சி.வி.ராமனிடம் படிக்க பத்து பாடங்கள் !


திருவானைக்காவலில் பிறந்து, உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த அற்புதத் தமிழர், சர் சி.வி.ராமன். 
அவரிடம் படிக்க பத்து பாடங்கள் 
எங்கிருந்தும் சாதிக்கலாம் :
படிப்பில் படு சுட்டி. ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல நினைத்தார். ஆனால், இவருடைய உடல்நிலை அதற்கு ஏற்றதாக இல்லை. வெளிநாடு செல்ல மருத்துவர்கள் இவருக்கு ‘உடல்நிலை தகுதிச் சான்று’ அளிக்கவில்லை. எனவே இந்தியாவில் இருந்தபடியே அறிவியலில் பல்வேறு சாதனைகள் செய்து, நோபல் பரிசை வென்றார் ராமன்.

வாசிப்பை நேசி!
அப்பாவின் அலமாரியில் இருந்து எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எடுத்து, ஓயாமல் வாசிப்பார். மூன்று நூல்கள் அவரை மிகவும் ஈர்த்தன. எட்வின் அர்னால்டின் ஆசிய ஜோதி, யூக்லிட் எழுதிய ‘The elements’மற்றும் ஹெர்மான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் எழுதிய ‘The Sensations of Tone’ஆகிய நூல்களே அவை. வெவ்வேறு துறைகளில் ஆர்வம் இருந்ததால், அறிவியலில் அவரின் ஆய்வுகளும் பல்வேறு துறைகள் சார்ந்து இருந்தன.

பிடித்ததில் பிணைந்திடு!
இந்தியாவில் அறிவியல் வேலைவாய்ப்புகள் குறைவாகவே இருந்த காலத்தில், கொல்கத்தா சென்று நிதித் துறையில் வேலை பார்த்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில், பெரும்பாலான பணத்தை, ஆய்வுகள் செய்யவே பயன்படுத்திக்கொண்டார். ஒருநாள், ‘பவ்பஜார்’ எனும் பகுதியின் வழியாகச் சென்றபோது, ‘இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்’ என்ற பெயர் பலகையைப் பார்த்தார். அன்று முதல், மாலை நேரங்களில் அங்கே ஆய்வுகள் செய்தார். பிறகு, நிதித் துறை வேலையை முழுவதும் துறந்துவிட்டு, முழு நேர ஆய்வுகளில் ஈடுபட்டார்.

சிக்கனம் செய்!
அப்போதெல்லாம் அறிவியல் ஆய்வகத்துக்கான முக்கியக் கருவிகளை வெளிநாட்டில் இருந்துதான் வாங்குவார்கள். ஆனால், ராமன் அதிலும் சிக்கனமானவர். ஹெளராவில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து பொருட்களை வாங்கி, ஆய்வுக்கான கருவிகளைத் தானே தயாரிப்பார். ராமன் விளைவுக்கான பெரும்பாலான ஆய்வுகளை 300 ரூபாயில் முடித்து விட்டார் ராமன். இறுதியில், ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி தேவைப்பட்டபோது, ‘இதை மட்டும் வாங்கித் தாருங்கள்’ என்று பிர்லாவுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கருவியைக் கொண்டு முழுமையாக ஆய்வுகளை முடித்தார்.

உலகை உற்றுக் கவனி!
மெடிட்டரேனியன் கடல் (Mediterranean Sea) என்று சொல்லப்படும் நடுநிலக் கடல் வழியாகப் பயணம் சென்றபோது, ‘கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?’ என்று யோசித்ததின் விளைவாக எழுந்ததே, ராமன் விளைவு. கப்பல் பயணத்திலும் சுற்றி இருப்பனவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தார் ராமன்.

நம்பிக்கையோடு முன்னேறு!
இயற்பியலாளர் ஆர்தர் காம்ப்டன், எக்ஸ் கதிர்கள் சிதறலைப் பற்றி ஆய்வுசெய்து, நோபல் பரிசு பெற்றதாக இவரின் மாணவர் சொன்னார். ‘அது, கண்களுக்குப் புலப்படும் ஒளியிலும் இருப்பதற்கு சாத்தியம் உண்டல்லவா?’ என யோசித்தார். அந்தப் பாதையில் நம்பிக்கையோடு ஆய்வுகள் செய்து சாதித்தார்.

கற்றல் முடிவில்லாதது!
ராமன், ஏதேனும் ஆய்வுகளைத் தன்னுடைய மாணவர்களோடு இணைந்து வெளியிட்டாலும் அதில் அவர்களின் பெயரையே முன்னிலைப்படுத்தி வெளியிடுவார். ”அறிவியலைக் கற்பது என்பது, சூத்திரங்களையும் தரவுகளையும் கற்பது அல்ல, படிப்படியாகக் கேள்விகள் கேட்டு அறிந்துகொள்வதே” என்பார். அப்படியே பாடம் நடத்தி, மாணவர்களுக்கும் வழிகாட்டினார்.

பகுத்து அறி!
”கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒருமுறை கேட்டபோது, அந்தக் கேள்வியை அவர் தவிர்த்தார். மீண்டும் கேட்கவே, ”கடவுள் இருக்கிறார் என்றால், டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு பிரபஞ்சம் முழுக்கத் தேடு. வெறும் யூகங்களை வைத்துக்கொண்டு நேரத்தை வீணாக்காதே” என்றார் ராமன்.

துணிவு கொள்!
ஆங்கிலேய அரசு, அவரை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க நினைத்தது. அவருக்கு வர வேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்கவும் செய்தது. பிறகு தடைகளை மீறி அது, அவர் கைக்குப் போய்ச் சேர்ந்தது. ‘ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது’ என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பினார்கள். அங்கே சென்றவர், ”ஆங்கிலேயரின் அடிமைப்படுத்தலைத் தொடர்ந்து எதிர்க்கும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இந்த விருது சமர்ப்பணம்’ என்று கம்பீரமாக ஆரம்பித்தே தன்னுடைய உரையை வழங்கினார் ராமன்.

