ரத்த பிரிவு கண்டறிந்த கார்ல் லேண்ட்ஸ்டேயினர்


கார்ல் லேண்ட்ஸ்டேயினர் ரத்த வகைகளை கண்டறிந்த அற்புத மருத்துவர், ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுதே தந்தையை இழந்த இவர் அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார். மருத்துவம் பயின்ற பின்னர் அவர் உயிரிவேதியியல் துறையில் தன்னுடைய ஆர்வத்தை திருப்பினார். நாம் உண்ணும் உணவு எப்படி நம்முடைய ரத்தத்தில் இருக்கும் வெவ்வேறு தனிமங்களின் அளவை தீர்மானிக்கிறது என்று ஆய்ந்து சொன்னார்.
நோய் எதிர்ப்பியல் மற்றும் ஆண்டிபாடிகள்பற்றியும் தீவிரமாக ஆய்வுகள் செய்தார் அவர். நோய்க்கிருமிகளின் உடற்கூறியல் துறையிலும் ஓயாத உழைப்பை செலுத்திய இவர் நோய் எதிர்ப்புக்கு காரணமான ஹெப்டான்களை கண்டுபிடித்தார்.


இவரின் ஆய்வு ஆர்வம் எந்த அளவுக்கு இருந்தது என்பதை ஒரு சம்பவத்தின் மூலம் விளக்கலாம். போலியோ மைலிடிஸ் நோயைப்பற்றி ஆய்வுகள் செய்து கொண்டிருந்த இவர் அந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்த குழந்தைகளின் மண்டையோட்டை அரைத்து குரங்குகளுக்குள் செலுத்திய பொழுது அவையும் அந்நோயால் பாதிக்கப்பட்டன என்பதைக் கண்டார். அதன் மூலம் நோய் எதிர்ப்பியலை எப்படி அந்நோய்க்கு எதிராக வளர்ப்பது என்று ஆய்வுகள் செய்ய முனைந்த அவருக்கு போதுமான குரங்குகள் கிடைக்கவில்லை. ஆகவே, ஆஸ்திரியாவின் வியன்னா நகரைவிட்டு நீங்கி பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகர பாஸ்டர் ஆய்வகத்தில் ஆய்வுகள் செய்தார்.


லெண்டாயிஸ் எனும் அறிவியல் அறிஞர் 1875 ஆம் ஆண்டு பிற பாலூட்டிகளின் ரத்தத்தை மனிதர்களுக்கு செலுத்தினால் அவை ரத்த குழாய்களில் அடைத்துக்கொள்வதொடு மட்டுமல்லாமல்,ரத்த செல்கள் வெடித்து ஹீமோகுளோபின் வெளியேறுவதை கண்டார். இந்த ஆய்வை மேலும் முன்னெடுத்த லேண்ட்ஸ்டேயினர் மனிதர்களுக்குள்ளும் அப்படி ரத்தம் செலுத்தினால் எதிர்ப்புகள் உண்டாவதை கண்டறிந்து சொன்னதோடு நில்லாமல் வெவ்வேறு ரத்தப்பிரிவுகளே அதற்கு காரணம் என்றும் அறிவித்தார். இந்த ரத்தப்பிரிவுகளை கொண்டு யார் பிறக்கிற பிள்ளையின் பெற்றோர் என்றும் உறுதி செய்ய முடியும் என்றும் அவர் சொன்னார். அவருக்கு இந்த கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. எண்ணற்ற விபத்துகளில் உயிர்கள் காப்பாற்றப்பட காரணமான ரத்த பிரிவை கண்டறிதலை முதன்முதலில் செய்து மனித குலத்துக்கு மிகப்பெரிய தொண்டாற்றிய இவர் என்றைக்கும் நினைவில் கொள்ளப்படவேண்டியவர்.

இன்று உலக இரத்ததான தினம்.

அவள் பெயர் ஆன் பிராங்க் !


இருட்டிலும் வெளிச்சத்தின் கதிர்களை பார்க்க முடியும் என்று உலகுக்கு காட்டிய வாழ்க்கை ஆன் பிராங்க் எனும் சிறுமியுடையது. அவள் எழுதிய ஒரே ஒரு டைரியின் மூலம் காலங்களைக்கடந்து கண்ணீரையும்,கரையாத நம்பிக்கையும்
ஒருங்கே தருகிறாள் அவள். அவரின் யூத முன்னோர்கள் ஜெர்மனியில் வசித்து வந்தார்கள். ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டைவிட்டு அவளின் பெற்றோர் வெளியேறி ஹாலந்து நாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்.

