மகரந்த மண்புழுவும்,மரித்த சுதந்திரமும் !


கேள்விகள் கேட்க எல்லாரும் 
கத்திகளோடு நிற்கிறார்கள் ; 
பதில்களை மவுனத்துக்குள்
மறைத்துக்கொண்டு கருவறையில் 
கூட்டுப்புழுவோடு கைகுலுக்குகின்றன 
பட்டாம்பூச்சிகள். 
பெருமழைகள் பெய்த நிலமெங்கும் 
மதுக்கோப்பைகள் உடைந்து 
தோட்டாக்கள் தாங்கி ஆரவாரம் செய்கின்றன

கிழிக்கப்பட்ட ஆடைகளும்,பிடுங்கப்பட்ட 
கரு பொம்மைகளும் குழிகளில் 
சிரித்து கண்ணாமூச்சி ஆடுகின்றன 
போர்களின் நடுநடுவே சமாதானங்கள் 
அகராதியில் இருந்து பிய்த்து கற்பிக்கப்படுகின்றன 

பச்சை மரங்களின் வேர்களில் 
படிந்திருக்கும் ரத்தத்தினை சுவைக்கும் 
மண்புழுக்களின் உடலில் இருந்து உதிர்கின்றன 
விடுதலையின் கடைசி சில மகரந்தங்கள் ;
மண் வாசனை நுகர்கிற பொழுதெல்லாம் 
ஓய்ந்து போன தன் மண்ணின் எழுச்சி 
நாசியை நிறைப்பதாக சொல்லிச்செல்கிறாள் 
நேற்றைக்கு இறந்த பெண்ணொருத்தி !

தூரிகையால் பின்னிய பிகாஸோ !


ஸ்பெயின் நாட்டின் தெருவில் பல ஓவியங்களை அந்த இளைஞன் கடை விரித்து இருந்த பொழுது ,”என்ன பைத்தியக்காரத்தனம் இது ?” என தான் ஊரே சிரித்தது.ஓவியம் என்பது இருப்பதை இருக்கிற மாதிரி வரைவது தான் ஓவியம் என்பதை உடைத்து பல்வேறு தளங்களில் ஓவியத்தை பயணம் போக வைத்தான் அந்த
இளைஞன் . தனக்கு தோன்றியதை ஓவியமாக வடித்து தள்ளிய உண்மைக் கலைஞன் பிகாசோ 

இளம் வயதில் அப்பாவுடன் ஸ்பெயினில் காளைச்சண்டைகள் பார்க்க போனது அவரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை உண்டு செய்தது. அவருடைய ஓவியங்களில் தொடர்ந்து காளைச்சண்டைகள் தோன்றிக்கொண்டே இருந்தன. காலையில் பதினோரு மணிக்கு பொறுமையாக எழுந்துவிட்டு இரவு மூன்று மணி வரை ஓவியங்கள் வரைகிற குணம் அவருக்கு இருந்தது. எப்படி தொன்னூறு வயதிலும் இத்தனை ஆர்வத்தோடு இயங்குகிறீர்கள் என்று கேட்கப்பட்ட பொழுது ,”சிலர் இளவயதிலேயே முதியவர் போல உணர்கிறார்கள். நான் இந்த வயதில் முப்பது வயது இளைஞனாக தொடர்ந்து முயற்சித்து கொண்டிருக்கிறேன் !” என்று

அரசியல் கட்சிகளின் பெயர்கள் கூட தெரியாமலே இயங்கிக்கொண்டு இருந்தார் அவர். அவரின் ஓவியங்கள் 1936 க்கு முன்னர் அரசியல் சார்ந்து வரையபட்டதே இல்லை. பாசிஸ சக்திகள் குறிப்பாக ஹிட்லரின் படைகள் அமைதி தவழ்ந்த எண்ணற்ற
பொதுமக்கள் இருந்த கார்னிகா நகரத்தை தாக்கி உயிர்களை குடித்து
வெறியாட்டம் போட்ட பொழுது தான் பிகாசோ கோபப்பட்டார். அரசு ஒரு ஓவியம் வரையச்சொல்லி ஏற்கனவே கேட்டிருந்தது. எல்லா கோபத்தை,அவர்களின் வெறியாட்டத்தை ஓவியத்தில் அப்படியே கொண்டுவந்தார். பற்றியெரியும் நெருப்பும்,அதில் சிக்கிக்கொண்ட பெண்ணும் என்று அவர் அப்படியே காட்சிப்படுத்திய விதம் உலகம் முழுக்க போருக்கு எதிரான அடையாளமானது.

அதிகம் பொருள் ஈட்டிய அவர் தான் இறக்கிற வருடத்தில் கூட இருநூறு ஓவியங்கள் வரைந்தவர் அவர். அவர் நாட்டை ஜெர்மனி பிடித்துக்கொண்ட பொழுது பிரான்ஸ் தேசத்தில் தஞ்சம் புகுந்து அங்கேயே இருந்தார்;அவரை அந்நாட்டை
விட்டு வெளியேறி அமெரிக்கா போகச்சொன்ன பொழுது கம்பீரமாக மறுத்தார் . அங்கே இருந்தே தைரியமாக ஓவியங்கள் வரைந்தார் .

அவர் எண்ணற்ற ஓவியங்கள் வரைந்தாலும் அதில் சிலவற்றை மட்டுமே விற்பனைக்கு விடுவார். எண்ணற்ற ஓவியங்கள் ஒரே சமயத்தில் சந்தைக்கு வந்தால் அவரின் மார்கெட் போய்விடும் என்கிற தெளிவு அவருக்கு இருந்தது. பிரான்ஸ்
கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றிக்கொண்டு இருந்தார் அவர். ஸ்டாலின் இறந்த பொழுது அவரை இளைஞராக காண்பித்து ஓவியம் தீட்டி இருந்தார் இவர். கம்யூனிஸ்ட்கள் ஏகத்துக்கும் விமர்சித்தார்கள் இவரை. இவர் இயல்பாக ,”இறந்து போன ஒருவருக்கு வைக்கப்படும் மலர் வளையத்தில் என்ன மலர்கள்
இருக்கின்றன என்று பார்ப்பது விந்தையாக இருக்கிறது எனக்கு !” என்றார்

பிரான்ஸ் தேசத்தை ஜெர்மனி பிடித்துக்கொண்ட பொழுது இவர் அங்கேயே இருந்தாரில்லையா ? அப்பொழுது ஒரு ஜெர்மானிய ராணுவ அதிகாரி இவரைப்பார்க்க வந்தார். கார்னிகாவை கண்களை விரித்து பார்த்துவிட்டு ,”இந்த ஓவியத்தை நீ தானே வரைந்தாய் ?” என்று கோபத்தோடு கேட்ட பொழுது பிகாஸோ சலனமே இல்லாமல்
தீர்க்கமாக ,”இல்லை இதை நீங்கள் தான் வரைந்தீர்கள் !” என்றார். “எல்லாமும் கலையாகுமா ?” என்றொரு இளைஞன் கேட்ட பொழுது ஒரு மிதிவண்டியின் இருக்கை அதன் ஹாண்டில் பார் இரண்டையும் சேர்த்து ஒரு காளையின் தலையை உருவாக்கிவிட்டு
“முடியும் !” என்றார் அவர்.

ஒரு நாளைக்கு பலமணிநேரம் நின்றுகொண்டே வரையும் குணமும் இருந்தது. சலிக்காதா என்று நண்பர் ஒருவர் கேட்ட பொழுது ,”ஒரு மசூதிக்குள் நுழையும் முசல்மான் போல நான் பக்தியோடு ஓவியம் வரைய வருகிறேன். இது என்னுடைய ஹாபி
; நான் மீண்டும் சலிப்படையும் பொழுது மீண்டும் வரைய ஆரம்பிக்கிறேன்” என்றார் சிரித்துக்கொண்டே. அமைதிக்கான அடையாளமாக புறாவை பிரபலப்படுத்தியதும் அவரே ; அதே சமயம்
கொரியப்படுகொலைகள்,’போரும்,அமைதியும்’ என்று போரின் தீங்குகளுக்கு எதிராக ஓவியங்கள் தீட்டி கலை மூலம் அமைதிக்காக குரல் கொடுத்தார் அவர்.

