சீன மூங்கிலும்,கடவுளின் மறுப்பும்-இது திராவிடின் கதை !


என் தலைமையாசிரியர் என் பெற்றோர்கள் சொன்னதைக்கேட்டு என்னை கிரிக்கெட் ஆடாமல் செய்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். “நீங்கள் அவனின் கிரிக்கெட்டை பார்த்துக்கொள்ளுங்கள் ; நாங்கள் அவன் கல்வியை பார்த்துக்கொள்கிறோம் “என்றார் அவர்.தேர்வுகளுக்கு என் நண்பர்களின் குறிப்புகள் தான் உதவும் ; அதை அவசர அவசரமாக படித்துவிட்டு தேர்வுகளை எழுதினேன் நான். தொடர்ந்து ரஞ்சி போட்டிகளில் ஆடிக்கொண்டு தான் இருந்தேன். டென்னிஸ் பந்தை பதினைந்து கஜங்களில் இருந்து வீசச்செய்து பயிற்சி செய்து வேகப்பந்து வீச்சாளர்களை இன்னமும் சிறப்பாக எதிர்கொள்ள என்னை தயார்படுத்திக்கொண்டேன். அண்டர் 19 இந்திய அணியின் கேப்டனாக ஆகியிருந்தேன். சிறந்த பந்துவீச்சுகளை சந்தித்து சிறப்பாகவே ஆடினேன் . ஆனாலும் நான் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை. ஐந்து வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் தான் ஆடிக்கொண்டு இருந்தேன் நான். என்னுடைய கைனடிக் பைக்கில் இப்படி எழுதிக்கொண்டேன்,
“கடவுளின் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை !”(“God’s delays are not God’s denials.” ).

திரும்பிப்பார்க்கிற பொழுது அந்த ஐந்து வருடம் அப்படி இருந்திருக்காவிட்டால் இப்பொழுது பெற்றிருக்கும் வெற்றிகளை என்னால் எதிர்கொண்டு இருக்க முடியாது என்பதே உண்மை என்று உணர்கிறேன். இதுவே என்னை வார்னே,முரளிதரன் மாதிரியான சுழல்பந்து வீச்சாளர்களை தைரியமாக எதிர்கொள்ள செய்தது. டென்னிஸ் பந்து பயிற்சி தான் அக்ரம்,மெக்ராத்,டொனால்ட் என எல்லாரையும் ஆடக்கடினமான பிட்ச்களில் கம்பீரமாக சந்திக்க உதவியது. நான் இளைஞர்களுடன் பேசுகிற பொழுது இந்த காத்திருத்தல் பற்றிதான் அழுத்தி சொல்வேன். ஒரு செடியின் கதை உங்களை ஈர்க்கப்போகிறது இப்பொழுது …

ஒரு சீன மூங்கில் விதையை நிலத்தில் நட்டு ஒரு வருடம் நீர் விட்டு பராமரித்து வளர்த்தாலும் அது முளைக்காது. ஐந்து வருடங்கள் வரை அது நிச்சயம் முளைக்காது. ஒருநாள் சின்னதாக ஒரே ஒரு சின்னஞ்சிறு செடி முளைக்கும். அடுத்த ஆறே வாரத்தில் 90 அடி வளர்ந்து நிற்கும் அது. ஒரே நாளில் 39 அங்குலம் கூட வளரும் அது. நீங்கள் செடி வளர்வதை கண்களால் பார்க்க முடியும் அந்த ஐந்து வருடங்கள் அந்த செடி என்ன செய்து கொண்டிருந்தது ? அது தன்னுடைய வேர்களை வளர்த்துக்கொண்டு இருந்தது. ஐந்து வருடங்களாக பெருவளர்ச்சிக்கு அது தன்னை தயார்படுத்திக்கொண்டு இருந்தது. அந்த வேர்களைக்கொண்டு அது தன்னை காப்பாற்றிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. ஆறே வாரத்தில் 90 அடிகள் வளர்ந்து நிற்கிறது என்று சிலர் சொல்வார்கள்.அது ஐந்து வருடம்,ஆறு வாரங்களில் 90 அடிகள் வளர்ந்திருக்கிறது என்று நான் சொல்கிறேன் . அந்த ஐந்து வருடங்கள் என்னுடைய நம்பிக்கை,ஆர்வம்,என் திறமையின் மீதான என்னுடைய பிடிப்பு ஆகியவற்றை சோதித்தது என்றே சொல்வேன் – ராகுல் திராவிடின் BITS Pilani பட்டமளிப்பு உரையில் இருந்து ஒரு பகுதி

“கடவுளின் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை !”((“God’s delays are not God’s denials.” ).

பூட்டோவின் பெருங்கதை இது !


ஜுல்பிகர் அலி பூட்டோ தன்னுடைய பாகிஸ்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்த தினம் இன்று. பூட்டோ அரசியல் களத்தில் அடித்து ஆடியவர் ; அந்த அதிரடியின் இறுதியில் தானே மரணத்தை தழுவியது எதிர்பாராத திருப்பம். பூட்டோவின் தந்தை ஜூனாகாதின் திவானாக இருந்தவர். ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும் பாகிஸ்தானுக்கு அப்பகுதியை தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு முதலில் வென்றார் அவர். பின்னர் இந்திய ராணுவம் நுழைந்து ஓட்டெடுப்பு நடத்தி இந்தியாவின் பகுதியானது அது என்பது தனிக்கதைபூட்டோ அமெரிக்காவில் படித்துவிட்டு,இங்கிலாந்தில் பாரீஸ்டர் பட்டம் பெற்று நாடு திரும்பினார். அயுப் கான் ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியை பிடித்ததும் இவரை இளவயதிலேயே அமைச்சர் ஆக்கினார். சீன்ப்போரில் இந்தியா தோற்றதும் சீனாவை நோக்கி நட்ப்புக்கரம் நீட்டினார் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பூட்டோ. காஷ்மீரில் பிடித்திருந்த பகுதிகள் சிலவற்றை சீனாவுக்கு வார்த்துவிட்டு இந்தியாவை அமைதி பேச்சுவார்த்தைக்கு தந்திரமாக அழைத்தார்.