ஹிட்லரின் யூத ஒழிப்புக்கு பயந்து தான் ஹாலந்தில் குடும்பத்தோடு வந்து சேர்ந்திருந்த அவளின் குடும்பத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உலகப்போரில் பல்வேறு நாடுகளை வென்று வந்து கொண்டிருந்த ஹிட்லரின் படைகள்
ஹாலந்துகுள்ளும் நுழைந்தது. பல்லாயிரக்கணக்கான யூதர்கள் கண்டறியப்பட்டு வதை மற்றும் கொலை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். இந்த படைகளிடம் இருந்து தப்பி போய்விடலாம் என்று இவளின் குடும்பம் முயன்ற பொழுது எல்லை முழுக்க மூடப்பட்டு இருப்பதை கண்டு விரக்தியோடு திரும்பி ஒரு சிறிய கட்டிடத்தில் அமைதியாக ஒளிந்து கொண்டார்கள். அவர்களை அரசு தேடிக்கொண்டு வரக்கூடாது என்பதற்காக ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கு தப்பி போனது போன்ற தோற்றத்தை உண்டு செய்தார்கள்.

எட்டு பேர் ஒரே ஒரு கட்டிடத்தில் தங்கிக்கொண்டார்கள். அதில் ஆன் பிராங்கும் அடக்கம். சத்தமே போடாமல்,சிரிக்காமல்,பெரிய ஆட்டம் போட முடியாமல் அமைதியாக மட்டுமே எப்பொழுது பிடித்துக்கொண்டு போவார்களோ என்கிற பயத்தோடு கழிந்த அந்த வாழ்க்கையின் பொழுது ஆனிக்கு துணையாக இருந்தது அவளின் பதிமூன்றாவது பிறந்தநாளுக்கு பரிசாக வந்த ஆட்டோகிராப்
புத்தகத்தில் பாங் ஆடுவது,தன் தோழிகளுடனான நட்பு, தான் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றை பற்றி எழுதிக்கொண்டு இருந்த ஆனி இப்படி சிறைப்பட்டதும் தான் எப்படியெல்லாம் உணர்கிறேன் என்று அவள் எழுதினாள். டைரியில் வருகிற ஒரு பத்தி இது :

“ஒரு பைக்கை ஓட்டிப்பார்க்க,நடனமாட,விசில் அடிக்க,உலகைப்பார்க்க நான் ஆசைப்படுகிறேன். நான் விடுதலை பெற்றே இருக்கிறேன் என்பது போல உணர்ந்தாலும் அதைக்காட்ட முடியாமல் தவிக்கிறேன். அதை காட்டினால் நாங்கள் எட்டு பேரும் அதற்காக வருந்தவும்,அதிருப்தியோடு நடமாடவும்
வேண்டியிருக்கும் அல்லவா ? நாங்கள் எங்கே போகப்போகிறோம் ? “

அவ்வப்பொழுது நம்பிக்கை இழந்தாலும் இது சரியாகிவிடும் என்கிற நம்பிக்கையை தன்னுடைய டைரி குறிப்புகளில் தொடர்ந்து பதிந்தே வருகிறாள் அவள். அங்கே இருந்த பிற நபர்களுடன் உண்டான சிக்கல்கள் அவளுக்கு வருத்தம் தந்தாலும் போரைப்பற்றியும்,மனித நேயத்தைப்பற்றியும்,தன்னுடைய அடையாளம் தன்னை எப்படி இப்படி சிறை மாதிரியான ஒரு வாழ்க்கை வாழ வைத்திருக்கிறது என்றும் ஆழமாக பதிகிறாள் அவள்.

Prinsengracht 263 என்கிற இடத்தில் ஒளிந்து கொண்டிருந்த இவர்களை யாரோ காட்டிகொடுக்க நாஜிப்படை கைது செய்தது. அவளின் தந்தையை தவிர பிறர் எல்லாம் மரண வாசலை தொட்டார்கள். ஆனி மற்றும் அவளின் சகோதரி மார்கொட் டைபஸ் காய்ச்சல் கண்டு வதை முகாமில் இறந்து போனார்கள். அவளின் டைரியை அப்படியே நாசி அதிகாரிகள் விட்டுவிட்டு போய்விட மியாப் கீஸ் என்கிற நபர் அவற்றை காத்துவந்து இவளின் தந்தையிடம் தந்தார். அவர் அவற்றை பெரிய போராட்டத்துக்கு பிறகு அமெரிக்க பதிப்பகங்களிடம் தந்த பொழுது ‘சோகம் நிறைந்ததாகவும்,சலிப்பு தருவதாகவும்’ இருக்கிறது. நூல் விற்காது என்று உதட்டை பிதுக்கினார்கள். பின்னர் அந்த நூல் வெளிவந்த பொழுது பல கோடி பிரதிகள் விற்று அவநம்பிக்கையிலும் உலகை நேசிக்க முடியும் என்கிற எண்ணத்தை ஊன்ற உதவின.