உனக்குள்ளே ஒரு விஞ்ஞானி!
”ஐந்து வயதில் இருந்தே பிள்ளைகளை விஞ்ஞானிகளாக நடத்த வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து, பதில் சொல்ல வேண்டும். அவர்கள் கற்றல் அனுபவம், புத்தகங்களோடு தேங்காமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறிவியலில் நாம் ஒளிர முடியும்” என்றார் ராமன். அவர், ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாளே, நம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

சந்திர சேகர ஆசாத் எனும் சரித்திர நாயகன்


எதோ ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது ; மிகப்பெரிய கூட்டம் வேறு கூடியிருக்கிறது.மெதுவாக எட்டிப்பார்ப்போம் . சவுக்கு சுளீர் சுளீர் என ஒரு பாலகனின் முதுகை பதம் பார்க்கிறது .ரத்தம் சொட்டிக்கொண்டே இருக்கிறது .சிறுவனுக்கு வயது பதினைந்து என பேசிக்கொள்கிறார்கள் ;ஒவ்வொரு சவுக்கடி விழும் பொழுதும் ,”பாரத மாதாவுக்கு பெருமை உண்டாகட்டும் !”என முழங்குகிறான் அச்சிறுவன் . அச்சிறுவன் தான் சந்திர சேகர ஆசாத் .பகத் சிங்குடன் இணைந்து ஆங்கிலேய அரசுக்கு எதிரான பல காரியங்களை செய்த தீரர் .இந்த சவுக்கடி காட்சி காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டதற்காக வழங்கப்பட்ட தண்டனை .

அவ்வழக்கில் ,”உன் பெயர் என்ன ?” என நீதிபதி கேட்க ,”சந்திர சேகர் ஆசாத் !”என கம்பீரமாக சொன்னார் .ஆசாத் என்றால் விடுதலை எனப்பொருள் .அங்கே தான் சந்திர சேகர் சீத்தாராம் திவாரி,சந்திர சேகர் ஆசாத் ஆக மாறினார் . சௌரி சௌரா நிகழ்வுக்கு பின் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி ரத்து செய்துவிடவே இவர் சோசலிஸ கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார் . ஏற்கனவே ராம் பிரசாத் பிஸ்மில்லால் உருவாக்கப்பட்டு இருந்த ஹிந்துஸ்தான் சோ­லிஸ்ட் ரிபப்ளிக்கன் ஆர்மியை மீண்டும் புது ரத்தம் பாய்ச்சினார் .அக்கட்சியின் ராணுவப்பிரிவு தலைவர் ஆனார் இவர் .

நேரு “நீங்கள் எத்தகு சோசியலிசத்தை விரும்புகிறீர்கள்?” என கேட்ட பொழுது ,”வருங்காலத்தில் விஞ்ஞான சோசியலிசத்தை தான் நாடு மேற்கொள்ள வேண்டும் என உழைக்கிறோம் !”என்றார் . புரட்சிகர வழிமுறைகளில் விடுதலையை பெற வேண்டும் என முடிவு செய்த ஐவரும் இவர் சகாக்களும் எண்ணற்ற செயல்களின் மூலம் ஆங்கிலேய அரசை கதிகலங்க வைத்தனர் . காகோரி ரயில் நிலையத்தில் அரசாங்க கஜானாவை கொள்ளையடித்து கடுப்பேற்றினார்கள் . வைஸ்ராய் வந்த தொடர்வண்டியை குண்டு வைத்து தகர்க்க முயற்சி ,லாலா லஜ்பத் ராயின் மரணத்துக்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது துப்பாக்கி சூடு என புரட்சி தெறிக்கும் செயல்கள் அவர் வாழ்நாள் முழுக்க நிறைந்து இருந்தன .

அவர் தலைக்கு 5000 ரூபாய் விலை வைத்திருந்தது ஆங்கிலேய அரசு ;ஆல்பர்ட் பார்க்கில் அடுத்த புரட்சிகர காரியத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் பொழுது போலீஸ் சுற்றி வளைத்தது ;அவர்கள் கையில் எப்பொழுதும் மாட்ட மாட்டேன் என உறுதி பூண்டிருந்த ஆசாத் தன்னை தானே சுட்டுக்கொண்டு வீர சுவர்க்கம் அடைந்தார் .அவர் மறைந்த தினம் இன்று 

தூக்கை எழுத்தால் தகர்த்தெறிந்த விக்டர் ஹுகோ !


எழுத்து எளிய மக்களை பற்றி சிந்திப்பதாக இருக்க வேண்டும் ;அவர்களின் வலிகளை,வாழ்க்கையை குறித்து பேச வேண்டும் என்பதை தன் குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட விக்டர் ஹுகோ பிறந்தநாள் இன்று . இவர் பிறந்த பொழுது நெப்போலியன் ஆட்சி போய் வேறொரு மன்னர் பிரான்ஸ் தேசத்தை ஆள ஆரம்பித்து இருந்தார் . அரசாங்கத்துக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருந்த ஒரு ராணுவ அதிகாரிக்கு இவரின் அம்மா அடைக்கலம் தந்தார் .அவரிடம் எண்ணற்ற பாடங்கள் கற்றார் இவர் ;பிரான்ஸ் தேசத்தின் வரலாறு அவருக்கு தெரிய தெரிய கண்கள் விரிந்தன .

ஆரம்ப காலங்களில் மன்னரை போற்றி கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த இவர்,காலப்போக்கில் மக்களை பற்றி எழுத ஆரம்பித்தார் . ஒரு நாளைக்கு நூறு கவிதை வரிகள்,அல்லது இருபது பக்க உரைநடை எதாவது ஒன்றை விடாமல் எழுதிக்கொண்டே இருந்தார் . ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வருவது போல சோகம் தனி,சாகசம் தனி என பிரிக்காமல் எல்லாவற்றையும் கலந்து நாடகங்கள் இயற்றினார் . அவை மிகப்பெரிய வெற்றி பெற்றன ;மத அமைப்புகளின் மீது அவர் வைத்த நுண்ணிய விமர்சனங்கள் நாடகத்தில் பெரும் வரவேற்பு பெற்றன .கவிதைகளின் மூலம் அதீத வாசிப்பு பழக்கம் உள்ளவர்களை கவர்ந்த அவர் ,தன் நாவல்களின் மூலம் எளிய மக்களின் நெஞ்சுகளில் புகுந்து கொண்டார் .

