நேருவைப்பற்றிய ஐந்து கற்பிதங்கள் :
கற்பிதம் ஒன்று : நேரு வாரிசு அரசியலை ஆரம்பித்து வைத்தார் :
இந்த வாதத்துக்கு நேருவின் மகள் மற்றும் பேரன் இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளார்கள் என்பதும்,சோனியா காந்தி அப்பதவியை நோக்கி நகர்ந்தார் என்பதும்,அவரின் கொள்ளுப்பேரன் ராகுல் காந்தி கட்சிக்குள் சேர்ந்த பின்னர் அவரே அடுத்த வாரிசாக இருப்பார் என்று தெரிவதும் ஆதாரமாக இருக்கிறது.
உண்மையில் நேருவுக்கும்,இந்த வாரிசு அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கு தன்னுடைய மகள் இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று எந்த எண்ணமும்,ஆசையும் இல்லை என்பதே உண்மை. திருமதி.இந்திரா காந்தி அவர்கள் தான் இந்திய தேசிய காங்கிரசை குடும்ப தொழிலாக மாற்றினார். அவரே தன்னுடைய மகன் சஞ்சய் மற்றும் அவரின் மறைவுக்கு பின்னர் அவரின் சகோதரர் ராஜீவ் ஆகியோரை அரசியலுக்கு கொண்டு வந்தார்.
ஒவ்வொரு முறையும் தனக்கு பிறகு தன்னுடைய மகனே ஆட்சி மற்றும் கட்சி தலைமைப்பொறுப்புக்கு வருவார் என்று தெளிவுப்படுத்தப்பட்டது. ஆகவே நேரு-காந்தி பரம்பரையை உண்மையில் இந்திரா காந்தி பரம்பரை என்றே சொல்லவேண்டும்.
கற்பிதம் 2 : நேரு காந்தியின் வாரிசாக தகுதியற்றவர். அவர் உண்மையில் தன்னுடைய தலைவருக்கு துரோகம் செய்து விட்டார். அவரின் தலைவர் அவரை தேர்வு செய்து பெருந்தவறு செய்துவிட்டார் :
இந்த கற்பிதத்தை ராஜ்மோகன் காந்தி தன்னுடைய The Good Boatman புத்தகத்தில் ஆதாரங்களோடு கச்சிதமாக உடைத்திருக்கிறார். அந்த நூலில் பல்வேறு மாற்றுகளில் இருந்து காந்தி நேருவை தேர்வு செய்ய காரணம் அவர் தான் காந்தியின் பன்முகத்தன்மை கொண்ட எல்லாரையும் இணைத்துக்கொண்டு இயங்கும் இந்தியா என்கிற கருத்தாக்கத்தை பிரதிபலித்தார். அவருக்கு மாற்றாக கருதப்பட்ட-படேல்,ராஜாஜி,ஆசாத்,கிருபாளினி,ராஜேந்திர பிரசாத் ஆகியோர் இதற்கு மாறாக வெவ்வேறு பிரிவுகளின் நலன்கள் மற்றும் சார்பு கொண்டவர்களாக ஓரளவுக்கேனும் இருந்தார்கள். நேரு மட்டுமே முஸ்லீகள் நம்பக்கூடிய இந்துவாக, தெற்கில் மதிக்கக்கூடிய உத்திர பிரதேச வாலாவாக,பெண்கள் நேசிக்கும் ஆணாக இருந்தார். காந்தியைப் போல ஒட்டு மொத்த இந்தியாவுக்குமான தலைவராக அவர் இருந்தார்.
கற்பிதம் 3 : நேரு மற்றும் படேல் எதிரிகள் மற்றும் எதிரெதிராகவே இயங்கினார்கள் :
‘வலிமை’யான இந்தியாவுக்காக தொடர்ந்து வாதாடும் ஆட்கள் இந்த வாதத்தை தொடர்ந்து விளம்பரப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். நேரு பாகிஸ்தான்,சீனா மற்றும் சிறுபான்மையினரிடம் மென்மையாக நடந்து கொண்டார் என்றும் கூடவே படேல் ஒரு வேளை இந்தியாவின் பிரதமர் ஆகியிருந்தால் அவர் இவரை விட சிறப்பான பிரதமராக இருந்திருப்பார் என்றும் அவர்கள் இணைத்தே பேசுவார்கள்.
