காதலில் மிதந்து நனைபவர்கள் ,காதலை சொல்ல முடியாமல் தேக்கி கொண்டவர்கள்,காதலை சொல்லி கடி வாங்கியவர்கள்,காதலி கைக்கூடியும் காதல் கைக்கூடாமல் போன கதையின் நாயகர்கள்,காதலை கொலைவெறியோடு எதிர்ப்பவர்கள் என பூமியின் சகல நபர்களுக்கும் காதலோடு ஒரு தொடர்பு இருந்துகொண்டே இருக்கிறது.எத்தனை சினிமா எடுத்து பழதாக்க பார்த்தாலும் காதல் புதிதாகத்தான் இருக்கிறது ;இன்னமும் சொல்வதென்றால் புதிராகவும் தான் .
எங்க ஊரில் ஏன் எல்லா ஊரிலும் ஒரு பழமொழி சொல்வார்கள் -களவும் கற்றுமற .அது திருடுவதை குறிக்கிறது அப்படின்னு யாரவது சொன்னால் நம்பாதீர்கள் .காதலை ஊருக்கு தெரியாமல் ஒரு த்ரில்லோடு பண்ண வேண்டும் என நம்மவர்கள் சொல்லித்தந்து போன ரகசியம் அது .யோசித்து பாருங்களேன் – சொல்லாத சொல்லாத உங்கள் மனசுக்கு நெருக்கமான எத்தனை உணர்வுகளை காதல் பதிந்து விட்டு போயிருக்கிறது ? நம்மை சத்தமே இல்லாமல் ஆக்கிரமித்துக்கொள்ளும் அதன் அடாவடிக்கு அவ்வளவு ஆனந்தமாக ஒப்புதல் தருகிறோம் நாம் ?
உலகின் எத்தனையோ உன்னதங்களை காதல் தான் தந்திருக்கிறது ;காரல் மார்க்ஸ் எனும் எளிய ஏழை மீது எல்லையில்லா காதல் கொண்ட அரசகுல மாது ஜென்னி பால் வாங்க காசில்லாத தருணத்தில் கூட சுருட்டு வாங்கித்தந்து அவரை காப்பாற்றியதன் முடிவான விளைவே மலதனம் .அரசன் பதவி துறந்து எளிய மனிதனாக நடைபோட்ட கதை காதல் தந்தது தான் . எட்டாம் எட்வர்ட் அந்த மன்னர் .கொஞ்சம் நிதானித்து பார்த்தால் ஏதோ ஒரு மாற்றத்தை காதல் பதித்துவிட்டு போயிருக்கிறது .எத்தனை பேர் அவரின் காதலின் நினைவுகளை ரகசியமாக தேக்கி வைத்து அவஸ்தைப்படுகிறார்கள் .எங்கோ ஒரு தருணத்தில் மீண்டும் காதலித்த பொழுதுகள் எட்டிப்பார்க்கிற பொழுது வெயில் பெய்த வெப்பமழையில் நனைந்த இளவயது பொழுதை போல சொல்ல முடியாத ஒரு உணர்வில் நனைந்து துவட்ட மனமில்லாமல் அப்படியே கிடக்க நினைக்கிற பொழுது நிஜம் கொஞ்சம் பின்னந்தலையில் படார் என்று அடிக்கிறது
காதல் என்பது ஒரு முறை என்பதும்.ஒரே ஒருவரிடம் என்பதும் இன்றைக்கு அவுட் டேட்டட் என பலர் கருதுகிறார்கள் .ஒரு காதலுக்கு ஒரு சமயத்தில் உண்மையாக இருத்தல் தான் உன்னதம் .காதல் கைகூடா விட்டால் ,கூடிய வாழ்க்கையில் ஜாலியாக கரம் கோர்த்து பரவசமடைய தயாராகும் பாக்கியவான்களே நிஜ காதலர்கள் .உருகி துன்பத்தில் அப்படியே புரண்டு எழுந்தால் அழகாக காதல் மீண்டும் வந்து உங்கள் அழுத நெஞ்சில் வந்து உட்கார்ந்து கொள்ளுமா ?நிதர்சனங்களை சந்திக்க திராணி உள்ளவர்களே காதலிக்க உகந்தவர்கள் .
ஓஷோவிடம் கடவுள் எங்கிருக்கிறார் என கேட்டார்கள் ,”வாழ்க்கை எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறதோ அங்கெல்லாம் கடவுள் நிறைந்து இருக்கிறார் !”என்றார் .எந்த போலித்தனமும் இல்லாமல் காதல் தான் தன் பொழுதுகளை கொண்டாடுகிறது .கெட்டித்து போன நெஞ்சங்கள் என நாம் நினைக்கும் யாவருக்குள்ளும் மென்மையான காதல் சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறது ;,”இவர்கள் இப்படித்தான் !”என பிம்பங்கள் குத்தி குத்தி எத்தனை காதல்களை தொண்டைக்குழிக்குள் சூழல் கத்தி சொருகி கொல்கிறது சுற்றுப்புறம் என எண்ணுகிற பொழுது இந்த படுகொலைகளுக்கு ஏன் இபிகோ இல்லை என்றே மனசு படபடக்கிறது .
