WhatsApp தரும் நம்பிக்கை !


வாழ்க்கை தொடர்ந்து நிராகரிப்புகளை தருகிறது என்று புலம்புகிறீர்களா ? இந்த மனிதரின் வாழ்க்கை உங்களை உத்வேகப்படுத்தும். பிரையன் ஆக்டன் Yahooநிறுவனத்தில் பதினொரு வருடங்கள் வேலை பார்த்திருந்தார். வேலை தேடுவது,frisbee கேம் விளையாடுவது என்று சலிப்பாக போன வாழ்க்கையின் நடுவே Twitterல் வேலைக்கு விண்ணப்பம் போட்டார். “அதெல்லாம் உனக்கில்லை தம்பி !” என்று வெளியே அனுப்பினார்கள். 

Facebook பக்கம் போகலாம் என்றால் ,”ஸாரி பாஸ் !” என்று அவர்களும் கேட்டை காண்பித்தார்கள். ஜான் கோம் எனும் நண்பருடன் அவர் இணைந்து ஆரம்பித்த ஒரு ஆப் நாற்பத்தி ஐந்து கோடி பயன்பாட்டாளர்களை பெற்றது. ஒரு பைசா கூட விளம்பரத்துக்கு செலவு செய்யாமல் இதை சாதித்தார்கள் அவர்கள். முழுக்க முழுக்க பயன்படுத்துகிறவர்களை மட்டுமே நம்பி இயங்கிக்கொண்டு இருந்தவர்களின் அற்புதம் இன்றைக்கு பத்தொன்பது பில்லியன் டாலர்களை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. அந்த அற்புதம் WhatsApp  வாழ்க்கை மாறிக்கொண்டே இருப்பது தானே 

http://techcrunch.com/2014/02/19/how-things-change/?ncid=twittersocialshare

வியக்க வைத்த வீட்ஸ்டோன்


சார்ல்ஸ் வீட்ஸ்டோன் எனும் இணையற்ற இயற்பியல் அறிஞர் பிறந்த நாள் பிப்ரவரி ஆறு. இன்று அப்பா இசைக்கருவிகள் விற்கும் தொழில் செய்து வந்தார் . இவருக்கோ இலக்கியத்தின் மீது நாட்டம் போனது.சில கவிதைகள் எழுதினார் ; மாமாவின் அரவணைப்பில் வளர்ந்த பொழுது வோல்டாவின் பரிசோதனைகள் எனும் பபிரெஞ்சு மொழி புத்தகம் இவருக்கு கிடைத்தது ;ஆங்கிலேயரான இவர் சிறுக சிறுக பணம் சேர்த்து ஒரு அகராதியை வாங்கி அதைக்கொண்டு அந்த நூலை படித்து முடித்தார் .

அதில் சொன்னபடி ஒரு பேட்டரியை வடிவமைத்து முடித்ததும் அவர் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம். வசிய யாழ் என சொல்லிக்கொண்டு ஒரு கருவியை உருவாக்கினார் அது பியானோ உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகளின் இசைக்குறிப்புகளை எழுப்பியது . ஒலியும் ஒளி போலவே பயணம் செய்கிறது என்றும் அதைகொண்டு செய்திகளை கடத்த முடியும் எனவும் சொன்னார் .

கலைடோபோன் என ஒரு கருவியை உருவாக்கினார் . ஒலிக்குறிப்புகளை வெளிச்ச உருவங்களாக அது வரைந்து காட்டியது . ஒளியின் திசை வேகத்தை கண்டறியவும் முயன்றார் . முதன்முதலாக நிறப்பிரிகை உமிழ்வு கோடுகளை கண்டறிந்து ஒளிக்கதிர் ஆய்வுகளில் புரட்சி செய்தார் .மின்சார சக்தியால் இயங்கும் ஐந்து ஊசி டெலிகிராப் கருவியை வடிவமைத்தார் . இதற்கு ஷில்லிங் எனும் அறிஞரின் கருவியை ஒத்திருந்தாலும் அதை சந்தைப்படுத்தி பலரும் பயன்படுத்தும் வகையில் இவரே மாற்றினார் .

1837 இல் இரண்டரை கிலோமீட்டர் தூரத்துக்கு முதல் செய்திக்குறிப்பு இதன் மூலம் அனுப்பப்பட்டது . இது அவ்வளவாக முதலில் பிரபலமடையவில்லை . பின் 7,500 கிலோமீட்டர் தூரத்துக்கு செய்தி குறிப்புகளை செலுத்தும் அளவுக்கு பிரபலமானது .முக்கிய காரணம் ஜான் டாவெல் எனும் கொலைகாரனை கண்டுபிடிக்க இக்கருவி உதவி இருந்தது . எந்த கண்டுப்பிடிப்பிலும் பணம் ஈட்ட எண்ணாத இவர் இந்த டெலிகிராப்பில் மட்டும் பணம் பார்த்தார் ;ஆட்டோமாடிக் ட்ரான்ஸ்மீட்டரை உருவாக்கினார் .

மூளை இரண்டு வெவ்வேறு படங்களை இரண்டு கண்கள் வழியாக வாங்கி அதை முப்பரிமாண படமாக தருகிறது என விளக்கி அதைக்கொண்டு முப்பரிமாண படங்களை உருவாக்கும் ஸ்டீரியோஸ்கோப் கருவியை உருவாக்கினார் -இதுவே இன்றைய முப்பரிமாண படக்கருவிகளுக்கு முன்னோடி . 

ஏற்கனவே ஹன்டர் கிறிஸ்டி கண்டுப்பிடித்திருந்த மின்பால அமைப்பை மேம்படுத்தி எளிமையாக்கி அதன் மூலம் மின்சாரம் மற்றும் மின்தடையை ஓம் விதிப்படி எளிமையாக கண்டுபிடிக்கும் வீட்ஸ்டோன் பாலத்தை உருவாக்கினார் .மின்தடையை கொண்டு கடத்தியின் நீளத்தையும் இந்த அமைப்பில் அளவிட முடியும் .மேடையில் பேச வராத இவரின் கண்டுப்பிடிப்புகள் காலத்தை கடந்தும் அவருக்காக பேசுகின்றன என்றால் அது மிகையில்லை

இவர் தான் பாலிஆக்ஸிபென்சைல்என்க்ளைகோலான்ஹைட்ரைட் !


