மார்லன் பிராண்டோ எனும் வசீகர கலைஞன்


 
Posted Date : 08:51 (03/04/2014)Last updated : 08:53 (03/04/2014)

மார்லன் பிராண்டோ

உலகம் முழுக்க எத்தனையோ கேங்க்ஸ்டர் கதைகள் வந்திருக்கலாம். அவற்றுக்கெல்லாம் முன்னோடி காட்ஃபாதர் திரைப்படம். அந்த படத்தில் நடித்த மார்லன் பிராண்டோவின் வாழ்க்கை அத்தனை அற்புதமானது. ஒரு நடிகன் என்பவன் வானத்தில் இருந்து குதித்தவன் என்பதைப்போன்ற மனோபாவமே பெரும்பாலும் கொண்டிருக்கும் நமக்கு அவரின் வாழ்க்கை ஆச்சரியங்களை அள்ளி வழங்குகிறது.  பத்தே   துளிகளில் அந்த பெருங்கடல் உங்களுக்காக :

துன்பங்கள் செதுக்கும் உன்னை !:

அம்மா நடிகை, அப்பா பல ஊர்களுக்கு சென்று பொருட்களை விற்கும் சேல்ஸ் ரெப். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிணக்குகள் ஏற்பட்டு அம்மா குடியிலேயே மூழ்கிப்போக அன்பு என்பது என்ன என்றே தெரியாமல் தான் வளர்ந்தார் மார்லான் பிராண்டோ. இருபது வயதை தொடுவதற்கு முன்னரே தீவிர நரம்பு தளர்ச்சி ஏற்பட்டது. அப்பா மிலிட்டரி ஸ்கூலில் இருந்து டிராப்பான இவரைப்பார்த்து ,”நீயெல்லாம் உருப்படவே மாட்டே !” என்று அடித்துச் சொன்னார்/ மனப்பிறழ்வுக்கு உள்ளாகி மருத்துவமனையில் கதியாக கிடந்து மீண்டு வந்தார் பிராண்டோ.

மீள்வதே வாழ்க்கை :

சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பிராண்டோ ஒரு காலத்துக்கு பிறகு ஹாலிவுட்டில் காணாமல் போனார்.  எங்கே அவர் என்றே யாருக்கும் தெரியவில்லை. ஒரு தீவில் போதும் சினிமா என்று ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார் ! கப்போலா காட்ஃபாதர் கதையோடு அவரைத்தேடி வந்தார். சுருக்கம் விழுந்து, கண்கள் ஒளி இழந்து அமர்ந்திருந்த இவர் இதற்கு சரிப்படுவாரா என்று அவருக்கு சந்தேகமே வந்து விட்டது.

கதையை அமைதியாக கேட்டுவிட்டு கதவை பிரிந்து போய் சாற்றிக்கொண்டார் பிராண்டோ. கதவுகள் திறந்த பொழுது முழு ஒப்பனையோடு ஒப்புமை இல்லாத இத்தாலி நாட்டை சேர்ந்த காட்ஃபாதர் நின்று கொண்டு இருந்தார். ஆஸ்கரில் வந்து நின்றது அந்த கம்பீரம் !

நடிகன் ஒன்றும் தேவனில்லை :

புகழின் உச்சியில் வெகுகாலம் இருந்த மார்லான் பிராண்டோ நடிகர்களை இறைவன் போல கொண்டாடுவதை வெறுத்தார். கூட்டங்கள் அவருக்கு கடுப்பைத்தந்தன.   ஒரு பாராட்டு விழாவில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு திக்கு முக்காட வைத்த பொழுது ,”கர்த்தரே ! நான் ஏன் எந்த நகரத்திற்கு வரவேண்டும் !” என்று புலம்பிய ஒரே கலைஞன் அவராகத்தான் இருக்க முடியும்

உலகம் வலிகளால் நிரம்பியது :

உலகம் முழுக்க தன்னுடைய படங்களுக்காக பயணம் போன பொழுது அவர் எப்படி கிழக்கு நாடுகள் பஞ்சத்தில் தோய்ந்து துன்பப்படுகின்றன என்பதை கண்டார். “இந்த நாடுகள் இப்படி வாடுவதற்கு நம்மைப்போன்ற மேற்குலக நாடுகளின் சுரண்டல் தான் காரணம். அதற்கு உகந்த அரசாங்கங்கள் அங்கே செயல் படுகின்றன !” என்று கச்சிதமாக அவர் குறித்தார்.

