இவர் இறக்கவில்லை என்று வருத்தத்தோடு அறிவித்துக்கொள்கிறோம் :p


நேற்றைக்கு இறக்காத கனகாவை இறந்ததாக செய்தி வாசித்தார்கள் இல்லையா ? இப்படி உலகம் முழுக்க யாருக்கெல்லாம் செய்தி வாசித்து இருக்கிறார்கள் என்று பார்ப்போமா

குத்தூசி அவர்கள் ஒரு சிலை சிதிலமடைந்து கடந்ததைப்பற்றி எழுதுகிற பொழுது காலஞ்சென்ற மாணிக்கவேல் நாயக்கர் என்று எழுதி விட்டார். அவருக்கு இதழ் வெளியான காலையில் ஒரு அழைப்பு ,”நான் தான் காலஞ்சென்ற மாணிக்கவேல் நாயக்கர் பேசுகிறேன் ” என்று

அமெரிக்காவின் எழுத்துலக பிதாமகர் என புகழப்படும் மார்க் ட்வைன் உயிரோடு இருக்கும் பொழுதே அவர் இறந்து விட்டதாக ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட ,”கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட இறுதி அஞ்சலி “என நையாண்டி செய்தார் அவர்

உலகப்புகழ் பெற்ற சிந்தனையாளர் பெர்ட்ரண்ட் ரசல் ஜப்பானிய பத்திரிக்கைக்கு பேட்டி தரமாட்டேன் என்று மறுக்க மனிதருக்கு இரங்கல் அஞ்சலி எழுதிவிட்டார்கள்

பாடகி மடோனா இறந்து விட்டதாக பி பி சி யூ ட்யூப் தளத்தில் ஒரு வீடியோ வெளியானது. பின்னர் பார்த்தால் அது அவர்களின் சேகரிப்பில் இருந்தது என்பது தெரிந்தது. ஒருவர் சாவதற்கு முன்னமே முன்யோசனையாக வீடியோ தயார் பண்ணி வைத்து இருக்கிறார்கள். இதைப்பற்றி எதுவுமே வாயை திறக்கவில்லை பி பி சி

ரூட்யார்ட் கிப்ளிங் உயிரோடு இருக்கும் பொழுதே இறந்து விட்டதாக ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிட அவர் “நான் இறந்து விட்டேன்;உங்களின் சந்தாதாரர் பட்டியலில் இருந்து என்னை நீக்கி விடுங்கள் !” என்று கடிதம் எழுதினார்

பிடல் கேஸ்ட்ரோ,போப் ஜான் பால் இருவரும் உயிரோடு இருக்கும் பொழுதே இறந்ததாக சி என் என் அறிவித்தது. அதிலும் பிடல் கேஸ்ட்ரோவின் மரணத்தை ரீகனின் மரணத்தோடு சேர்த்து வெளியிட்டது. உண்மையில் இருவரும் இறக்கவில்லை. கேஸ்ட்ரோவை தடகள வீரர்,சினிமா நட்சத்திரம் என்று வேறு எழுதிவிட்டார்கள்

ஜெயப்ரகாஷ் நாராயண் இறந்து விட்டதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவித்து பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டன. உளவுத்துறை தலைவர் மருத்துவமனையில் ஜெ பி அவர்களைப்போல இருந்த இன்னொருவரை பார்த்துவிட்டு வந்து கொடுத்த தகவலால் வந்த வினை !

கொலரிட்ஜ் எனும் கவிஞர் இறந்து விட்டதாக வந்த செய்தியை ஒருவர் வாசித்துக்கொண்டு இருந்தார். “அவர் ஒரு மாபெரும் கவிஞர்; சிறப்பாக அவரின் ரீமொர்ஸ் நாடகம் வெற்றி பெற்ற பின் அவர் தூக்கில் தொங்கியது விந்தையானது !” என்று அவர் வாசிக்க கொலரிட்ஜ் ,”அதை விட விந்தையானது அவர் உங்கள் முன் நிற்பது !” என்றார். இவரின் டி ஷர்ட்டை திருடிப்போன திருடன் அதை அணிந்து கொண்டு தூக்கில் தொங்கி விட்டான். அந்த சட்டையில் இவரின் பெயர் பொறித்திருந்ததில்
வந்த சிக்கல் அது

ஆல்பிரெட் நோபலின் தம்பி லுடிவிக் வெடிவிபத்தில் இறந்து போக ‘மரணத்தின் வியாபாரி மரணம் !’ என்று பிரெஞ்சு இதழ்கள் தலைப்பு செய்தி வாசிக்க அப்பொழுது மனம் வருந்தி நோபல் பரிசை உருவாக்கினார் ஆல்பிரெட் நோபல்

