புகார்களின் உலகம்


புகார் கொடுக்க வந்த 
நிலையத்தின் வாசலில் தூக்கு தண்டனைக்கான 
நுழைவுச்சீட்டு திணிக்கப்படுகிறது ;
யாருக்கான புகார் என்று 
மேலே குறிக்காததால்
குழம்பிப்போகிறது காலம்.
கீறி புசித்த துரோகத்தின் 
உணவுத்துண்டுகளில் 
விஷம் கலந்த கதையாக இருக்கலாம்.
வன்மத்தை சுற்றிக்கொண்டு 
வீரர்களை மது அருந்த சொல்லிவிட்டு 
அவர்கள் வாள்களில் ரத்தம் துடைத்த 
வெற்றிகளின் விசும்பலின் எழுத்தா 
என்று தெரியவில்லை. 

புடவைத்துண்டு ஒன்று கரிந்து 
படபடக்கிறது பக்கமொன்றில் ;
பிய்க்கப்பட்டு கசங்கிப்போன 
காய்ந்த பூவொன்றில் காணடிக்கப்பட்டவனின் 
புனைப்பெயர் சிரிக்கிறது ;
இடையில் கால்பாதங்களின் 
சுவடுகள் புகார் பட்டியலில் பொதிக்கப்பட்டு பயமுறுத்துகிறது 

ஏற்கனவே புகார் செய்தவன் 
அது முடிந்து தற்போது 
புது தூக்குக்கயிறை நெய்கிறான் 
நிரபராதியை நோகடிக்க…
அவனும் அப்படித்தானே குற்றவாளி ஆனான்.
சிலந்தியின் பற்களில் நூலாக வீழ்கிறது 
பிள்ளையின் சிறுநீர் 
அது கசக்கிறது என்று 
புகார் சொல்வதால் நாம் செய்த 
மூழ்கடிப்பா என்று 
தலைவர்கள் தவிக்கையில் 
தாள்களை வாங்கிப்பார்க்கிறான்
சாத்தான் 
எல்லாமே கருப்பாக இருக்கிறது என்று சொல்லி 
வெள்ளையாக்கப்பட்ட பாவங்கள் கொண்டு 
பூசுகிறான் புதிய தூதன். 
பெயர் மாறினால் போதாதா 
புகார்கள் புதைக்கப்பட

ஜனநாயகம் தின்ற இந்திராவின் எமெர்ஜென்சி


எமெர்ஜென்சி பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தாலே கை நடுங்குகிறது. இந்திய ஜனநாயகத்தின் மிக இருண்ட கட்டம் என்று குறிக்க வேண்டுமென்றால் அந்த காலகட்டத்தை தான் சொல்லவேண்டும். அலகாபாத் உயர்நீதிமன்றம் யஷ்பால் கபூர்  என்கிற அரசுப்பொறுப்பில் இருந்த அதிகாரி அதிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பே இந்திராவுக்கு தேர்தல் பணி செய்தது,அரசாங்க இடத்தில் விதியை மீறி அதிக உயரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ததுஆகிய காரணங்களில் இந்திரா குற்றவாளி என்று முடிவு செய்து ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது. 

ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் மன்னர் மானிய ஒழிப்பு முதலிய பல்வேறு விஷயங்களில் அரசுக்கு எதிராக லடாய் போட்டிருந்தது. கேசவனானந்தா பாரதி வழக்கில் அடிப்படை கூறுகள் என்று சிலவற்றை பட்டியலிட்டு இவற்றில் கையை வைத்தால் தொலைத்து விடுவேன் என்று சொல்லிவிட்டது சுப்ரீம் கோர்ட்.

தேர்தலில் போட்டியிட தடை என்ற தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போனால் வி.ஆர்.கிருஷ்ணய்யர் தீர்ப்புக்கு முழுமையாக தடை விதிக்காமல் இந்திரா நாடாளுமன்றத்தில் பிரதமராக பணியாற்றலாம்,ஆனால்,வாக்களிக்கிற உரிமை கிடையாது என்று சொல்ல பற்றிக்கொண்டு வந்தது. நீதித்துறை இப்படி முரண்டு பிடிக்கிறது என்று பற்றிக்கொண்டு வந்தது இந்திராவுக்கு.

ஊழல் மலிந்த குஜராத் அரசு விலக வேண்டும் என்று போராடக்கிளம்பிய ஜே.பி. அடுத்து அப்படியே பீகார் பக்கம் நகர்ந்திருந்தார். மாணவர்களின் போராட்டத்துக்கு வழிகாட்ட அவர் தயார் என்றிருந்தார். முழு மாணவர் போராட்டமான நவநிர்மான் அந்தோலன்,அடுத்து நடந்த ஜெபியின் பீகார் எழுச்சி,பல லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொண்ட ரயில்வே போராட்டம் ஆகியன இந்திராவை மேலும் சூடேயேற்றிய சூழலில் இந்த தீர்ப்பு எதிர்கட்சிகளுக்கு போதுமானதாக இருந்தது. “ராணுவம் அரசியலமைப்பின் படி இயங்காத அரசுக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியமில்லை !” என்று ஜே.பி பேசியது போதுமானதாக இருந்தது. உள்நாட்டில் குழப்பம் என்றால் எமெர்ஜென்சி வரலாம் என்பதை இந்திரா சாதகமாக்கி கொண்டார். பக்ரூதின் அலி முகமது கேபினட்டின் அனுமதி பெறாத எமெர்ஜென்சி அறிவிப்புக்கு அப்படியே கையெழுத்து போட்டார். அதிகார வர்க்கம் குனிய சொன்னால் தவழ்ந்தது. பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். யாரை வேண்டுமானாலும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வதைக்கலாம்,கைது செய்யலாம் என்கிற நிலை நிலவியது. பலபேர் காணாமல் போனார்கள். என்ன ஆனார்கள் என்பது இன்னமும் கேள்விக்குறி

சஞ்சய் காந்தி களத்துக்கு வந்தார். இருபது அம்ச திட்டம் என்று அறிவித்து கொண்டு அராஜகம் செய்தார்கள். டெல்லியை சுத்தப்படுத்துகிறேன் என்று ஏழைகள் இருந்த சேரிகள் இடிக்கப்பட்டன. எதிர்த்த இடத்தில் துர்க்மான் கேட்டில் கொல்லப்பட்ட நூற்றி ஐம்பது அப்பாவி முஸ்லீம்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். நாட்டின் மக்கள் தொகையை குறைக்கிறேன் பேர்வழி என்று ஐந்தே மாதத்தில் முப்பத்தி ஏழு லட்சம் ஆண்கள் கதறக்கதற கட்டாய குடும்ப கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கில் வாரத்துக்கு குடும்ப கட்டுப்பாடு செய்தார்கள் டாக்டர்கள். பத்திரிக்கைகள் தணிக்கைக்கு உள்ளாகின ; சென்சார் செய்யப்பட்டு பெரும்பாலும் வெள்ளையாக ஒரு சில இதழ்கள் வந்தன. அரசியல் எதிரிகள் எல்லாரும் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். ஜே.பி.யும் ஹரியானாவுக்கு அனுப்பப்பட்டார்.

மக்கள் மவுனமாக இருந்தார்கள் ; எமெர்ஜென்சி வருவதற்கு முந்தைய தினம் பெரிய அளவில் ஜே.பியின் கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள் என்றால் அடுத்த நாள் சிறு முணுமுணுப்பு கூட இல்லாமல் சட்டப்பூர்வ சர்வாதிகார ஆட்சியை ஏற்றுக்கொண்டார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட யாருமே ராஜினாமா செய்யவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்தேதியிட்டு சட்டங்களை தனக்கு சாதகமாக இந்திரா வளைத்த பொழுது மவுனம் காத்தார்கள். எமெர்ஜென்சி காலத்து கைதுகள் செல்லுபடியாகும் என்று நான்கு நீதிபதிகள் சொல்ல எதிர்த்து தீர்ப்பு சொன்ன தைரிய சாலி ஹெச்.ஆர்.கன்னா போல ஒரு சில நீதிபதிகள் மட்டும் ஜனநாயகத்தின் மவுன அலறலை பிரதிபலித்தார்கள். அப்படி கைதுகள் செல்லாது என்று மனித உரிமையை காக்கும் ரீதியில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள் தூக்கி அடிக்கப்பட்டார்கள்.

தமிழகத்தில் இருந்த திமுக அரசு எமெர்ஜென்சிக்கு எதிராக குரல் கொடுத்து கடுமையான அடக்குமுறையை சந்தித்தது. எல்லா அரசாங்க அலுவலங்களும் ஒழுங்காக இயங்கின; நேரத்துக்கு எல்லா அரசுப்பணிகளும் நடந்தன. விலைவாசி கட்டுக்குள் வந்தது ஆகியவையும் நடந்தன. பதுக்கல்காரர்களை பிடிக்க கொண்டுவரப்பட்ட சட்டம் எதிர்த்த மக்களை சிறைக்குள் தள்ள பயன்பட்டது !

இந்திரா ஒரு வழியாக தனக்கு எதிராக இருந்த சட்ட சிக்கல்களை எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி திருப்தியடைந்தார். வெற்றி நமக்கே என்று உளவுத்துறை ரிப்போர்ட் தர தேர்தல் என்று அவர் அறிவித்தார். ஒரு கட்சி ஆட்சியை கொண்டுவர வங்கதேசத்தில் முயன்ற முஜீபின் படுகொலையும் ஒரு காரணமாக இருக்கலாம்.’இந்திராவே இந்தியா !’ என்கிற கோஷத்தோடு பண பலம் மற்றும் படை பலத்தோடு காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. சிறையை விட்டு மீண்டு பல்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. கிச்சடி கூட்டணி என்று கிண்டலடித்தார் இந்திரா.