பேகலைட் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட தினம் பிப்ரவரி ஐந்து .மனிதனால் முழுக்க முழுக்க வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உலகின் முதல் சிந்தடிக் பிளாஸ்டிக் இதுவே . இதை உருவாக்கியவர் லியோ பேக்லாண்ட் எனும் பெல்ஜிய நாட்டு விஞ்ஞானி . அதற்கு முன்வரை shellac எனும் அரக்கு வண்டின் கழிவிலிருந்து பெறப்படும் பிசினையே பயன்படுத்திக்கொண்டு இருந்தார்கள் .

மனிதர் அதற்கு மாற்று கண்டுபிடிக்கிறேன் என கிளம்பினார் .கொஞ்சம் பீனால் கொஞ்சம் பார்மல்டிஹைட் இரண்டையும் கலந்து நிறைய ஆராய்ச்சிகள் பண்ணிப்பார்த்தார் நோவோலக் எனும் ஒரு நீரில் கரையும் இணைப்பானை உருவாக்கினார் . அது கவனம் பெறவில்லை . பின் பல்வேறு ஆய்வுகளின் முடிவில் வெப்பம் மற்றும் அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தி பீனால் மற்றும் பார்மால்டிஹைட் வினை புரியும் பொழுது பேகலைட் கிடைத்தது .

அது வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க இறுகும் தன்மை கொண்டதாக வெப்பத்தை எதிர்க்கும் தன்மை கொண்டதாக இருந்தது . உலோகங்களில் இருந்து விலகி இதைக்கொண்டு எண்ணற்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டன . ஆயிரம் பொருட்கள் அதிலிருந்து உருவாகின என்கிற அளவுக்கு தாக்கத்தை உண்டு செய்தது .

இதை கண்டுபிடித்தவர் மறைந்த பொழுது 175000 டன் அளவுக்கு அதன் உற்பத்தி பெருகியிருந்தது .பிளாஸ்டிக் தயாரிப்பு மற்றும் பாலிமர் ஆய்வில் புது சாளரங்களை திறந்து விட்டது இக்கண்டுபிடிப்பு .அதன் முழுப்பெயரை சொல்லி ஹாப்பி பர்த்டே சொல்லலாமா ? ஹாப்பி பர்த்டே பாலிஆக்ஸிபென்சைல்என்க்ளைகோலான்ஹைட்ரைட்

தனிம அட்டவணை தந்தை இவர் !


பிப்ரவரி இரண்டு :

மென்டலீவ் எனும் மாபெரும் வேதியியலாளரின் நினைவு நாள் . தனிம அட்டவணையை உருவாக்கியவர் இவரே . ரஷ்யாவில் பிறந்த இவர் அப்பா கண்பார்வை இழந்து வேலையை இழந்ததால் வறுமைக்கு தள்ளப்பட்டார் ;அம்மா நடத்திய கண்ணாடி தொழிற்சாலை தீவிபத்தில் சிக்கி ,அப்பா இறந்து போன சூழலில் தானே வாழ்க்கையில் போராடி ஜெயிக்க வேண்டும் என உணர்ந்தார் இவர் .

நடுவில் காசநோய் தாக்க மீண்டும் போராடி மீண்டார் .வேதியியலில் ஆர்வம் உண்டானது . ஆல்கஹாலில் நீரை சேர்ப்பதை பற்றி ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்றார் . அவர் பணியாற்றிய பீட்டர்ஸ்பர்க் பல்கலையை உலகத்தர வேதியியல் அமைப்பாக தன் உழைப்பால் கட்டமைத்தார் . மென்டலீவை ஒரு விஷயம் நெடுநாட்களாக மண்டையை போட்டு குழப்பிக்கொண்டு இருந்தது . வெவ்வேறு தனிமங்களை எப்படி வகைப்படுத்துவது என்பதே அந்த கேள்வி 

அதற்கு முன் நியூலாண்ட் எனும் அறிஞர் அணு எடையை கொண்டு தனிமங்களை வகைப்படுத்தி இருந்தார் ; அதற்கு பிறகு லோதர் மேயர் என்பவர் இணைவுத்திறனை கொண்டு கண்டுபிடிக்கபட்ட 53 தனிமங்களில் 28 ஐ வகைப்படுத்தி இருந்தார் . இதுவெல்லாம் அவ்வளவாக தகவல் தொடர்பில்லாத காலம் என்பதால் இவருக்கு தெரியாது. 

பாணினி எனும் சம்ஸ்க்ருத இலக்கண வல்லுனரின் நூல் மீது பெரிய ,மரியாதை இருந்ததாம் ; சொற்களின் ஒலிப்பு எப்படி உச்சரிப்புக்கு ஏற்ப மாறுபடுகிறது என விதிகளின் மூலம் பாணினி கட்டமைத்தது போல ஒரு விதியின் மூலம் தனிமங்களை அட்டவணைப்படுத்த முடியும் என மென்டலீவ் நம்பினார். ஒரு நாள் தூங்கிக்கொண்டு இருந்த பொழுது ஒரு கனவு கண்டார் அதில் மேலே எண்ணிடப்பட்ட பந்துகள் ஒரு அட்டவணையில் வீழ்வது போல காட்சிகள் ஓடின .அப்படியே எழுந்து ஓடியவர் தனிமங்களை அவற்றின் அணு எடையை கொண்டு வகைப்படுத்தினார் -கச்சிதமாக வந்தது .

