புதை(த் )தல் சுலபம் இத்தேசத்தில்


மூடுவது என்பது அத்தனை எளிதான 
செயல் இல்லை 
பொய்களின் வாயில்களை உண்மையால் 
பூசிவிட எப்பொழுதும் முடியாது 
நட்பின் அழுகைகளை 
காதலின் சிரிப்புகள்
தூர்த்துவிடுதல் அரிது 
கேள்விகளின் பூச்சரத்தை 
குருட்டு நம்பிக்கைகளின் 
கத்திக்கரங்கள் கத்தரித்தல் 
எப்பொழுதும் நிகழாது 
மனதளவில் விழுந்த இடைவெளிகளை 
இடித்து நெருக்குதல் சேர்ப்பது 
இட்டு நிறைப்பது 
அல்ல 
பெயர்களை மாற்றி 
ஆபரணங்கள் சூடினாலும் 
சாத்தான்கள் வெறுப்பை பிரசவிப்பதை 
நிறுத்துதல் நிராசை 
கருப்பு திரைகளை வெள்ளை வெளிச்சம் என 
சிரிக்கும் பெருமனிதர்களை 
நீங்கள் விரும்பினாலும் 
நிராகரிக்க முடியாது 
நீங்கள் இதையெல்லாம் சாட வேண்டாம் 
திறந்து கிடைக்கும் சாக்கடைகளை 
குழிகளை மூடலாம் என கேட்கவே கூடாது 
இருப்பதால் தானே அவர்களை நினைக்கிறோம் ?
கொஞ்சம் ,நம்பிக்கைகளை 
சாக்கடையில் ஓடும் நீர் போல கழித்து விடலாம் 
மிச்சம் பிள்ளைகளை குழியில் அமிழும் 
காற்று போல புதைத்து விடலாம் 
மூடுவதை விட புதை(த் )தல்
சுலபம் பாருங்கள் இத்தேசத்தில்

தொலைத்துவிட்டேன்


உடைந்து விழுகிறது பூத்தொட்டி 
சேர்ந்து கொள்கிறது சிறுவனின் சிரிப்பொலி 
மடிந்து உதிர்கிறது 
பூனையின் ஒற்றை மீசை 
தாள்களில் ஒட்டிக்கொள்கிறது 
அழுகையின் சுவடுகள் 
சாக்கடைகளில் ஊர்ந்து போகிறது 
ஒற்றை நொடி மணல் ஒட்டிய கண்முத்தம் 
புகைப்படம் போல உறைந்து நிற்கிறாள் அம்மா 
எப்படிச்சொல்வேன்,பெருநகர பாதைகளில் இவற்றை 
தொலைத்துவிட்டேன் என்று !

சிரித்து கூத்தாடுகிறது ஆண்களின் உலகம்


அறுந்து விழும் மணிகளை பொறுக்க
குனியும் பசிபொதிந்த கண்கள் கொண்ட
சிறுமிக்கு மைபூசும்
மலடி என சொல்லப்பட்ட அம்மாவின் கரங்கள்

தாலாட்ட எண்ணி மவுனத்தை கீதமாக்கி
மடியில் கிடத்தி பொம்மைக்கு
சோறூட்டும் சிறுமியின்
கன்னங்களை நிறைக்கும்
மதுவுலக அப்பாவின் கரங்கள்

புணர்தலின் பொழுதிலும்
செல்லமகள் தூங்கினாளா என
கண்ணீர் வழிய மருகும்
உடல்விற்க தள்ளப்பட்ட
அம்மையின்
நினைவு

காசுகள் சத்தமிட
கவள உணவு தூரத்தில் சிரித்திட
உதாசீனம் செய்த உற்றார்கள்
நலமா என புழுங்கும் பாட்டி

காரைத்துடைத்து
காசு கேட்காமல்
கடந்து போகும் தெருவோர
தேவதை

அழுந்த திட்டவும்
கவிந்து கொட்டவும்
அழுது விடவும்
திராணி இன்றி
பார்க்கும் திருமண வயது அக்கா