முடிவுகள் வந்தன ; ஹிந்தி பிரதேசத்தில் துடைத்து எறியப்பட்டு இருந்தது காங்கிரஸ். சஞ்சய்,இந்திரா இருவரும் தேர்தலில் பெரிய ஓட்டு வித்தியாசத்தில் தோற்றிருந்தார்கள். மக்கள் எங்களுக்கு சுதந்திரம் முக்கியம் என்று சொல்லாமல் சொல்லியிருந்தார்கள். அடுத்து ஆட்சிக்கு வந்த ஜனதாக்கட்சி இந்திரா உருவாக்கிய நாடாளுமன்றமே உச்சம் என்கிற பாணியிலான சட்டங்களை நீக்கினார்கள். உள்நாட்டுக்கலவரம் என்பதை ஆயுதமேந்திய புரட்சி என்று மாற்றியதோடு கேபினட் அனுமதி வேண்டும் முதலிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்கள். ஆனாலும்,எமெர்ஜென்சி கொண்டுவரும் சட்டப்பிரிவு இன்னமும் இருக்கிறது. கூடவே,இந்திரா ஏற்படுத்திய அடக்குமுறை வடுக்களும் தான் !

எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாள் இன்று

மைக்கேல் ஜாக்சன்-கிங் ஆஃப் பாப் !


மைக்கேல் ஜாக்சன் பாப் உலகின் மன்னன் ,நாடுகளை கடந்த கலைஞன்,இசையாலே இதயங்களை கரைத்தவர் . மைக்கேல் ஜாக்சன் இந்தியானா மாகாணத்தில் கேரி நகரில் பத்து குழந்தைகள் உள்ள அமெரிக்க ஆப்ரிக்க குடும்பத்தில் ஏழாவது பிள்ளையாக பிறந்தார் .

அப்பா ஸ்டீல் ஆலையில் வேலைப்பார்த்து வந்தார் . மொத்தம் ஐந்து சகோதரிகள்,நான்கு சகோதரர்கள்,ஒரு சகோதரன் பிறந்த சில காலத்திலேயே இறந்து விட்டான். ஜாக்சனின் இளமைக்காலம் மகிழ்ச்சி கரமானதாக இல்லை . அவரின் தந்தை ஜோசப் ரொம்பவும் கண்டிப்பானவர். அடிக்கடி பெல்ட் அடி பட்ட அனுபவம் ஜாக்சனுக்கு உண்டு .அப்பாவை பார்த்தாலே வாந்தி எடுத்து விடுகிற அளவிற்கு அப்பாவின் மீது பயம் உண்டு . ஆனால் தான் வாழ்க்கையில் பெரிய அளவில் மிளிர்ந்ததற்கு காரணம் அவரின் அப்பாவின் கண்டிப்பு தான் என நினைவு கூர்வார்.

சுட்டிப்பையனாக ஐந்து வயதிலேயே மேடை ஏறி பாடல் பாடிய அனுபவம் உண்டு ஜாக்சனுக்கு . தான் அண்ணன்மார்கள் நடத்தி வந்த ஜாக்சன் ப்ரோதேர்ஸ் இசைக்குழுவில் தான் முதன்முதலில் பாடினார் . அந்த குழுவில் இரண்டே வருடத்தில் முன்னணி பாடகராகவும் உயர்ந்தார் ,அப்பொழுதே நன்றாக நடனமும் ஆடுவார் .இளம் வயதிலேயே குறும்புக்காரர்.அக்காவின் ஆடைக்குள் சிலந்திகளை போட்டு விட்டு வேடிக்கை பார்ப்பார்

இளம் வயதில் பல்வேறு பாடல்களை பாடி மாபெரும் புகழை இவர்களின் இசைக்குழு பெற்றது . அதன் விளைவாக மொடவுன் ரெகார்ட்ஸ் எகிற இசைக்குழுமம் இவர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டது. அங்கே பல்வேறு ஹிட்களை தந்தார்கள் இவர்கள் .அமெரிகாவின் டாப் நாற்பது ஹிட்களில் தொடர்ந்து அவர்களின் பாடல்கள் இடம்பெற்றன .அதில் ஜாக்சனின் ஆதிக்கமே அதிகம். எனினும் மூன்றே ஆண்டுகளில் அவர்களுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார்கள். படைப்பாற்றலுக்கும் ,புதிய முயற்சிகளுக்கும் இடம் தராததே காரணம் என ஜாக்சன் பின்னாளில் இந்த பிரிவை பற்றி குறிப்பிட்டார்

இதற்கு பிறகு எபிக் ஸ்டுடியோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் ஜாக்சன். இங்கே தான் கிவின்சி ஜோன்சின் அறிமுகம் கிடைத்தது .பல்வேறு ஆல்பங்களை அவரே பிறகு தயாரித்தார் . அவர் செல்லமாக ஜாக்சனை ஸ்மெல்லி என அழைப்பார். ஓயாது உழைக்க வேண்டும் என்பதை இந்த காலங்களில் உணர்ந்தார்மைக்கேல் ஜாக்சன் . தன் முதல் ஐந்து இசைக்கோர்வைகளில் தன் குரல் மின்னி மவுஸ் மாதிரி இருந்ததாக தன்னையே சுய விமர்சனம் செய்துகொண்டார் ஜாக்சன்

ஏகத்துக்கும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர் .நடனப் பயிற்சியின் பொழுது மூக்கையும் உடைத்து கொண்டார் . பெப்சிக்காக ஒரு நிகழ்வில் கலந்துக்கொண்ட பொழுது தீப்பற்றி உடல் எல்லாம் பலத்த தீக்காயங்கள் . விட்டிலிகோ எனும் உடல் நிறமிக் குறைபாடு தாக்கியது . அத்தனையும் அடிக்கடி அறுவை சிகிச்சைக்கு உள்ளாக்கியது. என்றாலும் இவை எதுவும் அவர் இசை நிகழ்வில் வெளிப்பட்டது இல்லை. ரோபோட் டான்ஸ் மூன் வாக் என இவர் அறிமுகப்படுத்திய நடன யுக்திகள் இளைஞர்களை இன்றைக்கும் கட்டி போடுகின்றன.

புவி ஈர்ப்பு விசையை மீறி நினைத்தவாறு கால்களை நகர்த்த உதவும் பூட்சை தானே உருவாக்கினார் .அதன் பேடன்ட்டை பதிவும் செய்து கொண்டார்இதை அணிந்து கொண்டு முன்பக்கம் சாதாரணமாக வளைவதை விட அதிகமாக வளைய முடிந்தது அவரால் .
இதனால் தான் ரப்பரை போன்ற வளைக்கிற ஸ்டெப்ஸை ஜாக்சன் போட முடிந்ததாக சொல்வார்கள்

மைக்கேல் ஜாக்சனின் வாழ்வில் மறக்கவே முடியாத ஆண்டு 1982 இந்த வருடம் தான் ஸ்பீல்பெர்கின் ஈடி படத்திற்க்கான ஆடியோ கோர்வையை தன் குரலில் பதிவு செய்தார் ஜாக்சன். இதற்காக கிராமி விருது அவருக்கு கிடைத்தது.

அதே வருடம் வெளிவந்த ஜாக்சனின் த்ரில்லர் வெளிவந்தது. இன்றைக்கும் உலகில்;அதிகமாக விற்கும் இசை ஆல்பம் .இசை உலகின் மன்னன் என ஜாக்சனை இதற்கு பின் தான் கொண்டாடத்தொடங்கியது உலகம், த்ரில்லர் ஆல்பத்திற்காக எட்டு கிராம்மி விருதுகளை ஜாக்சன் அள்ளினார் . இது முப்பது ஆண்டுகளாக அப்படியே உள்ள சாதனை

எய்ட்ஸ் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏராளமான நிதி திரட்டி உள்ளார். தன்னுடைய மேன் ப்ரம் தி சிங்கள் பாடலின் மூலம் வந்த வருமானத்தை ஆதரவற்றோருக்கு தந்ததில் தொடங்கியது இது. கடைசி வரை ஏழை மக்களின் துயரங்களை நினைவு படுத்தும் வகையில் கருப்பு பட்டை ஒன்றை கையில் அணிந்து இருந்தார் . ஆப்ரிக்காவின் பகுதிகளுக்கு பயணம் போன பொழுது மக்களோடு ஏகத்துக்கும் அளவளாவி அன்பு காட்டினார்.அவரை தங்கள் மண்ணின் மைந்தன் என கொண்டாடினார்கள் அவர்கள் ,

டிஸ்னி நிறுவனத்திற்காக கேப்டன் EO என்கிற குழந்தைகள் படத்தில் நாயகனாக நடித்து உள்ளார் . அந்த படம் அவரின் மரணத்திற்கு பின் மீண்டும் அமெரிக்காவின் டிஸ்னி லாண்ட்களில் திரையிடப்பட்டது .தன் வீட்டில் மிகப்பெரிய தீம் பார்க் ஒன்றை உருவாக்கி அதில் பல்வேறு ஆதரவற்ற குழந்தைகளை விளையாட செய்தார் . அதற்கு முக்கிய காரணமாக எனக்கு கிடைக்காத அழகான இளமைக்காலம் இவர்களுக்கு வைக்கட்டுமே என்றார்

தன் சுயசரிதயை மூன்வாக்கர் என்கிற தலைப்பில் வெளியிட்டார் .அதில் கண்ணீர் ததும்ப தன் வாழ்வில் பட்ட துன்பங்களை சொல்லி இருப்பார் .1992 இல் வில் சேரில் அமர்ந்தப்படியே விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் பாடிய பாடல் தான் “ஹீல் தி வேர்ல்ட்”(உலகின் காயத்தை ஆற்றுவோம் )இசை நிகழ்வுக்கான பயிற்சின் பொழுது ஏற்பட்ட காயத்தால் இப்படி வீல் சேரில் அமர்ந்து பாட நேரிட்டதாக சொன்ன பொழுது உலகம் உணர்ச்சி வசப்பட்டது .

