ரோமாபுரி யாத்திரையும்,அழிந்த அடையாளங்களும்


ரோமாபுரி யாத்திரை என்கிற இந்திய மொழிகளில் எழுதப்பட்ட முதல் பயண விவரண நூலை யூமா வாசுகியின் தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்து முடித்தேன். ஒரு நாட்டோடு தொடர்பில்லாத மதம் அந்நாட்டிற்குள் நுழைகிற பொழுது தன்னகத்தே சில மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டும்,சிலவற்றை ஏற்க மறுத்தும் நகர்வது வரலாற்றின் பக்கங்களில் காணக்கிடைக்கிற ஒரு தொடர் நிகழ்வே. அப்படியொரு உரிமைக்கான போராட்டமாகவே ரோமாபுரி யாத்திரை நூலின் உள்ளடக்கம் அமைந்திருக்கிறது.

கிறிஸ்துவ மதம் இயேசுவின் காலத்துக்கு பின் கடுமையான அடக்குமுறையை ஆரம்ப காலங்களில் சந்தித்தாலும் ரோம் பேரரசின் அதிகாரப்பூர்வ மதமாக அது மாறியதும் வேகமாக பரவ ஆரம்பித்தது. அப்படி இந்தியாவிற்குள் தாமஸ் என்று அறியப்பட்ட தோமா அவர்களின் மூலம் கிறிஸ்துவம் நுழைந்தது. பெர்சியா சபையை அவர் உருவாக்கினார். அதன் கீழே கேரளாவின் கிறிஸ்துவ தேவலாயங்கள் வந்தன. போப்பின் அதிகாரம் பெரிய அளவில் கேரளாவில் நுழையாமலே இருந்தது. மறுமலர்ச்சி காலத்தில் போப்பின் அதிகாரங்கள் சுருங்கிப்போய் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் வலிமை பெற்றன. போர்த்துகீசியர்கள் பின்னர் கேரளாவுக்குள் நுழைந்த பொழுது அங்கே ஆயரை நியமிக்கும் உரிமை போர்த்துகீசிய அரசர் வசம் வந்து சேர்ந்தது. இது போப்பால் அரசருக்கு தரப்பட்டது. இதற்கு பெயர் பத்ருவாதோ ஆட்சி முறை. 

தனித்தனியாக சுதந்திரமாக இயங்கிக்கொண்டு இருந்த கேரளா கிறிஸ்துவ பீடங்கள் அனைத்தையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போர்த்துகீசிய அரசு முயன்றது. உதயம் பேரூர் என்கிற இடத்தில் கூடிய கூட்டத்தில் கிறிஸ்துவ மத பீடங்கள அனைத்தும் பத்ருவாதோ ஆட்சி முறைக்கு கீழே வருவதாக முடிவெடுத்தது. இதையடுத்து தங்களின் விடுதலை பறிபோவதை கண்ட கேரள கிறிஸ்துவர்கள் பெர்சிய சபையோடு தொடர்பு கொள்ள முயன்றார்கள். அப்படி கப்பலில் வந்த பெர்சிய ஆயர்களை கப்பலை விட்டு இறங்கவே விடாமல் போர்ச்சுகல் படைகள் திருப்பி அனுப்பின.இனிமேல் போர்ச்சுகல் அரசின் ஆளுகைக்கு கீழே இருக்க மாட்டோம் என்று மட்டாஞ்சேரி என்கிற இடத்தில் தேவலாயங்கள் சத்தியம் செய்தன. அதுவே கூனன் குரிசு சத்தியம். 

அதையடுத்து மார் தோமா என்கிற சமூகத்தலைவரை கேரள கிறிஸ்துவர்களின் தலைவராக பாதிரியார்கள் பன்னிரண்டு பேர் வழக்கத்தை மீறி திருமுழுக்காட்டினார்கள். ரோம் விகாரி அப்போஸ்த்லிக்கா என்கிற பதவியை உருவாக்கி செபஸ்டியான் என்பவரை அனுப்பி வைத்தது. செபஸ்டியான் தனித்து இயங்கிக்கொண்டு இருந்த கேரள கிறிஸ்துவர்களை பிளவுபடுத்த அவர்களில் ஒருவரான சாண்டி என்பவரை ஆயராக நியமித்தார். இதற்குள் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் வலிமை இழந்திருந்தார்கள். 

சாண்டி ஆயரின் கீழ் ப்ரோபோகந்தா சபையில் இணைந்த கிறிஸ்துவர்கள் மேலும் அடிமைத்தனத்துக்குள் விழுந்தார்கள். இந்த பிளவை சரி செய்யவும்,மார் தோமாவை அதிகாரப்பூர்வ தலைவர் ஆக்க கரியாட்டி மல்பானும்,பாரேம்மாக்கல் கோவர்ணோதோர் இருவரும் ரோம் நோக்கி பயணப்பட்டார்கள். கூனன் சத்தியம் செய்தவர்களையும் ரோம சபையின் பால் கொண்டு வந்து கூடுதல் சக்தி பெறவும்,தங்களின் பேராயரை தங்களுக்குள்ளே தேர்ந்தெடுக்கும் உரிமை பெறவும் பல மாதம் கப்பற்பயணத்தை மேற்கொண்டார்கள் அவர்கள். அதை பாரேம்மாக்கல் மொழியில் விவரிப்பதே ரோமாபுரி யாத்திரை. 

