ஜஹாங்கீர் எனும் ஆச்சரியம் !


ஜஹாங்கீர் பிறந்த தினம் இன்று. இவனெல்லாம் எங்கே உருப்பட போகிறான் என்று சில பிள்ளைகளைப்பார்த்து பெரியவர்கள் சொல்வார்கள் இல்லையா ? அப்படி ஒரு வகையான பையனாக தான் அவர் இருந்தார். எப்பொழுதும் போதை,பெண்கள்,மது,ரொம்பவும் போர் அடித்தால் ஆண்கள் என்றே அவரின் இளவயது கழிந்தது. அக்பர் தனியறையில் வைத்து இவரை பூட்டி அடி பின்னுகிற அளவுக்கு இவரின் அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டு இருந்தன. அக்பர் தக்காணத்தில் அமைதியை நிலைநாட்ட போயிருந்த பொழுது அவருக்கு எதிராக புரட்சி நடத்தி கைது எல்லாம் செய்யப்பட்டார். தான் கட்டி வளர்த்த ராஜ்ஜியம் என்னாகுமோ என்கிற பயத்தோடு தான் அக்பர் கண் மூடினார். 

அதற்கு பின்னர் இவர் பலரின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்தார். ஆச்சரியகரமாக அற்புதமான அமைதி நிரம்பிய ஒரு ஆட்சியை அவர் தந்தார். இவர் எப்படி அக்பருக்கு எதிராக் புரட்சி செய்தாரோ அதைப்போலவே இவரின் மகனும் இவருக்கு எதிராக புரட்சி செய்தார். அவரின் பெயர் குஸ்ரூ. அவரின் கண்களை குருடாக்கி தண்டனை தந்தது ஒருபுறம் என்றால் அவருக்கு ஆதரவு தந்த சீக்கிய குரு அர்ஜுன் தேவை மரணதண்டனை கொடுத்து சீக்கியர்களிடம் வன்மத்தை சம்பாதித்து கொண்டார் இவர். 

ஏற்கனவே கணவனை இழந்திருந்த நூருனிசா எனும் பெண்ணை மணந்து அவரை தன் மனைவி ஆக்கிக்கொண்டார். அவரின் அப்பா,தம்பி ஆகியோர் சேர்ந்துகொண்டு தான் ஆட்சியை நடந்துகிறார்கள் என்கிற அளவுக்கு நாட்டின் நிர்வாகம் அவர்கள் கையில் இருந்தது. நூருனிசா தான் நூர்ஜஹான் ஆனது. அவரின் சகோதரர் மகளை ஜகாங்கீரின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தாள். அவர்கள் தான் ஷாஜஹான்,மும்தாஜ் ஆனார்கள். நாணயங்களில் நூர்ஜஹானின் முகம் இடம்பெறுகிற் அளவுக்கு ஆட்சி அவர் கட்டுபாட்டில் இருந்தது. என்றாலும் இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. 

அவர் உண்டாக்கிய நகர் தான் இன்றைய டாக்கா. ஜகாங்கீர் காலத்தில் ராஜபுத்திரர்களுடன் அமைதி ஏற்பட்டது. நாடு முழுக்க அமைதி நிலவியது. மற்ற மதங்களை மதித்தார் அவர். ஹிந்துக்கள் மீதான வரி விதிப்பு இவர் ஆட்சியிலும் இல்லாமலே இருந்தது. ஹிந்துக்கள்,கிறிஸ்துவர்கள்,ஷியா இஸ்லாமியர்கள் என்று பலரும் சங்கமிக்கும் இடமாக அவரின் அவை இருந்தது. ஓவியக்கலையின் உச்சம் அவர் காலத்தில் தான் ஏற்பட்டது. ஓவியக்கலை உச்சத்தை தொட்டது அவர் ஆட்சிகாலத்தில் தான். தங்க சங்கிலி கொண்டு பிணைக்கப்பட்ட நீதிமணி இவர் ஆட்சிக்காலத்தில் ஆக்ராவில் தொங்கிக்கொண்டு இருந்தது. 


தாமஸ் ரோ எனும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுக்கு அனுமதி கொடுத்து இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு அடிகோலிய செயல் இவருடையதே. 
அவருக்கு எதிராக அவரின் இன்னொரு மகனான குர்ராம் என்கிற வருங்கால ஷாஜஹான் எதிர்த்து புரட்சி செய்தார். அவரை அடக்க மக்பாத் கான் அனுப்பப்பட்டார். ஒரு வழியாக அவரை அடக்கிய பின் அவரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவரின் மகன் ஒருவனை அனுப்பி வைக்க சொன்னார். அப்பொழுது தன்னின் மூன்றாவது மகன் அவுரங்கசீபை அனுப்பி வைத்தார் அவர். அதற்கு பின் தாரா ஷுக்கோவையும் அனுப்பி வைக்க வைத்தார் ஜகாங்கீர். இருவரையும் அவரே வளர்த்தார்

மஹ்பத் கான் இறுதியில் தன்னுடைய பாதுகாப்புக்காக ராஜபுத்திரர்களுடன் சேர்ந்து கொண்டு இவரையே கடத்தினார். அப்பொழுது தன் செயல்களால் அவரை மீட்டது நூர்ஜகான். மஹ்பத் கானுக்கு அதற்கு பின் அடைக்கலம் தந்தது குர்ராம். சீக்கிரம் உடல் நலம் நலிவடைந்து எழ முடியாமல் இறந்தார் அரசர். அவர் காலத்தில் ஆட்சி என்னவோ நிமிர்ந்து தான் இருந்தது.

சிரிப்பு மருத்துவர் கலைவாணர் என்.எஸ்.கே :)


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவுநாள் இன்று. நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர் 

டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது. 

நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம் 

திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு இவன் என் நாடக கம்பெனி ஆள் என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார். 

அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் ? அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்றார் என்.எஸ்.கே. 

என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நாடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் ராதா .

என்.எஸ். கே லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார் 

என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி 

நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு ? என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.

அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் .
” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு 

ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டு தான் இறந்து போனார்

ஹாக்கிக்கொரு தியான் சந்த் !


இன்றைக்கு தேசிய விளையாட்டு தினம். தியான் சந்த் எனும் மாயஜால மாந்த்ரீகனின் பிறந்தநாள் இன்று. இந்தியாவுக்கு விடுதலை கிடைப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலம் அது. அந்த எளிய பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த இளைஞன் ஒரு ஹாக்கி போட்டியை பார்க்கப்போனான். போட்டியில் ஆங்கிலேயர்கள் ஆதரித்த அணிக்கு எதிரான அணியை அவன் உற்சாகபடுத்த ஆங்கிலேய அதிகாரி கடுப்பாகி விட்டார். நீ இறங்கி வேண்டுமானால் ஆடேன் என்று நக்கலாக சொல்ல அந்த போட்டியில் அஅவன் அடித்த கோல்கள் நான்கு.