தீரன் சின்னமலை என்றொரு சரித்திரம்


வீரம் வீரம் என்கிறார்களே அதற்கான அசல் அடையாளமாக திகழ்ந்த தமிழகத்து வீரன் தீரன் சின்னமலை நினைவுநாள் இன்று .காங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையத்தில் பிறந்த இவர் ஹைதர் அலி ஆண்டு கொண்டிருந்த காலத்தில் இவரின் பகுதியில் ஹைதர் அலியின் திவான் முகமது அலி வரியும் ,தானியமும் வசூலித்து கொண்டு போன பொழுது அதை பிடுங்கி ஏழை மக்களுக்கு பங்கிட்டு கொடுத்தார் .சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என கம்பீரமாக சொல்லி அனுப்பினார்

தீர்த்தகிரி என்பதே இவரின் உண்மையான பெயர் இந்த சம்பவத்துக்கு பிறகே சின்னமலை என்பது அவரின் பெயரானது . வரிகளை பறிகொடுத்த திவான் சங்ககிரி சென்றார் . தனது படைகளை திரட்டி வந்து சின்னமலையில் படையுடன் காங்கேயம் நொய்யல் ஆற்றில் போரிட்டார் .வெற்றி தீரன் சின்னமலை பக்கமே ! மீண்டும் படை திரட்டி வரலாம் என மைசூர் போனால் அங்கே திப்பு சுல்தான் ஆட்சிக்கு வந்திருந்தார் .மனிதர் தீரன் சின்னமலையை நோக்கி நேசக்கரம் நீட்டினார்

கொங்குப் பகுதியில் பழைகோட்டை பாளையத்தில் அதிகாரம் செலுத்திக்கொண்டிருந்த இவரின் ஆட்சி ஆங்கிலேய அரசுக்கு உறுத்தலாக இருந்தது .நடுவில் ஒரு பாளைய வீரன் நமக்கு சவாலாக இருப்பதா என பொங்கினார்கள் .ஆங்கிலேய எதிர்ப்பு படையில் திப்புவோடு இவர் கைகோர்த்து நின்றது இன்னமும் உறுத்தியது

1799ம் ஆண்டு நடைபெற்ற மைசூர் யுத்தத்தில் தீர்த்தகிரியின் படைகள் மாளவல்லி என்ற இடத்தில் ஆங்கிலேயப்படையுடன் மோதியது.திப்பு வீர மரணம் அடைந்து மைசூர் ஆங்கிலேயர் வசம் போனது .வேலப்பன் எனும் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய ஆள் ஆங்கிலேயரிடம் பிடிபட்டான் .அவர்களுக்கு உதவுவதாக சொல்லிக்கொண்டு அங்கிருந்து தகவல்களை சின்னமலைக்கு அனுப்பி கொண்டிருந்தான்

தீர்த்தகிரியை கைது செய்து வரும்படி கேப்டன் மக்கீஸ்கான் தலைமையில் காலாட்படையை ஆங்கிலேய அரசு அனுப்பியது. வேலப்பன் மூலமாக தகவல் அறிந்து நொய்யல் ஆற்றில் வெள்ளையர் படையை சிதறடித்து கேப்டன் மக்கீஸ் கானின் தலையை துண்டித்து வீரம் காட்டினார் சின்னமலை

ஆங்கிலேயர்கள் மீண்டும் கேப்டன் ஹாரிஸ் தலைமையில் 1802இல் குதிரைப் படைகளை அனுப்பியது. இப்படை ஓடாநிலையில் சின்னமலை அவர்களின் படையுடன் மோதியது. மீண்டும் ஆங்கிலேய அரசு தோல்வி கண்டது மறைந்திருந்து தாக்கும் கெரில்லா போர் முறையை தன்னுடைய காலத்திலேயே செயல்படுத்திக் காட்டிய மாவீரன் சின்னமலை. ஓடிக்கொண்டு இருக்கும் குதிரையின் முழங்காலில் குறி தவறாமல் சுடுவதில் வல்லவன்.

இவரின் கோட்டையை தகர்க்க பீரங்கி படையோடு ஆங்கிலேய அரசு வருவதை வேலப்பன் மூலம் அறிந்து கோட்டையை விட்டு வெளியேறினார் அவர் .ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகில் உள்ள ஓடாநிலையில் அவர் கட்டிய கோட்டை, 143 பீரங்கிகளை வைத்து, பிரிட்டிஷ் படைகள் இடிக்க வேண்டிய அளவுக்குப் பலமானதாக அது இருந்தது . அந்தக் கோட்டையில்தான் வெடிமருந்து, துப்பாக்கிகளை சின்னமலையே தயாரித்தார். கடைசிக் கட்டத்தில் பீரங்கிகளும் தயாரித்தார்.