கண்ணியமிகு காயிதே மில்லத் கதை !


கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் திருநெல்வேலி பகுதியில் உள்ள பேட்டை என்கிற ஊரில் அரசர்களுக்கு துணி விற்றுக்கொண்டு இருந்த மதத்தலைவரான மியாகான் ராவுத்தர் அவர்களின் மகனாக பிறந்தார். இளமைக்காலத்திலேயே தந்தையை இழந்து அன்னையின் அரவணைப்பில் அவர் வளர்ந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு கல்லூரி பட்டப்படிப்பு தேர்வை புறக்கணித்தார். பின்னர் முஸ்லீம் லீக் அமைப்பில் இணைந்து செயல்பட்டார். 

விடுதலைக்கு பின்னர் டிசம்பர் மாதத்தில் 1948 இல் கராச்சியில் முஸ்லீம் லீக் கட்சி பாகிஸ்தான் பகுதிக்கு ஒன்று என்றும்,இந்தியாவிற்கு இன்னொன்று என்றும் உடைந்தது. அங்கே பாகிஸ்தான் பகுதியின் தலைவராக திகழ்ந்த லியாகத் அலிகான் ,”உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் காயிதே மில்லத் அவர்களே ! எப்பொழுதும் உதவக்காத்திருக்கிறோம்” என்ற பொழுது ,”எங்களுக்கான தேவைகளை,சிக்கல்களை நாங்களே தீர்த்துக்கொள்வோம். எங்களுக்கு என்று ஒரு தேசமிருக்கிறது. நீங்கள் எங்களுக்கு செய்கிற உதவி ஏதேனும் இருக்குமானால் அது பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள்,சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை பாதுகாப்போடு பார்த்துக்கொள்வது தான் !: என்று கம்பீரமாக சொல்லிவிட்டு நடந்தார்.

இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் உறுப்பினராக செயல்பட்டார். அப்பொழுது எது தேசிய மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்கிற விவாதம் எழுந்தது. பழமையான மொழியே தேசிய மொழியாக வேண்டும் என்கிற வாதம் வைக்கப்பட்ட பொழுது அமைதியாக எழுந்த காயிதே மில்லத் அவர்கள் இப்படி பேசினார் :
” ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். . இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். . இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ ( Part XIV A Languages – Page : 1471 to 1474 – Date 14th September 1949 – Vol : IX)

தேவிக்குளம்,பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளாவுக்கு போய் சேரும் என்கிற சூழல் நிலவிய பொழுது காமராஜர் அவர்கள் அவை இந்தியாவில் தானே இருக்கிறது என்று சொல்லிவிட இவரோ நாடாளுமன்றத்தில் தனது கட்சிக்கு கேரளாவில் தான் செல்வாக்கு அதிகம் என்று தெரிந்திருந்த பொழுதும் அஞ்சாமல் ,”தேவிக்குளம்,பீர்மேடு ஆகிய பகுதிகளை கேரளாவுக்கு கொடுக்க வேண்டும் என்று இங்கே கேட்கிறார்கள். அவை எல்லையோர பகுதிகள். தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகள். அங்கே அவர்கள் வந்துவிட்டு போகிறவர்கள் என்று அப்பகுதி அரசு சொல்கிறது. பின்னர் எவ்வாறு கடந்த தேர்தலில அவர்கள் அங்கே பெரும்பான்மையாக ஓட்டளித்தார்கள் என்று விளக்க முடியுமா ? அப்பகுதி தமிழகத்தோடு தான் இணைக்கப்பட வேண்டும் !” என்று முழங்கினார். 

சீனா மற்றும் பாகிஸ்தான் உடன் போர் நேர்ந்த பொழுது இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் பாரத தேசத்துக்காக போராடுவார்கள் எங்களின் ஆதரவு முழுமையாக அரசுக்கு உண்டு என்றவர்,சீனா இந்தியாவை தாக்கிய பொழுது ,”சீனாவுக்கு எதிராக முதல் எதிரியாக என்னுடைய பெயரை பதிந்து கொள்ளுங்கள். என் மகனையும் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கிறேன்.” என்று நாடாளுமன்றத்தில் தன்னுடைய தேசபக்தியை பதிவு செய்தார். பாகிஸ்தானில் இருந்து வருகிற அகதிகளை கண்டுகொண்ட அரசு மலாய்,பர்மா மற்றும் இலங்கையில் இருந்து வரும் அகதிகளிடம் கரிசனத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார். 

