Month: ஒக்ரோபர் 2013
சிவந்த மனிதர் டூனன்ட் !
அக்டோபர் 30, செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டூனன்ட் நினைவு தினம் இன்று
ஹென்றி டூனன்ட் என்கிற ஒப்பற்ற மனிதர் மறைந்த தினம் இன்று. சுவிட்சர்லாந்து நாட்டில் மிகப்பெரிய செல்வவளம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் இவர் ;இளம் வயதிலேயே வியாபாரத்தில் ஆர்வம் கொண்டு இருந்தவர்;வடக்கு ஆப்ரிக்காவில் மிகப்பெரிய ஒரு முதலீட்டு திட்டத்தோடு அங்கே நீர்வள பயன்பாட்டு உரிமையை பெறுவதற்காக கிளம்பினார். அங்கே ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருந்த பிரான்ஸ் தேசத்து மன்னரை சந்திக்க போனார். அங்கே போரில் எப்படியெல்லாம் வீரர்களும் மக்களும் துன்பப்படுகிறார்கள் என பார்த்து மனம் நொந்து போனார்.
போரில் துன்பப்படும் ,காயப்படும் ஜீவன்களை காப்பாற்ற ஒரு நடுநிலையான அமைப்பை உண்டாக்கி காயப்பட்டவர்களின் உயிர் காக்க,உதவி செய்ய உருவாக்க வேண்டும் என அவர் எடுத்த முன்னெடுப்பு தான் செஞ்சிலுவை சங்கம்;தன் ஒட்டுமொத்த வருமானத்தையும் போட்டு அதை நடத்தினார்; பல்வேறு நாடுகளை அதில் இணைத்தார் .நடுவே பிசினஸ் படுத்து தொலைத்தது;எல்லாம் போனது-பிச்சைக்காரன் போல வாழ்வு வாழ்ந்தார்-எங்கே இவர் என்றே யாருக்கும் தெரியாது.மனிதர்
இறந்தே போனார் என பலரும் நினைத்தார்கள்.
அவர் வரிகளிலேயே பாருங்கள்,” நான் ஓரிரு ரொட்டித்துண்டுகளில் வாழ்கிறேன். என்னுடைய சாயம் போன கோட்டை செஞ்சிலுவை சங்கத்துக்கு உதவி கேட்க போகும் பொழுது மையால் கருப்பாக்கி கொள்கிறேன்; எங்கேனும் இருக்கும் கதவுகளின் ஓரமாக [படுத்து இரவில் தூங்கிக்கொள்கிறேன்.
முதல் நோபல் பரிசு அறிவிக்கபட்ட பொழுது அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.அதையும் முழுக்க செஞ்சிலுவை சங்கம் சிறப்பாக செயல்பட கொடுத்துவிட்டார் ஒரே ஒரு அறையில் அனாதையாக வாழ்ந்தார் ; தனியாளாக தன் அறையில் இறந்து போனார். எனினும் இன்றைக்கும் பலபேரின் உயிர்களை காப்பாற்றி அவரின் கனவை நிலைபெற செய்து இருக்கிறது செஞ்சிலுவை சங்கம்;
அதுதானே வெற்றி
கலைப்பெருக்கு கவலைகளில் !
பொங்கி வரும் கலைவடிவங்கள் அற்புதமான ஆக்கங்கள் கொதிப்பான நிலைகளில் எழுவது அவற்றை இன்னமும் உன்னதமாக்குகிறது. நெரூடா எழுதிய காலமெல்லாம் அடக்குமுறையும்,வன்முறையும்,அரசின் கரங்களும் துரத்தின. “பெரிய இலைகளையும்,எரிமலைகளையும் பாட மாட்டேனா என்று கேட்பவர்களே. குருதி ஓடும் என் நாட்டின் தெருக்களை வந்து பாருங்கள்.” என்று அவர் எழுதினார்
சோற்றுக்கு கூட வழியில்லாத நிலையில்,உலகின் பசியாற்ற பாரதியால் பாடமுடிகிறது. நாட்டில் கலவரங்கள் மிகுந்திருந்த பொழுது மார்லேவால் “ஆயுதங்களை கீழே போடுங்கள் ; அன்பை ஏந்துங்கள் ” என்று புரட்சி கீதம் இசைக்க முடிகிறது. இருபத்தி ஒரு வயதில் டேரோசாவால் மரணத்தின் பிடியில் “அடங்கிக்கிடக்கிறது என் அன்னை தேசம் ; எழுக” என்று பாடி பலநூறு இளைஞர்களை பசிக்கு நடுவே பண்படுத்த முடிந்திருக்கிறது.