பழனிமலைத் தொடரில் கருமலைப் பகுதி வனத்தில் சின்னமலை தலைமறைவாக இருப்பது அவரது சமையல்காரர் நல்லப்பனுக்கு மட்டும்தான் தெரியும். நல்லப்பன் விலை போனான் .சாப்பிட மட்டும் அவர் வீட்டுக்கு வரும் சின்னமலையை கைது செய்ய ஆங்கிலேய அதிகாரிகள் அவன் வீட்டுக்கு கீழே சுரங்கம் அமைக்க ஒத்துக்கொண்டான் .சின்னமலை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது சுரங்கத்துக்குள் இருந்து பிரிட்டிஷ் படை வீரர்கள் வந்து, சின்னமலையைப் பிடித்துவிடுகிறார்கள். சங்ககிரிக் கோட்டையில் வைத்து தூக்கிலிடப்படுகிறார்.

பிரிட்டிஷ் படையில் இருந்துகொண்டே சின்னமலைக்குத் தகவல் அனுப்பும் காரியத்தை தொடர்ந்து செய்த வீரன் வேலப்பன் அனுப்பிய ஓலைச்சுருளை இவர் ஆங்கிலேயர் பிடிக்க வந்த பொழுது நெருப்பில் இட்டு எரித்த பொழுது ஒரு பகுதி சிக்கி வேலப்பனை அடையாளம் கண்டு விசாரிக்க ,”என் நாட்டுக்காக இப்படி ஒரு செயல் செய்ததற்கு பெருமைப்படுகிறேன் !”என்றார் .அவரை சுட்டுக்கொன்றது ஆங்கிலேய படை.வீரர்கள் மற்றும் துரோகிகளால் நிரம்பிக்கிடக்கிறது வரலாறு .தீரன் சின்னமலையை நினைவு கூர்வோம்

லாங் லிவ் நோலன் !


நோலனுக்கு நாற்பத்தி மூன்று வயது. அவர் முதல் சினிமா எடுத்த பொழுது வயது ஏழு. சூப்பர் 8 கேமிராவில் முதல் படம் எடுத்தார் நோலன். அடுத்து அப்படியே அப்பா,அம்மா நண்பர்களின் ஊக்கம் . எல்லாமும் உந்தித்தள்ளிகொண்டு இருக்கும் பொழுது இங்கிலாந்து வந்தார்,லண்டனில் இலக்கியம் படிக்கப்போன பொழுது நோலனின் உலகம் வேறானது. 

இலக்கியத்தில் எப்படி எண்ணியதை சொல்லுகிறார்கள் படைப்பாளிகள்,எப்படி எண்ணற்ற உலகில் பிரயாணம் செய்ய வைக்கிறார்கள் என்றெல்லாம் பிரமித்துப்போனார் மனிதர். எம்மா என்கிற பெண்ணோடு சேர்ந்து திரைப்பட கழகத்தில் உறுப்பினராக டிக்கெட் விற்று அதில் கிடைத்த பணத்தில் பதினாறு எம் எம் படம் எடுத்த நோலன் அப்படியே ஒரு காதல் கதையை உண்டாக்கி கொண்டார். எம்மாவுடன் கல்யாணத்தில் வந்து நின்றது. இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் 
 
திருடனை பின்தொடர்ந்து செல்லும் பத்திரிக்கை காரன் ஒருவரின் அனுபவங்கள் படமாக திரையில் கருப்பு வெள்ளையில் வந்தது. அவர் மாட்டிகொண்டு அனுபவிக்கும் சிக்கல்களை நோலன் சொன்ன விதம் ஈர்ப்பதாக இருந்தது. கஜினி படம் பார்த்து இருப்பீர்கள் இல்லையோ அது நோலனின் மொமண்டோவின் தாக்கத்தில் எழுந்தது தான். அதில் காதலிக்கு பதிலாக மனைவி கொலைசெய்யப்பட்டு இருப்பார் 

இன்சோம்னியா என்கிற படத்தில் நேர்க்கோட்டில் கதை சொல்லாமல் இரண்டு துப்பறியும் நிபுணர்கள் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு கொலையை விசாரிக்க அனுப்பப்படும் கதையை நார்வே மொழி படத்தின் தாக்கத்தில் இன்னமும் வித்தியாசமாக நோலன் சொன்ன பொழுது சினிமா உலகம் நிமிர்ந்து உட்கார்ந்தது. 

அதற்கு பின்னர் ட்ராய் படத்தை இயக்க வாய்ப்பு வந்த பொழுது நோ சொன்னார் நோலன். வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திடம் பேட்மான் படத்தை இன்றைய சூழலுக்கு ஏற்றார் போல் படமாக்க எண்ணி உள்ளேன் என்று சொல்லி ஓகே வாங்கி முதல் பாகத்தை வெளியிட்ட பொழுது எல்லாரும் அட சொன்னார்கள். அடுத்த பாகத்தில் ஜோக்கர் வந்த பொழுது காமம்,பணம் என்று எதன் மீதும் பற்றில்லாமல் மேனியாக் போல குழப்பங்களை உண்டு செய்யும் ஜோக்கருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் கூடிப்போனார்கள். ஹீத் லெட்ஜர் இறந்த பின்னும் அவருக்கு ஆஸ்கரை அள்ளித்தருகிற அளவுக்கு நடிப்பில் பின்னி இருந்தார். 