The Last Days of a Condemned எனும் நாவலில் மரணதண்டனைக்கு எதிராக குரல் எழுப்பினார் அவர் .அவரின் இடையறாத முயற்சிகளின் விளைவாக மரணதண்டனை போர்ச்சுகல்,சுவிட்சர்லாந்து ,கொலம்பியா ஆகிய நாடுகளில் அகற்றப்பட்டன . வெள்ளத்தில் இறந்து போன மகளின் மரணம் அவரை உலுக்கியது ;எழுத்து வனவாசம் எடுத்துக்கொண்டார் . சில வருடம் கழித்து லெஸ் மிசரபில்ஸ் எனும் மிகச்சிறந்த நாவலை படைத்தார் . தவறு செய்து மன்னிப்பு ,மற்றும் மறுவாழ்வுக்கு ஆசைப்படும் எளிய மனிதனின் வாழ்க்கை,அதன் ஊடே வர்க்க பேதங்களை கடந்து ஏற்படும் காதல் இவற்றை கொண்டு நாவலை கட்டமைத்தார் ;அதில் பிரான்ஸ் தேசத்தின் வரலாறு,கலாசாரம் ,கலை ஆகியவற்றை பற்றியும் கச்சிதமாக வடித்திருந்தார் . படித்து உலகமே அந்நாவலை கொண்டாடியது .

மூன்றாம் நெப்போலியன் பிரான்ஸ் தேச அரசர் ஆனார் ;முதலில் அவரை ஆதரித்தாலும் காலப்போக்கில் பத்திரிக்கை மற்றும் எழுத்து சுதந்திரம் வேண்டும் என இவர் கேட்டதால் நாட்டை விட்டு நாடு கடத்தப்பட்டார் . அக்காலத்தில் அம்மன்னனை விமர்சித்து இவர் எழுதிய எழுத்துகள் பிரான்ஸ் தேசத்தின் ஒவ்வொரு வீட்டிலும் படிக்கப்பட்டன .மன்னிப்பு தந்து மன்னன்,”நாட்டுக்கு வா !”என்ற பொழுது ,”என் எழுத்தின் சுதந்திரம் அங்கே வந்தால் பறிபோகும், எனக்கு வேண்டாம் உன் மன்னிப்பு !”என கம்பீரமாக சொன்னார் . அம்மன்னன் ஆட்சி போனதும் நாடு திரும்பினார் இவர் ; வெகு சீக்கிரம் மரணமடைந்தார் . அவர் இறுதி ஊர்வலத்தில் மிக குறைவான மக்கள் தொகை கொண்ட பிரான்ஸ் தேசத்தின் 20 லட்சம் மக்கள் கூடி கண்ணீர் பொங்க தங்கள் நாயகனை வழியனுப்பினர் .அவரின் சில பிரபலமான வாசகங்கள் 

ஒரு கல்விச்சாலையின் கதவுகளை திறக்கிறவன் சிறைச்சாலைகளின் கதவை மூடுகிறான் 

களையென்று எதுவும் இல்லை ; பயனற்ற மனிதர்கள் என்று யாருமில்லை ;மோசமான விவசாயிகள் மட்டுமே உள்ளனர் 

உன் பார்வைகளை புதுப்பித்துக்கொள்,உன் சித்தாந்தத்திற்கு உண்மையாக இரு ;உன் இலைகளை உதிர்த்துக்கொண்டே இரு -ஆனால்,உன் வேர்களை என்றைக்கும் இழந்து விடாதே !

சர்வாதிகாரம் வாழ்வின் அங்கமானால்,புரட்சி எங்களின் தார்மீக உரிமை 

கடலினும் பெரிய காட்சி வானுடையது ;வானினும் பெரிது மனித ஆன்மாவின் உள் வெளிச்சம் 

தனக்கான தருணம் வாய்க்கப்பெற்று விட்ட சிந்தனையை உலகின் அத்தனை சக்திகள் சேர்ந்தாலும் தடுக்க முடியாது

கிரிக்கெட்டுக்கு ஒரு டான் பிராட்மான் !


டோனால்ட் பிராட்மன் எனும் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் மறைந்த தினம் இன்று . (பிப்ரவரி 25) கிரிக்கெட்டின் அதிகபட்ச டெஸ்ட் சராசரியான 99.94 இவர் வசம் இருந்தது என்பது இவரின் பிரம்மாண்டத்தை தெளிவாக சொல்லும். சின்னப்பையனாக யாரும் பயிற்சி தராமல் கிரிக்கெட் ஸ்டாம்ப்பை கொண்டு கோல்ப் பந்தை அடித்து விளையாடி பயிற்சி செய்தவர் அவர் . அவர் ஆடிய காலத்தில் டெஸ்ட் போட்டிகள் மிகக்குறைவாகவே ஆடப்பட்டன .

அப்பொழுது இங்கிலாந்தும்,ஆஸ்திரேலியாவும் மிகப்பெரிய சண்டைக்கோழிகள் . ஆஷஸ் தொடரை வாழ்வா சாவா பிரச்சனையாக இருநாட்டவரும் கருதினார்கள் . இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த தருணத்தில் கிரிக்கெட் உலகிற்குள் ஆஸ்திரேலிய அணியின் சார்பாக நுழைந்தார் பிராட்மன் .இன்றைக்கு போல அவர் காலத்தில் கிரிக்கெட்டில் பெரிய வருமானம் கிடையாது ;ஸ்டாக் ப்ரோக்கராக வேலை பார்த்தார் இவர் ;காலையில் ஏழு மணியில் இருந்து பத்து வரை அங்கே வேலை பார்த்துவிட்டு மைதானத்துக்கு வருவார் ;பின் இரவு ஏழு முதல் பத்து மணிவரை மீண்டும் அந்த வேலையை செய்வார். 

இவர் ஆடிய இருபதாண்டு காலத்தில் ஒரே ஒரு முறை தான் ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை இழந்தது என்பதே இவர் எத்தகைய ஆட்டத்திறன் கொண்டவர் என்பதை விளக்கும் . இங்கிலாந்து ஜெயித்த ஒரு முறையும் பாடிலைன் என்கிற பந்துவீச்சு முறையை பின்பற்றியது -ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி லெக் ஸ்டம்ப் பக்கம் பந்து எழும்புமாறு செய்வார்கள் ;எண்ணற்ற பீல்டர்கள் லெக் சைடில் நிற்க வைக்கப்பட்டு விக்கெட்டை கழட்டி விடுவார்கள் .இது கிரிக்கெட்டின் ஆரோக்கியமான போக்கிற்கு எதிரானது என எதிர்ப்பும் எழுந்தது .அப்படிப்பட்ட தொடரில் கூட 56 என்கிற சராசரியை வைத்திருந்தார் அவர் .

