இந்திரா பார்த்தசாரதி பார்வையில் ஔரங்கசீப் !


இந்திரா பார்த்தசாரதி அவர்களின் ஔரங்கசீப் நாடகத்தை வாசித்தேன். எப்பொழுதும் ஒற்றைப்படையாகவே வரலாறு நமக்கு கற்பிக்கப்படுகிறது. பெரும்பான்மை தவறுகளை முக்கியத்துவப்படுத்தி படித்துவிட்டு நகர்வதே நமக்கான பாடபாணி. ஆனால்,அப்படி ஒரு மனிதன் செயல்படுவதற்கு காரணமென்ன என்று யோசித்திருக்கிறோமா ? அவன் ஏன் அப்படி மாறினான் என்று ஆய்வது வேறொரு கோணத்தை தரும் என்பதை அழகாக நாடகமாக் ஆக்கியுள்ளார் இபா. 

ஷாஜகான் எந்த பிள்ளையிடமும் உண்மையான நேசத்தோடு இருந்தாரா என்று கேள்வி எழுப்பபடுகிறது. ஜஹானாரா மட்டும் மும்தாஜை போல இருக்கிறாள் என்று அவர் கனிவாக இருந்தார் என்று அவள் வாயாலே சொல்லவைக்கிறார். கருப்பு மகாலை கட்டவேண்டும் என்று வீண் ஆடம்பரத்தில் ஈடுபட்ட அவர் மக்களைப்பற்றி என்றுமே கவலைப்படவில்லை அது ஏன் என்று இன்னொரு மகள் கேட்கிறாள். தாரா “அஹம் பிரம்மசாமி !” என்று இஸ்லாமுக்கு எதிராக தெய்வம் தான் தான் என்று சொன்னதால் “நீ காஃபிர் !” என்று ஔரங்கசீப் அவரை அழைக்கிறான். அப்பொழுது ஜலாலுதீன் ரூமியும் அதையே சொல்கிறார் அவர் சூபியா காபிரா என்று கேட்டதும் அவரும் காபிரே என்கிறான் . “உண்மையை உணர்ந்தவர்கள் சூஃபிகளாக இருந்தால் என்ன, காஃபிர்களாக இருந்தால் என்ன, அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.” என்று திருப்பி பதில் தருகிறான் தாரா. 

மதத்துரோகி என்று தாராவை ஔரங்கசீப் அழைத்த பொழுது தாரா ஔரங்கசீப்பை நோக்கி “அன்பால் நிறைப்பவன் இறைவன் என்று உணராமல் ஒரே கொள்கை,ஒரே மதம்,ஒரே மொழி என்று நடக்காத கனவை துரத்துகிறாய் நீ ! துரோகிகள் என்று நீ மதத்தை வைத்து சொல்கிறாய் . இந்துக்கள்,இஸ்லாமியர்கள் இருவருமே தான் துரோகம் செய்திருக்கிறார்கள். நீயும் போலித்தனம் கொண்டு இயல்பான மன்னனைப்போலவே நடந்து கொள்கிறாய் ஔரங்கசீப் !” என்கிறான் அவன் 

ஔரங்கசீப் எந்த போர் தொடுத்தாலும் அதை குறை சொல்வது அவனை மகனாகவே நடத்தாதது,முடிந்தால் கொல்லச்சொல்லி உத்தரவு போடுவது,தாரா சொன்னதைக்கேட்டு அவனை தொடர்ந்து சந்தேகப்படுவது,சிக்கனத்தின் சிகரத்தை ஊதாரி என்று அவதூறு கிளப்பியது எல்லாம் அவனை மிகவும் கடினமானவனாக ஆக்குகிறது என்று காட்சிப்படுத்துகிறார் இபா . நந்தன் சரித்திரம் நூலில் இடம்பெற்றிருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதைத்தேடி தேடி ககானாமல் போனது என்பது மட்டுமே தெரிந்தது  

கிழக்கு வெளியீடு 
விலை ரூபாய் நூறு 
பக்கங்கள் : 160 (எனக்கு வாசிக்க கிடைத்தது ஒரு எண்பது சொச்சம் பக்கங்கள் தான் ! நந்தனை காணோம்  ) ஏற்கனவே சுஜாதா நாவலான இதன் பெயரும் கொலை நாவலிலும் கிழக்கின் புத்தகத்தோடு இப்படி ஒரு அனுபவம் உண்டு ! கடைசி பக்கங்கள் சில அப்படியே காணோம் !

உத்தம் சிங் கதை இது !


ஆங்கிலேயரே ஆண்டிருக்கலாம் என்பவர்கள், இந்தச் சம்பவத்தையும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆங்கிலேய அரசு 1919இல் ரவுலட் சட்டத்தை கொண்டு வந்தது. விசாரணையே இல்லாமல், காரணமே சொல்லாமல் இந்தியர்களை கைது செய்ய முடியும் என கொடிய நடைமுறையை ஆங்கிலேய அரசு அறிவித்தது. பஞ்சாபில் முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ரவுலட் சட்டத்தை பயன்படுத்தி 581 பேர் கைது செய்யப்பட்டார்கள் ; நூற்றி ஏழு பேருக்கு தூக்கு தண்டனைவிதிக்கப்பட்டது,264 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கூடவே ஆங்கிலேயர் ஒரு தெருவில் தோன்றினால் அவருக்கு தலை குனிந்து வணக்கம் செலுத்த வேண்டும் ; தவழ்ந்தும் செல்ல வேண்டும். தவறினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டது. சில இடங்களில் வன்முறைகளும் வெடித்தன. காந்தியடிகள் அமிர்தசரஸ் நகருக்குள் நுழைய தடை வேறு விதிக்கப்பட்டு
இருந்து. சத்யபால் கிட்ச்லு எனும் இரு தலைவர்களை நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதை எதிர்த்து ஜாலியன் வாலா பாக்கில் கூட்டம் நடந்தது.

அன்றைக்கு சீக்கியர்களின் பண்டிகையான பைசாகி திருநாள் அதற்காகவும் எண்ணற்ற மக்கள் கூடியிருந்தார்கள். பஞ்சாபில் நிலைமை கொதிநிலையில் இருக்கிறது புரட்சி வர வாய்ப்பிருக்கிறது என அம்மாகாணத்தின் காவல் துறை அதிகாரி ரெஜினால்ட் ஓ டயர் முடிவு செய்தான். பார்க்கில் 20,000 மக்கள் கூடியிருந்தார்கள். தொன்னூறு பேர் கொண்ட படைகளோடு வாகனங்களில் மெஷின் கன்களை எடுத்துக்கொண்டு வந்தது அவன் படை. வெளியேற வழியாக இருந்த ஒரே குறுகலான பாதையை அடைத்து கொண்டார்கள். எந்த வித எச்சரிக்கையும் கொடுக்காமல் எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்தியர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு ரெஜினால்ட் ஒ டயர் உத்தரவு தர, ஐம்பது பேர் கொண்ட படை அப்பாவி மக்கள் நோக்கி 1,650 ரவுண்டுகள் சுட்டது. மக்கள் செத்து விழுந்தார்கள். பல பேர் கிணற்றில் விழுந்து இறந்து போனார்கள். நெரிசலிலும் பலபேர் இறந்து போனார்கள். அதிகாரப்பூர்வ மதிப்பீடு 379 பேர் இறந்தார்கள்; ஆயிரத்தி இருநூறு பேர் காயமடைந்தார்கள் என்றது. ஆங்கிலேயே மருத்துவரே எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்றார்.