அமெரிக்காவின் நூலகம் ஒன்றில் பல காலமாக ஜாக்சன் புத்தகங்களை திரும்ப தராததால் பத்து லட்சம் டாலர் அளவிற்கு அபராதம் உயர்ந்தது .அந்த நூல்களை அவரின் கையொப்பத்தோடு திருப்பி தந்தால் மட்டுமே போதும் என அந்த நூலகம் அறிவித்தது ரகளையான க்ளைமாக்ஸ்

ஜாக்சனின் உலகின் காயத்தை ஆற்றுவோம் ஐநா சபையால் உலக பாடலாக அங்கீகரிக்கப்பட்டது .அவரின் எர்த் சாங் உலக சுற்றுச்சூழல் தினத்தின் அதிகரப்போர்வ பாடலானது .தென் கரோலினா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மாநில கீதமும் மைக்கேல் ஜாக்சனின் படைப்பு தான்

வாழ்கையின் இறுதி காலங்களில் கடன் சுமையால் பெரிதும் கஷ்டப்பட்டார் . குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளக்கியதாக வழக்குகள் கோர்ட் வரை சென்றன. அவர் அவை எல்லாவற்றில் இருந்தும் விடுதலை பெற்றார்

அந்த கடன்களை தீர்க்கவும் ,ரசிகர்களை சந்திக்கவும் ஐம்பது இசை நிகழ்வுகளை உலகம் முழுக்க நடத்த திட்டமிட்டார் .அதற்கான பயிற்சியில் இருக்கும் பொழுது அதிகமாக வழி நிவாரணியான மருந்தை டாக்டர் தர உயிர் பிரிந்தது ஜாக்சனுக்கு . உலகமே கண்ணீரால் அந்த இசை நாயகனுக்கு பிரியா விடை கொடுத்தது . உலகை எவ்வளவோ உற்சாகப்படுத்தினாலும் தன் வாழ்க்கை முழுக்க சோகத்தால் தான் நிரப்பிக்கொண்டார் கிங் ஆப் பாப். தன்னைப்பற்றி கவலை கொள்ளாமல் சுற்றி இருப்போருக்காக ஓயாமல் ஓடி ஓடி அவர் ஓய்ந்து போனது கசப்பான க்ளைமேக்ஸ்

“எவ்வளவு செல்வம் இருக்கிறது என்பது முக்கியமில்லை. உன்னுடைய இதயத்தால் அன்பால் பிறரை எவ்வளவு நிறைக்கிறாய் என்பதே முக்கியம் !” என்று சொன்ன மைக்கேல் ஜாக்சனை “நீள்முக்கு கொண்டிருக்கும் உன்னையெல்லாம் யார் பார்ப்பார்கள் ?” என்று கேட்டார்கள். “மின்னி மவுஸ் போல இருக்கிறது அவனின் குரல் ” என்றும் சொன்னார்கள். விட்டிலிகோ வந்து செய்த பிளாஸ்டிக்
சர்ஜரியை எல்லாம் அழகுக்காக செய்கிறார் என்று காயப்படுத்தினார்கள். “உலகின் காயங்கள் ஆற்றுவோம் !” என்று இசைத்தார். “நாம் தான் உலகம் !”
என்று எல்லாரையும் அன்பு செய்தார் அவர். உலகை நேசித்த அதன் காயங்களை ஆற்ற இசையால் பிறப்பெடுத்த கிங் ஆப் பாப்பின் நினைவு நாள் இன்று

சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்


விஸ்வநாத் பிரதாப் சிங் சுருக்கமாக வி.பி.சிங் மிகக்குறுகிய காலம் நாட்டை ஆண்ட மிகச்சிறந்த பிரதமர். நேருவின் காலத்தில் அரசியலில் குதித்த இவர், ராஜ வம்சத்தை சேர்ந்தவர்,இன்னொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டவர்.வினோபாபாவேவின் பூதான இயக்கத்தில் கலந்து கொண்டு தன்னுடைய எல்லா நிலங்களையும் ஏழைகளுக்கு கொடுத்தார். இந்திரா அமைச்சரவையில் இருமுறை இடம்பிடித்த இவர். எமெர்ஜென்சியில் ஆட்சியை இழந்து பின் மீண்டும் ஆட்சியை காங்கிரஸ் பிடித்த பின்பு சஞ்சய் காந்தியுடன் இருந்த நெருக்கத்தால் உத்தர பிரதேசத்தின் முதல்வர் ஆனார் மனிதர்;கொள்ளையர்களை அடக்க பல நடவடிக்கைகள் எடுத்தார் .

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கொள்ளையர்களை ஒடுக்கி விடுகிறேன் என்று தீவிரமாக இயங்கியவர் தன்னுடைய சகோதரரே கொள்ளையர்களால் உயிரிழந்த பொழுது பதவி விலகுவதாக சொல்லி நாற்காலியை துறந்தார்.இந்திராவின் மறைவுக்கு பிந்திய
ராஜீவ் அமைச்சரவையில் நிதி அமைச்சர் ஆனார்,அம்பானிக்கள்,வாடியாக்கள் உட்பட பல வரி ஏய்ப்பு செய்பவர்களை வாட்டி எடுத்தார் ,வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கணக்குகளை ஃபேர்ர்பாக்ஸ் என்கிற அமைப்பை கொண்டு விசாரித்தார்.

காங்கிரசுக்கு கரன்சிகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்த பலரின் தலைகள் உருளுவதை ராஜீவ் பார்த்து இவரை நிதி மந்திரி பதவியில் இருந்து நகர்த்தி பாதுகாப்பு மந்திரி ஆக்கினார். HDW நீர்மூழ்கி கப்பல் வாங்குவதில் நடந்த முறைகேடுகளை அவர் துருவி எடுக்க ராஜீவ் அதிர்ந்தார். அங்கேயும் தீவிரமாக இயங்கி போபர்ஸ் பீரங்கி ஊழலை நோண்டி எடுத்தார் ;பல ஆதாரங்கள் இவரிடம் இருப்பதாக கிசுகிசுக்கபட இவரை அமைச்சரவையை விட்டு இறக்கினார் ராஜீவ்.

ஜன் மோர்ச்சா தனிக்கட்சியை தொடங்கினார் வி.பி.சிங் ; தேர்தல் நடந்தது. காங்கிரசிற்கு மெஜாரிட்டி இல்லாமல் போகவே பிஜேபி ஆதரவோடு ஆட்சி அமைத்தார். பி.ஜே.பியின் நிர்பந்தத்தால் பிரச்சனைக்குரிய ஜக்மோகனை காஷ்மீர் கவர்னர் ஆக்கினார் ; காஷ்மீரை இன்னமும் ரத்தம் தோய்ந்த பூமியாக அவரின் செயல்கள் ஆக்கின.

இந்திய அமைதிப்படையை இலங்கையை விட்டு வெளியேற்றினார் ;பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார். கூடவே,பஞ்சாபில் அமைதி திரும்ப மனதார முன்னெடுப்புகள் எடுத்தார். இவரின் புகழ் உச்சத்தை நெருங்குவதை கவலையோடு காங்கிரஸ் மற்றும் பிஜேபி கவனித்தன
.

வெகுகாலமாக கிடப்பில் கிடந்த மண்டல் கமிஷனின் பரிந்துரையான பிற்படுத்தபட்டோருக்கு 27 % இடஒதுக்கீட்டை தனி மெஜாரிட்டி இல்லாத பொழுதும் தைரியமாக அமல்படுத்தினார். அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள்,தீக்குளிப்புகள் முதலியவை உயர் ஜாதியினரால் நிகழ்த்தப்பட்ட பொழுதும் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். சோம்நாத்தில் இருந்து அயோத்தி நோக்கி ரதயாத்திரை கிளம்புவதாக அத்வானி சொல்ல ஆட்சி பறிபோகும் எனத்தெரிந்தும் அறம் சார்ந்து அவரைக்கைது செய்ய உத்தரவிட்டார். ஆட்சி பறிபோனது.

அதற்கு பின்பு நடந்த அரசியல் கூட்டமொன்றில் இவர் அமர்ந்திருக்கும் பொழுது மேடையின் மீது கற்கள் வீசப்பட்டன. சரத் யாதவ்,அஜித் சிங் முதலியோர் தாக்கப்பட்டார்கள். அப்பொழுது இவர் இப்படி தீர்க்கமாக சொன்னார்,”நான் ரத்தமும்,சதையுமாக உங்கள் முன் நிற்கிறேன். என்னை தாக்க வேண்டுமென்றால் என்னை மட்டும் தாக்குங்கள் ; நான் சமூக நீதிக்காக,சமூகத்தின் சமத்துவத்துக்காக செயல்பட்டேன் என்கிற உறுதி எனக்கு உள்ளது !” என்றார். கலவரக்காரர்கள் அமைதியானார்கள்.