உண்மையில்,நேரு மற்றும் படேல் ஒரு குழுவாக அற்புதமாக இணைந்து இயங்கினார்கள். இணைந்த மற்றும் வலிமை மிகுந்த இந்தியாவை விடுதலைக்கு பின்னான உருவாக்க காலத்தில் கட்டமைத்த இணை அவர்கள். அவர்கள் பொறுமை மற்றும் கருத்தியல் ரீதியாக மாறுபட்டார்கள் என்பது உண்மையே. ஆனாலும்,இந்த வேறுபாடுகளை நகர்த்தியும்,களைந்தும் அவர்கள் தங்களின் பொதுவான நோக்கமான சுதந்திரமான,ஒற்றுமையான ,மதச்சார்பற்ற,ஜனநாயக இந்தியாவுக்காக அர்ப்பணித்து இயங்கினார்கள். படேலை விட நேரு சிறப்பாக இயங்கக்கூடிய சில விஷயங்கள் இருந்தன -மக்களிடம் நெருங்கிப்பழகுவது,உலகோடு ஒப்பிட்டுக்கொள்வது,ஆபத்தான சூழலில் இருப்பதாக உணர்ந்த குழுக்களுக்கு (இஸ்லாமியர்கள்,பழங்குடியினர் மற்றும் தலித்துகள் )மற்ற இந்தியர்களை போல சம உரிமைகளை அவர்களும் பெறுவார்கள் என்பதை உறுதி செய்வது. நேருவை விட சிறப்பாக படேல் இயங்கக்கூடிய விஷயங்களும் இருந்தன – சுதேச சமஸ்தான ஆட்சியாளர்களை எதிர்கொள்வது,காங்கிரஸ் கட்சியை வளர்த்தல்,சட்ட உருவாக்க சபையில் எதிர்ப்பாளர்களையும் இணைத்துக்கொண்டு முன்னகர்வது. இருவருக்கும் இன்னொருவரின் திறமைகள் புரிந்திருந்தன ; அதை தாங்கள் கடக்கவோ,குறுக்கிடவோ இருவரும் விரும்பவில்லை. இப்படித்தான் பிரிவினையின் இடிபாடுகளில் இருந்து வலிமையான ஒரு புதிய தேசத்தை அவர்கள் கட்டமைத்தார்கள்
இந்த கற்பிதங்களுக்கு நேருவின் வரிகளிலேயே மிகச்சிறந்த விடை கிடைக்கிறது . காந்தியின் மறைவுக்கு பிறகு நேரு படேலுக்கு இப்படி கடிதம் எழுதினார்,”நம்முடைய பழைய முரண்பாடுகள் இன்றோடு முக்கியத்துவம் இழக்கின்றன. இந்த கணத்தில் நாம் அனைவரும் நெருக்கமாக,கூட்டுறவோடு நம்மால் முடிகிற அளவுக்கு இணைந்து பணியாற்றுவது அதி அவசியமாகிறது.” இந்த வருடங்களில் எல்லாம் தாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியதையும் நினைவு கூர்ந்த நேரு ,’உங்கள் மீதான அன்பு மற்றும் மரியாதை இந்த காலங்களில் வளர்ந்திருக்கிறது. எந்த நிகழ்வும் அண்ட அன்பையும்,மரியாதையையும் குறைக்க முடியாது…என்றாலும்,இந்த சிக்கல் மிகுந்த பாபுஜியின் மரண கணத்தில் நாம் மற்றும் நம்முடைய சகாக்கள் இணைந்து பணியாற்றுவது நம்முடைய கடமை என்று நான் சொல்ல விரும்புகிறேன்.”