மாகாண ஆளுநர் மைக்கேல் டயர் ரெஜினால்ட் டயர் செய்ததை சரி என்று ஆதரித்தான். ”நீங்கள் செய்த செயல் சரியானது. அதை நான் அங்கீகரிக்கிறேன்’’ என்று சொன்னான். ஹண்டர் கமிஷன் இந்நிகழ்வை விசாரிக்க அமைக்கப்பட்டது. ‘‘நான் மக்களைச் சுட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டுதான் வந்தேன். மெஷின் கன்களை வைத்திருந்த வாகனங்கள் உள்ளே வரும் அளவுக்கு இடமில்லை. இல்லையென்றால் இன்னமும் பல பேரை கொன்றிருப்பேன். மேலும், இதில் எந்த வருத்தமும் இல்லை. அவர்களை நான் எச்சரித்திருக்கலாம். ஆனால் ,அப்படி எச்சரித்து துரத்தி இருந்தால் மீண்டும் வந்து என்னைப் பார்த்து சிரித்து இருப்பார்கள். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு போக நான் எண்ணவில்லை. அது என் வேலையும் இல்லை. சுட்டேன் சுட்டேன் இந்தியர்களை இந்திய மண்ணிலேயே சுட்டேன்’’ என டயர் கொக்கரித்தான். மேலும் குண்டுகள் தீர்ந்து போய்
விட்டதாலேயே இவ்வளவு கம்மியான மக்களை கொல்ல முடிந்ததாக வருத்தமும் தெரிவித்தார் டயர்.

உத்தம் சிங்…

பெரும் நெருக்கடியின் காரணமாக வெறுமனே பதவியை விட்டு மட்டும் அனுப்பினார்கள். பதவியை விட்டு நீக்கப்பட்ட பொழுதும் பல லட்சம் ரூபாயை அவன் செய்த அற்புத செயலுக்கு ஆங்கிலேயர்கள் நிதி திரட்டி கொடுத்தார்கள்.மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை 26,000 பவுண்டுகள் திரட்டி அந்த கொலை பாதகத்தை கொண்டாடியது. இங்கிலாந்து நாடாளுமன்றம் அச்செயலை ஆதரித்து தீர்மானம் வேறு போட்டது.

இந்த படுகொலையை நேரில் பார்த்த உத்தம் சிங் இரு அதிகாரிகளையும் கொல்ல உறுதி பூண்டான். நேரடியாக இங்கிலாந்து போகாமல் கென்யா, ஆஸ்திரியா, அமெரிக்கா, ஜெர்மனி என அலைந்து அவனை கொல்ல இங்கிலாந்து சென்றார். பன்றி தொழுவத்தில் வேலை பார்த்தார். பசி வாட்டி எடுக்க இருபாதாண்டு கால வெறியை அடக்கி வைத்திருந்தார். ரெஜினால்ட் ஒ டையர் ஏற்கனவே இறந்து போக இயற்கை முந்திக்கொண்டது என வருத்தப்பட்டார்.

காக்ஸ்டன் ஹாலுக்கு மைக்கேல் டயர் மற்றும் ஜெட்லாண்ட் எனும் இந்திய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோரை வந்ததும் குறிபார்த்து ஆறு முறை சுட்டார். இறந்து போனான் டயர் . அந்த வேலை முடிந்ததும் கம்பீரமாக ஓடாமல் அங்கேயே நின்ற உத்தம் சிங் ,”என்னுடைய வேலை முடிந்தது ; என் நெஞ்சின் கனல் தணிந்தது !” என்று அறிவித்தார்.

கோர்ட் படியேறிய பொழுது ,”டயர் தூக்கு தண்டனைக்கு உரியவன் அதைத்தான் நான் தந்தேன் !” என்று உறுதிபட சொன்னார் உத்தம் சிங். தன் பெயரை கேட்டபொழுது “ராம் முகம்மது சிங்” எனச் சொல்லி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் நாங்கள் என புரியவைத்தான்.

‘‘சுட்டேன் சுட்டேன்… ஆங்கிலேயனை ஆங்கிலேய மண்ணில் சுட்டேன்!”என்று சொல்லி கம்பீரமாக தூக்கு மேடை ஏறினான் அந்த வீரன். தன்னுடைய பிணம் ஆங்கிலேய மண்ணில் புதைக்கப்படக்கூடாது என்கிற அளவுக்கு தேசபக்தி ஊறியிருந்தது அவரிடம். டைம்ஸ் பத்திரிக்கை சுதந்திர போராட்ட வீரன் அவர் என்று புகழாரம் சூட்டியது. யானை போல பழி வாங்காமல் ஓயமாட்டார்கள் இந்தியர்கள் என்று ஜெர்மனி வானொலி அறிவித்தது.

அவனன்றோ இளைஞன். சமீபத்தில் இங்கிலாந்தின் பிரதமர் கேமரூன், இந்தியா வந்தபொழுது அந்நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்காமல் ஆங்கிலேய அரசு உறுதியாக இருப்பது சரியே என்கிற தொனியில் பேசினார் என்பது கூடுதல் தகவல். உத்தம் சிங் பிறந்தநாள் இன்று.

போர்த்தொழில் பழகு !


இறையன்பு அவர்களின் போர்த்தொழில் பழகு நூலை வாசித்து முடித்தேன். ஒரு நாவலைப்போல விறுவிறுப்பாக இந்த நூலை வாசித்து விடலாம். போர் என்பது அவசியமில்லை என்றாலும் போர்க்குணம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்பதற்கு வரலாற்றில் இருந்து எடுத்துக்காட்டுகளை அள்ளி வீசுகிறார் ஆசிரியர். அவற்றில் என்னைக்கவர்ந்த சில பகுதிகள் மட்டுமே இங்கே. 

 
போர்கள் வேண்டாம் என்று வாய்வலிக்க கத்தினாலும் போரால் உலகம் முழுக்க எத்தனையோ நன்மைகள் எழுந்திருக்கின்றன. அணுகுண்டு தாக்குதலில் இருந்து அணு யுத்தத்தில் இருந்து காக்க எழுந்தது தான் இணையமாக ஆனது. ரோமானியர்கள் எங்கெங்கே எல்லாம் போர் செய்யப்போனார்களோ அங்கெல்லாம் சாலைகளை அமைத்தார்கள். உலகப்போரில் தகவல்களை பரிமாறிக்கொள்ள செய்யப்பட்ட முதலீடு தான் ரேடாரை உருவாக்கியது. ராணுவ வீரர்களை கணக்கெடுக்க ஆரம்பித்தது தான் மக்கள் தொகை கணக்கெடுப்பாக விரிந்தது. பீரங்கியின் புதிய கோட்பாடு நூல் தந்த ஊக்கம் தான் நிலவை நோக்கிய விண்வெளி பயணத்தை சாத்தியப்படுத்தியது. ஆயுதம் செய்ய ஊக்குவிக்கப்பட்ட அமோனியா உற்பத்தி உரத்தயாரிப்பு,குளிர்சாதன பெட்டி,சலவை சோப்பு என எங்கெங்கோ போனது. விமானம் அதிவேக வளர்ச்சி அடைந்ததும் போருக்கான உந்துதலில் தான். போர்க்கள மரணங்கள் தான் ரத்தபிரிவை கண்டுபிடிப்பதை சாத்தியமாக்கியது. கணினி என்கிற கனவின் தொடக்கம் நெப்போலியனின் படையெடுப்பால் இங்கிலாந்துஅரசு கொடுத்த நிதியால் துவங்கியது. 
 
கிஷ் நாட்டின் மீது படையெடுத்த தைமூர் இருநூறு பேர் கொண்ட சிருபடையை மரக்கிளைகளை ஏந்திக்கொண்டு போய் புழுதியை கிளப்பிவிட்டு நிறைய பேர் இருக்கிற மாதிரியான தோற்றத்தை உண்டு செய்து போரில் வென்றிருக்கிறான். மூன்றாம் நெப்போலியனை படுக்கையிலேயே மூழ்க செய்து தனி இத்தாலி என்கிற கனவை சாதித்தார் விக்டர் இம்மானுவேல். பானிபட் யுத்தத்தில் கண்ணை துளைத்த அம்பையும்,கண்ணையும் பிடுங்கி எறிந்து விட்டு போரிட்டான் ஹேமு. ரோமானியர்களுக்கு பெருஞ்சவாலாக இருந்த ஹானிபால் ஒரு கண்ணை கிருமி தாக்கியது அடுத்த கண்ணுக்கும் அது பரவலாம் என்று அறிந்ததும் கண்ணை நொண்டி கூலாக எடுத்துவைத்து விட்டான் !
 