சர்ச்சுகளுக்கு இடையே ஆன அதிகாரப்போட்டியில் ஒரு பாதிரியார் அடித்து துன்புறுத்தப்படுவதும்,தங்களுக்குள் உண்டாகும் சிக்கல்களில் இன்னொரு பாதிரியார் உணவே தரப்படாமல் கொல்லப்பட்டு பாயில் சுற்றி புதைக்கப்படுவதும் அதிர்ச்சியாக இருக்கலாம். தங்களை தாங்களே நிர்வகித்து கொள்ள வேண்டும்,கோவாவை தலைமை சர்ச்சாக கொண்டு தங்களால் அடிமைப்பட்டு இருக்க முடியாது என்று அழுத்தி சொல்வதாகட்டும்,கன்னடிய ஆயரின் கீழேயும் நாங்கள் இறை ஊழியம் செய்ய மாட்டோம் என்று நிற்பதாகட்டும் தாங்கள் செய்ய வேண்டி வந்த காரியத்தில் உறுதியாக நிற்கிறார்கள் இருவரும். 

வெளிநாட்டு பயணத்தின் பொழுது வறண்ட நிலத்தை உழைப்பால் வளமான பகுதியாக அப்பகுதி மக்கள் ஆக்கியிருப்பதை குறிக்கும் ஆசிரியர் அப்படி சோம்பலை விட்டு மலையாளிகள் உழைத்து மண்ணை முன்னேற்ற வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார். 
நகர்களைப்பற்றிய விவரணைகள்,ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவில் வரும் மீள்பார்வை ஆகியன அற்புதமான அனுபவத்தை தருகின்றன. ஆங்காங்கே தகவல்களை சுவாரசியமாக பதிவு செய்கிறார் ஆசிரியர். உதராணமாக வெளியில் இருந்து வந்தபடியால் வேறொரு கப்பலில் தனித்து வைக்கப்பட்டு சில நாட்கள் கழித்தே அனுமதிக்கப்படும் அனுபவம் நிகழ்ந்ததை சொல்லிவிட்டு பொதுவாக நாற்பது நாட்கள் இப்படி தனித்து வைத்திருப்பார்கள். அதனாலே அதற்கு QUARANTINE என்று பெயர் எனப்பதிகிறார். 

மத பீடங்களின் தலைமையும் உடன் சார்ந்து அதிகார ருசி அனுபவிப்பவர்களும் வீணான ஆடம்பரத்திலும் போலித்தன்மையிலும் அமிழ்ந்து கிடப்பதை ஆங்காங்கே இயல்பாக வெளிப்படும் ஆதங்கத்தின் மூலம் வெளிப்படுத்தி விடுகிறார். ஜாதி பாகுபாடுகள் இருக்கிறது என்று கிறிஸ்துவ மதத்தை தழுவினால் அங்கேயும் முண்டக்காரர்கள் என்றும்,சட்டைக்காரர்கள் என்றும் மக்களை பிரித்து பார்க்கும் பிரிவுகளை உண்டாக்கிய கொச்சி ஆயரை சாடுகிற எழுபத்தி இரண்டாவது அதிகாரம் மதங்கள் மாறினாலும் வேற்றுமைகள் தீருவதில்லை என்று எண்ண வைக்கிறது.

பற்பல நோய்களை குணப்படுத்தும் இந்திய குளிகைகளை ஆவலோடு ஜெனோவாவில் ஒரு சீமாட்டி கேட்கிற பொழுது இழந்த மருத்துவ முறைகளின் நினைவு வராமல் இல்லை. கப்பலில் பயணம் போகிற தருணங்களில் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து தப்பிக்கிற பொழுதெல்லாம் இறையின் கருணையை மெச்சும் புள்ளிகளிலும்,எழுபத்தி இரண்டாவது அத்தியாயத்தில் கொச்சி ஆயருக்கு எழுதப்பட்டு இருக்கும் கடிதத்திலும் ஆசிரியரின் பைபிள் மற்றும் இயேசு மீதான இணையற்ற நம்பிக்கை ஆழமாக வெளிப்படுகிறது. 
போப்பை சந்தித்து பேராயர் தோமாவை நியமிக்க அனுமதி பெற முயல்கிற தருணங்களில் எல்லாம் தூய்மையை,நேர்மையான வாழ்வை வலியுறுத்தும் பாதிரியார்கள் எப்படி கபடம் பூண்டு காரியத்தை அழிக்க முயல்கிறார்கள் என்பதை விவரிக்கிற பொழுது நமக்கும் சேர்ந்தே கோபம் வருகிறது. 