தி தேர்ட் மேன் பட வசனம் காதில் அலைமோதுகிறது , “இத்தாலியை போர்கிஸ் ஆண்ட முப்பது
ஆண்டுகளில் போர்,வன்முறை,தீவிரவாதம்,கொலைகள்,ரத்த ஆறு ஆகியனவே நிறைந்து இருந்தன. ஆனால்,அக்காலத்தில் அவர்கள் ஏஞ்சலோ,டாவின்சி,மறுமலர்ச்சி என கலக்கினார்கள். ஐநூறு ஆண்டுகள் அமைதியும்,ஜனநாயகமும் இருந்தும் ஸ்விட்சர்லாந்து என்ன சாதித்தது ? கூக்கு கடிகாரம் மட்டும் உருவாக்கினார்கள். !” சுற்றியிருக்கும் சிக்கல்களை சந்தோசமாக எடுத்துக்கொள்வோம் நாமும் !
மைக்ரோசாப்ட் மாயன் கேட்ஸ் !
கணிப்பொறியின் காதலன் …ஓயாத உழைப்பின் அடையாளம் …மைக்ரோசாப்டின் மாஸ்டரின் மென்மையான பக்கங்கள் இவை
பில் கேட்ஸ் அவர்களின் தந்தை அரசாங்க அட்டர்னி ஜெனரல் .அம்மா பிரபலமான வங்கியின் இயக்குனர்களில் ஒருவர் .கேட்ஸ் சுட்டி பையனாக இருக்கும் பொழுது அதிகமாக படித்து என்சைக்ளோபீடியா தான்…பெரும்பாலும் அதன் மீதே படுத்து தூங்கி விடுவாராம் !
படிப்பில் கெட்டியாக இருந்தாலும் அடிக்கடி வகுப்பை கட் அடித்து விட்டு தனக்கு பிடித்த விசயங்களை செய்ய ஊர் சுற்றுவார் .விளைவு பயந்து போன பெற்றோர் seattle நகரில் உள்ள படு ஸ்ட்ரிக்டான பள்ளியில் சேர்த்து விட்டார்கள் .அங்கே தான் பரந்த உலகின் அற்புதங்களை ரசிக்க கற்றுக்கொண்டேன் என்பார் கேட்ஸ் .
பள்ளி காலத்தில் பதிமூன்று வயதில் டிக் டாக் டோ எனும் கேமிற்கு ப்ரோக்ராம் போட்டார் கேட்ஸ் .அதை கணினியில் ஓட விட்டதும் ,மெதுவாக கணினி அதை உள்வாங்கி அந்த கேம் நிஜமாகவே வேலை செய்ய ஆரம்பித்த தருணத்தில் கேட்சின் கண்களில் பெருமிதம் மின்னியது .”இந்த மெசின் ஒழுங்காக வேலை பார்க்கிறது…எனக்கு இது பிடித்து இருக்கிறது.”என பெருமிதம் பொங்க சொன்னபொழுது தான் அவரின் கணினிக்கான காதல் தொடங்கியது.
கேட்ஸ் ரொம்பவும் விரும்பி படித்த படங்கள் அறிவியல் மற்றும் கணிதம் .கல்லூரியில் நுழைவதர்க்கான தேர்வில் 1590/1600 எடுத்தார் சுட்டி கேட்ஸ் .அவருக்கு ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தது.படித்து முடித்து தந்தையை போல வக்கீல் ஆக வேண்டும் என ஆசைப்பட்டார் கேட்ஸ் .அங்கே அவருக்கு வேறொரு தோழன் காத்துக்கொண்டு இருந்தான் .பள்ளியில் படிக்கும் பொழுதே அப்போதைய கணினிக்களை பார்த்து பரவசப்பட்டார் கேட்ஸ் .கல்லூரியில் நுழைந்ததும் வகுப்புக்கு கூட போகாமல் பல நேரம் கணினி முன்னேயே உட்கார்ந்து இருப்பார் .இதற்காக பல கணக்கு வகுப்புகளை விரும்பி கட் அடித்துள்ளார்
கல்லூரியில் படிக்கும் பொழுது அவரை விட இரண்டு வயது மூத்தவரான பால் ஆலனின் நட்பு கிடைத்தது .இருவரும் குணத்தால் பெரிதும் மாறுபட்டவர்கள் என்றாலும் கணினி மீதான காதல் அவர்களை ஒன்று சேர்த்தது .பல சமயம் பயங்கரமாக சண்டை போட்டு கொள்வார்கள் .ஆனாலும்,ஒன்றாக இணைந்து பல்வேறு ப்ரோக்ராம்களை உருவாக்கினார்கள் .கேட்ஸ்இக்கு கல்லூரி போவது ஏகத்துக்கும் சலிப்பை தந்தது ,பெற்றோரின் அனுமதியோடு கல்லூரியை விட்டு நடுவிலேயே வெளியேறினார் கேட்ஸ் .சொந்த நிறுவனத்தை பால் ஆலன் உடன் இணைந்து தொடங்கிய பொழுது கேட்ஸ் சொன்னது ,”முப்பது வயதிற்குள் நான் கோடீஸ்வரனாகி கட்டுவேன் !”அதை போலவே முப்பத்தி ஒரு வயதில் அவர் கோடீஸ்வரராக ஆகி காட்டினார்.