மிகப்பெரிய மின்விளக்குகள் இல்லாத காலத்தில் நிலவொளியில் பயிற்சி செய்யும் பழக்கம் சந்துக்கு உண்டு. அதனாலேயே அவர் சந்த் என அழைக்கப்பட்டார் என்பார்கள். நியூசிலாந்து அணியுடன் மோத முதல் முறையாக இந்திய அணி ஒன்று தேர்வானது. அதில் இவரும் இடம் பெற்றார். எண்ணற்ற போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி கலக்கி எடுத்தது. மொத்தம் 192 கோல்களை இந்திய அணி அடித்தது. அந்த கோல்களில் நூறு கோல்கள் சந்த் அடித்தது. ஒரே ஒரு போட்டியை தவிர மற்ற எல்லா போட்டியிலும் (பதினெட்டு ) வென்றிருந்தது. அப்பொழுது இரண்டு பெண்கள் இவருக்கு ரசிகையாகி தொடர்ந்து வந்திருக்கிறார்கள். டான் பிராட்மன் இவரின் ஆட்டத்தை பார்த்துவிட்டு நாங்கள் ரன் அடிப்பது போல இவர் கோல் அடிக்கிறார் என்று வியந்திருக்கிறார்

இங்கிலாந்து அணி தான் அதற்கு முந்தைய ஒலிம்பிக்கில் சாம்பியன். இந்திய அணி இங்கிலாந்தில் போய் கலந்து கொண்ட பதினொரு போட்டியிலும் வென்று விடவே ஒலிம்பிக் போட்டிக்கு இங்கிலாந்து அணிக்கு பதிலாக இந்தியா போனது. இறுதிப்போட்டிக்கு முந்தைய எல்லா போட்டிகளிலும் வென்றிருந்த இந்திய அணி மொத்தம் 26 கோல்கள் அடித்தது. அதில் பதினோரு கோல்கள் நம் நாயகன் அடித்தது. இறுதிப்போட்டி ஹாலந்து நாட்டின் தலைநகரில் ஹாலந்து அணிக்கு எதிராக நடந்தது. சொந்த ஊர் உற்சாகத்தோடு ஆடிய அந்த அணியை மூன்றுக்கு பூஜ்யம் என்று இந்தியா வென்று முதல் தங்கத்தை பெற்றது. தியன் சந்த் அடித்தது இரண்டு கோல்கள். ஒரு சுவாரசியமான விஷயம் போகிற பொழுது வழியனுப்ப வெறும் மூன்றே பெயர்கள் தான் இருந்தார்கள். வருகிற பொழுது பம்பாய் நகரே மக்களால் நிரம்பி இருந்தது

அடுத்த ஒலிம்பிக்கிலும் அப்படியே கலக்கி எடுத்தது இந்திய அணி. இறுதிப்போட்டியில் அமெரிக்காவை கதற விட்டார்கள். இருபத்தி நான்கு கோல்கள் அடித்தது இந்திய அணி அவர்களோ ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்தார்கள். இதில் சந்த் ஒரு எட்டு கோல்கள்,அவரின் தம்பி ஒரு பத்து கோல்கள் அடித்தார்கள். இங்கிலாந்து அரசி ஒரு முறை இவரிடம் அவரின் குடையை கொடுத்து விளையாட சொல்ல அதிலும் கோல் அடித்திருக்கிறார் இவர். பெர்லின் ஒலிம்பிக் ஆரம்பித்த பொழுது முப்பத்தி ஒரு வயது அவருக்கு. தோல்வி என்பது என்னவென்றே தெரியாத இந்திய அணி பயிற்சி போட்டிகளில் தோற்றிருந்தது. ஒழுங்கான ஆடைகள் இல்லாமல்,மூன்றாம் கம்பார்ட்மென்ட்களில் வந்து இறங்கிய களைப்பு தீருவதற்குள் ஜெர்மனியை பயிற்சி போட்டியில் எதிர்கொண்டார்கள். 4-1 என்று அணி தோற்றது. என்றாலும் ஒலிம்பிக் போட்டிகளில் நன்றாக ஆடி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

பெர்லின் நகரில் இறுதிப்போட்டி. ஹிட்லர் அமர்ந்து இருந்தார். ஜெர்மனி ஏற்கனவே இந்தியாவை தோற்கடித்த கம்பீரத்தோடு இருந்தது. இந்திய அணியினர் காங்கிரஸ் கொடியை வணங்கிவிட்டு களம் புகுந்தார்கள். முதல் பாதியில் இந்திய அணி ஒரே ஒரு கோல் தான் அடித்து இருந்தது. தியான் சந்த் ஸ்பைக் ஷூவை கழற்றி எறிந்தார். வெறுங்காலோடு களம் புகுந்தார். ஆர்ப்பரிப்பு ,வியர்வை எல்லாமும் வழிய அவர் அங்கே மாயஜாலம் செய்தார். மூன்று கோல்களை அவர் அடிக்க இந்தியா மூன்றாவது முறையாக ஒலிம்பிக் தங்கத்தை பெற்றது. தியான் சந்த் ரயில்வே தண்டவாளங்களில் பந்தை இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு அடித்துக்கொண்டே சென்று பயிற்சி செய்வார். வறுமை வாட்டிகொண்டு இருந்த பொழுது வேட்டை,மீன் பிடித்தல் ஆகியனவே அவருக்கு இருந்த பொழுது போக்கு

அவர் மரணமடைந்த பொழுது யாரும் கண்டுகொள்ள இல்லாமல் ஜெனரல் வார்டில் கல்லீரல் புற்றுநோயால் இறந்து போனார் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். அதற்கு அடுத்த வருடம் அஞ்சல் தலையை மறக்காமல் வெளியிட்டோம். அவரின் பிள்ளை ஆக்லாந்து நகருக்கு வெகுகாலம் கழிந்து போன பொழுது ஐம்பாதாண்டுகள் கடந்தும் தியான் சந்த் பிரமிக்க வைத்த இடங்களில் அவரைப்பற்றிய குறிப்புகள் காணப்பட்டன. வியன்னாவில் நான்கு கரங்கள் ஒவ்வொன்றிலும் ஹாக்கி ஸ்டிக் ஏந்தி ஒரு சிலை சிரிக்கிறது. அது தியான் சந்த் எனும் சகாப்தம்.

ஜோதி பாசு எனும் மக்கள் நாயகன் !


ஜோதி பாசு அவர்களின் நினைவுக்கு எட்டியவரை எனும் சுயசரிதையை வாசித்து முடித்தேன். இருபத்தி மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்த ஆளுமை இவர் என்று இந்த நூலை வாசிக்கிற பொழுது நிச்சயம் உங்களுக்கு தோன்றாது. எங்கும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல்,ஒரு புள்ளியில் கூட பெருமிதத்தின் சாயல் இல்லாமல் தான் கண்டவற்றை பதிவு செய்கிறார் அவர். 