சில இடங்களில் தனிமங்கள் இல்லாமல் இருப்பதை கண்டார் .அவை இன்னும் கண்டுபிடிக்கபடாத தனிமங்கள் என சொல்லி அவற்றின் வேதி பண்புகளை துல்லியமாக கணித்தார் . அவையே பின் ஜெர்மனியம்,ஸ்காண்டியம்,காலியம் ஆகிய தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது அவர் சொன்ன பண்புகள் அப்படியே பொருந்தின . அந்த தனிமங்களுக்கு அவர் பாணினிக்கு மரியாதை செலுத்தும் விதமாக சம்ஸ்க்ருத சொற்களை முன்பெயராக வைத்தார் . இவர் தான் . இவர் நாட்டின் வோட்காவில் உள்ள நீரின் அளவை இவரே மாற்றியமைத்தார் ;கூடவே அவர் நாட்டின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார் .பெட்ரோல் உலகின் முக்கியமான எரிபொருள் ஆகும் என 19 ஆம் நூற்றாண்டிலேயே சொன்னவர் இவர் , தனிம அட்டவணையின் தந்தையான இவரின் நினைவு நாள் இன்று

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் எனும் தத்துவ ஞானி


பிப்ரவரி இரண்டு :

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் எனும் இணையற்ற சிந்தனையாளர்,தத்துவஞானி மறைந்த தினம் இன்று. இவரின் தாத்தா இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் ; மனிதர் இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தார். தனிமை வாட்டியது .பலமுறை தற்கொலை செய்துகொள்ள முயன்றார் 

அப்பொழுது அவரை யூக்ளிட் எழுதிய வடிவியல் பற்றிய நூலும்,ஷெல்லியின் கவிதைகளும் கட்டிப்போட்டு மரணத்தில் இருந்து காத்தன . கணிதத்தை தர்க்கத்தின் மூலம் கற்க முடியும் என இவர் எழுதிய நூல்கள் உலகப்புகழ் பெற்றன . கணித தத்துவவியல் எனும் இவரின் நூல்கள் உலகின் கவனத்தை ஈர்த்தது .

போருக்கு எதிராக உலகப்போர் சமயத்தில் குரல் கொடுத்து விரிவுரையாளராக இருந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டார் .அணு ஆயுத போட்டியை தொடர்ந்து விமர்சித்தார் ..ஹிட்லர்,ஸ்டாலின் இருவரின் சர்வதிகார போக்கையும் விமர்சித்த இவர் ,அமெரிக்கா வியட்நாம் மீது போர் தொடுத்த பொழுது அதையும் எதிர்த்தார் / நாத்திகவாதியான இவர் மதத்தின் மீது கூர்மையான விமர்சனங்களை வைத்தார் .

இவரின் மேற்குலகின் தத்துவ வரலாறு நூல் பலபேரால் விரும்பி படிக்கப்பட்டது .இவரை ஒரு முறை விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்த பொழுது ஏதேனும் விலை உயர்ந்த பொருள்கள் இருக்கிறதா எனக்கேட்க ,மிக விலையுயர்ந்த அறிவு உள்ளது என்னிடம் !”என்றார் கம்பீரமாக .அவரின் நினைவு தினம் இன்று 

அவர் பழமையோடு கூடிய தாராள நோக்கை பெற ஒரு கல்வியாளராக பத்து கட்டளைகள் தந்துள்ளார் .அவை :

எதைப்பற்றியும் தீர்மானமான முடிவெடுத்துக்கொண்டு செய்லாற்றாதே 

உண்மையை மறைத்து காரியங்களை சாதிக்காதே ;ஒருநாள் உண்மை வெளிப்பட்டு கட்டாயம் மாட்டிக்கொள்வாய் 

உன்னால் ஜெயிக்க முடியும் என்கிற எண்ணத்தில் உறுதியாக இரு ;சந்தேகம் என்பதையே மறந்துவிடு 

யாருடைய அடக்குமுறையை கண்டும் அஞ்சாதே ;எல்லா அடக்குமுறைக்கும் மாற்று இருந்தே தீரும்.ஆகவே அடக்குமுறைகளை முழுமையாகவே புறக்கணி 

உன்னை எதிர்ப்பது யாராக ஏன் உன் குடும்பத்து உறுப்பினராக இருந்தாலும் அவர்களிடம் உன் அதிகாரத்தைப் பயன்படுத்தாதே, விவாதத்தால்தான் ஜெயிக்க வேண்டும். ஏனெனில், அதிகாரத்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய வெற்றி ஒரு மாயை, அது பொய்யானதும் கூட 

நாசகர சிந்தனைகளை அதிகாரத்தை கொண்டு கட்டுப்படுத்த முயலாதே ‘அவை அவற்றை மிஞ்சியும் தன் வேலையை காட்டும் 

கிறுக்குத்தனம் என உன் சிந்தனைகளை பிறர் ஒதுக்கினால் கவலைப்படாதே ;இன்றைய தலைசிறந்த சிந்தனைகள் என கொண்டாடப்படுபவையும் ஒரு காலத்தில் அவ்வாறே அழைக்கப்பட்டன 

அமைதியாக ஒத்துப் போவதைவிட அறிவார்ந்த வாக்குவாதங்களில் மகிழ்ச்சி காண வேண்டும் . பிறர் அறிவை நீ சரியாக மதிக்கிற பொழுது ஆழமான புரிதல் உண்டாகும் 

நெஞ்சில் பட்ட உண்மையை நேர்பட பேசு ;அது கசப்பாக இருந்தாலும் அதை மறைத்தல் அதை விட துன்பகரமானது 

முட்டாள்கள் சந்தோசம் இங்கே எனக்கொண்டாடும் மலிவான விஷயங்களை பார்த்து பொறாமைப்படாதே .அவர்கள் தான் அவற்றை இன்பம் தருபவை என்பார்கள்

சார்ல்ஸ் டிக்கன்ஸ் எனும் இலக்கிய மேதை


ளம் வயதில் அப்பாவும் ஒட்டுமொத்த குடும்பமும் சிறைக்கு போனது. குழந்தைகளை கடன் அடைக்க கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தினார்கள். குடும்பத்தின் வாண்டுகள் எல்லாருமே குழந்தை தொழிலாளராக மாறினார்கள். ஏழு வருடங்களுக்கு மேல் எக்கச்சக்க துயரங்களுக்கும்,அடி உதைகளுக்கும் உள்ளாகி காயமுற்றார் அவர். ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் பிஞ்சு விரல்கள் சிவக்க உழைத்த பின் தான் கண்ட மனிதர்கள்,சந்தித்த சம்பவங்கள் எல்லாவற்றையும் சின்ன டயரியில் குறிப்பது அவரின் வழக்கமாக இருந்தது. மிச்ச நேரத்தில் எப்படியாவது புத்தகங்களை கடன்வாங்கி அரைகுறை வெளிச்சத்தில் வாசித்து மட்டுமே அவருக்கான ஒளியாக இருந்தது. 