நேரு அவர்கள் முதல் தேர்தலில் காங்கிரஸ் சின்னத்தில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று இவரைக்கேட்டு கொண்ட பொழுது நாங்கள் தனித்தே நிற்போம் என்று தன்மானத்தோடு சொன்னார். அடுத்தடுத்து மூன்று நாடாளுமன்ற தேர்தல்களில் மஞ்சேரி தொகுதிப்பக்கம் வாக்கு கேட்க ஒருமுறை கூட போகாமலே வெல்கிற அளவுக்கு அவர் செல்வாக்கு கொண்டவராக இருந்தார். இத்தனைக்கும் அவர் தேவிக்குளம்,பீர்மேடு சிக்கலில் தமிழகத்துக்கு ஆதரவான நிலையை எடுத்தார் என்பதை கவனிக்க வேண்டும்.

அண்ணாவின் கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இணைத்து காங்கிரஸ் தோல்வியடைவதை உறுதி செய்கிற வித்தையை அவர் சாதித்தார். அவர் எளிமையின் உச்சமாக இருந்தார். கட்சிக்கு என்று சேர்கிற நிதியில் பைசாவைக்கூட தனக்கென்று அவர் செலவு செய்து கொண்டதில்லை. அவரின் கட்சி அலுவலகத்துக்கு அவர் எப்படி வந்து சேருவார் தெரியுமா ? க்ரோம்பேட்டையில் இருக்கும் எளிய வீட்டில் இருந்து தொடர்வண்டியில் ஏறி பீச் நிலையம் வந்து சேர்ந்து அங்கிருந்து ரிக்சாவில் மண்ணடி போய் சேர்வார். 

மிலாதுநபி விழா நடந்து கொண்டிருந்தது. ஒரு திராவிட இயக்க பிரமுகர் இந்து மத வழிபாட்டு நம்பிக்கையை விமர்சித்து பேசிக்கொண்டு இருந்தார். அவரின் பேச்சை உடனே முடிக்க செய்த கண்ணியமிகு காயிதே மில்லத் இப்படி விளக்கம் தந்தார் ,இது புனிதமிகுந்த மிலாது விழா மேடை. இதில் நபிகள் நாயகத்தின் சிறப்பு, இஸ்லாத்தின் மேன்மை பற்றி மட்டுமே பேசவேண்டும். பிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேலி செய்து பேசக் கூடாது. இஸ்லாமிய மார்க்கம் ‘பிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேவலம் செய்து பேசாதீர்கள்’ என்று அறிவுறுத்தியிருக்கிறது” என்று அறிவித்தார். 

பதினான்கு கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி இஸ்லாமிய பிள்ளைகள் கல்வியறிவு பெற வழிகோலினார். மேல்சபை,சட்டசபை,லோக் சபா என பல்வேறு ஆட்சி பீடங்களில் பதவி வகித்தாலும் அவரிடம் சொந்தமாக கார் கூட கிடையாது. எளிமை,தேசபக்தி,மொழிப்பற்று,மக்கள் செல்வாக்கு என்று அனைத்தையும் ஒருங்கே பெற்றிருந்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களை அவரின் பிறந்தநாளன்று (ஜூன் ஐந்து ) நினைவு கூர்வோம்

அடப்போட வைக்கும் ஓ ஹென்றி வாழ்க்கை !


ஓ ஹென்றி அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகத்தான எழுத்தாளர். இளம் வயதிலேயே அன்னையை காசநோய்க்கு இழந்த இவரும் ஓயாமல்
நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் துன்பப்பட்டார். இளம் வயதிலேயே செவ்வியல் இலக்கியங்கள் மற்றும் பல்வேறு கதைகளை படித்து இலக்கிய ஆர்வத்தை
வளர்த்துக்கொண்டார் அவர். மருந்துக்கடையில் வேலை,கிளார்க் பணி,தோட்ட வேலை
என்று பல்வேறு பணிகளில் ஈடுபட்ட அவர் பத்திரிக்கை நடத்தி தோல்வி கண்டார். பல்வேறு இதழ்களில் எழுதிய அவர் சமயங்களில் கேலிச்சித்திரங்களும் வரைந்தார்

