மாவீரன் நெப்போலியன்-ஏழை வீட்டு பிள்ளை சக்கரவர்த்தி ஆன வரலாறு !


தன்னம்பிக்கை கதைகளைத் தனித்தனியாக கேட்பதைவிட நெப்போலியனின் வாழ்க்கையை படித்தால் போதும். 

எளிமையான இத்தாலியில் இருந்து குடிபெயர்ந்த குடும்பத்தில் பிறந்தான் நெப்போலியன். ராணுவத்தில் சேர்ந்து கலக்கி எடுத்தான். ஒரு முறை எண்ணற்ற மக்கள் கூடிப் போராடிக் கொண்டிருந்தார்கள். வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. கொஞ்சம் மிஞ்சினால் மக்கள் பொங்கி விடுவார்கள். கண்ணாடி பந்துகளை கச்சிதமாக பீரங்கிகளில் பொருத்தி போராட்டக்காரர்கள் மீது செலுத்தினான். உயிர் இழப்பு இல்லாமல் கூட்டம் கலைந்தது.

வெகு சீக்கிரமே படைத் தளபதியாக உயர்ந்தார். ஆஸ்திரியாவின் வசமிருந்த இத்தாலியின் பகுதிகளை பிடித்துக் காண்பித்தான். கிழக்கு தேசங்களை பிடிக்கும் முயற்சியை நெல்சன் தகர்த்தார்.
பயமென்றால் என்னவென்றே அறியாமல் தன்னை வார்த்தெடுத்துக் கொண்ட நெப்போலியன் உருவத்தில் பார்க்க குள்ளமானவர்.

ஒரு முறை போர்க்களத்தில் வென்ற பிறகு வீரர்களை கொண்டாட அனுப்பிவிட்டு நெப்போலியன் தனியாக வேகமாக குதிரையை செலுத்திக்கொண்டு பயணப்பட ஆரம்பித்தான். உற்சாக மிகுதியில் இன்னமும் குதிரையின் வேகத்தை அதிகப்படுத்தும் பொருட்டு கடிவாளத்தை பிடித்து இழுத்தான்.

குதிரையின் வாயில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டே இருந்தது. சிட்டென பறக்க ஆரம்பித்தது. கிடுகிடு பள்ளம் ஒன்று திடீர் என குறுக்கிட்டது. அப்படியே குதித்து விடலாம்; குதிரையால் தாவக்கூடிய தூரத்தைவிட ஒரு ஐந்தடி அதிகமாகவே அகலமாக இருந்தது பள்ளம். பார்த்தான்; வீரனுக்கு அழகு இப்படி சாவதுதான் என எண்ணிக்கொண்டு முடுக்கினான். பள்ளத்தில் குதிரை தாவி வீழ்ந்தபொழுது, அந்த ஐந்தடியை மிதந்து கொண்டு இருக்கும்பொழுதே தாவி அடிகளோடு தப்பித்தான். தன்னை ‘விதியின் மனிதன்’ என அழைத்துக்கொண்டான்.

நெப்போலியன் பிரெஞ்சு புரட்சியால் நாட்டில் ஏற்பட்டு இருந்த கொதிநிலையை பயன்படுத்திக்கொண்டு ஆட்சியை பிடித்துக்கொண்டான். என்றாலும், முதலில் மூன்று பேர் கொண்ட அமைப்பை கொண்டு ஆள்வது போல பாவ்லா காட்டிவிட்டு ஆட்சிப் பீடம் ஏறினான். தானே மகுடத்தை எடுத்து சூட்டிக்கொண்டான். உலக வரலாற்றில் ஏழை ஒருவரின் மகன் ஒரு மாபெரும் நாட்டின் சக்ரவர்த்தி ஆகிற அற்புதம் அன்றைக்கு நிகழ்ந்தது.

ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் உறங்கிய நெப்போலியன் ஆழ்ந்து வாசிக்கிற பழக்கம் உள்ளவன். வாசிப்பே நம்மை பக்குவப்படுத்தும் என்பது அவன் எண்ணம். குள்ளமாக இருந்ததால் அவன் அரசவைக்கு நடந்து வருகிறபொழுது அவன் அணிந்திருக்கும் போர்வாள் உரசி இரத்தின கம்பளங்கள் கிழிந்து போகும். பின் இரும்பால் கம்பளம் வைத்தபொழுது உரசிக்கொண்டு தீப்பொறி பறக்க அரசவைக்கு வருவார்.