அப்பா விடுதலை ஆனதும் வெலிங்கடன் பகுதியில் வசிக்க நேரிட்டது. அங்கே சிறைக்கு போய் வந்த சிறுவன் என்று இவரை பலரும் ஒதுக்கி வைக்க எளியவர்கள் அவரின் நண்பர்கள் ஆனார்கள். கிளார்க்குகள் அவருக்கு சுருக்கெழுத்து முறையை சொல்லித்தந்தார்கள். வேலை செய்துகொண்டிருந்த எளிய பெண்கள் அன்பை பொழிந்தார்கள். 

வெகு சீக்கிரம் அவரின் எழுத்துலக பிரவேசம் நிகழ்ந்தது. தன்னுடைய அனுபவங்களை எழுத்தாக்கினார். இவர் தன் எழுத்தின் வரும்படியை குழந்தை தொழிலாளர்களுக்கு செலவு செய்தார். எழுத்திலும் அவர்களின் இன்னல்களை வடித்தார் .

வாசகனின் விருப்பங்களை அன்றைக்கு எழுத்தாளர்கள் சட்டை செய்வதில்லை என்பதை உணர்ந்த இவர் தொடர் கதை பாணியை பிரபலப்படுத்தி ஒவ்வொரு அத்தியாயத்திற்கு பிறகும் வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கதையை மாற்றி நெகிழவைத்த நாயகன் அவர். 

ஏகத்துக்கும் சம்பாதித்த இவர் பாதிக்கப்பட்ட வாழ்க்கையில் நலிவுற்ற பெண்களுக்கும் ஏகத்துக்கும் உதவினார் ,தொடர்வண்டி விபத்தில் இவருக்கு பின் இருந்த பலபேர் காயமுற அவர்களை காப்பாற்றி விட்டு தன் பிரபலமான நாவலை ஆரமர விபத்துப்பகுதியில் இருந்து தேடி எடுத்துக்கொண்டு கிளம்பினார். 

கண்ணீரில் அவர் வாழ்க்கை தோய்ந்தாலும் அவரின் எழுத்தின் தரம் தான் அவரை காலங்களைக்கடந்து நிற்க வைக்கிறது !வாழ்ந்த வாழ்க்கையை எழுத்தில் வடிக்க வரம் வேண்டும் அல்லவா ?அவரின் பிறந்தநாள் இன்று.

லேடி லாசரஸ்-சில்வியா பிளாத்


தற்கொலை எண்ணம் எப்படியெல்லாம் அவளுக்கு உண்டாகியது என்பதை லேடி லாசரஸ் என்கிற கவிதையில் அவள் வடித்திருப்பாள். ஆரம்ப வரிகளை கடந்து விடுங்கள் ; கவிதை கனமான உணர்வைத்தரும் !

நான் மீண்டும் அதை செய்துவிட்டேன் 
பத்து வருடங்களுக்கு ஒருமுறை 
அதை நான் செய்தவாறே இருக்கிறேன் 

நாஜி ஒளிவட்டம் போல ஒளிர்கிறது என் மேனி 
என் வலது கால் 
நடக்கும் அதிசயம் 

யூத ஆடைபோல 
களங்கமில்லா,அற்புதம் என் முகம் 
அது பேப்பர் வெயிட் 

என் எதிரியே !
என்னுடைய நாப்கினை பிய்த்து விடு 
நான் அச்சம் தருகிறேனா ?

மூக்கு,விழிக்குழிகள்,பல்வரிசை 
புளிக்கும் சுவாசம் 
எல்லாம் ஒரே நாளில் கரைந்து போகும் 

கல்லறை குகை தின்ற சதை 
சீக்கிரம் என் வீட்டில் இருக்கும் 

நான் புன்னகைக்கிற பெண் 
நான் முப்பது வயதனாவளே 
பூனையைப்போல ஒன்பது முறை சாகக்கூடியவள் நான் 

இது மூன்றாவது !
ஒவ்வொரு பத்தாண்டையும் அழிப்பது 
எவ்வளவு பெரிய குப்பை ! 

பலலட்சம் இழைகளை 
கடலையை கொறிக்கும் கூட்டம் 
தள்ளிக்கொண்டு பார்க்கிறது. 

என் கை,பாதம் 
பிரித்து பார்க்கிறார்கள் 
பேரிழை பெருமாட்டிகள்,ஆண்களை 
ஏமாற்றுகிறது 

அவை என் கரங்கள் 
என் முட்டிகள் 
நான் சதை மற்றும் எலும்பாக இருக்கலாம் 

என்றாலும் நான் அதுவே தான் அச்சு அசலான பெண் 
முதல்முறை அது நடந்த பொழுது பத்து வயது எனக்கு 
அது ஒரு விபத்து 

இரண்டாவது முறை அது நடந்த பொழுது 
அத்தோடு முடிந்து மீண்டு வரக்கூடாது என்று விரும்பினேன் நான் 
அதிர்வுகளை மூடிக்கொண்டேன் நான் 

கடல்ஓட்டைப்போல 
மீண்டும் மீண்டும் அழைத்து
பிசுபிசுக்கும் முத்துக்களை போல என்னிலிருந்து புழுக்குகளை பொறுக்குகிறார்கள் 

மற்றவற்றைப்போல சாதல் ஒரு கலை 
அதை நான் எல்லாவற்றை விடவும் 
சிறப்பாகவே செய்கிறேன் 

அதை நான் செய்கிறேன் ,ஆகவே,நரகம் போல உணர்கிறேன் 
அதை நான் செய்கிறேன்,ஆகவே,உண்மையாக உணர்கிறேன் 
எனக்கொரு அழைப்பு வருகிறது என்று நீங்கள் சொல்வீர்கள் என்று நினைக்கிறேன் 