வேகமாக ரேசர் பைக்கில் போகும் இடத்தில இருந்து நடை பாதையில் கரம் கோர்த்து சுற்றும் இடங்களில் எல்லாமும் காதல் விரவிக்கிடக்கிறது .கொஞ்சம் நில்லுங்க ;காதல் கல்யாணத்துக்கு முன் ஏன் சுகமாக இருக்கிறது ?மற்றவரின் கருத்தை எண்ணவோட்டத்தை மதித்து விட்டுக்கொடுக்கிற ஒரு விஷயம் காதலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது .அடைந்த பின்பு அதனருமை அவ்வளவே என ஏன் ஆகிப்போகிறோம் நாம் ?கச்சிதமான காதலராக இருப்பதற்கு வயது தடையே இல்லை .மனசு தான் காரணம் .ஏன் சினிமாக்கள் எண்பது வயதில் ரோஜாப்பூ தரும் அழகான பெரியோர் காதலை காட்டுவதில்லை .சண்டைகளால் நிரம்பியது வாழ்க்கை என்கிற மனோபாவம் ஏன் நமக்குள் விளைந்தது ?கனமாகத்தான் இருக்கிறது -நிச்சயம் காதல் அப்படி செய்ய சொல்லித்தரவில்லை .நமக்குள் தான் கோளாறு .
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும்,சாலை ஓரத்திலும் காதலின் அடையாளங்களை கடந்து செல்கிறோம் .நம்மில் இருந்த காதலை தொலைத்து விட்டோம் என என்றைக்காவது பதறி இருக்கிறீர்களா ?பதறுங்கள் பாஸ் .காதலிப்பது உடம்புக்கு ரொம்ப நல்லது .காதலை ப்ரியம் என்றும் சொல்லலாம் .பிரியங்களை எதோ சேட்டிடம் அடமானம் வைத்து விட்டோமில்லையா நாமெல்லாம் ?காதலர் தினத்தன்று குறுஞ்செய்தி அனுப்பும் நீங்கள் என்றைக்காவது கடிதத்தில் காதலை கொட்டி இருக்கிறீர்களா ?கொட்டி பாருங்கள் -அற்புதமாக இருக்கும் .மகாகவி பைரன் எம்மாவுக்குபோஸ்ட் செய்யாமலே விட்ட கடிதங்களுக்கும் நீங்கள் சொல்ல நினைத்ததை எழுதாத கடிதத்துக்கும் என்ன வித்தியாசம் ?உங்கள் மனைவியை /கணவரை மனசார காதலியுங்கள் ;இருப்பதை,நினைப்பதை சொல்லுங்கள்.
பேனாவை எடுங்கள் ;முதல் சந்திப்பை பற்றி நினைவு கூறுங்கள் -எவ்வளவு காயப்படுத்தி இருக்கிறேன் என உருகுங்கள் .எல்லா தவறும் உங்கள் மேலேயே என பழி போட்டுக்கொள்ள முடியமென்றால் செய்யுங்கள் ,கொஞ்சமாக அன்பை,கண்ணீரை,முத்தத்தை,அற்புதமான ஊடல்களை பேனா மையில் கரைத்து கொட்டுங்கள் .அடடா இதைவிட உயர்ந்த பரிசு வேறென்ன இருக்க முடியும் உங்கள் பிரியமான உறவுக்கு ?
காதலின் காலடிகள் பதித்து விட்டுப்போன தடத்தில் நடக்கும் குழந்தைகள் தான் எல்லாரும் ;வாழ்க்கையின் வேக ஓட்டத்தில் குழந்தைமையை தொலைத்து எதிலோ நிலைத்து நின்று விடுகிறோம் .காதல் .காற்றில் ஒலிக்கும் எதோ ஒரு பழைய பாடல் கரைவது போல துன்பியலான உணர்வுகளை கரைய விடுங்கள் ;ஜிலீர் என்று காதலை மீண்டும் வரவேற்கலாம் .எந்த வயசிலும் உங்களுக்கானவரை காதலிக்கலாம் .நெருடாவின் கவிதை ஒன்றோடு முடித்தால் உசிதம் என விண்ணப்பம் போடுகிறது காதல் :
நிழலுக்கும் ஆன்மாவுக்கும்
இடையே ரகசியமாக உன்னை
இருட்டின் சங்கதிகளை
விரும்புதல் போல உன்னை காதலிக்கிறேன்
பூவாத மலரை நேசிப்பதை போல
உன் மீது ப்ரியம் கொள்கிறேன்
மலராத மலரின் கசியாத வெளிச்சமாகிய உன் பிரியத்தை சேமிக்கிறேன்
சிக்கல்களோ பெருமையோ இல்லாமல் உன்னை காதலிக்கிறேன்
உன்னையன்றி வேறெதையும் எனக்கு காதலிக்க வழி புலப்படவில்லை
என் இதயத்தின் மீது நீ வைக்கும் உன் கரமே என் கரம்
நீ கண்மூடினால் நான் யாவையும் மறந்து சொக்கிப்போவேன்