ஒரு லட்சம் படைவீரர்கள் கொண்டிருந்த லோடியின் படையை எட்டாயிரம் வீரர்களை கொண்டு பாபர் வென்றார். காரணம்,பீரங்கிப்படை ! ஆழ்குழி வெட்டி போர் செய்யும் முறையை ஷெர்ஷா கொண்டு வந்தார். பாலைவனங்களில் அது எடுபடாத பொழுது அவரின் பேரன் கோணிப்பைகளில் மணல் நிரப்பி போரிட வைத்து ஜெயித்தான். தற்காப்பு போரில் மட்டுமே ஈடுபட்டுக்கொண்டு இருந்த சீனா மூவாயிரம் போர்க்கலை நூல்களை உலகுக்கு தந்திருக்கிறது. எங்கேயும் எதிராளியை முதலில் தாக்கு என்று சொல்லவில்லை இந்த நூல்கள். அந்த போக்கை மாற்றி முதலில் அடி,முரட்டு அடி என்கிற ஆக்ரோஷ மனோபாவத்தை விதைத்தவர் மாவோ ! 
 
முப்பத்தி மூன்று  கப்பல்களைக்கொண்டு இருந்த பிரெஞ்சு படையை 
இருபத்தி ஏழு கப்பல்களை கொண்டு பதினைந்து பன்னிரண்டு என்று பிரித்து முன்பக்கம்,பின்பக்கம் என்று தாக்கி முழு நிர்மூலம் செய்தார் நெல்சன் ! முகமது அலி தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பொழுதில் அடித்து ஆடி வென்றார்,]
 
எதிரிகளை திசை திருப்பி வெல்வது என்பது மிக முக்கியமான போர் முறையாக் இருந்து வருகிறது. போரசை நேரடியாக தாக்குவது போல காட்டிக்கொண்டே பின்புறம் இருந்து தாக்கியது அலெக்சாண்டரின் படை, வடக்கு பெல்ஜியம்,ஹாலந்து ஆகியவற்றை தாக்கப்போவதாக காட்டிகொண்ட ஹிட்லரின் படை திரும்பி பிரான்சை பாக்கெட்டுக்குள் போட்டுகொண்டது. சூ என்கிற நாட்டின் அரசன் பெரும்படையோடு எதிரிகள் வந்த பொழுது தெருவை சுத்தமாக பெருக்கி,எல்லா கதவுகளையும் திறந்து வைக்க சொல்லி எதிரிகளை குழப்பி படையெடுப்பை சந்திக்காமலே வென்றிருக்கிறான். ரஷ்யா நெப்போலியன்,ஹிட்லர் ஆகியோரை சந்திக்க இருக்கும் எல்லா உணவு,விவசாயம்,போக்குவரத்து காலிபண்ணும் கருகிய மண் கொள்கையால் மண்ணைக்கவ்வ வைத்திருக்கிறது. 
 
போரை ஆரம்பிப்பதை விட முடிப்பது தான் சவாலான விஷயம். ஆப்கானில் ஒட்டுமொத்தமாக ஒழிந்து போன ரஷ்யா,வியட்நாமில் உலகப்போரை விட அதிக குண்டுகள் போட்டும் ஜெயிக்க முடியாமல் திரும்பிய அமெரிக்கா என்று எக்கச்சக்க ஆதாரங்கள். களைப்படைய செய்து வெற்றியடைவது என்கிற போர்முறையை காந்தி மிக அற்புதமாக பயன்படுத்தினார் என்பதே உணமை. பிரசாரத்தின் மூலம் சாதிக்க முடியும் என்று நிரூபிக்கிறார்கள் சாக்ரடீஸ்,கோயபல்ஸ். தட்சசீலத்தை அடக்க கிளம்பிய அசோகரும் வதந்திகளை கிளப்பி சாதித்தார்.    போர் என்பது களங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்று நீங்கள் எண்ணினால் அது ரொம்ப தப்பு ! ஒரு நாட்டின் தானியங்களை மற்றொரு நாட்டின் மணிகளால் மாற்றுவது,அயல்மொழியை மாற்றிப்பேச வைப்பது,தங்களின் அடிப்படை பண்பாட்டை மறப்பது என்று நீண்டு எல்லாமும் மாறிப்போய் பிச்சை ஏந்தும் தேசமாக மாறும் பண்பே இறுதியில் முளைக்கிறது ! போர்க்குணம் இல்லாத தேசம் புதைந்து போகும் ; மனிதர்களும் தான் 
 
புதிய தலைமுறை வெளியீடு 
நூற்றி ஐம்பத்தி ஆறு பக்கங்கள் 
250 ரூபாய்   

 

பெனாசிர் பூட்டோ-கிழக்கின் மகள் கொல்லப்பட்ட நாள் இன்று


பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்ட தினம் டிசம்பர் இருபத்தி ஏழு . பூட்டோ எனும் பாகிஸ்தான் பிரதமரின் மகள் அவர் .தந்தை வளர்த்த கிடா ஜியா உல் ஹக் அவரை கொலைக்குற்றம் தூக்கில் போட்டு அவரின் குடும்பத்தினரையும் வீட்டு காவலில் வைத்து இருந்தான் .பல நாடுகளின் வற்புறுத்தலுக்கு பின் 1984 இல் அவர்களை விடுதலை செய்தான் .

1988 இல் நடந்த தேர்தலில் பெனசிர் பூட்டோ வென்றார் .அதன் மூலம் ஒரு இஸ்லாமிய நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆனார் .ஜியா ஏற்கனவே போட்டு வைத்திருந்த திட்டங்கள் அவரை பாடுபடுத்தின .ஜனாதிபதியின் அதிகாரம் அளவற்று இருந்தது . அதை குறைக்க சட்டமியற்ற முயல அவரின் ஆட்சியை அவர் கலைத்தார் . நவாஸ் ஷரிப் ஆட்சிக்கு வந்தார் ;அவரும் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க முயல அவரின் ஆட்சியையும் கவிழ்ந்தது .ஆனால் இரண்டு பேரும் கைகோர்த்து ஜனாதிபதியையும் சேர்த்து பதவியை விட்டு இறக்கினார்கள் .

மீண்டும் ஜெயித்து பூட்டோ பதவிக்கு வந்தார் ;இந்த முறை லெஹாரி என அரசியல் வாடை இல்லாத நபரை ஜனாதிபதி ஆக்கினார் ;மூன்று ஆண்டுகள் ஓடின .கணவர் ,குடும்பம் என ஊழல் தலைவிரித்து ஆடியது ;எதிரிகளை அடக்க அதிகாரங்களை கட்டவிழ்த்து விட்டார் . ஆட்சியை லெஹாரி கலைத்தார் .பின் பல்வேறு ஊழல் வழக்குகள் நாட்டை விட்டு அவரை வெளியேற செய்தன .

முஷாரப் நவாஸ் அவர்களிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியதும் நாடு திரும்பினார் .கராச்சியில் அவரை கொல்ல முயன்ற பொழுது நூலிழையில் தப்பினார் .பின் ராவல்பிண்டியில் பேச வந்தார் ;அவர் மீது துப்பாக்கியால் சுட்டார்கள் ;தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது .அவரின் மண்டை காரின் மேல்பகுதியில் மோதி ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் மரணமடைந்தார் என பின் வந்த விசாரணைகள் சொல்லின .ஒழுங்காக பாதுகாப்பு கொடுத்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என முணுமுணுப்பு எழுந்தது .தேர்தல் வந்தது ;இவரின் மரணம் தந்த அலை அவர் கட்சியை ஜெயிக்க வைத்தது

ஜன கண மன பிறந்த கதை இது !