அதை ஒரு சிறு அறையில் செய்வது சுலபம் 
அதை செய்துவிட்டு காத்திருத்தல் சுலபம் 
அது நாடகத்தனமானது 

ஒரு அகண்ட நாளில் திரும்ப வாருங்கள் 
அதே இடம்,அதே முகம்,அதே கொடூரம் 
அசந்துபோனவர்கள் கத்துவார்கள்:

“இது அதிசயம் “
அது என்னை தள்ளிவிடுகிறது 
அதில் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது 

என் தழும்புகளின் சந்திப்பில் அந்த குற்றச்சாட்டு இருக்கிறது 
என் இதயத்தின் கேட்பில் அது 
உண்மையாக நகர்கிறது 

அது குற்றச்சாட்டு,மிகப்பெரிய குற்றச்சாட்டு 
ஒரு வார்த்தைக்காக அல்லது ஒரு தொடுதலுக்காக 
அல்லது சில துளி ரத்தத்துக்காக 

அல்லது என்னுடைய துளி முடி அல்லது உடைகளுக்காக 
ஆகவே ஆகவே டாக்டரே 
என் எதிரியே 

நான் உங்களுடைய படைப்பு 
உங்களுடைய சொத்து 
உங்களின் பசும்பொன் மழலை 

அது கிறீச்சிட்டு உருகுகிறது 
நான் திரும்புகிறேன் மற்றும் எரிகிறேன் 
நான் உங்களின் மிகுந்த அக்கறையை குறைத்து மதிப்பிடவில்லை 

சாம்பல்,சாம்பல் 
நீங்கள் குத்தி தேடிப்பார்க்கிறீர்கள்
சதை,எலும்பு,எதுவுமில்லை அங்கே 

ஒரு சோப்புக்கட்டி
ஒரு திருமண மோதிரம் 
ஒரு தங்க நிறைப்பு 

ஹே கடவுளே ! ஹே சாத்தானே 
ஜாக்கிரதை 
ஜாக்கிரதை 

சாம்பலில் இருந்து நான் எழுகிறேன் 
என்னுடைய சிவப்பு குழலோடு நான் எழுகிறேன் 
மனிதர்களை காற்றில் புசிக்கிறேன் நான் ! 

தற்கொலையோடு கவிதை பாடிய சில்வியா


சாதலைப்பற்றிய எண்ணத்தோடு மட்டுமே வாழ்க்கை முழுக்க இருக்கிற அல்லது அது நோக்கி தள்ளப்படுகிற ஜீவன்களை பற்றி நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா ? அவர்களின் உலகம் எத்தகையது,அவர்களின் உணர்வுகள் வலிகள் எப்படியாக இருக்கும் என்று கண்டிருக்கிறீர்களா ? பெண்களின் உலகில் ஆண்கள் தொடர்ந்து ஏற்படுத்தும் வலிகள் எத்தனை ரணமானது ? சில்வியா பிளாத்தின் வாழ்க்கை அத்தகையது தான்.

இளம்வயதில் தந்தையை இழந்ததில் அவளின் வலிகள் துவங்கின என்றே சொல்லலாம். அவளின் அப்பா இறந்ததும் அதை அவளிடம் யோசித்து யோசித்து தெரிவித்ததும் சில்வியா சன்னமாக ,”நான் இனிமேல் கடவுளோடு பேசமாட்டேன் !” என்று சொல்வதில் துவங்கிய தற்கொலை எண்ணம் அவள் வாழ்வை முடித்துக்கொள்கிற வரை போனது. காரணம் வாழ்க்கை முழுக்க அன்பைத்தேடி போன அவளுக்கு பரிசளிக்கப்பட்ட துரோகங்கள்,பிரிவுகள். நார்ட்டன் என்பவரை அப்பாவுக்கு அடுத்து நேசித்தாள். அவர் மரணமுற்ற தாக்கத்தில் இருளுக்குள் புழுங்கிக்கொண்டே இருந்த சில்வியா தன்னுடைய ஆன்மாவில் கலந்துவிட்டு வலிகளை கவிதைகளில் தான் கொட்டினாள். நாற்பது தூக்க மாத்திரைகளை விழுங்கிய சூழலில் அவளை கஷ்டப்பட்டு காப்பற்றி கொண்டுவந்தார்கள்.

ஹுக்ஸ் என்பவரை திருமணம் கொண்டார்; தன் கணவர் மீது எல்லையில்லா அன்பு காட்டினார் சில்வியா. அந்த மனிதருடனான மணவாழ்வில் இரண்டு குழந்தைகள். ஆனால், கணவருக்கு பிற பெண்களுடன் தொடர்பு இருந்தது. அன்புக்காக ஏங்கிய சில்வியா நொறுங்கிப்போனார். கணவரை விட்டு விலகி இருபது வயதிலேயே பிள்ளைகளை தனியாக வளர்க்க ஆரம்பித்தார்.

அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து கவிதை எழுதிவிட்டு, பின்னர் பிள்ளைகளை கவனித்துக்கொண்டே வலியோடு வாழ்க்கை நடத்தினார்; மனவீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட இவர் அடிக்கடி தற்கொலை முயற்சிகள் செய்த வண்ணம் இருந்தார் ; ஒரு நாள் கேஸ் அடுப்பை மூட்டி கார்பன் மோனாக்சைட் வாயுவை சுவாசித்து தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொண்டார் அவர். குழந்தைகளை ஈரத்துண்டில் சுற்றி பாதுகாப்பாக வைத்துவிட்டே அவர் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

‘நெருப்பிலும் தங்கத்தாமரை மலரும்’ என ஹுக்ஸ் அவர் கல்லறையில் எழுதி வைத்தார்; அந்த வரிகளை சில்வியாவின் ரசிகர்கள் பலமுறை அழித்து இருக்கிறார்கள். ஹூக்ஸ் திருமணம் செய்து கொண்ட அடுத்த பெண்ணும் ஆறு வருடங்களில் தற்கொலை செய்து கொண்டாள். சில்வியா இறந்து இருபது வருடங்கள் கழித்து புலிட்சர் பரிசும் வழங்கப்பட்டது அவருக்கு!