இன்செப்சன் கதையில் நேர்க்கோட்டு தன்மை மீண்டும் இல்லாமல் நினைவுகளுக்குள் நினைவு,கனவுகளுக்குள் கனவு என்று படம் எடுக்கப்பட ஓடுமா என்று எல்லாரும் பயந்தார்கள். ஒரு முறை பார்த்துவிட்டு புரியமால் போனதால் மீண்டும் தியேட்டருக்கு பலபேர் வந்து பார்த்து சிலிர்த்து அந்தப்படத்தை ஹிட்டாக்கி நம்பிக்கை உண்டு செய்தார்கள் 

டிஜிடல் வழியை விட,பிலிமையே நோலன் நாடுகிறார். நோலன் நடிகர்கள் எத்தனை டேக் எடுத்தாலும் நோ சொல்ல மாட்டார். உண்மையில் ஜோக்கர் டிவியில் வரும் காட்சியில் அவரையே காட்சியை இயக்கச்சொல்லி விடுகிற அளவுக்கு நடிகர்கள் நினைப்பதை செய்யட்டும் என்கிற மனோபாவம் கொண்டவர் இவர். 

மூன்றாவது பார்ட்டை எப்படி எடுப்பார் மனிதர் என்று காத்திருந்த பொழுது கதை மற்றும் ஆக்ஷனில் பின்னி எடுத்துவிட்டு இறுதியில் ஒரு ஓபன் க்ளைமேக்ஸ் கொடுத்து நோலன் முடிக்க சூப்பர் என்றார்கள் ரசிகர்கள். “ஒரு படத்தை இயக்காவிட்டால் , அதற்காக வருந்துவேனா என என்னை நானே கேட்டு கொள்வேன். நான் எடுக்கப்போக்கும் இந்த படம் , பார்ப்பதற்கு கிளர்ச்சியூட்டும் படமாக எனக்கு இருக்குமா ? இந்த் கதை வருடக்கணக்கில் என் மனதில் தங்கி இருக்குமா?” என்பதைப்பொறுத்தே நான் படங்களை இயக்குகிறேன்” என்று 
நோலன் சொல்வதை கவனிக்க வேண்டும். சூப்பர் மேன் படத்தின் தயாரிப்பில் பங்கு வகித்த தலைவர் இப்பொழுது சூப்பர் மென் மற்றும் பேட்மேன் இணைந்து கலக்கும் படத்துக்கான தயாரிப்பிலும் பங்கு கொண்டிருக்கிறார். இன்னமும் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் கிட்டாமல் இருக்கிறது இவருக்கு.விரைவில் கிடைக்கும் என்று நம்புவோம். நோலன் எனும் மாந்த்ரீக இயக்குனரின் பிறந்தநாள் ஜூலை முப்பது

சந்துகளின் சாவு !


சந்துகளால் நிரம்பியது உலகம்
பொந்துகள் ஆங்காங்கே சந்துகளுக்கு
இலவச இணைப்பாக கொட்டிக்கிடக்கின்றன

முடிந்தவரை சந்துகளில் பிள்ளையாரை
நட்டுவிட தேர்வு பயத்தை
எடை இறக்கம் செய்கிறார்கள் சந்துகளில்

கடன்காரன் வரும்பொழுதும்,
பின்தொடரும்
பெண்ணின் அண்ணன்
தென்படுதலின் தருணமும்
உறைவிடமாக பொந்துகள் மாறலாம்

பெருஞ்சுமை நீர்க்குடங்களும்
கைப்பரப்பில் தேங்காத மழலைகளும்
ஏந்தி மவுனத்துக்குள்
முனகல் பூட்டி சந்துகளின்
சுமைகளை நகர்த்துகிறார்கள் தேவதைகள்

கொஞ்சம் முத்தங்கள்,எக்கச்சக்க சண்டைகள்
கடைசிச்சொட்டு தேநீர் போல
ஒட்டிக்கொண்ட தொடுதல்கள்
பிள்ளைகள் தூக்கி நடந்த தந்தைகள்
தெருவை நிறைத்த விளையாட்டு இளைஞர்கள்
என்று நிறைந்திருந்த சந்துகள்
இன்றைக்கு வாகனங்களில்
நெரிசலாகி பெருகிப்போனதாக
செய்தி வாசிக்கிறார்கள்

சந்திலும்,பொந்திலும் மனிதமும்
மனிதர்களும் நாக்கை துருத்தி
மரிப்பதாக புலம்புகிறது
மூச்சுத்திணறிக்கொண்டு இருக்கும் சந்துகள்

பதினெட்டும் (தங்கம்) பெற்ற பெல்ப்ஸ் !