 

முதன்முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட டிசம்பர் இருபத்தி ஏழு .தாகூர் இயற்றியதே ஜன கண மன என்கிற நம் தேசிய கீதம் .ஐந்து பத்திகள் கொண்ட இதில் ஒரு பத்தியை மட்டுமே நாம் பாடுகிறோம் .உண்மையில் இதை எழுதிய காலத்தில் வங்கப்பிரிவினை அமலில் இருந்தது .அந்த வலியோடு இந்த தேசம் ஒன்று என வலியுறுத்த தாகூர் இப்பாடலை இயற்றினார் . ஆங்கிலேயர் ஆட்சிகாலம் வரை ‘god save the queen’ என்கிற பாடலைத்தான் பாடிக்கொண்டு இருந்தார்கள். 

தேசிய கீதம் முதன்முறையாக 1911-ம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. அந்த மாநாடு ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வரவேற்பு அளித்து இயற்றப்பட்ட பாடல் இது என்கிற கருத்து சில பேரால் சொல்லப்பட்டது உண்மையில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்று அதே மாநாட்டில் ராம்புஜ் சவுத்திரி என்பவர் ஓர் இந்திப் பாடலைப் பாடினார். அந்தப் பாடலையும் தாகூரின் பாடலையும் வேறுபடுத்தி அறிந்துகொள்ளாத ‘ஸ்டேட்ஸ்மேன்’, ‘இங்கிலிஷ்மேன்’ போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள், இரண்டு பாடல்களுமே மன்னரை வாழ்த்திப் பாடியதாக தவறாக தகவல் வெளியிட்டன. 

அந்த கூட்டத்தில் தாகூரே கம்பீரமாக அதைப்பாடினார் .(தாகூர் சிறந்த கவிஞர் மட்டும் அல்ல நல்ல இசை வல்லுனரும் கூட !அவரின் பாடல்கள் இன்று வரை ரவீந்திர சங்கீதத்தில் இசைக்க பட்டு வருகின்றன !). அந்த பாடல் வங்காளி மொழியில் எழுதப்பட்டாலும் சாது பாஷா எனும் சமஸ்க்ருத வார்த்தைகள் அதிகம் பயின்று வருகிற நடையில் அப்பாடல் எழுதப்பட்டது .இந்த பாடலை பாடியவாறே விடுதலை போராட்ட வீரர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள் ! அதனால் ,இந்த பாடலை பாடுவதற்கு ஆங்கிலேய அரசாங்கம் தடை விதித்தது .

இந்த பாடலை 1919 இல் ஜேம்ஸ் கசின்ஸ் எனும் ஐரிஷ் கவிஞர் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மடனபள்ளி பெசன்ட் தியோசபிக்கல் கல்லூரியில் பாடினார்.அதை தொடர்ந்து அங்கே இருந்தவர்கள் பிரார்த்தனை பாடலாக பட ஆரம்பித்து விட,தாகூர் அந்த பாடலை தானே ஆங்கிலத்தில் “The Morning song of india “என்கிற பெயரில் மொழிபெயர்த்து ,ஜேம்ஸ் கசின்சின் மனைவுடன் இணைந்து இசையும் அமைத்தார் .

தாகூரின் ஜன கன மண எனும் இப்பாடல் 1943 இல் நேதாஜி அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய படையின் தேசிய பாடலானது .ஜனவரி 24 அன்று 1950 ஆம் வருடம் இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது .இன்று அப்பாடல் நூறு ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக நம் தேசபக்தியின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது

என் பொன் வங்கமே என்கிற பொருளில் தாகூர் வங்கப்பிரிவினையின் பொழுது எழுதிய அமர் சோனா பங்களா 1971 இல் வங்காளதேசத்தின் தேசிய கீதமானது .

சார்லி சாப்ளின் எனும் சரித்திரம் !


துளி மீசை கொண்டிருந்த இருவர் உலகை ஆட்டிப்படைத்தார்கள். ஒருவர் ஹிட்லர்,இன்னொருவர் சாப்ளின். ஒருவர் பத்தாண்டுகளில் காணாமல் போய்விட்டார். இன்னொருவர் காலங்களைக்கடந்து கண்கலங்க வைப்பார் 

அப்பாவும் அம்மாவும் பிரிந்த பொழுது பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு அம்மாவிடம் வந்து சேர்ந்தது .க்ளப்களில் திருமணத்துக்கு முன் பாடிக்கொண்டிருந்த அவர் மீண்டும் பாடப்போன பொழுது குரலே பண்ணிய குறும்புகள் எல்லாரையும் கவர்ந்துவிட்டன. காசுகளை அவர்கள்வீசிய பொழுது அள்ளிக்கொள்ள குனிந்த அந்த நாயகனை வாழ்க்கை தொடர்ந்து குட்டிக்கொண்டு தான் இருந்தது

பிரிந்த பெற்றோர்,துரத்திய வறுமை ,பசி ,தோற்ற காதல்கள் ,மனநலம் குன்றி நின்ற தாய்,கல்வியே கிடைக்காத வாழ்க்கை இவ்வளவும் இருந்தும் அதன் ஒரு சாயல் கூட இல்லாமல் ஸ்க்ரீனில் ரசிகனை சிரிக்க வைத்த நாயகன் அவர் .

மார்க் சென்னெட்டிடம் நடிக்க சேர்ந்து வேகமான படம் எடுத்துக்கொண்டு இருந்தவரிடம் நிதானமான தன் பாணியை காப்பாற்றி கொண்ட இவரின் தனித்துவம்;அன்றைய ஹாலிவூட் நடிகர்களில் அதிக பணம் பெற்ற பொழுதும் ஒற்றை அறையில் வாழ்ந்த எளிமை ,ஒரே வருடத்தில் பன்னிரெண்டு படங்கள் எடுத்து எல்லாவற்றிலும் சமூகத்தின் வலியை சொன்ன சினிமா போராளி !

ஹைட்டியுடன் நிறைவேறாத காதல் ,உலகமே கொண்டாடியும் மனநலம் குன்றிய அம்மாவுக்கு தான் புகழின் உச்சத்தில் இருப்பதை புரிய வைக்க முடியாமல் கதறி அழுத பொழுது அவரின் மனநிலையை நீங்கள் யூகித்து கொள்ளலாம் .

பேசும் படங்கள் உலகை முற்றுகையிட்ட பொழுது மவுனமாக ரசிகனிடம் மவுனப்படங்களின் மூலம் சாதிக்க முடியும் என சவால் விட்டார் .ஒரு அரங்கு கூட கிடைக்காமல் தடுத்தார்கள் .எப்பொழுதும் நிரம்பாத ஹென்றி சி. கோவன் அரங்கு தான் கிடைத்தது ;சிட்டி லைட்ஸ் திரையிடப்பட்டது கூட்டம் அரங்கை தாண்டி அலைமோதியது ; அவரின் மாஸ்டர் பீஸ் என உலகம் கொண்டாடியது .
அரசுகள் கலையின் மூலம் குரல் கொடுக்கும் கலைஞர்களை எதிரியாகவே பார்த்திருக்கின்றன. அதிலும் சாப்ளின் எனும் மகா கலைஞனுக்கு அமெரிக்கா,பிரிட்டன் என்று அவரை நாடுகள் துரத்திக்கொண்டே இருந்தன

வாழ்க்கை முழுக்க அழுகையால் அவரின் அகவாழ்வு நிரம்பி இருந்தது. ஸ்க்ரீன் முன் தோன்றிவிட்டால் அது எதையும் காட்டாமல் சாப்ளின் மட்டுமே தெரிவார். “”நான் மழையில் தான் நடக்கிறேன் ;நான் அழுவது உலகுக்கு அப்பொழுது தான் தெரியாது” என்று சொன்னார் அவர்.