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு


சுஜாதாவின் டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு நாடகத்தை வாசித்து முடித்தேன். நரேந்திரன் என்கிற மருத்துவர் அமெரிக்காவின் வேலை பார்த்துவிட்டு அங்கே பட்டங்கள் பெற்று பின்னர் இந்தியாவில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு திரும்புகிறார். அங்கே கோமா நிலையில் இருந்த ஒரு நோயாளியின் சுவாசக்குழாயை பிடுங்கி கொன்றது,ஒரு இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்தது மற்றும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஒரு சிறுவனுக்கு தடை செய்யப்பட்ட மருந்தைக்கொடுத்து அவனை கொன்றது ஆகிய மூன்று குற்றங்கள் வைக்கப்பட்டு வழக்கு நடக்கிறது. 

குற்றவாளியே தூக்கை நோக்கி பயணிப்பது என்கிற செயலையே மருத்துவர் செய்கிறார். “தீர்ப்பு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது ! எனக்கு வக்கீல் வேண்டாம் !” என்று அவர் அடம்பிடிக்கிறார். கணேஷ் வசந்த் நீதிபதியின் வேண்டுகோளின்படி வழக்குள் நுழைகிறார்கள். 

மருத்துவர் ஒத்துழைக்க மறுக்கிறார் ; பின்னர் படிப்படியாக கணேஷ் வசந்த் வாதங்களால் நம்பிக்கை வந்து பேச ஆரம்பிக்கிறார். கோமாவில் இருந்தவர் ஆறு மாதத்தில் அழுகி இறக்கக்கூடிய சூழலிலேயே இருந்தார். அவர் கண்டிப்பாக பிழைக்கவே மாட்டார் என்கிற சூழலில் சொத்தை யாருக்கு அவர் எழுதியிருக்கிறார் என்று அறிந்து கொள்ள அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவரை படாதபாடு படுத்திய உறவுகள் அலைவதைப்பார்க்கிறார் மருத்துவர். அவருக்கு நிரந்தர நிம்மதி தருகிறார். 

மருத்துவமனையில் இருந்து லேட்டாக வீட்டுக்கு கிளம்பிய அப்பெண் சிலரால் வன்புணர்வுக்கு உள்ளாகிறாள். அதை எல்லாரிடமும் மறைத்து விடுகிறாள். பின் கர்ப்பம் தரிக்கவே அதை டாக்டரிடம் சொல்கிறாள். அவர் அவளின் வயிற்றை சுத்தம் செய்கிறார். அதே போல அந்த சிறுவன் ஒரு ஜீனியஸ் அவன் வாழ்க்கை மூன்று மாதங்கள் என்கிற அளவிலேயே ரத்த புற்றுநோயால் ஆகியிருக்க சில சமயம் மாயம் செய்த பல்லாயிரம் மதிப்புள்ள மருந்தை அவன் மீது பிரயோகிக்க அவன் பெற்றோரிடம் அனுமதி பெற்று முயல்கிறார் டாக்டர். அவன் எதிர்வினையாகி இறந்து போகிறான் 

நரேந்திரன் வேலை பார்த்த அரசு மருத்துவமனையில் இருந்த இன்னொரு மருத்துவர் ஒரு பெரிய புள்ளிக்கு உறவினர். வசந்த் மற்றும் கணேஷ் எவ்வளவோ முயன்றும் சாட்சிகள் பல்டியடிக்கின்றன. விலைக்கு வாங்கப்பட்டு நரேந்திரனை குற்றவாளி ஆக்குகின்றன. அந்த பெரிய புள்ளி போலியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது அவரை உடனே வெளியே நரேந்திரன் அனுப்பி இருந்ததும் இப்படி ஜோடிக்க ஒரு காரணம். இறுதியில் நரேந்திரனின் குற்றம் நிரூபிக்கப்படுகிறது. 

கணேஷ் மற்றும் வசந்த் குமுறுகிறார்கள். ஆனாலும்,நீதிமன்றங்கள் விதிமுறைகள் பேசிக்கொண்டும்,விலைக்கு வாங்கப்பட்ட சாட்சிகளுடனும் நியாயத்தை மட்டும் காணாமலே கடந்து விடுகின்றன என்பதை விறுவிறுநடையில் சுஜாதாவின் எழுத்து கடத்தியிருக்கிறது. 
விலை : ரூபாய்.நூறு 
பக்கங்கள் :118
கிழக்கு பதிப்பகம் வெளியீடு

நடால் எனும் நாயகன் !


நான் அடிப்படையில் ரோஜர் பெடரரின் தீவிர ரசிகன். ரபேல் நடாலின் ஆட்டம் அற்புதமானதாக இருந்தாலும அவரைப்பற்றி எழுதவேண்டும் என்றோ,வாசிக்க வேண்டும் என்றோ எண்ணியதில்லை. திடீரென்று நடாலின் சுயசரிதையை காண நேரிடவே வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். அப்படியே நடாலின் ரசிகனாக அவரின் வாழ்க்கையை படித்ததும் மாறிவிட்டேன் என்பதே உண்மை. RAFA என்று பெயரிடப்பட்டு இருக்கும் நூலை இரண்டு பாணியில் நகர்த்துகிறார்கள். நடால் தன்னுடைய அனுபவத்தை ஒரு அத்தியாயத்தில் சொன்னால் அடுத்த பகுதியில் ஜான் கார்லின் அவரைப்பற்றிய சுவையான சங்கதிகள்,அவரை ஆக்கிய ஆளுமைகள் ஆகியவற்றை இணைத்து பேசுவார். இப்படியே நூலை நீங்கள் விறுவிறுவென்று வாசித்து விடலாம். 