மைக்கேல் பெல்ப்ஸ் பிறந்த தினம் இன்று. எப்படி கிரிக்கெட்டின் மிக முக்கிய சாதனைகள் சச்சின் வசம் இருக்கிறதோ அது போல நீச்சலின் மிக முக்கிய சாதனைகள் இவர் வசம். அமெரிக்காவில் எளிய குடும்பத்தில் பிறந்தார் இவர். அப்பா காவல் துறை அதிகாரி,அம்மா ஆசிரியை. ஏற்கனவே இரண்டு அக்காக்கள் . வீட்டில் கலகலப்புக்கு பஞ்சமில்லை. இவரின் பெற்றோர் கண்ணாமூச்சி ஆட்டம் போல ஒரு முறை சேர்ந்து,பிரிந்து மீண்டும் சேர்ந்தவர்கள். பையனை செல்லமாகவே வளர்த்தார்கள். அப்பா தடகள வீரர். பிள்ளைகளையும் அப்படியே ஊக்குவித்தார். 

அவருக்கு நீச்சல் குளத்துக்கு போன பிள்ளை பயந்துகொண்டே உள்ளே குதிக்க மாட்டேன் என்று விட்டான். இந்த சிக்கல் வேறு. ஆசிரியர்கள் அப்படியே மிதக்க பாரேன் என்று சொல்ல பின்பக்கமாக மிதக்க ஆரம்பித்தான். அப்படிதான் பேக் ஸ்ட்ரோக் அவனின் முதல் ஸ்ட்ரோக் ஆனது. அப்படியே பேஸ்பால்,கால்பந்து,கோல்ப் என்றும் விரிந்தது ஆசைகள்

அப்பா அம்மா கன்னாமூச்சியின் கடைசி கட்டத்தை தொட்டார்கள். ஏழு வயது இருக்கும் பொழுது டாட்டா சொல்லி பிரிந்தார்கள். அம்மா வசம் போனார் பெல்ப்ஸ். ADHD எனும் கற்றல் குறைபாடு இருந்தது. செதுக்கப்பட்ட உடல், அகண்ட தோள்கள், மிக நீளமான கைகள் இதுதான் பெல்ப்ஸ். நீச்சல் களத்துக்கு இவன் பொருந்துவானா என்று அம்மா யோசிக்க ஆரம்பித்தார். பவ்மேன் எனும் பயிற்சியாளர் பையன் பின்னி எடுப்பான் என்று நம்பிக்கை தந்தார். 

நீச்சலே வாழ்வாகிப்போனது. பதினைந்து வயதுக்குள் கவனம் ஈர்க்க ஆரம்பித்தார். எழுபத்தி ஒரு பதக்கங்களை உலக அளவில் வென்றிருக்கும் இவரின் பாக்கெட்டில் ஒலிம்பிக்கின் 18 தங்கம் உள்பட மொத்தம் 22 பதக்கங்கள் . இதில் ஒரே ஒலிம்பிக்கில் வென்ற எட்டு தங்கம் என்றைக்கும் நீடித்து நிற்கும் சாதனை. 

சின்ன சின்ன விஷயங்களில் மற்றவர்களிடம் இருந்து இவர் மாறுபடுவார். எல்லாரும் ஆழமாக போய் மேலே வரும் பொழுது இவர் மேலேயே நீந்தி செல்வார். புவி ஈர்ப்பு குறைவாக இருப்பதால் இன்னமும் வேகமாக நீந்த முடியும். அதே போல முந்திக்கொண்டு நீந்தி போனாலும் முதலில் தலையை யார் தூக்கி போர்டை பார்க்கிறாரோ அவரே முதலில் வந்ததாக கொள்ளப்படும். அதை கச்சிதமாக செய்வார் இவர். வேற்றுகிரக வாசி என்றும் இவரை சொல்வார்கள். 

இவர் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் எட்டு தங்கம் அள்ளி அமெரிக்கா திரும்பினார். ஏற்கனவே பேட்டி,பாராட்டுகள் என்று பின்னி விட்டார்கள். “என்ன சொல்ல விரும்புகிறீர்கள் பெல்ப்ஸ் ?” என்று கேட்ட பொழுது ,”அவசரமாக ரெஸ்ட் ரூம் போகணும். தப்பா எடுத்துக்காதீங்க. நாலு நாள் ஆச்சு !” என்றார். புகழ் வெளிச்சமும் விலைகளை கேட்பது என்பது யதார்த்தமான உண்மை

இவர் பெயர் ஃபோர்ட் !