“நாங்கள் கோவாவின் சர்ச்சின் ஆளுகைக்கு கீழே வரமாட்டோம். ரோம் சபை எழுவதற்கு முன்பே தனித்து இயங்கியவர்கள் நாங்கள் ! கோவா சபை முதன்மையானது என்று வேண்டுமானால் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் அவர்களுக்கு அடிமைப்பட்டவர்கள் இல்லை !” என்று இருவரும் அழுத்தி போர்த்துகீசிய அரசிடம் பதிவு செய்கிற பொழுது சுதந்திர வேட்கையே கொப்பளிக்கிறது. 
என்றாலும், போர்த்துகீசிய ராணிக்கு கொடுத்த கடிதத்தில் ,”கேரள சபையை நிர்வகிக்க போர்த்துக்கீசிய ஆயர் மற்றும் விகாருக்கு ராணியிடம் இருந்தே சம்பளம் கேட்பதை சாமர்த்தியம் என்று மெச்ச முடியவில்லை. 

என்றாலும் பேராயர் உரிமையை தங்களுக்கு பெற்றுக்கொண்டு பல்வேறு தடைகளைத்தாண்டி இரண்டு ஆண்டுக்கும் மேற்பட்ட போராட்டங்களுக்கு பின்னர் இந்தியா வருகிறார்கள். கோவாவுக்கு வரச்சொல்லி உத்தரவு வர அங்கே சென்ற பேராயர் மாங்காய் தின்று சுரம் கண்டு இறந்து போனதாகவும் அவருக்கு தரப்பட்ட மாத்திரைகள் அவரின் சுரத்துக்கு ஆனவை இல்லை என்றும் பிற்கால குறிப்புகள் சொல்கின்றன. பாரேம்மாக்கல் தன்னை கவர்னராக நியமித்த ஆணையை பேராயரின் படுக்கையில் இருந்து எடுத்துக்கொண்டு நகர்வதோடு நூல் முடிகிறது. 
அவர்களுக்கு பிறகு ரோம திருச்சபையின் மைய கட்டுப்பாட்டுக்குள் கேரள கிறிஸ்துவ தேவலாயங்கள் போய் சேர்ந்தன. பேராயரை நியமிக்கும் போர்ச்சுகலின் உரிமையும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் போப் வசம் போய் சேர்ந்தது. 

மென்மையாக பக்குவமாக உறுதியாக இருந்து காரியம் சாதிக்கும் விவேகம்,தங்களை தாங்களே நிர்வகிக்க வேண்டும் என்கிற பற்று,சுய மரியாதைக்காக உயிரை பணயம் வைத்து மேற்கொண்ட ஒரு பெரும் பயணம்,இறுதியில் சதியால் போகும் பேராயரின் உயிர் என்று காவியத்துக்கான பல்வேறு பண்புகள் கொண்ட இந்த நூல் மத பீடங்களின் அதிகாரப்போட்டியையும்,கேரளத்தில் கிறிஸ்துவத்தின் வரலாற்றையும் ஒருங்கே படம் பிடிக்கிறது. பிற்சேர்க்கையில் இருக்கும் பதங்களுக்கான அர்த்தத்தை ஆரம்பகட்டத்தில் வாசிப்பது நல்லது. 

நூலின் ஆரம்ப அத்தியாயங்களை பொறுமையாக கடந்து வந்தால் அற்புதமான வாசிப்பை நூல் பரிசளிக்கும். ரோமாபுரி யாத்திரை 
மூலம் : பாரேம்மாக்கல் கோவர்ணோதோர் 
தமிழில் : யூமா வாசுகி 
சந்தியா பதிப்பகம் 
விலை : 380
பக்கங்கள் : 448

பெனிசிலின் தந்த பிளெமிங்


எண்ணற்ற மக்களின் உயிர் காக்கும் பெனிசிலினை கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங். ஸ்காட்லாந்தில் பிறந்த இவர் இளம் வயதில் தன் தந்தையை இழந்தார். அதன் பின்னர் வறுமையான சூழலிலேயே படித்து வந்தார். போலோ மற்றும் நீச்சலில் அளவில்லாத ஆர்வம் கொண்டவர் இவர். ஒருநாள் நீர்நிலையில் ஒரு சிறுவன் தத்தளிப்பதை பார்த்து உதவினார் இவர், அந்த சிறுவன் பிரபு வீடு பிள்ளை. அவரின் அப்பா பிளெமிங்கின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்டார். அந்த தத்தளித்த சிறுவன் வருங்காலத்தில் பிரிட்டனின் பிரதமர் ஆன சர்ச்சில் !