மரபை மீறும் ஆவேசம் அவரிடம் இருந்ததுபெரும்பாலான நவீன ஓவியங்கள் குறிப்பாக அவருடைய ஓவியங்கள் புரியவில்லை எனக்கேட்ட பொழுது “உங்கள் வீட்டின் அருகில் உள்ள மரத்திலிருந்து குயில் கீதத்தை கூவுதல் மூலம் கசிய விடுகிற பொழுது அதன் அர்த்தம் புரிகிறதா உங்களுக்கு ? உங்கள் வீட்டின் கண்ணாடியில் வழிந்து மென்மையாக படிகிறதே பனித்துளி, அதை எந்த
பொருளில் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் ? ஒவ்வொரு நாளும் மேகம்
புதுப்புது வடிவம் எடுக்கிறதே அதற்கு என்ன பொருள் ?. வெயிலை, இரவை, மழையை எப்படி புரிந்து வைத்திருக்கிறீர்கள்.எல்லாவற்றிலும் மனதார கரைந்திடுங்கள் .எல்லாவற்றின் ஊடாகவும் நீங்கள் இருப்பதை உணரத் துவங்குங்கள் உலகின் காட்சிகளும்.அதன் வனப்பும் உங்களுக்குப் புரியத் துவங்கினால் நவீன ஓவியங்கள் தானே புரியத் துவங்கிடும் “.

கியூபிசம் எனும் ஓவிய பாணி அவரால் உருவானது .பைத்தியம் என்ற அதே உலகம் ,”நவீன ஓவியத்தின் தந்தை !”என அவரை ஏற்றுக்கொண்டது.பாப்லோ பிகாசோ எனும் மாபெரும் கலைஞரின் பிறந்தநாள் இன்று .

 

நன்றி : ஓவியர் ஜீவானந்தன் 

லான்ஸ் எனும் வீழ்ந்த நாயகன் !


லான்ஸ் ஆம்ஸ்ட்ராங்கின் சுயசரிதையான It’s not about the bike-My journey back to life  படித்து முடித்தேன். நூலின் கதையை சொல்லிவிட்டு இறுதியில் இன்றைய சூழலுக்கு போகலாம்.

இளம் வயதில் அம்மாவின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்துள்ளார் லான்ஸ். அப்பாவின் முகமே அவருக்கு கேன்சர் வந்த பொழுது ஒரு பத்திரிக்கை தேடி கண்டறிந்து சொன்ன பொழுது தான் தெரியும் ; அதுவரை அம்மாவிடம் ஒரு வார்த்தை தன்னை பூமிக்கு தருவிப்பதில் ஒரு சிறு பங்காற்றிய ஜீவனைப்பற்றி இவரும் கேட்டதில்லை ; அம்மாவும் சொன்னதில்லை.

அடிப்படையில் இளம் வயதில் ட்ரைத்லான் எனப்படும் ஓட்டம்,நீச்சல் ,சைக்கிள் ஓட்டுதல் ஆகிய மூன்றிலும் ஈடுபட்டு தேசிய சாம்பியன் ஆனார் இவர். பின் தன் கவனத்தை சைக்கிள் ஓட்டுதலில் திருப்பினார் -உலக சாம்பியன் ஆகவும் செய்தார் . இத்தாலி தேசத்தில் போட்டியில் கலந்து கொள்ள போன பொழுது போகிற பாதையெங்கும் கண்ணாடி துண்டுகளை போட்டு தடை ஏற்படுத்திய பின்னும் வென்று காண்பித்த பொழுது மனதார பாராட்டிய ரசிகர்கள் பற்றி நெகிழ்வோடு குறிக்கிறார்.
அவருக்கு எல்லாமுமாக இருந்த அம்மாவை ஏகத்துக்கும் நேசிக்கிறார். உலக சாம்பியன் ஆனதும் பத்திரிக்கையாளர்களை ஒதுக்கி விட்ட அம்மாவை கட்டிப்பிடித்து ஓயாமல் அழுதல் செய்துவிட்டு,ஒரு நாட்டின் அரசரை பார்க்கப்போகிற பொழுது அம்மாவுக்கு உள்ள அனுமதியில்லை என்றதும் அம்மாவை விட அரசர் முக்கியமில்லை என்று வெளியேறியது ஆச்சரியம் தரலாம். முக்கியமான போட்டிகளில் எதிராளியை ஒரு கெட்ட வார்த்தை சொல்லி சீண்டுவது இவரின் குணம். ஒரு போட்டியில் அப்படி சீண்டிவிட்டு முதலிடத்தை பிடித்தார் இவர். இவர் சீண்டிய நபர் இரண்டாவதாக வந்திருக்க வேண்டியது. அவர் என்ன செய்தார் தெரியுமா ? வண்டியை ப்ரேக் போட்டு நின்றுவிட்டார். “உன்னை மாதிரி நாகரிகம் தெரியாத ஒருவனுடன் மேடையேறி விருது வாங்க சும்மாவே இருக்கலாம் !” என்று சொல்லாமல் சொன்னார் அவர். அன்றோடு அப்படி சீண்டுவதை விட்டார் லான்ஸ் .

ஒரு நாள் காலையில் எழுகிற பொழுது விரைப்பை ஆரஞ்சு பழம் அளவுக்கு வீங்கிப்போய் இருந்தது. டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்தால் விரைசிறை   (testicular )கேன்சர் என்று தெரிந்தது. வயிறு ,நுரையீரல் என வேகமாக புற்றுநோய் பரவ ஆரம்பித்த பொழுது கூட வாழ்வதற்கு அறுபது சதம் வாய்ப்பு இருப்பதாக சொல்லிவந்த மருத்துவர்கள் ,பின் மூளைக்கும் அது பரவிய பொழுது வாய்ப்பு ரொம்பவே மட்டுபட்டதாக கூறி விட்டார்கள். “இருபது சதவிகிதம் வாய்ப்பு இருக்கா டாக்டர் ?” என்று கேட்ட பொழுது “அதுவுமில்லை ,ஆனால்,நீங்கள் நம்பினால் பிழைக்கலாம்!” என்று சொன்னார் மருத்துவர். இனிமேல் இயற்கையாக பிள்ளை பெற முடியாது என்று விந்துவை சேமித்து விட்டு ஒரு பெரும் போராட்டத்துக்கு தயாரானார் லான்ஸ்.

லாட்ரிஸ் எனும் நர்ஸ் இவரை பார்த்துக்கொண்டார். மூன்று அறுவை சிகிச்சை,உடம்பு முழுக்க தையல்,மண்டையை பிளந்து,உடலை கீறி ரணகளம் ஆகியிருந்தது. கூடவே உயிரை உலுக்கும் கீமோ வேறு மூன்று முறை பண்ணினார்கள். அங்கே பார்த்துக்கொண்ட இருபது வயது நர்ஸ் லாட்ரிஸ் புன்னகை மாறாமல் லான்சிடம் சொல்வாராம் ,”நான் இனிமேல் மீண்டும் உன்னை இங்கே பார்க்க கூடாது. நீ பிழைத்தபின்  சாம்பியனாக மீண்டும் ஆகவேண்டும். ”

செய்திதாள்கள் லான்ஸ் முடிந்தார் என்று எழுதின ; சாகிற நிலையில் இருந்த மனிதனிடம் ஒப்பந்தத்தை முடித்துக்கொள் என்று கையெழுத்து போட்டு வாங்கிக்கொண்டு போனார்கள். நீ எதற்கும் ஆகதவன் என்று அதற்கு அர்த்தம். முடி முழுக்க கொட்டியிருந்தது. மருத்துவரிடம் கண்ணீர் மல்க நின்ற பொழுது ,”நீ இறந்து விட்டாய் என்று எல்லாரும் முடிவு செய்துவிட்டார்கள். இனிமேல் தான் எல்லாமே ; மனசை விடாதே !” என்று சிரித்துக்கொண்டே சொன்னாராம் மருத்துவர் மேலும் அவரே ,” உன்னை உதவாதவன் என்று முடிவு செய்துவிட்டார்கள் ; லான்ஸ் ! அவர்கள் செய்தது எவ்வளவு பெரிய பிழை என்று அவர்களுக்கு நீ புரிய வைப்பாய் பார். !” என்று தலையை வருடி இருக்கிறார்

மீண்டும் ரேஸிங் பக்கம் போகலாம் என்று ஆசைப்படுகிற பொழுது ,ஏற்கனவே மூன்று அறுவை சிகிச்சை,மூன்று கீமொக்கள் இனிமேல் முடியாமல் போனால் நம் தவறில்லை என்று மனதை தேற்றிக்கொண்டு இரண்டு போட்டிகளில் ஐரோப்பாவில் கலந்து கொண்டார் லான்ஸ். டாப் இருபதில் இரண்டிலும் வந்தார் ; போதும் ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்துவிட முடிவு செய்துவிட்டார். இதற்கு நடுவில் பூத்த காதலின் நாயகி கிக் ,”வீட்டில் சாப்பிட்டுக்கொண்டே இருக்காதீர்கள். எதாவது வேலைக்கு போங்க ; இல்லை பைக்கை எடுங்க !” என சொல்ல பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினார் இவர். நடுவில் பிள்ளை பெற்றுக்கொள்ளும் ஆசை வேறு வந்தது ; அந்த la என்று குறிக்கப்பட்ட விந்துக்குப்பி வெளியே வந்தது. நன்றாக கிக் வேண்டிக்கொண்ட பின்னர் சோதனைக்குழாய் மூலம் கர்ப்பவதி ஆனார் அவர். “என்ன வேண்டிக்கொண்டாய் கிக் ?” என்று கேட்டார் லான்ஸ். “அந்த la லான்ஸ் ஆம்ஸ்ட்ராங்காக இல்லாமல் ,லாரி ஆன்டர்சன்என்று இருக்க கூடாது ! என்று வேண்டிக்கொண்டேன்.!’ என்றார் கிக்