ஒவ்வொரு முறை நினைக்கிற பொழுதே
ஈரம் நனைக்கிறது என்னை
நூற்றாண்டுகால ரத்தச்சுவடு தேக்கி
எந்த கவலையும் இல்லாமல்
சிரித்து கூத்தாடுகிறது ஆண்களின் உலகம்

ஓவியம் நன்றி :திரு.இளையராஜா


பறவையாக பூனையாக

பொம்மையாக யாதுமாக

மாறிப்பேசி ஆசைப்படும்

அம்முவுக்கு

மருத்துவர்,இன்ஜினியர்

என அப்பா அம்மா மொழிபேசு வன்முறைகள்

ஊமையாகிறது மழலை சாரல்

பால்யத்தின்

ஒழிப்பு

திணிப்புக்கு வராதா

போராட்டங்கள் 😦Image


*
போராடுகிறவர்களை ஏசு

போராட்ட வரலாறு தெரியுமா என கடு கடு ஆசிரியன் போல

கேள்வி கேள்

அவர்களின் பூர்வகதையை புலனாய்வு செய்

எங்காவது வன்முறை வெடிக்காதா என நகங்கடி

வேலையில்லாதவர்கள் என சத்தமிடு

மூளை குழம்பியவர்கள் என எழுது

சமூகமே மோசம் என கொந்தளி

இதுவரை எங்கே போயிருந்தீர்கள் என கொக்கரி

போராட்டம் ,சித்தாந்தம்,எழுச்சி துறந்தும்

போராளி ஆகிவிட்டாய் நீ

முடிந்தது காபியை சுவைத்து உறங்கப்போ !
the_facebook_revolution_by_rizkallah-d3ale98

எனக்கு ஒரு கனவு இருக்கிறது – மார்ட்டின் லூதர் கிங் உரை


இன்று – ஏப்.4: மார்ட்டின் லூதர் கிங் நினைவு தினம். இதையொட்டி, அவரது எழுச்சிமிகு I Have A Dream உரை – தமிழில்…

”நம் நாட்டின் வரலாற்றில் ம…ாபெரும் விடுதலைப் போராட்டமாக இடம்பெறப்போகும் நிகழ்வொன்றில் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி. நூறு ஆண்டுகளுக்கு முன், இங்கு யாரின் (லிங்கனின்) நிழலில் இன்று நாம் நிற்கிறோமோ, அந்த உன்னத அமெரிக்கர், விடுவிப்புப் பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.

ந…ம்பிக்கையின் பேரொளியாய் அநீதியின் தீயில் வெந்துகொண்டிருந்த நம் சகோதரர்களுக்கு அப்பிரகடனம் அமைந்தது. அடிமைத்தனத்தின் நீண்ட இரவிற்கு மகிழ்ச்சியூட்டும் விடியலாக அது வந்தது.

ஆனால், நூற்றாண்டு ஒன்று ஆன பின்னும் நாம் விடுதலை அடையவில்லை. நீக்ரோவின் வாழ்க்கை கவலைதரும் விதத்தில் ஒதுக்கலின் விலங்காலும், பாரபட்சத்தின் சங்கிலியாலும் முடமாகிக்கிடக்கிறது. நூறு வருடங்களுக்குப் பின்னும் நீக்ரோ வளமைக் கடலின் நடுவே ஏழ்மைத் தீவில் வாழ்கிறான். நூறு வருடங்களுக்குப் பின்னும் அமெரிக்கச் சமூகத்தின் மூலைகளில் மனச்சோர்வுடன் கிடக்கிறான், தன் சொந்த மண்ணிலேயே அகதியாக வாழ்கிறான். இந்த அவலநிலையை உலகுக்கு எடுத்துக்காட்ட நாம் இங்கு கூடியுள்ளோம்.