. பெரிதாக வாழ்க்கையில் சுகமெதையும் அனுபவித்து இராத அவரின் வாழ்க்கையின் ஒரே வசந்தமாக இருந்தது பணக்கார குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் அவரை
எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி நேசித்து மணந்து கொண்ட அவரின் மனைவியின் காதல் தான். ஆனால்,வங்கியின் பணத்தை சூறையாடி விட்டதாக குற்றச்சாட்டு
எழவே சத்தமே இல்லாமல் ஹோண்டுராஸ் பகுதிக்கு தப்பி ஓடிப்போன இவர் தன்னுடைய மனைவி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த தருணத்தில் தான் நாடு
திரும்பினார். மனைவியின் மரணம் வரை அருகில் இருந்தவர் அதற்கு பின்னர் சிறை புகுந்தார். அங்கே இருந்த சிறை மருத்துவமனையில் மருந்தாளராக
இரவில் வேலை பார்த்து தன்னுடைய மகளுக்கு உதவினார் அவர். சிறையில்
இருந்தபடி அவர் எழுதிய சிறுகதைகளுக்கு வில்லியம் சிட்னி போர்டர் என்கிற
தன்னுடைய சொந்த பெயரை வைக்காமல் ஓ ஹென்றி என்கிற பெயரில் எழுதினார்.

சிறுகதை மென்மையாக அல்லது இயல்பாக பயணம் செய்து எதிர்பாராத திருப்பத்தை கொண்டிருக்கும். இருபது வருடத்துக்கு முன்னர் மகளுக்கு மருந்து வாங்கப்போன தந்தை அவரின் பேத்திக்கு வயிற்று வலி வரும் நாளில் அந்த
மருந்தை கொண்டு வந்து கொடுத்து ‘வண்டி கிடைக்கவில்லை !’ என்று ஒரு கதையில் சொல்வார். திருடி வாழும் மருத்துவன் குடித்து விட்டு உயிர்போகும் நிலையில் இருக்கும் ஒருவனுக்கு கருணையோடு தான் கொள்ளையடித்த பணத்தை
தந்து விடும் கதை ஆகட்டும் ,சாகிற தருணத்தில் தன்னுடைய மாஸ்டர் பீஸ் ஓவியத்தை வரைந்து ஒரு உயிரைக்காக்கும் கலைஞன்,கிறிஸ்துமஸ் பரிசாக இழந்த
மனைவியின் முடிக்கு சீப்பும்,கணவன் விற்ற வாட்சுக்கு பட்டையும் வாங்கிவரும் தம்பதிகள் என்று பல்வேறு சுவையான அனுபவங்களை தரும் ஓ ஹென்றியின் கதைகளை அவசியம் வாசியுங்கள்

ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும்


ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும்ல இருக்கிற கதைகளை எல்லாம் வாசிச்சுட்டு இருந்த இந்த இரவு மனசு என்னென்னவோ மாதிரி ஆகிடுச்சு. ரொம்ப நாளைக்கு அப்புறம் உடைஞ்சு அழறேன். அம்மா பார்த்தா திட்டலாம் ; ஆனா,எத்தனையோ அக்காங்களோட அழுகை,ஆத்தாமை எல்லாம் பெருக்கெடுத்து ஓடுறப்ப என்னோடது ஒன்னுமே இல்லை. 

இதைத் தவிர வேற ஒன்னும் பண்ண முடியாதே என்னால எல்லாம். வன்முறையை பெருசா அலட்டிக்காம நீங்க காட்டுறப்ப எதோ அதை கிட்டக்க இருந்து பார்த்த மாதிரி இருந்துச்சு. எல்லா கதையிலேயும் என்னோட எதோ ஒரு அக்கா,அம்மா,அத்தை என் என்னோட மனைவி நான் எல்லாருமே இருக்கோம் அப்படின்னு நெருக்கமா உணர முடிஞ்சது. முல்லைப்பெரியாறு சிக்கலப்ப சகோதரிக்கு நடந்த அவலம் அவங்களை எப்படியெல்லாம் உணர வெச்சு இருக்கும்னு காட்டுன கதையை படிச்சப்ப தவிச்ச தவிப்புல தண்ணியே சரியா இறங்கலை. நாப்கின் போட உதவி பண்ணுன கணவன்கிட்டே மனைவி பேசுற வார்த்தைகள் எல்லா ஆம்பிள்ளைகளுக்கும் பேசுன மாதிரி இருந்துச்சு. குழந்தை பெத்துக்குற மிசின் பொண்ணுன்னு நினைக்கிற ஆம்பிள்ளைங்க எல்லாம் அவளுக்குன்னு ஒரு மனசிருக்குனு இந்த கதை தொகுப்பை படிச்சா உணர்வாங்க 