விருதெல்லாம் வீண் ! :

மார்லன் பிராண்டோவுக்கு காட் பாதர் படத்துக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்ட பொழுது அதை பெற மறுத்து லிட்டில்ஃபெதர் எனும் பெண்ணை அனுப்பி வைத்தார். அமெரிக்காவின் பூர்வகுடிகளான அமெரிக்க இந்தியர்களை திரைப்படங்களில் எதிரிகளாக,தீயவர்களாக காட்டும் போக்கை ஹாலிவுட் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய எதிர்ப்பை இவ்வாறு பதிவு செய்வதாக அவர் அறிவித்தார்.

கண்ணீர் விடலாம் கலைஞன் :

லண்டன் நகரத்துக்கு படப்பிடிப்புக்கு போனவர் அங்கே அப்பாவி கறுப்பின மக்களை கைது செய்து வைத்திருக்கும் அரசு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள் பேரணி போவதை கண்டார். அந்த மெழுகுவர்த்தி பேரணியில் தான் ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்பதை தூக்கி கிடாசிவிட்டு கலந்து கொண்டார் அவர். மார்ட்டின் லூதர் கிங் எனக்கொரு கனவு இருக்கிறது உரையை நிகழ்த்தும் பொழுது அதை கேட்க ஓடோடி வந்தவர் அவர். அவர் இறந்த பொழுது படப்பிடிப்பை எல்லாம் கேன்சல் செய்துவிட்டு மண்டியிட்டு கண்ணீர் விட்டார் அவர் !

வாசிப்பை நேசிப்பாய் நண்பா ! :

செவ்விந்திய மக்களை எப்படி கொன்றும்,குலைத்தும் அமெரிக்கா எழுந்தது என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்து பதைபதைத்து போனார் அவர். கறுப்பின மக்களின் வாழ்க்கை மற்றும் வரலாற்றை புரிந்து கொள்ளவும் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாசித்தார் அவர். தென் அமெரிக்காவில் எழுந்த போராட்டங்கள் பற்றியும் தீவிர வாசிப்பு மற்றும் பயணத்தால் தெரிந்து கொண்டு எளியவர்களுக்கு குரல் கொடுத்தார் அவர்.

சொந்த நாட்டை விமர்சிப்பதே தேசபக்தி :

காட்ஃபாதர்  படத்தின் நடிப்புக்கு கோல்டன் க்ளோப் அறிவிக்கப்பட்ட பொழுது அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் மற்றும் நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்விருதை ஏற்க மறுத்தார். அதே போல இந்தியாவின் பீகாரில்  நிலவிய கொடிய பஞ்சத்தை பற்றி படமெடுத்து அமெரிக்க மக்களுக்கு போட்டு காண்பித்து அவர்களுக்கு உதவ நிதி திரட்ட முயன்ற பொழுது அதற்கு பெருந்தடைகள் எழவே “அமெரிக்க மனம் இதர மக்களின் கண்ணீர் பற்றி கவலைப்படுவதே இல்லை !” என்று கோபத்தோடு பதிவு செய்தார் அவர்.

பணம் வாங்கத்தான் நடிக்கிறேன் நான் :

“நான் ஹாலிவுடில்  இருக்க மிகப்பெரிய காரணமெல்லாம் இல்லை. எனக்கு இங்கே தரப்படும் பணம் தான் என்னை இங்கே இருக்க வைக்கிறது ! வேறொன்றும் இல்லை !” என்று ஓபனாக பேசிய ஒரே நபர் அவராகத்தான் இருக்கவேண்டும்.

தேவை ஒரு நாயகன் :

“மக்கள் ஏதோ சில காரணங்களுக்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் யாரோ ஒருவரை கொண்டாடுகிறார்கள். உங்களை சந்திக்காமலே நீங்கள் அற்புதமானவர்கள் என்று நம்புவார்கள். அதே மக்கள் உங்களின் நிஜ வாழ்க்கையோடு சம்பந்தமே இல்லாத காரணங்களுக்காக உங்களை வெறுப்பார்கள். மக்கள் தங்களுக்கான எதிரிகளை இழக்க விரும்புவதில்லை. அவர்களுக்கு பிடித்த வில்லன்கள் தேவைப்படுகிறார்கள். வெறுப்பதை காதலிக்கவும்,காதலிப்பதை வெறுக்கவும் மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு திட்டவும்,கொண்டாடவும் ஒரு நாயகன் எப்பொழுதும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறான்” என்று அவர் சொன்னது எத்தனை உண்மையானது !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s