திப்பு சுல்தான் கதை கேளுங்கள் !


திப்பு சுல்தான் மறைந்த தினம் இன்று .புலி என உண்மையாகவே குறிக்க வேண்டிய வீரர் மற்றும் தலை சிறந்த நிர்வாகி இவர் .எளிய வீரரராக ,வாழ்க்கையை தொடங்கி மைசூரின் மன்னர் ஆனார் ஹைதர் அலி . ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து போராடிய அவரின் மகன் தான் திப்பு சுல்தான் .

திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார். கி.பி.1767முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும்மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு

. இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை தோற்கடித்து போடப்பட்ட ஒரு இந்திய மன்னர் சொல்கிறபடி ஒப்பந்தம் போடுகிற அற்புதம் திப்புவின் வீரத்தால் வாய்த்தது. ஹைதர் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுதே மரணம் அடைந்து விட மன்னர் ஆனார் திப்பு .அவர் ஆட்சியில் இருந்த இருபது வருடத்தில் 18 வருடங்கள் போர்களத்திலேயே கழித்தார்

‘யுத்தத்தைப் போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது ஒருபோதும் வன்முறை நடத்தாதீர்கள். பெண்களைக் கௌரவமாக நடத்துங்கள். பிடிபட்ட கைதிகளின் மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்’ என்று, தன் ராணுவத்துக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்தவர் திப்பு சுல்தான். .

உலகத்தரத்திலான ராணுவத்தை உருவாக்கி இருந்தார் ; சொந்த தேதிமுறையை பின்பற்றினார், தனித்த எடை,அளவுகள் ஆகியவற்றை புழக்கத்துக்கு கொண்டு வந்தார். இன்னமும் குறிப்பாக அதுவரை இந்தியாவில் பெரிய ராஜ்யங்களை அவர் காலத்தில் ஆண்ட மன்னர்கள் முகாலயர்களின் சார்பாக ஆள்கிறோம் என்று சொல்லியபடியே ஆண்ட பொழுது தனித்து நின்று தன் பெயரில் நாணயங்களை வெளியிட்டார்.

நாசாவின் கென்னெடி விண்வெளி மையத்தின் நுழைவாயில் ஒரு ஓவியம் கொண்டிருக்கிறது -அதில் திப்பு ஏவுகணையை பயன்படுத்தி போரிடுவது சித்தரிக்கப்பட்டுள்ளது ; போர்களத்தில் ஏவுகணையை முதன்முதலில் உலகிலேயே பயன்படுத்தியவர் இவர்தான். அது இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை துல்லியமாக சென்று தாக்கும் ஆற்றல் பெற்றதாக இருந்தது .அந்த ஆவணங்கள் இன்றும் லண்டனில் பத்திரமாக உள்ளன ; அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கான்கிரீவ் ராக்கெட்களை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள்.

மத நல்லிணக்கத்துக்கு அற்புதமான எடுத்துகாட்டு இவர்- நூற்றி ஐம்பத்தாறு கோயில்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது . எந்த அளவுக்கு அவரின் ஆட்சியில் மத நல்லிணக்கம் நிலவியது என்பதற்கு இந்த தகவலே போதும் .கோயில்களுக்கு செலவிடப்பட்ட 2,33,959 ரூபாயில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 அளிக்கப்பட்டது இவர் ஆட்சியில்,சிருங்கேரி மடத்தலைவருடன் நெருங்கிய உறவு பாராட்டினார் . மூன்றாம் மைசூர் போரில் பரசுராம் பாவ் எனும் மராத்தியர் தலைமையிலான படைகள் நாசப்படுத்திய சிருங்கேரி ஆலயத்தை சீரமைத்துக்கொடுத்தார்.

அவர் காலத்தில் சந்தன விற்பனை தேசியமயமானது. பட்டுப்புழு உற்பத்தியை தன் ஆட்சிப்பகுதியில் அறிமுகப்படுத்தினார். கிழக்கிந்திய கம்பெனிக்கு போட்டியாக இன்னொரு நிறுவனத்தை உருவாக்கவும் முனைந்தார் கப்பல் கட்டும் தொழில்நுட்பம்,முகலாயர்களின் ஆட்சியில் இருந்து மாறுபட்ட நிர்வாகம்,இடைத்தரகர்கள் இல்லாத நிலவரி விதிப்பு என இவரின் ஆட்சியின் நிர்வாகப்பாடங்கள் ஏராளம். அந்த நிலவரி விதிப்பால் ஒடுக்கப்பட்ட மக்கள் பலபேர் நிலங்களை பெற்றார்கள் ; தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர் ஆளுகையில் இருந்த மக்கள் இந்த முறைகளால் அங்கே இடம்பெயர்வதும் நடந்தது. நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை செயல்படுத்தினார் அவர் .

ஆடம்பரத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றெண்ணி திருமணத்துக்கு ஒரு சதவிகிதம் மட்டுமே வருமானத்தில் செலவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்துகொள்ளும் பழக்கத்தைத் தடுத்து சட்டம் இயற்றியுள்ளார். கோயில்களில் இருந்த தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டதுடன், மதுவிலக்கை அமல்படுத்தி, அதைத் தீவிரமாகக் கண்காணித்தார். ஆங்கிலேயரோ அதே காலத்தில் வங்கத்திலும்,பீகாரிலும் கஞ்சாவை உற்பத்தி செய்து சீனாவை நாசமாக்கும் வகையில் அதை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தனர்.


திப்பு அதே சமயம் ஆங்கிலேயருக்கு யாரேனும் உதவுகிறார்கள் என்று தெரிந்தால் தயவு தாட்சண்யம் இல்லாமல் தண்டிக்கவும் யோசிக்கவில்லை. இவர் உருவாக்கிய பல்வேறு சத்தமெழுப்பும் இயந்திரப்புலி ஒன்று இன்னமும் இங்கிலாந்து ம்யூசியத்தில் பழுதடைந்து எவ்வளவோ முயற்சிக்குபின் சரி செய்ய முடியாமல் இருக்கிறது 

ஆங்கிலேயரிடம் மூன்றாம் மைசூர் போரில் தோற்று அவரின் மகன்களை போருக்கான பிணையாக கொண்டு சென்றார்கள் ஆங்கிலேயர்கள்; ஆங்கில கலாசாரத்தில் அவரின் பிள்ளைகளை வளர்த்து இவரைக் காயப்படுத்தினார்கள் .

நான்காம் மைசூர் போரில் அவரின் அமைச்சர்கள் மீர் சதக் மற்றும் பூர்ணய்யா விலை போய் கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்டன. ஹைதராபாத் நிஜாமின் கடல் போன்ற படையோடு ஆங்கிலேயர் சேர்ந்த ஐம்பதாயிரம் பேர் படையை முப்பதாயிரம் பேர் கொண்ட படையோடு எதிர்கொண்டு மரணம் அடைந்தார். இவர்.

“ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வீரம் காட்டி மடியலாம்” என்று தான் சொன்னபடியே தப்பித்து ஓடாமல் போரில் தீரம் காட்டி இறந்தார் அவர். போரில் எண்ணற்ற இழப்புகள்,சூறையாடல்கள் எல்லாம் நிகழ்ந்த அந்த கணத்தில் ஒரு ஒப்பற்ற தலைவன் இறந்து போனதற்காக மைசூர் மக்கள் கண்ணீர்விட்டு அழுதார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்கிறார்கள். வீர வரலாறு ஒன்று முடிவுக்கு வந்தது . திப்பு எனும் மாவீரன் மறைந்த நாள் இன்று (மே நான்கு )

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s