அமெரிக்காவில் இன்று எல்லாரும் கார் வைத்து இருப்பதற்கான அச்சுப்புள்ளி இந்த மனிதரால் தான் போடப்பட்டது.ஒற்றை டைம் பீஸ் பரிசை அக்குவேறு ஆணிவேராக பிரித்து போட்டு சேர்த்ததில் தொடங்கிய இயந்திரக்காதல் வாழ்நாள் முழுக்க இந்த ஃபோர்ட் எனும் மேதைக்கு தொடர்ந்தது.த

ன் மனைவியை வைத்துக்கொண்டு தான் உருவாக்கிய புத்தம் புது மாடலை சோதித்து பார்த்தவர் இவர் . அதிக விற்பனை ,அதில் தொழிலாளர்களுக்கும் அதிக சம்பளம் ,டீலர்களையும் மதித்து நடத்துவது என இவர் அறிமுகப்படுத்திய பல விஷயங்கள் அமெரிக்காவிற்கு முன்னோடி . தான் வாழ்ந்த க்ரீன்பீல்ட் கிராமத்தை அப்படியே அருங்காட்சியமாக மாற்றியவர் ;அம்மா மீது தீராத அன்பு கொண்டவர்.

சிகரெட் பழக்கத்திற்கு எதிராக அமெரிக்க முழுக்க பிரபலங்களிடம் கையெழுத்து பெற்று விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றவர் ,போருக்கு எதிராக நின்றவர் என பல அற்புதமான முகங்களும் அவருக்கு இருக்க செய்தது . ஆனால் தன் மகனின் இறப்புக்கு பின் பொறுப்பேற்ற பொழுது கம்பெனியை லாபத்தில் இயங்க வைக்கமுடியவில்லை . இறந்த பொழுது மாபெரும் வலியோடு தான் விடைபெற்றார். “If you think you can do a thing or think you can’t do a thing, you’re right. “என சொன்ன அவரின் பிறந்தநாள் இன்று

வான்பறவை வேந்தன் சலீம் அலி


சலீம் அலி என்கிற இந்த பெயரோடு பேசுகிற பொழுது ஏதோ ஒரு பறவை நன்றியோடு கீதம் எழுப்பிக்கொண்டு இருக்கும் என்றே படுகிறது. வாழ்க்கை முழுக்க பறவைகளை பற்றிய ஆராய்ச்சியிலும் ,ஆவணப்படுத்தலிலும் ஒரு மனிதன் பங்காற்ற முடியும் என வாழ்ந்து காட்டியவர் அவர் .

அப்பா அம்மாவை மிக இளம்வயதில் இழந்து மாமா வீட்டில் வளர்ந்த பொழுது ஒரு சிட்டுக்குருவியை சுட்டுக்கொன்ற பிறகு அதன் மஞ்சள் கழுத்தை பார்த்து அதன் பெயரை தேடி ஆரம்பித்த அந்த பறவைக்காதல் சொந்த மனைவி வந்த பின் பர்மாவின் காடுகளின் ஊடாக பறவைகளை தேடிப்போகிற அளவுக்கு பறந்து விரிந்தது.

ஒட்டகங்களோடு பாலைவனங்களில் பயணம் ,லடாக் ஊடாக இதயம் சிலிர்க்கும் பயணம் என ஓடிக்கொண்டே இருந்த நாயகன்.முன்னூறு வகை பறவைகளை கண்டுபிடித்த இவர் ,பறவைகளுக்கு என்றொரு மொழி,உணர்வு,வலி உண்டு எனத்தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார் .அவருக்கே காடே ஆய்வகம்.அவரின் பென்சில் ஸ்கெட்ச்களை தேடிப்பாருங்கள். அசந்து போவீர்கள்.

அவரின் சுயசரிதை சிட்டுக்குருவியின் வீழ்ச்சி -ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சியில் தான் அந்த நாயகனின் எழுச்சி தேடல் தொடங்கியது சுவையான முரண் தான் !அவரின் பிறந்தநாள் ஜூலை 27

ஜே.ஆர்.டி. டாட்டா-வான் தொட்ட கனவுக்காரர்


ஒரு மனிதனின் கனவுகள் ஒரு தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஜே.ஆர்.டி.டாடா. இந்திய தந்தைக்கும் ,பிரெஞ்சு தாய்க்கும் பிறந்த அவர் இளம் வயதில் பிரான்ஸ் தேசத்தில் இருந்த பொழுது விண்ணில் விமானத்தில் பறப்பதன் மீது காதல் கொண்டார். இந்தியாவின் முதல் விமானி ஆனார்;அவர் உருவாக்கிய டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் தான் இந்தியாவின் ஏர் இந்தியாவாக உருவெடுத்தது.
 
தொழிலாளிகள் வீட்டை விட்டு கிளம்பும் பொழுதில் இருந்து அவர்கள் மீண்டும் வீடு போய் சேரும் வரும்வரை பணியில் இருப்பதாகவே கருதப்படுவார்கள் என்கிற நடைமுறையை கொண்டு வந்த பல தொழிலாளர்களின் வாழ்வில் ஸ்திரத்தன்மையை உண்டு செய்தவர். இன்றைக்கு கலக்கும் டி.சி.எஸ்.டைட்டன் ,டாடா மோட்டார்ஸ் எல்லாமும் இவரின் கனவுக்குழந்தைகளே.
பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நடந்த பாராட்டு விழாவில் அவர் சொன்ன வரிகள் தான் அவரின் சிந்தனை பாய்ந்த விண்ணை போல போல நம் தேசத்தின் எல்லாரின் சிந்தையிலும் வியாபித்து இருக்கவேண்டும் -அந்த வரிகள் -“இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக வேண்டாம் ;இந்த நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்வோடு,தன்னிறைவோடு வாழ்கிற தேசமாக இந்த பூமி ஆனால் போதும் !”என்ற அவரின் பிறந்த நாள் இன்று.