முதியவர்கள் எல்லாம் பைக்கில் கடந்து போனார்கள் ; கேன்சரில் இருந்து மீண்டதே பெரிய விஷயம் என்கிற எண்ணம் எல்லாமும் உந்தித்தள்ள முதலில் படாதபாடு பட்டிருக்கிறார். அப்புறம் படிப்படியாக ஜெயிக்க ஆரம்பித்ததும் பூகன் எனும் போட்டியாளரிடம் தோற்றுப்போன பொழுது ,”உன்னை வெகு விரைவில் ஜெயிப்பேன் !” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு டூர் டி பிரான்ஸ் போட்டிக்கு தயாரானார். அப்போட்டி l’tour என்கிற பத்திரிக்கை முழு பிரான்ஸ் தேசத்தையும் பைக்கில் வளம் வரவேண்டும் என்று நூற்றி பத்து வருடங்களுக்கு முன் அறிவித்தது. ஒரு லட்சம் ரசிகர்கள் மூன்று வாரம் நடந்த போட்டியை கொண்டாடி தள்ள அப்படியே தொடர்ந்தது. அதில் தான் இடுப்பு,உடம்பு எல்லாம் தேய கலந்து கொண்டு கலக்கி எடுத்து வென்றார் லான்ஸ். அப்படியே ஒலிம்பிக் நோக்கி போக பயிற்சி செய்தார். கழுத்து எலும்பு உடைந்தது ; படுத்து ரெஸ்ட் எடுத்துவிட்டு பாதி குணமானதும் போட்டிக்கு போய் வெண்கலம் வென்றார். “ஜெயிக்க வேண்டும் ,அல்லது ,போராடி செத்துப்போக வேண்டும்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் லான்ஸ்

அடுத்தடுத்து ஏழு டூர் டி பிரான்ஸ் வென்றார். பின் ஒய்வு பெற்று livestrong அமைப்பின் மூலம் கேன்சர் நிதி திரட்டல் செய்தார். தன்னுடைய வாழ்வின் உன்னத நாள் என்று அவர் கேன்சர் வந்த நாளை சொல்கிறார். ஏன் தெரியுமா ?
“இனிமேல் இழப்பதற்கு ஒன்றுமேயில்லை என்கிற சூழலில் நடந்த அற்புதமான போர் இது. நான் செத்துப்போய் இருக்கலாம். ஆனால்,போராடினேன் என்கிற திருப்தி அதில் தானே உண்டாகிறது,இன்று தப்பி இவ்வளவு தூரம் என்னால் வரமுடியும் என்று கேன்சர் தான் கற்றுத்தந்தது” என்றார் பைக்கின் மீது கை வைத்தபடியே.

அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரிய வந்தது. ஏழு பட்டங்களும் பிடுங்கப்பட்டு அந்த வருடங்கள் வெறுமையாக விடப்பட்டன. முதலில் தவறு செய்யவில்லை என்று சொன்னாலும் பின்னர் கண்ணீரோடு ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார் லான்ஸ். பெரும் துயரத்தில் இருந்து சாதிக்க முடியும் என்கிற ஊக்கத்தை விளைத்த அதே லான்ஸ் குறுக்குவழிகள் எப்படி நம்மின் ஆளுமையை குறுக்கி விடும் என்கிற முக்கிய பாடத்தையும் தருகிறார். என்றாலும் “We have two options, medically and emotionally: give up, or Fight Like Hell.” என்கிற வகையில் பெரும்போராட்டம் ஒன்றை நிகழ்த்திய அவரின் வாழ்க்கையை கொண்டு உத்வேகமும் அடையலாம். குறுக்கு வழியை கத்தரித்து விட்டு !

புரட்சி ரோசா !


மார்டின் லூதர் கிங் எனும் பெயருக்கு இணையாக உலக வரலாற்றில் கறுப்பின மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிரான போரில் உச்சரிக்கபடவேண்டிய இன்னொரு பெயர் ரோசா பார்க்ஸ். மாண்டிகோமேரி பேருந்தில் டிக்கெட் எடுத்து இருக்கையில் அமர்ந்தவண்ணம் போய்க்கொண்டு இருந்தார் ரோசா
பார்க்ஸ்.பிறப்பால் ஆப்ரோ அமெரிக்கர் அவர்.

கணவர் முடிதிருத்தும் வேலை செய்து கொண்டிருந்தார். கறுப்பின மக்கள் பேருந்தில் தனி இருக்கைகளில் அமர வேண்டும் ; அதுவும் முன்புறம் இருந்து ஏறக்கூடாது. பின்புறம் இருந்தே ஏற வேண்டும். வெள்ளையின மக்கள் வந்தால் இடம் கொடுத்து எழுந்து நகர்ந்துவிட வேண்டும். டிக்கெட் எடுத்திருக்கிறேன் நான் என்று விதியெல்லாம் பேசக்கூடாது.

ஒரு நாள் அப்படி பேருந்தில் உட்கார்ந்தவாறு போய்க்கொண்டு இருந்தார் ரோசா. வெள்ளையர் வந்ததால் பின்பக்கம் போய் உட்கார சொன்னார் ஓட்டுனர். முன்பக்கம் போனார் ரோசா. கொட்டும் மழையில் பேருந்தைவிட்டு அவரை இறக்கினார் அந்த ஓட்டுனர்

அடுத்த முறை,அதே பேருந்து,அதே சூழல்,அதே ஓட்டுனர். இடம் மாற சொன்னார் ஓட்டுனர். “எழ மாட்டேன் நான் !” என்று அமர்ந்திருந்தார் ரோசா. மூன்று ஆப்ரிக்க அமெரிக்கர்கள் எழுந்தார்கள். அப்பொழுதும் ரோசா எழ மறுத்தார். முடியாது என இவர் மறுக்க மறுத்தால் கைது செய்வோம் என கண்டக்டர் பயமுறுத்த செய்யுங்கள் என கம்பீரமாக சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார் அவர்.கைது செய்யப்பட்டார்.
“எனக்கு நாற்பத்தி இரண்டு வயது தான் ; நான் களைப்பாக இல்லை. முதுமை என்னை அழுத்தவில்லை. ஆனால்,எழுந்து,எழுந்து அடக்குமுறைக்கு பயந்து பயந்து களைப்படைந்து விட்டோம் நாங்கள்.அதனால் எழ மறுத்தேன்.”என்றார் ரோசா

கறுப்பின மக்கள் கொதித்தெழுந்தார்கள்.லூதர் கிங் பின் அணி
திரண்டார்கள்;நடந்தே போனார்கள் ,டாக்சியில் போனார்கள் ஆனால் ரோசாவுக்கு நீதி கிடைக்கும் வரை பேருந்தில் ஏறமாட்டோம் என ஒரு மாகாணமே தீர்க்கமாக நின்றது வரலாறு. நாற்பதாயிரம் மக்கள் அறப்போரில் பங்கு கொண்டார்கள். நடந்து போனார்கள் ; டாக்சி டிரைவர்கள் இலவசமாக தங்கள் வண்டிகளில்
அழைத்துப்போனார்கள். ஆனால்,பேருந்தில் மட்டும் ஏறவில்லை இவர்கள்.

ரோசவுக்கு வேலை போனது ; பல இடங்களில் போராடிய மக்கள் தாக்கப்பட்டார்கள். அசைந்து கொடுக்கவில்லை ; உரிமைக்கான கனத்த மவுனம் மட்டுமே இருந்தது அங்கே.