இந்தியா குஜராத்தின் கட்ச் மீதான எல்லை சிக்கலில் அடக்கி வாசித்ததை கண்டதும் ஆபரேசன் கிப்ரல்டார் என்கிற பெயரில் பாய்ந்தார். பாகிஸ்தானின் பகுதிகளுக்குள் புகுந்து இந்திய ராணுவம் கலக்கி எடுத்தது. சாஸ்திரி தாஸ்கண்டுக்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்போனார். கோசிஜின்,அயுப் மற்றும் பூட்டோ சேர்ந்து கொண்டு இந்தியா போர்க்கைதிகளை விடுவிக்க வேண்டும் கைப்பற்றிய கார்கில் உள்ளிட்ட பகுதிகளை கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி சாதித்தார்கள் பூட்டோவின் ராஜதந்திரம் தான் இதற்கு முக்கிய காரணம் என்றே சொல்லவேண்டும். அடுத்து அயுப் கானுடன் சிக்கல் ஏற்பட்டு பதவியை துறந்தார் இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியை தொடங்கினார். யஹியா கான் அதிபராக ஆகி இருந்தார்.

தேர்தல் வந்தது . முஜுபிர் ரஹ்மான் தலைமையில் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் திரண்டிருந்தார்கள். வங்க மொழி பேசிய அவர்களை இரண்டாம் தர குடிமக்கள் போலவே அரசு நடத்தி வந்திருந்தது. கூடவே பதவிகள்,வரிப்பகிர்வு,வேலை வாய்ப்பு எல்லாவற்றிலும் ஒன்றுமே இல்லாமல் ஆக்கி இருந்தார்கள். தேர்தலில் பெரும்பான்மையை அள்ளி இருந்தது ரஹ்மானின் கட்சி. ஆட்சியை அமைக்க கூடாது அவர்கள் என்று முஷ்டி முறுக்கினார் பூட்டோ. ஏற்கனவே ஒரு போருக்கு காரணமான அவர் இந்த முறையும் அப்படி ஒரு சூழலுக்கு நாட்டை நகர்த்தினார். எண்ணற்ற மக்கள் கிழக்கு பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்கள்.. லட்சக்கனக்கனோர் அகதியாக இந்தியாவுக்குள் நுழைந்தார்கள். போர் மேகம் எழுந்து வங்கதேசம் உருவானது. அப்பொழுதும் சிறையில் இருந்த ரஹ்மானை சந்தித்து இன்னமும் போர் முடியவில்லை ஐம்பதாயிரம் டாலர் மற்றும் ஜனாதிபதி பதவி தருவதாக பேரம் பேசினார் பூட்டோ.

இவரே போருக்கு பின்னர் நாட்டின் தலைமைபொறுப்புக்கு வந்தார். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வந்து பிரதமருக்கு அதிகாரங்களை அதிகப்படுத்தினார் அவர். மீண்டும் தன்னுடைய தந்திரத்தை பயன்படுத்தி கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீரர்களை இந்தியாவிடம் இருந்து மீட்டுக்கொண்டு போய் இந்திராவிடம் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டார். அணு ஆயுத திட்டத்தை வேகமாக முன்னெடுத்து “புல்லை தின்றாவது இந்தியாவைப்போல அணு குண்டு வெடிப்போம் !” என்று சபதம் செய்தார். ஆனால் அகமதியா மதப்பிரிவை இஸ்லாமில் சேராது என்று சொன்னதில் அப்துஸ் சலாம் நாட்டைவிட்டு வெளியேறியது ஒரு பின்னடைவாக இருந்தது. சீனாவின் உதவியில் அக்கனவு நிஜமானது. பல்வேறு துறைகளை தேசியமயமாக்கி இருந்தார் பூட்டோ

மீண்டும் தேர்தல் வந்த பொழுது எதிர்கட்சிகள் ஒன்று திரண்டு தேர்தலில் நின்றன. இருந்தாலும் வென்றார் இவர் ; தேர்தலே மோசடி என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. நாடு கொதிநிலையில் இருந்தது. ஜியா உல் ஹக் எனும் தளபதி ஆட்சியை கைப்பற்றினார். அகமது ராசா கஸ்துரி எனும் அரசியல் எதிரியை தீர்த்துக்கட்ட முயற்சி செய்து அவரின் குடும்பத்தை பூட்டோ கொன்றார் என குற்றச்சாட்டை வைத்து கோர்ட்டுக்கு போனது வழக்கு. ஆதாரங்கள் இல்லை என்று தள்ளுபடி செய்த நீதிபதி அனுப்பப்பட்டு மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டு தூக்கு விதிக்கப்பட்டது இவருக்கு.

சுப்ரீம் கோர்ட் வரை போயும் இவரை காப்பாற்ற முடியவில்லை. ஜியாவிடம் கருணை மனுக்கள் ஆயிரக்கணக்கில் இவருக்காக குவிந்தும் மரண வாசலை தொட்டார் இவர். “நான் அந்த தவறை செய்யவில்லை என்று என் இறைவனுக்கு தெரியும் !” என்று சொன்ன பூட்டோ அதற்கு முன் செய்த தவறுகளைப்பற்றி என்ன இறைவன் நினைத்திருப்பார் என்று உள்ளுக்குள் நினைத்திருக்கலாம் !

காலங்களை கடந்த கலைவாணர் !


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் இன்று. நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது
ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்

டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து
நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது.

நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார்.
அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம்

திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு “இவன் என் நாடக கம்பெனி ஆள் !”என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.

சீர்திருத்த கருத்துக்களை படங்களில் இயல்பாக கொண்டு சேர்த்தார் அவர். தன்னுடைய நிலம் முழுவதையும் ஊர் மக்களுக்குப் பொதுவாக்கி, கூட்டுஉழைப்பால் கிடைக்கும் பலனை ஊர் மக்கள் ஒற்றுமையாக பகிர்ந்து கொள்ள
வேண்டும் என்று நல்லத்தம்பி படத்தில் வலியுறுத்தினார். தீண்டாமை மற்றும் மதுவை எதிர்த்தும் அவர் குரல் கொடுத்தார். கிந்தனார் நாடகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். இது
எதுவும் அறிவுரை போல இருக்காது என்பது தான் கலைவாணரின் முத்திரைக்கு சான்று

அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் ?
அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்றார் என்.எஸ்.கே.

என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து
என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் ராதா .

என்.எஸ். கே லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை ஸ்ரீநடராஜா கல்விக் கழக இலவச வாசகர் சாலையில் பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்

என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை
கர்ணன் !” என்றார் அதிகாரி

“நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும்.
இதில் என்ன தப்பு ? “என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.

அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் . ” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர்
என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நாற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு
குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை
ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு

ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டுத்தான் அவரின் மூச்சு ஓய்ந்தது. தன் மனைவி மதுரத்திடம் இப்படிச்சொன்னார் ,”நான் ஐம்பது வயசுக்குள்ள இறந்துடணும் மதுரம். ஒரு
கலைஞன் தன்னோட கலை வறண்டு போறதுக்கு முன்னாடி இறந்துடணும் !” என்று சொன்னபடியே நாற்பத்தி ஒன்பது வயதில் மரணமடைந்தார்.

