விலை போகுதல்


விலை போகுதல்

உண்மை என் கரங்களில் இருக்கிறது
பொய் என் கிரீடத்தை ஆக்கிரமித்து இருக்கிறது
புன்னகை பல்லில் இருந்து நழுவதற்கு முன்னமே
வன்மம் பாய்ந்து போர் செய்கிறது
காணாத கடவுளுக்கு கீதங்கள் பாடுமுன்னே
சாத்தானின் கச்சேரி களை கட்டிவிடுகிறது
உயிரை காத்த உத்தமர் என பல்லவி பாடுவதற்குள்
ரத்தம் குடித்த பெருங்கதைகள் உலகை உலுக்குகின்றன
ஜெயித்தேன் என்று சொல்லிவிடத்தான் ஒவ்வொருவரும்
ஆசைப்படுகிறார்கள்
ஆனால்,ஒவ்வொரு முறை ஜெயித்தேன் என்கிற பொழுதும்
தோற்றேன் என்று தான் கேட்கிறது காதுகளுக்கு !
விலை போகுதல் உலக வழக்கா என்ன ?

கூடடைந்த பறவைகளின்இறுதிக்கணங்களை காலக்குடுவையின்மணல்கள் உதிர்த்து எறிகின்றன நெருக்கியடித்த உணவுச்சாலைகள்,எலிப்பொறி விடுதிகளின் ஏகாந்த பொழுதுகள் அரைகுறை


கூடடைந்த பறவைகளின்
இறுதிக்கணங்களை காலக்குடுவையின்
மணல்கள் உதிர்த்து 
எறிகின்றன 

நெருக்கியடித்த உணவுச்சாலைகள்,
எலிப்பொறி விடுதிகளின் ஏகாந்த பொழுதுகள் 
அரைகுறை தூக்கத்தின் அற்புதக்கணங்கள் 
பட்டாம்பூச்சியின் பிய்ந்த சிறகின் 
வண்ணம் போல மனவிரலில் மெத்தாக 
ஒட்டி வெளுக்கலாம் 

சட்டை மாறுதலும்,அசட்டைப்பொழுதுகளும் 
இலையோடு உதிர்ந்து வெயிலில் 
உடையும் நொடி கோழியின் இறுதி ஓட்டம் 
போல முடிந்து விட்டது 

கார் துரத்தும் நாய் போல 
கல்லூரி கடைசிவாசல் வரை 
அழைத்துப்போய் விடுவார்கள் நட்பு தேவர்கள் 

கார்டை கேட்கும் டீன்
ப்ராக்சி போடும் நண்பன் 
கவிதை மொழிபேசும் யுவதிகள் 
தூங்கும் பிள்ளையின் தலை தாங்கிய தலைமுறை இருக்கைகள் 
கடலளவு காதலர்கள் கண்டாலும் 
வெட்கப்படாமல் நிற்கும் கம்பீர கேலரி 
ஒருநாள் யாவும் விட்டுப்போகும் என்று 
சிவப்பு வண்ணம் பூசி 
பேசினார்களோ ?

தீராத கணமொன்றும் 
அழியாத வாழ்வொன்றும் 
தடுக்காத நடையொன்றும் 
அகலாத நினைவொன்றும்
பிரியாதப்பிணைப்பொன்றும் 
கல்லூரி வாழ்க்கையாகி விடக்கூடாதா

 

பேரழகிகள் நிரம்பிய உலகில் குதிப்பது எளிதல்ல அவர்கள் சில சமயம் அழுவார்கள் சொல்லாத சொற்களில்


பேரழகிகள் நிரம்பிய உலகில் 
குதிப்பது எளிதல்ல 

அவர்கள் சில சமயம் அழுவார்கள் 
சொல்லாத சொற்களில் வாழ்வின் கதைகளை 
பாடம் பண்ணிக்குமைவார்கள் 

வாளேந்தி வருபவர்களை 
கனிவால் கையறு நிலைக்கு தள்ளுவார்கள் 

உருண்டோடும் கண்ணீரில் உலகுக்கே அழுவார்கள் 

எல்லாருக்கும் கவலைப்பட்டு 
சிலருக்காக உழைத்து 
ஊருக்காக அன்பு செய்து 
பேருக்காக வாழ்ந்து 

சுருக்கங்கள் தேக்கி 
கதைகளின் முள்நீக்கி 
வெறித்த பார்வை ஒன்றைப்பார்க்கும் 
அத்தனை பேரழகிகளுக்கும் சொல்வதற்கு 
ஆயிரம் கதைகள் உண்டு 

சமையல் கட்டு,
அலுவலக ஒப்பனை அறை,
பேருந்து இருக்கைகள் 
படுக்கையறை 
என்றே வரையறுக்கப்பட்ட 
பேரழகிகள் உலகத்தை 
தப்பியும் எட்டாத 
தாளாத வெம்மை சுடும் 
அவர்கள் 
வியர்வைத்துளிகள் 
தெறித்த இடமெங்கும் 
கருகி உதிர்கின்றன கதைகளின் சுவடுகள் 
கொஞ்சம் கரிசனத்தோடு 😦