பேப்பரில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து மிட்ஸ் என்கிற நிறுவனத்திடம் BASIC ப்ரோக்ராமில் நாங்கள் பல்வேறு விசயங்களை செய்வோம்.எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட பொழுது உண்மையில் எந்த திட்டமும் அவரிடம் இல்லை…ஆனால் அசாத்தியமான நம்பிக்கை அவர்களுக்கு கைக்கொடுத்தது .சொன்ன மாதிரியே செய்து காட்டினார்கள்.இவர்கள் உருவாக்கிய ப்ரோக்ராம் பெரிய பேரை பெற்று தந்தது
கேட்ஸ் இந்த காலத்தில் அரசாங்கத்தில் ட்ராபிக்கை கட்டுப்படுத்த மற்றும் அளவிட ப்ரோக்ராம்களை உருவாக்கி தந்தார் .பான்கேக் உருவாக்கத்தில் பயன்பட இவர் உருவாக்கித்தந்த ப்ரோக்ராம் பல வருடங்களுக்கு மிகவும் வேகமான ப்ரோக்ரம்களில் ஒன்றாக அறியப்பட்டது .அதை முந்திய ப்ரோக்ராமின் துல்லியம் அதை விட ஒரு சதவிகதமே அதிகமாக இருப்பது குறிப்பிட தக்கது .HONEYWELL நிறுவனத்தில் சில காலம் ப்ரோக்ராம் உருவாக்குபவர்களாக பால் அல்லன் மற்றும் கேட்ஸ் பணிபுரிந்தார்கள் .
HONEYWELL நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின் ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என கேட்ஸ் முடிவு செய்து MICROCOMPUTER மற்றும் SOFTWARE ஆகிய இரண்டு பதங்களை இணைத்து மைக்ரோ-சா ப்ட் என அழைத்தார் .நடுவில் இருந்த கோடு வெகு சிக்கிரமே விழுந்து மைக்ரோசாப்ட் என்கிற மந்திர சொல் உருவானது . ஐ.பி.எம் மிடம் இருந்து விலகி தானே தனியாக ஆபெரடிங் சிஸ்டத்தை வெளியிட்டார் கேட்ஸ் .அன்று முதல் டெக் உலகின் முடிசூடா மன்னன் ஆனார் பில் கேட்ஸ்.அதற்கு பின் மக்களுக்கு பிடித்த, எளிமையான,அதே சமயம் தவறுகளை சரிசெய்துகொள்ளும் ஆபெரடிங் சிஸ்டம்களை உருவாக்குவதை தன் எளிய லட்சியமாக கொண்டுள்ளார் கேட்ஸ்
உலகின் டாப் பணக்காரராக பல ஆண்டுகள் இருந்தவர் என்றாலும் அம்மாவின் மீது ஏகத்துக்கும் பாசம் வைத்து இருந்தவர் .அவரின் அம்மா பல்வேறு அனாதை சிறுவர்கள்,மாற்று திறனாளிகள்,நோயாளிகள் ஆகியோருக்கு நிதி திரட்டியவர் .அவர் மார்பக புற்று நோயால் இறந்த பொழுது நொறுங்கிப்போனார் பில் கேட்ஸ் .அதன் விளைவாக புற்றுநோய்,எய்ட்ஸ் ,போலியோ ஆகிய நோய்களுக்கு எதிராக நடக்கும் ஆராய்ச்சிக்கு ஏராளமான நிதி வழங்கி உள்ளார்
நல்ல ஓவியங்கள் ,பழங்கால பொருட்கள் மீது ஆர்வம் அதிகம் ,மில்க் சாக்லேட்களிலும் மனதை பறிக்கொடுப்பவர்.குழந்தைகளின் மீது அளவு கடந்த ப்ரியம் உண்டு.தன்னை சந்திக்கும் சுட்டிகள் கேட்கும் குறும்பன கேள்விகளுக்கு முகம் கோணாமல் பதில் சொல்கிற பழக்கம் உடையவர் .உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் நலனிற்காக தான் மெலிண்டா கேட்ஸ் அமைப்பில் பணியாற்றி வருகிறார்
தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இல்லை .மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் சார்பாக உலகம் முழுக்க பயணம் செய்து மக்களின் பிரச்சனைகளுக்கு தான் அமைப்பின் முலம் உதவும் பணியில் ஈடுபட்டு வருகிறார் .தான் மூன்று பிள்ளைகளுக்கு தன் சொத்தில் வெறும் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கி உள்ளார் .மீதம் எல்லாம் சமுகப்பணிகளுக்காக ஒதுக்கி விட்டது பலருக்கு ஆச்சரியம் உண்டு செய்த செயல்
