அனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்புகள் நாட்குறிப்புகள் என்பவை கூட சுவையான ஒரு ஆவணமாக,வரலாற்றை அறிந்து கொள்ள முக்கியமான ஆவணமாக ஆகக்கூடும் என்பதை உறுதி செய்பவை. பிரெஞ்சுக்காரர்கள் புதுவையை ஆண்ட காலத்தில் இவரின் மாமா நைனியாப்பிள்ளை அவர்களிடம் துபாஷாக இருந்தார். பெரம்பலூரில் இவர் பிறந்தார். இவரின் அப்பாவை மாமா புதுச்சேரிக்கு அழைக்கவே குடும்பம் அங்கே பெயர்ந்தது. அங்கே சிறிய அளவில் ஆனந்தரங்கம் பிள்ளையின் அப்பா வியாபாரம் செய்து கொண்டிருந்தார். நைனியா\ப்பிள்ளை அப்பொழுதைய கவர்னர் எபேருக்கு லஞ்சம் தர மறுத்து அவரை பதவி நீக்கம் செய்ய காரணமானார். கவர்னரின் மகன் இளைய எபேர் கவர்னரானதும் நைனியாப்பிள்ளை மீது பொய்யான குற்றச்சாட்டுகளை உள்ளாகி சவுக்கடி வழங்கப்பட்ட பொழுது அந்த அடி தாங்காமல் அங்கேயே இறந்து போனார். அவருக்கு நியாயம் தேடி அவரின் மகன் குருவப்பா பிரான்ஸ் தேசத்தில் அலைந்து நீதி பெற்றார்
. இந்தக்காலத்தில் அனந்தரங்கம் பிள்ளை பாக்கு வியாபாரத்தில் இருந்து தன்னுடைய தொழிலை விஸ்தரித்து கொண்டு போனார். சாராய ஆலை, நீலத்துணி ஏற்றுமதி என்று அவரின் தொழில்கள் நீண்டன. ஆனந்தப்புரவி என்கிற பெயரில் பெரிய கப்பலை சொந்தமாக வைத்து வியாபாரம் செய்கிற அளவுக்கு அவர் வளம் மிக்கவராக இருந்தார். இவருக்கு முன்னரே இவரின் மாமா குருவப்பா குறிப்புகள் எழுதி வைத்திருந்தாலும் அவை கிடைக்காமல் போனதால் இவரின் குறிப்புகளே பிரெஞ்சு ஆட்சியை அறிந்து கொள்ள பயன்படும் மிக முக்கிய குறிப்புகளாக திகழ்கின்றன. இருபத்தி ஐந்து ஆண்டுகள் எழுதப்பட்ட அந்த குறிப்புகளில் பல்வேறு தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.
1743 ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்தை தன்னுடைய டைரியில் பதிவு செய்கிறார் பிள்ளை. இருண்ட அறைக்குள்,திடகாத்திரமான இளைஞர்கள் அழைத்து செல்லப்பட்டு மொட்டையடிக்கப்பட்ட அடிமை வேலை செய்வதற்காக மொரிஷியஸ்,பிரெஞ்சு கயானா முதலிய பகுதிகளுக்கு கப்பலில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டார்கள் என்று நேர்மையாக பதிகிறார்.
கடலோரம் போய் காலைக்கடன் போகக்கூடாது என்று கவர்னர் போட்ட உத்தரவு,எப்பொழுதும் மதுவுக்கு தடை என்பதையே அறியாத மிதத்தல் மாநிலமான புதுவையில் மராத்தியர் தாக்குதலின் பொழுது ஆறு மாதம் மட்டும் விதிக்கப்பட்ட மதுவிலக்கு,சாந்தா சாகிபுக்கு அடைக்கலம் தந்திருந்த கவர்னர் துய்மாவை மிரட்டி தூதுவரை அனுப்பி ஆறு கோடி கப்பம் கேட்ட மராத்திய தளபதி ரகுஜி நாற்பது பாட்டில் பிரெஞ்சு மதுவோடு காதலியின் மது மோகத்தால் சமாதானம் ஆகிக்கொண்ட கதை நம்ப முடியாததாக இருக்கலாம். துப்ளேக்ஸ் புதுவையை ஆண்ட காலத்தில் பிள்ளை தலைமை துபாஷ் ஆக இவரிடமே லஞ்சம் கேட்ட அவரின் மனைவி ழானின் ஊழல் முகம் என்று பலவும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதே ழான் இடங்கை எனப்படும் இழிவாக நடத்தப்பட்ட மக்களுக்கு வலங்கை பிரிவினரின் பகுதிகளுக்குள் நுழைய வசதி ஏற்படுத்தி தந்ததும் பிள்ளையால் குறிக்கப்படுகிறது.
