ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரியா காந்தி ?


வரலாற்றில் ஒற்றை நாயகர்கள் என்று யாருமில்லை என்பதை வரலாற்றை கூர்ந்து கவனிக்கிறவர்களுக்கு தெரியும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தி மிகப்பெரிய துரோகத்தை இரட்டை வாக்குரிமை மற்றும் தனித்தொகுதிகள் தர மறுத்ததன் மூலம் செய்துவிட்டார் என்பது தொடர்ந்து சொல்லப்படுகிற ஒரு வாதம். இதை அற்புதமாக அருணன் அவர்கள் ,காந்தி அம்பேத்கர் மோதலும்,சமரசமும் நூலின் மூலம் தகர்க்கிறார். 

இந்தியாவுக்கான அரசியலமைப்பு சட்டத்தை முப்பதுகளில் வடிவமைக்க ஆரம்பித்த நேரு குழு தாழ்த்தப்பட்ட மக்களின் சிக்கல்களை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை. காங்கிரசிலும் அதே மனோபாவம் இருந்தது. அம்பேத்கர் சைமன் கமிஷனிடம் எல்லாருக்கும் வாக்குரிமை என்கிற பட்சத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ரிசர்வ் தொகுதிகள் வழங்க வேண்டும் என்று வாதிட்ட அதே காலத்தில் காங்கிரஸ் வெறுமனே உரிமை பிரகடனத்தோடு திருப்தி பட்டுக்கொண்டது. 

முதலாம் வட்ட மேசை மாநாட்டை காங்கிரஸ் புறக்கணித்து இருந்தது. அம்பேத்கரை ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஆங்கிலேய அரசு அழைத்திருந்தது. அங்கே அண்ணல் எல்லாருக்கும் வாக்குரிமை சாத்தியமில்லை என்கிற ஆங்கிலேய அரசின் நிலைப்பாட்டை பார்த்து தனித்தொகுதிகளை கேட்டார். ஆனால்,காங்கிரஸ் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளாததும்,யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் ஒற்றுமை வராததாலும் அவரின் கோரிக்கை கிடப்பில் கிடந்தது.

முதலாம் வட்டமேசை மாநாட்டுக்கு பின்னர் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி பொதுத்தொகுதிகளையே வலியுறுத்தியது. ஜம்னாலால் பஜாஜ் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு குழுவுக்கு மறுயிர்ப்பு தருவதோடு காங்கிரஸ் திருப்தி பட்டுக்கொண்டது. இந்த சூழலில் தான் காந்தியும்,அம்பேத்கரும் சந்திக்கிறார்கள். காங்கிரஸ் அதுவரை மத மற்றும் சமூக பிரச்சனையாகவே ஒடுக்கப்பட்டோர் சிக்கலை பார்த்து வந்தது ; அதை காங்கிரஸ் திட்டத்தில் சேர்க்கவே தான் கஷ்டப்பட்டதை காந்தி அம்பேத்கரிடம் சொல்கிறார். இருபது லட்சம் உங்களின் மேம்பாட்டுக்கு செலவும் செய்திருக்கிறது காங்கிரஸ் என்கிறார். 

அம்பேத்கர் திருப்பி பதில் சொல்கையில் பல லட்சம் ரூபாய் செலவு செய்தும் மக்களின் மனப்பான்மையில் எந்த மாற்றமும் இல்லை என்பதையும்,ஜில்லா காங்கிரஸ் தலைவர் கூட ஆலய உள்நுழைவு போராட்டத்தை எதிர்க்கிறார் என்பதையும் பதிவு செய்கிறார். தீண்டாமை ஒழிப்பை காங்கிரஸ் உறுப்பினராக ஒரு தகுதியாக வைத்திருக்கலாமே என்றும் அம்பேத்கர் கேள்வி எழுப்புகிறார். இங்கே ஒரு சுவையான தகவல் அம்பேத்கரை நேரில் பார்க்கிற வரை காந்தி அவரை ஒடுக்கபட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு பிராமணர் என்றே எண்ணிக்கொண்டு இருந்திருக்கிறார். 

இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்தி தீண்டப்படாதார் தனித்தொகுதி கேட்பதை எதிர்க்கிறார். அது இந்து மதத்தை பிளவுபடுத்திவிடும் என்றும் வாதம் செய்கிறார். அப்படியே தீண்டாமை கொடுமை இப்படி தனித்தொகுதி கொடுத்தால் தொடரும் என்றும் வாதம் செய்கிறார். காந்தியின் இந்து மதம் இன்றைய இந்துத்வா இல்லை. அது நெறிமுறைகள் சார்ந்த வெறுப்பற்ற வாழ்வையே குறித்தது. என்றாலும்,ஏற்கனவே பிளவுபட்டு விட்ட ஒடுக்கப்பட்ட மக்களை இந்து மதத்தின் அங்கம் என்று சொல்லி அவர்களின் தனித்தொகுதி கோரிக்கையை எதிர்த்து காந்தி உயர் சாதியினரின் பதட்டத்தையே பிரதிபலித்தார். 

இதற்கு பிறகு ஆங்கிலேயே அரசு காந்தி முதலிய காங்கிரஸ் தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது. இங்கிலாந்து பிரதமர் லோதியான் குழுவை அனுப்பி ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க சொன்னார். அவர்களுக்கு தனித்தொகுதி தரப்பட இருக்கிறது என்பதை காந்தி கண்டார். வயது வந்தோருக்கு வாக்குரிமை என்பதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் கட்டாயம் ஆக்கலாம் ; மேலும்,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பிரதிநித்துவம் வேண்டும் என்றும் காந்தி சொல்லி காங்கிரஸ் இயக்கத்தையும் நெருக்குகிறார். 

இங்கிலாந்து அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகளை அறிவிக்கிறது. இந்து மதம் பிளவுபட்டுவிடும் என்கிற வாதத்துக்கு தனித்தொகுதிக்கு ஒரு வாக்கு,பொதுத்தொகுதிக்கு இன்னொரு வாக்கு மற்றும் அங்கே போட்டியிடுதல் ஆகியன வழங்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்குரிமையை என்று அறிவித்து ஆங்கிலேய அரசு இயங்கியது. எழுபத்தி ஒரு தொகுதிகளை தனித்தொகுதிகளாக அறிவித்தது அரசு. சிறையில் தாங்கள் இருக்கும் பொழுது இப்படி ஆங்கிலேயர்கள் இயங்குவதை சதியாகவே கண்டது காங்கிரஸ். காந்தி இங்கிலாந்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் தரலாம் என்றும்,தனித்தொகுதிகள் கூடாது என்றும் கடிதம் எழுதினார். 

அப்படி தனித்தொகுதிகள் கொடுப்பது மட்டுமே அவர்களின் சிக்கல்களை தீர்த்துவிடும் என்று பிறர் எண்ணக்கூடும் என்று காந்தி அஞ்சினார். காந்தி உண்ணாவிரதம் இருந்தார் ; அப்பொழுது காந்தி சொன்னதை கவனிக்க வேண்டும் ,”ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் என்கிற உயரிய லட்சியத்துக்காக நூறு உயிர்கள் பலி கொடுப்பதும் சாதாரணமானதே ! ஜாதி ஹிந்துக்கள் அனாதரவான இந்த மக்களுக்கு எத்தனை கொடுமைகள் செய்திருக்கிறார்கள் ! ஜாதி ஹிந்துக்களின் அசமந்ததில் இது அவர்களை எழுப்பும் என்று எண்ணுகிறேன். தனித்தொகுதிகள் ரத்து செய்யப்படும் அதே சமயம் நான் பாடுபடுவது நடக்காமல் போனால் அது என்னுடைய வாழும் மரணமாகவே இருக்கும் !