ஒரு அவலம் கீழ்கோர்ட் ஒன்று ரோசாவை கைது செய்தது செல்லும் என்றது தான்,ஒரு நாள் இரண்டு நாளில்லை ஒரு வருடம் முழுக்க தீராத நெஞ்சுரத்தோடு (சரியாக 381 நாட்கள் )அப்படியே போராடி வென்றார்கள் அவர்கள் .சமமான இருக்கை வசதி உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பின் அவர்களுக்கும் கிடைத்தது.தன கணவர்,பிள்ளை,சகோதரர்,தாய் என அனைவரையும் கேன்சருக்கு
இழந்து தனிமையில் இருந்த பொழுதெல்லாம் மக்களின் உரிமைக்காக பேசி அதில் கிடைத்த வருமானத்தை கறுப்பின மக்களின் நலனுக்கே செலவிட்டார்.”விடுதலை போரின் தாய் !”என அழைக்கப்படும் அவரின் நினைவுதினம் இன்று .”அன்று அவர்
எழ மறுத்த்தால் தான் இன்று நாங்கள் தலைநிமிர்ந்து நடக்கிறோம் !” என அவரின் மரணத்தின் பொழுது கண்ணீரோடு குறித்தார்கள் கறுப்பின பெண்கள்

பேட்மேனின் தந்தை இவர் தான் !


பாப் கேனை தெரியாது அல்லவா உங்களுக்கு ?அவர்தான் பேட்மேன் எனும் சூப்பர் ஹீரோவின் தந்தை .நேஷனல் காமிக்ஸ் என்கிற காமிக்ஸ் கம்பெனியில் வேலை செய்துகொண்டு இருந்தபொழுது சூப்பர்மேன் என்கிற இன்னொரு சூப்பர் ஹீரோ
அவர்கள் காமிக்ஸில் பின்னிக்கொண்டு இருந்தார், அதற்கு இணையாக இன்னொரு சூப்பர் ஹீரோ வேண்டும் என்று கேட்ட பொழுது உருவானவர் தான் பேட்மேன் .

அப்பொழுது வந்த பேட் விஸ்பெர்ஸ் என்கிற படத்தில் ஒரு குற்றவாளி பிறரை கொல்லும் பொழுது கேப் அணிந்துகொண்டு கொல்வான் ; பின் வவ்வால் முத்திரையை விட்டு செல்வான். இதில் ஈர்கப்பட்டும்,கூடவே டாவின்சியின் படமொன்றில் மனிதனொருவன் வவ்வாலின் இறக்கைகள் கொண்டு பறப்பதை பார்த்தும் பேட்மேனை உருவாக்கினாலும் இப்படி இருக்கும் இரண்டு கொம்பு போன்ற அமைப்பு அவரின் நண்பர் பிங்கர் உருவாக்கியது;பேட்மேன் கண்கள் ஒளிருமாறு செய்ததும் அவரே.

பேட்மேனை உருவாக்கிய பொழுது இவரின் வயது பதினெட்டு .எந்த சூப்பர்மேன் போன்ற சக்திகள் இல்லாமல் மூளை மற்றும் உடல் ஆற்றல் மூலம் உலகை ஈர்த்தார் பேட்மேன். அவர் காலத்திலேயே அவருக்கு பதிலாக பலர் பேட்மேன் உருவத்தை வரைந்தார்கள்;அவர்களை,”பேய்கள் !”என்று அழைத்தார் இவர். இப்பொழுது நோலனின் இயக்கத்தில் பேட்மேன் கூடவே ஜோக்கரும் மக்களின் மனங்கவர்ந்தது தனிக்கதை.அந்த பாப் கேனின் நினைவு தினம் இன்று

காமன்மேனை தந்த கார்டூனிஸ்ட்


ஆர்.கே.லக்ஷ்மன் எனும் கார்டூனிஸ்ட் மேதையின் பிறந்தநாள் இன்று,இவரின் சகோதரர் தான் பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன். முதலில் தி ஹிந்துவில் வரைந்த இவர் பின் டைம்ஸ் ஆப் இந்தியாவில் அறுபதாண்டு காலமாக ‘யூ செட்
இட்’ என்கிற தலைப்பில் காமன் மான் என்கிற கதாபாத்திரத்தின் மூலம் இவர் அடித்த எள்ளல்கள் அபாரம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் ஒரு அஞ்சல் தலையே அந்த காமன் மான் நினைவாக வெளியிடப்பட்டது. மால்குடி நாட்கள் தொலைக்காட்சி தொடருக்கு இவரே ஓவியம் வரைந்தார்; எளிய ஆனால் ஆழ்ந்த
சமூகப்பார்வைக்கு நல்ல எடுத்துகாட்டு இவரின் கார்டூன்கள்.ஆசியன்
பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் முத்திரையும் இவர் வரைந்ததே !இவரை ஒட்டி ஒரு நகைச்சுவை தொடரே ஹிந்தியில் வந்தது .

இவரின் கார்டூன்கள் நூல்களாக வந்து நல்ல விற்பனை ஆயின .தற்பொழுது தொன்னூறு வயதை தாண்டி விட்ட அவர் சில வருடங்களுக்கு முன் ஸ்ட்ரோக் வந்து சீர்பெற்று அவ்வளவாக பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்.அவரின் தூரிகை
தெளித்த வெளிச்சத்தில் எத்தனையோ பேர் இப்பொழுது
பின்னுகிறார்கள்.இப்பொழுதும் அவர் உருவாக்கிய காமன் மான் சிலை நிற்கிறது மும்பையில் ;அவரின் தைரியம் பலரால் சுவீகரிக்க பட்டு இருக்கிறது.அதுதானே வெற்றி

குள்ளம் என்பது உள்ளம் சம்பந்தப்பட்ட விஷயம் !


உடலின் குறைபாடுகளை மிகப்பெரிய சிக்கலாக கருதுகிற எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால்,எல்லாம் மனசு சம்பந்தப்பட்ட விஷயம் என்று உணரவேண்டியது மட்டும் தான் முக்கியம்.

நெப்போலியன் சிண்ட்ரோம் என்பார்கள் தான் குள்ளம் என்று எண்ணிக்கொண்டு இருப்பதை. நெப்போலியன்  ஐந்தடி ஆறங்குலம் அது அன்றைய பிரான்ஸ் நாட்டில் சராசரி உயரம் தான். பாவம் மனுசனுக்கு காவலாக நின்ற ஆட்கள் செம உயரம் ; அதனால் தான் குள்ளம் என்று நெப்போலியன் குமைந்தார். தன்னுடைய மனைவியின் வயதை உரக்க சொல்ல சொல்வார் அவர்,அப்படியாவது தான் பெரியவன் என்று ஊர் எண்ணாதா என்று ஏக்க பெருமூச்சு விட்டார் அவர். எக்கச்சக்க பேருக்கு இப்படி ஒரு காம்ப்ளெக்ஸ் தான்
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை புரட்டிப்போட்ட அண்ணா குள்ளம் தான். “புரட்சி குள்ளமாக இருக்காது !” என்று தன்னைத்தானே நையாண்டி செய்து கொண்ட அண்ணா இறந்த பொழுது ஒன்றரை கோடி பேர் கூடியிருந்தார்கள்
சினிமாவில் உயரம் என்பது ரொம்ப முக்கியம் என்று நினைப்பவர்களுக்கு தலை மேல் வைத்து நங்கென்று கொட்ட ஹாலிவுடில் அண்ணன் டாம் க்ரூஸ் இருக்கிறார். தமிழில் சூர்யாவும் அவ்வாறே. டாமின் மனைவி அவரைவிட ஒரு மூன்று அங்குலம் கூடுதல் உயரம் “காதல் வெற்றி இரண்டுக்கும் வெளி உயரத்துக்கும் சம்பந்தமில்லை.” என்று அழகாக சிரிக்கிறார் டாம்
அரசியலில் ஒரு மூன்று பெயர்கள் எப்பொழுதும் நிலைப்பவை. அமெரிக்காவில் அன்பாயுதம் எந்த சொன்ன மார்டின் லூதர் கிங்,பிரெஞ்சு புரட்சிக்கும்,மனிதத்துக்கும் தொடர்ந்து எழுதிய வால்ட்டர்,உலகமெங்கும் அரசுகளை எதிர்க்கும் அசைத்துப்பார்க்கும் முறைகளின் முன்னோடியான உலக ராஜதந்திரி காந்தி இவர்களும் புற ஸ்கேலில் அளந்து பார்த்தால் குள்ளம் தான். உலகத்தின் உன்னத உயரங்களுக்கு கூப்பிட்டு போன இவர்களை கொஞ்சம் அப்படியே நோக்குங்க
உலகின் தலைசிறந்த இயக்குனர்கள் அப்படின்னு கொண்டாடுற ஹிட்ச்காக்,ஸ்பீல்பெர்க் ரெண்டு பெரும் அஞ்சடி சொச்சம் தான் உயரம். எடுக்கிற படம் தானே பேச வேண்டும் ; எங்களின் உயரத்தை கொஞ்சம் தொட்டுப்பார் !” என்று கூலாக சிரிக்கின்றன அவர்களின் படங்கள்
 