ஹார்வர்டில் இருந்து பட்டம் பெறாமல் போனாலும் சிறந்த கண்டுப்பிடிப்பாளர் …இவர் மற்றும் மைக்ரோசாப்ட்இன் மொத்த காப்புரிமைகள் பத்து ஆயிரத்திற்கு மேல் !அவர் பட்டம் பெறமால் கல்லூரியை விட்டு வெளியேறினாலும் அதே பல்கலைகழகம் அவருக்கு கவுரவ பட்டம் வளங்கியபோளுது தான் கேட்ஸ் அதிகாரப்பூர்வமாக பட்டதாரி ஆனார் .தான் அமைப்பில் பட்டங்களை அதிகம் பெற்றவர்களை விட மாற்றி சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களையே வேலைக்கு சேர்ப்பதை குறிக்கோளாக கொண்டு உள்ளார்
மிகவும் எளிமையான பழக்கங்கள் உடையவர் .அலுவலகத்தில் பல மணிநேரம் வேலை செய்கிற பழக்கம் உடையவர் .ஒரு நாள் காளை உதவியாளர் அறைக்குள் வந்த பொழுது யாரோ டேபிளுக்கு அடியில் யாரோ தூங்கிக்கொண்டு இருப்பதை பார்த்தார் .அதிர்ந்து போய் அருகில் போன பொழுது தான் புரிந்தது அது கேட்ஸ் என்று ..அவரை நோக்கி மென்மையாக சிரித்து விட்டு எதுவும் நடக்காதது போல வெளியேறினாரம் கேட்ஸ்.
கொறிக்க கொஞ்சம் கோயபலஸ் வரலாறு !
ஜெர்மனியின் ஒப்பற்ற பேச்சாளர் நம் அரசியல்வாதிகளுக்கெல்லாம் முன்னோடி கோயபல்ஸ் பிறந்த தினம் இன்று.மனிதர் அடிப்படையில் இலக்கியங்களில் காதல் என்கிற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்;சில நூல்கள் எழுதி அதை
பதிப்பகங்கள் நிராகரித்தன.
அப்பொழுது தான் ஹிட்லர் கண்ணுக்கு பட்டு அவரின் கட்சியில்
சேர்ந்தார்.பொய்யை அப்படியே நம்பும்படி சொல்வதில் செம கில்லாடி இவர் ;இவரின் பேச்சை கேட்டு மக்கள் பாடச்சொன்னால் பாடுவார்கள்;குதிக்க சொன்னால் குதிப்பார்கள். நகைச்சுவை கலந்து வெறுப்பை கலப்பதில் தேர்ந்த நிபுணர்.ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும் இவரை பிரசார மந்திரி ஆகினார் என்றால் இவரின் திறனை புரிந்து கொள்ளுங்கள்
மனிதர் பதவிக்கு வந்ததும் செய்த முதல் வேலை புத்தகங்களை கொளுத்தச்சொன்னது தான்; அடுத்தது இசை,நாடகம்,பத்திரிக்கை,படம் எல்லாமும் வெறும் ஹிட்லர்
புகழ் பாடும் ஊடகமாக மாற்றப்பட்டன. சுய தணிக்கை செய்து கொள்ளுமாறு பத்திரிக்கைகள் மாறின என்கிற அளவுக்கு இவர் வேலை கச்சிதம்.
யூதர்களை கொல்வதை சாதிக்கிற அளவுக்கு ஒரு எதிர்ப்புமில்லாமல் வெறுப்பை வளர்த்தெடுத்தன இவரின் பேச்சுகள் .ஒரு பொய்யை அல்லது செய்தியை தொடர்ந்து ஊடகத்தில் சொல்வதன் மூலம் ,மக்களுக்கு நடுவே அரசின் ஆட்களை கலந்து
விடுவதன் மூலம் ,ஜோதிடர்களை விட்டும் சொல்வதன் மூலம் நம்ப வைக்கும் முறை இவர் கொண்டுவந்ததே !
ஹிட்லருக்கு பின் ஜெர்மனியின் சிலநாள் தலைவராக இருந்தார் ;பின் தற்கொலை செய்து இறந்து போனார்.நடுவில் செக் நடிகையுடன் கள்ளத்தொடர்பு வேறு உண்டு.பல வகையில் நம் அரசியல்வாதிகளுக்கு இவர் தான் பிதாமகர் ஆனால்
நன்றியே இல்லாமல் இவர் பெயரை சொல்லியே எதிராளியை திட்டுவார்கள் நம்மவர்கள்.
சுதந்திர தேவி சிலை இது !
சுதந்திர தேவி சிலை திறக்கப்பட்ட தினம் இன்று. அமெரிக்காவின்
சுதந்திரத்தில் மிகப்பெரிய பங்கு பிரான்ஸ் தேசத்துக்குண்டு. பிரிட்டனிடமிருந்து அமெரிக்காவை விடுவிக்க தன் படைகளை அனுப்பி உதவியது.அதனால் பெரிய நிதி சுமைக்கு உள்ளாகி அது பிரெஞ்சு புரட்சிக்கு காரணமாக அமைந்தது கிளைக்கதை.
