.

இந்தப் பகுதி, பிராமணர்கள் மிகுந்த பகுதினு சொல்லப்படுது, ஆனால், கிழக்குப் பகுதியில் பிராமணர்களும், தெற்குப் பகுதியில் குடிசைவாசிகளும், லஸ் சர்ச் பக்கம் மேல்தட்டு மக்களும் கலந்து இருந்தாங்க. இங்கே இருந்த பிரகதி ஸ்டுடியோவில்தான் பல எவர் கிரீன் படங்கள் எடுக்கப்பட்டன. இங்கே கால்படாத நடிகர்களே இல்லை. அன்றைக்கு, ஹவுசிங் போர்டு குறைந்த வருமானத்தில் வாழும் மக்களுக்காக, வெறும் 20 லட்சத்தில் அப்போதே கட்டியதற்கான அடையாளமாக நினைவு ஸ்தூபி இங்கே எழுந்திருக்கிறது.

மாஞ்சா காத்தாடி போட்டிகளின் பிறப்பிடமே மயிலாப்பூர்தான். இங்கே இருந்துதான் வட சென்னை நோக்கி அது நகர்ந்தது. எங்கே காத்தாடி போட்டி நடந்ததோ அங்கேயே போலீஸ் குவாட்டர்ஸ் வந்தது காமெடியான க்ளைமாக்ஸ். இங்கே இருந்த டென்னிஸ் கிரவுண்டில் இந்தியாவின் பெயரை அன்னைக்கு உயரப் பறக்கவிட்ட ராமநாதன், கிருஷ்ணன் என பல பேர் விளையாடி இருக்காங்க. இந்தப் பகுதியின் ஹோட்டல்கள் தனி ரகம். ராயர் கஃபே இந்தப் பகுதியின் அடையாளம்ன்னு சொல்லலாம். அங்கேதான் நாகேஷ், வி.எஸ்.ராகவன், ஆர்.எஸ்.மனோகரா, சோன்னு பலபேர் காலை சாப்பாடே சாப்பிடுவாங்க. சுகநிவாஸின் தயிர் சேமியாவுக்குப் பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. சாம்பார் நிரம்பி வழியும் சாந்தா பவன் இட்லிக்குப் பல பேர் அடிமையாக இருந்தார்கள்.

சைவமும் வைணவமும் இணைந்து நிற்கிறதோ அப்படினு சொல்கிற அளவுக்குக் கோயில்களை இங்கே பார்க்க முடியும். இங்கே இருக்கும் நந்தலாலா கோயிலில் பெண் குழந்தைகள்தான் இறைவனுக்குப் பூஜையே செய்வார்கள். மாடவீதியின் வடக்கும், மேற்கும் சந்திக்கிற முனையில் எத்தனையோ தேர்தல் கூட்டங்களைக் கேட்டும் பார்த்தும் இருக்கிறோம்.

இன்றைக்கு மைலாப்பூர் மாறிவிட்டது. அன்றைக்கு 21-N பேருந்தில் 10 பைசா கொடுத்துக் கோபுரங்கள், நெரிசல் இல்லாத சாலைகளைப் பார்த்துக்கிட்டே போகும்போது  கட்டடங்கள் இல்லாதததால் தலையை அப்படியே வாரிச்செல்லும் கடல் காற்று எல்லாமும் அந்தப் பேருந்து பயணத்தில் கிட்டினாலும் பள்ளிக்கு நேரமாகிவிடுமே என்கிற பரபரப்பில் அதைக் கவனிக்காமல் பேருந்தை விட்டு இறங்கி ஓடுவோம். மைலாப்பூரும் அப்படி எந்த மாற்றத்திலும் நின்றுவிடாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதன் பயணத்தைப் பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்ய?”

‘குப்பைத்தொட்டி டாட் காம்’.


!