டென்னிஸ் ஆட களத்துக்கு போன பொழுது எகிறி வரும் பந்துகளை லாவகமாக எதிராளியின் பக்கம் தள்ள உயரம் இல்லாமல் ஒரு ஜீவனை மெதுவாக வெளியே அனுப்பினார்கள். அவரை உங்களுக்கு எல்லாம் மற்றவர்களின் பந்துகளை எங்கெங்கோ அனுப்புகிற ஒருத்தராக தெரியும்-சச்சின் அவரின் நாமம்
பீத்தொவேன் அப்படின்னு ஒரு பையன். நல்ல குள்ளம்,மொசார்ட் மாதிரி ஆகணும் அப்படின்னு சொல்லி பிரம்பால் அடிவாங்கிய கைகள் ; காது வேறு கேட்காது. எல்லா சோகத்தையும்,காதலையும் தேக்கிக்கொண்டு அவர் மீட்டிய செவன் சிம்பனி காலதுக்காமான கீதம். அவரின் அகக்காதுகள் மக்கள் எழுந்து நின்று பரவசமாக கைதட்டிய பொழுது குளிர்ந்தன ; அவரின் குறுகலான உருவம் கலைவானில் பெரிதாக உயர்ந்து நிற்கிறது இன்றுவரை இசையால் !
வானம் தொட்ட யூரி ககாரின் ஐந்தடி மூன்று அங்குலம்,மவுனத்தால் குலுங்க குலுங்க சிரிக்க வைத்த சாப்ளின் ஐந்தடி ஐந்து அங்குலம் மட்டுமே. பொதுவாக கால்பந்து விளையாட்டு உயரமான ஆட்களுக்கு என்கிற நம்பிக்கையை தகர்த்து கால்பந்து களங்களை கலக்கி உலககோப்பை பெற்றுத்தந்த  மாரடோனாவும் அதே உயரம் தான். உள்ளத்தனையது உயர்வு என்று நம்ம தாத்தா சொன்னது மட்டும் மனசில இருந்தா போதும் 🙂 வாழ்த்துகள் !

காஷ்மீரை புரிந்து கொள்வது எப்படி ?


நவநிதா சந்திர பெஹெரா அவர்களின் Demystifying Kashmir நூல் அற்புதமான ஒரு முயற்சி எனலாம். பெயருக்கு ஏற்றார் போலவே காஷ்மீர் பற்றி நமக்கிருக்கும் பொதுவான பிம்பங்களை நெருக்கமாக காஷ்மீர் பற்றிய விவரிப்பால் தகர்க்கிறார் ஆசிரியர். காஷ்மீர் சிக்கலை மதரீதியான சிக்கலாக பார்க்கிற போக்கிலிருந்து விலகி ஆராய்கிறார் நவநிதா.
 
ஒரு டைப் ரைட்டர் மற்றும் ஒரே ஒரு ஸ்டெனோவை வைத்துக்கொண்டு பாகிஸ்தானை அடைந்து விட்டதாக பெருமிதம் கொண்ட ஜின்னா காஷ்மீர் பற்றி முதலில் கவலைப்படவே இல்லை, படேலும் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு போனால் ஒன்றும் சிக்கலில்லை என்கிற மனோநிலையில் தான் இருந்திருக்கிறார். ஜின்னா தனக்கு கிடைத்த பாகிஸ்தான் எதிர்பார்த்த அளவில்லை என்கிற கடுப்பில் காஷ்மீர் பக்கம் கண் பதிக்கிறார். ஜூனாகரில் ஹிந்து மக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதியை தன் வசப்படுத்திக்கொள்ள பார்க்கிறார். இது போல இன்னும் சில ஹிந்து பெரும்பான்மை அரசுகளையும் கைப்பற்றிக்கொள்ள பார்க்கிறார். படேல் அப்பொழுது தான் விழித்துக்கொள்கிறார். காஷ்மீர் நோக்கி பழங்குடியினரின் தாக்குதல் நடப்பதும் அதற்கு பிறகு காஷ்மீரின் வடக்கு பகுதி, கில்கிட் பல்டிஸ்தான் பாகிஸ்தான் பக்கம் போவதும் எல்லாருக்கும் தெரியும். இங்கிலாந்தின் பாகிஸ்தான் சார்பு கொள்கை அப்பகுதிகளை அப்படியே காத்தது ஐ.நா. சபையில் என்றால், நேருவும் அப்படிப்பட்ட பிரிவினையை ஏற்றுக்கொண்டார் என்பது வரலாறு. காரணம் அப்பகுதியில் பலமாக இருந்த முஸ்லீம் மாநாட்டு கட்சி பாகிஸ்தான் ஆதரவு நிலையை எடுத்திருந்தது என்கிற உண்மையையும் ஆசிரியர் காட்டுகிறார்.
 
காஷ்மீர் என்பதை மத ரீதியான ஒரே மக்களாக பார்க்க முடியாது என்பதை அங்கே இருக்கும் சூபி இஸ்லாமியத்தை பின்பற்றுவதையும், பாகிஸ்தானில் சுன்னி முஸ்லீம்கள் ஷியா இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையை கட்டவிழ்ப்பதை பதிவு செய்கிற ஆசிரியர் அதே சமயம் இந்தியாவிலும் லடாக் பகுதி மக்கள் தனி யூனியன் பிரேதசம் ஆக விரும்புவதையும் கோடிட்டு காட்டுகிறார்.
 
இந்தியாவும் சரி,பாகிஸ்தானும் சரி பெரும்பாலும் தேர்தல்களை நேர்மையாக நடத்தியதே இல்லை என்பது அதிர்ச்சியாக இருக்கலாம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியா தேர்தல்களை நேர்மையாக நடத்திக்கொண்டு இருந்தாலும் அதற்கு முன் ஒரே ஒரு முறை தேசாய் காலத்தில் மட்டுமே அப்படி ஒரு சூழல் இருந்துள்ளது. எண்பத்தி ஏழில் நடந்த தேர்தலின் பொழுது நடந்த முறைகேடுகள் இஸ்லாமிய ஐக்கிய முன்னணி என்று போட்டியிட்ட மக்களை ஆயுதம் எந்த வைத்திருக்கிறது.பாகிஸ்தானில் இன்னமும் நிலைமை மோசம். எழுபத்தி நான்கில் ஆசாத் காஷ்மீரில் முதல் தேர்தல் நடந்திருக்கிறது, இருபது வருடங்கள் கழித்து தான் வடக்கு பகுதிகளில் தேர்தல் நடந்துள்ளது. அடிப்படை உரிமைகள் கூட வெகுகாலம் வடக்கு பகுதிகளுக்கு இல்லையென்றே மறுத்திருக்கிறார்கள். அரசுகளை சும்மா சாவகாசமாக தூக்கி எறிவதும் நடந்திருக்கிறது. ஷேக்கை இந்தியா கைது செய்தது போலவே அங்கேயும் ஒன்பதே ஆண்டுகளில் மூன்று ஆட்சி மாற்றங்களை அரசாங்கம் நிறைவேற்றி இருக்கிறது.
 
பலூசிஸ்தான், சிந்து ஆகிய பகுதிகளை சுரண்டி பஞ்சாப் பகுதி பாகிஸ்தானில் கொழித்துக்கொண்டு இருக்கிறது. அங்கே எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பொருளாதாரம், மொழி சார், இனம் சார் சிறுபான்மையினரின் குரல்கள் கேட்கப்படுவதே இல்லை. அதிகமான ராணுவ வீரர்கள் பஞ்சாபில் இருந்து வருவதால் காஷ்மீர் சிக்கலை உயிர்ப்போடு வைத்திருப்பது பாகிஸ்தான் பஞ்சாபிகளுக்கு அவசியமாக இருக்கிறது.
 
இந்தியாவின் ஆயிரம் கிழிசல்களில் குருதி ஓட வைக்க வேண்டும் என்று ஊக்குவித்த தீவிரவாத இயக்கங்கள் எப்படி பாகிஸ்தான் மீதே பாய்ந்தன; ஆப்கான் போர் முடிவு எப்படி காஷ்மீரை நோக்கி ஜிஹாதிகளை செலுத்தியது என்பதையும் நூல் விவரிக்கிறது. சிந்து நதி உடன்படிக்கை, வாஜிரிஸ்தானில் நடக்கும் போராட்டங்கள், கார்கில் போர் சமயம் நடந்த போன் கால் பதிவு எப்படி பாகிஸ்தானை காட்டிக்கொடுத்தது, காஷ்மீர் சிக்கலில் எப்படி சுதந்திர காஷ்மீர் பேசுகிறவர்களை பாகிஸ்தான் காலி செய்து பாகிஸ்தான் உடன் சேர விரும்பும் குழுக்களுக்கு மட்டும் ஆதரவளிக்கிறது என்று நூல் சுவையாக
சொல்கிறது.
 