பாலிடெக்னிக் படித்துவிட்டு புனித மேரி மருத்துவப்பள்ளியில் மருத்துவ படிப்பை மேற்கொண்ட பின்னர் ஆல்மோத் ரைட் எனும் நுண்ணுயிரி ஆய்வாளரிடம் வேலைக்கு சேர்ந்தார். அங்கே டைபாய்ட் நோய்க்கு தடுப்பூசி போடும் முறையை கண்டறிந்தார். பின் தன் துறை சார்ந்தே பேராசிரியர் ஆனார். லைசோசோம் நோய்களை தடுப்பதையும்,நோய் எதிர்ப்புக்கும் வெள்ளை அணுக்களுக்கு அதில் உள்ள பங்கு பற்றியும் விவரித்தார். 

ஸ்டைபாலோ காகஸ் பாக்டீரியா இருந்த ஒரு தட்டை மூடாமல் அப்படியே திறந்துவிட்டு நகர்ந்துவிட்டார் இவரின் உதவியாளர். அடுத்த நாள் காலையில் அப்படியே திறந்து கிடப்பதை கண்டு உதவியாளரை கடிந்து கொண்டார். அவர் அதை கொட்ட எடுத்துக்கொண்டு போன பொழுது அவசரப்படாமல் அந்த தட்டை வாங்கி நுண்ணோக்கியில் வைத்து பார்த்தார். 

நீல நிறத்தில் எதோ ஒன்று பாக்டீரியவை தின்று தீர்த்து இருந்தது. அந்த நீல நிற பூஞ்சை தான் பெனிசிலின் எனும் அற்புதம். உலகின் முதல் ஆண்டி பயாடிக் கண்டறியப்பட்டது. அந்த பூஞ்சையின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும் வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார்நிமோனியா,தொண்டை அடைப்பான் முதலிய நோய்களுக்கு தீர்வு தருகிற அற்புதத்தை பென்சிலின் செய்கிறது. பதினான்கு வருடங்கள் கழித்து அதை பெரிய அளவில் உற்பத்தி செய்யும் முறையை வேறிரு அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தார்கள். மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அலெக்சாண்டர் பிளெமிங் நினைவு நாள் இன்று

தலித்துகளின் போலிக்காவலரான இந்துத்வம்


Fascinating Hindutva நூலை வாசித்து முடித்தேன். எந்த இந்து மதத்தினுள் தலித்துகள் ஒடுக்கப்பட்டும்,பல்வேறு அடக்குமுறைகளுக்கும் உள்ளானார்களோ அதே இந்து மதத்தின் அடையாளங்கள் நீங்கள்,அதன் பாதுகாவலர்களே தாங்கள் தான் என்று சொல்லி அவர்களின் ஓட்டுக்களை கவர பி.ஜே.பி. நடத்தும் சாமர்த்திய அரசியலை கள ஆய்வு,நேர்முகங்கள்,அவர்களின் தேர்தல் பிராசார யுக்திகள் ஆகியவற்றின் மூலம் அற்புதமாக இந்நூல் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

90 களின் ஆரம்பத்தில் ராமரை முன்னிறுத்தி தன்னுடைய தேர்தல் அரசியலை பி.ஜே.பி. கட்டமைத்தது. அப்பொழுது தொலைக்காட்சியில் ஓடிய ராமாயணம் சீரியல் பெரிய உத்வேகத்தை அந்த அரசியலுக்கு தந்தது. அப்பொழுது ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் உயர் ஜாதியினர் இணைந்து கிச்சடி சாப்பிடும் நிகழ்வுகள்,அவர்களுக்கென்று சிறப்பு பள்ளிகள் என்று அவர்களை தங்களோடு இணைக்கும் முயற்சிகளை பி.ஜே.பி. செய்தது. ஆனால்,ஆதிக்க ஜாதியினர் அவர்களை தங்களோடு இணைத்து கொள்ள மனம் ஒப்பாதது மற்றும் ராம ஜென்ம பூமி அரசியலின் நீர்ப்பு ஆகியன பி.ஜே.பி.யின் பாணியை மாற்றிக்கொள்ள வைத்தது. 

மாயாவதி செருப்பால் பிராமணர்களை அடிப்போம் என்று சொல்லி அரசியல் செய்து கொண்டிருந்ததை விடுத்து,அவர்கள் நம்மை முன்னடத்தி செல்லும் யானைகள் போன்றவர்கள் என்று தன்னுடைய அரசியல் அமைப்புக்குள் அவர்களை இணைத்து கொண்டார். பி.ஜே.பி. உள்ளுக்குள் வாருங்கள் என்றது எடுபடாமல் போகவே ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய ஆரம்பித்தது. பழங்காலத்தில் இந்து மதத்தை காக்கவும்,இந்தியாவை தாக்கிய இஸ்லாமியர்களை எதிர்த்து போரிடுகிற வேலையையும் செய்தவர்கள் நீங்களே ! என்று ஆங்காங்கே கொட்டிக்கிடக்கும் கதைப்பாடல்கள் மூலமும்,வரலாற்றை திரித்தலின் மூலமும் அரசியல் செய்ய ஆரம்பித்தது. 