நடாலின் இளமைக்காலத்தில் அவருடைய ஆர்வமெல்லாம் கால்பந்தின் மீதே இருந்திருக்கிறது. அவரின் உறவினர் ஒருவர் பார்சிலோனா அணியில் ஆடிக்கொண்டு இருந்தாலும் இவரின் குடும்பமே தீவிர ரியல் மாட்ரிட் ரசிகர்கள். கால்பந்தில் தோற்கப்போகிற போட்டியில் கூட வென்றுவிடுவோம் என்று இறுதி வரை நம்பிக்கொண்டு ஆடும் உற்சாகம் மிகுந்த இளைஞனாக நடால் இருந்திருக்கிறார். டென்னிஸ் பக்கம் மாமா டோனியால் வந்திருக்கிறார்.
அங்கே அண்டர்-12 டென்னிஸ் போட்டியில் எட்டு வயதில் வென்றதும் டென்னிஸ் காதல் ஈர்த்திருக்கிறது. அடுத்து அண்டர் 14 போட்டிகளில் பங்கு பெற தயாராகி இருக்கிறார். கையில் ஒரு விரல் உடைந்த நிலையில் அதற்கு கட்டுப்போடாமலே ஆட்டத்துக்கு அனுப்பியிருக்கிறார் டோனி. அதோடு ஆடியே இறுதிப்போட்டியிலும் வென்று சாம்பியன் ஆனார் நடால். 

அந்த சாம்பியன்ஷிப்பை வென்றதும் வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருக்கிறார் இவர். மாமா டோனி போன் போட்டு அப்படி ஜெயித்த இருபத்தைந்து பேரில் வெறும் ஐந்து பேர் மட்டுமே டென்னிஸ் உலகில் மின்னியதை சொல்லிவிட்டு ,”ரொம்ப குதிக்காதே தம்பி !” என்று தலையில் தட்டியிருக்கிறார். 

நடாலுக்கு சாக்லேட் மற்றும் ஆலிவ் என்றால் ரொம்பவும் இஷ்டம். கிரான்ட்ஸ்லாம் போட்டிகள் நடக்கும் பொழுது எக்கச்சக்க உணவு கட்டுப்பாடுகள் சொல்லப்பட்டாலும் திருட்டுத்தனமாக வெளியே போய் சாக்லேட் மற்றும் பல பாட்டில் ஆலிவ் வாங்கிக்கொண்டு வந்து தின்று வயிற்றை கெடுத்துக்கொள்வது அவரின் பழக்கம். தோல்வி என்பதை இப்பொழுதும் ஏற்றுக்கொள்ளாத ஒரு ஆக்ரோஷ மனோபாவம் உண்டு என்பதையும் ஒத்துக்கொள்கிறார் நடால். சீட்டுக்கட்டு ஆடும் பொழுது தோற்றுவிட குடும்பத்தினர் ஏமாற்றிவிட்டார்கள் என்று இந்த வயதிலும் சீரியஸாக சண்டை போடுகிறேன் நான் என்று வருத்தப்படுகிறார். 

நடாலின் கோச்,குரு எல்லாமும் டோனியே. ஏழு வருடங்களுக்கு முன்னர் ஐந்து செட்களுக்கு பிறகு பெடரரிடம் விம்பிள்டன் போட்டியில் தோற்றதும் நடால் ஷவரில் தலையை நனைத்துக்கொண்டு அரை மணிநேரம் கதறி அழுதார். அப்பொழுது எப்பொழுதுமே ஆறுதல் சொல்லி பழக்கமில்லாத டோனியும் ஆறுதல் சொன்னார். அடுத்த விம்பிள்டன் வந்த பொழுது எப்படி வென்றார் நடால் என்பதை பற்றிய விவரணையே ஒரு நஎழுபது பக்கம் அளவுக்கு நீள்கிறது என்றால் அந்த போட்டியை எந்த அளவுக்கு அவர் ரசித்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். 

பெடரர் பற்றி நடால் எழுதும் வரிகள் அற்புதமானவை: “நாங்கள் எல்லாரும் காயத்தால் அவதிப்படுகிற பொழுது அவர் மட்டும் எதோ தனியொருவர் போல அவற்றில் இருந்து தள்ளியே நிற்கிறார் ; அவரின் ஆட்டத்தில் இருக்கும் அதிபயங்கர துல்லியம் அபாயமானது. நானும் அவரும் நல்ல நண்பர்கள் ; அவரின் ஆட்டத்தை மற்ற கணங்களில் ரசித்தாலும் நாங்கள் மோதுகிற பொழுது அவரை தவற செய்ய வைக்கவே முனைகிறேன். காட்சிப்போட்டிகளில் அவரைக்கண்டால் சிரித்து கால்பந்து பற்றி பேசுகிற நான்,கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அப்படி நடிக்க முடியாமல் இறுக்கமாகவே முகத்தை வைத்துக்கொள்கிறேன் !” என்று விவரிக்கிறார். 

தங்கையின் மீதான் அவரின் பாசம் அளவிட முடியாது. அனுதினமும் எங்கிருந்தாலும் கால் செய்து பேசுவது,நெட்டில் சாட்டிங் என்பதோடு அவருக்கு ஒன்று என்றால் அன்றைக்கு முழுக்க தலைவர் அப்செட் ஆகிவிடுவாராம். அதனால் ஊசி போட்டுக்கொண்டால் கூட இவரிடம் வெளியே போட்டி காலங்களில் இருக்கிற பொழுது சொல்வதில்லை இவரின் தங்கை. 

நடால் இளம்வயதில் இருந்தே கட்டுப்பாட்டோடு தான் அவரின் குடும்பத்தால் வளர்க்கப்பட்டு இருக்கிறார். போட்டி முடிந்ததும் எதிராளியை நோக்கி புன்னகைத்து கரம் குலுக்கி விடை பெறுகிற பழக்கத்தை அவர் கொண்டிருக்க வேண்டும் என்பதிலும்,குடித்துவிட்டு வெளியே ஆட்டம் போடுகிற மற்ற பிள்ளைகளை போல இருக்க கூடாது அவர் என்பதிலும் தெளிவாக இருந்திருக்கிறார்கள். அப்படி நீ இருந்திருந்தால் நீ ஆடுகிற போட்டிகளுக்கு எல்லாம் வந்து உற்சாகப்படுத்த மாட்டோம் நாங்கள் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். நடுவில் பள்ளிப்படிப்புக்காக டென்னிஸ் போட்டிகளை முழுக்க மூட்டை கட்டை வைத்துவிட்டு இவரை பட்டம் பெற எல்லாம் அனுப்பியிருக்கிறார்கள். விமானத்தில் பாடப்புத்தகங்கள் தொலைந்து மீண்டும் டென்னிஸ் என்று வந்திருக்கிறார் இவர். 