ஒரு உள்ளூர் போட்டியில் டான் பிராட்மன் ஆட களம் புகுந்தார். அவரின் விக்கெட்டை ஏற்கனவே ஒருமுறை ஐம்பத்தி இரண்டு ரன்களுக்கு ஒருமுறை எடுத்திருந்த போட்டி நடந்த ப்ளாக்ஹீத் ஊரின் வீரரான வெண்டெல் பில்லுக்கு ஒரே ஆரவாரத்தின் மூலம் உற்சாகப்படுத்தினார்கள் ரசிகர்கள். முதல் ஓவரின் எட்டு பந்துகளில் 6, 6, 4, 2, 4, 4, 6, 1 என்றும் அடுத்த ஓவரில் 6, 4, 4, 6, 6, 4, 6, 4 என்றும் அடித்து நொறுக்கிய பிராட்மன் இருபத்தி இரண்டு பந்துகளில் நூறு ரன்களை கடந்தார் ! இந்தப்போட்டி நடந்த வருடம் 1931. !

கடைசி இன்னிங்க்சில் நான்கு ரன்கள் எடுத்தால் 7,000 ரன்கள் மற்றும் நூறு என்கிற சராசரியை தொட முடியும் என்கிற நிலையில் டக் அவுட்டாகி வெளியேறினார் . சச்சின் அவரை அவரின் 90 வயதில் சந்தித்தார் ;”நீங்கள் இப்பொழுது ஆடியிருந்தால் என்ன சராசரி வைத்திருப்பீர்கள் டான் ?”என சச்சின் கேட்ட பொழுது “70 !”என்றார் டான் .ஏன் அப்படி என்பது போல சச்சின் பார்க்க ,”கம்மான் !90 வயதில் எழுபது என்பது ஒன்றும் குறைவான சராசரி இல்லை !”என்றார் பிராட்மன் . கிரிக்கெட்டில் 99.94 என்கிற எண்ணுக்கு மிகப்பெரிய வசீகரத்தை தந்த நூற்றுக்கு நூறு கச்சிதமான பிராட்மனின் நினைவு தினம் இன்று

ஆண்,பெண் உயிர்மொழி !


உளவியல் நிபுணர் ஷாலினி அவர்களின் உயிர்மொழி நூலை வாசித்து முடித்தேன். நூற்றுக்கு சற்றே அதிகமான பக்கங்கள் இருக்கும் இந்த நூலை படித்து முடிக்கும் பொழுது பரிணாமத்தின் வளர்ச்சியில் நடக்கும் ஆண்-பெண் இருவருக்கும் இடையேயான போராட்டத்தின் பிரமிப்பை உணர்வீர்கள். 

தங்களுக்கான இணையை தெரிவு செய்கிற உரிமை பெண்களிடமே ஒரு காலத்தில் இருந்தது. காலப்போக்கில் அதை ஆண் பறித்துக்கொண்டான். பொனோப்போ என்கிற மனிதர்களோடு இரண்டு சதவிகிதம் அளவுக்கே வித்தியாசமுள்ள ஜீன் கட்டமைப்பை கொண்டுள்ள வானர இனத்தில் தாயே தலைமை தாங்குகிறாள். சிம்பன்சிக்களிலும் அப்படியே. தாய் தெய்வங்களே ஆரம்ப கால தெய்வங்களாக உலகம் முழுக்க அதிகமாக காணப்படுகின்றன. பண்டைய இலக்கியங்களும் அப்படியே வழிமொழிகின்றன. 

ஆண்கள் பாலியல் ரீதியான உணர்வுகளை தாயின் ஸ்பரிசத்தில் இருந்தே முதன்முதலில் பெறுகிறார்கள் என்பதை ஹாரி ஹார்லோ சிம்பன்சி குட்டியை தன்னுடைய தாயிடம் இருந்து பிரித்து வைத்திருந்த குட்டி பெண் மோகமே இல்லாமல் இருந்ததன் மூலமும்,மோரிஸ் என்பவரும் தன்னுடைய மனைவியின் அரவணைப்பில் வளர்ந்த குட்டி அவ்வாறே இருப்பதை சொல்லி அதை உறுதிப்படுத்தினார். மீனி என்கிற அறிஞர் தாயால் நக்கப்படாத எலி கலவியலில் சரி வர இயங்குகிற இணைப்புகளை பெற முடியாமல் போனதை கண்டறிந்து மேலும் அதிர்ச்சி சேர்த்தார். இவ்வாறு மரபணு முன்னேற்றத்துக்கு அன்னையின் பங்களிப்பு தேவை. 

தாயின் கருவில் ஆரம்ப காலத்தில் இருக்கிற பொழுது எல்லாருமே பெண்ணாக தான் முதலில் இருக்கிறோம். அதற்குபின்னரே எக்ஸ் குரோமோசோம் வெளிப்பட்டு ஆணாக மாறுகிறார்கள் சிலர். ஆண்களின் வீரியத்தை பரிணாமத்தின் ஆரம்பகாலத்தில் அறிந்து கொண்டு பெண்கள் தெரிவு செய்ய பயன்படுத்தியது ஆணின் கலவி வீரியத்தையே. அதற்கு ஈடுகொடுக்க பாக்குலம் என்கிற எலும்பை துறந்து ஆண்கள் ஈடு கொடுத்தார்கள். அதற்கு பின்னர் வேட்டுவ குணம் முன்னிலைப்பட அதில் வென்ற ஆணுக்கு முக்கியத்துவம் கிடைத்தது. அதற்கு பின்னர் ஆயுதம் ஏந்தி போராடி வென்றவன் தெரிவில் முன்னணியில் இருந்தான். பின்னர் அதுவும் போய் அறிவாளி தேர்ந்தெடுக்கப்பட்டான். பெண் உடலுறவில் பெரும்பாலும் அமைதியாகவே இருக்க ஆணே அதிகம் இயங்க வேண்டியது ஆயிற்று. உருவம் அறிந்து பொருந்தும் திறன் அவனுக்கு அதிகம் தேவைப்பட்டது. அதற்காக உருவம் அறிந்து பொருந்தும் குணமான stereognesis வளர்ந்தது. அது பிற துறைகளிலும் அவனை பெரிதாக இயங்க வைத்தது. அதே சமயம் அவனின் பேச்சு,உணர்வுகளை உணரும் திறன் ஆகியன மங்கின. கண்களைத்திறந்து கொண்டே ஒரு பெண் கலவியில் இன்பமுற்றால் மட்டுமே அவனுடைய உடலில் பரவசமூட்டும் சுரப்பிகள் சுரந்தன. பெண்கள் கண்ணை மூடிக்கொண்டு ஸ்பரிசத்தை உணர்தலை செய்தார்கள். 

ஆரம்பத்தில் சொன்ன மரபணு முன்னேற்றத்துக்கு பிறகு குட்டியை அதன் போக்கில் தன்னுடைய சந்ததியை பெருக்கும் ஜீன்களை கொண்டிருக்கும் இணையை தேடி நகர்வதற்கு அன்னை அனுமதிப்பதே எல்லா விலங்குகளிலும் வழக்கம். 