இஸ்லாமிய அரசர்கள் மற்றும் தலித்துகள் சில புள்ளிகளில் சண்டையிட வேண்டிய சூழல் இருந்திருந்தாலும் பெரும்பாலும் அமைதயாகவே அவர்களுக்கிடையே ஆன வாழ்க்கை இருந்திருக்கிறது. அதை குலைக்கும் வகையில் விஷம பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன. ராஜ ஹரி சந்திராவின் நாடகத்தோடு லைலா மஜ்னு நாடகமும்,ஷிரி பர்ஹத் நடந்து கொண்டிருந்த ஊர்களில் அவையெல்லாம் இஸ்லாமிய நாடகங்கள் என்று அவ்வூர் ஆர்.எஸ்.எஸ். தலைகள் நோ சொல்லிவிட்டார்கள். 

சுகல்தேவ் என்கிற அரசன் கொள்ளைக்காரனாகவும் அவனிடம் இருந்து மக்களை காப்பற்றியவரான காஜி மியானை வில்லன் போல சித்தரித்து சுகல்தேவை நாயகன் ஆக்கி மக்களை ஏமாற்றுகிற வேலையை செய்வதோடு நில்லாமல் காஜி மியான் தர்காவுக்கு தொழுநோய் குணமாகிறது என்று போய்க்கொண்டு இருந்த இந்துக்களையும் தடுத்து நிறுத்தும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அனுமானை வணங்கிவிட்டே மல்யுத்தம் சொல்லித்தருகிற பண்பை இஸ்லாமிய மற்றும் இந்து மல்யுத்த வீரர்கள் வைத்திருப்பதை மறைத்து அனுமன் மற்றும் வானர சேனைகள் தலித்துகள் தான் ! அவர்கள் மூலமே ராமன் வென்றான் என்றொரு கதை ஒரு பக்கம் என்றால்,நிஷாத் வகுப்பை சேர்ந்த குகன்,கட்டைவிரல் கொடுத்த ஏகலைவன் மகாபாரதம் இயற்றிய வியாசர்,ராமாயணம் எழுதிய வால்மீகி,ஐம்பதாயிரம் முஷாகர்கள் இருக்கும் வகுப்பை சேர்ந்ததாக சொல்லப்படும் சபரி ஆகிய அனைவரும் இந்து மதத்தை காத்த தலித்துகள். ஆகவே,நீங்கள் எங்களுடன் இணைந்து விடுங்கள் என்று தொடர்ந்து பிரசாரம் செய்கிறார்கள். 

அம்பேத்கரை நவீன மனு என்று புகழ்ந்து அவர் எதிர்த்த இந்துத்வத்துக்குள் அவரையும் இணைத்ததோடு நில்லாமல்,பிராம்மணியத்தை தீவிரமாக எதிர்த்த புலே உங்களை மதம் மாற சொல்லவில்லை என்பதிலேயே அவரும் இந்து மதக்காவலர் என்று உணர்ந்து கொள்ளுங்கள் என்பதாகட்டும்,புத்தர் மகா விஷ்ணுவின் அவதாரம் எதற்கு மதம் மாறிக்கொண்டு என்றும் பரப்புரைகள் நிகழ்கிறது. மதம் மாறினால் இட ஒதுக்கீடு தராதீர்கள் என்று அத்வானி முழங்குவதை இந்த பின்னணியோடு இணைத்தே பார்க்க வேண்டும். 

தலித்துகள் என்கிற பதத்தையே உபயோகிக்க பெரும்பாலும் மறுக்கிற இந்த காவி நபர்கள் இஸ்லாமியர்கள் வஞ்சித்த மக்கள் தலித்துகள் என்கிற அர்த்தத்தில் வஞ்சித்கள் என்கிற பதத்தை உபயோகப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் போகிற பொழுது அந்தந்த பகுதி ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாக இருக்கும் புராண கதாபாத்திரத்தை இந்து மதத்தின் காவலர் என்று சொல்லி ஓட்டுக்களை கவர முயற்சிக்கிற அரசியல் பாணி இன்னமும் தொடர்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களை மைய சமூக நீரோட்டத்தில் இணைக்க முயற்சிகள் எடுக்காமல் அவர்களுக்கும்,இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரச்சனைகளை தூண்டிவிட்டு ஓட்டுக்களை அறுவடை செய்யப்பார்க்கும் இந்துத்வாவின் தமிழக முகங்களும் அதையே செய்வதை நீங்கள் கவனிக்கலாம். அவசியம் படிக்க வேண்டிய சிறிய நூல் 

ஆசிரியர் : பத்ரி நாராயண் 
sage வெளியீடு 
பக்கங்கள் : 216 
விலை : 425

விலங்குப்பண்ணை-நூல் அறிமுகம்


Animal Farm நூலை இளம் வயதில் படித்திருந்தாலும் தற்போது மீள்வாசிப்பு செய்த பொழுது வேறொரு அனுபவமாக இருந்தது. George Orwell உன்னதமான நோக்கங்களோடு துவங்குகிற எல்லா புரட்சியும் காலப்போக்கில் எப்படி அதிகார போதையால் அழிந்து போகிறது என்பதை துல்லியமாக நாவலில் படம்பிடிக்கிறார். 