காஷ்மீர் சிக்கலை இரு மத சித்தாந்தங்களின் அடிப்படையிலான போராகவோ, அல்லது இரு நாடுகளின் சிக்கலாகவோ அணுகுவது தவறு என்றும் எல்லா பகுதி மக்களையும் இணைத்து பேசி இருக்கிற நிலையிலேயே வளர்ச்சி மற்றும் கூடுதல் உரிமைகள், சட்டத்தின் எல்லைகளுக்குள் சுயாட்சி சார்ந்து அம்மக்களை செலுத்துதல் பற்றி ஆசிரியர் தரும் தீர்வுகளும் யோசிக்க வேண்டியவை. கருப்பு வெள்ளை என்று அணுகாமல் யதார்த்தத்தின் கரம் பிடித்து நடக்க சொல்லும் இந்நூல் அளவில் சிறியது என்பது கூடுதல் போனஸ்.

secular ஆர்.எஸ்.எஸ்.,மதவாதி காந்தி-இப்படியும் சொல்வார்கள் சீக்கிரம் !


ஆனால் காந்தி தன் எழுத்தில் ஓரிடத்தில்கூட மதச்சார்பின்மை என்னும் சொல்லைப் பயன்படுத்தியதில்லை என்று ஒரு சமயம் அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிட்டார். அவரது முழு எழுத்துத் தொகுதிகளில் தேடிப் பார்த்தபோது அது உண்மை என்று தெரிந்தது. கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தாலும் பிறகு வேறு விதமான பொருளை எனக்குத் தந்தது.

‘மதச்சார்பின்மை’ என்பது காந்தியின் விருப்பமாக நிச்சயமாக இருக்கமுடியாது. அவர் ஒரு ஹிந்து. அப்படித் தன்னைவெளிப்படுத்திக்கொள்வதில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. என்ன பிரச்னை? நானும்கூட ஒரு ஹிந்துதான். ஒரு கிறித்தவராகவோ, இஸ்லாமியராகவோ வேறு மதம் சாராதவராகவோ உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் ஹிந்துக்கள்தாம். இதைப் புரிந்துகொள்வதில் சிக்கல் என்றால் ஒன்றும் செய்ய முடியாது. நம்வாழ்வில் நாம் மதத்துக்கு எந்தளவு முக்கியத்துவம் தருகிறோம் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். ஆனால் அந்த அடையாளம் நீக்க முடியாதது. மச்சம், ரேகை போன்றது.- http://www.writerpara.com/paper/?p=1774 இப்படி எழுதியிருக்கார் Pa Raghavan

ஆனால்,உண்மை என்னமோ வேறு அனில் நவ்ரியா தி ஹிந்துவில் எழுதிய கட்டுரை இது. http://www.hindu.com/2003/10/22/stories/2003102200891000.htm

காந்தி தன் வாழ்நாள் முழுக்க மதவெறியை எதிர்த்தார்,ஹிந்துத்வாவுக்கு மிகப்பெரிய எதிரியாக அவர் இருந்ததாலே அவரை கொன்றது ஆர்.எஸ்.எஸ். இப்படியாக இருக்கிற பொழுது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பங்கிருக்கிறது என்றெல்லாம் சொல்லிவிட்டு நைசாக காந்தி மதச்சார்பின்மை என்கிற வார்த்தையையே பயன்படுத்தவில்லை என்பது எவ்வளவு சாமர்த்தியமான அரசியல்

அந்த தி ஹிந்து கட்டுரையின் தமிழாக்கம் இது :

மதசார்பின்மை என்கிற வார்த்தை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முன்னர் வரை ஒரு அவமதிப்புக்குரிய சொல்லாக சில சமயங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதே காலத்தில் சார்ல்ஸ் பிராட்லா மற்றும் ஹோலியேக் ஆகியோர் இச்சொல்லை அரசியல் பயன்பாட்டில் பிரபலப்படுத்த முயன்றனர். லிங்கன் கூட இச்சொல்லை ஒரே ஒரு இடத்தில் அரசியலோடு தொடர்பில்லாத சூழலோடு இணைத்தே
உபயோகப்படுத்துகிறார். தேசங்கள் உருவான வேகத்துக்கு இச்சொல் வேகமாக புழக்கத்தில் பயன்படுத்தப்படவில்லை. மேலும்,மேலும் ஜனநாயக அரசுகள் எழுந்தது இச்சொல்லை அரசியல் தளத்தில் அடிக்கடி பயன்படுத்துவதற்கு வழிவகுத்தது

இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப்பற்றிய மோதிலால் நேரு கமிட்டி அறிக்கை (1928) முழுக்க முழுக்க மதச்சார்பின்மை பண்பு கொண்டதாக இருந்தாலும் அதில் ஓரிடத்தில் கூட இச்சொல் பயன்படுத்தப்படவில்லை. காந்தி,ஜவகர்லால் நேரு,மவுலானா ஆசாத் ஆகியோர் அங்கத்தினராக அமைந்து மார்ச் 1931 ல்
வெளியிட்ட கராச்சி அறிக்கை அரசு எம்மதச்சார்பும் கொண்டிருக்க கூடாது என்று வலியுறுத்தியது. மதசார்பின்மையே இதன் முக்கிய அங்கம் என்றாலும் அச்சொல் இந்த தீர்மானத்திலும் பயன்படுத்தப்படவில்லை. 1933 இல் காந்தியின்
எழுத்துக்கள் மற்றும் பேச்சில் தொடர்ந்து மதச்சார்பின்மை என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. மத்திய சட்டசபையில் இரண்டு மசோதாக்கள் சட்டமாக காத்திருந்தன. அவற்றுள் ஒன்று தீண்டாமையோடு தொடர்புடையது. காந்தி இந்த
மசோதாவை ஆதரித்து எழுதினார். மனித குலத்தை பிரித்துப்பார்க்கும் ஒரு பாரம்பரியத்தை முறையாக நீக்கும் இந்த மதச்சார்பற்ற சட்டத்தை தான் ஆதரிப்பதாக குறிப்பிட்டார். மே 6, 1933இல் தீண்டாமையை ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தின் சட்டமானது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளாது என்று சொன்னார்.

மேலும் நவம்பர் 1933இல் இச்சட்டம் மத ரீதியான செயல்களில் தலையிடுகிறது என்று குரல்கள் எழுந்த பொழுது மதத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிட்ட தருணங்கள் ஏராளமாக உள்ளன என்று குறிப்பிட்டார். தேவையில்லாமல் அரசு மத ரீதியான செயல்களில்,நம்பிக்கைகளில் தலையிடுவது தான் தவறு இங்கே சூழல் அப்படியில்லை என்றும் காந்தி வாதாடினார்.

ஜனவரி 27, 1935 அன்று காந்தி மத்திய சட்டசபையின் சில உறுப்பினர்கள்
முன்னால் உரையாற்றினார். “ஒட்டுமொத்த இந்துக்களின் கருத்தும் தீண்டாமையை ஒழிப்பதற்கு எதிராக இருக்குமென்றாலும் மதச்சார்பற்ற சட்டசபை பொண்ட அமைப்புகள் இப்படிப்பட்ட எண்ணப்போக்கை ஏற்றுக்கொள்ளவே கூடாது” என்று வாதாடினார் (காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகள் )

ஜனவரி 20, 1942 அன்று பாகிஸ்தான் கோரிக்கையை பற்றி காந்தி பேசுகிற பொழுது இப்படி சொன்னார். : வரி,சுகாதாரம்,காவல்,நீதி மற்றும் பொது பயன்பாட்டு அம்சங்களை பயன்படுத்துவதில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களிடையே என்ன முரண்பாடு ஏற்பட்டு விடப்போகிறது ? மதரீதியான நம்பிக்கைகளில் மட்டுமே வேறுபாடுகள் ஏற்படும் ; ஒரு மதச்சார்பற்ற அரசில் இவை கவலைப்பட வேண்டிய
அம்சமாக இருக்காது. அவரவர்கள் அவரவரின் நம்பிக்கையை பின்பற்றலாம்.” என்று அழுத்திச்சொன்னார் அவர். காந்தியின் மதச்சார்பின்மை என்கிற சொல்லை பயன்படுத்தியதை தற்கால அரசியல் வாதங்களில் நேருவியம் என்று விவரிக்கலாம். இதை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நேருவுக்கு ஒப்புமை இல்லாத
அல்லாத நேருவால் ஏற்றுக்கொள்ள முடியாத மதச்சார்பினமைக்கான எந்த அர்த்தத்தையும் காந்தி அச்சொல்லுக்கு வழங்கவில்லை என்பதே ஆகும்.

இதே கருத்து விடுதலை நெருங்கிய பொழுதும்,அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் துவங்கிய பொழுதும் வலியுறுத்தப்பட்டது.