ஆட்சி போனதும் தேர்தல் வந்தது ராஜீவின் மரணம் காங்கிரசை அரியணை ஏற்ற நல்ல பிரதமர் ஒருவரின் காலம் முடிவுக்கு வந்தது . மீண்டும் ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் பிரதமர் ஆக வாய்ப்பு கிடைத்த பொழுதும் அதை மறுத்தார். அதற்கு இப்படி காரணம் சொன்னார் ,“இந்த அரசியலின் நோக்கம் நூற்றாண்டுகளாக அரசியல்,சமூக மற்றும் பொருளாதார அதிகாரம்,உரிமைகள்,சலுகைகள்மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அவற்றை வழங்குவதே ஆகும். அவர்கள் எதை கேட்கிறார்களோ எதை பெறுகிறார்களோ அது அவர்களுக்கு நியாயமாக உரியது. ஆகவே,அந்த சமூகங்களில் இருந்து தலைவர்கள் எழுந்து அதிகாரம் பெற்று அதை சிறப்பாக பயன்படுத்துகிற பொழுது என் வரலாற்று பங்களிப்பு முழுமை பெறுகிறது. பதவி என்பது இங்கே முக்கியமில்லை !” என்று கம்பீரமாக சொன்ன அந்த தபோவனத்து முனிவர் அப்படி எழுந்த கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகம் இல்லாததை விமர்சிக்கவும் தவறவில்லை.

அவரின் கவிதை நூலுக்கு ,’ஒரு துளி வானம், ஒரு துளி பூமி’ என்று அவர் பெயரிட்டு இருந்தார். பொழிந்து கொண்டே இருந்த வானாகவும்,தந்து கொண்டே இருந்த பூமியாகவும் திகழ்ந்தவர்.  அரசியலில் அழுக்காகாத அற்புதக்கடல் அவர் !

பொறியியல் கவுன்சிலிங்-முழு வழிகாட்டி !


பொறியியல் கவுன்சிலிங் வழிகாட்டி படித்துவிட்டு பகிருங்கள் :

பொறியியல் கவுன்சிலிங் வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வாழ்த்துகள் . மிக மிக எளிமையாக பொறியியல் கவுன்சிலிங்கில் கல்லூரிகளை தேர்வு செய்ய முடியும். உங்களுக்கு வந்திருக்கும் பொறியியல் கவுன்சிலிங் அழைப்பு கடிதத்தின் நகலை எடுத்துக்கொண்டு வந்தால் பயணம் செய்யும் சென்னை மாநகராட்சி பேருந்தில் கட்டணச்சலுகை உண்டு. ஆகவே,முன்னமே அழைப்பு கடிதத்தின் நகலை எடுத்து வாருங்கள்.

 

இச்சலுகையைப் பெற கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கும் கடிதத்தைப் பேருந்து நடத்துனரிடம்  காண்பிக்க வேண்டும். தவறாமல், அழைப்புக் கடிதத்தின் நகல்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். :

* மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல்களை கொண்டு வாருங்கள்.

* அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள், கவுன்சிலிங் நடப்பதற்கு இரண்டு மணிநேரம் முன்னமே வந்துவிடுங்கள்.

* அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்ததும் அங்கிருக்கும் வங்கி கவுண்டர்களில் உங்களின் அழைப்புக் கடிதத்தை காட்டி, ரூ.5 ஆயிரம் கட்ட வேண்டும். நீங்கள் எஸ்.சி. அல்லது எஸ்.டி. மாணவராக இருந்தால், ரூ.1000 கட்டினால் போதுமானது. இதைக்கட்டியதும் ஒரு ரசீதை எண்ணோடு தருவார்கள்.

* நீங்கள் அங்கிருக்கும் டிஸ்ப்ளே அரங்கில் ஒவ்வொரு கல்லூரியில் உள்ள காலி இடங்கள் தொடர்ந்து பெரிய திரைகளில் வந்து கொண்டிருக்கும். அதைப் பார்த்து, அதற்கேற்ப கல்லூரிகளை தெரிவு செய்து கொள்ளலாம்.

* முன்னதாகவே, குறைந்தபட்சம் மூன்று கல்லூரிகளை, அதுவும் அவற்றுக்கான எண்ணோடு (விண்ணப்பம் பெற்றபொழுது கொடுக்கப்பட்ட புத்தகத்தில் அந்த எண் இருக்கும்) குறித்துக்கொண்டு வாருங்கள்.

* உங்களுக்கான கவுன்சிலிங் நேரத்துக்கு முன்னமே நீங்கள் வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தப்படுவீர்கள். மாணவர் உடன் ஒரே ஒரு நபர் (பெற்றோர் அல்லது காப்பாளர்) மட்டுமே கூட செல்ல இயலும்.

* உள்ளே சென்றதும் கொஞ்ச நேரம் காத்திருப்பீர்கள். உங்களிடம் ஒரு சிறிய படிவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் பெயர், விண்ணப்ப எண் முதலிய விவரங்களைப் பூர்த்தி செய்து வைத்திருங்கள். மூன்று கல்லூரிகளும் கேட்கப்பட்டு இருக்கும். அதை கவுன்சிலிங் அறைக்குள் போனபிறகு பூர்த்தி செய்து கொள்ளலாம்.

* உங்களை உள்ளே அழைத்ததும் கவுன்சிலிங் அறைக்குள் செல்லலாம். முதலில் சான்றிதழ்களை சரிபார்ப்பார்கள். ஒரிஜினல்களை காட்ட வேண்டும்; சரிப்பார்த்து முடிந்ததும் ஒரிஜினல்களை கட்டாயம் வாங்கிக்கொள்ளுங்கள்.

* அதற்குப் பிறகு கணினி முன் போய் உட்காருவீர்கள். துறை அல்லது கல்லூரி சொன்னால் அதில் காலியாக உள்ள இடங்களை சொல்வார்கள். இப்படி மூன்று

சாய்ஸ்களை நீங்கள் தரவேண்டும். (கல்லூரி பெயரில் கவனமாக இருங்கள். ஒரே பெயரில் எண்ணற்ற கல்லூரிகள் இருக்கின்றன. கல்லூரி குறியீட்டு எண் இங்குதான் பயன்படும்).

* நீங்கள் கேட்ட துறை இருக்கிறது என்றால் பச்சை விளக்கு எரியும். நீங்கள் அத்துறையை எடுத்து கொள்ளலாம். சிவப்பு எரிந்தால் அத்துறை இடங்கள் பூர்த்தி ஆகிவிட்டன என்று அர்த்தம். ஒருவேளை மஞ்சள் எரிந்தால் உங்களுக்கு முன்னர் இருக்கும் மாணவர் எடுக்கும் சீட்டுக்கு ஏற்ப உங்களுக்கு அவ்விடம் கிடைக்கலாம். அதுவரை காத்திருங்கள் என்று அர்த்தம்.

* கல்லூரியை தெரிவு செய்ததும், உங்களிடம் அந்தக் கல்லூரிதானா என்று வழிகாட்டும் நபர் உறுதி செய்துவிட்டு உங்களை மேலே அனுப்புவார். அங்கே உங்களுக்கு அந்தக் கல்லூரி கிடைத்ததற்கான உத்தரவை தருவார்கள். அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். கூடவே நீங்கள் தேர்வு செய்த கல்லூரியில் கட்ட வேண்டிய மீத தொகைக்கான வங்கி சலானை தருவார்கள். அதையும் வாங்கிக்கொள்ளுங்கள். குறிப்பிட்டு இருக்கும் தேதிக்கு ஏற்ப மீதிப் பணத்தை கட்ட வேண்டும். இவ்வளவுதான் கவுன்சிலிங்.

பின்குறிப்புகள்:

* ஒரு வேளை அழைப்புக் கடிதம் வராமல் போயிருந்தாலும் சிக்கலில்லை. உங்கள் கவுன்சிலிங் நாள் என்று என்று அறிந்துகொண்டு ஒரு மணி நேரம் முன்னரே வந்துவிடுங்கள். என்கொயரி பிரிவுக்கு போய் உங்கள் விண்ணப்ப எண்ணை சொன்னால் உங்களுக்கான அழைப்பு கடிதத்தை தந்து விடுவார்கள்.

* குறிப்பிட்ட தினத்தன்று கவுன்சிலிங் வரமுடியாமல் போனால், அடுத்த செஷனில் கலந்துகொள்ள முடியும். எனினும் அப்பொழுது உள்ள இடங்களில் இருந்தே தெரிவு செய்ய முடியும்.

* முழுக்க முழுக்க வெளிப்படையாக நடக்கும் இந்த கவுன்சிலிங்கில் சீட் வாங்கித் தருகிறேன் என்று யாராவது பணம் கேட்டால் நம்பவே நம்பாதீர்கள். உங்களின் மதிப்பெண்ணுக்கு உரிய சீட் கண்டிப்பாக கிடைக்கும்.

கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

* முறையான அங்கீகாரம்!

* காற்றோட்டமான வகுப்பறைகள், நல்ல முறையில் இயங்கும் பரிசோதனைக் கூடங்கள், நூலகங்கள், விடுதி வசதிகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற அடிப்படைக் கட்டுமானங்கள் நல்ல முறையில் இருக்கின்றனவா எனக் கவனித்தல்.

* பேராசிரியர்களின் படிப்பு, அனுபவம் ஆகியவை.

* கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில் போக்குவரத்து வசதிகள், மருத்துவமனைகள் போன்றவை.

* படிப்பு முடிந்ததும் சிறந்த ப்ளேஸ்மென்ட் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றனவா என ஆராய்தல்.

* பிடித்த பாடத்தை, பிடித்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். பல சமயங்களில் பிடித்த பாடம் கிடைக்கும். ஆனால், விரும்பிய கல்லூரியாக இருக்காது. இல்லையென்றால், விரும்பிய கல்லூரி கிடைக்கும். ஆனால், பிடித்த பாடத்தில் இடம் கிடைக்காது. இதுபோன்ற சமயத்தில், எது நமக்குக் கிடைக்கிறதோ அதை நாம் விரும்பிப் படிக்க வேண்டும்.