துப்ளே இவரையே தலைமை துபாஷாக நியமிக்கிறார். ஒரு துபாஷ் மக்கள் ஒழுங்காக வரி செலுத்துவதை கண்காணிப்பது,கவர்னருடன் அதிகாரப்பூர்வ தொடர்பு கொள்ளுதல்,கிரிமினல் வழக்குகளில் தீர்ப்புகளை தீர்மானிப்பதில் ஆலோசனை வழங்குதல் என்பன மாதிரியான முக்கியமான பணிகளை செய்து வந்தார். அப்பொழுது கூடலூர் எனப்படும் கடலூரை வெள்ளையருடன் ஏற்பட்ட போரில் உடனே கைப்பற்ற வேண்டும் என்று துப்ளே துடிக்க ,”காபி சாப்பிடுகிற இடைவெளியில் கைப்பற்றக்கூடிய அளவுக்கு எளிய இலக்கில்லை அது ! என்றாலும் அங்கே இருக்கும் புனித டேவிட் கோட்டையை கைப்பற்றினால் ஆங்கிலேயரின் கப்பல்கள் நிற்க துறைமுகம் இல்லாமல் செய்து விடலாம் ! ” என்று ஆலோசனை தருகிற அளவுக்கு அவர் அதிகாரத்தின் முக்கிய புள்ளியாக இருந்தார்.
பிரான்கோயிஸ் மார்ட்டின் எனும் கவர்னரின் காலத்தில் இருந்து வேதபுரீஸ்வரர் ஆலயத்தை சம்பக்கோயில் எனும் தேவாலயத்தின் வழிபாட்டுக்கு தொல்லை தரும் வகையில் பூஜைகளின் மூலம் சப்தம் எழுப்புகிறது என்று இடிக்க சொல்லி தொடர்ந்து பாதிரியார்கள் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அதை துப்ளே
தன்னுடைய மனைவியின் மீதான ஈர்ப்பால் செய்து முடித்தார். இதுவும் இவரின் டைரிக்குறிப்புகளிலேயே காணக்கிடைக்கிறது.
1742-43 இல் சென்னையை பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி படைகள் கைப்பற்றிய பொழுது துப்ளே மகிழ்ச்சிப்பெருக்கில் துபாஷ் ஆன அனந்தரங்கம் பிள்ளையிடம் “என்ன வேண்டும் ?” என்று கேட்ட பொழுது “ஒரு காசுக்கு பன்னிரெண்டு வெற்றிலை கிடைத்தது. இப்பொழுது போர்க்காலம் என்பதால் ஆறு காசு,எட்டு காசு என்று வெற்றிலையின் விலை ஏறி மக்கள் துன்பப்படுகிறார்கள் ! குறைக்க முயலுங்கள் ” என்று கேட்கிறார். மீண்டும் இவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டதும் ,”இருவரை தவறாக கைது செய்திருக்கிறோம். அவர்களை விடுதலை செய்யலாம் கவர்னர் !” என்றே சொல்கிறார். அடுத்த முறை அழுத்தி கேட்டதும் ,”எல்லாம் வல்ல இறைவன் மற்றும் நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன குறை ?” என்று எந்த பரிசும் பெறாமல் விலகிக்கொண்டார் பிள்ளை.
இவரின் டைரி வெகுகாலம் கண்டுகொள்ளப்படாமல் இருந்து எண்பது வருட காலத்துக்கு பின்னர் பிரான்சில் பிரதி எடுத்தனர். அதன் பின்னர் ஆங்கிலேயரும் அதை மொழிபெயர்த்து வெளியிட்டனர். வ.வே.சு ஐயர் அவரின் டைரியின் சில பகுதிகளை
சித்திரகுப்தனைப் போல ஒன்று விட்டிடாமல் குறித்து வைத்த புஸ்தகமே இப்பிரதாப தினசரியாகும்” என்று குறிப்பிட்டு வெளியிட்டார். தமிழ் மொழியில் பற்றுடையவராக திகழ்ந்து தமிழிலேயே கையெழுத்திட்ட பிள்ளை தன்னுடைய நாட்குறிப்புகளை பிரெஞ்சு,உருது மொழிகளை கலந்தே எழுதினார். அவரை இந்தியாவின் சாமுவேல் பெப்பீஸ் என்று அவரின் அற்புதமான நாட்குறிப்பு பதிவுகளுக்காக அழைக்கிறோம். அவரின் பிறந்தநாள் இன்று
(இந்தக்கட்டுரையின் பெரும்பாலான பகுதிகள் பிரபஞ்சன் அவர்களின் நாவல்களான மானுடம் வெல்லும்,வானம் வசப்படும் மற்றும் பல்வேறு கட்டுரைகளை படித்ததன் தாக்கத்தில் எழுதப்பட்டது. அவருக்கு இக்கட்டுரை சமர்ப்பணம் )