அவருக்கு தன்னைவிட இரண்டாண்டுகள் மூத்தவளும், இரண்டு பிள்ளைகளுக்கு தாயுமான ஜோசபின் மீது முதல் பார்வையிலேயே காதல் பூத்தது. அவளை மணம் செய்து கொண்டார். அவருக்காக உலகம் முழுக்க இருந்து ரோஜா மலர் செடிகளை பரிசாக அனுப்பி வைப்பார். அதன் மூலம் உருவான தோட்டம் மிக பிரமாண்டமானது. ஜோசபைனுக்கு நெப்போலியன் எழுதிய காதல் கடிதங்கள் தனிக் காவியம். அவள் பிள்ளை பெற்றுத்தர முடியவில்லை என்று விவாகரத்து செய்த பின்னும் பெரிய மாளிகை கொடுத்து அவளுக்காக கண்ணீர் வடித்தான் நெப்போலியன்.

போர்களில் தொடந்து வென்று கொண்டிருந்த நெப்போலியனின் சொந்த வாழ்க்கை வெகு சிக்கனமானது. ஓரிரு செட் ஆடைகள், தன் அறையில் தன் பதினான்கு ஆண்டுகால சம்பளத்தில் வாங்கிய மேசை, நாற்காலி ஆகியவற்றில்தான் தன் வாழ்க்கையை ஒட்டிய எளிமை விரும்பி அவர். இரண்டு வேளை மட்டுமே எளிமையான உணவு சாப்பிடுவார். அரைக் குவளை காபி மட்டும் இரண்டு அல்லது மூன்று வேளை குடிப்பார். வெகு சுறுசுறுப்பாக இருக்கும் அவனின் சின்னம் தேனீ.

பல நாடுகளை வென்ற அவன் செய்த தவறு ரஷ்யாவின் மீதான படையெடுப்பு. தான் கொண்டு வந்த இங்கிலாந்துடன் வியாபாரம் செய்யக்கூடாது என்கிற கண்ட முறையை ஏற்க மறுத்த ரஷ்யா மீது போர் தொடுத்தான். நாட்டையே துப்புரவாக துடைத்து வைத்திருந்தார்கள் மக்கள். ரஷ்ய குளிர் வாட்டி எடுத்தது. உயிரை அப்படியே உருவி எடுத்தது. பல வீரர்கள் சுருண்டு இறந்தார்கள். ஒன்றுமே இல்லாத மாஸ்கோவை கைப்பற்றினார்கள். பசிக்கு சாப்பிட எதுவுமில்லாமல் குதிரைகளையே வெட்டி உண்ணவேண்டிய நிலைமை. வெறிச்சோடி போன மாஸ்கோவின் தெருக்கள்தான் காத்துக்கொண்டு இருந்தன.

இருந்ததில் பாதி படையை காவு கொடுத்துவிட்டு நெப்போலியன் இன்றுதான் பின்வாங்கினார். அதற்கு பின் நடைபெற்ற போரில் தோற்று எல்பா தீவில் சிறை வைக்கப்பட்டார் அவர். “ரஷ்யக் குளிர் நெப்போலியனை தோற்கடித்தது!”என வரலாறு எள்ளி நகையாடுகிறது.

அப்பொழுது நடந்த ஒரு சம்பவம். ரஷ்ய படைகளின் கண்ணில்பட்டு தப்ப முயன்று ஒரு தையல்காரனிடம் சரண் புகுந்தார் நெப்போலியன். “என்னை காட்டிகொடுக்காவிட்டால் மூன்று வரங்கள் தருகிறேன்!”என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய துணிமூட்டைக்குள் ஒளிந்துகொண்டார் நெப்போலியன். ரஷ்ய படைகள் வந்தன. துணிமூட்டைக்குள் ஜஸ் லைக் தட் என கத்திகளை சொருகி பார்த்தார்கள். ஆனால் ஒன்றும் ஆகாமல் நெப்ஸ் தப்பிவிட்டார். அதற்கு பின் பிரெஞ்சு படைகள் வந்தன. வரங்களை கேட்க சொன்னார் நெப்போலியன். 