நாம் நம் தலைநகருக்குக் காசோலை ஒன்றை மாற்றிச் செல்ல வந்துள்ளோம். நம் குடியரசின் சிற்பிகள் உன்னத வார்த்தைகளால் அரசியல் சானத்தையும் விடுதலைப் பிரகடனத்தையும் எழுதுகையில் நமக்கொரு காசோலையில் கையெழுத்திட்டுத் தந்தார்கள், அந்தக் காசோலைக்கு எல்லா அமெரிக்கனும் வாரிசுகள். அது எல்லா மனிதருக்கும் -கறுப்பினதவருக்கும், வெள்ளையருக்கும் உயிர்வாழவும், விடுதலைக்கும் மகிழ்ச்சியைத் தேடிப்பெறவும் ஆன “பிரிக்கவியலாத உரிமையை” வாக்களிக்கிறது. அமெரிக்கா கறுப்பினத்தவருக்கு மட்டும் அந்தக் காசோலையை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டது இப்போது தெளிவாகிறது. இந்தப் புனிதக் கடமைக்கு மதிப்பளிக்காமல் அமெரிக்கா நீக்ரோ கறுப்பினத்தவருக்கு காசோலையை வழங்கியுள்ளது, அந்தக் காசோலை “போதுமான பணம் இல்லை” எனத் திரும்பி வந்துள்ளது.

ஆனால், நாம் சமூகநீதியின் வங்கி திவாலாகிவிட்டது என்பதை நம்பமாட்டோம். இந்த நாட்டின் வாய்ப்புக்கருவூலங்களில் போதிய பணமில்லை என்பதை நம்பமாட்டோம். அதனால் இங்கே விடுதலையின் செல்வங்களையும், நீதியின் பாதுகாப்பையும் நமக்களிக்கும் காசோலையை காசாக மாற்றிக்கொள்ள வந்துள்ளோம்.

‘இப்போதே’ என்பதன் அவசியத்தை உணர்த்தவும் நாம் இந்தப் புனித இடத்தில் கூடியுள்ளோம். இது வசதியாகத் தணிந்து செல்லவும் , படிப்படியாக செயலாற்றவும், போதைப்பொருளின் மயக்கத்தில் கிடக்கவுமான நேரமல்ல. ஜனநாயகத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலம் இது. பிரிவினையின் இருண்டத் தூரப்பள்ளத்தாக்கிலிருந்து எழுந்து சூரிய ஒளி பரவும் சமநீதியின் பாதைக்கு வரவேண்டிய காலம் இது. இன அநீதி எனும் புதை குழியிலிருந்து நம் நாட்டைத் தூக்கிச் சகோதரத்துவம் எனும் உறுதியான பாறையின் மேல் வைக்க வேண்டிய தருணம் இது. கடவுளின் மக்கள் அனைவருக்கும் நீதியை நிஜமாக்கும் காலமிது.

இந்தத் தருணத்தின் முக்கியத்தைக் கவனிக்காமல் விடுவது இந்த நாட்டிற்கு ஆபத்தானதாக முடியும். தகிக்கும் கோடையாயிருக்கும் நீக்ரோவின் இந்த மனக்குறை விடுதலை, சமத்துவம் எனும் உயிரூட்டும் வசந்தங்கள் வந்தாலன்றி மறையாது. 1963 ஒரு முடிவல்ல துவக்கம். நீக்ரோக்கள் கொஞ்சம் கோபத்தைக் காண்பிப்பார்கள் பின்னர் அடங்கிவிடுவார்கள் என நினைத்து வழக்கம்போலப் பணிகளை மேற்கொள்பவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. நீக்ரோவுக்கு குடிமகனின் உரிமைககள் வழங்கப்படும்வரை இங்கே ஓய்வும் அமைதியும்
இருக்காது. புரட்சியின் எழுச்சிமிகுந்த சூறாவளிகள் இந்த நாட்டின் அஸ்திவாரங்களை நீதி ஒளிரும் நாள் வரும்வரை அசைத்துக்கொண்டிருக்கும்.