மகாத்மா புலே நினைவு நாள் இன்று !


இந்திய சமூக புரட்சியின் தந்தை மகாத்மா ஜோதிராவ் புலே மறைந்த தினம் இன்று .இன்றைய மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர் இவர். இவரின் பரம்பரையினர் மலர்களை பேஷ்வாக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருந்த வழக்கம் உடையது. இயல்பாக போய்க்கொண்டிருந்த அவரின் வாழ்வில் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் பிரமாணர்கள் கீழ்சாதி ஆள் எனச்சொல்லி அவரை அவமானப்படுத்தி வெளியேற்றிய நிகழ்வு மாற்றத்தை உண்டு செய்தது .

ஏகத்துக்கும் வாசிக்க ஆரம்பித்தார் ; மேற்குலகின் நூல்களை படித்தார் .தாமஸ் பெய்னின் மனிதனின் உரிமைகள் நூல் nஅவரை ஈர்த்தது. வேதங்களை படித்து அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் சார்ந்து கேள்விகள் எழுப்ப ஆரம்பித்தார் .அவர் தன்னுடைய கட்டுரைகள் எழுத்துகளில் எங்கேயும் இந்து என்கிற வார்த்தையை பயன்படுத்தியது இல்லை -பிரமாணியம் என்றே குறித்தார் .உடல் உழைப்பை கொட்டித்தரும் மக்களை சூத்திரர் என பாகுபடுத்தி சோம்பிக்கிடக்கிற வேலையை தான் பிராமணர்கள் செய்கிறார்கள் என்றார் .1857 விடுதலைப்போரை உயர் சாதிகளின் செயலாகவே அவர் பார்த்தார் . தாழ்த்தப்பட்ட மக்கள் படைகளில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்பது குறிக்கப்பட வேண்டிய விஷயம்

அவரின் ‘அடிமைத்தனம்’ புத்தகம் பெரிய அலைகளை உண்டு செய்தது. அதைப்பற்றி செய்தி வெளியிடவே இதழ்கள் யோசித்தன. மண்ணின் உண்மையான மக்களான சூத்திரர்களை ஒதுக்கிவிட்டு வெளியே இருந்து இங்கே வந்த பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் ; மக்களின் அறியாமையை கொண்டும் தங்களின் வஞ்சகத்தாலும் மக்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்று அவர்கள் இழைத்த அநீதிகளை எழுதினார் புலே. அந்நூலில் தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் நூறில் ஒரு பங்கை கூட பதிவு செய்யவில்லை என்று சொன்னார். அந்நூலை அமெரிக்காவில் நீக்ரோக்களின் விடுதலைக்கு பாடுபட்டவர்களுக்கு அர்ப்பணித்தார்

பரசுராமனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதுகிறார் புலே. இயல்பாக பகடி செய்து செல்லும் அந்த கடிதம் இது தான் பெறுநர் : சிரஞ்சீவி பரசுராமன்

தந்தை பெயர் : ஆதி நாராயணன்

இடம் : எங்கும் பார்க்கலாம்

அன்பு அண்ணன் பரசுராமன் அவர்களுக்கு, பார்ப்பனர்களின் மூலமாக உலகுக்கு சொல்லப்படும் உங்கள் மந்திரங்களின் அற்புதங்களை நீங்கள் நேரடியாகவே செய்து காட்டி இந்த ஆங்கிலேயரையும் பிரெஞ்சாரையும் வாயடைக்க செய்ய வேண்டும். என்னைத் தவிர்க்கவோ என்னிடம் இருந்து தப்பிக்கவோ முயல வேண்டாம். இந்த அறிவிப்பு கண்ட நாளிலிருந்து ஆறு மாதத்துக்குள் தாங்கள் ஆஜராக வேண்டும். அப்போது நான் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களும் உங்களை எங்கும் நிறைந்த ஆதிநாராயணனின் அதிகாரபூர்வ அவதாரம் என மதிப்போம். அப்படிக் காட்சியளிக்க தாங்கள் தவறினால் இந்த நாட்டின் மகர்களும் மாங்குகளும், சகலகலாவல்லவர்கள் என அழைத்துக் கொள்ளும் உங்கள் பார்ப்பன பக்தர்களின் உண்மையான லட்சணத்தை அம்பலப்படுத்தத் தயங்கமாட்டார்கள் என்பதை அன்புடன் அறியவும்.

இப்படிக்கு தங்களைப் பற்றிய பிரச்சாரப் பெருமையின் நிஜத்தை சோதிக்க விரும்பும்

ஜோதிராவ் கோவிந்தராவ் புலே

கல்வி அறிவை தராமல் மக்களை ஒடுக்கும் வேலையை செய்த இந்து மதத்தின் காவலர்களை பகடி செய்தார் .‘சத்திய சோதக் சமாஜ்’ எனும் அமைப்பை உருவாக்கி செயல்பட ஆரம்பித்தார் . சூத்திரர்கள் மற்றும் ஆதி சூத்திரர்கள் என சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்காக அவ்வமைப்பின் மூலம் செயலாற்றினார். ஒரு மதத்தை விட்டு வெளியேறி அதை விமர்சிப்பதை விட அதை உள்ளிருந்தே அதன் அடக்குமுறைகளுக்கு எதிராக போராட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.ஒடுக்கப்பட்ட மக்களின் இழிநிலை போக கல்வியறிவே சிறந்த கருவி என உணர்ந்தார் .தன் மனைவி சாவித்திரிபாய் புலே உடன் இணைந்து தாழ்த்தப்பட்ட ஏன் இந்தியாவிலேயே பெண்களுக்கான முதல் பள்ளியை தொடங்கினார் .

உயர் ஜாதி மக்கள் கலவரம் செய்தார்கள் ;போகிற பொழுது சாவித்திரியின் மீது கல்லெறிந்தார்கள் . சனாதானிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து புலேவின் தந்தை அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினார். என்றாலும் தன் கொள்கையில் இருந்து விலகாமல் உறுதியாக நின்றார் .பெண்கள் கல்வியறிவு பெறுவது சாத்தியமாக ஆரம்பித்தது 1851 ஜூலையில் நல்புதாவர் பேத்திலும், 1851 செப்டம்பரில் ராஸ்தா பேத்திலும், 1852 மார்ச்சில் விதல் பேத்திலுமாக பெண்கள் கல்விக்கூடங்களை நிறுவினார் ஜோதிராவ்புலே. சாவித்திரி பாய் அக்கல்விக்கூடங்களில் முதல் பெண் ஆசிரியராக ஆனார். நடந்து போகிற பொழுது ஆதிக்கசாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர் ,ஜோதிபாயிடம் புலம்பியதும் “அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ !பின் அங்கே போய் நல்ல சேலையை அணிந்து கொள் !”என்றார் அவ்வாறே செய்தார் .

தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் என சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது ;அந்த மழிக்கும் பணியை செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்க செய்தார் . ஆங்கிலேய அரசாங்கம் எண்ணற்ற மதுக்கடைகளை திறந்து விட உரிமம் கொடுத்த பொழுது அது எளிய மக்களை பாதிக்கும் என்று அதை தீவிரமாக எதிர்த்தார். ஒருமுறை ஆங்கிலேய கனவான்களுக்கான நிகழ்வில் கலந்து கொள்ள ஏழை விவசாயிப்போல ஆடை அணிந்து போனார். “இந்தியாவின் உண்மையான சூழலைப்புரிந்து கொள்ள இந்த மாளிகைகளில் விருந்து உண்ணாதீர்கள் ! கொஞ்சம் கிளம்பி வந்து கிராமங்களை பாருங்கள் !” என்று முழங்கினார்

அவரின் பார்வை இன்றைக்கும் அவசியமாக இருப்பதை இவ்வரிகளே காட்டும் ,”தற்போதைய சமூக முறையை மாற்ற வேண்டுமானால், பிறரை சார்ந்திருத்தல், கல்லாமை, அறியாமை, ஏழ்மை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். அப்போதுதான் பிறரால் தாழ்த்தப்பட்டவர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க முடியும். மூட நம்பிக்கை ஒழிப்பே சமூக- பொருளாதார மாற்றங்களுக்குக்கு வழிகோலும்” அவரை நினைவு கூர்வோம்

புரூஸ் லீ எனும் ஜென் வீரன் !


தன் அப்பாவை போலவே திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் இளவயதிலேயே அந்த
சிறுவன்.சீக்கிரமே குங் பூ கற்றுத்தேறிய அவன் தெருக்களில் மற்ற பிள்ளைகளோடும் ,போலீஸ் உடனும் தொடர்ந்து வம்புக்களில் ஈடுபடுவதை அவர் தந்தை கவலையோடு பார்த்தார்.அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். வயிற்றுப்பிழைப்புக்கு அங்கே குங் பூ சொல்லித்தந்து கொண்டிருந்தார் லீஅப்பொழுது வோங் ஜாக்மான் எனும் அனுபவம் மிக்க குங்பூ வீரர் “ஆசியர் அல்லாதவர்களுக்கு ஏன் குங் பூ சொல்லித்தருகிறாய்” என்று கேட்க ,”கலை
எல்லாருக்கும் பொதுவானது தானே ” என அந்த இளைஞன் திருப்பிக்கேட்டார். “அப்படியில்லை ! வலியவன் சொல்வதை தானே உலகம் கேட்கும் ? நாமிருவரும்
சண்டை போடுவோம். நான் வென்றால் நீ குங் பூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் ; நீ வென்றால் நான் குங் பூ என்கிற பெயரைக்கூட
இனிமேல் உச்சரிக்க மாட்டேன் ! என்னோடு சண்டையிடு என்னோடு சண்டையிடு ” என்றார் அவர்.
இளைஞன் இணங்கி சண்டையிட்டார். அனல் பறந்த சண்டையில் வேகம் மிகுந்த இவர் வென்றுகாட்டினார். அவரை வென்றதும் முன்னமே சொன்னபடி வோங் ஜாக்மான் குங்
பூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொண்டார் .ஆனால்,அது எண்ணற்ற கேள்விகளை அந்தப் பையனின் மனதில் விளைத்தது. ஹாங்காங்கில் மிகப்பெரும் குத்துசண்டை
வீரனாக இருந்து நொடியில் பலரை நாக்கவுட் செய்த தான் அதிக நேரம் எடுத்து ஜாக்மான் உடன் மோதியது அவரின் பாரம்பரிய குங்பூவின் மீதான ஈர்ப்பை மங்கச்செய்தது .

தானே இன்னும் பல மாற்றங்களை உருவாக்கினார்.அவர் படித்த தத்துவம் அவருக்கு அதீத அமைதியை தந்தது,எவ்வளவு பெரிய சண்டையையும் எளிமையாக வென்றார். “நீர் போல அமைதியாக ஓடிக்கொண்டு ,சலனமற்று இருக்கிறேன் ,மூங்கிலை போல வளைந்து
கொள்கிறேன்.ஆழ்ந்த அமைதி என்னை எப்பொழுதும் வழி நடத்துகிறது” என்ற அவர் டிவி ஷோக்களில் கலக்கிய பின் சீட்டின் முனைக்கே கொண்டுசெல்லும் சண்டைகாட்சிகள் மூலம் ஹாலிவுட்டில் கலக்கினார்.

புரூஸ் லீ ஒரு கவிஞர் என்பதை தாண்டி ஒரு தீர்க்கமான தத்துவ ஞானம் மிக்கவராக இருந்தார் என்பதே சரி. “எதிரி என்று ஒருவன் இல்லவே இல்லையே ; எல்லாமே பிம்பங்கள்,பிரதிபிம்பங்கள். அவற்றை நொறுக்கிவிட்டால் போதும். எதிரிகள் என்று யாருமில்லை என உணர்வீர்கள் !” என்றார் அவர்.

ஜென் அவரைத் தொடர்ந்து செலுத்தியது. பேரமைதி அவரிடம் குடிகொண்டு இருந்தது,ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான், லீ அமைதியாகவே இருந்தார் “ஏன் இப்படி ?” என்று கேட்ட பொழுது ,”நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன் !” என்று மட்டும் சொன்னார். வீரம் என்பது சண்டை போடுவதில் மட்டுமில்லை ; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என
உணர்ந்து நடப்பதிலும் இருக்கிறது.