”நான் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால் மதமும்,அரசும் பிரிந்தே இருக்கும். என் மதத்தின் மீது ஆணையிட்டு சொல்கிறேன் ; அதற்காக நான் என்னுயிரையும் தருவேன். அதே என் சொந்த விஷயம். இதோடு அரசுக்கு எந்த வேலையுமில்லை. அரசு மதச்சார்பின்மை,சுகாதாரம் ,தகவல் தொடர்பு,அயலுறவு,நாணயம் ஆகியவற்றையே கவனித்துக்கொள்ளும். என் மதம் அல்லது உங்கள் மதத்தின் செயல்பாடுகளில் அது தலையிடாது. அது அவரவரின் தனிப்பட்ட கவலை. “ என்று செப்டம்பர் 1946 இல் ஒரு கிறிஸ்துவ மிஷனரியிடம் பேசிக்கொண்டு இருந்த பொழுது காந்தி குறிப்பிட்டார் காந்தி கல்கத்தாவின் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியின் கெல்லாஸ் பாதிரியாருடன் ஆகஸ்ட் 16 இல் பேசியதை ஹரிஜன் ஆகஸ்ட் 24 அன்று இவ்வாறு பதிவு செய்தது. “ காந்தி அரசாங்கம் கண்டிப்பாக மதச்சார்பற்ற இருக்க வேண்டும் என்கிற தன் கருத்தை வெளிப்படுத்தினார். மதக்கல்வியை அரசாங்க பணத்திலிருந்து அது வளர்க்க கூடாது என்றும் அவர் சொன்னார்.நாட்டின் பொதுச்சட்டத்தை ஒரு குடிமகன் ஒப்பி நடக்கும் வரை அவரின் மத நம்பிக்கைகளில் அரசு தலையிடக்கூடாது ; மிஷனரியின் செயல்பாட்டில் அரசு தலையிடாது. அதே சமயம் அரசு மிஷனரிக்கு எந்த புரவலும் ஆங்கில அரசு செய்தது போல தராது என்றும் சொன்னார். இந்த புரிதலே சட்டத்தின் 25, 26 ,27 பிரிவுகளில் வெளிப்படுகிறது

இந்த சந்திப்புக்கு அடுத்த நாளே தன்னுடைய இதே கருத்தை நர்கேல்தேங்கா எனும் இடத்தில் காந்தி அழுத்திச்சொன்னார். அதை இவ்வாறு ஹரிஜன் இதழ் குறிக்கிறது,”தன்னுடைய வாழ்நாள் முழுக்க எல்லா மக்களும் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சமஉரிமை பெற வேண்டும் என்பதற்காகவே தான்
பாடுபட்டதாக காந்தி குறிப்பிட்டார். அரசு முழுமையாக மதச்சார்பற்று இருப்பது அவசியம் என்றும் சொன்னார். எந்த மத அமைப்பும் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படாது என்றும் அவர் சொன்னார். எல்லாரும் சட்டத்தின் பார்வையில் சமம் என்றும் குறிப்பிட்டார். “ ஐந்து நாட்கள் கழித்து தேசபந்து பூங்காவில் அவர் பேசுகிற பொழுது ,” மதம் என்பது தனிப்பட்ட சமாசாரம் ,அதை அவரவரின் தனிவாழ்க்கை வெளியோடு குறுக்கிக்கொண்டால் அரசியல் வாழ்க்கையில்
எல்லாமும் சிறப்பாக இருக்கும் . அரசாங்கத்தின் அதிகாரிகளும்,பொதுமக்களும் மனதில் கொண்டு மதச்சார்பற்ற அரசை உருவாக்க முழு மனதோடும்,பொறுப்போடும் பாடுபடுவார்கள் என்றால் உலகத்துக்கே பெருமை தருகிற ஒரு புதிய இந்தியாவை கட்டமைக்க இயலும்.” என்றார்

நவம்பர் 15, 1947 இல் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் அகதிகளின் மறுவாழ்வு சார்ந்து எண்ணற்ற தீர்மானங்களை நிறைவேற்றியது. எல்லா குடிமக்களும் சம உரிமைகளை அனுபவிக்கிற ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசை அமைப்பதே காங்கிரசின் நோக்கம் என்றும் குறிக்கப்பட்டது. காந்தி இந்த தீர்மானங்களை மனதார வரவேற்றார். “இந்தத்தீர்மானங்கள் மிகமுக்கியமானவை ; இவற்றை நான் ஒவ்வொன்றாக உங்களுக்கு விளக்குவேன்” என்று அப்பொழுது நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் சொன்னார்.

குருநானக்கின் பிறந்தநாள் அன்று பேசிய காந்தி (நவம்பர் 28, 1947 ) அரசுப்பணத்தை கொண்டு சோமநாதர் ஆலயத்தை புனரமைப்பதை கடுமையாக எதிர்த்தார். : நாம் எல்லாருக்குமான அரசை உருவாக்கி இருக்கிறோம். இது ஒரு மதநம்பிக்கை கொண்ட அரசில்லை. இது எம்மதத்தையும் சார்ந்து செயல்படும் அரசுமில்லை. ஆகவே அரசுப்பணத்தை மதம் சார்ந்து அரசாங்கம் செலவிடக்கூடாது.” என்பதே அவரின்
தெளிவான வாதமாக இருந்தது. காந்தி மதச்சார்பற்ற ஒரு அரசை ஆதரித்த பொழுது ஒரு மதத்ச்சார்பற்ற அரசாங்கத்தை அக்கால சமுதாயம் ஆதரிக்க வேண்டும் என்று புரிந்துணர்வு கொண்டிருந்தார். இந்த புரிந்துணர்வு 1969க்கு பின்னர்
கண்டுகொள்ளப்படாமல் போனதால் ஹிந்துத்வா சக்திகள் நாட்டில் மீண்டும் வளர்ச்சி பெற்றன ; காந்தி சுட்டுக்கொல்லப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் இப்படி எழுதினார் “ ஒரு நன்கு கட்டமைப்பக்கட்ட ஆக்கப்பூர்வமாக செயலாற்றும் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மக்களுக்கு சேவை செய்வதே அவர்களின் குறிக்கோளாகவும்,சாசனமாகவும் இருக்கும். அமைச்சர்கள் இவர்களிடம் இருந்து ஊக்கம் மற்றும் வழிக்காட்டுதல் பெற்று செயலாற்ற வேண்டும். இந்த பணியாளர்கள் மதச்சார்பற்ற அரசுக்கு வழி காட்டுவார்கள். “
காந்தி-நேரு உறவில் படைப்பாக்க அழுத்தங்கள் இருக்கவே செய்தது.
அவர்களுக்கு முரண்பாடுகள் இருந்தன. காந்தியின் மதம்பற்றிய பார்வை நேரு பகிர்ந்துகொள்ளவில்லை. தங்களின் கருத்து முரண்பாடுகளை பொதுவெளியில்,தங்களுக்குள் நிகழ்ந்த கடிதப்பரிமாற்றங்களில்,நேரு தன்னுடைய டைரியில் என்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவற்றை மட்டுமே பெரிதுபடுத்தியும்,அல்லது இவற்றை மட்டுமே கவனத்தில் கொண்டும் சில எழுத்தாளர்கள் இயங்கினார்கள். அழுத்திச்சொல்ல வேண்டியது என்னவென்றால் காந்தி மற்றும் நேரு இருவருமே மதச்சார்பின்மையை தன் பண்பாக கொண்ட தேசம் என்கிற குறிக்கோளிலும்,தேசம் என்பது பலதரப்பு மக்களை ஒன்றாக இணைத்து நகரும் அமைப்பு என்பதிலும் ஒரே பார்வையை,அழுத்தமான நம்பிக்கையை கொண்டிருந்தார்கள். இந்த வகையில் அவர்கள் அன்றைய ஹிந்து மகாசபா,முஸ்லீம் லீக்,விடுதலைக்கு முந்திய சி பி ஐ ஆகியன தேசம் என்பதை மதம் சார்ந்த ஒரு பகுப்பாக பார்த்ததை விடுத்து எல்லாத்தரப்பு மக்களையும் உள்ளடக்கிய
பிராந்திய தேசியத்தை காந்தி மற்றும் நேரு வலியுறுத்தினார்கள் என்பதே உண்மை. முரண்பாடுகள் ஒத்துப்போகும் கருத்துக்களை விட ஆழமாக அமைந்திருந்தால் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்க முடியாது என்பதே யதார்த்தம். காந்தியும் நேருவும் இணைந்து வெகுகாலம் ஒன்றாக செயல்பட்டார்கள் என்பதே உண்மை. காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நேருவை நான்கு முறை பரிந்துரைத்திருக்கிறார் (1929, 1935 (1936 தலைவர் பதவிக்காக ), 1938-39 (மார்க்சிய சோசியலிஸ்ட் நரேந்திர தேவா பெயரோடு இணைத்து பரிந்துரைத்தார் ) இறுதியாக 1946 இல் . என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