ஆனால்,மனித பெண்கள் இதை பெரும்பாலும் செய்வதில்லை. காரணம் தங்களுக்கான இணையை தேர்ந்தெடுக்கிற உரிமை அவர்களிடம் இருந்து வெகு காலத்துக்கு முன்னரே பறிக்கப்பட்டு விட்டது. சீதை எப்படி ராமனை தேர்வு செய்தாள் என்பதை பார்த்தாலே அவ்வுரிமை நிலவி இருக்கிறது என்பது புலப்படும். பெண்கள் கல்வி கற்க முடியாத முட்டாள்கள்,கடவுள் உன்னை ஈனமாகவே படைத்தார் என்கிற பொய்கள்,அவர்கள் வெளியே வரக்கூடாது,கற்பை போற்றி அவர்கள் இயங்க வேண்டும்,கணவனை மீறக்கூடாது என்று அவளை திட்டமிட்டு ஆணினம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தன்னுடைய பாலியல் தேவைகளை தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் தனக்கு பிறக்கும் ஆண் வாரிசுகளை கொண்டு பெண்கள் தீர்க்க ஆரம்பித்தார்கள். அப்படி உண்டாகி நிற்பது தான் அம்மா செண்டிமெண்ட்,மருமகளிடம் மகனை சேரவிடாமல் தடுக்கும் அம்மாக்கள்,பையனை திருமணம் பக்கம் ஒதுங்கவே விடாமல் தடுக்கும் தாய்மார்கள். ஆணுக்கு தான் பேச்சிலும்,உணர்வுகளை கப்பென்று பிடித்துக்கொள்வதிலும் சாமர்த்தியமில்லையே ? அதனால் அவனை வேலைகள் செய்ய விடாமல் தடுத்தும்,அம்மா செண்டிமெண்ட் மூலமும்,குரலை மாற்றியும் பெண்கள் தங்களின் ஆளுகைக்குள் வைத்திருக்கிறார்கள். போராட்டம் தொடர்கிறது. 

விகடன் பிரசுரம் 
பக்கங்கள் :128
விலை : எழுபது

போலியோ பிணி தீர்த்த ஜோன்ஸ் சால்க்


போலியோ சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்கைத்தெரியுமா உங்களுக்கு
? எளிய குடும்பத்தில் பிறந்திருந்த இவரின் பெற்றோர் அடிப்படை கல்வி
தாங்கள் பெறாவிட்டாலும் தங்களின் மகன் பெற வேண்டும் என்று தெளிவாக இருந்தார்கள். சட்டம் படிக்க முதலில் விரும்பினாலும் பின்னர் ஆர்வம் மருத்துவத்துறை பக்கம் திரும்பியது. அங்கே ஜோன்ஸ் சால்குக்கு இன்ப்ளுன்சா வைரஸ் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. ப்ளூ காய்ச்சலை உருவாக்கும் அந்த வைரஸை அப்பொழுது தான் கண்டறிந்து இருந்தார்கள்.

முதலாம் உலகப்போர் சமயத்தில் ப்ளூ காய்ச்சல் பரவி எண்ணற்றோர் இறந்து போனார்கள். இரண்டாம் உலகப்போர் வரவே மீண்டும் அப்படி நோய் ஏற்படலாம் என்று பல மில்லியன் டாலர்களை அது சார்ந்த ஆய்வுக்கு அமெரிக்க அரசு கொட்டியது. சால்க் அதே சமயத்தில் வைரஸ்களை கொல்லாமலே அவற்றை செயலிழக்க
வைத்து அதன் மூலம் அவற்றையே நோய் எதிர்ப்புக்கு பயன்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்து கொண்டிருந்தார். அரசின் ஊக்கம் அவரை இன்னமும் வேகப்படுத்தியது.

உலகம் முழுக்க இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள். அதில் தொன்னூறு சதவிகிதம் பேர் பால் மணம் மாறாத சிறுவர்கள். அமெரிக்காவில் மட்டுமே ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். ஒரு முறை நோய் தாக்கினால் பின்னர் அதில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவே முடியாது என்கிற அளவுக்கு கொடுமையான வியாதி இது.

பிட்ஸ்பர்க் மருத்துவப்பள்ளியில் ஏழு பேர் கொண்ட குழுவாக இரவு பகலாக உழைத்தார்கள். ஏழு வருட உழைப்பின் விளைவாக உலகை அச்சுறுத்திக்கொண்டு இருந்த போலியோவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார் சால்க். பெரும்பாலும் செயலிழக்க வைக்கப்பட்ட வைரஸ்களை கொண்டே சிகிச்சை தரப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்.ஜான் எண்ட்லர் ஆய்வுக்கு தேவையான்
தூய்மையான போலியோ வைரஸ்களை உருவாக்குவதில் வெற்றி கண்டிருந்தார். சால்க் பார்மல்டிஹைடை கொண்டு போலியோ கிருமிகளை கொன்றார். முதலில் குரங்குகளில்
கொல்லப்பட்ட வைரஸ்களை கொண்ட மருந்தை சோதித்து பார்த்த பின்பு,தாங்களே மருந்தை செலுத்திப்பார்த்தார்கள்.

யாருக்கும் எந்த தீங்கும் உண்டாகாமல் இருக்கவே நாடு முழுக்க ஐந்து லட்சம் பிள்ளைகளிடம் இந்த மருந்தை செலுத்தினார்கள். இரண்டு வருடங்கள் நடந்த நெடிய ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்கு பிறகு சால்க் கண்டுபிடித்த தடுப்பு மருந்து எந்த தீங்கும் இல்லாதது என்று அறிவிக்கப்பட்டது. மருந்து கண்டுபிடிக்கப்பட்ட வருடம் அமெரிக்காவில் 45,000. பேருக்கு இளம்பிள்ளை வாத நோய் இருந்தது. மருந்து அறிமுகமான வேகத்தில் ஐந்தே வருடங்களில்
இந்த எண்ணிக்கை 910 என்கிற அளவுக்கு விழுந்தது.

சால்க்கின் தடுப்பு மருந்துக்கு அவரை காப்புரிமை பெற சொல்லி
உடனிருந்தவர்கள் அறிவுரை சொன்னார்கள். பல கோடி டாலர்களை அவர் அதன் மூலம் ஈட்டியிருக்க முடியும். சால்க் என்ன சொன்னார் தெரியுமா ? “என் மருந்து சூரியனைப்போல உலகுக்கே பயன்படக்கூடியது . சூரியனுக்கு காப்புரிமை வாங்கலாமா ? சொல்லுங்கள் ?”. அத்தகு அரிய மனிதரை நினைவு கூர்வோம். போலியோ தடுப்பு மருந்து இன்றைய தினம் தான் முதன்முதலில் அமெரிக்காவில் பெருமளவில் சோதிக்கப்பட்டது 

கணிதத்தின் கலக்கல் கதை இது !