 

‘குப்பைத்தொட்டி டாட் காம்’. (www.kuppathotti.com) குப்பையைக் காசாக்குவது, பொது இடங்களில் குப்பைப் போடுவதைக் குறைப்பது என இந்த இணையதளம் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்கிறார் ஜோசப் ஜெகன். ”சொந்த ஊர் திருநெல்வேலி. அங்கேயே எம்.சி.ஏ. முடித்துவிட்டு சென்னையில் ஒரு எம்.என்.சி-யில் வேலை. என் மனைவி சுஜாதா, கல்லூரியில் எனக்கு ஜூனியர். காதலித்துத் திருமணம் செய்தோம். அவருக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை. இருவரும் புதுமையாக ஏதாவது தொழில் தொடங்கலாம் என்று விரும்பினோம். பல யோசனைகள் செய்தும் எதுவும் பிடிபடவில்லை. ‘ஒண்ணும் சிக்க மாட்டேங்குது. வீட்டுலயே குப்பையைப் போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதுதான்’ என சலிப்புடன் என்னை அறியாமல் சொன்ன ‘குப்பை’ என்ற வார்த்தைதான் இந்த இணையதளம் உருவாகக் காரணம்.

மக்கள் சேகரித்துவைத்துள்ளக் குப்பைக்கு நியாயமான விலைகொடுத்து வாங்கி மறுசுழற்சி செய்யலாம், இதன் மூலம் பொது இடங்களில் குப்பையையும் குறைக்கலாமே என இது டூ-இன்-ஒன் கான்செப்ட். இந்திய அளவில் முதல் 500 பணக்காரர்களில் ஸ்க்ராப் தொழில் செய்யும் ஒரு மனிதரும் இருந்தது எங்களுக்குப் பெரிய ஊக்கமாக இருந்தது. சென்னையில் யார் எல்லாம் அதிகமாகக் குப்பை போடுகிறார்கள் என ஆய்வு செய்தோம். குப்பைக்குக் காசு என விளம்பரப்படுத்தினால் நடுத்தர மக்கள் ஆர்வமாகக் குப்பையைச் சேகரித்து விற்கத் தயாராக இருப்பார்கள் எனப் புரிந்தது. ஆனால், குப்பையை நேரில் கொண்டுவந்து தர அவர்களுக்கு நேரம் இல்லை. அது மட்டும் இல்லாமல் எடையில் ஏமாற்றுவது, சரியான பணம் தராததுதான் குப்பை சேகரித்தலை நல்ல தொழிலாக வளர்க்க வில்லை எனப் புரிந்தது. முகவரி, செல்போன் எண்ணுடன் பல்வேறு தரப்பினர் கொண்ட இணையதளத்தை உருவாக்குவது என முடிவு செய்து தொடங்கப்பட்டதே ‘குப்பைத் தொட்டி டாட் காம்’. இந்தப் பெயர் என் மனைவி சுஜாதாவின் தேர்வு. இப்படி ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பது என முடிவு எடுத்ததும் முதலில் அவர் தன் வேலையை ராஜினாமா செய்தார்.

எங்களை அணுகும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் கண் முன்னே குப்பையை எடைபோட்டு வாங்கி அதற்கு உரிய பணத்தைத் தருவது என்று முடிவு செய்தோம். இந்தத் திட்டத்தை விளக்கி நோட்டீஸ் போட்டு விநியோகித்தோம். அதற்கு நல்ல வரவேற்பு. என் சொந்த டாடா ஏஸ் வண்டியில் நானும் என் நண்பரும் சேர்ந்து ஒவ்வொரு வீடாகப் போய் குப்பை சேகரித்தோம். இந்த நான்கு மாதத்தில் எங்கள் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை ஆறாயிரம். குப்பையை சேகரிக்கும் எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு அடையாள அட்டையும் தந்து இருக்கிறோம். இவர்களின் சேவையில் குறைபாடு இருந்தால் உடனடியாக இணையத்தின் மூலமோ செல் போனிலோ புகார் செய்யலாம். இந்த வசதி எங்கள் மீதான நம்பிக்கையை அதிகமாக்கியது. இப்படி சேகரிக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனத்துக்கு விற்கிறோம். மற்ற ஊர்களில் முகவர்களைவைத்து இதை விரிவுபடுத்தலாம் என்றிருக்கிறோம். எங்கள் துண்டு பிரசுரங்களைப் பார்த்து பி.டி.ஐ. செய்தி நிறுவனம் எடுத்த பேட்டி டெல்லி, மும்பை, கொல்கத்தா நகரப் பத்திரிகைகள் மூலம் எங்களை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்தது. இதனால் பல பெரிய நிறுவனங்கள் எங்களுக்குக் குப்பை தர முன் வந்துள்ளன. நானும் என் வேலையை சமீபத்தில் ராஜினாமா செய்துவிட்டு குப்பைத் தொழிலில் முழு நேரமாகக் களம் இறங்கிவிட்டேன். குப்பையைக்குறைப்பதோடு, அதை ஒரு நிறைவான தொழிலாகவும் மாற்ற முடிந்து இருக்கிறது” என்கிறார் ஜோசப்.