ஆனால், நீதியின் அரண்மனைக்குள் இட்டுச் செல்லும் இதமான பாதைகளில் நிற்கும் என் மக்களுக்கு நான் ஒன்று சொல்லியாக வேண்டும்: நமக்குச் சொந்தமான இடத்தை நாம் பெறும் வழியில் பிழையான செயல்களைச் செய்த குற்றத்திற்கு ஆளாகக்கூடாது. விடுதலைக்கான நம் தாகத்தை கசப்பு மற்றும் வெறுப்பின் கோப்பைகளிலிருந்து பருகித்தணித்துக்கொள்ளத் துடிக்க வேண்டாம். எப்போதும் நாம் கண்ணியம், கட்டுப்பாட்டின் உயர்தளங்களிலிருந்தே நம் போராட்டத்தை நடத்தவேண்டும். நம் போராட்டத்தை வன்முறைத் தாக்குதலாகக் கீழிறக்க அனுமதிக்கக் கூடாது. மீண்டும் மீண்டும் நாம் உடல் ரீதியான (வன்முறை) சக்திகளை ஆத்மரீதியாக எதிர்கொள்ளும் உன்னத உயரங்களை நோக்கி எழ வேண்டும்.

நாம் தனித்து நடக்க இயலாது.

நாம் நடந்துகொண்டிருகையில் எப்போதும் முன்நோக்கி நடக்க உறுதிகொள்ளவோம்.

நாம் திரும்பிச் செல்ல இயலாது.

சமூக உரிமை காதலர்களிடம் “எப்போதுதான் நீ திருப்தியடைவாய்?” எனக் கேட்பவர்கள் உண்டு. காவல்துறையின் சொல்லொண்ண அடக்குமுறைக்கு சக சகோதரன் பலியாகிக்கொண்டிருக்கும்வரை நாம் திருப்தியடைய முடியாது. பயணத்தில் சோர்வடைந்த நம் உடல்கள் நெடுஞ்சாலைகள் அருகிருக்கும் விடுதிகளிலும் நகரங்களுக்குள்ளிருக்கும் விடுதிகளிலும் ஓய்வைப் பெற இயலாதவரைக்கும் நாம் திருப்தியடைய முடியாது. நீக்ரோவின் அடிப்படை இடப்பெயர்வு சிறிய சேரியிலிருந்து பெரிய சேரிக்குத்தான் என இருக்கும் வரையில் நம்மால் திருப்தியடைய முடியாது. “வெள்ளையர்களுக்கு மட்டும்” எனும் அறிவிப்புப் பலகை ஒன்று நம் குழந்தைகளின் சுய மரியாதையையும் கண்ணியத்தையும் தகர்த்தெறிந்து கொண்டிருக்கும்வரைக்கும் நம்மால் திருப்தியடைய முடியாது.

மிஸிஸிப்பியிலிருக்கும் நீக்ரோ வாக்களிக்க இயலாமல் இருக்கும்வரையில், நியூயார்க்கில் இருக்கும் நீக்ரோ வாக்களிப்பதால் எந்த நன்மையுமில்லை எனக் கருதும்படி இருக்கும்வரையில் நாம் திருப்தியடையப்போவதில்லை. இல்லை. இல்லை நாம் திருப்தியடையவில்லை. சமநீதி பெருநீரை போலவும், அறம் மாபெரும் ஓடைபோலவும் வீழ்ந்தோடும்வரைக்கும் நாம் திருப்தியடையப்போவதில்லை.

