ஹச்சிகோ-ஒன்பதாண்டு காத்திருப்பு கதை இது !


ஹச்சிகோவுக்கு சலிப்பாக தான் இருந்தது ; இப்படி ரத்தம் சொட்டச்சொட்ட சண்டை போடுவது அதன் இனத்துக்கு அழகில்லை. அது அகிதா இனம் சாமுராய்க்கள் ஜப்பானில் பண்டைய காலத்தில் அகிதா நாய்களை சண்டையிட வைத்து அவைகளின் லாவகமான சண்டையில் இருந்து போர் முறையை கற்றுக்கொள்வார்கள். யாருக்கேனும் உடல் நலம் சரியில்லாமல் போனால் ஒரு அகிதா பொம்மை தான் அவர்கள் விரைவில் குணமடைய சொல்லி பார்சல் போகும். இதை நினைத்துக்கொண்டே தன்னுடைய காதுகளை தொட்டு பார்த்தது ஹச்சிகோ. ஒரு பக்கம் உண்ணிகளால் கீழே தொங்கிப்போய் இருந்தது ஒரு காது. இன்னொரு காதும் ரத்தம் குறைந்து வெளுத்திருந்தது.


மூன்று மணி ரயில் வந்துவிட்டது ; இன்றைக்கு கண்டுபிடித்துவிட வேண்டும் என்று வேகமாக நுகர்ந்து பார்க்க ஆரம்பித்தது ஹச்சிகோ. ஆகிற்று எட்டு வருடம் ப்ரோபசர் யூனோ எங்கே போனார் என்றே தெரியவில்லை. காலையில் குட்டி நாயாக இருக்கும் பொழுது யூனோ தூக்கி வந்து ஹச்சிகோவை வளர்த்தார். அவர் கல்லூரி செல்ல ரயிலேறும் பொழுது பின்னாடியே போய்விட்டு திரும்பி மூன்று மணி ரயிலுக்கு அவர் வரும் பொழுது அவரை அழைத்து செல்லும் வரை அங்கேயே காத்திருந்து பழக்கம் ஹச்சிகோவுக்கு.

முதலில் அடித்து விரட்டினார்கள் ; பின்னர் இதழில் ஹச்சிகோ படம் வந்த பிறகு ஒரே மரியாதை. தொடர்ந்து அங்கேயே சாப்பாடு போட்டு வளர்த்தார்கள். யூனோ அந்த மே 21 அன்று போனதோடு சரி இன்னமும் வரவில்லை.

ஷிபுயா ரயில் நிலையத்தில் செர்ரி மலர்கள் ஏந்திக்கொண்டு பலபேர் கடந்து போனார்கள். யூனோவும் அப்படி செய்வார் ; கொஞ்சமாக ஊளையிட்டு விட்டு மீண்டும் படுத்துக்கொள்ள எண்ணியது ஹச்சிகோ . நடுவில் ஒரு முறை எங்கேயோ பிடித்துக்கொண்டு போய் யூனோவின் நண்பர் வளர்த்தார் ; ‘ஒரே எஜமானன் எனக்கு ‘ என்கிற பாலிஸி ஹச்சிகோவுக்கு. வயிற்றில் எதோ கிண்டிக்கொண்டு இருந்தது ; புழுவாக இருக்கும். பார்த்துக்கொள்ளலாம் ,யூனோ வந்துவிடுவார்.

கொஞ்சமாக ரத்தம் சொட்டுவது போல இருந்தது மூக்கில் ; வயிற்றில் வேறு அவ்வப்பொழுது எரிந்து தொலைகிறது. தெரு நாயாகவே மாறியாகி விட்டது. மூன்று மணிக்கு ஒடிவருவதற்குள் எத்தனை நாய்கள் கடித்து குதறுகின்றன. புண்களை நக்கியபடியே ஹச்சிகோ வானை பார்த்தது ; மூன்று மணி ஆகியிருந்தது. செர்ரி பூக்களோடு யூனோ நிற்கிறார். வாலை குழைத்தபடியே அவரை நக்கியது. ஒன்பதாண்டு கால காத்திருப்பு முடிந்தது.

“ஒன்பது வருஷமா அந்த மனுஷன் செத்து போயிட்டார் அப்படினே தெரியாம இருந்திடுச்சு இங்கேயே. எப்படி கொழுக் மொழுக்குனு இருந்துச்சு தெரியுமா. இன்னைக்கு இப்படி அனாதையா செத்துப்போச்சு. எத்தனையோ பேரு அரவணைச்சுக்க தயாரா இருந்தாலும் நமக்கு யாரை பிடிக்குமோ அவங்களுக்காக காத்திருக்கிறது எல்லா உசுருக்கும் உண்டு போல ” என்றவாறு நகர்ந்தார் செர்ரி பூக்களை ஹச்சிகோ காலடியில் வைத்த அந்த பயணி.

(ஹச்சிகோவின் சிலை அந்த ரயில்வே நிலையத்தில் இருக்கிறது இன்னமும். இரண்டு படங்கள் வந்துவிட்டன அதன் வாழ்வைப்பற்றி. ஹச்சிகோவை நினைவுகூரும் வகையில் ஜப்பான் மக்கள் ஆண்டு தோறும் நன்றி அறிவிப்பு நாளாகக் கொண்டாடுகின்றனர். காத்திருத்தலை செய்பவர்கள் ஹச்சிகோவை அடிக்கடி ஞாபகப்படுத்துகிறார்கள்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s