பசி என்றால் என்னவென்று சாப்ளினுக்கு தெரியும்,வறுமை என்பது என்னவென்று அனுபவித்து உணர்ந்தவர் அவர். எப்படி ஒரு நாயை போல தொழிலாளியின் வாழ்க்கை கழிகிறது என்று ஒரு படத்தில் காட்டினார் என்றால் உலகின் தலைசிறந்த
மேதைகள் என கொண்டாடப்பட்ட மக்கள் எழுத்தாளர்களின் எழுத்துக்களை விடாமல் வாசித்தார். அவற்றை திரைக்கு கடத்தினார் அவர்.

தொழிலாளிகளுக்கு நேரும் அநீதிகளை படத்தில் காட்டினார். முதலாளிகளை கிண்டலடித்து மாடர்ன் டைம்ஸ் எடுத்தார் அவர். அதில் எல்லாரும் பேசுவார்கள். சாப்ளின் மவுனமாகவே திரையில் தோன்றுவார். சொந்த மகனின் இறப்பின் வலியைக்கூட திரைப்படமாக எடுக்கும் வித்தை அவரிடம் இருந்தது. அரசாங்கங்களை அவரின் படங்கள் உலுக்கி எடுத்தன. அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து இருந்தாலும் அவர் பிரிட்டன் குடிமகனாகவே இருந்தார். நம்புங்கள்
இன்றைக்கும் ஹவுஸ்புல்லாக ஓடும் அவரின் படங்கள் ஊமைப்படங்கள் அவை பேசிய கதைகள் தான் எக்கச்சக்கம. ஹிட்லரை தி கிரேட் டிக்டேடர் படத்தில் நொறுக்கி எடுத்தார்.

ஹிட்லர் ரஷ்யா மீது பாய்ந்த பொழுது ஜனநாயகம் ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது ; எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் அமெரிக்கா உதவிக்கு போக வேண்டும் என்றார் மனிதர். அப்பொழுதே சந்தேக விதை விழுந்தது. கோர்ட்டில் வழக்கு போட்டு பத்து வருடங்கள் அலைய விட்டார்கள். அடுத்தது அவரின் படங்கள் வேறு அவர் ஏழைகளுக்கு ஆதரானவர் கம்யூனிஸ்ட் என்கிற எண்ணத்தை தீவிரமாக்கின.

அமெரிக்கா நாற்பது வருடங்கள் அவர்கள் தேசத்தில் வாழ்ந்து இருந்தாலும்அவரை மீண்டும் தன் மண்ணுக்குள் இதே தினத்தில் அனுமதிக்க மறுத்தது . அப்பொழுது அவரின் ,”அறச்சிந்தனை களங்கப்பட்டு இருப்பதாகவும் ,அவர் அரசியல் சாய்வு
தன்மை உள்ளவர் “”என்றும் அமெரிக்கஅரசு தெரிவித்தது.சாப்ளின் ,”நான் புரட்சியாளன் இல்லை !மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே !”என்றார்.பின் ஏசுவேஆண்டாளும் அமெரிக்கா போக மாட்டேன் என அவர் தெரிவித்து விட்டு சுவிட்சர்லாந்து தேசத்தில் தங்கிவிட்டார்.

அவரின் ஐரோப்பியாவில் இருந்து தயாரித்த முதல் படத்தை அமெரிக்காவில் வெளியிடவே முடியாத அளவுக்கு அவரை வில்லனாக்கி இருந்தார்கள் ! இறுதியில் இறப்பதற்கு 6 வருடங்கள் முன்பு அவருக்கு சிறப்பு ஆஸ்கர் வழங்கி தன் தவறை ஓரளவிற்கு சரி செய்துகொண்டது அமெரிக்கா. அப்பொழுது அங்கே அரங்கில் இருந்தவர்கள் எழுந்து நின்று பன்னிரெண்டு நிமிடங்கள் கைதட்டினார்கள்.

தி கிரேட் டிக்டேடர் படத்தில் அவர் எத்தகைய உலகத்தை கனவு கண்டார் என்று பேசியிருப்பார் :

ஹான்னா ! நான் பேசுவது உனக்கு கேட்கும் என்று நினைக்கிறேன். மேகங்கள் விலகி சூரியன் இருட்டை விரட்டும் பேரொளியோடு உதிக்கும் அந்த புத்துலகு. வெறுப்பு,பேராசை,மிருகத்தனங்களை கடந்து மனிதர் எழப்போகும் கருணை உலகம் அது. ஒவ்வொரு ஆன்மாவுக்கு சிறகு முளைக்கட்டும். அவன் பறக்கட்டும் . அவன் வானவில்லை நோக்கிச் செல்வான். அந்தப் பயணம் அவனை நம்பிக்கையின் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும். ஒளிமயமான மாட்சிமை மிகுந்த எதிர்காலம் உனக்கும் எனக்கும் நமக்கும் உரியதாகும்

சாப்ளி நினைவு தினம் இன்று ! 

பாகிஸ்தானின் தந்தை ஜின்னாவின் பிறந்தநாள் இன்று


முகமது அலி ஜின்னா பிறந்த தினம் இன்று. ஒற்றைப்படையாக பாகிஸ்தானை உருவாக்கியவர் என்று மட்டுமே நம்மால் அறியப்படுகிற ஜின்னா சுவையான முரண்பாடுகளின் ஒட்டுமொத்த கலவை. இஸ்லாம் என்கிற மதத்தின் பெயரால்ஒரு நாட்டை கட்டமைத்த அவர் மதப்பற்றாளர் எல்லாம் இல்லை. மது அருந்துவார்,உருது ஒழுங்காக பேச வராது அவரே உண்மையில் குஜராத்தி ! காந்தி படித்த அதே சட்டக்கல்லூரியில் தான் அவரும் படித்தார். பன்றிக்கறியும் சாப்பிடுவார் என்பார்கள் ; தொழுகை எல்லாம் பெரும்பாலும் செய்யவே மாட்டார். “குரானில் ஜின்னாவை விட எனக்கு அதிகமான வாசகங்கள் தெரியும் !” என்று காந்தி சொல்கிற அளவுக்கு தான் மதத்தின் மீது அவருக்கு இருந்த பற்று. 

ஜின்னா ஷியா முஸ்லீம் குடும்பத்தில் குஜராத்தில் வணிகக்குடும்பத்தில் பிறந்தார். லிங்கன்ஸ் இன்னில் சட்டம் படித்துவிட்டு மிகப்புகழ் பெற்ற வழக்கறிஞராக மாறினார் அவர். பாம்பேவில் நடந்த முதல் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார். கோகலே மற்றும் தாதாபாய் நவ்ரோஜி எனும் இருவரின் கவனத்தையும் ஈர்த்தார். தேசியத்தை தூக்கிப்பிடித்த ஜின்னா முஸ்லீம் லீகில் ஆரம்ப காலங்களில் சேரவில்லை. அதன் மதவாத போக்கை உண்மையில் கண்டித்தார் அவர். திலகருக்கு எதிராக ஆங்கிலேய அரசு தொடுத்த வழக்கில் ஆஜராகி அவருக்காக சிறப்பாக வாதாடினார். ‘முஸ்லீம் கோகலே !’ என்று பட்டம் கொடுக்கிற அளவுக்கு அவரின் பணிகள் இருந்தன. “இந்து-இஸ்லாமிய ஒற்றுமைக்கான தூதர்” என்று சரோஜினி நாயுடு போற்றுகிற அளவுக்கு செயல்பட்டார் .

மின்டோ-மார்லி சீர்த்திருத்தத்தில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இம்பீரியல் சட்ட கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கே காந்தியின் தென் ஆப்ரிக்க போராட்டத்தை ஆதரித்து பேசினார். முஸ்லீம் லீக் கட்சியின் மதவாத போக்கை எதிர்த்து தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் வசம் கட்சி வந்திருந்தது ; ஜின்னா அதனால் இரண்டு கட்சிகளிலும் உறுப்பினராக இருந்தார்.