படேல் நேருவின் கடிதத்துக்கு பதில் எழுதும் பொழுது “தங்களின் கடிதத்தின் அன்பு மற்றும் கனிவால் மிகவும் நெகிழ்ந்தும்,மகிழ்ந்தும் போனேன்” என்று சொல்லிவிட்டு ,”நாம் இருவரும் வாழ்நாள் முழுக்க ஒரு பொது குறிக்கோளுக்காக இணைந்து இயங்கும் காம்ரேட்களாக இருக்கிறோம். நம் தேச நலன் மீதான அளவுகடந்த அக்கறை,இருவரும் கொண்டுள்ள அன்பு மற்றும் மரியாதை நம்முடைய பார்வை மற்றும் வேறுபாடுகளை கடந்து நம்மை இணைத்தே வைத்திருக்கிறது. ” மேலும் “காந்தியின் மரணம் நாமிருவரும் எப்படி இணைந்து பலவற்றை சாதித்துள்ளோம் என்பதையும்,இந்த நாடே சோகம் சூழ்ந்திருக்கும் தருணத்தில் மக்களின் நலனுக்காக இன்னமும் இணைந்து பணியாற்றுவதன் அவசியத்தை மீண்டும் புதிதாக உணரவைக்கும் விழித்தெழுதலாக இருக்கிறது !” என்று குறிப்பிட்டார்.- வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா
கற்பிதம் நான்கு : நேரு ஒரு சர்வாதிகாரி :
நேருவுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்பதை விடவும் தனக்கு பின் தன்னுடைய வாரிசாக ஒருவரை நேரு அறிவிக்கவில்லை என்பதே இதற்கு வலு சேர்க்கிறது.
நேரு தன்னுடன் இருந்த கட்சி மற்றும் அரசாங்க சகாக்கள் முன்னர் மேலானவராக தோற்றம் தந்திருப்பார் உண்மையே. அவர்கள் அவரின் காஸ்மோபாலிடன் பார்வையையோ,கலை,இசை,இலக்கியம்,அறிவியல் மீதான ஆர்வத்தையோ கொண்டிருக்கவில்லை. ஆனால்,நேருவை விட இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கும் அமைப்புகள் மற்றும் பண்புகளை யாரும் வளர்த்தெடுக்கவில்லை. அவரே வயது வந்த அனைவர்க்கும் வாக்குரிமைக்காக வாதாடினார்,ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்கட்சிகளை வரவேற்றார் , அதிகார வர்க்கம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தில் அவர் தலையிட்டதே இல்லை. வின்சென்ட் சீன் இப்படி ஒரு முறை குறிப்பிட்டார் : “காந்திக்கும்,நேருவுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால் காந்தியடிகள் தான் ஒத்துப்போகாத பெரும்பான்மை கருத்துக்கு இசைவதை காட்டிலும் ஓய்வெடுப்பது,உண்ணாவிரதம் இருப்பது,பிரார்த்தனை செய்வது,தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வதும்,குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவது என்று இயங்க போய்விடுவார். நேரு அப்படியில்லாமல் தன்னுடைய கட்சி மற்றும் தேசம் பெரும்பானமையாக ஒரு கருத்து கொண்டிருக்கிற பொழுது அதோடு ஒத்துப்போகா விட்டாலும் அதை மதித்து ஏற்றுக்கொண்டார். ஆகவே நேருவின் கருத்துக்கு மாற்றாக காங்கிரஸ் ஆண்ட மாநில முதல்வர்கள் எப்பொழுதும் கட்சியின் அம்மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மொழிவாரி மாநிலங்களை முதலில் அவர் எதிர்த்தாலும் நாடும்,கட்சியும் அது தேவை என்றதும் ஏற்றுக்கொண்டு அப்படியே செயல்பட்டார்.