மூத்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்


நீயெல்லாம் திருந்த மாட்டே,நீயெல்லாம் உருப்படவா போறே,இதுங்க எல்லாம் என்னத்த செய்ஞ்சு கிழிக்குது,இதுங்க எல்லாம் பசங்களா,ஒழுக்கமே இல்லாதவங்க இவங்க,இந்த தலைமுறை பணம் பணம் என்று ஓடுகிறது,எதாச்சும் உலகத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்றீங்களா,ஊரையே நாசம் பண்றாங்க இவங்க என்று எத்தனையோ வசவுகளை இளைய தலைமுறையின் மீது வைக்கும் மூத்தோரை கண்டு கொண்டே இருக்கிறேன். எங்கள் தலைமுறை தவறுகளால் நிரம்பியது தான். புதிய உலகங்களை தொடப்போகும் அவர்கள் உங்களின் விருப்பப்படி இருக்க வேண்டும் எதிர்பார்க்கும் உங்களின் ஆசையும் புரிகிறது. விழுந்திருக்கிற தலைமுறை இடைவெளியை இப்படிப்பட்ட வசவுகளால் நிரப்பினால் சிக்கல் தீர்ந்து விடுமா ? அவர்களின் மொழியில் பேசுதல் இன்றைய தேவை. எண்ணற்ற கூறுகளில் மாற்றி யோசிக்கிற அவர்களுக்கு இணையாக ஈடுகொடுத்து பதில் சொல்வது உங்களுக்கு முடியாவிட்டால் பழமை முகத்தை துறந்துவிட்டு வாருங்கள். அறம் தவறி போகிறார்கள் என்றால் அவர்களின் இளமைக்காலத்தில் அவர்களை மாற்ற நீங்கள் என்ன முயற்சி எடுத்தீர்கள் ? அவர்களின் கனவுகள் என்னவென்று என்றாவது கேட்டீர்களா ? வாசிப்பை,சக மனிதனை நேசிக்க சொல்லித்தந்தீர்களா ? உங்கள் காலத்தில் நீங்கள் தவறே செய்யாத உத்தமர்களா ? நீங்கள் சீரழித்த உலகில் தானே நாங்கள் வாழ்கிறோம் ? இவர்களின் கவனச்சிதறல்களை,மனதின் வலிகளை கேட்க தயாராக இருந்திருக்கிறீர்களா ? காலை உணவை சாப்பிட்டானா என்று கேட்க மறக்கிரீர்களோ இல்லையோ தண்டச்சோறு என்று வையத்தானே செய்கிறீர்கள் . அவர்களின் இடத்தில இருந்து பாருங்கள் நான் யாரையும் பொதுமைப்படுத்தவில்லை. மூத்தோரை ஏகத்துக்கும் மதிக்கிறேன் என்றாலும் வார்த்தைகளால் சுடும் பலர் கொஞ்சம் மறு ஆய்வு செய்யலாம் என்றே இந்த பதிவு. அவர்கள் உங்களின் விழுதுகள்

சாவேஸ் எனும் சரித்திரம் !


ஹுகோ சாவேஸ் எனும் இணையற்ற நாயகன் பிறந்த தினம் ஜூலை 28 .அமெரிக்காவுக்கு க்யூபாவுடன் இணைந்து மிகப்பெரிய சிம்மசொப்பனமாக இருந்த நாயகன் இவர் . இளம் வயதில் ராணுவத்தின் மீது ஆசை கொண்டு அதில் இணைந்து பணியாற்றினார் .தென் அமெரிக்காவின் இணையற்ற நாயகர்களான சே,சைமன் பொலிவர் ஆகியோரின் வாழ்வும்,சிந்தையும் அவரை வீறுகொள்ள வைத்தன . கேப்டனாக உயர்ந்து ராணுவப்பள்ளியில் பாடம் எடுக்க போனார் ;அதற்குள் வெலஸ்கோ எனும் ராணுவ தளபதியை சந்தித்தார் புரட்சிகர கருத்துக்கள் அவரிடம் தெறித்தன ;ஊழலில் இருந்து நாட்டை மீட்க வேண்டும் எனும் அவரின் குரல் காதுகளை நிறைத்தது .