ஹோம் ரூல் இயக்கத்தின் போராட்டங்களில் தளபதியாக செயல்பட்டார். தனித்தனி தொகுதிகள் என்பதை எதிர்த்தார் ஜின்னா ,இந்துக்களும்,இஸ்லாமியர்களும் தனித்தனி அங்கங்கள் இல்லை என்று தெளிவாக பேசினார். ஆனால்,காங்கிரஸ் மற்றும் லீக் ஒப்பந்தம் லக்னோவில் கையெழுத்து ஆன பொழுது தனித்தொகுதிகள்,மத ரீதியான இட ஒதுக்கீடு ஆகியவற்றை காங்கிரஸ் ஏற்க செய்தார். காந்தி காங்கிரசின் போராட்ட முறையை அமைதி வழிக்கு திருப்பியதை ஜின்னாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சட்ட ரீதியான போராட்டம் தேவை என்று அவர் சொன்னார் ; சட்டத்தை உடைக்க வேண்டும் என்று காந்தி சொன்னார். நாக்பூர் காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மேடையை விட்டு அவரைத்தள்ளியது அவரைக்காயப்படுத்தியது. காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். 

இதுவரை இஸ்லாமியர்களும்,இந்துக்களும் இணைந்திருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்த ஜின்னா இஸ்லாமியர்கள் தங்களை கூட்டாக இணைத்துக்கொண்டு போராட வேண்டும் என்று பேச ஆரம்பித்தார். சுயராஜ்ய கட்சியோடு இணைந்து கொண்டு ஆங்கிலேய அரசாங்கத்தை சட்ட சபைகளில் எதிர்த்தார். 1925 இல் ஒரு இஸ்லாமிய இளைஞன் ,”நான் முதலில் ஒரு இஸ்லாமியன் !” என்ற பொழுது அவனைக்கண்டித்து ,”நீ முதலில் இந்தியன் ; பிறகு தான் முஸ்லீம் !” என்றார். சைமன் கமிஷனை புறக்கணித்த காங்கிரசின் போராட்டத்தை ஆதரித்தார்,ஆனால்,அதில் பங்குபெறவில்லை. 

சைமன் கமிஷனுக்கு போட்டியாக இஸ்லாமிய தலைவர்கள் டெல்லி பரிந்துரைகளை கொண்டு வந்தார்கள். அதில் சிந்தை தனி மாகாணம் ஆக்குதல்,வட கிழக்கு மாகாணத்தை தனி மாகாணமாக நடத்துதல்,மூன்றில் ஒரு பங்கு இடங்கள் இஸ்லாமியர்களுக்கு மத்திய சட்டசபையில் ஒதுக்குதல்,இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும் பஞ்சாப் மற்றும் வங்காள மாகாணங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு என்று அவர்களின் கோரிக்கைகள் நீண்டன.

இதையெல்லாம் சேர்த்துக்கொண்டு கூடவே தனித்தொகுதிகள் உள்ளிட்ட இன்ன பிற கோரிக்கைகளையும் இணைத்துக்கொண்டு ஜின்னா பதினான்கு புள்ளி அறிக்கையை உருவாக்கினார் இதற்கு இணையாக காங்கிரசின் சார்பாக நேரு கமிட்டி அறிக்கை வந்தது. மேலே இருந்த டெல்லி பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரே ஒரு நிபந்தனை விதித்தது நேரு அறிக்கை. தனித்தொகுதிகளை லீக் விட்டுவிட வேண்டும் என்பது தான் அது ! ஜின்னா அதற்கு இசைந்தாலும் கட்சிக்குள் இருந்த மதவாதிகள் அதை ஏற்க மறுத்தார்கள். இன்னொரு புறம் ஹிந்து மகா சபை,சீக்கிய லீக் ஆகியனவும் முஸ்லீம்களுக்கு விட்டுக்கொடுக்கிறார்கள் என்று எதிர்க்க ஆரம்பித்தார்கள். 

ஜின்னா தோல்வி முகத்தை தாங்கிக்கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறி இங்கிலாந்து போய் அங்கிருந்தபடியே வட்ட மேசை மாநாடுகளில் பங்குகொண்டார். நான்கு வருடங்கள் கழித்து முஸ்லீம் லீகின் தலைவர் பதவியை ஏற்க அவரை அழைத்தார்கள். ஜின்னா இந்த்முறை காயங்களை ஆற்றிக்கொள்வது என்று முடிவு செய்துகொண்டு வந்திருந்தார். இந்திய அரசு சட்டம் மீண்டும் தேர்தல்களை கொண்டு வந்திருந்தது. தேர்தல்களில் போட்டியிட்டார். 

ஏற்கனவே பதினான்கு புள்ளி அறிக்கைகளில் இருந்த எல்லா கோரிக்கைகளையும் ஆங்கிலேய அரசு நிறைவேற்றியிருந்தது. 
அடுத்த நடந்த தேர்தலில் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான இஸ்லாமிய தொகுதிகளையே லீக் வென்றிருந்தது. காங்கிரசுடன் பேச வேண்டும் என்றால் காங்கிரஸ் தன்னை ஒரு ஹிந்து கட்சி என்று அறிவித்துக்கொண்டு பேசவரட்டும் என்று லடாய் போட்டார். இனிமேல் சமூக மாற்றம் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தால் சரிப்பட்டு வராது என்று உணர்ந்துகொண்டு கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டணத்தை குறைத்தார்,பல்வேறு மாகணங்களில் பயணம் செய்து மதவாதத்தை பரப்பினார். 

காங்கிரஸ் அரசுகள் உருதுக்கு பதிலாக ஹிந்தியை மாகாண மொழியாக அறிவித்தது,வந்தே மாதரம் பாடலை பாடியது,பசுவதையை எதிர்த்து சட்டங்கள் இயற்றப்பட்டது எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக ஜின்னா மாற்றிக்கொண்டார். அல்லா மற்றும் குரானின் பெயரால் இயங்குங்கள் ; இந்து அரசை அமைக்க பார்க்கும் காஃபிர்களின் சதிக்கு பலியாகாதீர்கள் ! என்று முழங்க ஆரம்பித்தார். லாகூர் மாநாட்டில் சிறுபான்மை என்பதை தனி நாடு என்று மாற்றிக்கொண்டார் . பாகிஸ்தான் கோரிக்கை எழுந்தது. 
உலகப்போர் சமயத்தில் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவு தந்தார் ஜின்னா. அப்பொழுது பாகிஸ்தான் கோரிக்கையை பற்றி யோசிக்கிறோம் என்று சொல்லி வைத்தார்கள் ஆங்கிலேயர்கள். வெள்ளையனே வெளியேறு என்றது காங்கிரஸ் ,”வெட்டிவிட்டு வெளியேறு !” என்று சொன்னார் ஜின்னா. காந்தியுடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவார்,ஆனால்,ஒரு இம்மிகூட நகராமல் தன்னுடைய நிலைப்பாட்டிலேயே நிற்பார் அவர். 


“இஸ்லாமை காப்பாற்ற ஒரே வழி பாகிஸ்தான் தான் ! நாத்திகவாதிகளுக்கும்,இஸ்லாமின் பாதுகாவலர்களுக்குமான போராட்டம் இது ” என்று அழுத்தி சொன்னார். சூத்திரர்களை போல நம்மையும் ஹிந்துக்கள் ஆக்கிவிடுவார்கள் என்று சொல்லி தேர்தல்களை சந்தித்தார். முஸ்லீம் தொகுதிகளை அப்படியே அள்ளியது லீக். எண்பத்தி எட்டு சதவிகித இஸ்லாமிய ஓட்டுக்களை பெற்றிருந்தது லீக். பஞ்சாப் மற்றும் வங்கத்தில் இருந்த 207 தொகுதிகளில் 188 தொகுதிகளை வென்று மிரட்டியது. 