நிறைய ஜென் கதைகள் சொல்லும் லீக்கு மிகவும் பிடித்த கதை ஒன்று உண்டு. கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி வந்த இளைஞனிடம் நிரம்பிய தேநீர் கோப்பையை மீண்டும் ஊற்றி நிறைக்க முயல்கிற செயலை செய்து “வெறுமையாக
இருக்கிற பொழுது தான்,அறிதலைக்கடந்து உணர்தலை நோக்கி நகர்கிற பொழுது தான் நீ ஜென் ஆகிறாய் !” என்கிற ஆழ்ந்த தத்துவம் இருப்பதை உணர்த்திய அந்தக்கதை
மிகவும் பிடிக்கும் . மனம் விரும்புவதை உடல் செய்ய இந்த அறிதல் முக்கியம் என்பார் புரூஸ் லீ. அதுவே அவரின் அசரவைக்கும் சண்டைக்காட்சிகளுக்கு அடிப்படை

நம்பினால் நம்புங்கள் புருஸ் லீக்கு உடலில் குறைபாடு ஒன்றிருந்தது. அவரின் வலது கால் இடது காலை விட நான்கு சென்டிமீட்டர் உயரம் குறைவு. ஆனால்,உங்கள் தலையில் ஒரு நாணயத்தை வைத்தால் அதை உங்கள் தலைமுடியைக்கூட
அசைக்காமல் அவரால் எடுக்க முடியும். கேட்ட பொழுது ,”நாணயம் மட்டும் தான் என்னுடைய கண்களில் தெரியும். அதில் மூழ்கிப்போவது தானே குங்பூ !” என்றார்

அவரின் வேகம் எந்தளவுக்கு இருந்தது என்றால் ஒரு காட்சிக்கு நொடிக்கு இருபத்தி நான்கு பிரேம்கள் அவரின் வேகத்தை பிடிக்க போதாமல் கூடுதலாக பத்து பிரேம்கள் தேவைப்பட்டன ! இருந்தாலும் அதை ஆழ்ந்த அமைதியோடு செய்கிற சமநிலை புரூஸ் லீக்கு இருந்தது. அவர் பட்டப்படிப்பு படித்தது
தத்துவத்தில் என்பது அவரின் ஆழ்ந்த தேடலை உணர்த்தும் . முப்பத்தி மூன்று வயதில் இறந்து போனாலும் இன்னமும் ஆக்ஷனில் தொட முடியாத உயரத்தில்
இருக்கும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அத்துணை பாடங்கள்.

அவரின் ஒரு கவிதை தான் அவரின் வாழ்வானது :

மேற்கே காற்றை
எல்லாம் தங்கமயமாக்கி

கதிரவன் கரடுமுரடான மலையில் கரைகிறான்கரைந்துருகும் பனித்துளிக்கு
வெகுதூரம் தள்ளி
மலையுச்சியின் மீது
தங்க டிராகன்
தனித்து தன் கனவுகள்
வெளிச்ச மேற்கில் தேய,மறைய
சலனமில்லாமல் நிற்கிறது !

இதெல்லாம் இந்திய ராஜதந்திரம் !


உங்களுக்கு இந்திய அரசாங்கத்தை பிடிக்கவே பிடிக்காதா ? இந்தியாவை அமெரிக்க கைக்கூலி என்று திட்டுபவரா ? இந்தியாவுக்கு ராஜதந்திரம் என்று உண்மையில் இருக்கிறதா ? உங்களின் அத்தனை கேள்விகளுக்கும் இந்தியாவின் ராஜதந்திர அரசியலின் வரலாற்றோடு கொஞ்சம் சீனா,வியட்நாம்,கொரியா நாடுகளின் வரலாறு என்று அசரவைக்கும் நூல் தான் . இதை எழுதியவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்தவர் என்பது நூலின் ஆழத்திலும்,வாதங்களிலும் தெளிவாக தெரிகிறது

தொடர்ந்து இந்தியா என்பது பிற நாடுகளை எதிர்க்காத வருபவர்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை உள்ள தேசம் என்றே இன்றைய சூழலிலும் சொல்லி வருகிறோம். புஷ்யமித்ர சுங்கா கிரேக்க மன்னனை வென்றிருக்கிறார். சோழ மன்னர்கள் கடல் கடந்து நாடுகளை வென்றிருக்கிறார்கள். கனிஷ்கர் இந்தியாவை விட வெளிப்பகுதிகளில் தான் அதிக பகுதிகளை வென்றிருந்தார். சாணக்கியர நேரான யுத்தம்,ராஜதந்திர யுத்தம்,சூதின் மூலம் வெல்லுதல்,அமைதி வழியின் மூலம் சாதித்தல் என்று வழிகாட்டுகிறார். அவருக்கு இணையாக வள்ளுவரும் வரையறைகள் வகுத்திருக்கிறார். அதை ஆசிரியர் நூலில் குறிக்கிறார்

ஆங்கிலேயர்கள் துரோகத்தின் மூலம் சண்டையே போடாமல் பிளாசி யுத்தத்தை லஞ்சம்,துரோகம் ஆகியவற்றின் மூலம் வெல்வதை சொல்லித்தருகிறார்கள். நேருவை அமெரிக்காவுடன் சேர்ந்திருக்கலாம் என்று இன்றைக்கு இயல்பாக சொல்லிவிடுகிறோம். நேரு காலத்தில் அமெரிக்காவிடம் சோற்றுக்கு வழியில்லை கோதுமை கொடுங்கள் என்று விடுதலை காலத்தில் கேட்ட பொழுது கொடுக்க மறுத்து வேடிக்கை பார்த்திருக்கிறது அமெரிக்கா. பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை என்று வேறு வேலை பார்த்து வைக்க இந்தியாவை அலைக்கழித்திருக்கிறது.

சீனாவின் பகுதியாக ஒரு இரண்டு வருடங்களை தவிர எப்பொழுதும் இல்லாத திபெத்தை சீனா தாக்கிய பொழுது நேரு அதைக்கண்டுகொள்ளாமல் இருந்து வரலாற்று பிழை செய்திருக்கிறார். பல்லாயிரக்கணக்கான திபெத்தியர்கள் கொல்லப்பட்டு ஐ.நா. வில் சீனாவுக்கு எதிராக தீர்மானம் வந்த பொழுது அமைதி வழியில் தீர்க்கும் என்று அபத்தமாக பேசி சொதப்பியது இந்தியா. திபெத்தில் போர் நடந்த பொழுது சீன ராணுவத்துக்கு அரிசி,பெட்ரோல் இந்திய எல்லையில் இருந்து போனது வேறு நடந்தது !

சீனாவும்,நாமும் சகோதரர்கள் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார் நேரு. ஆங்கிலேயர் காலத்தில் கட்டாயப்படுத்தி போடப்பட்டு இருந்த எல்லையை மாற்றிக்கொள்ளலாம் என்று சீனா கூப்பிட்டது. என்றாலும் நேரு அசட்டையாகவே இருந்தார். சீனாவை சகோதரர் என்று அவர்தான் அழைத்தார். அங்கே இருந்த இதழ்கள் அவரை அமெரிக்காவின் கையாள் என்று பல காலம் சொல்லிக்கொண்டே இருந்தன. நேருவை திட்டி எழுத மாவோ அனுமதி வேறு கொடுத்திருக்கிறார். இந்தியாவோ சீனாவுக்கு ஐ.நாவின் அங்கீகாரம் வேண்டும் என்று வாதிட்டுக்கொண்டு இருந்தது. இருபது கிலோமீட்டர் உள்ளே போய் ஆசை காட்டினார்கள் சீனர்கள்,பாய்ந்து போன இந்தியாவை துவம்சம் செய்தது சீனா.