அந்த விடுதலை நிகழ்வு நூறு வருடம் ஆனதன் பொருட்டு ஒரு சிலையை பரிசளிக்க பிரெஞ்சு மக்கள் முடிவு செய்தார்கள்.நிதி திரட்டுவது தான் சிக்கலாக இருந்தது.அமெரிக்காவில் பல்வேறு நாடகங்கள் மூலமும்,புலிட்சர் பரிசு உருவாக காரணமான ஜான் புலிட்சர் தன் பத்திரிக்கையில் விளம்பரபடுத்தி நிதி
சேர்த்தார் ஈபிள் கோபுரத்தை வடிவமைத்த குஸ்தாவ் சிலையை வடிவமைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார் ;பீடம் அமெரிக்காவில் வடிவமைக்கபட்டது;சிலை கப்பலின் மூலம் அமெரிக்கா வந்து சேர்ந்தது.முழுவதுமாக அல்ல ;பாகம் பாகமாக
கொண்டுவரப்பட்டு பின் இணைக்கப்பட்டது.
ரோம் நகரப் பெண்களின் பாரம்பரிய உடையான ஸ்டோலோவை அணிந்து சிலையின் இடது கையில் சட்டப் புத்தகத்தை ஏந்திருக்கும் வகையில் சிலை உருவானது. அதன் முகப்பில் அமெரிக்கச் சுதந்திர தினத்தைக் குறிக்கும் ஜூலை 4, 1786 என்று
ரோமன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. அதை நூற்றாண்டு முடிந்து பத்தாண்டுகள் ஆன பின் திறந்தார்கள்;அதை அமெரிக்க ஜனாதிபதி குரோவர் திறந்து வைத்தார்.
ஒரு நகைச்சுவையான வாசகம் உண்டு அமெரிக்கா
உலகத்துக்கே சுதந்திரம்,சமத்துவம் ஆகியவற்றை மறுப்பதால் தான் அதை சிலையாக மட்டும் வைத்திருக்கிறார்கள் என்று போகும் அந்த வாசகம். அமெரிக்காவின் அடையாளமாகவே ஆகிப்போன சுதந்திர தேவி சிலை திறக்கப்பட்ட தினம் இன்று.
சூழலியல் – எங்கே போகிறோம் நாம் ?
வானில் பறக்கும் புள்ளெல்லாம் எனும் தியோடர் பாஸ்கரன் அவர்களின் கட்டுரை தொகுப்பை வாசித்து முடித்தேன். ஏற்கனவே வாசித்திருந்த கட்டுரைகள் என்றாலும் முழுமையாக ஒரே மூச்சில் வாசிப்பது தனி அனுபவம் தான். இந்தியாவின் வர்த்தகத்தை மொத்தமாக முறித்துப்போட்டு அதன் வளத்தை சூறையாடிய ஆங்கிலேயர் எப்படி இங்கே இருந்த எண்ணற்ற மரங்களை வெட்டிபோய் போர்களில் ஈடுபடும் கப்பல்கள் செய்ய பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதும்,மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் போட்டி போட்டு பல்லுயிரிகளை அழித்து ஒழித்தார்கள் என்பது நெஞ்சை கனக்க வைக்கிறது. நீர்நிலைகளில் பறவைகள் இருந்தால் அந்த நீர்நிலை மாசுபடவில்லை என்று அர்த்தம். அப்படி எத்தனை நீர்நிலைகள் இருக்கின்றன ? சேலத்தின் பேருந்து நிலையம் எழுந்தது பெரிய ஏரி இருந்த இடத்தில் ; இப்படி எத்தனை நீர் நிலைகள் காணடிக்கப்பட்டுள்ளன ?
பின்ச் பறவைகளின் அலகை பார்த்து தான் டார்வின் பரிணாமக்கொள்கையை வகுத்தார். அப்படியில்லாமல் போயிருந்தால் கடவுள் தான் படைத்தார் என்று இன்னமும் நெடுங்காலத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்திருப்போம். இதைவைத்து பின்ச்சின் அலகு என்கிற நூல் எழுதப்பட்டு அதற்கு புலிட்சர் பரிசு வேறு கிடைத்திருக்கிறது. காடுகளை மனிதரின் செயல்பாடுகளே பெரும்பாலும் தீக்கு இரையாக்குகின்றன அதிலும் இந்தியாவில் அப்படி நடந்த அற்புதமான காட்டு வளத்தை எப்படி இழக்கிறோம் என்பது அதிரவைக்கிறது. பறவைகளின் வலசை பற்றிய கட்டுரை விறுவிறுப்பானது. உலகின் இரு முனைகளை வெறும் ஒன்பதே நாட்களில் கடக்கும் பறவைகள் ; அவற்றின் பாதையை காட்டும் skywalk படங்கள் ஆகியன வியப்பைத்தரும்
பிராணி நலன்,விலங்குரிமை,காட்டுயிர் பாதுகாப்பு ஆகியவற்றை போட்டு குழப்பி கொள்கிறோம் நாம் என்கிற அற்புதமான கருத்தை பதிகிறார் ஆசிரியர் . வீட்டுப்பூனைகள் எல்லாவற்றுக்கும் கருத்தடை செய்ததை பெல்ஜியம் செய்தது போல நாய்கள் சார்ந்து இங்கே செயல்படவேண்டும் என்றும் பதிவு செய்கிறார் .