டேவிஸ் கப் இறுதிப்போட்டிக்கு இவரும் அணியில் பத்தொன்பது வயதில் சேர்க்கப்பட்டு போட்டிக்களம் புகுந்தார். ஆண்டி ரோடிக் உடன் அதற்குமுன் நடந்திருந்த போட்டிகளில் தோல்வியையே சுவைத்து இருந்தார் நடால். அன்றைக்கு கார்லஸ் மோயா தான் அவருடன் ஆடுவதாக இருந்தது. திடீரென்று உடம்பு முடியவில்லை என்று அவர் கைவிரித்துவிடவே நடால் பெயரை கேப்டன் தெரிவு செய்திருக்கிறார். நடால் முடியாது என்று ஏகத்துக்கும் மறுத்துப்பேசி சீனியர்கள் ஆடட்டும் என்று சொன்னாலும் உள்ளுக்குள் உற்சாகத்தால் துள்ளியிருக்கிறார். போட்டி வந்ததும் 27,000 ஸ்பெயின் மக்களும் ஆர்ப்பரித்து இவருக்கு தந்த உற்சாகத்தோடு வெறித்தனமாக ஆடி வென்று சாதித்தார். அணி கோப்பையை தூக்கியது. அதற்குமுன் வரை என்ன நடந்து இருந்தாலும் போர்க்குணம் அன்றைய ஆட்டத்தை மாற்றலாம் என்று நடால் அழுத்தமாக உணர்ந்த தருணம் அது !

விம்பிள்டனை பெடரரிடம் இருந்து தட்டிப்பறித்த பின்னர் தான் வாழ்வின் மிகவும் வலிமிகுந்த கட்டம் நடாலுக்கு காத்திருந்தது. அவருக்கு அடிக்கடி காலில் வலி வர ஆரம்பித்து இருந்தது. என்னவென்று சோதித்து பார்த்தால்,இடது காலில் ஒரு சிறிய எலும்பில் சிக்கல் இருந்தது. இளம் வயதிலேயே அந்த குறைபாடு இருந்து அதை கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். அதனால் அதன் சிக்கல் பெரிதாகி டென்னிஸ் வாழ்க்கையே நடாலுக்கு முடியக்கூடும் என்று மருத்துவர் எச்சரித்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றோடு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இருந்து வெளியேறுவது நடந்தது. கண்ணீர் விட்டு அழுதார் நடால். 

அதுவரை எப்பொழுதும் பெரும்பாலும் வாயைத்திறந்து பேசாத அவரின் அப்பா பேசினார்,”பார்த்துக்கொள்ளலாம் ! இது இல்லாவிட்டால் என்ன ? கோல்ப் ஆடப்போகலாம் நீ ! உனக்கு நிரம்ப பிடித்தது இல்லையா அது ? மேலும் அப்படி ஆட முடியாமல் போகலாம் என்று தான் மருத்துவர் எச்சரித்து இருக்கிறார். அதுவே நடக்க வேண்டும் என்று அவசியமில்லை !” என்று தந்தை சொல்ல உற்சாகம் ததும்ப மீண்டும் மீண்டு வந்தார் நடால். போட்டிகளில் கலந்து கொண்டார். பெடரரை ஹார்ட் கோர்ட்டில் வென்றதும் நம்பிக்கை பிறந்தது. இதற்கு முன்னரே நிக் நிறுவனம் வடிவமைத்து இருந்த ஷூ அவரின் கால் எலும்பு சிக்கலுக்கு தீர்வு தந்திருந்தது ; அந்த அழுத்தம் மற்ற பகுதிகளுக்கு கடத்தப்படுவதால் அவை அடிக்கடி பிடித்துக்கொள்வது இன்றுவரை நடக்கிறது !

வெர்டாஸ்கோ உடன் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் வெர்டாஸ்கோ ஒரு டபுள் பால்ட் செய்யாமல் போயிருந்தால் தான் வென்றிருக்க முடியாது என்று ஒத்துக்கொள்ளும் நடால் அப்பொழுதும் அழுதார். அடுத்தடுத்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் சொதப்பினார் நடால். முதல் இடத்தை பெடரரிடம் இழந்தார். காரணம்,முப்பது வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு அன்பு மிகுந்த பெற்றோர் பிரிந்து இருந்தார்கள். தூக்கமே வராமல் சாப்பிடாமல் அந்த கவலை தின்ன போட்டிகளில் தோல்வியை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்த நடால் வலிகளில் இருந்து வலிமை பெறுவது என்று டோனியின் உதவியுடன் களம் புகுந்தார். கேரியர் கிராண்ட்ஸ்லாமை மிக இளம் வயதில் சாதித்தவர் என்கிற சாதனை புரிந்தார். 

“நான் எதையும் மறைக்க தெரியாதவன். தொடர்ந்து என்னுடைய சிறந்த ஆட்டத்தை தராவிட்டால் எனக்கு தூக்கம் வராது ! இப்பொழுதும் கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு ஒரு மணிநேரம் முன்னர் டென்சனில் மணிக்கு நான்கு,ஐந்து முறை சிறுநீர் கழிக்கிறேன் ! ஆனாலும்,ஆட்டம் என்று வந்தால் அடித்து விளையாடிவிட வேண்டும் ! அதுதான் என் பாணி !” என்று பேசும் நடாலின் டென்னிஸ் காதலும்,உண்மையான காதலும் இன்னமும் வேகமாக போய்க்கொண்டே இருக்கிறது. டென்னிஸ் காதலர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய நூல்.
ஸ்பியர் வெளியீடு 
விலை : நானூறு 
பக்கங்கள் : 304