அதுல உங்களோட அழுகையும் படிஞ்சிருக்கு அப்படின்னு பிரபஞ்சன் அப்பா எழுதியிருந்தது இப்பவும் மூளையில ஓடிகிட்டு இருக்கு என்ன சிக்கல்னு தெரியாது ; ஆனா,என் அக்காவுக்கு நடந்திருக்கு. அதை தாண்டி அவங்க வந்திருப்பாங்க இல்லாட்டியும் வந்துடனும் அவங்க எதார்த்தமா சிரிக்கணும் வாழ்க்கை முழுக்க சோகம் அப்பிகிட்டு இருந்தாலும் சிரிச்சுடு புள்ளைன்னு சொல்ற மனசு தான் எவ்ளோ அழகானது அக்கா இன்னமும் அழுது முடியாத ஒரு இரவில் அலைபேசியில் அழைக்க தைரியமின்றி. நெகிழ்வுடன்,தம்பியொருவன்

ஸ்டீவ் வாக் எனும் கிரிக்கெட் நாயகன்


ஸ்டீவ் வாக் கிரிக்கெட்டில் விடாமல் போராடும் குணத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு. ஆஸ்திரேலிய அணிக்குள் ஆலன் பார்டர் காலத்தில் நுழைந்த அவர் அணி உலககோப்பை வெல்வதை உறுதி செய்கிற வகையில் சிறப்பாக ஆடினார்.
இங்கிலாந்துக்கு எதிராகவும் கலக்கி எடுத்தா ஸ்டீவ் வாக் தன்னுடைய ஆட்டம் தனக்கே புரியவில்லை என்று புலம்பிக்கொண்டு இருந்த ஸ்டீவ் வாக்
படிப்படியாக சறுக்கினார். அவரின் சகோதரர் மார்க் வாகிடம் அணியில் இடத்தை இழந்தார். மித வேகப்பந்து வீச்சாளராக இருந்த அவர் தீராத முதுகுவலியால்
அதையும் விடுக்க வேண்டியதாக போயிற்று.

ஸ்டீவ் வாக் அவ்வளவு தான் என்று எல்லாரும் சொன்னார்கள். கனத்த மவுனத்தோடு மீண்டும் களம் புகுந்தார் ஸ்டீவ் வாக். பழைய அதிரடி ஆட்டத்தை மூட்டை கட்டி வைத்திருந்தார். கச்சிதமாக ஆட ஆரம்பித்து
இருந்தார் அவர். மார்க் டைலருக்கு பின்னர் அணியின் தலைமைப் பொறுப்பு இவர் வசம் வந்தது. அடித்து நொறுக்கி விடுவது என்கிற குணத்தை ஆஸ்திரேலியா
அணியிடம் உச்சத்துக்கு கொண்டு சென்றது இவரின் தலைமை. தொடர்ந்து இவர் தலைமையில் பதினைந்து டெஸ்ட் போட்டிகளில் வென்று அசத்தியது ஆஸ்திரேலியா.
உலகத்தின் எல்லா டெஸ்ட் ஆடும் அணிகளுக்கு எதிராகவும் முதன் முதலில் 150 ப்ளஸ் ஸ்கோர் அடித்த வீரர் இவரே.

உலகக்கோப்பை போட்டி 1999 ஆம் வருடம் நடைபெற்றது. ஒவ்வொரு வெற்றிக்கும் தீவிரமாக உழைத்தது அணி. ஸ்டீவ் வாக் பொறுப்போடு அணியை வழி நடத்தினார்.
அரையிறுதியில் தென் ஆப்ரிக்க அணி ஸ்கோரை சேஸ் செய்யும் வகையில் இறுதி ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து டை செய்திருந்த பொழுது ஒரு ரன் அவுட்
மூலம் இறுதிப்போட்டிக்குள் பழைய வெற்றிகளின் மூலம் ஆஸ்திரேலியா அணி நுழைந்தது. பாகிஸ்தான் அணியை சந்தித்த ஸ்டீவ் வாக் துவம்சம் செய்கிற
வகையில் வழி நடத்தினார். அணி உலக கோப்பையை தூக்கியது.

அதற்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டனாக இருந்து செயல்பட்ட அவர் இறுதிப்போட்டியில் எண்பது ரன்கள் அடித்து விடைபெற்றார். அவரின்
நூலுக்கு முன்னுரை எழுதச்சொல்லி கேட்டுக்கொண்டது இந்தியாவின் திராவிட் அவர்களைத்தான். கொல்கத்தாவில் டாட்டரஸ் ஆப் லேப்பர்ஸ் அமைப்பின் மூலம்
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்துவருகிறார் அவர். அடித்து ஆடும் ஆட்டத்துக்கும்,திருப்பி அடிப்பதற்கும் கச்சிதமான எடுத்துக்காட்டான
அவரின் பிறந்தநாள் ஜூன் இரண்டு

‘நான் துணிந்தவள் !’-கிரண் பேடி !கிரண் பேடி என்கிற பெயரை சொல்கிற பொழுதே ஒரு கம்பீரம் நமக்குள்ளும் தொற்றிக்கொள்ளும். இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஆன அவரின் வாழ்க்கை அத்தனை சுவாரசியமானது. பெண்ணால் எதுவும் முடியும் என்று காண்பிக்கும் வாழ்க்கை அவருடையது.