அப்பொழுதைய சூழலில் இந்தியாவை காஷ்மீர் சிக்கலில் தீர்வு காணச்சொல்லி வலியுறுத்தினார்கள் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தலைவர்கள். பூட்டோ சீனாவுக்கு காஷ்மீரின் பகுதியை தாரைவார்த்து விட்டு “வாங்க பேசலாம் !” என்று கிண்டலடித்தார். இந்தியா அசராமல் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறது. மீண்டும் நடந்த போரில் காஷ்மீரில் மூன்று முக்கியப்பகுதிகளை வென்ற பொழுதும் சோவியத் ரஷ்யாவின் வற்புறுத்தல் காரணமாக அதை இழந்துவிட்டு கிளம்பி வந்திருக்கிறோம். சீனாவோ ஜப்பானுடன் அமைதி என்றதும் பிரதமரை பதவியை விட்டு விலக்கினால் மட்டுமே பேசுவோம் என்கிற அளவுக்கு தன்னிலையில் தெளிவாக இருந்திருக்கிறது. நாம் அமைதியை காப்பதில் நாமே முன்னணியில் இருக்க வேண்டும் என்று சறுக்கி உள்ளோம்

மீண்டும் இந்திரா காலத்திலும் போர் நிறுத்தக்கோட்டை கட்டுப்பாட்டு கோட்டாக ஆக்குவதாக உறுதி மட்டும் கொடுத்துவிட்டு வங்கப்போரில் சரணடைந்த கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீரர்களை அள்ளிக்கொண்டு போன பிறகு பூட்டோ பெப்பே காட்டி இருக்கிறார். அதிகம் நம்புவதும்,ஜனநாயகத்தை பாகிஸ்தானில் காப்பதும் நம்முடைய கடமை என்று கண்ணீர் வடித்து காலியாகி உள்ளோம்

இலங்கை சிக்கலில் நேராக இயங்கிகொண்டு இருந்த இந்திராவுக்கு ஜி.பார்த்தசாரதி எனும் அறிவார்ந்த அதிகாரியின் வழிகாட்டுதல் இருந்தது. ராஜீவ் அவரை தூக்கி விட்டு ரொமேஷ் பண்டாரியை கொண்டு வந்தார். பண்டாரி எந்த அளவுக்கு விவரம் என்றால் ,”இந்தக்கடிதத்தை செல்வநாயகம் அவர்களிடம் கொடுங்கள் !” ,”சார் ! அவர் இறந்து இருபது வருஷமாச்சே !” என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.

ஈழ மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் உதவப்போன அதே இந்தியப்படையை ஜெயவர்த்தனா கேட்டார் என்பதற்காக ராணுவ தலைமை,வெளியுறவு அதிகாரிகள்,அமைச்சரவை என்று யாரையும் கேட்காமல் ராஜீவ் அவசர அவசரமாக களமிறக்கி பெரிய தவறுக்கு வழிவகுத்தார். விடுதலைப்புலிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆயுதங்கள் அவர்களின் எதிர் குழுக்களிடம் ராவால் தரப்பட்டது இன்னமும் நிலையை சிக்கலாக்கியது. இதே போலத்தான் ஆக்ரா சந்திப்பிலும் வெளியுறவு அதிகாரிகளிடம் எந்த ஆலோசனையும் கேட்காமல் இயங்கி தோல்வியில் முடிய வழிவகுத்து இருக்கிறார்கள்.

சீனாவின் முக்கிய ஆளுமை இந்தியாவுக்கு வருகிற பொழுதெல்லாம் பாகிஸ்தானுக்கு பரிசாக தொழில்நுட்பம்,அணுகுண்டு,ஆயுதங்கள் என்று அனுப்பி வைக்கிறது சீனா. வியட்நாமுக்கு ஊக்கம் தருதல்,அமெரிக்காவுடன் இன்னமும் நெருக்கமானாலும் நம் தேசத்தவரின் நலனை காத்தல்,பாகிஸ்தானுடன் இன்னமும் தைரியமான போக்கு,ஒசாமாவை அமெரிக்கா போட்டதைப்போல தாவூத்தை இந்தியா போட்டுத்தள்ளுதல் என்று நூல் தரும் ஐடியாக்கள் சுவாரசியமானவை

ஆசிரியர் : K.P.ஃபேபியன்
மொத்த பக்கங்கள் : 260
விலை : 595

வாழ வைத்த வர்கீஸ் குரியன் !


நவம்பர் 26-வர்கீஸ் குரியன் எனும் வெண்மை புரட்சியின் தந்தை பிறந்தநாள் இன்று. இவரின் கதை ரொம்பவே சுவாரசியமானது.கேரளாவின் கோழிகோட்டில் பிறந்த இவர் சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்ற பின் ,கிண்டி
பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றார்; அதன் பின் மிச்சிகன் பல்கலைகழகத்தில் உலோகவியல் துறையில் பட்டம் பெற்று இந்தியாவிற்கு வந்ததும் அவர் கொஞ்சகாலம் டாட்டா நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

அதற்கு பின் அவர் எடுத்தது தான் நாட்டின் வரலாற்றை திருப்பி போட்ட
தருணம். கால்நடை பொறியியல் படித்து விட்டு குஜராத்தின் ஆனந்த் எனும் இடத்தில உள்ள அரசு பாலேடு ஆய்வு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். கொஞ்ச நாளில் வேலை அலுப்பைத்தரவே அதைவிட்டு விட்டு வேறேதாவது வேலை பார்க்கலாம் எனக் கிளம்பினார்.

அவரின் நண்பர் திருபுவன்தாஸ்பாய் படேல் அழைப்பின் பேரில் எளிய மக்கள் பால் கொண்டு வந்து தரும் பால் கூட்டுறவு சங்கத்தை காண சென்றார் ;அப்பொழுது அவர்களின் துன்பப்படும் நிலையை பார்த்து வெளியேறும் திட்டத்தை கைவிட்டார். அங்கே இருந்து அவர்களின் பால் மற்றும் பால் பொருட்களுக்கான சந்தையை உருவாக்க கனவு கண்டார் . அவருக்கு உண்மையில் பாலே பிடிக்காது என்பது சுவையான முரண்

அவர் முன் நின்ற மிகப்பெரிய சவால் அன்றைய நிலையில் இந்தியா பால் உற்பத்தியில் மிகவும் பின்தங்கி இருந்தது. பல்வேறு பன்னாட்டு
நிறுவனங்களின் வாசலை தட்டி விவசாயிகளின் பாலை கொள்முதல் செய்ய வேண்டுகோள் விடுத்த பொழுது அவை அவரின் யோசனையை நிராகரித்தன. வலியோடு வெளியேறிய அவர்
,தொழில்நுட்பம் விவசாயிகளின் கையில் போய் சேரும்பொழுது வெற்றி பெறும் என நம்பினார். ஆனந்த் பால் கூட்டுறவு நிறுவனம் (அமுல்) எல்லா தொழில்நுட்பத்தையும் விவசாயிகளுக்கு சொல்லித்தந்தார்;எந்த அளவுக்கு
என்றால் மாடுகளை செயற்கை கருத்தரித்தலுக்கு உட்படுத்தலையே விவசாயிகளுக்கு சொல்லி தந்தார்.