உங்களில் பலரும் பல போராட்டங்களுக்கு மத்தியில் இங்கு வந்திருப்பதை நான் கவனியாமலில்லை. உங்களில் சிலர் குறுகிய சிறைச்சாலைகளிலிருந்து இப்போதுதான் வந்துள்ளீர்கள். மேலும் சிலர் விடுதலைக்கானத் தேடல், அடக்குமுறைப் புயலிலும் காவல்துறையின் வன்கொடுமைக் காற்றிலும் அலைக்கழிக்கப்படும் இடங்களிலிருந்து வந்துள்ளீர்கள். இதயம் நோகும் துயரத்தின் அனுபவம் மிக்க வீரர்கள் நீங்கள். உரியதல்லாதத் துயரம் விடுதலைதரவல்லது (unearned suffering is redemptive) எனும் நம்பிக்கையில் தொடர்ந்து முயலுங்கள். மிஸிஸிப்பிக்குத் திரும்பிச் செல்லுங்கள், அலபாமாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள், சவுத் காரலைனாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள், ஜியார்ஜியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள், லூசியானாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள் வடக்கு நகரங்களிலுள்ள சேரிகளுக்கும் குடிசைகளுக்கும் திரும்பிச் செல்லுங்கள் எப்படியேனும் இந்த நிலை மாற்றப்படும், மாறிவிடும் எனும் நம்பிக்கையுடன் திரும்பிச் செல்லுங்கள்.

இன்று உங்களுக்கு தீர்க்கமாகச் சொல்கிறேன் நண்பர்களே, நம்பிக்கையின்மையின் பள்ளத்தாக்கில் நாம் சேற்றில் உழலவேண்டாம். மேலும் இன்றைய, நாளைய சவால்களை நாம் எதிர்கொண்டிருக்கும்போதேகூட, எனக்கு ஒரு கனவிருக்கிறது. அமெரிக்காவின் கனவில் ஆழ்ந்து வேரிட்டக் கனவு அது.

ஒரு நாள் இந்த நாடு “எல்லா மனிதனும் சமமாகப் படைக்கப்பட்டான்” எனும் உண்மைகள் தன்னுள் நிரூபணமானவை எனும் அதன் கோட்பாட்டிற்கேற்ப எழுச்சி பெறும் எனும் கனவு எனக்குண்டு.

ஒரு நாள் ஜியார்ஜியாவின் சிவந்தக் குன்றுகளின் மேல் முன்னாள் அடிமைகளின் மகன்களும் முன்னாள் அடிமைகளின் முதலாளிகளின் மகன்களும் சகோதரத்துவத்தின் மேசையில் ஒன்றாய் அமர்ந்து உணவருந்துவார்கள் எனும் கனவு எனக்குண்டு.

ஒரு நாள் அநீதியின், அடக்குமுறையின் அதிவெப்பத்தில் உழலும் மிஸிஸிப்பி மகாணம்கூட விடுதலையின், சமநீதியின் பாலைவனச் சோலையாக மாறும் எனும் கனவு எனக்குண்டு.

என் நான்கு குழந்தைகளும் ஒரு நாள் அவர்களின் தோலின் நிறத்தைப் கொண்டு அளவிடப்படாமல், அவர்களின் நடத்தையின் பேரில் மதிப்பிடப்படுவார்கள் எனும் கனவு எனக்குண்டு.

இன்று எனக்கொரு கனவுண்டு!

ஒரு நாள் தெற்கே கொடுமையான இனவெறியர்களுள்ள அலபாமாவில், கறுப்புச் சிறுவர்களும் கறுப்புச் சிறுமிகளும் வெள்ளை சிறுவர்களும் சிறுமிகளும் சகோதர சகோதரிகளாகக் கைகோர்த்து குதூகலிக்க இயலும் எனும் கனவு எனக்குண்டு.

இன்று எனக்கொரு கனவுண்டு!

ஒரு நாள் எல்லா பள்ளத்தாக்குகளும் உயர்த்தப்படும், எல்லாக் குன்றுகளும் மலைகளும் தாழ்த்தப்படும், கரடுமுரடான நிலங்கள் சமனாகும்; வளைந்திருக்கும் பாதைகள் நேர்படுத்தப்படும் கடவுளின் மகிமை வெளிப்படும் எல்லா உயிர்களும் அதை ஒன்றாய்க்காணும்.