ஆசிரியர்களுக்காக,தொழிலாளர்களுக்காக,ட்ராம் வண்டியில் தனியார் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக,நில குத்தகைதாரர்களான எளிய மக்களுக்காக என்று நீண்ட நெடிய போராட்டங்களை வெகுசிரத்தையோடு அவர் நடத்தும் புள்ளிகள் அற்புதமானவை. சட்டமன்றத்திலேயே தங்கி இருந்து ஏழு நாட்கள் கைதாவதில் இருந்து தப்பியுள்ள சாகசத்தை அவர் செய்த கதையை நீங்கள் படிக்க வேண்டும்.

 

நாடெங்கும் வகுப்புவாதம் தலைதூக்கி நின்ற பொழுது மேற்கு வங்கம் மட்டும் எப்படி அமைதி பூமியாக இருந்தது என்பதற்கான விடை இந்த நூலில் உங்களுக்கு கிடைக்கும். அவருக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பை கட்சி மறுத்ததை கூட எந்த புகாரும் இல்லாமல் பதிவு செய்கிறார் காம்ரேட். சீனப்போர் பற்றி விவரிக்கும் பொழுது சீனாவை பற்றி பெரிதாக புகார் சொல்லாமல் இந்தியாவில் சீனா பற்றி தவறான தகவல்களை பிற்போக்கு சக்திகள் பரப்பின என்கிறார். 

நினைவுக்கு எட்டியவரை நூலில் காங்கிரஸ் எத்தகைய தேர்தல் குளறுபடிகளை மேற்கு வங்கத்தில் பலகாலம் நிகழ்த்தியுள்ளது என்பதை வாசிக்கிற பொழுது அப்பொழுதே ஜனநாயகத்தை அவர்கள் கேலிக்கு உள்ளாக்கி உள்ளார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. நூலின் சிக்கல் இதை ஒரே மூச்சில் வாசிக்க முடியாது,சுவாரசியமான திருப்புமுனைகளை நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது,தன் எளிமைப்பற்றி கூட அவர் வாயை திறப்பதே இல்லை. கட்சி,தோழர்கள்,மக்கள் இது மட்டும்தான் நூல் 
பாரதி புத்தகாலயம் வெளியீடு 
தமிழில் வீ.பா.கணேசன் 
விலை : 200

 
 
 
 

நெருப்பாகி நின்றவர்கள் !


ஞாநி அவர்களின் நெருப்பு மலர்கள் நூலை வாசித்து முடித்தேன். நெருப்பாக பொங்கி எழுந்த பெண்களைப்பற்றிய பதிவுகள் தான் இந்த நூல். எடுத்தால் ஒரே மூச்சில் வாசிக்காமல் இருக்க முடியாது. அமைதியாக இருப்பது போல காட்டிக்கொண்டு ஆங்கிலேயே அதிகாரி கேமரூனை சுட்டுக்கொன்ற ப்ரீதா எனும் வங்கத்தின் வீராங்கனை ஆட்டைக்கூட கொல்ல மறுத்தவர் என்பதைபார்க்கிற பொழுது தேசம் சார்ந்த சிந்தனை எப்படி அவர்களை செலுத்தி இருக்கிறது என்று உணர்வீர்கள்

பீனா எனும் பெண் ஆங்கிலேயே அதிகாரியை கொல்ல முயன்ற வழக்கில் நீதிமன்றம் ஏறிய பொழுது சொல்லும் வாசகங்கள் சிலிர்ப்பை உண்டு செய்பவை, ”நான் அந்த ஆங்கிலேய சகோதரனை மதிக்கிறேன். அவன் மீது எனக்கும் நேசமுண்டு. என் நாட்டை அடிமைப்படுத்தி இருக்கும் ஆங்கிலேய அரசின் அவமானகர செயலின் பிரதிநிதியாக இங்கே செயலாற்றிக்கொண்டு இருக்கும் அவரைக் கொல்வதன் மூலம் எங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய விரும்பினேன் !” என்கிறாள் 

தமிழகத்தில் இசை வேளாளர்களை கொண்டு சாதி மாநாட்டை தேவதாசிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளும் பொட்டுக்கட்டும் முறையை ஒழிப்பதற்காக நடத்திய,பெண்கள் மேடையேற பயந்த காலத்தில் தேவதாசிகளின் உரிமைக்காக ஓயாமல் குரல் கொடுத்த முத்துலட்சுமி ரெட்டியை உத்வேகப்படுத்திய மூவலூர் ராமமிர்தம் அம்மையாரின் வாழ்க்கை இன்னொரு நெருப்பு மலர். 

ருக்மா எனும் பெண் தாம்பத்தியத்தை மீட்டுத்தரும் சட்டப்பிரிவுக்கு எதிராக உதவாக்கரை கணவனிடம் இருந்து விடுதலை பெற கோர்ட்டின் தீர்ப்பை மதிக்க மறுக்கிறாள். இது காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் தோன்றுவதற்கு முன்னமே நடக்கிற சம்பவம். மேலும் அதை அவர் செய்ததற்கான காரணம் மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற தீரா விருப்பம் தான். அப்படியே மருத்துவம் படித்து மக்களுக்கு சேவை செய்யும் அவர் பெயராலே பூனாவில் ருக்மாபாய் மருத்துவமனை இன்றும் உள்ளது. இவரை மீண்டும் கணவரிடம் சேர்க்க திலகர் முதலியோர் நிதி திரட்டும் பணியில் இறங்கி இருந்தது சுவையான தகவல். 

ரமாபாய் அவர்களின் கதை பிரமிப்பை உண்டு செய்வது. வேதங்களை பெண்களுக்கு கற்பிக்க மறுத்த காலத்தில் நாற்பதாயிரம் ஸ்லோகங்களை கற்று சரஸ்வதி என்கிற பட்டம் பெற்ற அவர் பெண் விதவைகளுக்காக ஓயாமல் இயங்கி இருக்கிறார். நீர் அருந்த,உணவுண்ண,ஆடை அணிய என்று எக்கச்சக்க கட்டுப்பாடுகளுடன்,அவளின் நிழல் கூட படக்கூடாது என்று ஒதுக்கி நடக்கும் சமூகத்தில் வேலைக்காரியாக மற்றும் விபசாரியாக மாறிய விதவைகளின் வாழ்க்கையை மாற்ற சாரதா சதன் எனும் இல்லத்தை துவங்குகிறார். அதில் எண்ணற்றோர் பயன் பெற்றுக்கொண்டு இருந்த பொழுது பஞ்சம் மற்றும் ப்ளேக் நோயால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அங்கே குடியேறுவதை சனதானிகள் எதிர்க்க அவர் அங்கே இருந்து வெளியேறுகிறார். தலித் ஒருவருக்கு கல்வி கற்பிக்க ஆங்கிலேயே பீடம் மறுத்த பொழுது போராடி அவருக்கு கல்வி புகட்டுகிறார். ப்ளேக் நோயின் பொழுது செயலாற்றாத சாண்டர்ஸ்ட் எனும் ஆங்கிலேய கவர்னரை இவர் விமர்சித்து கடிதம் எழுத திலகரின் தொண்டர்கள் அவரை கொல்கிறார்கள். இந்து மதத்தை விட்டு வெளியேறிய அவரை விவேகானந்தரும்,திலகரும் வாழ்நாள் முழுக்க விமர்சிக்கிறார்கள். 