* நான்கு ஆண்டுகள் கடினமாக உழைத்துப் படித்தால், 40 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம். ஆகவே, என்ன பாடம், எந்தக் கல்லூரியில் கிடைத்தாலும், அதை விரும்பிப் படியுங்கள். மாணவர்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம், சிறந்த முறையில் அடிப்படை வசதிகள்கொண்ட கல்லூரியாக இருக்கிறதா என்பதுதான்!

சார்லஸ் குட்இயரின் ரப்பர் கதை !


நாம் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளின் பின்னரும் எத்தனையோ ஆய்வுகளும்,அதீத உழைப்பும் உறைந்து போயிருக்கிறது என்று நாம் அறிவோமா ?
எடுத்துக்காட்டாக நாம் செல்லும் வண்டிகள் எல்லாவற்றிலும் கண்டிப்பாக இருக்கும் ரப்பர் டயருக்கு பின்னும் தன்னம்பிக்கை பொங்கும் ஒரு வாழ்க்கை கதை இருக்கிறது. அது சார்லஸ் குட் இயர் அவர்களின் கதை.

அமெரிக்காவில் பிறந்த இவர் இளம் வயதிலேயே வாட்டர் ப்ரூப் ரப்பர் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதை ஆர்வத்துடன் பார்த்தார். ஆனால் அவை
வெயில் காலத்தில் ஒட்டிக்கொள்வதையும்,குளிர காலத்தில் விரிசல் அடைவதும் மிகப்பெரிய தொல்லையாக இருந்தது. ஏதேனும் செய்து சரி செய்ய வேண்டும் என்று
ரப்பரும்,கையுமாக ஆராய்ச்சியில் இறங்கினார் அவர்.

ரப்பரைக்கொண்டு இவர் செய்து ஆய்வுகள் அவருக்கு எண்ணற்ற சோதனைகளை கொடுத்தது. கடன் அதிகமாகி அடிக்கடி ஜெயிலுக்கு போய்விட்டு வந்தார். அவர்
ரப்பரை எரிப்பது நாற்றத்தை உண்டாக்கி தூக்கத்தை,சுவாசத்தை கெடுக்கிறது
என்று போலீஸ் வரை புகார் போய் ஊரைவிட்டே காலி செய்தார். இருந்தாலும் நம்பிக்கையை விடாமல் ஆய்வுகள் மட்டும் நகர்ந்து கொண்டே இருந்தன.

நைட்ரிக் அமிலத்தை ரப்பரில் கலந்து தயாரித்த பொருட்கள் நல்ல முடிவையே ஆரம்பத்தில் தந்தன. அவற்றைக்கொண்டு ரப்பர் பைகள் செய்து அவர் அரசாங்க
தபால் துறைக்கு அனுப்பி வைத்த பின்னர் அவை ஒட்டிக்கொண்டும்,விரிசல்
தந்தும் தொல்லைகள் கொடுப்பதாக எல்லாம் திருப்பி அனுப்பப்பட மனம் நொந்தார். ஒரு நாள் கந்தகம் மற்றும் காரியத்தை ரப்பரோடு கலந்து ஆய்வுகள்
செய்து கொண்டிருந்தார். 

அப்பொழுது அந்த கலவை அருகில் இருந்த அடுப்பில் தெரியாமல் எதேச்சையாக பட்டது. அதை அதற்கு பின்னர் எடுத்து பார்த்த பொழுது
அது பிசுபிசுப்பு இல்லாமல் இருந்தது. அதை பயன்படுத்தி பார்த்த பொழுது விரிசலோ,ஒட்டிக்கொள்ளுதலோ நிகழவில்லை. அவை நன்றாக வளைகிற தன்மையும்
கொண்டிருந்தன. அதற்கு காப்புரிமை பெற்றார் அவர். அங்கே இருந்து தான் எல்லாரும் எக்காலத்திலும் பயன்படுத்தக்கூடிய டயர்கள் உலகுக்கு கிடைத்தன. அந்த முறைக்கு வல்கானைசேஷன் என்று பெயரிடப்பட்டது. இயர் வறுமையில்
வாடித்தான் இறந்து போனாலும் அவரின் கண்டுபிடிப்பு மனித குலத்துக்கு மாபெரும் பாய்ச்சலை வழங்கியது என்பதே சரி. அந்த முறைக்கு அவர் காப்புரிமை பெற்ற தினம் ஜூன் 15

மாவீரன் அலெக்சாண்டர் !


மாவீரன் அலெக்சாண்டர் தன்னம்பிக்கைக்கான அடையாளம். மிகச்சிறிய பிரதேசத்தில் இருந்து கிளம்பி அவர் காலத்தில் அறியப்பட்ட நிலப்பரப்பில் பெரும்பகுதியை தன் வீரத்தால் வென்றவர் அவர். இளம் வயதில் யாரும் அடக்க
யோசித்த முரட்டு குதிரையை அது நிழலை பார்த்து அஞ்சுகிறது என்று கண்டறிந்து எதிர் திசையில் திருப்பி அடக்கி தன்னுடைய சொத்தாக அவர் ஆக்கிக்கொண்டார்.

தந்தையின் விருப்பத்தின் பேரில் அரிஸ்டாட்டில் அவர்களிடம் கல்வி கற்றார் அவர். ஹோமரின் இலியட் ஒடிசி நூல்களை படித்து முடித்ததும் அவரின் உலகை
நோக்கி பயணம் போகவேண்டும் என்கிற ஆர்வம் பொங்கியது. கூடவே வாசனைப்பொருளை அதிகம் ஒருமுறை வகுப்பில் பயன்படுத்திய பொழுது ,”இந்தியாவில் இருந்து
வரும் அரிய பொருளது ! பார்த்து சிக்கனமாக பயன்படுத்து !” என்று ஆசிரியர் கடிந்தது இந்தியாவை நோக்கி அவரின் கனவுகளை செலுத்தியது. அப்பா பிலிப்
ஓரு போரில் கொல்லப்பட இருபது வயதில் மன்னரானார் அலெக்சாண்டர்.

சின்ன சின்ன கனவுகள் காணத்தெரியாத அவர் உலகமே தன்னுடைய எல்லை என்று
எண்ணிக்கொண்டார். பல்வேறு நாடுகள் மீது படையெடுத்தார். பாரசீகம் துவங்கி இந்தியா வரை அவரின் வெற்றிகள் நீண்டன. இந்தியாவிற்குள் நுழைய வந்த பொழுது
ஆரம்பத்தில் சில மன்னர்கள் போர் செய்யாமல் அடிபணியவே இந்தியர்கள் இப்படிதான் என்று எண்ணிக்கொண்டு இருந்தார் அவர்.போரஸ் என்கிற மன்னன் அதீத
வீரம் காட்டிய பொழுது யானைப்படையை படாத பாடுபட்டு சமாளித்த அலெக்சாண்டர் அவரை கைது செய்ததும் ,
“என்ன வேண்டும் உனக்கு ?” என்று கேட்டதும் போரஸ் கம்பீரமாக ,”மன்னனைப்போல நடத்து என்னை !” என்றார்.

இந்தியாவின் வெப்ப பருவநிலை,போரஸ் உடன் புரிந்த அதிரவைக்கும் போர்,வீட்டு ஞாபகம் ஆகியன கிரேக்க வீரர்களை மேலும் முன்னேற விடாமல் செய்தன. மீண்டும்
தாயகம் திரும்பினார் அலெக்சாண்டர். போகிற வழியில் பாபிலோனியாவில் தங்கினார். அங்கே பெரிய மது விருந்துக்கு பிறகு உடல்நலம் குன்றி அவர்
இறந்து போனார். அப்பொழுது அவருக்கு வயது முப்பத்தி மூன்று. 

கால் பட்ட பகுதிகளில் எல்லாம் வெற்றிகளை குவித்த அலெக்சாண்டர் இறக்கிற பொழுது
இப்படி சொன்னார் ,”என் கல்லறையில் என் கரங்களை வெளியே தெரியும்படி வைத்திடுங்கள். உலகையே வென்ற அலெக்சாண்டர் போகிற பொழுது வெறுங்கையோடு
தான் போனான் என்று உலகம் அறியட்டும் !” தன்னை வெல்லுதல் மிகப்பெரிய வெற்றி என்று சொல்லாமல் சொன்ன தன் எதிரிகளை கண்ணியமாக நடத்திய
மாவீரனை நினைவு கூர்வோம்

மாமேதை மாக்ஸ்வெல் !


இயற்பியல் உலகில் ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டன் ஆகிய இருவருக்கும் இணையாக புகழப்பட வேண்டிய இன்னொரு மேதை மாக்ஸ்வெல். பதினாறு வயது நிரம்புவதற்குள்
அறிவியல் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கிற அளவுக்கு அவர் மேதையாக இருந்தார். மாக்ஸ்வெல் காம்ப்ரிட்ஜ் பல்கலையில் பேராசிரியராக பணியாற்றினார்.

மின்னியல் மற்றும் காந்தவியல் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்று ஏற்கனவே அறிவியலில் புரிதல் இருந்தாலும். அவைப்பற்றி விதிகளும்
இருந்தன. என்றாலும் இவை இரண்டையும் இணைக்கிற பணியை மாக்ஸ்வெல் அவர்களின்
நான்கு சமன்பாடுகள் செய்தன.