நான்கு பெண் பிள்ளைகளில் ஒருவராக பிறந்த கிரண் பேடியை பெற்றோர் நம்பிக்கை மற்றும் தைரியம் மிகுந்தவராகவே வளர்த்தார்கள். கல்வி மற்றும் டென்னிஸ் இரண்டிலும் அளவில்லாத ஆர்வம் கொண்டவராக திகழ்ந்த இவர் ஆசிய சாம்பியன் ஆகியும் சாதித்துக்காண்பித்தார். போலீஸ் துறைக்குள் பெண்கள் நுழைய உள்துறை அமைச்சகம் விடாது என்கிற மாயையை தான் தனித்து நிற்பேன் என்கிற குறிக்கோளின் மூலம் உடைத்து போலீஸ் அதிகாரி ஆனார்.

ஒற்றை ஆளாக கலவரம் செய்ய வந்த கும்பலை அவர் விரட்டி அடித்தது ஜனாதிபதி விருதை பெற்றுத்தந்தது. ஆசிய விளையாட்டுப்போட்டிகளின் பொழுது டெல்லி போக்குவரத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த இவர் அதை கச்சிதமாக
செய்தார். பிரதமரின் கார் விதிமுறைகளை மீறிய பொழுது அதையும் நிறுத்தி கையகப்படுத்தி கிரேன் பேடி என்று பெயர் பெற்றார்.

பயங்கரமான ஆட்கள் நிறைந்த இடமாக கருதப்படும் திஹார் சிறையின் தலைமைப்பொறுப்பு இவர் வசம் வந்த பொழுது முடிந்தார் இவர் என்றே அனைவரும் எண்ணினார்கள். குற்றவாளிகளை மனிதர்களாக பார்த்தார் இவர். அங்கே பத்து சதவிகிதம் பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருந்தவர்கள் என்பதையும் கவனித்தார். அவர்களுக்கு என்று ஜனநாயக பிரிவுகளை உருவாக்கினார். யோகா,போதை பழக்கத்தில் இருந்து விடுதலை,விளையாட,கல்வி கற்க ,உற்சாகமாக செயலாற்ற உதவிகள் எல்லாமும் செய்தார். சிறைக்குளே வங்கியும் துவங்கி கைதிகளை ஊக்குவித்தார். டெல்லியின் மாவட்டங்களில் பொறுப்பில் இருந்த பொழுது நீல மற்றும் வெள்ளை அறைகளை அமைத்து மக்களின் குறைகளை கேட்டு தீர்க்கும் நடவடிக்கைகளையும் எடுத்தார் அவர்.

நான் துணிந்தவள் என்று தலைப்பிடப்பட்ட அவரின் சுயசரிதை எல்லாரும் வாசிக்க வேண்டிய ஒன்று. துணிந்து, நிமிர்ந்து நின்று வானைத்தொட முயலும் எல்லா பெண்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் கிரண் பேடி ஒரு முன்மாதிரியே.

கரிபால்டி எனும் போராளி !


கரிபால்டியின் வாழ்க்கை ஓயாத மன உறுதி இருந்தால் எந்த சிக்கலில் ருந்தும் மீண்டு சாதிக்க முடியும் என்று காட்டும். இன்றைக்கு இருக்கும் இத்தாலி தேசம் கரிபால்டி பிறந்த பொழுது உருவாகி இருக்கவில்லை. போப் படைகள் ஒரு புறம்,ஆஸ்திரியாவின் ஆதிக்கம் இன்னொரு புறம் என்று இத்தாலி என்கிற தேசம் உருவாகாமல் எண்ணற்ற சக்திகள் தடுத்துக்கொண்டு இருந்தன. கப்பல் மாலுமியாக
உருவெடுத்து இருந்த கரிபால்டி மாஜினியின் இளைய இத்தாலி அமைப்பினரோடு இணைந்து ஜெனோவாவில் நடந்த புரட்சி முயற்சியில் பங்கு கொண்ட கரிபால்டிக்கு
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த தண்டனை விதிக்கப்படுவதற்குள் கரிபால்டி தப்பி அமெரிக்கா போயிருந்தார். அங்கே எளிய விவசாய வேலைகள் செய்தவாறே இத்தாலி தேசத்தை மீட்க வேண்டும் என்கிற கனவை உள்ளுக்குள் செலுத்தி வளர்த்துக்கொண்டு இருந்தார் கரிபால்டி. உருகுவே நாட்டில் மானுவேல் ரோசஸ் என்கிற சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மக்களுக்கு உதவினார்.