இந்திய தேசியக்கொடியை வடிவமைத்த ஆயுத புரட்சியை ஊக்குவித்த பிகாஜி ,”இறைவனுக்கு தொண்டு என்பது கொடுங்கோன்மையை எதிர்ப்பது தான் !” என்று சொல்கிறார். 
காந்தியை சிலிர்க்க வைத்த தில்லையாடி வள்ளியம்மை,குடிகாரர்களுக்கு எதிராக போராடிய சஹாதா பகுதி பெண்கள்,தெலுங்கனா போராட்டத்தில் பங்குகொண்ட சங்கப்பெண்கள்,சிருங்காரம் தோன்ற பல நூறு ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் ராதிகா சாந்தன் எழுதிய முத்துப்பழநி,கம்யூனிஸ்ட் போராளி மணியம்மா,வீட்டு ஓட்டை கூட மாற்ற மறுத்த சூழலில் ஓடு மாற்றி சாதித்த வீடு ஓட்டை தூக்கு பாக்கியம்,தோல்சீலை அணிய மறுக்கப்பட்ட காலத்தில் கொடுமையான காலத்தில் அவற்றை துணிகரமாக எதிர்கொண்ட சாணார்,நாயர் பெண்கள் என்று நெருப்பு மலர்கள் உங்களை பிரமிக்க வைப்பார்கள். 

ஞானபாநு வெளியீடு 
பக்கங்கள் 128
விலை அறுபத்தி ஐந்து

அம்பேத்கர் எனும் பேராசான் !


B.R.AMBEDKAR Perspectives on social exclusion and inclusive politics எனும் அற்புதமான நூலை வாசித்து முடித்தேன். அம்பேத்கர் அவர்களின் கட்டுரைகள்,பல்வேறு கமிஷன்கள் முன் அவர் வைத்த வாதங்கள்,நினைவலைகள்,கடிதங்கள்,நாடாளுமன்ற உரைகள் ஆகிய்வற்றைகொண்டு இந்த நூல் அவரின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான முப்பத்தி ஏழு ஆண்டுகால போராட்டத்தை பதிவு செய்கிறது. 
வர்க்கத்துக்கும் வர்ணத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஆங்கிலேயருக்கு அவர் எடுத்துக்காட்டும் புள்ளி அற்புதமானது. அது சமூகத்துக்கு எதிரானது அல்ல,பணம் பெற்றால் ஒருவர் முன்னேறி வர்க்க அடுக்கில் மேலே போய் விடலாம்-இங்கே அது சாத்தியம் இல்லை என்று தெளிவாக பதிவு செய்கிறார். 
எப்படி கல்விக்கூடங்கள்,அரசின் கவுன்சில்கள்,வேலை செய்யும் இடங்கள்,வர்த்தகம் என்று பல்வேறு புள்ளிகளில் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ஆதாரங்களோடு அவர் அடுக்கும் பொழுது கைதட்டலாம் போலத்தான் இருக்கிறது. 
ஆங்கிலேய அரசை சீன தையல்காரன் என்கிறார்,ஒரு ஆடையை பிரதி எடுக்க சொன்னால் அதில் உள்ள ஒட்டையைக்கூட அப்படியே பிரதி எடுக்கும் அவனைப்போலவே சமூகத்தின் எந்த ஏற்றத்தாழ்வையும் மாற்ற நீங்கள் முயலவில்லை என்கிறார் அம்பேத்கர். 
காந்தியுடன் பூனா ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க அவர் நடத்தும் உணர்வுகரமான போராட்டம் நம்மையும் என்னவோ செய்யும். தனித்தொகுதியை அம்பேத்கர் கேட்க காந்தியோ நான்கு வேட்பாளர்கள் ஒடுக்கப்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பொதுத்தொகுதியில் நிற்கட்டும் என்கிறார். காந்தியின் உண்ணாவிரதம் அப்பொழுது பிரிட்டன் பிரதமர்,அதிகாரிகள் ஆகியோருக்கு எழுதப்படும் கடிதங்கள்,செய்திதாள்களின் கட்டுரைகள் அற்புதமாக அப்பொழுது நடந்தவற்றை கட்டமைக்கின்றன 

ஐ சி எஸ்,கல்விக்கூடங்கள்,தொழில்கூடங்கள் ஆகியவற்றில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை கேட்டு அம்பேத்கர் நிகழ்த்தும் உரைகள் வெகு அற்புதமானவை. எப்படி பொருளாதரத்தில் முன்னேறவே முடியாமல் தங்களின் ஆளுமையை அடகு வைக்கும் ஆட்களாக தம்மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று ஆதாரங்களோடு பட்டியலிடுகிறார் அண்ணல். 
அவரைக்கொண்டு காங்கிரசை எதிர்கொண்ட பிரிட்டன் அரசு ஆட்சியை விட்டுச்செல்லும் பொழுது பெரிதாக அவரை கண்டுகொள்ளாத பொழுது,நேரு அவரை சட்ட அமைச்சராக்கி அவரைக்கொண்டே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சட்ட ரீதியான உரிமைகளை பெற்றுத்தருவது நெகிழ்வை உண்டு செய்யும். முதல் சட்டதிருத்தத்தை முன்வைத்து அம்பேத்கர் பேசும் உரையோடு நூல் முடிகிறது. கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் 

தொகுப்பு: சுகதியோ தோரத் மற்றும் நரேந்தர் குமார் 
ஆக்ஸ்போர்ட் இந்தியா வெளியீடு 
விலை : 395

புத்தகங்கள் புத்தகங்கள் !


புத்தகங்கள் மட்டும் தான் இந்த பரபரப்பான வாழ்க்கையை வெகு சுவாரசியமானதாக என்னளவில் ஆக்குகிறது என்றே சொல்லத்தோன்றுகிறது. நேற்றைக்கு அண்ணன் ஒருவரின் வீட்டுக்கு போயிருந்தேன். அத்தனை புத்தகங்கள்,அவர் பரந்த மனதுக்காரர். எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொண்டு போ ! என்று விட்டார். ஒரு பதினெட்டு புத்தகங்களை அள்ளி பையில் திணித்தேன். இடம் போதவில்லை; அவர் ஒரு பையை நீட்டினார். அள்ளிக்கொண்டு அறை வந்து சேர்ந்த பொழுது மணி பதினொன்று. புத்தகங்களை தெரிவு செய்யமட்டுமே இரண்டு மணிநேரம் எடுத்துக்கொண்டேன். 