குடிசை முதல் கோப்பை வரை!


 
 

”ஃபேஸ்புக்கில் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தபோது, நான் கொடுத்த ஒரு க்ளிக் என்னுடைய வாழ்க்கை யையே அர்த்தம் உள்ளதாக மாற்றி இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை!” – கலகலவெனப் பேசுகிறார் சென்னை எம்.என்.எம். ஜெயின் கல்லூரியில் மெக்கானிக் கல் இன்ஜினீயரிங் படிக்கும் சாய் ஆதித்யா. வீடு இழந்த, ஏழ்மையான பின்புலம் உள்ள சிறுவர்களுக்குக் கால்பந்து பயிற்சி தரும் ‘ஸ்லம் சாக்கர்’ என்கிற அமைப்பின் சென்னைப் பகுதிக்கான ஆர்வலர். வீடு இழந்தோருக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு வெளிநாடுகளுக்குச் சிறுவர்களை அழைத்துச் செல்லும் குழுவில் பங்குபெற்று, சென்னை திரும்பி உள்ளார்.  

 ”கால்பந்து என்னை மாதிரி இங்கு பல பேருக்கு உயிர். ஆனால், அந்த விளையாட்டின் மூலம் பல குட்டிப் பசங்களின் வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதை நிரூபித்த அமைப்பு தான் ஸ்லம் சாக்கர். இந்த அமைப்புப் பற்றி தனக்கு வந்த ஒரு தகவலை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்திருந்தார் என் பள்ளி சீனியர். ஸ்லம் சாக்கர் நடத்தும் போட்டிகளோடு உலக அளவில் புகழ்பெற்ற ப்ரீமியர் லீக்குகள் தொடர்பில் இருப்பது என் ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

வீடு இழந்தவர்களின் குழந்தைகள், பாலியல் தொழில் செய்பவர்களின் குழந்தைகள், பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய பிள்ளைகள், குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்களின் பிள்ளைகள், மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களின் குழந்தைகள் போன்றோரைக் கண்டறிந்து அவர் களுக்குக் கால்பந்து பயிற்சி தந்து, அவர்களுக்கு வாழ்க்கையின் மீதான பிடிப்பை ஏற்படுத்து வதுதான் இந்த ஸ்லம் சாக்கரின் முக்கியப் பணி. ஆனால், ஒருமுறை வரும் குழந்தைகளைத் தொடர்ந்து பயிற்சிக்கு வர வைப்பதுதான் இதில் உள்ள சவால்.

அந்தக் குழந்தைகளைத் தொடர்ந்து வரவழைக்க ஷூ, டி-ஷர்ட் என அவர்களுக்குப் பரிசளித்து ஊக்கப்படுத்துகிறோம். பயிற்சியை நிறுத்தாமல் எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ள குழந்தைகளுக்கு கிரிக்கெட் பேட், பந்து எனக் குட்டிக் குட்டியான பரிசுகள் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுப்போம். அந்த வகையில் ஸ்லம் சாக்கர் தமிழகம் உட்பட இந்தியாவில் எட்டு மாநிலங்களில் 70 ஆயிரம் குடும்பங்களைச் சென்று சேர்ந்துள்ளது.