இதுதான் நமது நம்பிக்கை. நான் இந்த நம்பிக்கையுடனேயே தெற்கு நோக்கிச் செல்கிறேன்.

மலையெனத் தெரியும் அவநம்பிக்கையிலிருந்து நம்பிக்கை எனும் சிறு கல்லைக் கடைந்தெடுக்க இயலும். இந்த நம்பிக்கையுடன் இரைச்சலிடும் சத்தங்களைச் சகோதரத்துவமெனும் அழகிய பண்ணாக மாற்ற முடியும். இந்த நம்பிக்கையுடன் நம்மால் ஒருங்கிணைந்து வேலை செய்ய இயலும், பிரார்த்திக்க இயலும், சேர்ந்து போராட இயலும், சிறை செல்ல இயலும் விடுதலைக்காக நிமிர்ந்து நிற்க முடியும், ஒரு நாள் நாம் விடுதலை பெறுவோம் எனும் அறிதலுடன்.

இந்த நாள்… இந்த நாளே கடவுளின் பிள்ளைகள் அனைவரும் புதிய அர்த்தத்துடன் பாட இயலும்…

‘என் நாடே உன்னை, இனிய விடுதலையின் பூமியே, உன்னைக் குறித்து பாடுகிறேன்.

என் முன்னோர் உயிர் நீத்த பூமியே, புனிதப் பிரயாணிகளின் பெருமைக்குரிய பூமியே,

எல்லா மலைகளிலிருந்தும் விடுதலை முழங்கட்டும்.

அமெரிக்கா உன்னத நாடாக வேண்டுமென்றால், இது உண்மையாக வேண்டும்.

எனவே நியூ ஹேம்ஷைரின் பருத்த மலைகளின் உச்சியிலிருந்து விடுதலை முழங்கட்டும்.

நியூயார்க்கின் பெரும் மலைகளிலிருந்து விடுதலை முழங்கட்டும்.

பென்சுல்வேனியாவின் உயர்ந்த அலெகெனீசிலிருந்து விடுதலை முழங்கட்டும்.

பனி மூடிய கொலொரடாவின் ராக்கியிலிருந்து விடுதலை முழங்கட்டும்.

கலிபோர்னியாவின் வளைந்து நெளிந்த சரிவுகளிலிருந்து விடுதலை முழங்கட்டும்.

அது மட்டுமல்ல…

ஜியார்ஜியாவின் கன்மலைகளிலிருந்தும்,

டென்னிசியின் லுக்அவுட் மலையிலிருந்தும்,

மிஸிஸிப்பியின் ஒவ்வொரு குன்றிலிருந்தும், மேட்டிலிருந்தும் விடுதலை முழங்கட்டும்.

ஒவ்வொடு மலைவெளியிலிருந்தும் விடுதலை முழங்கட்டும்.

இது நடக்கும்போது, நாம் விடுதலை முழங்க வகை செய்யும்போது, ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் சிற்றூரிலிருந்தும் விடுதலையை முழங்கச் செய்யும்போது, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் நகரத்திலிருந்தும் விடுதலையை முழங்கச் செய்யும்போது, கடவுளின் மக்கள் எல்லோரும், கறுப்பரும் வெள்ளையரும், யூதரும் பிற இனத்தவரும், ப்ராட்டஸ்டாண்டும் கத்தோலிக்கரும் ஒன்றாய் கைகோர்த்து நீக்ரோவின் ஆன்மீக வரிகளைப் பாடும் நாளை விரைவில் அடையக் கூடும்.

விடுதலையடைந்தோம் ஒருவழியாய்!
விடுதலையடைந்தோம் ஒருவழியாய்!

எல்லாம் வல்லக் கடவுளுக்கு நன்றி! விடுதலையடைந்தோம் ஒருவழியாய்!”