மின்சாரம்,காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என்பதை அவரின் சமன்பாடுகள் காட்டிய பொழுது இயற்பியல் உலகம்
நிமிர்ந்து உட்கார்ந்தது. மேலும் வெளியில் பரவும் மின்காந்த அலைகளின் திசை வேகத்தை அவர் கண்டறிந்து சொன்னார். அது ஒளியின் திசை வேகத்தை
ஒத்திருப்பதை கண்டு ஒளியும் மின்காந்த அலைகளால் ஆகி இருக்கிறது என்று அறிவித்தார். ஒளியில் இருந்து சற்றே மாறுபட்ட அலைநீளமும்,அதிர்வெண்ணும்
கொண்ட மின்காந்த அலைகள் இருக்கும் என்று அவர் ஊகமாக தெரிவித்ததை அவருக்குப்பின் வந்த ஹெர்ட்ஸ் தன்னுடைய ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தினார்.

ஆப்டிக்ஸ்,வெப்ப இயக்கவியல் துறையிலும் மகத்தான ஆய்வுகளை செய்த மாக்ஸ்வெல் சனிக்கோளின் வளையம் தூசிகளால் ஆனது என்றும்,மூன்று அடிப்படை
வண்ணங்கள கொண்டு புகைப்படத்தில் எண்ணற்ற வண்ணங்களை கொண்டுவர முடியும் என்றும் மாக்ஸ்வெல் நிரூபித்தார்.

ஹெர்ட்ஸ் மின்காந்த அலைகளை உருவாக்கியும்,அவற்றின் பண்புகளையும் தெளிவாக சொன்ன பொழுது அவரை எல்லாரும் புகழவே ஹெர்ட்ஸ் தன்னடக்கமாக ,”இதெல்லாம்
மேக்ஸ்வெல் எனும் மாமேதையின் சாதனைகள். அதை மீண்டும் இவை நிரூபிக்கின்றன. நான் செய்திருப்பது ஒரு சிறு துளியே !” என்று தன்னடக்கமாக சொன்னார். மாக்ஸ்வெல் புற்றுநோயால் நாற்பத்தி எட்டு வயதில் மரணமுற்றாலும் அவரின் பங்களிப்புகள் அறிவியல் உலகின் செயல்பாடுகளை பல்வேறு தளங்களுக்கு இட்டுச்செல்கிறது.

அகிலமெங்கும் ஒரே அப்பா !


அப்பாக்கள் அழகானவர்கள்;அற்புதமானவர்கள். சத்தமில்லாமல் உலகை எளிமையான,போற்றுதல்கள் இல்லாத அன்பால் நிறைத்து விட்டுப்போகும் மாயம் அவர்களுக்கு வரமாகவும்,சாபமாகவும் தொடர்ந்து வந்திருக்கிறது. பல மாமனிதர்கள் தந்தைகளால் ஆக்கப்பட்டு உள்ளார்கள். அதைப்பற்றிய ஒரு சின்னத்தொகுப்பு இதோ 

உலகின் எல்லா மூலைகளையும் முற்றுகையிட்ட சிவப்பு சித்தாந்தத்தை தந்த காரல் மார்க்ஸ் அவர்களை அவர் போக்கில் விட்ட,என்ன செய்தாலும் ஏன் என்று கேட்காத அதீத அன்புக்காரர் அவர் தந்தை. “உன் பையன் சீரழிகிறான்.பார்த்துக்கோ !”என ஊரில் உள்ளவர்கள் அவரை உசுப்பேற்றிய பொழுதெல்லாம் மகனுக்கு இன்னம் கொஞ்சம் கூடுதலாக பணம் அனுப்பிய வித்தியாசமான தந்தை அவர். காரல் மார்க்ஸ் இறக்கும் வரை அந்த இணையில்லா தகப்பனின் படம் சட்டைப்பையில் மகனின் துன்பங்களுக்கு நடுவே நம்பிக்கை கீற்றாக மின்னிக்கொண்டு இருந்தது 

முழுக்க முழுக்க மேற்கத்திய பாணியில் வாழ்க்கை வாழ்ந்தவர் மோதிலால் நேரு . வீட்டில் அந்த காலத்திலேயே மின்சாரம்,வெள்ளையரைப்போல உணவு பழக்கம்,மகனை பள்ளியில் இருந்து கூட்டு வர எல்லா பள்ளியின் எல்லா வாசல்களிலும் கார்கள்,வீட்டில் நீச்சல் குளம்,புலால் உணவு என ஏகபோக வாழ்க்கை அவருடையது . எதை வேண்டுமானாலும் விடுத்து அவரால் இருக்க முடியும் ; பிள்ளைப்பாசம் என்பதை மட்டும் விட முடியாத ஒரு நபராக அவர் இருந்தார். லட்சங்களில் வருமானம் ஈட்டித்தந்த வக்கீல் தொழிலை மகனுக்காக விட்டு வெளியேறினார். ஜவகர்லால் நேருவுக்காக தானும் விடுதலைப்போரில் ஈடுபட்டார் . 

சிறையில் மகன் மீது கொண்ட பாசத்தால் உள்ளே போனவர் வீட்டு சாப்பாடு இல்லாமல் அவதிப்பட்டார் . அதைக்கொண்டு வர சொன்னார் , நேரு அப்படியே சாப்பாட்டை வெளியே எறிந்து விட்டு ,”அப்பா எத்தனை மக்கள் எளிய உணவு உண்டு நாட்டுக்காக போராடுகிறார்கள்.என கடிந்து இவரை விடுதலைப்போரில் ஈடுபட வைத்தார் . வெறுந்தரையில் பிள்ளைப்பாசத்துக்காக படுத்து நாட்டு விடுதலைப்போரில் பங்குகொண்டார் மனிதர் . அரச மாளிகைக்கு ஈடாக கட்டப்பட்ட தன்னுடைய ஆனந்த பவனத்தை நாட்டு விடுதலைப்போருக்கு அர்ப்பணித்தார் மனிதர் 

லிங்கன் அப்பா ஓயாமல் உழைத்தவர் ;இதுதான் வேலை என்று என்றைக்கும் வகுத்துக்கொண்டது இல்லை மனிதர் ஓயாத உழைப்பு,யாரையும் ஏமாற்றக்கூடாது . சக மனிதரிடம் அன்பாக இருக்கவேண்டும் என்பது தான் வாழ்க்கையின் நோக்கம் என்று வாழ்ந்த அற்புத ஆத்மா அவர். அதையே வாழ்நாள் முழுக்க லிங்கன் கடைபிடித்தார். தன் அப்பா தனக்கு சேர்த்து வைத்து விட்டுப்போன செல்வங்கள் அவை என ஆனந்த கூத்தாடினார். “உன் தந்தை தைத்த செருப்பு என் கால்களை அலங்கரித்து கொண்டிருக்கிறது லிங்கன் ” என்று ஒரு செனட்டர் சொன்னபொழுது லிங்கன் புன்னகை மாறாமல் ,”இன்னமும் அந்த செருப்பு பிய்ந்து போகாமல் இருக்கிறது என்றால் அது என் தந்தையின் உழைப்பை அல்லவா காட்டுகிறது. பிய்ந்தால் செருப்பை கொடுங்கள்;தைத்து தருகிறேன். என் தந்தை கற்றுத்தந்த தொழில் அல்லவா அது . எப்பொழுதும் கைவிடாது ” என சொன்னார் 

விம்பிள்டனை பெடரரிடம் இருந்து நடால் வென்ற பின்னர் வாழ்வின் மிகவும் வலிமிகுந்த கட்டம் நடாலுக்கு காத்திருந்தது. அவருக்கு அடிக்கடி காலில் வலி வர ஆரம்பித்து இருந்தது. இடது காலில் ஒரு சிறிய எலும்பில் சிக்கல் இருந்தது. இளம் வயதிலேயே அந்த குறைபாடு இருந்து அதை கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். அதனால் அதன் சிக்கல் பெரிதாகி டென்னிஸ் வாழ்க்கையே நடாலுக்கு முடியக்கூடும் என்று மருத்துவர் எச்சரித்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றோடு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இருந்து வெளியேறுவது நடந்தது. கண்ணீர் விட்டு அழுதார் நடால். 

அதுவரை எப்பொழுதும் பெரும்பாலும் வாயைத்திறந்து பேசாத அவரின் அப்பா பேசினார்,”பார்த்துக்கொள்ளலாம் ! இது இல்லாவிட்டால் என்ன ? கோல்ப் ஆடப்போகலாம் நீ ! உனக்கு நிரம்ப பிடித்தது இல்லையா அது ? மேலும் அப்படி ஆட முடியாமல் போகலாம் என்று தான் மருத்துவர் எச்சரித்து இருக்கிறார். அதுவே நடக்க வேண்டும் என்று அவசியமில்லை !” என்று தந்தை சொல்ல உற்சாகம் ததும்ப மீண்டும் மீண்டு வந்தார் நடால். போட்டிகளில் கலந்து கொண்டார். பெடரரை ஹார்ட் கோர்ட்டில் வென்றதும் நம்பிக்கை பிறந்தது. அப்படியே அடித்து ஆடி நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளையும் இளம் வயதில் வென்றவர் என்கிற சாதனை அவர் வசம் வந்து சேர்ந்தது 

பீலே பிரேசிலின் மத்திய பகுதி மாநிலம் ஒன்றில் வாழ்ந்து வந்தார். வறுமையான குடும்பம்,அப்பா கால்பந்து ஆடுவதை கண்கள் விரிய பீலே கண்டார். அவரின் அப்பா ஒரே ஒரு போட்டியில் தலையால் மட்டுமே ஐந்து கோல்கள் அடித்ததை பார்த்து இப்படி ஒரே ஒரு முறை சாதனை புரிந்துவிட்டால் போதுமே என்று கால்பந்து மீது வெறிகொண்டு அவர் விளையாட வந்தார். இறுதிவரை தன்னுடைய தந்தையின் சாதனையை அவர் முறியடிக்கவே இல்லை. நான்கு கோல்களை ஒரே போட்டியில் தலையால் தட்டி அடித்த கணம் அவருக்கு வாய்த்தது. “என் தந்தையின் சாதனை என்றைக்கும் அப்படியே இருக்கட்டும் !” என்று உணர்ச்சி பெருக்கோடு விடைபெற்றார் கருப்பு முத்து ! நடுவில் மூன்று உலகக்கோப்பைகள் பிரேசில் வசம் வந்திருந்தன