கணிதத்தின் கதை என்கிற அற்புதமான நூலை வாசித்து முடித்தேன். இரா.நடராசனின் எழுத்தில் மலர்ந்திருக்கும் எளிய வாசகனுக்கும் புரியும் எளிய நூல் இது. கணிதம் உண்மையில் குகையில் வாழ்ந்த மனிதனோடு துவங்கியது ; இந்தியாவின் பத்துக்கும்,மெசொபடோமியாவின் அறுபதின் அடுக்கில் நீளும் செக்ஸாஜெசிமல் முறையும் ஆதிக்கம் செலுத்துவதில் போட்டி போட்டன. இறுதியில் இந்தியாவின் முறையே நின்றது. 

ஆனாலும்,அறுபதின் தாக்கத்தில் தான் அறுபது நொடி,அறுபது நிமிடம் என்கிற பகுப்பு ஏற்பட்டது. அல்ஜீப்ரா அரேபியர்களின் கைவண்ணம் ; அந்த பெயரே அதைதான் குறிக்கிறது. இந்தியாவின் கணித முறையை அரேபிய மற்றும் ஐரோப்பிய வியாபாரிகள் மேற்குக்கு கொண்டு சென்றார்கள். இந்தியர்கள் இல்லாமல் பூஜ்யம் என்பதற்கு குறியீடு இல்லாமல் வெற்றிடம் இடுகிற பழக்கமே வெகுகாலம் உலகில் இருந்திருக்கிறது. 

கணிதத்தில் சாக்ரடீஸ் தோன்றிய கிரேக்க மண் எல்லாவற்றையும் கேள்வி கேட்டே ஏற்றுக்கொண்டது. கோட்பாடு அதற்கான ஃப்ரூப்,உட்கூறுகள் என்று எதையும் பிரித்து பார்த்துவிடும் பழக்கம் அவர்களாலே அறிவியலில் உண்டானது. தேல்ஸ் என்கிற அறிஞர் தான் வட்டத்தின் நடுவே போகும் கோட்டுத்துண்டுக்கு டையாமீட்டர் என்று பெயரிட்டார். இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ளே மிகக்குறைந்த தூரமே ஒரு கோடு என்று சொன்னதும் அவரே. அவர் எகிப்து போய் பாடம் படித்துவிட்டு வந்த பின்னர் சூரிய கிரகணம் எப்பொழுது ஏற்படும் என்று துல்லியமாக சொன்ன பொழுது அவரை சூனியம் கற்றவர் என்று பயந்தார்கள் அவர் நாட்டில். ஐம்பது வருடங்களை பையின் மதிப்பை கண்டுபிடிப்பதில் மட்டுமே கிரேக்கர்கள் செலவிட்டு இருக்கிறார்கள் என்கிற அளவுக்கு கணித வெறி அவர்களிடம் இருந்தது. 

கிரேக்கத்திலே எக்லேக்டிக் என்றொரு கணித குழு இருந்தது ; அது எல்லாமும் இறைவனோடு தொடர்புடையது என்ற இன்னொரு பள்ளியை தொடர்ந்து எதிர்த்து வந்தது. அதன் முக்கிய ஆளுமை ஷேனோ ஒரு ஆமை ஆர்சில்லஸ் எனும் மனிதனை விட ஒரு அடி முன்னதாகவே எப்பொழுதும் செல்கிறது. அவன் எப்பொழுது அதை முந்துவான் என்று கேட்டார். இது யதார்த்தத்தில் சாத்தியமில்லை என்றாலும் எதையும் ப்ரூப் மூலமே நிரூபித்து பழகிய கிரேக்க குழு பல ஆண்டுகள் மண்டையை உடைத்துக்கொண்டது ! நாற்பது வருடங்கள் வடிவியலின் அதுவரை வந்த எல்லா படைப்புகளையும் தொகுத்த யூக்லிட் அதன் தந்தை என்று பெயர் பெற்றார். 

வடிவியல் தெரியாவிட்டால் என் பள்ளிக்குள் நுழையாதீர்கள் என்று பிளேட்டோ எழுதுகிற அளவுக்கு கணித பித்து வடிவியல் பித்தாக கிரேக்கத்தில் மாறியது. அபோலினஸ் கோனிக்ஸ் எனும் துறையில் அற்புதமான பங்களிப்புகளை தந்தார். ஒரு உருளையில் முழுமையாக அடங்கக்கூடிய கோளத்தின் கொள்ளளவு அதில் பாதி அளவு இருக்கும் என்று கண்டுபிடித்து சொன்னதை தன்னுடைய மிகப்பெரிய சாதனையாக நம்பிய ஆர்கிமெடிஸ் தன் கல்லறையின் மீது அந்த இரு உருவங்களை வைக்கச்சொன்னார். சூரிய கண்ணாடியை கொண்டு எதிரி கப்பல்களை எரித்தது,பல்வேறு அடுக்குகளின் மீது ஏறி கப்பலை நெம்புக்கோல் கொண்டு தூக்கியது என்று நீண்ட அவர் சாதனைகள் ஒரு கணக்கை முடிக்க கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்ட கணத்தில் பொறுமை இல்லாத ஒரு வீரனால் போனது. 

டார்டாக்லியா எனும் அறிஞர் நான்கின் அடுக்கில் வரும் சமன்பாடுகளுக்கு தீர்வு கண்டிருந்ததை தான் மட்டுமே வைத்துக்கொண்டு இருந்த பொழுது அதை அவரிடம் இருந்து நைசாக பெற்ற கார்டனோராஸ் அதை வெளியிட்டாலும் உலகுக்கு அதன் உண்மையான சொந்தக்காரர் பெயரை ஆணித்தரமாக சொல்லவும் செய்தார். அவரின் மாணவர் பெரராரி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து தீர்வுகள் பெற்ற பொழுது அதை காசாக்க அவர் மறுத்ததால் சொந்த அக்காவாலே விஷம் வைத்துக்கொல்லப்பட்டார். கணிதத்தின் இயற்கணித சூத்திரத்தை வடிவியலோடு இணைக்கிற அற்புதத்தை நிகழ்த்திய டெஸ்கிரேட்ஸ் அவர்களிடம் கணிதம் கற்றுக்கொள்ள எண்ணற்றோர் விரும்பினார்கள். ஸ்வீடன் ராணி படை அனுப்பி அவரை மிரட்டி கூட்டி வந்தார். ஆஸ்துமா இருந்தபடியால் தினமும் காலை பதினொரு மணிக்கு எழும் அவர் அவளுக்காக காலை ஐந்து மணிக்கு எழுப்பபட்டார். பதினோரே வாரத்தில் சுரம் கண்டு இறந்துபோனார் அவர். கணிதம் கொல்லவும் செய்யும் போல !