ஓங்கில் என்று டால்பினை பண்டைக்காலத்தில் அழைத்தவர்கள் நாம் ; சூழலியல் சார்ந்து நிலங்களையும் வகுத்திருந்த நாம் இன்றைக்கு பதினாறு சதவிகிதம் கூட காடுகளை கொண்டிருக்கவில்லை. ஒரே ஒரு மரத்தை பெரிய பரப்பில் பயிரிட்டும் தவறு செய்கிறோம் . அலையாத்தி காடுகள் என்று நம்மிடம் இருந்த வழக்குசொல்லை,கருநாகம் என்று நாம் அழைத்த பாரம்பரியத்தை அறியாமலே கடக்கிறோம். முட்டையில் இருந்து ஆம்லேட் வரும் என்றும்,வீடுகள் விலங்குகளிடம் இருந்து காக்க என்றும்,பாம்புகள் நம்மின் எதிரிகள் எனவும்,பூச்சிகள் அடித்துக்கொல்லவேண்டியவை என்றும் கருத்தாக்கம் விதைக்கும் நாம் எப்படி அவற்றை சரி செய்ய போகிறோம் ?
நூல் : வானில் பறக்கும் புள்ளெல்லாம்
ஹச்சிகோ-ஒன்பதாண்டு காத்திருப்பு கதை இது !
ஹச்சிகோவுக்கு சலிப்பாக தான் இருந்தது ; இப்படி ரத்தம் சொட்டச்சொட்ட சண்டை போடுவது அதன் இனத்துக்கு அழகில்லை. அது அகிதா இனம் சாமுராய்க்கள் ஜப்பானில் பண்டைய காலத்தில் அகிதா நாய்களை சண்டையிட வைத்து அவைகளின் லாவகமான சண்டையில் இருந்து போர் முறையை கற்றுக்கொள்வார்கள். யாருக்கேனும் உடல் நலம் சரியில்லாமல் போனால் ஒரு அகிதா பொம்மை தான் அவர்கள் விரைவில் குணமடைய சொல்லி பார்சல் போகும். இதை நினைத்துக்கொண்டே தன்னுடைய காதுகளை தொட்டு பார்த்தது ஹச்சிகோ. ஒரு பக்கம் உண்ணிகளால் கீழே தொங்கிப்போய் இருந்தது ஒரு காது. இன்னொரு காதும் ரத்தம் குறைந்து வெளுத்திருந்தது.
மூன்று மணி ரயில் வந்துவிட்டது ; இன்றைக்கு கண்டுபிடித்துவிட வேண்டும் என்று வேகமாக நுகர்ந்து பார்க்க ஆரம்பித்தது ஹச்சிகோ. ஆகிற்று எட்டு வருடம் ப்ரோபசர் யூனோ எங்கே போனார் என்றே தெரியவில்லை. காலையில் குட்டி நாயாக இருக்கும் பொழுது யூனோ தூக்கி வந்து ஹச்சிகோவை வளர்த்தார். அவர் கல்லூரி செல்ல ரயிலேறும் பொழுது பின்னாடியே போய்விட்டு திரும்பி மூன்று மணி ரயிலுக்கு அவர் வரும் பொழுது அவரை அழைத்து செல்லும் வரை அங்கேயே காத்திருந்து பழக்கம் ஹச்சிகோவுக்கு.
முதலில் அடித்து விரட்டினார்கள் ; பின்னர் இதழில் ஹச்சிகோ படம் வந்த பிறகு ஒரே மரியாதை. தொடர்ந்து அங்கேயே சாப்பாடு போட்டு வளர்த்தார்கள். யூனோ அந்த மே 21 அன்று போனதோடு சரி இன்னமும் வரவில்லை.