சச்சின் அப்பா மராத்தி எழுத்தாளர் ; கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாது. “நான் டென்னிஸ் ஆடப்போகிறேன் !”என்று சச்சின் சொன்னாலும் சரி என்பதே அவரின் பதிலாக இருக்கும் . நான் தேர்வெழுத போவதில்லை போட்டி இருக்கிறது என்றாலும் உன் இஷ்டம் என்பதே அவரின் பதில். கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் என்னவென்று சச்சின் அவரிடம் விளக்கி சொன்னதில்லை,ஆனால்,”உனக்கு பிடித்ததை செய் !”என கைதட்டி கொண்டாடிய அப்பா அவர். மகனை எல்லாரும் புகழ்கிறார்கள் என்று தெரியும் ; பெரும்பாலும் சச்சின் இருக்கும் பொழுது எந்த முகமாற்றமும் காட்ட மாட்டார். ஆனால், மூத்த பெண்ணை மணக்கிறேன் என்று சச்சின் வந்து நின்ற பொழுதும் நோ சொல்லாத மனிதர் . ஆனால்,ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் வலியுறுத்தி சொல்வார் தன் செயல்களின் மூலம் .

உலககோப்பை 1999 வருடம் வந்தது ; தந்தைக்கு உடல்நிலை மோசமான பொழுது சச்சின் வெளிநாட்டில் ஆடிக்கொண்டு இருந்தார். உயிர் போகிற தருவாயிலும் ,”செய்கிற கடமையே முக்கியம் ; வரவேண்டாம் . அங்கே அவனை ஆடச்சொல்லுங்கள் !”என்று அவர் சொன்னதை சொல்லித்தான் சிவந்த கண்களோடு சச்சினை வீட்டை விட்டு அனுப்பினார்கள். கென்யாவுடன் நூற்றி நாற்பது ரன்களை அடித்த பொழுது அந்த சதத்தை தலையை தூக்கி தன் அப்பாவுக்கு சமர்ப்பித்தார் சச்சின். இன்று வரை தொடர்கிறது அது. சச்சினின் ஆட்டம் அவர் அப்பாவுக்கு புரியாமல் இருக்கலாம்,அன்பின் மொழி புரிந்திருக்கும்

தன் பிள்ளைகளுக்காக இப்படி உதவிய தந்தைகள் ஒருபுறம் என்றால் வித்தியாசமான தந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். சொத்தில் தொன்னூறு சதவிகிதத்துக்கு மேல் அறக்காரியங்களுக்கு கொடுத்து விட்டு கைகட்டி நிற்கிறார் பில்கேட்ஸ். முழுதாக கொடுத்துவிட்டு என் மகன் சொந்தக்காலில் நிற்பான் என்கிறார் ஜாக்கிசான் 

அப்பாக்கள் வரலாறு முழுக்க நிரம்பிக்கிடக்கிறார்கள் ; வரலாறாகவே இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்

அப்பாக்களால் அழாமல் இருக்கிறது உலகம்


இந்த கட்டுரையை எப்படி தொடங்குவது என சத்தியமாக எனக்கு எந்த திட்டமும் இல்லை !பல நாளாக தூரிகையை தீண்டாமல் பைத்தியம் பிடித்து கிடந்த வான்காவின் உள்ளப்பெருக்கை கொட்டுவதற்கு அவர் அண்ணன் வாய்த்ததுபோல எனக்கு வாய்த்தவர் என் அப்பா.அவரினை பற்றி ஒரு தெளிவான பிம்பம் தருவது அல்ல என் நோக்கம்.என் தந்தை எனக்குள் உருவாக்கிய மாற்றங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு சின்ன பகிர்வே இது 

 

என் ஊர் பொன்பத்தி எனும் குக்கிராமம்;என் அப்பாவின் பெயர் பூங்காவனம்.அவர் அடிப்படையில் ஒரு பி.காம் பட்டதாரி.நான் முக உருவில் அவரின் அச்சுப்பிரதி .ஆனால் குணத்தில் அவரை மாதிரி இரண்டு முனைகளின் உச்சமாக சத்தியமாக என்னால் முடியாது.அவரை மாதிரி தெருவில் போக்கிரித்தனம் பண்ணிய ஆள் ஒரு காலத்தில் கிடையாது ,ஹாக்கி விளையாட போன இடங்களில் அவரும் அவர் கூட்டாளிகளும் உடைத்த மண்டைகளின் எண்ணிக்கை ஏராளம் !ஆனால் ஊர் பக்கம் போனால் அவரை மாதிரி ஒரு நல்ல பையன் இல்லை என சொல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.இவருடன் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர்,வீட்டை விட்டு இவரை என் பாட்டி வெளியேறச்சொன்ன பொழுதும் சரி,இருந்த கொஞ்ச நிலத்தை பிரிப்பதில் இவருக்கு பாரபட்சம் காட்டிய பொழுதும் சரி மனிதர் முகத்திலோ,மனதிலோ எந்த வகையான சலனமோ,எதிர் வினையோ ஏற்பட்டது இல்லை !”அப்பா அம்மாவை எதிர்த்து பேசி என்னடா பண்ணப்போறோம் ?!” என கேள்வி கேட்டு விட்டு நடையைக்கட்டி விடுவார் 

 

சரி இது தான் இப்படி என்றால்,இவரின் கல்வி வரலாறு இன்னமும் சுவாரசியமானது ,அவர் சார்ந்த சமுகத்தில் பிள்ளைகளை படிக்க செலவு செய்ய மறுத்த நிலையில் சொந்தமாக மூட்டை தூக்கி படித்து பி.காம்.பட்டம் பெற்றார்.ஆனால் விதியின் வன்னகையோ என்னவோ ,அன்றைக்கு சுமை தூக்க ஆரம்பித்த என் தந்தை இன்று வரை அந்த சுமை தூக்கலை விட முடியவில்லை.இப்பொழுதும் எண்பது கிலோ சிலிண்டரை என் அப்பா  தோளில் தூக்கும் பொழுது நெஞ்சம் கனக்கும்,ஒரு ஸ்டவ் மெக்கானிக்காக தன் வாழ்வை கட்டமைத்து கொண்டார்.அவரின் தோற்றம் இப்படி தான் !ஒரு காக்கி உடை ,நெற்றி நிறைய விபூதி,எல்லாருக்கும் தாரளமாக பொங்கும் சிரிப்பு,இன்னமும் மாற்றிக்கொள்ளாத டி.வி.எஸ். பிப்டி செருப்பே அணிய மறுத்து விடுகிற கால்கள்,எல்லாவற்றிற்கும் மேலாக யாரையும் புண்படுத்தாத சொற்கள்.

மனிதின் அன்றாட அலுவல்களை  சொல்கிறேன் கேளுங்கள் !அம்மாவிற்கு உடல் நலம் முடியாது ஆதலால் மனிதர் காலையில் தானே எழுந்து எல்லா வேலையையும் முடித்து விடுவார் !அவர் எழுந்து இருக்கும் பொழுது அனேகமாக மணி மூன்று இருக்கும்.என் அப்பாவின் சமையல் தனி ரகம்,எல்லா உணவும் நாக்கை தொட்டு விடா விட்டாலும்,அவர் எனக்கு பிடிக்கும் என்று இரவே ஊற வைத்து சமைத்து  தரும் உருளைக்கிழங்கு பொரியல்,பிள்ளை அடுத்த போட்டிக்கு கிளம்பி விடுவனோ என்கிற அவசரத்தில் அவரின் அமுது போன்ற வியர்வை கலந்து சமைக்கிற முருங்கைக்கீரை சாம்பார் எல்லாமே நாவோடு இன்னமும் வாழ்பவை.லா.சா.ராவின் பாற்கடலில் வரும் நார்த்தங்காய் ஊறுகாயை விட எல்லாருக்காகவும் தன்னை கரைத்துக்கொண்ட ஜீவன் என் அப்பா !இது முடிந்து எப்படியும் இருப்பது துணிகளையாவது தினமும் கிணற்றடிக்கு கொண்டு போய் தோய்த்து விட்டு வருவார் ,போகும் பொழுது மறக்காமல் தான் நாய் பிள்ளைகளுக்கு தனி சாப்பாடு வேறு சமைத்து விட்டுப்போவார்.கூடவே நான்கு  பிஸ்கட்  பாக்கெட்கள் அவரின் வண்டியோடு பயணம் போகும் அவை தெருவில் காத்து இருக்கும் அவரின் மற்றும் சில நாய் சகாக்களுக்கு!