பனாமாவின் அதிபரை பார்த்தார் எளிய மக்களுக்கு நிலங்களை பிரித்து கொடுத்த அவரின் சாதனைகள் இவர் நெஞ்சை தொட்டன .அமெரிக்காவின் கைக்கூலியாக இருக்க மாட்டேன் என சொல்லி பெரேஸ் ஆட்சிக்கு வந்தார் . ஐ எம் எப் விதித்த கட்டுபாடுகளை ஏற்றுக்கொண்டு அப்படியே செயல்பட்டார் ;அமெரிக் என்ன கா சொன்னாலும் சிரமேற்கொண்டு செய்கிற அளவுக்கு போனார் .மக்களை கண்டுகொள்ளாமல் ஊழல்கள் தூள் பறந்தன .பார்த்தார் சாவேஸ் புரட்சி என முடிவு செய்தார் ;போலிவர் படை என அவர் உருவாக்கி இருந்த வீரர் கூட்டம் புரட்சியில் இறங்கியது .

புரட்சி தோல்வியடைந்து சிறைப்பட்டார் ‘இப்போதைக்கு தான் தோல்வி மீண்டு வருவோம் தோழர்களே என முழங்கினார் .அடுத்து ஆட்சிக்கு வந்தவர் இவரை விடுவித்தார் . மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார் .ஆட்சிக்கு வந்தார் .தன் வருமானத்தை முழுக்க நாட்டுக்கு கொடுத்தார் ;ஆடம்பரங்களை கட் செய்தார் . முதலில் முதலாளித்துவம் நாட்டை முன்னேற்றும் என பணிகளை அதன் போக்கில் செய்தார் .ஒன்றும் மாற்றமில்லை ;கேஸ்ட்ரோவை சந்தித்தார் . “என் தந்தை போன்றவர் அவர் !”என்றார் .கேஸ்ட்ரோ ,”ஒரு போராளி குறைகிறான் என்றால் நான் இருக்கிறேன் என சாவேஸ் .

துப்பாக்கி ஏந்தி போராடுவோம் “என்றார் நடுவில் ஒரு நாற்பத்தி எட்டு மணிநேரம் அவரை ஆட்சியை விட்டு அனுப்பினார்கள் சில போராட்டக்காரர்கள் .ராணுவத்தின் உதவியோடு ஆட்சிக்கு வந்தாலும் ஜனநாயக முறையை கைவிடவில்லை மனிதர் , எவ்வளவு திட்டங்கள் போட்டாலும் நடைமுறைக்கு வருவதில் சிக்கல் ஏன் என ஆராய்ந்தார் .ஏகத்துக்கும் ராணுவத்துக்கு செலவாவதை கண்டார் ;ராணுவத்துக்கு மக்கள் சேவை தான் முக்கிய வேலை என அறிவித்து உணவு பதுக்கல் காரர்களை பிடிக்க,மருத்துவ உதவி தேவைப்படும் மக்களை ராணுவ விமானத்தில் ஏற்றிப்போதல் ,மருத்துவ சேவை செய்தல் என அதன் போக்கை மாற்றினார் .

பெட்ரோலியம் தான் நாட்டின் உயிர்நாடி ;அஞ்சாமல் அமெரிக்காவின் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோலிய வளத்தை மீட்டு தேசியமயமாக்கினார் .சோயாபீன்ஸ் உற்பத்தியை மூன்று மடங்கு பெருக்கி விவசாய முன்னணியில் சாதித்தார் ;பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்து வெனிசுலாவின் அதிபராக இருந்த காலத்தில் அமெரிக்காவின் எதேச்சதிகாரத்தை முழுமூச்சாக எதிர்த்தார் . பெட்ரோலிய விற்பனையை யூரோவில் செய்ய ஆரம்பித்தார் . ஒபாமாவை ஜோக்கர் என்றும்,புஷ்ஷை பொய்யர்,கொலைகாரன்,உலகத்தின் மிக மோசமான மனிதன் என சொன்ன சாவேஸ்,உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என கம்பீரமாக சொன்னார்

அமெரிக்காவுக்கு அவர் எப்படி இருந்தார் என்பதை அவர் கண்டலீசா ரைசிடம் சொன்ன வரிகளே விளக்கும் ,”ஹே குட்டிப்பெண்ணே !சமவெளியில் முற்கள் நிறைந்த மலர் சொரியும் மரம் நான் .என்னை கடந்து போகிறவர்கள் மீது நான் இதமான சுகந்தத்தை தெளிப்பேன் .என்னை உலுக்கினால் முற்களால் தைத்து விடுவேன் ” 44 வயதிலிருந்து இறக்கிற வரை மக்களின் நாயகனாக இருந்த சாவேஸ் ,வறட்டு வார்த்தைகளால் நிறைக்காமல் செயலால் பொல்லிவரின் வாள் போல வெனிசுலா மக்களின் வாழ்க்கையை மீட்ட ரட்சகன் ! வீரவணக்கம் காம்ரேட் !
\