இந்தச் சுட்டிகளைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விளையாடவைப்போம். அதில் ஒவ்வொரு பகுதியிலும் நன்றாக விளை யாடும் குழந்தைகளைத் தேர்வுசெய்து  எங்கள் அகாடமிக்கு அழைத்துவந்து பயிற்சி தருவோம். இந்தப் பயிற்சியில் பிரகாசிக்கும் குழந்தைகளில் இருந்து மிகச் சிறப்பாக விளையாடுபவர்களை மட்டும் ‘ஹோம்லெஸ் உலகக் கோப்பை’யில் கலந்துகொள்ளச் செய்வோம். இந்த உலகக் கோப்பைக்காக உலகின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்வோம். தாங்கள் வசிக்கும் நகரம், கிராமத்தைக்கூட தாண்டாத இவர்களை, உலகம் சுற்றவைப்பது இந்த அமைப்பின் சிறப்பு. இதைத் தவிர இவர்களுக்கு ஏகப்பட்ட நல்ல விஷயங்களைச் சொல் லித் தருகிறோம். ‘பெண்களை மதிக்க வேண்டும்’ எனச் சொல்வதோடு நின்று விடாமல், இவர்களின் அணிக்கு ஒரு பெண்ணையே கேப்டனாக்கி அந்த எண்ணத்தை இவர்களின் மனதில் ஆழமாக விதைக்கிறோம்.

இந்தியா 2006-ல் இருந்து இந்த உலகக் கோப்பை போட்டியில் கலந்துகொள்கிறது. பெரும்பாலான பிள்ளைகளுக்கு ஏழ்மையான பின்புலம் என்பதால் இவர்களின் ஆட்டத்தில் கொஞ்சம் முரட்டுத்தனம் இருக்கும். ஆனால், நம் சுட்டிகள் இங்கே ஆடிப் பழகிய பிறகு விளையாடிய 2007 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ‘ஃபேர் ப்ளே விருது’ பெற்றது. எட்டு வகையான பிரிவுகளில் இந்தப் போட்டிகள் நடக்கும். அதில் இந்தியா இந்த முறை ‘கம்யூனிட்டி’  பிரிவுக்கான ஷீல்டை வென்றது சந்தோஷமான விஷயம்!

சென்னையில் வியாசர்பாடி, கூவம் கரை ஓரத்தில் வசிக்கும் குடிசைப் பகுதிப் பிள்ளை களுக்குப் பயிற்சி அளித்துவருகிறோம். தற்போது இங்கு பயிற்சி தருபவர்கள் ஸ்லம் சாக்கரில் ஏற்கெனவே கலந்துகொண்டவர்களே. மாலை வரை படிப்பு, வேலை முடிந்து வந்து நள்ளிரவு வரை  இதற்காக நேரம் செலவிடுகிறோம். ஆனால், இங்கு பயிற்சிக்கு ஒழுங்கான கால்பந்து மைதானங்கள் கிடைப்பது இல்லை; நிதிப் பற்றாக்குறை என சிரமங்கள் பல இருந்தாலும் சென்னையில் அடுத்த மாதம் தனியாக அகாடமி ஒன்றை ஆரம்பித்து அதில் பயிற்சி தர உள்ளோம். இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்குடன் இணைந்து அடுத்த மாதம் குழந்தைகளுக்குப் பயிற்சி முகாம் ஒன்றையும் நடத்த உள்ளோம்!”

 படங்கள்: க.கோ.ஆனந்த்

WALLவாங்கு வாழ்க டிராவிட் !


இன்று: ஜன.11 – ராகுல் டிராவிட் எனும் இணையற்ற ஆட்டக்காரரின் பிறந்த நாள். அவரைப்பற்றிய பதிவுகள் பத்து:

* ஜனவரி பதினொன்று 1973 இல் இந்தோரில் பிறந்த இவரின் முழுப்பெயர் ராகுல் சரத் டிராவிட். அப்பா ஜாம் உருவாக்கும் கம்பெனியில் வேலை பார்த்ததால் செல்லமாக ஜாமி என அழைக்கப்பட்டார். 

* டிராவிட் முதலில் ஆடிக்கொண்டு இருந்த விளையாட்டு ஹாக்கி. அதில் மாநில அணியில் இடம்பிடித்து இருந்தார். அதற்கு பிறகே கிரிக்கெட் மட்டையை முத்தமிட்டார். 

* ஓயாத பயிற்சிதான் ஒரு சொத்து. இளவயதில் ஒரு குறிப்பிட்ட பந்தில் அவுட் ஆனதும் அதே திசையில் ஆயிரம் பந்துகளை அடித்து ப்ராக்டிஸ் செய்தார் அவர். வியர்வை சொட்ட சொட்ட பயிற்சி செய்வது தனக்கு மிகவும் பிடிக்கும் என்பார். 