 

இதோடு வீட்டு வேலை முடிந்தது என்றால் அவர் அடுப்பை சீர் செய்ய  எடுத்துக்கொள்ளும்  மெனக்கிடல் எனக்கு “தாள் கண்டார் தாளே கண்டார் !”என்கிற வரிகளை அலையடிக்க செய்கிறது.நிச்சயமாக அவ்வளவு அழகியல் இருக்கும் அவரின் வேலையில்,அவர் ஒரு அடுப்பை தன் பிள்ளைபோல தடவி,அதன் துருவை பல காலம் தொடாத வயலினை இசைக்கலைஞன் தொடுவது போல பொறுமையாக தொட்டு ,அதன் சிக்கலை அம்மாவை போல விசாரித்து அதை சரி செய்து கொடுக்கும் பொழுது நம் கண் முன்னே அந்த அடுப்பு புதிதாக பிறந்து இருக்கும் ,அவ்வளவு ஒரு நேர்த்திக்காரர் அவர்.இதற்கு நடுவில் பல மண்டபங்களுக்கு சிலிண்டர் சுமந்து  போய் போடுவார்,என்னை வகுப்புகளில் ஆரம்ப காலங்களில் சரியாக படிக்காத பொழுது டேய் சிலிண்டர் என ஆசிரியை அழைத்ததை அப்பாவிடம் சொன்ன பொழுது என்னை தூக்கிக்கொண்டு என் அப்பா ஏதோ சங்கீதமாய் சொன்னார் ,”யார் உன்னை காயப்படுத்த நெனைச்சாலும் ,அவங்களுக்கு ஒரு சிரிப்பை மட்டும் பரிசாக கொடு குட்டிப்பா!”என அதன் நாதம் சொன்னது.”திக்குவாய் !”என பிறர் சொன்ன பொழுது என் அப்பா நாயை கூப்பிட்டு வந்து “போடா உன் அண்ணன் கூட பேசு என்பார் !”அங்கே பேச தொடங்கியவன் நான்.முட்டாள் என பிறர் சொன்னதாக நெஞ்சம் புதைத்து அழுதபொழுது ,”பானிபூரி சாப்பிடலாமா பூ.கொ.உனக்கு பிடிக்குமே !”என கேட்பார்.”மொக்கை போடுகிறான் !”என பிறர் சொன்னதாக சொல்லி புலம்பிய பொழுது ,”எல்லார் கூடவும் குடும்பம் நடத்தாதே !கடந்து போக கத்துக்கோ !”என சொன்ன அவரின் வார்த்தைகள் பத்து வருடம் கடந்தும் ஒலிக்கின்றன 

 

அவருக்கு என்னை ஒரு கதை சொல்லி ஆகி பார்ப்பதில் அத்தனை விருப்பம்.ராணி காமிக்சை  அவர் என் கையில் திணித்த பொழுது நான் ஆறு வயசு பாலகன் ,ஜூ.வி.என் கையில் சேர்க்கப்பட்ட பொழுது எனக்கு எட்டு வயது ,எனக்கு தெரிந்து ஒரு வாரத்திற்கு வெறும் ஐநூறு ரூபாய் எட்டிய காலத்திலேயே அவர் எனக்கு நூறு ரூபாய் புத்தகத்திற்கு செலவு செய்தார் !என் அம்மா பள்ளி ஆசிரியை ஆனவர் ஆதலால் என்னை அடி பின்னி விடுவார் !இன்னமும் அதன் அடையாளங்கள் என் உடலில் கொட்டி கிடக்கின்றன !ஆனாலும் அதை விட என் அப்பா என்னை ஒன்றுமே சொல்லாமல் தழுவிக்கொண்டு தந்த ஒற்றை முத்தத்தின் ஈரம் தான் காணாமல்  போய் விட்டது.நான் பேசுவதை கேட்பதற்காக தனக்கு  இருந்த பின்கழுத்து தேயலை மறைத்துக்கொண்டு எட்டு வருடம் என்னோடு இணைந்து பொன்பத்தி சாலை முழுக்க தனித்தனி சைக்கிளில் பயணம் செய்தப்படியே உலகையே நாங்கள் அலசும் பொழுது,ஒரு முப்பது பேர் எங்களுக்கு பின்னும்,முன்னும் மெதுவாக போகும் பொழுது,”மகனே ரசிகனுக்கு என்னைக்கும் போரடிக்கிற மாதிரி பேசக்கூடாது புரியுது இல்ல !”என்பார்.இப்பொழுது அப்பாவால் சைக்கிள் ஒட்ட முடியாது ,கழுத்து எழும்பு தேய்ந்து போய் ,என்னுடைய  வளர்ச்சியை வார்த்தவர் அவர் 

 

அது ஒரு தீபாவளி தினம்,சிலிண்டர் அவர் காலின் மீது விழுந்து சரி ஆழமாக ஒரு காயம் ஏற்ப்பட்டு அதை மறைத்துக்கொண்டு பிள்ளைகள் தீபாவளியை கொண்டாடட்டும் என அமைதியாக காக்கி பேண்டின் ஊடாக காயத்தை மறைத்துக்கொண்டு இருந்தவர் அவர் .யாரின் கருத்துக்களுக்கும் முன் தடையாக நிற்க மாட்டார் ,நான் பதினோரு வயதில் சைவமானதும் அவர் அதை அப்படியே ஏற்றுக்கொண்டார் ,”கண்ணா ஒரு விசயத்தில குதிக்கிறதுக்கு முன்னாடி மனசார அதை காதலிக்க ஆரம்பிச்சுடு !”என  அவர் சொல்லியது இன்னமும் என்னை வழிநடத்துகிறது .பெரியாரையும் ,காந்தியையும்,அம்பேத்கரையும் ,மார்க்சையும்,இன்னம் சொல்வதென்றால் எங்கள் ஊர் நூலகத்தின் ஒட்டு மொத்த புத்தகத்தையும் எனக்காக ஏலம் எடுத்த என் தந்தைக்கு ஆழ்ந்த வாசிப்பு கிடையாது ,காரணம் இரவானால் பார்வை ரொம்பவே ,மந்தம் ஆனாலும் நான் எழுத்தும் கட்டுரையை வரிக்கு வரிக்கு படித்து விடுவார் !”இதெல்லாம் ஒரு எழுத்தா?”என என்னை அருமை நடுவர் கிண்டலடித்த பொழுது ,”எழுத்துல பெருசு சிறுசு எல்லாம் கிடையாது .எது உண்மை சொல்லுது ,எது பொய் சொல்லுது !அப்படிங்கறது மட்டும் தான் முக்கியம் நீ மேல எழுது !”என  அவர்  சொன்னதை விடப்பெரிய பத்திரிகை  பாடம் இருக்க முடியாது .ஒரு ஐம்பது காதல் ஜோடிகளை சேர்த்து வைத்து இருப்பார்.நானும் அவரும் இணைந்தே சைட் அடிக்க போவதாக கமென்ட் அடிக்கிற அளவிற்கு சுதந்திரம் உண்டு 

 

அவரின் கவலைகளுக்கு என்றைக்கும் மது,சிகரெட் ஆகியவற்றை தொட்டது இல்லை,டீ காபிக்கு பெரிய தடா !மனிதர்களை மட்டுமே சம்பாதித்த என் அப்பாவின் வங்கி கணக்கில் இன்றைக்கு அறுநூறு ரூபாய் தான் இருக்கிறது ,ஆனால்  என் தங்கையின் விழாவிற்கு அவரின் மனிதர்கள் மூவாயிரம் பேர் வந்தார்கள் !நான் பத்தாம் வகுப்பு இறுதி தேர்வில் இருக்கும் பொழுது அரட்டை அரங்கத்திற்கு என்னைப்பேச  அழைத்துப்போன நம்பிக்கைகாரர் அவர் .நான் பன்னிரெண்டாம் வகுப்பில் அம்மா எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறமால் போனாலும் ,”அடுத்தது என்னனு பாரு !”என்கிற அப்பாவின் நம்பிக்கை ஊட்டுகிற வார்த்தையில் மாற்றம் இல்லை.பெண்களை எல்லாம் அவரை விட பெரிதாக மதித்து விட முடியாது !அவரின் ஒரு பிரதிபிம்பாகவே நான் முயற்சிக்கிறேன் !அவருக்கு ஒழுங்காக ஐந்து செட் துணிக்கிடையாது,ஆனால் நான் குவித்த பதக்கங்களை வைக்க இன்னொரு அலமாரி கட்ட வேண்டும் என சொல்கிற நம்பிக்கைகாரர்.மருத்துவன்,எழுத்தாளன்,கவிஞன் என விரிந்து பொறியியல் மாணவன் என என் கனவுகள் எப்படி எல்லாமோ மாறி இருக்கிறது ஆனாலும் அதே  காக்கி சட்டை ஒழுகும் வியர்வை அதோடு புன்னகையில் தெறிக்கிற நம்பிக்கையோடு இருக்கும் என் அப்பாவை பார்க்கிற பொழுதெல்லாம் ,”அப்பா நீ தான் என் தாயுமானவன் “என சொல்ல எண்ணி எண்ணி மனம் துடிக்கிறது !அவரின் நம்பிக்கை விதை தான் என்னை ஐம்பது நாடகங்களின் இயக்குனராகவும் ,ஐநூறு ஒட்டு பெற்று ஜெயித்த மாணவர் தலைவனாகவும்,மூன்று முறை வினாடி வினாவில் மாநில முதல்வனாகவும்,கம்பராமாயண ,பெரியபுராண ,திருவாசக சொற்பொழிவாளர் ஆகவும் ,இருநூறு  மேடை தொட்டவனாகவும் ,பல பள்ளி மாணவரின் மன  காயம் துடைக்கும் நண்பனாகவும் ,இன்னமும் சொல்வதென்றால் யாருக்கும் தலைவணங்காத நேர்மைக்காரனாகவும் ஆக்கி இருக்கிறது .ஆனாலும் இப்படி தான் என்னை இந்த உலகம் அறிய ஆசை ,”காஸ் மெக்கானிக் பூங்காவனத்தின் மகன் இவன் !”அப்பா இந்த கட்டுரை இருபது வருடமாக உங்கள் காலை தொட்டாலும் இன்னமும் தொட முடியாத  உயரத்தில் அன்பு காட்டும் உங்களுக்கான ஒரு சிறு சமர்ப்பணம் .அம்மாக்களால் உலகம் புனிதம் அடையலாம்,ஆனால் அப்பாக்களால் தான் அழாமல் இருக்கிறது .