கேப்டன் கோபிநாத்தின் ‘simply fly’ நூலை வாசித்து மெய்மறந்து போனேன். இந்தியாவில் விமானப்பயணம் என்பதை எளியவர்களுக்கும் சாதியப்படுத்திய அவரின் சுவை மிகுந்த பயணம் இது. ஒரு தன்னம்பிக்கை நூல் என்பதை விட கிராமத்து இளைஞன் ஒருவன் எப்படி ஒரு பில்லியன் டாலர் கம்பெனியை நேர்மையோடு சாதித்தார் என்பதை நாவலைப்போல காட்டும் இந்நூலை வேகமாக படித்துவிட முடியும்.

முதலில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிவிட்டு அங்கு நேர்ந்த விபத்தால் விவசாயம் செய்யலாம் என்று ஊருக்கு திரும்பிய அவருக்கு பட்டுப்புழு வளர்ப்பு,தேங்காய் வளர்ப்பு என்று கழிந்து கொண்டிருந்தது வாழ்க்கை, நடுவில் உடுப்பி ஹோட்டலை வாங்கி நடத்துகிறார். அங்கே ஹோட்டல் நடக்க விடாமல் மற்ற முதலாளிகள் சதி செய்ததும் திருமண சமையல்காரர்களை கொண்டு ஹோட்டலை ஆரம்பிக்கிறார்.
ஒரு கட்டத்துக்கு பிறகு வாழ்க்கையில் ஒரு தொய்வு ஏற்படுவதை சிசிபஸ் பற்றி காம்யூ சொன்னதோடு ஒப்பிடுகிறார். சிசிபஸ் கற்களை மலை உச்சி வரை கொண்டு போய் மீண்டும் கீழே தள்ளிக்கொண்டே இருக்கிறான் அவன். எதற்கு செய்கிறான் என்று யோசிக்காமலே கழியும் காலம் அவனுடையது. அதைப்போல தானும் இருப்பதாக உணர்கிறார். நடுவில் தேர்தலில் பிஜேபி சார்பாக போட்டியிடுகிறார். அப்பொழுது அவருக்கு கொடுக்கப்பட்ட இடத்தில்,நேரத்தில் தேவகவுடா பிரச்சாரத்துக்கு வர கம்பீரமாக தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுப்பேன் என்று சொல்லி அவரை அங்கிருந்து வெளியேற்றி சாதித்துவிட்டு ,’நம்மிடம் தைரியமும்,உண்மையை உரக்க சொல்லும் பண்பிருந்தால் சாதிக்க முடியும் !’ என்று பதிவு செய்கிறார்.
விமான சேவையை துவங்க அவருக்கு உந்துதல் விமானப்படையில் பணியாற்றி காயமுற்று கொரியர் நிறுவனத்தில் சேர்ந்து வேலை செய்துகொண்டிருந்த சாம் எனும் தோழரின் எதையாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்கிற வரிகள் ! வியட்நாமின் நேப்பாம் குண்டில் குடும்பம் இழந்து நிர்வாணமாக ஓடிய சிறுமியின் புகைப்படமே பலருக்கு தெரியும் . அந்த பெண் மீண்டும் தன் நாட்டுக்கு வந்து ஹெலிகாப்டர் சேவையை துவங்கி நாட்டில் [பல இடங்களை இணைத்து சாதித்தது கோபிநாத்துக்கு உத்வேகம் தந்தது.
முதலில் ஹெலிகாப்டரை வாடகைக்கு விடுவதை தான் செய்ய முனைகிறார். அவரின் நம்பிக்கைக்கு சான்ஸ் நிகழ்வுகள் என சோமர்செட் மாம் சொல்கிற திருப்புமுனைகள் கைகொடுக்கின்றன. முதலீடுகள் வருகிறது,ஓயாமல் அரசாங்க கதவுகளை தட்டுகிறார். நிதி மேலாண்மை ஆலோசகர் சம்பளமே கேட்காமல் ஐந்து வருடங்கள் நம்பிக்கையோடு வழிகாட்டுகிறார். லஞ்சம் தராமல் பிரதமர் அலுவலகத்தில் இருந்த நண்பருக்கு தெரிந்த அதிகாரியின் மூலம் தனியாருக்கு அனுமதி பெறுவதை சாத்தியப்படுத்துகிறார்.
வெளிநாட்டில் இருந்து வாடகைக்கு வாங்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் பெரிய அளவில் சாதிக்கின்றன. இன்ஸ்டன்ட் ஹிட் அடிக்கின்றன
கோல்ட்ஸ்மித் வரிகளை சொல்கிறார் அப்பொழுது ,”நேர்மையாக ஒரு குடும்பத்தை உருவாக்கி அதை வளர்க்கிற குடும்பத்தலைவன் திருமணமே செய்துகொள்ளாமல் மக்களைப்பற்றி குறை சொல்பவனை விட மேலானவன் !” என்று. ஹெலிகாப்டரில் திருமணம் செய்ய அனுமதித்து ஓசி விளம்பரம் தேடுகிறார். கிரிக்கெட் போட்டியின் பொழுது பயன்படுத்த ஹெலிகாப்டர் கொடுத்து டிவியில் நிறுவனப்பெயர் வர வைத்து சாதிக்கிறார்.