நேரு தனக்கு பின் ஒரு வாரிசை நியமிக்காமல் விலகியதற்கு காரணம் அதை மக்களும்,அவர்களின் பிரதிநிதிகளும் தேர்வு செய்யட்டும் என்று எண்ணியதே காரணம். நேருவை வாழ்நாள் முழுக்க தீவிரமாக விமர்சித்த D.F.கரக்கா இப்படி அவரின் உறுதியை புகழ்ந்தார் ,”நேரு தன்னுடைய வாரிசை பற்றி எந்த குறிப்பிடுதலையும் செய்யாதது மெச்சத்தக்கது. நேரு தனக்கு பின் வருகிறவர்களுக்கான பணி அது என்பதில் உறுதியாக இருந்தார். அவர் அதைப்பற்றி கவலைப்படவே இல்லை.”
கற்பிதம் 5 :
நேரு மையப்படுத்தப்பட்ட ஸ்டாலினிஸ்ட் பாணியிலான பொருளாதார வளர்ச்சி மாதிரியை கொண்டு வந்து நம்மை பல ஆண்டுகள் வளர்ச்சியில் பின்னோக்கி இருக்க செய்துவிட்டார்
பொருளாதரத்தை வேகமாக மற்றும் பெரிய அளவில் திறந்துவிட வேண்டும் என்று எண்ணுவோர் இந்த வாதத்தை வலிமையாக முன்வைக்கிறார்கள். உண்மையில் இறக்குமதிக்கு மாற்றான பொருளாதார மாதிரியை கொண்டு வருவதில் விடுதலைக்கு பின்னர் கருத்து ஒற்றுமை இருந்தது என்பதே உண்மை.
ரஷ்யா மட்டுமல்லாமல் ஜெர்மனி,ஜப்பான் ஆகிய தேசங்களும் எடுத்துக்காட்டுகளாக கொள்ளப்பட்டன. காலனியாதிக்கம் இந்தியர்களை அதிகமான மற்றும் நீளும் வெளிநாட்டு முதலீட்டின் மீது பயத்தை உண்டு செய்தது. மேலும் இந்திய தொழில் துறையே அரசின் ஆதரவு மற்றும் மானியத்தை கோரியது. 1944 இன் பம்பாய் திட்டத்தில் இந்தியாவின் முக்கிய முதலாளிகள் அனைவரும் கையெழுத்திட்டு இருந்தார்கள். அதில் ஆற்றல்,நீர்,போக்குவரத்து மற்றும் சுரங்கங்கள் என்று எல்லா முக்கிய துறைகளிலும் அரசின் குறிக்கீட்டையும் அதன் மூலமாக அவற்றை வளர்ப்பதையும் செய்ய சொல்லி கேட்டுக்கொண்டார்கள். தங்களிடம் அப்படி செய்ய போதுமான நிதியில்லாததால் அதை செய்வது அரசின் கடமை என்று அவர்கள் நினைத்தார்கள்.
இது சந்தைமயப்படுத்தப்பட்ட வர்த்தகம் மற்றும் இறுகிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு காலங்களுக்கு இடையயேயான போட்டி மற்றும் அவற்றின் நன்மைகள்,தீமைகள் பற்றிய வாதமில்லை. ஏன் நாம் இப்படியொரு தொழில்மய கொள்கையை தேர்ந்தெடுத்தோம் என்பதற்கான பதில் மட்டுமே இது : தொழிலதிபர்கள்,விஞ்ஞானிகள்,பொருளாதார வல்லுனர்கள்,அரசியல்வாதிகள் பல்வேறு தத்துவங்கள் மற்றும் வேறுபாடுகளை கடந்து நேருவோடு இந்த கருத்தில் பெரிதும் ஒத்துப்போனார்கள். அல்லது நேரு அவர்களோடு ஒத்துப்போனார் என்றும் சொல்லலாம்.
நேருவின் காலத்தில் அவரைப்போல நேசிக்கப்பட்டவரும் இல்லை ; அவரின் காலத்திற்கு பிறகு அவரைப்போல வில்லனாக்கப்பட்டவரும் வேறெவரும் இல்லை. வில்லனாக நேருவை காண்பிக்கும் போக்கு இப்படியான பொய்யான கற்பிதங்களால் தொடர்ந்து நீடிக்கிறது. –Ramachandra Guha
மூலம் : http://www.hindu.com/mag/2004/05/23/stories/2004052300240300.htm