கல்லூரியில் யாரின் பிறந்தநாள் என்றாலும் ஒரு புத்தகம் என்னால் பரிசளிக்கப்பட்டு இருக்கும். அப்படி அவர்கள் தமிழ் புத்தகங்கள் படிக்க மாட்டார்கள்,வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்றால் மின் புத்தகங்கள் கண்டிப்பாக பார்சல்  இப்பொழுது தம்பிகளும் தங்கைகளும் நான்காயிரம் வரை பட்ஜெட் போட்டு என்ன புத்தகம் வேண்டுமோ வாங்கிக்கொள் என்கிறார்கள்,ஏற்கனவே அம்மா ஆடை வாங்க கொடுத்த காசில் வாங்கிய புத்தகங்களையே படிக்க வேண்டும் என்று அவர்களிடம் சொல்லத்தான் ஆசை. எல்லாவற்றையும் வாங்கிவிட துடிக்கும் மனது அதை சொல்லாமல் தடுக்கிறது. இப்பொழுதெல்லாம் பேருந்து நிலையத்தில் புத்தகத்தோடு மதியம் இரண்டு மணிக்கு உட்கார்ந்தால் மூன்றரை கூட ஆகிறது,எனக்கு போட்டியாக ஒரு நாளைக்கு ஒரு காதல் ஜோடி என்று மாறிக்கொண்டே இருக்கிறார்கள். 

ஆச்சரியமாக இதுவரை நான் படித்து முடித்த புத்தகங்கள் எனக்கு பரிசாக வந்ததே இல்லை. நேற்றைக்கு தெரிந்த தோழி ஒருவருக்கு பிறந்தநாளுக்கு புத்தகம் வாங்கித்தரலாம் என்று என் முயற்சியில் புத்தகங்களை விற்க ஆரம்பித்து இருந்த கடையில் போய் நின்றேன். “யாரும் வாங்குறது இல்லை தம்பி ! எல்லாத்தையும் நிறுத்தியாச்சு ” என்றார்கள். அருகில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் காற்றாடிக்கொண்டு தான் இருக்கிறது பெரும்பாலும். எங்கள் கல்லூரி அன்பர்கள் போவதே இல்லை. அருகில் இருக்கும் உணவுக்கடைகளில் குவியும் கூட்டத்தில் பத்தில் ஒரு பங்கு குவிந்தால் கூட போதும் என்கிற வருத்தம் தான் பொங்குகிறது. வாசிப்பை நேசிக்க வேண்டும் என் சகாக்கள். எப்பொழுது நடக்கு

எம்.ஜே. எனும் மாயக்காரர் !


 மைக்கேல் ஜாக்சன் பாப் உலகின் மன்னன் ,நாடுகளை கடந்த கலைஞன்,இசையாலே இதயங்களை கரைத்தவர் . மைக்கேல் ஜாக்சன் இந்தியானா மாகாணத்தில் கேரி நகரில் பத்து குழந்தைகள் உள்ள அமெரிக்க ஆப்ரிக்க குடும்பத்தில் ஏழாவது பிள்ளையாக பிறந்தார் . அப்பா ஸ்டீல் ஆலையில் வேலைப்பார்த்து வந்தார் . மொத்தம் ஐந்து சகோதரிகள்,நான்கு சகோதரர்கள்,ஒரு சகோதரன் பிறந்த சில காலத்திலேயே இறந்து விட்டான். ஜாக்சனின் இளமைக்காலம் மகிழ்ச்சி கரமானதாக இல்லை . அவரின் தந்தை ஜோசப் ரொம்பவும் கண்டிப்பானவர். அடிக்கடி பெல்ட் அடி பட்ட அனுபவம் ஜாக்சனுக்கு உண்டு .அப்பாவை பார்த்தாலே வாந்தி எடுத்து விடுகிற அளவிற்கு அப்பாவின் மீது பயம் உண்டு . ஆனால் தான் வாழ்க்கையில் பெரிய அளவில் மிளிர்ந்ததற்கு காரணம் அவரின் அப்பாவின் கண்டிப்பு தான் என நினைவு கூர்வார்.

சுட்டிப்பையனாக ஐந்து வயதிலேயே மேடை ஏறி பாடல் பாடிய அனுபவம் உண்டு ஜாக்சனுக்கு . தான் அண்ணன்மார்கள் நடத்தி வந்த ஜாக்சன் ப்ரோதேர்ஸ் இசைக்குழுவில் தான் முதன்முதலில் பாடினார் . அந்த குழுவில் இரண்டே வருடத்தில் முன்னணி பாடகராகவும் உயர்ந்தார் ,அப்பொழுதே நன்றாக நடனமும் ஆடுவார் .இளம் வயதிலேயே குறும்புக்காரர்.அக்காவின் ஆடைக்குள் சிலந்திகளை போட்டு விட்டு வேடிக்கை பார்ப்பார்

இளம் வயதில் பல்வேறு பாடல்களை பாடி மாபெரும் புகழை இவர்களின் இசைக்குழு பெற்றது . அதன் விளைவாக மொடவுன் ரெகார்ட்ஸ் எகிற இசைக்குழுமம் இவர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டது. அங்கே பல்வேறு ஹிட்களை தந்தார்கள் இவர்கள் .அமெரிகாவின் டாப் நாற்பது ஹிட்களில் தொடர்ந்து அவர்களின் பாடல்கள் இடம்பெற்றன .அதில் ஜாக்சனின் ஆதிக்கமே அதிகம். எனினும் மூன்றே ஆண்டுகளில் அவர்களுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார்கள். படைப்பாற்றலுக்கும் ,புதிய முயற்சிகளுக்கும் இடம் தராததே காரணம் என ஜாக்சன் பின்னாளில் இந்த பிரிவை பற்றி குறிப்பிட்டார்

இதற்கு பிறகு எபிக் ஸ்டுடியோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் ஜாக்சன். இங்கே தான் கிவின்சி ஜோன்சின் அறிமுகம் கிடைத்தது .பல்வேறு ஆல்பங்களை அவரே பிறகு தயாரித்தார் . அவர் செல்லமாக ஜாக்சனை ஸ்மெல்லி என அழைப்பார். ஓயாது உழைக்க வேண்டும் என்பதை இந்த காலங்களில் உணர்ந்தார்மைக்கேல் ஜாக்சன் . தன் முதல் ஐந்து இசைக்கோர்வைகளில் தன் குரல் மின்னி மவுஸ் மாதிரி இருந்ததாக தன்னையே சுய விமர்சனம் செய்துகொண்டார் ஜாக்சன்

ஏகத்துக்கும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர் .நடனப் பயிற்சியின் பொழுது மூக்கையும் உடைத்து கொண்டார் . பெப்சிக்காக ஒரு நிகழ்வில் கலந்துக்கொண்ட பொழுது தீப்பற்றி உடல் எல்லாம் பலத்த தீக்காயங்கள் . விட்டிலிகோ எனும் உடல் நிறமிக் குறைபாடு தாக்கியது . அத்தனையும் அடிக்கடி அறுவை சிகிச்சைக்கு உள்ளாக்கியது. என்றாலும் இவை எதுவும் அவர் இசை நிகழ்வில் வெளிப்பட்டது இல்லை. ரோபோட் டான்ஸ் மூன் வாக் என இவர் அறிமுகப்படுத்திய நடன யுக்திகள் இளைஞர்களை இன்றைக்கும் கட்டி போடுகின்றன.