* இவர் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். முதல் எட்டு போட்டிகளில் மொத்தமாக டிராவிட் அடித்த ரன்கள் 63. எனினும் இங்கிலாந்துடன் கங்குலி அறிமுகமான டெஸ்டில் 95 ரன்கள் அடித்தார்.

* முக்கியமான பல இன்னிங்க்சில் டிராவிடின் ஆட்டம் கவனம் பெறமாலேயே போயிருக்கிறது. அன்வர் 194 அடித்த போட்டியில் டிராவிட் 107 ரன்கள் அடித்தார். 2001 லக்‌ஷ்மன் கொல்கத்தாவில் 281 அடித்த பொழுது இவர் அடித்த 180, பாகிஸ்தான் உடன் தொடரில் சேவாக் 309 அடிக்க, ராவல் பிண்டியில் இவர் அடித்த 270 மறக்கப்பட்டுவிட்டது. 

* ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் மிக அதிக பேட்டிங் ஆவரேஜ் – தோனிக்கு அடுத்தபடியாக இவருக்குத்தான். (73 ஆட்டங்களில் இவர் விக்கெட்டின் பின் இருந்திருக்கிறார்; அந்த ஆட்டங்களில் மொத்தம் 2300 ரன்கள் – சராசரியாக 44.23.) முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான கில்கிரிஸ்ட், சங்ககாராகூட இவருக்குப் பின்தான். இது தவிர இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டிற்கான ஜோடிகள் எடுத்த அதிக ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப்புகள் இவருடையவை.ஒரு நாள் போட்டிகளில் மொத்தம் நான்கு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார் 

* அணியே சொதப்புகிற பொழுதெல்லாம் தடுப்பு சுவர் போல நிற்பார் அடிலேய்ட் மைதானத்தில் 85-4 என இருந்த பொழுது களம் கண்டு 233 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துப்போனார். இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் தொடரில் அணியே ஆடாத பொழுது ஒற்றை ஆளாக 3 சதங்கள் அடித்தார் அவர். 1999 உலகக் கோப்பையில் தொடரின் அதிகபட்ச ரன்கள் (461) அவராலேயே அடிக்கப்பட்டது. மற்றவர்களின் மோசமான ஆட்டத்தால் அணி அரையிறுதிக்கு கூட தகுதிபெறவில்லை. 

* ஒரு தொடரில் அதிகபட்ச சராசரி பெற்ற இந்திய வீரர் டிராவிட்தான். ஜிம்பாப்வே அணியுடனான தொடரில் 432 அவரின் சராசரி. உலகில் எல்லா டெஸ்ட் விளையாடும் நாடுகளுக்கு எதிராகவும் சதம் அடித்திருக்கும் ஒரே வீரர் அவர் தான். டெஸ்டில் அதிகபட்ச கேட்சுகள் அவர் வசமே – 270. அதிகபட்ச பந்துகளை சந்தித்ததும் அவரே – 31,258. அதிக முறை போல்ட் – 55 – மூன்றும் உலக சாதனைகள். 

* மெக்ராத், ஆஸ்திரேலியா அணிக்குள் நேரடியாக தகுதியுள்ள ஒரே அயல்நாட்டு வீரர் என புகழ்ந்துள்ளார். கவுரவம் மிகுந்த “BRADMAN ORATION” நிகழ்த்திய ஒரே அயல்நாட்டு வீரர் டிராவிட். ஸ்டீவ் வாக் சுயசரிதை எழுதிய பொழுது அதற்கு முன்னுரை எழுத கேட்டுகொண்டது டிராவிடைதான். 

* “எப்போதுமே எல்லாவற்றையும் அணிக்கு தரும் வகையில் விளையாடுவதே எனது கிரிக்கெட் அணுகுமுறையாக இருந்துள்ளது. சில நேரங்களில் தோல்வியை சந்தித்திருந்தாலும், ஒருபோதும் முயற்சிக்காமல் இருந்ததில்லை” என ஓய்வு பெற்றபொழுது டிராவிட் சொன்னார். எல்லாரும் படிக்க வேண்டிய பாடம் அது!