விலங்குப்பண்ணையின் முதலாளி ஒரு நாள் குடித்துவிட்டு தூங்கிப்போய் விட ஒழுங்காக விலங்குகளுக்கு உணவு கிடைக்காமல் போகவே அதை எதிர்த்து பன்றிகள் தலைமையில் புரட்சி நடைபெறுகிறது. எல்லாரும் இணைந்து உழைத்து பண்ணையில் வேலை செய்கிறார்கள். மனிதர்கள் நம்மை சுரண்டுகிறார்கள்,அவர்கள் இல்லாமல் நாமே நமக்கானதை உற்பத்தி செய்வோம் என்று உறுதி பூணுகிறார்கள். மகிழ்வாக எல்லாம் போய்க்கொண்டு இருந்த பொழுது பண்ணையின் சொந்தக்காரர் மீண்டும் தாக்க வருகிற பொழுது ஸ்னோபால் மற்றும் நெப்போலியன் என்றும் இரு பன்றிகள் வீரம் காட்டி வெல்கிறார்கள். ஸ்னோபால் இதில் அதீத வீரம் காட்ட இன்னொரு தலைவரான நெப்போலியனுக்கு அச்சம் பிறக்கிறது. சத்தமே இல்லாமல் நாய்களை வளர்த்து ஸ்னோபாலை துரத்தி விடுகிறது . 

எல்லாரும் இணைந்து முடிவுகள் எடுத்துக்கொண்டு இருந்தது மாறி வெகு சிலர் மட்டுமே முடிவுகள் எடுப்பார்கள் என்று மாறுகிறது. எல்லாரும் சமம் என்று சொன்னாலும் உணவுப்பொருட்களை அதிகப்பங்கும்,சொகுசான வசதிகளையும் தங்களுக்கு ஏற்படுத்திக்கொண்டு பன்றிகள் நகர்வது இயல்பாக நிகழ்கிறது. பலபேர் புரட்சிகர அரசை கவிழ்க்க பார்க்கிறார்கள் என்றும் அவர்கள் ஸ்னோபாலின் கையாட்கள் என்றும் சொல்லி கொல்லப்படுகிறார்கள். வெகுகாலம் பண்ணைக்கு உழைத்த பாக்சர் எனும் குதிரை ஒரு விஸ்கிக்காக விற்கப்படுகிறது. முதலில் எழுதப்பட்ட சுதந்திர கீதம் நெப்போலியனை போற்றி மாற்றி பாடப்படுகிறது. அச்சத்திலும்,அலங்கோலத்திலும் விலங்குப்பண்ணை இருப்பதை பார்த்தும் ஏதும் செய்ய முடியாமல் விலங்குகள் இருக்கின்றன. 

எல்லாரும் சமம் என்று சொல்லி எழுதப்பட்ட ஏழு ஆரம்ப கட்டளைகள் மாற்றப்பட்டு “எல்லாரும் சமம்,அதில் சிலர் கூடுதலாக சமமானவர்கள் !” என்று அறிவிக்கப்பட்டு பன்றிகள் ஆதிக்கம் நிறைகிறது. பசியும்,பஞ்சமும்,மின்சாரம் தயாரிக்க உருவாகும் காற்றலைக்கு சுரண்டப்படும் உழைப்பும் பண்ணையை நிறைக்கிறது. விலங்குப்பண்ணை பன்றிகளின் பண்ணையாக மாறுகிறது. பன்றிகள் மனிதர்களைப் போல மாறி ஆதிக்கம் செலுத்துகிறார்கள்,அவர்களின் கையில் சாட்டையோடு வலம் வருகிறார்கள். பெருங்கனவோடு ஆரம்பித்த புரட்சி சிலரின் அதிகார சுகத்துக்கான வடிகாலாக போவதோடு நாவல் முடிகிறது. கம்யூனிசத்தின் மீதான விமர்சனமாக நூலின் அங்கத நடை இருந்தாலும் எல்லா அதிகாரங்களை நோக்கி நகரும் புரட்சிகளுக்கும் இது பொருந்தும் என்றே சொல்லத்தோன்றுகிறது 