புவி ஈர்ப்பு விசையை மீறி நினைத்தவாறு கால்களை நகர்த்த உதவும் பூட்சை தானே உருவாக்கினார் .அதன் பேடன்ட்டை பதிவும் செய்து கொண்டார்இதை அணிந்து கொண்டு முன்பக்கம் சாதாரணமாக வளைவதை விட அதிகமாக வளைய முடிந்தது அவரால் .
இதனால் தான் ரப்பரை போன்ற வளைக்கிற ஸ்டெப்ஸை ஜாக்சன் போட முடிந்ததாக சொல்வார்கள்

மைக்கேல் ஜாக்சனின் வாழ்வில் மறக்கவே முடியாத ஆண்டு 1982 இந்த வருடம் தான் ஸ்பீல்பெர்கின் ஈடி படத்திற்க்கான ஆடியோ கோர்வையை தன் குரலில் பதிவு செய்தார் ஜாக்சன். இதற்காக கிராமி விருது அவருக்கு கிடைத்தது.

அதே வருடம் வெளிவந்த ஜாக்சனின் த்ரில்லர் வெளிவந்தது. இன்றைக்கும் உலகில்;அதிகமாக விற்கும் இசை ஆல்பம் .இசை உலகின் மன்னன் என ஜாக்சனை இதற்கு பின் தான் கொண்டாடத்தொடங்கியது உலகம், த்ரில்லர் ஆல்பத்திற்காக எட்டு கிராம்மி விருதுகளை ஜாக்சன் அள்ளினார் . இது முப்பது ஆண்டுகளாக அப்படியே உள்ள சாதனை

எய்ட்ஸ் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏராளமான நிதி திரட்டி உள்ளார். தன்னுடைய மேன் ப்ரம் தி சிங்கள் பாடலின் மூலம் வந்த வருமானத்தை ஆதரவற்றோருக்கு தந்ததில் தொடங்கியது இது. கடைசி வரை ஏழை மக்களின் துயரங்களை நினைவு படுத்தும் வகையில் கருப்பு பட்டை ஒன்றை கையில் அணிந்து இருந்தார் . ஆப்ரிக்காவின் பகுதிகளுக்கு பயணம் போன பொழுது மக்களோடு ஏகத்துக்கும் அளவளாவி அன்பு காட்டினார்.அவரை தங்கள் மண்ணின் மைந்தன் என கொண்டாடினார்கள் அவர்கள் ,

டிஸ்னி நிறுவனத்திற்காக கேப்டன் EO என்கிற குழந்தைகள் படத்தில் நாயகனாக நடித்து உள்ளார் . அந்த படம் அவரின் மரணத்திற்கு பின் மீண்டும் அமெரிக்காவின் டிஸ்னி லாண்ட்களில் திரையிடப்பட்டது .தன் வீட்டில் மிகப்பெரிய தீம் பார்க் ஒன்றை உருவாக்கி அதில் பல்வேறு ஆதரவற்ற குழந்தைகளை விளையாட செய்தார் . அதற்கு முக்கிய காரணமாக எனக்கு கிடைக்காத அழகான இளமைக்காலம் இவர்களுக்கு வைக்கட்டுமே என்றார்

தன் சுயசரிதயை மூன்வாக்கர் என்கிற தலைப்பில் வெளியிட்டார் .அதில் கண்ணீர் ததும்ப தன் வாழ்வில் பட்ட துன்பங்களை சொல்லி இருப்பார் .1992 இல் வில் சேரில் அமர்ந்தப்படியே விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் பாடிய பாடல் தான் “ஹீல் தி வேர்ல்ட்”(உலகின் காயத்தை ஆற்றுவோம் )இசை நிகழ்வுக்கான பயிற்சின் பொழுது ஏற்பட்ட காயத்தால் இப்படி வீல் சேரில் அமர்ந்து பாட நேரிட்டதாக சொன்ன பொழுது உலகம் உணர்ச்சி வசப்பட்டது .

அமெரிக்காவின் நூலகம் ஒன்றில் பல காலமாக ஜாக்சன் புத்தகங்களை திரும்ப தராததால் பத்து லட்சம் டாலர் அளவிற்கு அபராதம் உயர்ந்தது .அந்த நூல்களை அவரின் கையொப்பத்தோடு திருப்பி தந்தால் மட்டுமே போதும் என அந்த நூலகம் அறிவித்தது ரகளையான க்ளைமாக்ஸ்

ஜாக்சனின் உலகின் காயத்தை ஆற்றுவோம் ஐநா சபையால் உலக பாடலாக அங்கீகரிக்கப்பட்டது .அவரின் எர்த் சாங் உலக சுற்றுச்சூழல் தினத்தின் அதிகரப்போர்வ பாடலானது .தென் கரோலினா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மாநில கீதமும் மைக்கேல் ஜாக்சனின் படைப்பு தான்

வாழ்கையின் இறுதி காலங்களில் கடன் சுமையால் பெரிதும் கஷ்டப்பட்டார் . குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளக்கியதாக வழக்குகள் கோர்ட் வரை சென்றன. அவர் அவை எல்லாவற்றில் இருந்தும் விடுதலை பெற்றார்

அந்த கடன்களை தீர்க்கவும் ,ரசிகர்களை சந்திக்கவும் ஐம்பது இசை நிகழ்வுகளை உலகம் முழுக்க நடத்த திட்டமிட்டார் .அதற்கான பயிற்சியில் இருக்கும் பொழுது அதிகமாக வழி நிவாரணியான மருந்தை டாக்டர் தர உயிர் பிரிந்தது ஜாக்சனுக்கு . உலகமே கண்ணீரால் அந்த இசை நாயகனுக்கு பிரியா விடை கொடுத்தது . உலகை எவ்வளவோ உற்சாகப்படுத்தினாலும் தன் வாழ்க்கை முழுக்க சோகத்தால் தான் நிரப்பிக்கொண்டார் கிங் ஆப் பாப். தன்னைப்பற்றி கவலை கொள்ளாமல் சுற்றி இருப்போருக்காக ஓயாமல் ஓடி ஓடி அவர் ஓய்ந்து போனது கசப்பான க்ளைமேக்ஸ்

“எவ்வளவு செல்வம் இருக்கிறது என்பது முக்கியமில்லை. உன்னுடைய இதயத்தால் அன்பால் பிறரை எவ்வளவு நிறைக்கிறாய் என்பதே முக்கியம் !” என்று சொன்ன உலகை நேசித்த அதன் காயங்களை ஆற்ற இசையால் பிறப்பெடுத்த கிங் ஆப் பாப்பின் பிறந்தநாள் இன்று
 
 

டால்ஸ்டாய் எனும் மனிதம் பொங்கிய மகத்துவர் !