அம்பேத்கர் அவரை சந்தித்தார். “எங்களின் தலைவராக ஆகிவிடுங்கள் காந்தி !” என்று அம்பேத்கர் கோரிக்கை வைத்தார். இருவருமே பெரிய மனப்போராட்டத்தில் இருந்தார்கள். இறுதியில் தனித்தொகுதிகள் என்கிற கோரிக்கையை கைவிட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் ஓட்டுபோட்டு நான்கு பேரை தங்களில் இருந்து வேட்பாளர்களாக தேர்ந்தெடுப்பார்கள். அதிலிருந்து பொதுத்தொகுதி வாக்காளர்கள் ஓட்டளிப்பார்கள் என்கிற சமரசத்துக்கு வருகிறார்கள். 71 தனித்தொகுதிகள் என்று இருந்ததை 148 பொதுத்தொகுதிகள் என்று காங்கிரஸ் மாற்றிக்கொள்ள சம்மதித்தது. மேலும் ஆங்கிலேய அரசு வழங்கிய தனித்தொகுதி பதினைந்து வருட காலத்துக்கு மட்டுமே இருக்க இதுவோ காலவரையின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இதற்கு பின்னர் காந்தி மீது சனாதன இந்து வெறியன் பூனாவில் குண்டு வீசி கொலை செய்ய முயன்றதையும் ,விடுதலைப்போரை தள்ளிவைத்து விட்டு ஹரிஜன இயக்கத்தை தீவிரமாக நடத்த களம்புகுந்தார். சமூக இயக்கம் ஒன்றில் அம்பேத்கருடன் நடந்த பேச்சுவார்த்தைகள் அவரை களமிறக்கி இருந்தன. பொருளாதார் மந்த நிலை நிலவிய காலத்தில் எட்டு லட்சம் ரூபாய் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு வசூல் செய்தார். காந்தி ஒடுக்கப்பட்ட மக்கள் நுழைய முடியாத கோயில்களுக்குள் தானும் நுழைய மாட்டேன் என்றது ஆலய நுழைவு போரட்டங்களை தீவிரப்படுத்தியது

. மதபீடங்களின் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி கோயில்களின் கதவுகள் எல்லாருக்கும் திறக்கப்பட்டன. புனே ஒப்பந்தத்தின் சாரம் விடுதலைக்கு பின்னரும் தொடர்ந்தது ; அம்பேத்கர் சட்ட அமைச்சரானார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தனித்தொகுதி கேட்ட அண்ணல் எல்லாருக்கும் வாக்குரிமை என்று வந்ததும் அதை வலியுறுத்தவில்லை என்பதையும் காணவேண்டும். 

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ஒழுங்காக இயங்குகிறதா ? தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கோருதல்,இரட்டை குவளை முதலிய தொடரும் தீண்டாமை செயல்களை போக்குதல்,தேர்வடம் கூட பிடிக்க விடாமல் தடுக்கும் ஜாதி இந்துக்களின் மனோபாவத்தை மாற்ற இன்னமும் அழுத்தம் தருதல்,இருக்கிற அமைப்புக்குள் இணைந்து தேர்தலில் வென்று தங்களுக்கான உரிமைகளை பெறுதல் என்று நகராமல் காந்தியை துரோகி என்றும்,அவர்கள் இரட்டை வாக்குரிமை தந்திருக்க வேண்டும் என்றும் இன்றைக்கு சாத்தியமில்லாத கோரிக்கையை இப்பொழுது எழுப்புவதும் அறிவுடைமை இல்லை என்று அற்புதமாக நூல் முடிகிறது. வெறும் நாற்பத்தி எட்டு பக்கங்களில் இருபது ரூபாயில் கிடைக்கும் இதை அவசியம் வாங்கி வாசியுங்கள்.
பாரதி புத்தகாலயம் வெளியீடு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s