மேலும் வெறும் பாலை விற்றால் பிரயோஜனம் இல்லை ,அது மிகப்பெரிய சந்தையை திறந்து விடாது என தெளிவாக உணர்ந்திருந்த அவர் பல்வேறு புதிய பால் பொருட்களை உற்பத்தி செய்து காட்டினார் ; அதற்கான ஊக்கத்தை பால் விவசாயிகளுக்கு தந்தார். எந்த அளவுக்கென்றால் மிகப்பெரிய தனியார்
நிறுவனங்கள் எல்லாம் எருமைப்பாலை ஒதுக்கி வைத்திருந்த நிலையில் அதிலிருந்து வெற்றிகரமான பால் பவுடரை தயாரித்து காண்பித்தார். அவற்றை விளம்பரப்படுத்தலும் அவசியம் என உணர்ந்தார் ;விவசாயிகளுக்கு
விளம்பரத்தில் அவசியத்தை புரிய வைத்து சாதித்தார்.

இதில் உள்ள அடிப்படை சிக்கல் முழுக்க முழுக்க இந்த விஷயங்களில்சம்பந்தப்பட்டவர்கள் எளிய பெரும்பாலும் படிக்காத மக்கள். அவர்களுக்கு
எளிய முறையில் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு சேர்த்ததும் ,அவர்களின் பாலை
இடைத்தரகர்கள் இல்லாமல் பெற்றதும் முடியாத என பன்னாட்டு நிறுவனங்கள்
நிராகரித்த எளிய ஏழைகளின் பால் கூட்டுறவு சங்கத்தை ஆசியாவிலேயே
மிகப்பெரிய மற்றும் வெற்றி நிறைந்த பிராண்ட் ஆக உயர்த்தியது.

மேலும் அமுலின் வெற்றியை கண்டு வியந்த அரசு இந்திய முழுக்க இந்த திட்டத்தை செயல்படுத்த அவரை அழைத்தது. ஆபரேசன் ஃப்ளட் என பெயரிடப்பட்டு மூன்று கட்டங்களில் செயல்படுத்தப்பட்ட அத்திட்டம் வெண்மை புரட்சியானது.
பால் பற்றாக்குறையில் கடினபட்ட தேசம் உலகின் மிகப்பெரிய பால்
உற்பத்தியாளர் ஆனது . வர்கீஸ் குரியன் அறுபதாண்டு காலம் அமுலின் தலைமை பொறுப்பில் இருந்த காலத்தில் அவர் பெற்ற சம்பளம் இத்தனைக்கும் டாடாவில் பெற்றதை விட மூன்று மடங்கு குறைவே !,

“இத்தனை எளிய ஏழை மக்களின் கனவுகளை தாங்குகிறோம் என்பதே நிறைவு தருகிறது. எனக்கு பாலை அருந்த பிடிக்காது ;ஆனால் இத்தனை பேரின் தூத்வாலா (பால்காரன் )என என்னை அழைத்து கொள்வதிலேயே நிறைவு கொள்கிறேன் !”என தன்
வாழ்க்கை வரலாற்றில் குறிக்கிற அவருக்கு உலக உணவு பரிசு,பத்ம விபூஷன் முதலிய பல்வேறு விருதுகள் கிடைத்து உள்ளன. எனக்கும் ஒரு கனவு இருக்கிறது என்ற அவர் மோடியின் சர்வாதிகார போக்கு பிடிக்காமல் அமுலை விட்டு விலகியது சோகமான முடிவு.

இவரின் மீதான ஒரு குற்றச்சாட்டு இந்திய பசுக்களை ஒழித்து வெளிநாட்டு பசுக்களை உள்ளே விடுகிற வேலையை இவர் செய்தார் என்பது. இவரின் வீட்டின் முன் பசு மாடுகளை கட்டி மக்கள் போராட்டமெல்லாம் செய்தார்கள். என்றாலும் வர்கீஸ் குரியன் அது மக்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை

“எனக்குமொரு கனவு இருந்தது !”என்பது அவரின் பிரபலமான வாசகம்;கனவுகள் தேசத்தின் மீதான எல்லையற்ற காதல் .தொழில்நுட்பத்தை கிராமங்களுக்கு கொண்டு
சேர்த்தது என்பவையெல்லாம் அவரின் எளிய கனவை தேசத்தின் வாழ்வாக்கியது;அவரை பாரதத்தின் வெண்மை புரட்சியின் தந்தை என அறிய வைத்தது..அறுபது வருடங்கள் ஓய்வே இல்லாமல் உழைத்த அவர் நிரந்தரமாக ஒய்வு எடுத்துக்கொண்டார் அவருக்கு ஒரு வெண்மை வணக்கம்

அரசியலமைப்பு சட்டம் ஆக்கிய அண்ணல் அம்பேத்கர் !


நவம்பர் 26

ஒப்பிலாத ஒரு மாபெரும் ஆளுமையின் மிகப்பெரும் சாதனை ஒன்று நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினம் இன்று. அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் இன்று தான். ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராக
எண்ணற்ற கொடுமைகளை அனுபவித்து வாழ்க்கையில் விடாமுயற்சி மற்றும் ஓயாத வாசிப்பால் உயர்ந்த அம்பேத்கர் அவர்கள் இந்தியாவின் சட்டத்தை வடிவமைக்கும் சட்ட வரைவு குழுவின் தலைவர் ஆனார்.

உலகிலேயே மிகப்பெரிய முழுக்க முழுக்க கையால் எழுதப்பட்ட அந்த சட்ட வரைவை அம்பேத்கர் அவர்கள் தனியாளாக வடிவமைக்கிற அளவுக்கு பல சமயங்களில் குழுவின் மற்ற உறுப்பினர்கள் அசமந்தமாக நடந்துகொண்டார்கள். இந்த நாட்டின்
அச்சாணியாக,ஜனநாயகம் ஓரளவிற்காவது உயிர்ப்புடன் இருப்பதை எப்பொழுதும் உறுதி செய்த வண்ணம் இருக்கும் அரசியல் சாசனத்தை ஆக்கி முடித்தார் அண்ணல்.