டால்ஸ்டாய் மாமனிதர்,தலை சிறந்த படைப்பாளி. வாழ்க்கையின் ஆரம்பகட்டங்களில் போக்கிரியாக திரிந்த டால்ஸ்டாய் வேட்டைக்கு போன பொழுது கரடி ஒன்றின் ரத்தம் சொட்டிய இரவு அந்த இரவு அவரைப்புரட்டி போட்டது. 

பைபிள் அவரை செம்மைப்படுத்தியது. சக மனிதர்களின் மீதான அன்பு அவரின் எழுத்தில் கசிந்து கொண்டே இருந்தது. என்றைக்கும் எழுத்தை பொருளீட்டும் ஒரு மூலதனமாக அவர் பார்த்தில்லை. எளிமையாக வாழ வேண்டிய வாழ்கையை அரசும்,ஓயாமல் பொருள் தேடி அலையும் பேராசை எண்ணங்களும் எப்படி சிக்கலாக்கி விடுகின்றன என்று வெகு இயல்பாக சொல்லும் அவரின் எழுத்து உங்களை அப்படியே சொக்க வைக்கும். 

டால்ஸ்டாய் அவர்களின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு காந்தியடிகள் அவருக்கு ஒரு கடிதம் தீட்டினார். “உங்களின் கதைகளில் அன்பு,இரக்கம்,மனிதம் நிரம்பிக்கிடக்கிறதே ? எது உங்களை இப்படி எழுத தூண்டியது ?” என்று கேட்க,”உங்கள் தேசத்தில் தமிழ் எனும் மொழியில் இருக்கும் திருக்குறள் என்கிற நூலை வாசித்தேன். அதனாலே இப்படி ஒரு தாக்கம்! நீங்கள் அதை வாசித்து விட்டீர்களா ?” என்று கேள்வி கேட்டார் டால்ஸ்டாய் 

டால்ஸ்டாய் ஒருமுறை ஒரு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். ஒரு பெண்மணி அவரின் மூட்டையை தூக்க யாரோ எளியவர் என்று எண்ணி இவரை அழைக்க இவரும் அப்பணியை செவ்வனே செய்தார். அதற்கு பின் விஷயம் தெரிந்து அப்பெண்மணி பதறி கொடுத்த பணத்தை திருப்பி கேட்க ,”நான் உழைத்த உழைப்புக்கான பணம் அதை. அதை ஏன் நான் திருப்பி தரவேண்டும் ?” என்று கேட்டார். 

எழுத்தில் எது நல்ல எழுத்து என்பதில் இங்கே பலரின் வாதங்கள் பல்வேறு வகையில் அமையலாம் . ஆனால் சில எழுத்துக்கள் வாசிப்பதற்கு சுகம் தராவிட்டாலும் அதன் நோக்கத்தால் காலங்களை கடந்து நிற்கிறது

டால்ஸ்டாய் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு பிறகு புத்துயிர்ப்பு எனும் நாவலை எழுதப்போவதாக அறிவித்தார் !அதற்கு யார் வேண்டுமானாலும் பணம் கட்டி விற்பனை உரிமையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வேறு செய்தார் !பணத்திற்காக ஆசைப்படாத அவர் அப்படி சொன்னதன் நோக்கம் ரஷ்ய ஜார் அரசு டோகொபாஸ் எனும் மக்களை நாட்டை விட்டு வெளியேற்றி உத்தரவிட்டது அவர்களை கனடா அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது .அதற்கான பயண மற்றும் அங்கு நிலம் வாங்க பணம் இல்லாமல் அந்த மக்கள் வாடியதால் அவர்களுக்கு உதவவே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார் 

அந்த நாவல் பலமுறை திருத்தப்பட்டு ,பல்வேறு குளறுபடிகளோடு பல்வேறு இடங்களில் வெளிவந்தது ,டால்ஸ்டாய் அவர்களின் டச் இதில் இல்லை என்று வேறு எல்லாரும் புலம்பினார்கள். டால்ஸ்டாய் அவர்களின் நோக்கம் ஆனால் நிறைவேறியது. அந்த மக்கள் வெற்றிகரமாக அங்கே குடியேறினார்கள். அவர்கள் இப்பொழுது தங்களை டால்ஸ்டாய் டுகொபார்ஸ் என்றே அழைத்து கொள்கிறார்கள். அவருக்கு எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சிலை எழுப்பி அஞ்சலி செலுத்துகிறார்கள் 

டால்ஸ்டாய் தன்னுடைய எழுத்தை பணமீட்டும் மூலமாக பார்த்தது இல்லை. வீட்டுக்கு என்று பணம் எதையும் விட்டுவைக்க அவர் ஒப்பவில்லை. ராயல்டியை கேட்க வேண்டும் என்கிற மனைவியின் கட்டாயத்துக்கு மசியாமல் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்த நாள் அவர் மரணம் அடைந்தார். டால்ஸ்டாயின் எழுத்தும்,டுகொபார்ஸ் மக்களும் அவரை என்றும் ஞாபகப்படுத்தி கொண்டே இருப்பார்கள்

நாடு பிரித்த மவுண்ட்பேட்டன் !


மவுன்ட் பேட்டன் மறைந்த தினம் இன்று. இந்தியாவின் வரலாற்றில் இந்தியாவின் பிரிவினைக்கு நேரடி சாட்சியாக அமைந்த ஒரு முக்கியமான ஆளுமை இவர். வெள்ளையனே வெளியேறு இயக்கம் உருவான காலத்தில் ஆங்கிலேய அரசுக்கு உலகப்போர் சமயத்தில் முஸ்லீம் லீக் உதவிகரமாக இருந்தது. அப்பொழுதே தனிநாடு கோரிக்கையை ஜின்னா வைக்க பார்க்கலாம் என்கிற ரீதியில் பதில் சொன்னார் ஆங்கிலேய கவர்னர். அதற்கு முந்திய தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான தொகுதிகளில் வென்றிருந்தபடியால் முஸ்லீம் லீகுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க அது மறுத்திருந்தது.