கேபினெட் மிஷன் பாகிஸ்தான் என்கிற கோரிக்கையை நிராகரித்து மூன்று பிரிவாக மாகாணங்களை பிரித்துக்கொள்ளும் திட்டத்தை அறிவித்தது. அதை தங்களுக்கு சாதகமான அம்சமாக காங்கிரஸ் மற்றும் லீக் இரண்டுமே அர்த்தப்படுத்திக்கொண்டார்கள் . மாகாண அரசுகளிடம் முக்கியமான எல்லா அதிகாரங்களும் இருக்க வேண்டுமே என்று கேட்டார் ஜின்னா. முடியாது என்று காங்கிரஸ் மறுத்தது. 

நேரடி நாள் என்று அறிவித்து பாகிஸ்தானுக்கு போராட சொன்னார் மக்களை. மதக்கலவரங்கள் வெடித்தன. வங்கம்,பஞ்சாப்,பீகார் எல்லாம் ரத்தமயமானது. நிலைமை கைமீறி போவதை பார்த்தார்கள் ; காந்தி ஜின்னாவையே நாட்டின் தலைவர் ஆக்கிவிடலாம் என்கிற அளவுக்கு இறங்கி வந்தார். நேருவும்,படேலும் கேட்கிற மனநிலையில் இல்லை. பிரிவினையை மவுன்ட்பேட்டன் முடித்துவைத்தார். 

ஜின்னா ஒரே ஒரு ஸ்டெனோ,டைப்ரைட்டரை வைத்து தன்னுடைய தேசத்தை சாதித்தார். அதற்கு பிறகு பாகிஸ்தானை ஒரு மதச்சார்பற்ற தேசமாக கனவு கண்டார் ,”இங்கே அரசு ஒரு மதத்துக்காக இயங்காது. பாகிஸ்தான் மதச்சார்பற்ற தேசமாகவே இருக்கும் !” என்று சொன்னார் அவர். ஆனால்,அவரின் மரணத்துக்கு பிறகு அவர் வளர்த்த மதவாதம் பாகிஸ்தானை இஸ்லாமிய தேசமாக்கியது. மும்பையில் தனக்கிருந்த வீட்டை ஜின்னா விற்கவில்லை ; இந்த பிரிவினை நிரந்தரமானதில்லை என்றே அவர் நம்பினார். ஆனால்,அது காலத்துக்குமான பிரிவுக்கோடாக ஆகிப்போனது !

 
 
 

கிறிஸ்துமஸ் டிட் பிட்ஸ் !


xmas என்று கிறிஸ்துமஸ் விழாவை குறிக்கத்துவங்கி ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கிறிஸ்து + மாஸ் தான் கிறிஸ்துமஸ். கிரேக்கத்தில் x என்கிற எழுத்தே கிறிஸ்துவை குறிக்கும் அதைக்கொண்டு xmas என்று சுருக்கி அழைக்கிறார்கள் இன்றுவரை

கிறிஸ்துமஸ் மரம் இயேசு பிறப்பதற்கு முன்னரே வந்துவிட்டது ;
பனிக்காலங்களில் பிறந்தநாளை கொண்டாட இந்த மரங்களை பயன்படுத்துகிற பழக்கம் இயேசு பிறப்பதற்கு முன்னமே இருந்துள்ளது. 

லாட்வியா நாட்டில் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்க துவங்கினார்கள் ; ஜெர்மனியின் மார்டின் லூதர் அதில்
மெழுகுவர்த்தி ஏற்றினார். ஆல்பர்ட் என்கிற ஜெர்மானிய இளவரசரை மணந்து கொண்ட விக்டோரியா மகாராணி இங்கிலாந்துக்கு இந்த கிறிஸ்துமஸ் மரத்தை கொண்டு போக அங்கே இருந்து உலகம் முழுக்க பரவியது. இந்த மரத்தில் மின்விளக்குகள் வைக்கும் பழக்கத்தை கொண்டு வந்தது எடிசனின் உதவியாளர் எட்வர்ட் ஜான்சன். கிறிஸ்துமஸ் மரத்தை சாப்பிடலாம் ; அதன் முட்கள் வைட்டமின் சி நிறைந்தது.

கிறிஸ்துமஸ் உண்மையில் டிசம்பர் இருபத்தைந்து அன்று கொண்டாடப்பவில்லை மார்ச் 28,நவம்பர் 18 என்று மாறி மாறி கொண்டாடிக்கொண்டு இருந்தார்கள்.
போப் ஒன்றாம் ஜூலியஸ் தான் எல்லாரும் டிசம்பர் இருபத்தைந்து அன்று
கொண்டாடும் பழக்கத்தை கொண்டு வந்தார் இது நடந்தது 350 A.D. !

கிறிஸ்துமஸ் தாத்தா செயின்ட் நிகோலஸ் துருக்கி நாட்டில் இருந்தவர் ; ஏழை எளியவர்களுக்கு உதவியவர். ஒரு முறை ஏழைப்பெண்கள் மூவருக்கு தங்க நாணயங்களை வீட்டு புகைப்போக்கி வழியாக அவர் போட.அதன் நினைவாக ஏழைகளுக்கு பரிசளிப்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. ஜப்பானில் கிறிஸ்துமஸ் தாத்தா இல்லை ; பாட்டி தான். பாட்டிகள் தாத்தாவை விட அன்பானவர் என்கிறார்கள் இவர்கள்

ஸ்பெயினில் கிறிஸ்துமஸ் அன்று பெரிய லாட்டரி போட்டி நடக்கும் ;
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மரம் பிடுங்கும் போட்டிகள் உண்டு பல்கேரியாவில் மரத்தை அடுப்பெரிக்க கொண்டு வந்து கொண்டிருக்கும் பொழுது எல்லாரும் அதன் மீது சோளத்தை எறிந்து கொண்டாடுவார்கள். நார்வே நாட்டில் நம்மூர் மாட்டு பொங்கல் மாதிரியே பசுக்களை கவனிப்பார்கள். போலந்தில் இயேசுவுக்கு என்று ஒரு தனி மேஜை ; தனி சாப்பாடு.

நெதர்லாந்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு ஒரு உதவியாளர் உண்டு ; பெயர் ப்ளாக் பெட்டி. குறும்பு செய்யும் பிள்ளைகளை மூட்டையில் பிடித்துப்போவது தான் இவரின் வேலை. நல்ல வேலை நாம எல்லாம் அங்கே பிறக்கலை

கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாளுக்கு பாக்ஸிங் நாள் என்று பெயருண்டு. அன்றைய தினத்தில் இங்கிலாந்தில் வசூலிக்கப்பட்ட பணத்தை பாக்ஸ்களில் இருந்து பிரித்து கொடுப்பதை சர்ச்சுகள் வழக்கமாக வைத்திருந்தன என்பதால் இப்பெயர். அன்று நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் யார் வெல்வார் என்று
பெரிய எதிர்பார்ப்பே இருக்கும்

முதல் உலகப்போர் சமயத்தில் கிறிஸ்துமஸ் துவங்கதற்கு கொஞ்ச நாள் முன்னர் ஜெர்மனிய வீரர்கள் கரோல் பாடல்கள் பாடி இங்கிலாந்து வீரர்களை வாழ்த்தினார்கள். முதலில் போர் தந்திரமோ என்று எண்ணிய இங்கிலாந்து வீரர்கள் பின்னர் நம்பி கைகொடுக்க அமைதியாக கிறிஸ்துமஸ் விழாவை போர்க்காலத்தில் கொண்டாடினார்கள் இரு நாட்டு வீரர்களும்.

ஜிங்கில் பெல்ஸ் எனும் கிறிஸ்துமஸ் பாடல் உண்மையில் கிறிஸ்துமஸ்
நிகழ்வுக்காக எழுதபட்டது இல்லை. அது நன்றி அறிவிக்கும் நாளுக்காக
பியர்பான்ட் என்பவர் தன்னுடைய மாணவர்கள் பாடுவதற்காக எழுதினார்
எல்லாருக்கும் பிடித்து போய் அது கிறிஸ்துமஸ் பாடலாகி விட்டது.