ஹாலி தன்னுடைய வானியல் சார்ந்த குழப்பங்களுக்கான விடையை தேடிக்கொண்டு இருந்த பொழுது அதை நியூட்டன் ஏற்கனவே கண்டுவிட்டதை கண்டு பூரித்தார். அதை வெளியே கூட வெளியிடாமல் தன்னுடைய வேலையில் மூழ்கி இருந்தார் நியூட்டன். ஒரே சமயத்தில் தனித்தனியாக கால்குலஸ் எனும் அற்புதத்தை லிப்னிட்ஸ் மற்றும் நியூட்டன் கண்டார்கள். யார் அதை கண்டுபிடித்தது என்று சண்டை வேறு போட்டுக்கொண்டார்கள். நியூட்டன் பிறருக்கு அதை சொல்லித்தரவோ,எளிமையாக்கவோ மறுக்க லிப்னிட்ஸ் அதை அன்போடு செய்தார். 

காஸ் எனும் மேதை ரெய்மான் எனும் தன்னுடைய மாணவன் பேராசிரியர் ஆக முனைந்த பொழுது மிகக்கடினமான வளை பரப்புகள் பற்றி ஆய்வு செய்து கட்டுரை தருமாறு ஜாலியாக சொல்லி மாட்டிவிட பார்த்தார். ரெய்மான் அதில் கலக்கி எடுத்தார். அதன் அடிப்படையில் தான் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாடு எழுந்தது.

கோயிலில் பாதிரியாராக போயிருக்க வேண்டிய யூலரை கடினப்பட்டு மீட்டு வந்தார் பெர்னோலி. ஒரு எண்ணூறு கணித புததகங்களை எழுதினார் அவர் ! ராமனுஜன் இங்கிலாந்தில் இருந்த பொழுது மூன்று முறை தற்கொலைக்கு முயன்றிருந்த பொழுதெல்லாம் அவரைத்தேற்றி காப்பாற்றிய ஹார்டி கணிதத்தின் கடைசி சக்கரவர்த்தியின் பெருமையை உலகம் உணர உதவினார். பட்டம் எதுவும் பெறாத ராமானுஜனின் பெயரால் உலகின் தலைசிறந்த மூன்று பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் இருக்கை இருக்கிறது !
பாரதி புத்தகாலயம் வெளியீடு 
ஆசிரியர் :இரா.நடராசன்

பெண் மொழி பேசும் பிருந்தாவும்,இளம் பருவத்து ஆண்களும்


கவிஞர் அ.வெண்ணிலா அவர்களின் பிருந்தாவும்,இளம் பருவத்து ஆண்களும் சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தேன். பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் சார்ந்து பெரும்பாலான சிறுகதைகள் எழுந்திருக்கின்றன. அதிலும் எரி நட்சத்திரம் மற்றும் வெளியே எனும் இரு சிறுகதைகளும் உள்ளத்தை கனக்க செய்யும். ஒழுங்கான சுகாதார வசதி இல்லாமல் பெண்கள் சந்திக்கும் சிக்கல்களை மிக இயல்பாக அதே சமயம் அதன் வலி குறையாமல் பதிந்திருக்கிறார் ஆசிரியர். 

உறவுகள்,முகம் தெரியாதவர்கள்,நட்புகள் என்று ஒவ்வொரு இடத்திலும் பெண்களின் மீதான வன்முறைகள் வெவ்வேறு விதத்தில் நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது. அதை முதல் ஐந்து கதைகளும்,பகிர்தல் என்கிற சிறுகதையும் வெவ்வேறு தளங்களில் பதிகின்றன. பெயர்கள் எப்படி மாறிப்போகின்றன என்று சொல்லும் கதையான அம்மணத்தெருவும் அற்புதமான அனுபவத்தை தருகிறது. இரண்டாம் மனைவியின் பிள்ளையாக இருக்கும் சிறுவனின் பார்வையில் விரியும் கதையும்,ஆசை நாயகி ஆன பொன்னம்மாவின் கதையும் என்று எத்தனையோ சித்திரங்களை பதியும் இந்த தொகுப்பில் எதையும் வலிந்து திணிக்கும் பாணி இல்லை. மிக முக்கியமாக பெண்களின் மீதான வன்முறையை பெண் மொழியில் பதிவு செய்த வகையில் இந்த சிறுகதைத்தொகுப்பு தனித்து நிற்கிறது

விகடன் பிரசுரம் 
பக்கங்கள் : நூற்றி அறுபது 
விலை :ரூபாய்.நூறு 

கலிலியோ மண்டியிடவில்லை-நூல் அறிமுகம்


கலிலியோ மண்டியிடவில்லை :
அறிவியல் சார்ந்தவர்கள் இலக்கியத்திலோ,இசையிலோ,சினிமாவிலோ ஆர்வம் கொண்டிருக்க கூடாது என்பது நம்முடைய பொதுவான எண்ணமாக இருக்கிறது. அதை இயல்பாக மறுவாசிப்பு செய்யும் கட்டுரைத்தொகுப்பு தான் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கலிலியோ மண்டியிடவில்லை கட்டுரைத்தொகுப்பு. அறியாத அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கையும் இணைத்தே இந்நூல் பதிவு செய்கிறது. 