ஆங்காங்கே கனன்று கொண்டிருந்த பிளவுகளை பெரிதாக்கும் வேலையை ஜின்னாவும் அவரின் கட்சியும் கச்சிதமாக செய்தன. இதற்கு ஹிந்து மதவாத அமைப்புகளின் செயல்கள் இன்னும் வேகம் தந்தன. இந்தியாவிற்கு விடுதலை தரலாம் என்று தொழிலாளர் கட்சி இங்கிலாந்தில் ஆட்சிக்கு வந்ததும் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவிற்கு விடுதலை என்று காங்கிரஸ் சொல்ல,பிரித்து கொடுத்துவிட்டு போ என்றது முஸ்லீம் லீக். 

எண்ணி ஐந்தே வருடங்களில் பாகிஸ்தான் கோரிக்கையில் பிடிவாதமானது லீக். முஸ்லீம்கள் தொகுதிகள் பெருவாரியாக 1946 தேர்தலில் வென்றது அக்கட்சி. நேரடி செயல்பாட்டு தினம் என்று அறிவித்தார் ஜின்னா. முதல்வராக இருந்த முஸ்லீம் லீகின் சுஹ்ரவர்தியே கலவரங்களை முன்னின்று நடத்தினார். வங்கம் ரத்தமயமானது. பஞ்சாப்,தற்கால பாகிஸ்தான் என்று வன்முறை தீ பரவ ஆரம்பித்தது. வேவல் பிரபு பைத்தியக்காரர்களின் விடுதி என்று குறிப்பு எழுதி வைத்திருந்தார். யாரை அடுத்த வைஸ்ராயாக அனுப்பலாம் என்று யோசித்தார் அட்லி. 

பர்மாவில் ஜப்பானுக்கு எதிரான போரில் தலைமை தாங்கிய மவுன்ட்பேட்டனை அழைத்தார். அவர் இரண்டு கோரிக்கைகள் வைத்தார். தனிவிமானம்,கூடவே முடிவுகளை அடிக்கடி அரசுக்கு தெரியப்படுத்தும் கட்டாயமின்மை ஆகியவையே அது.அதற்கு ஒப்புக்கொண்டார் அட்லி. இந்தியா வந்த மவுன்ட்பேட்டன் எவ்வளவு முயன்றும் ஜின்னாவை அசைக்க முடியவில்லை. 

காந்தி உங்களை முதலில் கொண்டு போய் எளிமையான குடிசையில் விடுதலை கிடைத்ததும் அமர வைக்க வேண்டும் எளிமை முக்கியம் என்று பயமுறுத்தி விட்டுப்போய் இருந்தார். அவரை சமாதானப்படுத்துவது பெரும்பாடாக இருந்தது. தன்னின் பிணத்தின் மீது தான் பிரிவினை நடக்க வேண்டும் என்று அவர் சொல்லி இருந்தார். நேரு மற்றும் படேல் ஆகியோரிடம் அனுமதி பெற்று விட்டார் மவுன்ட்பேட்டன். அதை காந்தியிடம் சொன்ன பொழுது என் இந்தியா என்னோடு இல்லை,நான் இருளில் உழல்கிறேன் என்று காந்தி சொன்னார். 

நாட்டை துண்டாடுவது என்று ஆனதும் வேகமாக காரியங்கள் துவங்கின. ஜூன் மூன்று அன்று பிரிவினை என்று ஒப்புக்கொள்ளப்பட்ட பொழுது இருமாத காலத்துக்குள் விடுதலை என்று அறிவித்தார் இந்த மனிதர். காரணம் அவரிடம் பர்மாவில் ஜப்பானின் படைகள் சரணடைந்த தினத்தன்று விடை பெற்றால் நன்றாக இருக்கும் என்றே இத்திட்டம். இரண்டு மாதத்துக்கும் குறைவான காலத்தில் எல்லாமும் பிரிக்கப்பட்டது. மக்கள்,இடங்கள்,பொருட்கள்,நதிகள் எல்லாமும். ரட்கிளிப் எனும் மனிதர் அமர்த்தப்பட்டார். வேகமாக பிரித்து கொடுங்கள் என்றுவிட்டார் மவுன்ட்பேட்டன். 

மவுண்ட்பேட்டனுக்கு ஜின்னா இன்னம் சில மாதத்தில் இறந்துவிடுவார் என்கிற ரகசியம் அப்பொழுது தெரியாது. அதுமட்டும் தெரிந்து இருந்தால் தான் பிரிவினைக்கே ஒத்துக்கொண்டு இருந்திருக்க மாட்டேன் என்று நள்ளிரவில் சுதந்திரம் நூல் ஆசிரியர்களிடம் பதிவு செய்கிறார். நேருவுக்கும் அவரின் மனைவிக்கும் இருந்த நட்பு தான் அவரை இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த பொழுது செங்கோட்டையில் கொடியேற்றும் அற்புதத்தை நிகழ்த்தியது. அவர் இந்தியாவுக்கு பல்வேறு சமஸ்தானங்கள் கிடைப்பதை உறுதி செய்தார்.

மவுண்ட்பேட்டனின் முக்கியமான தோல்விகள் என்னென்ன என்று பார்த்தால் பிரிவினையின் பொழுது ஆங்கிலேயரை பத்திரமாக காப்பாற்றி நாட்டுக்கு அனுப்புவதில் குறியாக இருந்த மனிதர் இந்தியர்களை காப்பதில் அந்த அளவுக்கு முனைப்பு காட்டவில்லை என்பதும்,பிரிவினையை திட்டமிட்டு படிப்படியாக நிகழ்த்தாமல் செய்ததும் குறிக்கத்தக்கன. இந்தியாவின் பிரிவினையை தான் பிரிட்டன் விரும்பியது என்பது உண்மை. அதை கச்சிதமாக இவர் செய்து வைத்தார்.. ஜின்னா அப்படி நினைக்கவில்லை. இந்த பிரிவினை தற்காலிகமானது என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. மும்பையில் இருந்த தன்னுடைய வீட்டை இன்னொருவருக்கு (ஹைதராபாத் நிஜாமுக்கு ) விற்க மறுக்கிற அளவுக்கு. அவர் ஒரு கட்டத்தில் இந்தியாவின் பகுதி,பாகிஸ்தானின் பகுதி,இரண்டிலும் சேராத பகுதி ஆகிய மூன்றும் இணைந்த யூனியனில் இருக்க இசைந்தார் என்பதை நோக்க வேண்டும். 

மவுண்ட்பேட்டன் இறுதியில் வன்முறையால் உயிர் இழந்தார் என்பது சோகமான முடிவு. அதை நிகழ்த்தியது அவர் நாட்டில் இருந்த பிரிவினைவாதிகள்