இதற்கு பின் இன்னொரு சம்பவம் உண்டு தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல சமயங்களில் காந்தி மற்றும் காங்கிரஸ் ஆகியோரோடு முரண்பட்ட அம்பேத்கரை
விடுதலைக்கு பிந்திய அமைச்சரவையில் நேரு சேர்க்கவில்லை. அம்பேத்கர் பெயரே இல்லாமல் அமைச்சரவை
பெயர் பட்டியலை காந்தியிடம் காட்ட .”அம்பேத்கர் பெயர் எங்கே ? இது
காங்கிரஸ் அமைச்சரவையா இல்லை எல்லாருக்குமான அமைச்சரவையா ? “எனக்கேட்டார்
காந்தி.அந்த அளவுக்கு தவிர்க்க முடியாத ஆற்றலாக அவர் இருந்தார்.

அரசியல் சாசனத்தை அரசியல் சாசன நிர்ணய மன்றம் இன்றைக்கு
ஏற்றுக்கொண்டது.ஆனாலும்,பூரண சுதந்திரம் என தேசியக்கொடியை நேரு ஏற்றிய லாகூர் காங்கிரஸ் மாநாடு நடந்த ஜனவரி 26 அன்று அன்று அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. கொடுமை என்ன தெரியுமா ? இத்தகு பெரிய செயலை கிட்டத்தட்ட
ஒற்றை ஆளாக செய்த அரசியலமைப்பின் தந்தையை அப்படி பல மாநில அரசுகளின் பாட புத்தகங்கள் பதிவு செய்ய மறுக்கின்றன.

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் !


விஸ்வநாத் பிரதாப் சிங் சுருக்கமாக வி.பி.சிங் மிகக்குறுகிய காலம் நாட்டை ஆண்ட மிகச்சிறந்த பிரதமர். நேருவின் காலத்தில் அரசியலில் குதித்த இவர், ராஜ வம்சத்தை சேர்ந்தவர்,இன்னொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டவர்.எமெர்ஜென்சியில் ஆட்சியை இழந்து பின் மீண்டும் ஆட்சியை காங்கிரஸ் பிடித்த பின்பு உத்தர பிரதேசத்தின் முதல்வர் ஆனார் மனிதர்;கொள்ளையர்களை அடக்க பல நடவடிக்கைகள் எடுத்தார் .

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கொள்ளையர்களை பிடிக்க முடியாததால் பதவி விலகுவதாக சொல்லி நாற்காலியை துறந்தார்.இந்திராவின் மறைவுக்கு பிந்திய
ராஜீவ் அமைச்சரவையில் நிதி அமைச்சர் ஆனார்,அம்பானிக்களை நோண்டி எடுத்தார் ,வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கணக்குகளை ஃபேர்ர்பாக்ஸ் என்கிற அமைப்பை
கொண்டு விசாரித்தார்.

காங்கிரசுக்கு கரன்சிகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்த பலரின் தலைகள் உருளுவதை ராஜீவ் பார்த்து இவரை நிதி மந்திரி பதவியில் இருந்து நகர்த்தி பாதுகாப்பு மந்திரி ஆக்கினார். .போபர்ஸ் பீரங்கி ஊழலை நோண்டி எடுத்தார் ;பல ஆதாரங்கள் இவரிடம் இருப்பதாக கிசுகிசுக்கபட இவரை அமைச்சரவையை விட்டு இறக்கினார் ராஜீவ்.

தனிக்கட்சியை தொடங்கினார் வி.பி.சிங் ; தேர்தல் நடந்தது. காங்கிரசிற்கு மெஜாரிட்டி இல்லாமல் போகவே பிஜேபி ஆதரவோடு ஆட்சி அமைத்தார். பி.ஜே.பியின் நிர்பந்தத்தால் பிரச்சனைக்குரிய ஜக்மோகனை காஷ்மீர் கவர்னர் ஆக்கினார் ; காஷ்மீரை இன்னமும் ரத்தம் தோய்ந்த பூமியாக அவரின் செயல்கள் ஆக்கின.

இந்திய அமைதிப்படையை இலங்கையை விட்டு வெளியேற்றினார் ;பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். தன் நிலத்தில் பெரும்பங்கை ஏழைகளுக்கு கொடுத்த அவர் மண்டல் கமிஷனின் பிற்படுத்தபட்டோருக்கு 27 % இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இவரின் புகழ் உச்சத்தை நெருங்குவதை கவலையோடு காங்கிரஸ் மற்றும் பிஜேபி கவனித்தன
.சோம்நாத்தில் இருந்து அயோத்தி நோக்கி ரதயாத்திரை கிளம்புவதாக அத்வானி சொல்ல ஆட்சி பறிபோகும் எனத்தெரிந்தும் அறம் சார்ந்து அவரைக்கைது செய்ய உத்தரவிட்டார்.

ஆட்சி போனதும் தேர்தல் வந்தது ராஜீவின் மரணம் காங்கிரசை அரியணை ஏற்ற நல்ல பிரதமர் ஒருவரின் காலம் முடிவுக்கு வந்தது , மீண்டும் பிரதமர் ஆக வாய்ப்பு கிடைத்த பொழுதும் அதை மறுத்தார். தபோவனத்து முனிவர் போல வாழ்ந்த அவர் இதே நவம்பர் 26 அன்று  ஐந்து வருடங்களுக்கு முன் மரணம் அடைந்தார்

நேற்று,இன்று,நாளை முதல் :


நாளை முதல்
குடிப்பதில்லை என்று
சத்தியம் செய்கிறான் நண்பன்
நூறாவது முறையாக

நேற்று முதல் கடன் வாங்குவதை
விட்டுவிட்டதாக சொல்லி
நூறு ரூபாய் தாள் தாங்கி இருக்கும்
பாக்கெட்டை பார்க்கிறார்
பக்கத்துவீட்டுக்காரர்

இன்று முதல் அடிப்பதில்லை
அவளை
என்கிறான் சிவந்து போன
கன்னத்தில் தான் நட்ட
வன்முறைக்களைகளை தொட்டிடும்
கோழைப்போலி ஜீவனொருவன்

நாளைக்கு சந்நியாசம்
இன்றைக்கே இப்பாடம்
நேற்றைக்கு கொடுத்தேனே
என்று சொல்லியே நகர்கிறது நடக்காத யாவும் 
நேற்றும்,நாளையும் அடித்தாடும்
பந்தாகி எம்புவதில் இன்றையும்
இடிந்துபோகிறது