ஷிபுயா ரயில் நிலையத்தில் செர்ரி மலர்கள் ஏந்திக்கொண்டு பலபேர் கடந்து போனார்கள். யூனோவும் அப்படி செய்வார் ; கொஞ்சமாக ஊளையிட்டு விட்டு மீண்டும் படுத்துக்கொள்ள எண்ணியது ஹச்சிகோ . நடுவில் ஒரு முறை எங்கேயோ பிடித்துக்கொண்டு போய் யூனோவின் நண்பர் வளர்த்தார் ; ‘ஒரே எஜமானன் எனக்கு ‘ என்கிற பாலிஸி ஹச்சிகோவுக்கு. வயிற்றில் எதோ கிண்டிக்கொண்டு இருந்தது ; புழுவாக இருக்கும். பார்த்துக்கொள்ளலாம் ,யூனோ வந்துவிடுவார்.
கொஞ்சமாக ரத்தம் சொட்டுவது போல இருந்தது மூக்கில் ; வயிற்றில் வேறு அவ்வப்பொழுது எரிந்து தொலைகிறது. தெரு நாயாகவே மாறியாகி விட்டது. மூன்று மணிக்கு ஒடிவருவதற்குள் எத்தனை நாய்கள் கடித்து குதறுகின்றன. புண்களை நக்கியபடியே ஹச்சிகோ வானை பார்த்தது ; மூன்று மணி ஆகியிருந்தது. செர்ரி பூக்களோடு யூனோ நிற்கிறார். வாலை குழைத்தபடியே அவரை நக்கியது. ஒன்பதாண்டு கால காத்திருப்பு முடிந்தது.
“ஒன்பது வருஷமா அந்த மனுஷன் செத்து போயிட்டார் அப்படினே தெரியாம இருந்திடுச்சு இங்கேயே. எப்படி கொழுக் மொழுக்குனு இருந்துச்சு தெரியுமா. இன்னைக்கு இப்படி அனாதையா செத்துப்போச்சு. எத்தனையோ பேரு அரவணைச்சுக்க தயாரா இருந்தாலும் நமக்கு யாரை பிடிக்குமோ அவங்களுக்காக காத்திருக்கிறது எல்லா உசுருக்கும் உண்டு போல ” என்றவாறு நகர்ந்தார் செர்ரி பூக்களை ஹச்சிகோ காலடியில் வைத்த அந்த பயணி.
(ஹச்சிகோவின் சிலை அந்த ரயில்வே நிலையத்தில் இருக்கிறது இன்னமும். இரண்டு படங்கள் வந்துவிட்டன அதன் வாழ்வைப்பற்றி. ஹச்சிகோவை நினைவுகூரும் வகையில் ஜப்பான் மக்கள் ஆண்டு தோறும் நன்றி அறிவிப்பு நாளாகக் கொண்டாடுகின்றனர். காத்திருத்தலை செய்பவர்கள் ஹச்சிகோவை அடிக்கடி ஞாபகப்படுத்துகிறார்கள்)
டெட்டி தேடிவந்த கதை இது !
டெட்டி பியர் எனும் பெண்களுக்கு ,குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த
பொம்மைக்கு அந்த பெயர் தந்த மனிதர் தியோடர் ரூஸ்வல்ட் பிறந்தநாள் இன்று. ஜான் எப் கென்னடிக்கு முன் மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் .ஜனாதிபதியின் மரணத்தால் துணை ஜனாதிபதியான இவர் அந்த இடத்துக்கு வந்தார்; தன் இளம் வயதில் நோபல் பரிசும் வாங்கியவர்.
அதெல்லாம் இல்லை விஷயம் .காடுகளில் நன்றாக சுற்றுவார் இவர் ;வேட்டை என்றால்அப்படி உயிர். ஜனாதிபதி பதவியை விட்டு இறங்கியதும் அமேசான் காடுகள் பக்கம் போகிற அளவுக்கு காதல் இவருக்கு. ஒரு முறை ஜனாதிபதியாக இருக்கிற பொழுது கரடி வேட்டைக்கு போனார் மனிதர்;கரடியே மிஸிஸிபி மாகணத்தில் இல்லை .
மூன்று நாட்கள் தேடி களைத்து போனவரை வெறுங்கையோடு அனுப்ப மக்களுக்கு விருப்பமில்லை ;ஒரு வயதான கரடியை எங்கிருந்தோ கண்டுபிடித்துக்கொண்டு வந்து மரத்தில் கட்டி வேட்டையாடுங்கள் என்றார்கள் மனிதர் கருணை கொப்பளிக்க முடியாது பாவம் அது என சொல்லிவிட்டு போனார்;இது அடுத்த சில தினங்களில் கார்டூனாக வந்து விட்டது,அப்பொழுது மோரிஸ் மிச்டோம் தன் மனைவி
உருவாக்கிய கரடி பொம்மைக்கு இவரின் செல்லப்பெயர் ஆன டெட்டி என்பதை வைத்துக்கொள்ளலமா என கேட்க இவரும் அனுமதி தந்தார்,டெட்டி பியர்
உலகப்பெண்களின் படுக்கையறை தோழன் ஆனது இப்படித்தான்
சில்வியா-தீரா சோகத்தோடு கீதம் இசைத்த தங்கமலர் !