வரிசை மாறிய நாடக வழக்குகள்


அடித்து விட்டு நாமே 
அழுவோம் ; 
காயங்கள் தந்துவிட்டு 
மருந்தை நாம் மட்டும் பூசிக்கொள்வோம் ;
போர்கள் செய்து பிணங்கள் நிறையவிட்டு 
சமாதானம் சொல்லி சிரிப்போம் ; 
வக்கிரங்கள் தேக்கி நின்று 
வடிந்துவிட்டது அன்பு என்று அரற்றிடுவோம் ;
நியாயங்கள் தேடிப்புதைத்து விட்டு 
அதன் கல்லறையில் பாவப்பூக்கள் தெளித்து 
கண்ணீர் விடுவோம் ;
நீர்வெளிகளை தின்று தீர்த்துவிட்டு 
நினைவஞ்சலி மெழுகுவர்த்தி ஏந்தி கண்மூடி ஜெபிப்போம் ;
காலங்கள்தோறும் நடக்கிறது நாடகங்கள் 
எதுவும் மாறவில்லை,

கம்யூனிசம் தந்த காரல் மார்க்ஸ்


மனிதகுலத்தை உய்விக்கும் சிந்தனை எழுச்சியை தந்த கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் நாளை .உலகின் தலைசிறந்த காதல்,நட்பு ,சித்தாந்தம் எல்லாம் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால் மார்க்ஸுக்கு தான் அப்பெருமை .
போராட்டம்,வறுமை,வலிகள்,பசி இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறைந்திருந்த பொழுது எளியவர்களும்,பாட்டாளிகளும் எப்படி துன்பத்தில்
இருந்து விடுதலை பெறுவது என ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் அவர்


ஜெர்மனியில் மே – 5 -1818 இல் பிறந்த மார்க்ஸுக்கு அவரின் அப்பா எல்லையற்ற சுதந்திரம் தந்தார் ;மகனின் போக்கிலேயே இருக்க விட்டார் . மார்க்ஸ் இறக்கும் வரை அப்பாவின் புகைப்படம் சட்டைப்பையில் இருக்கிற
அளவுக்கு இருவருக்குமான பந்தம் உறுதியானது .

தத்துவஞானி ஹெகலை ஆதரித்த குழுவில் தன்னையும் இணைத்துக்கொண்ட மார்க்ஸ் மதத்தை மறுத்தார் ;மதம் என்பது மனிதத்தன்மை அற்றது,அது போதைப்பொருளை
போன்றது என கடுமையான விமர்சனங்களை வைத்தார் ஷேக்ஸ்பியர் கதே என எண்ணற்ற இலக்கிய ஆளுமைகளின் எழுத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்த அண்டை வீட்டு
நண்பரிடம் அடிக்கடி உரையாடும் பொழுது தான் அவரை விட ஏழு வயது முதிர்ந்த ஜென்னியிடம் காதல் பூத்தது .

கரடுமுரடான சுபாவம் கொண்ட,ஏழ்மையில் உழன்ற மார்க்ஸை செல்வ வளம் மிகுந்த குடும்பத்தின் நங்கையான ஜென்னி மனதார நேசித்தார் .அவர்களின் காதல் பல
வருடங்கள் காத்திருப்புக்கு பின் கனிந்தது -அப்பொழுது தான் மார்க்ஸ் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியிருந்தார்;அவரின் எழுத்துகள் பாட்டாளிகள்
எப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுபடுத்தின .எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது என்பதையும் விளக்கினார் .எல்லாவித
அடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய ஒன்று சேர வேண்டும் என அவரின் எழுத்துகளின் மூலம் உத்வேகப்படுத்தினார் .

பிரஷ்ய அரசு நாடு கடத்தியது ;இவரின் சிந்தனை வேகத்தை பார்த்து பிரான்ஸ் அரசு ஒரு நாளுக்குள் வெளியேற வேண்டும் என்றது . பெல்ஜியத்தில் போய் குடியேறினார் மார்க்ஸ் .நிலைமை இன்னமும் மோசம் ;எல்லா இடங்களுக்கும் ஜென்னி புன்னகை மாறாமல் உடன் வந்தார் .

ஒரு முறை விபசார விடுதியில் ஒரு நள்ளிரவு முழுக்க சந்தேகப்பட்டு போலிஸ் அடைத்துவைத்த பொழுது கூட சின்ன முகச்சுளிப்பை கூட மார்க்ஸை நோக்கி
காட்டாத மங்கை அவர் .எங்கெல்ஸை ஏற்கனவே ஒரு முறை சந்தித்திருந்த மார்க்ஸ் மீண்டுமொரு முறை சந்தித்த பொழுது எண்ணற்ற தளங்களில் தங்களின் சிந்தனை
ஒத்திருப்பதை கண்டார் .இவரை காப்பதை தன் வாழ்நாள் கடமையாக செய்தார் ஏங்கல்ஸ் .

வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிக்கொண்டே
இருந்தார் . இங்கிலாந்தின் நூலகங்களில் தவங்கிடந்து மூலதனத்தை உருவாக்கினார்கள் ;ஒரு
பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு விலை தந்தே அதை
வாங்குவீர்கள் .அந்த பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி தயாரிக்கும்
தொழிலாளிக்கு நீங்கள் கொடுக்கும் பணம் போய் சேர்கிறதா என்றால் இல்லை
-மூலதனத்தை போட்ட முதலாளி ஒட்டுமொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார்
.

அப்படியில்லாமல் மூலத்தை உழைக்கிறவனுக்கு பிரித்து தரவேண்டும் என்பதே அதன் சாரம் .உலகின் பொருளாதரத்தை பற்றி மார்க்ஸ் எழுதிய காலத்தில் வீட்டு நிலைமை ஏகத்துக்கும் மோசமானது .பிள்ளைகள் மாண்டு போனார்கள் ;”பிறந்த பொழுது உனக்கு தொட்டில் கட்ட காசில்லை ;இப்பொழுது அடக்கம் செய்ய காசில்லை
!”என ஜென்னி கண்ணீர் விடுகிற அளவுக்கு நிலைமை மோசம் ,பசியால் நொடிந்து போய் மார்பிலிருந்து ரத்தம் சொட்ட பிள்ளைக்கு பாலூட்டிய கொடுமையிலும் மார்க்ஸை அன்போடு சுருட்டு வாங்கித்தந்து காத்தார் ஜென்னி .

ஜென்னி இறந்த இரண்டு வருடங்களில் ஏற்கனவே மனதளவில் இறந்து போயிருந்த
மார்க்ஸ் மீளாத்துயில் கொண்டுவிட்டார் . காரல் மார்க்ஸ் கண்ட கனவான பாட்டாளிகளின் புரட்சி அடுத்த நூற்றாண்டில் பல நாடுகளில் காட்டாற்று வெள்ளம் போல பொங்கிப்பெருகிற்று .சூரியனின் கதிர்கள் போல உலகம் முழுக்க கம்யூனிசம் நீக்கமற மக்களின் சிந்தனையில் புகுந்தது

குருதி மனவெளியும்,க்ளிப்களின் கிழிப்பும்


விரல்முனையில் கழன்று கொள்கிறது 
மோதிரத்தோடு மரணம் ; 
பேருந்தின் சந்துகளில் உடலோடு 
உரசல் புரிய கொல்லர்கள் 
காத்திருக்கிறார்கள். 
உரசல்களில் ஒன்றும் நிகழ்வதில்லை 
என்று வீட்டின் வருங்கால விற்பனையாளர்கள் சத்தியம் செய்கையிலேயே அலுவலக கழுகுகளின் முகங்கள் 
முந்திச்சிரிக்கின்றன !

விளம்பரமாதுக்கள் போல 
மதுக்கோப்பை எந்திவரச்சொல்லி 
சிரிக்கும் சிலரின் கிழியும் கோரப்பற்களின் 
இடுக்குகளில் பூசப்பட்டு இருக்கும் 
அழகு சாதன வஸ்துக்களை வாரிச்சூடி 
நகர்வலம் போகையில் நலம் தான் நான் என்று 
நகங்கடித்து நகைக்கிறேன் !

நகரத்து தவளை ஒன்று தேங்கி நிற்கும் 
சாலைக்குழியில் குதித்து காணாமல் போகையில் 
கொஞ்சம் கண்ணீரும் சிந்திவிட்டு கடப்பதை 
யாரும் கவனிக்காத தருணத்தில் 
பாடல்களில் பாய்ந்திடும் வெம்மையை 
தலைவலி மாத்திரையோடு முழுங்கிவிட்டு 
குருதி படிந்த மனவெளி எங்கும்
பின்னந்தலை க்ளிப்பால் கிழித்துவிடுவது 
சுகமாகவே இருக்கிறது !-

அம்மாவின் கதைகள் தொலைந்த கணங்கள்


சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாமா என்று 
கேட்டவுடன் ஒப்பம் கிடைக்கிறது ;
அரைக்கோப்பை காபி அருந்தவும் 
ஒரு முறுவலில் சம்மதம் பூக்கிறது ;
மாடியின் உச்சிப்போய் விழவா 
என்கிற கணத்தில் யார் கண் வேர்த்தது 
என்று தெரியத்தான் காலங்கள் போதாமையில் 
ஊடல் செய்து பிரிந்து போகையில் 
குதறிப்போட்ட மிருகங்களின் 
ஸ்பரிசத்தை கடப்பதை விட 
சொல்லால் பெயர்த்தென்னை தூர்த்துவிடும்
சிந்தனை வெளியெங்கும் வன்புணர்வு புரியும் 
ராட்சதர்களை அம்மாவின் கதைகள் போல 
கனவுகளில் தொலைக்கத்தான் முடியவில்லை !