கிறிஸ்துமஸ் அன்று ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு ஸ்வீட். பிரான்ஸ் தேசத்தில் பூசணி கேக்,ஸ்வீடனில் ஆடு வடிவத்தில் இருக்கும் ஜிஞ்சர்
பிஸ்கட்,இங்கிலாந்தில் உலர் பழங்களில் செய்யப்படும் புட்டிங் இப்படி
நீளும் அந்த சுவையான பட்டியல்.

கிறிஸ்துமஸ் தீவு என்றொரு தீவுக்கு பெயர் – கிறிஸ்துமஸ் தினத்தன்று
1643-இல் வில்லியம் மைனர்ஸ் எனும் மாலுமியால் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த தீவுக்கு இப்படி ஒரு பெயர்.

நியூட்டன்,ஜின்னா,வாஜ்பாய்,மதன் மோகன் மாளவியா,இசைக்கலைஞர் நௌஷாத் அலி எல்லாரும் இதே தினத்தில் பிறந்தவர்கள்

மரணங்கள் நகர்ந்த பொழுது …


பேருந்தில் போகையில் அழிந்து 
போன அவரின் குரல் 
அழைப்பதாக அழுத்தி திரும்ப சொல்கிறது மனது 

அலைபேசியில் இறந்து போனவரின் எண்
அழைத்தால் என்ன செய்வது என்று 
பொத்தானை பிறந்தநாளன்று 
தடவிப்பார்க்கிறது கரங்கள் 

கல்லறைகளின் மீது கரையும் காகங்கள் 
கசந்து கரைந்து போனவரின் 
குரல் என்று எங்கோ படித்த வரிகள் 
உதட்டில் உதிர்ந்து முடிகிறது 

அறைகளெங்கும் கல்சூழ் நீராகி 
பாய்கின்றன சுடுகுளிர் முத்தங்கள் 
பெருவெயில் அழுகைகள் 

கடிதங்களில் இப்படிக்கு என்று 
கடந்திடப்பார்க்கும் வரிகளில் 
நேற்றைக்கு போனவரின் நினைவுகள் 
நகராமல் நிற்கையில் 
எங்கே இன்னொரு மரணம் நிகழ்ந்திடுகிறது 
என்று நம்ப மறுக்கிறது மனது ! 

காலங்களைக்கடந்த கக்கன் !


கக்கன் என்கிற அரிதிலும் அரிதான அரசியல் தலைவர் மறைந்த தினம் டிசம்பர் 23 தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் தோன்றினார் இவர். சேரிப்பகுதியின் கோயிலுக்கு கக்கன் அவர்களின் தந்தை தான் பூசாரி. அந்த கோயிலில் பெருக்கி,சுத்தம் செய்து பூஜையில் ஈடுபடுகிற பழக்கம் கக்கன் அவர்களுக்கு இளம் வயதிலே இருந்தது.

பள்ளிக்கல்வியை படிக்க அமெரிக்க மிஷன் வருடத்திற்கு அவருக்கு பதினெட்டு ரூபாய் உதவித்தொகை தந்தது. அதற்காக மிஷனுக்கு சொந்தமான நிலத்தில் கற்கள் பொறுக்கி,முட்கள் நீக்கி வேலை பார்த்தார். பள்ளி இறுதி தேர்வில் ஆங்கிலத்தில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்றார். பள்ளிக்கூடத்தில் கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட தொண்டர்கள் உறங்க பள்ளிக்கூட பகுதிக்கு வருகிற பொழுது காந்தியின் போராட்ட முறைகளை அறிந்து கொண்டார் இவர். 1932லேயே சொர்ணம் பார்வதி என்கிற கிறிஸ்துவ பெண்ணை தோழர் ஜீவானந்தம் தலைமையில் திருமணம் செய்து கொண்டார்.

வைத்தியநாத ஐயரின் வழிகாட்டுதலில் எண்ணற்ற போராட்டங்களில் பங்கு கொண்டார். சிறை சென்று கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாகவும் செய்தார். ஒரு முறை சவுக்கால் அடித்தும்,குதிரையின் கீழே படுக்க வைத்தும் கொடுமைப்படுத்துகிற அளவுக்கு தீர்க்கமாக விடுதலைப்போரில் பங்கு கொண்டார். வைத்தியநாத ஐயருடன் இணைந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தினார். 1945-ல் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாட்டில் காமராஜரை சந்தித்த பொழுது இருவரும் நெருக்கமானார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்,சட்ட சபை உறுப்பினர்,அரசியல் அமைப்பு குழு உறுப்பினர் என்று பல்வேறு பதவிகள் வகித்த இவர் காமராஜர் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் அமைச்சரவையில் பொறுப்பேற்று கொண்ட துறைகள் என்னென்ன தெரியுமா ? அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன்,பொதுப்பணி. உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை ஆகியன !

அரசு வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் போக அனுமதிக்க மாட்டார். மனைவி ஒரு நாள் அரசு ஊழியரை மண்ணெண்ணெய் வாங்கிவர அனுப்பிய பொழுது கடுமையாக கண்டித்தார். அவரின் தம்பி விசுவநாதன் வேலையில்லாமல் இருந்த பொழுது சிபாரிசு செய்ய மறுத்தார் அவர். அரசு அதிகாரி லயோலா கல்லூரிக்கு அருகில் அவரின் தம்பிக்கு மனை ஒதுக்கிய பொழுது அந்த கோப்பை வாங்கி கிழித்துப்போட்டு விட்டு ,”எத்தனையோ ஏழைகள் மழைக்கு ஒதுங்க கூட இடமில்லாமல் நோகிறார்கள். இப்படி ஒரு இடம் தேவையா ?” எனக்கேட்டார். விசுவநாதனுக்கு காவல் துறை வேலை கிடைத்த பொழுது ,”இது நேர்மையாக கிடைத்திருந்தாலும் என் சிபாரிசால் தான் கிடைத்தது என்பார்கள் ! இந்த வேலைக்கு இவன் வேண்டாம் “ என்று தடுத்துவிட்டார்.

இவர் அமைச்சராக இருந்த காலத்தில் தான் பல அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார். அம்மக்களுக்கு வீட்டு வசதி வாரியம் அமைத்து வீடுகள் கட்டிகொடுத்தது ஒரு புறம் என்றால்,லஞ்ச ஒழிப்பு துறையை தமிழகத்தில் கொண்டு வந்ததும் கக்கனே ! கலவரங்களை தடுக்க ரகசிய காவலர் முறையைக்கொண்டு வந்தார்.

அரசு விடுதியில் தங்கபோனார் கக்கன். அங்கே வேறொரு அதிகாரி தங்கியிருந்தார். ஒன்றுமே சொல்லாமல் நண்பரின் வீட்டில் போய் தங்கிக்கொண்டார். அறுபத்தி ஏழு தேர்தலில் கடன் வாங்கி போட்டியிட்டார். தேர்தலில் தோற்றுப்போனார். அவருக்கு நிதி திரட்டி இருபதாயிரம் தந்தார்கள். அதை முழுக்க தேர்தல் செலவுகளை அடைக்க கொடுத்துவிட்டு அரசு வாகனத்தை தொடாமல் அரசு பேருந்துக்கு காத்திருந்து வீட்டுக்கு போனார். சொந்த மகளை கான்வென்ட் பள்ளிகளில் சேர்க்காமல் அரசு பள்ளியில் படிக்க வைத்தார் ,”எனக்கு எங்கே அங்கே எல்லாம் படிக்க வைக்க சக்தியிருக்கு ?” என்று கேட்டார். விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூதான இயக்கத்துக்கு தந்துவிட்டார் அவர். அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் வாடகை வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தார்

முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கே பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். எம்.ஜி.ஆர் மதுரை முத்துவை பார்க்க வந்தவர் செய்தி கேட்டு இவரைக்கண்டு கலங்கினார் ,”நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் !” என்று அவர் கேட்டுக்கொள்ள ,”நீங்கள் பார்க்க வந்ததே போதும் !” என்று இயல்பாக மறுத்தார். யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார். சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன அவரின் நினைவு தினமின்று