எந்த மத பீடத்துக்கு எதிராக பூமி சூரியனை சுற்றி வருகிறது என்று கலிலியோ எழுதினாரோ அதே மத பீடத்தில் தான் வறுமை காரணமாக தன்னுடைய மகளை கன்னியாஸ்திரி ஆக அனுப்பினார் என்பது வலிமிகுந்த வரலாறு. அங்கே இருந்து தன்னைச்சுற்றி நடக்கும் கொடுமைகளை மகள் எழுதுவதை ஒரு கட்டுரை பதிகிறது. நானோதொழில்நுட்பத்துக்கான விதையை தன்னுடைய பேச்சின் மூலம் போட்ட நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் பெயின்மானின் காதல் வாழ்க்கை என்னவோ செய்கிறது. ஆர்லைன் எனும் தன்னுடைய காதலிக்கு இருந்த காசநோயால் அவரை முத்தமிடவோ,பிள்ளை பெற்றுக்கொள்ளவோ முடியாது என்று மருத்துவர்கள் சொன்ன பின்னும் தீராக்காதலோடு அவரையே திருமணம் செய்து கொள்கிறார். மனைவி இறந்த பின்னும் சோகம் தாளாமல் கடிதங்களை எழுதுகிறார் ,”இன்றைக்கு உனக்கு பொருந்தும் ஒரு அழகான கவுனை கடையில் கண்டேன் ! அதை நீ அணிந்து பார்க்க முடியவில்லை என்னால் !” என்று அவர் இறந்து இரண்டு வருடங்களுக்கு பின்னர் கடிதம் எழுதி குமைகிறார் அவர். 

கடவுளின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் தன்னுடைய பரிணாமக்கொள்கையை வெளியிடாமலே இருந்த டார்வின் தன்னுடைய மகள் இறந்து போனதும் கடவுளுடனான போராட்டத்தை முடித்துக்கொண்டு அந்த தாள்களை புத்தகம் ஆக்குகிறார். காஸ் பகுத்தறிவே பெரிய கடவுள் என்கிறார். தாஸ்த்தோவோயேஸ்கியின் தீவிர ரசிகராக ஐன்ஸ்டீன் இருந்திருக்கிறார் ; அவரின் கவித்துவமான,பிரபஞ்சத்தை ,அறிவியலை எல்லாம் எழுத்தில் கொண்டு வந்த நடைக்கு எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் ரசிகர்கள் !

இரண்டு லட்சம் விதை ரகங்களை உலகம் முழுக்க இருந்து சேகரித்த நிகோலா வாவிலோவ் கம்யூனிஸ்ட் எதிரி என்று தவறாக ஸ்டாலின் படைகளால் சந்தேகிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். சோபி ஜெர்மைன் என்கிற ஈபில் டவர் எழக்காரணமான பெண் அவர் காலத்தில் அவர் பெண் என்பதால் புறக்கணிக்கப்பட்டார். வேலை எதுவும் இல்லாத பெண் என்றே அவரை அன்றைய அரசாங்க ஏடுகள் குறிக்கின்றன. சந்திரசேகர் எனும் நோபல் தமிழர் இசை மற்றும் இலக்கிய ரசிகர் அவர் ஷேக்ஸ்பியர்,நியூட்டன் மற்றும் பீத்தோவன் என்றொரு கட்டுரை கூட எழுதியிருக்கிறார்.

உயிர்மை வெளியீடு

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூல நாவல் அறிமுகம்


ஸ்லாம்டாக் மில்லியனர் படத்தின் மூலமான் Q & A நூலை வாசித்து முடித்தேன். ஏழ்மை,புறக்கணிப்பு,பாலியல் வக்கிரங்கள் என்று பலவற்றை பார்த்து வளரும் சிறுவன் ஒருவன் ஒரு மிகப்பெரிய குவிஸ் போட்டியில் எப்படி வெல்கிறான் என்பதை விறுவிறு நடையில் சொல்கிற நாவல் இது. பன்னிரெண்டு கேள்விகளில் நூறு கோடியை வென்று அவன் சாதித்ததும் அவனின் வீட்டுக்குள் அவன் ஏமாற்றி இருப்பான் என்று எண்ணி போலீஸ் நுழைகிறது. அப்பொழுது அவனைக்காப்பாற்ற வரும் பெண் யார் என்பது கடைசிகட்ட திருப்பம் !

தன்னுடைய நண்பன் நம்பும் நடிகரின் இன்னொரு முகத்தை திரையரங்கில் பார்ப்பதால் ஒரு விடை,எதிர் வீட்டின் முகம் தெரியாத சகோதரியை அவரின் வானியல் துறை வல்லுனரான அப்பா பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதை கண்டதால் அவரை தள்ளிவிட்டு தப்பி ஓடியதோடு இழையும் இன்னொரு விடை,கண்ணை பறித்து பிச்சை எடுக்க விட முயலும் இடத்தால் இன்னொரு விடை,எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆஸ்திரேலிய நபரான டைலர் வாழ்க்கையால் கிடைக்கும் இன்னொரு விடை என்று அவனின் வாழ்க்கை சம்பவங்களை கோர்த்து அவன் விடை சொல்வதற்கான காரணங்களை நம்பும் வகையில் நாவலை நகர்த்துகிறார் ஆசிரியர். 

தொடர்வண்டியில் கொள்ளையனை சுட்டுக்கொன்று விடும் நாயகன் அங்கே தன்னை காதல் பொங்க பார்க்கும் பெண்ணை தவிர்க்கும் கணம் ஆகட்டும்,நீலிமா எனும் நடிகையின் வீட்டுக்குள் இரவில் நுழையும் ரசிகனுடன் நிகழும் சம்பவமாகட்டும்,லஜ்வந்தி எனும் வேலைக்காரி திருடப்போகும் பொழுது கூட காட்டும் விசுவாசம் ஆகட்டும்,சொந்த மகனை கள்ள உறவில் பிறந்ததால் தெருவில் விடும் ராணி ஆகட்டும்,துறவு வாழ்க்கையில் இருப்பதாக காட்டிக்கொண்டு ஓரின சேர்க்கையில் ஈடுபடும் பாதிரியார்,திருமண பந்தத்தில் இருக்கும் இன்னொரு பாதிரியார் என்று கலவையான மனிதர்கள் மற்றும் சம்பவங்கள். 

பல லட்சம் பணம் கிடைத்த பின்னும் அதை ஒரு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனை காப்பாற்ற கொடுக்கும் நாயகன் பாலியல் தொழிலாளியாக இருக்கும் நீதாவின் மீது காதல் கொள்வதும்,அவளுக்கு நடந்த அநியாயம் கண்டு கொதிப்பதும் அவர்கள் காதல் கைகூடியதா என்றும் அறிய நாவலை வாசியுங்கள். போட்டியில் அசோக் குமார் எனும் தொகுப்பாளருக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. அதையும் நாவலைப்படித்து அறிந்து கொள்ளுங்கள். 

இந்நூல் தமிழில் விகடன் பிரசுர வெளியீடாக வந்திருக்கிறது. 
ஆங்கில மூலம் : விகாஸ் ஸ்வரூப் 
தமிழில் :ஐஷ்வர்யன்
விலை : நூற்றி இருபது 
பக்கங்கள் : 368