சில்வியா பிளாத் எனும் பட்டதை கவித்துவமாக கண்ணீரோடு உலகுக்கு வடித்துக்கொடுத்து விட்டுப்போன கவிஞர் பிறந்த தினம் அக்டோபர் 27. வெறும் முப்பது வருடங்கள் வாழ்ந்த அவர் ஏற்படுத்திய தாக்கம் சொல்லில்
அடங்காதது.அவரின் கவிதைகள் அவரின் வாழ்வின் சோகங்களை கரைத்து எழுதப்பட்டவை .தன உணர்வை வெளிக்கொணரும் CONFESSIONAL POETRY வகையான அவரின் கவிதைகள் அபாரமானவை.இளம்வயதில் எட்டு வயதில் செல்ல அப்பாவை இழந்தவர் அவர் ; பின்னர் அன்பு செய்த நார்ட்டன் என்பவர் நோயில் விழ
நொந்து போனார். அடிக்கடி தற்கொலை எண்ணம் வரும் சில்வியாவுக்கு.
அந்த இழப்பை விட்டே வெளிவராத அவர் ஹுக்ஸ் என்பவரை திருமணம் கொண்டார் ; அவர் மீது எல்லையில்லா அன்பு காட்டினார் சில்வியா. அந்த மனிதருடன் ஆன மணவாழ்வில் இரண்டு குழந்தைகள் . அவர் மீது அவருக்கோ பிற பெண்களுடன் தொடர்பு இருந்தது.அன்புக்காக ஏங்கிய சில்வியா நொறுங்கிப்போனார் .
அவரை விட்டு விலகி இருபது வயதிலேயே பிள்ளைகளை தனியாக வளர்த்து எடுத்தார்.அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து கவிதை எழுதிவிட்டுப்பின் பிள்ளைகளை கவனித்துக்கொண்டே வலியோடு வாழ்க்கை நடத்தினார் ;மனவீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட இவர் அடிக்கடி தற்கொலை முயற்சிகள் செய்த வண்ணம் இருந்தார்; ஆனாலும் , இவரின் கவிதைகளில் ஒரு தனித்துவம்,வலி இருக்கும்.முப்பது வயது முடிந்த
நிலையில் இரண்டு குழந்தைகளை ஈரத்துண்டில் சுற்றி வைத்துவிட்டு இன்னொரு அறையில் தீமூட்டிகொண்டு மனப்பிறழ்வு அதிகமாகி தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார்.
நெருப்பிலும் தங்கத்தாமரை மலரும் என் ஹுக்ஸ் அவர் கல்லறையில் எழுதி வைத்தார்;ஹுக்ஸ் உடன் வாழ்ந்த இன்னொரு பெண்ணும் தற்கொலை செய்துகொண்டார் .அந்த வரிகளை சில்வியாவின் ரசிகர்கள் பலமுறை அழித்து இருக்கிறார்கள் .அவர் இறந்து இருபது வருடங்கள் கழித்து புலிட்சர் பரிசும் வழங்கப்பட்டது அவருக்கு !
இந்த கருணை எனும் அவரின் கவிதை அவரின் வாழ்வை சொல்லும் :
நீ இங்கு தேநீர் கோப்பையோடு வருகிறாய்
நீராவி மாலை சூடி இருக்கிறது அது
உதிரத்தின் ஊற்றாக பொங்கிப்பாய்கிறது கவிதை
எதுவும் அதை தடுப்பதற்கில்லை
ஆனால் நீ எனக்கு
இரண்டு ரோஜா ,இரண்டு மழலையை தருகிறாய்
இன்னுமொரு கவிதை :
மழலையில்லா மங்கை
கருப்பை அதன் கனத்த தோலை கலகலக்க வைக்கிறது
நிலவு மரத்தோடு பிரிவுகொண்டு எங்கும் போகமுடியாமல்
ஏங்கி நிற்கிறது
என் நிலமெல்லாம் ரேகையில்லா நிஜக்கரங்கள்
சாலைகள் பின்னி முடிச்சாகின்றன
நானே முடிச்சாகி நிற்கிறேன்
நீ முகரும் ரோஜா நானே
இந்த தேகம்
இந்த தந்தம்
யாவும் நானே
மழலையைப்போல உருவியெடுக்கும் உன் குரல் எழும்
சிலந்தியைப்போல கண்ணாடிகளை பின்னுகிறேன் நான்
என் உருவத்துக்கு உண்மையாக !
உதிர்க்கிறேன் உதிரம் மட்டும் வேறேதுவுமில்லை ;
கருஞ்சிவப்பு உதிரம் அது,உருகிக்குடி
என் காடுகளை கடித்திடுக
என் இறுதி ஊர்வலம்
இந்த மலை,இவை எல்லாம்
என் சவங்களின் வாயால் ஒளிர்கின்றன
அவரின் பிறந்தநாள் இன்று