பல்வேறு கருத்தியல் தளங்களில் இருந்து காந்தி-நேரு பிரிவு என்கிற ஒன்றை பெரிதுபடுத்தி காட்டி அப்பிரிவினையை அதிகப்படுத்தும் செயல்களில் சில சக்திகள் ஈடுபட்டன. காந்தியின் ரத்தம் தோய்ந்த கரங்களோடு இருந்த
ஹிந்துத்துவா சக்திகள் இதை முக்கியப்பணியாக செய்தன. இப்படி காந்தி,நேரு இருவரையும் பிரித்து காண்பிப்பதன் மூலம் நேருவை சுலபமாக காந்தியிடம் இருந்து பிரித்துக்காண்பித்து கருத்தியல் ரீதியாக தாக்கமுடியும் என்று திட்டமிட்டு செயல்பட்டார்கள். குறிப்பாக காங்கிரஸ் 1969க்கு பின்னர் இரண்டாக உடைந்த பின் இந்த காந்தி-நேரு பிரிப்பு அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு அதைக்கொண்டு எந்தப்பக்கம் யார் என்பதை பகுக்கப்பயன்படுத்தபட்டது . இதில் பெரிய கேலிக்கூத்தாக வசந்த் சத்தே முதலிய ஆர்.எஸ்.எஸ் சில் இருந்த (1939-41 வரை ) தலைவர்கள் கூட தங்களை நேருவியவாதிகள் என்று காட்டிக்கொண்டார்கள் . சி பி ஐ பாரம்பரியத்தோடு 1940களில் இணைந்து இருந்த பலர் (இவர்கள் தற்கால கம்யூனிச இயக்கத்தோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை ) இந்த நேரு-காந்தி பிரிவினையை அழுத்தமாக வலியுறுத்தினார்கள். அதில் சிலர் தங்களை நேருவியவாதிகள் என்று அடையாளப்படுத்தி கொண்டார்கள். அதே சமயம் தேசம் சார்ந்த பார்வையில் அல்லது முஸ்லிம் அடையாளத்தை முன்னிலைப்படுத்திய முஸ்லீம் லீகின் நாட்டுக்கொள்கை ஆகியவற்றில் நேரு-காந்தி இருவரில் ஒருவரின் பார்வையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வந்த பொழுது அவர்கள் நேருவின் பார்வையை நேருவியவாதிகள் என்று சொல்லிக்கொண்டவர்களும் கொண்டிருக்கவில்லை. காந்தியவாதிகளும் இந்த காந்தியிடம் இருந்து நேருவை பிரிப்பதை அதிகப்படுத்தினார்கள். காந்திக்கும்,நேருவுக்கும் இருந்த குறிப்பிட்ட பிரிவுகளை பெரிதுபடுத்தி அக்காலத்தில் நடந்த சமகால மாற்றங்களில் இருந்து தங்களை விலக்கிக்கொண்டு நின்றார்கள். இவை எல்லாவற்றையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

(இக்கட்டுரை அனில் நவ்ரியாவின் Gandhi on secular law and state எனும்
கட்டுரையின் மொழியாக்கம். அவரின் அனுமதிபெற்று இக்கட்டுரை மொழி  பெயர்க்கப்பட்டுள்ளது )

காமராஜ்-கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை !


நாகூர் ரூமி அவர்களின் எழுத்தில் மலர்ந்த காமராஜர்-கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை நூலை வாசித்து முடித்தேன். காமராஜர் பற்றி எண்ணற்ற தெரிந்த தகவல்கள் நூல் முழுக்க இருந்தாலும் சொல்கிற நடையில் ஆசிரியர் ஈர்க்கிறார். பெரும்பாலும் மற்றவர்கள் தொட யோசிக்கிற காமராஜரின் வீழ்ச்சி காலத்தையும் பதிவு செய்கிறார். ராஜாஜி-காமராஜர் என்று இருவரையும் ஒப்பிட்டு எழுதப்பட்டு இருக்கும் அதிகாரம் சிறப்பானது. நூலில் ஒரு பிழையான தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது- காமராஜர் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது எனும் தகவல். அது அறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்டது. நூலில் இருந்து சில துளிகள் :

தஞ்சை மருத்துவக்கல்லூரி எழுவதற்கு காமராஜரே காரணம். எண்பது லட்சம் அரசு தரட்டும்,இருபது லட்சம் நான் தருகிறேன் ; என் கட்டுப்பாட்டில் ஒரு மருத்துவக்கல்லூரி கட்டிவிடலாம். என்று ஒரு பணக்காரர் கேட்க,ரயில்வே செஸ் பணத்தில் இருந்து முழுமையாக ஒரு கல்லூரியை அரசுப்பொறுப்பில் கட்டி தனியார் நிழல் அதில் படாமல் காமராஜர் பார்த்துக்கொண்டார் 
அம்மா மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது பார்க்க போயிருக்கிறார். ,”ஒரு வாய் சாப்பிட்டு போப்பா” என்று அம்மா சொல்ல கொஞ்சமாக சாப்பிட்டு இருக்கிறார். அருகிலிருந்தவர் வீட்டில் சாப்பிட்டு எவ்வளவு காலமிருக்கும் என்று கேட்ட பொழுது ,”அது ஆச்சு இருபது இருபத்தஞ்சு வருஷம்.!” என்றிருக்கிறார் காமராஜர் 
காமராஜரை தோல்வியடைய செய்த சீனிவாசனுக்கு அமைச்சர் பதவி தரமாட்டேன் என்று அண்ணா மறுத்துவிட்டார். அவர் ராஜாஜியிடம் சிபாரிசுக்கு போயிருக்கிறார். ராஜாஜி சலனமே இல்லாமல் இப்படி சொன்னாராம் ,”எவ்வளவோ பெரிய கென்னடியை ஒரே ஒரு குண்டு சாய்ச்சுட்டு. அதுக்காக அந்த குண்டை பாதுகாத்து கொண்டாடுறோமா?”

குலக்கல்விக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவிட்டு,ராஜாஜிக்கு மற்ற வகையில் ஆதரவு உண்டு என்கிறார் ; சட்டசபை கட்சித்தலைவர் பதவி மட்டும் போதும் முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். கட்டாயப்படுத்தி கொடுத்ததும் தன் ஆதரவாளர்கள் பதவி வேண்டும் என்று கேட்கக்கூடாது என்கிற நிபந்தனையோடு இருந்த அமைச்சரவையை கொண்டே ஆட்சி செய்கிறார்
ரேசனில் கேப்பை போடுறாங்க,அரிசி வாங்கிதாப்பா என்று முதல்வராக இருந்த காமராஜரிடம் சொந்த அம்மா கேட்ட பொழுது ,”ஊருக்கு ஒண்ணு உனக்கொண்ணா ? இதையே ஆக்கித்தின்னு !” என்றிருக்கிறார். அம்மா,விதவைதங்கை அவரின் பிள்ளைகள் என்று எல்லாரும் இருந்த குடும்பத்துக்கு மாதம் நூற்றிருபது ரூபாய் மட்டுமே அனுப்பி வந்திருக்கிறார். அதற்கு மேல் முப்பது ரூபாய் கேட்ட பொழுது கொடுக்க மறுத்திருக்கிறார் 
மதிய உணவுத்திட்டத்தை ஹரிஜன பள்ளிகளில் பின்பற்றுவது போல ஒப்பந்தாரர்களிடம் தரலாம்,நிதியில்லை என்று அதிகாரிகள் சொல்கிறார் . அரசே செய்யும் என்று அழுத்தி சொல்கிறார் கர்மவீரர். மத்திய அரசு அகலக்கால் என்று அனுமதி தர யோசிக்கிறது. மத்திய அரசு நிதி கம்மியாக வரவே குறைந்த எண்ணிக்கை பள்ளிகளில் மட்டும் அமல்படுத்தலாம் என்று சொன்ன பொழுது அதையும் புறக்கணித்து எல்லா பள்ளிகளிலும் அமல்படுத்தி சாதிக்கிறார் காலா காந்தி. நீண்ட கயிறிழுப்பு போட்டிக்கு பின்னர் அமலுக்கு வந்தது மதிய உணவுத்திட்டம் என்கிறார் நெ.து.சுந்தரவடிவேலு. 
காமராஜ்-கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை 
கிழக்கு பதிப்பகம் 
120 பக்கங்கள் 
விலை : ரூபாய் எழுபது