குறை சொல்வதை விடுத்து காரியத்தில் இறங்கிய அவர் அடுத்ததாக ஓகில்வி சொன்னதை செய்கிறார். மாட்ரியோஷ்க்கா எனும் ரஷ்ய பொம்மையினுள் திறக்க திறக்க குட்டி குட்டி பொம்மைகள் இருக்கும். “உங்களை விட சிறியவர்களை சேர்த்தல் நீங்கள் காணாமல் போவீர்கள் ; பெரியவர்களை சேர்த்துக்கொண்டு இணைகிற பொழுது இன்னமும் ஆச்சரியங்கள்,வளர்சிகள் இயல்பாக சாத்தியம் என்கிற அவரின் கோட்பாட்டை இணைத்து அற்புதமான எதிர்க்கருத்து சொல்பவர்களை இணைத்து எளியவர்களுக்கான விமான சேவையை உருவாக்க நகர்கிறார்.
இரண்டு வருடங்களாக கோப்பு அதிகாரிகளின் இழுத்தடிப்பால் தேங்கி நிற்கிறது. குலாம் நபி ஆசாத்தை நேரில் சந்தித்து தன்னுடைய தரப்பை பல மாத காத்திருப்புக்கு பின்னர் சொன்னதும் உடனே அனுமதி வாங்குகிறார். சிக்கலை உண்டு செய்யக்கூடும் என்று கருதப்பட்ட விமானத்துறை அமைச்சர் இப்ராஹிமையே துவக்க விழா சிறப்பு விருந்தினர் ஆக்குகிறார். பெரிய ஊர்களில் விமான சேவை என்றால் பெரிய நிறுவனங்கள் டெக்கான் ஏவியேசன் என்கிற தன்னுடைய நிறுவனத்தை காலி செய்துவிடும் என்று குட்டி குட்டி ஊர்களை மட்டும் குறிவைக்கிறார்.
இவரின் எளியவர்களுக்கு விமான சேவை என்கிற கான்செப்ட் சுண்டி இழுக்க ராஜீவ் கொட்டியால் என்கிற உலக அளவில் சிறந்த பைலட் கிளம்பி வருகிறார். கூடவே எப்படி இது சாத்தியம் என்று கேட்பவர்களிடம் ,”உடுப்பி ஹோட்டலை போல சர்வர் வைக்காமல்,உட்கார்ந்து வெட்டியாக கழிக்க நேரம் தராமல் \குறைவான செலவில் நிறைவான உணவை தருவதைப்போல தான் இதுவும் !” என்று கோபிநாத் சொல்ல சாத்தியமில்லை என்று சிரிக்கிறார்கள் மற்றவர்கள்.
விமானத்தில் சீட்களை அதிகப்படுத்துகிறார், இடைத்தரகர்களை ஒழித்து e டிக்கெட்களை கொண்டுவருகிறார். விமானத்தில் விளம்பரங்களை அறிமுகப்படுத்தி வித்தியாசம் காட்டுகிறார். ஏர் ஹாஸ்டஸ்களை நடுத்தர குடும்பங்களில் இருந்து தெரிவு செய்வது,உணவுகளை கபே டே நிறுவனத்தை சப்ளை செய்ய விட்டது,போஸ்ட் ஆபீஸ்,பெட்ரோல் பங்க்குகளில் டிக்கெட் விற்பனை,லக்ஷ்மனின் காமன் மேன் சித்திரத்தின் மூலம் விளம்பரம் என்று தூள் பண்ணியது. முன்னாடியே புக் செய்தால் தள்ளுபடி என்பது போட்டிகளை குறுக்கியது. கிராமத்து பெண்கள் தொடங்கி எளியவர்கள் எல்லாரும் விமானப்பயணத்தை சாத்தியமாக்கி கொண்டார்கள். சிந்தி பழங்குடியின மக்கள் அங்கே பயணம் செய்த தருணத்தை நெகிழ்வோடு குறிக்கிறார் கோபிநாத்
சி.கே.ப்ரகாலாத் சொல்வது போல பிரமிடின் அடிமட்டத்தில் உள்ள மக்களைக்கண்டு கொண்டு அவர்களின் மூலம் பொருளாதார வாய்ப்புகளை சாதிக்க முடியும்,வேண்டும் ! என்று ஊக்கம் பொங்க நிரூபித்த கோபிநாத் வெறும் ஏழாயிரம் ரூபாய் சேமிப்போடு தன் கனவுகளை துவங்கினார் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். டென்னிசனின் கவிதையோடு நூல் முடிகிறது
“அதே பழைய பலமில்லை இப்பொழுது
நிலமும்,நீள் சொர்க்கமும் இடையே நாம் நாமே நாம் நாமே !
வீரர்களின் இதயத்தின் பொறுமையெல்லாம்
காலமும்,கொடுவிதியும் கரைத்தாலும்
கலங்காத உள்ளம் உண்டு நமக்கு
போராடுவோம்,தேடிடுவோம்,அறிந்திடுவோம்,என்றும் வீழமாட்டோம் !
collins business வெளியீடு
ஐநூறு ரூபாய்
370 பக்கங்கள்