“முதலில் கடையின் ஓட்டை சரி செய்ய வேண்டும்”. “முடிந்தது” என்றார் நெப்ஸ். “அடுத்து” என கம்பீரமாக கேட்க, “எதிர்க்கடை தையல்காரனை நாடு கடத்தி விடுங்கள் – ஒரே தொழில் போட்டி” எனவும் சிரித்துக்கொண்டே, “சரி! அடுத்து?”எனக் கேட்க நீங்கள் அந்த துணிமூட்டைக்குள் இருக்கும்பொழுது கத்தியால் குத்தினப்ப எப்படி ஃபீல் பண்ணிங்கனு தெரிஞ்சாகணும்!” “ஹ்ம்ம்” என்ற நெப்போலியன்…

“கிளம்புங்கள்!” என படைகளிடம் சொல்லிவிட்டு – வெளியேறும் பொழுது சடக்கென்று திரும்பி, படை வீரனை பார்த்து தையல்காரனின் தலையில் படக்கென்று துப்பாக்கியை வைக்கச்சொல்லி ஒன்று இரண்டு மூன்று என்றதும் சுட்டுவிடு என்றதும், துப்பாக்கி ஓட்டை தையல்காரன் தலையில் பொய் ஒட்டிகொண்டது. “ஒன்…டூ…த்ரீ!” என்றதும் அதீத மௌனம், குண்டு வெடிக்கவில்லை வியர்த்துப்போன தையல்காரனை பார்த்து “இப்படிதான் இருந்தது எனக்கு!” என்றுவிட்டு கிளம்பினான் நெப்போலியன். அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வும் அவனிடம் இருந்தது.

எல்பாவில் இருந்து தப்பி வந்தபொழுது மக்கள் மீண்டும் அவன் பின் அணிவகுத்தார்கள். வாட்டர்லூவில் இறுதிப் போர். ஒய் வடிவத்தில் படைகளை நிலை நிறுத்தினான். போரில் வென்று விடுவோம் என்கிற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அதற்கு முந்தைய நாள் நல்ல மழை பெய்தது. இவனுக்கு காய்ச்சல் வேறு; சொன்ன உத்தரவுகள் தப்பு தப்பாக வீரர்களின் காதுகளில் விழ தோல்வியை தழுவினான் நெப்போலியன். இந்த முறை தப்பிக்க முடியாத ஹெலினா தீவில் கொண்டு போய் தனிமைச் சிறை வைத்தார்கள்.

நாற்பது போர்கள் கண்ட நெப்போலியன் கொண்டு வந்த கோட் ஆப் நெப்போலியன் இன்றைக்கும் பின்பற்றப்படும் அருமையான சட்டம். எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அற்புதம் அது. எளிமையான மொழியில் அவை எழுதப்பட்டு இருந்தன. நில உடைமை முறையை வேரறுத்து மக்களுக்கு நிலங்களை பிரித்து கொடுத்தான். மதத்தை அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்தார். நெப்போலியன் காலத்தில் அறிவியலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. வோல்டாவை பார்த்து நீங்கள் வருடத்துக்கு ஒரு முறை அரசவைக்கு வந்தால்கூட போதும் என்கிற அளவுக்கு நெப்போலியன் தீராத வாசிப்பு ஆர்வம் கொண்டவன். 

எல்பாவில் சிறைவைக்கப்பட்டு இருந்தபொழுது நெப்போலியனுக்கு கொடுக்கப்பட்ட சிறிய அறையில் அவன் எதை தெரியுமா வைத்திருந்தான்? எல்லா அடுக்குகளிலும் மொத்தமாக மூவாயிரம் புத்தகங்களை வைத்திருந்தான். அவன் மரணத்துக்கு பிறகு ஆங்கில அரசே அவனை மாவீரன் என்று ஏற்றுக்கொண்டது.

ஒரு சம்பவத்தோடு முடித்தால் நன்றாக இருக்கும். நெப்போலியனின் படைத் தளபதி வேகமாக ஓடி வந்தார். கண்களில் கலக்கம். “அரசே! எதிரி நாட்டுப் படைகள் எல்லாப் பக்கமும் சுற்றி வளைத்து விட்டார்கள். அவ்வளவு தான்!” என்றபொழுது நெப்போலியன், “அதனால் என்ன? எல்லா பக்கமும் சுடலாம் என சந்தோசப்படுங்கள்” என்றார்.

“முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில் உள்ள வார்த்தை” என்ற குள்ளமான உருவம் கொண்ட வானுயர தன் உழைப்பால் எளிய குடும்பத்தில் இருந்து பேரரசனாக உயர்ந்த நெப்போலியனின் நினைவு நாள் இன்று (மே 5). ஐம்பாதாண்டு காலம் மட்டுமே வாழ்ந்த தனி சரித்திரம் அவன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s