பதினான்கு வருடங்கள் தென் அமெரிக்காவில் காத்துக்கொண்டு இருந்த அவருக்கு
வடக்கு இத்தாலியில் ஆஸ்திரிய அரசுக்கு எதிராக புரட்சிக்கனல் மூண்டிருக்கிறது என்று தெரிந்ததும் மீண்டும் நாட்டை நோக்கி வந்தார்.. கோவர் என்பவர் விக்டர் இம்மானுவேல் எனும் செனிடியா அரசரின் முதலமைச்சர்
ஆகியிருந்தார்.

அவருடன் கரிபால்டி மற்றும் மாஜினி இணைந்து இத்தாலியை மீட்பதை நோக்கி பயணமானார்கள். ஆஸ்திரியா செனிடியா யுத்தத்தில் கரிபால்டி,மாஜினி ஆகியோரின் வீரம் பொருந்திய தலைமை பெரும் வெற்றியை பெற்று தந்தது. நேப்பல்ஸ் பகுதியை தன்னுடைய வீரம் செறிந்த விவேகமான வழிகாட்டுதலின் மூலம் கைப்பற்றினார் கரிபால்டி. இத்தாலிய புரட்சியில் மாஜினி ஆத்மாவாகவும், கரிபால்டி ஆயுதமாகவும், கோவர் அறிவாகவும் இருந்தார்.

ரோம் நோக்கியும் அவர் படைகளை செலுத்தினாலும் கோவர் இப்பொழுது அதற்கு காலம் கனியவில்லை என்று அவரை தடுத்து நிறுத்தினார். போப்புக்கு பிற ஐரோப்பிய நாடுகள் உதவிக்கு வரலாம் என்கிற கொவரின் அச்சமே இப்படியொரு முடிவுக்கு காரணமாக இருந்தது. பின்னர் இத்தாலிய நாடாளுமன்றத்தில் நுழைந்த கரிபால்டி அமைதியாக இத்தாலி ஒரு தேசமாக முழுமை பெறுவதை பார்த்துவிட்டே
மரணமடைந்தார்.

சிவந்த சீக்கிய தேசம்-தடதடக்கும் வரலாறு !


ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் எனப்படும் ரத்தம் தெறித்த நிகழ்வின் ஆரம்ப தினம் இன்று. அரசியல்,மதம்,சுயாட்சி,பிரிவினை என்று நீண்ட கதை முழுக்க பஞ்சாபின் விடுதலைக்கு பிந்தைய வரலாற்றோடு தொடர்புடையது. இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த பொழுது சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் அதிகமாக இருந்த பகுதிகள் இணைந்தே இருந்தன. 

மத அடையாளத்தை சீக்கிய குருமார்களின் ஊழல் மற்றும் தில்லுமுல்லுக்களை ஒழிக்க எழுந்த சிரோன்மணி அகாலிதளத்தலைவர் தாரா சிங் தூக்கிப்பிடித்தார். நேரு மற்றும் காங்கிரசின் ஆட்சியை இந்துக்கள் மற்றும் பிராமணியத்தின் ஆதிக்கம் என்று சொல்லி தனி மாநிலம் கொடுங்கள் என்று முழங்கினார்கள். மத ரீதியான பிரிவினைக்கு கண்டிப்பாக நோ என்று தெளிவாக சொல்லப்படவே ,”இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் ; அரசுப்பதவிகளில் போதிய இடமில்லை” என்பதையும் இணைத்து போராடினார்கள். 

ஆனால்,அப்பொழுதைய சூழலை ஆய்ந்த பல்தேவ் ராஜ் நய்யார் எனும் சமூகவியல் அறிஞர் இந்திய ராணுவத்தில் இருபது சதவிகிதம் சீக்கியர்களே இருந்தார்கள்,மேலும் தாங்கள் இந்திய மக்கள் தொகையில் இருந்த அளவுக்கு இரு மடங்கு அதிகமாக அரசாங்கப்பதவிகளில் சீக்கியர்கள் நிறைந்து இருந்தார்கள் என்கிறார். பின்னர் என்ன காரணம் என்றால்,தொடர்ந்து தேர்தல்களில் காங்கிரஸ் அங்கே வென்று கொண்டிருந்தது.

கெய்ரோன் கோலோச்சி கொண்டிருந்தார் ; வளர்ச்சி,கல்வி,விவசாயம் என்று கலக்கி எடுத்தார். எதிர்ப்பு குரல் எழுந்தால் தூக்கி உள்ளே போடுவதை சாவகசமாக செய்தார். கூடவே குடும்பத்துக்கு என்று சொத்தும் சேர்த்துக்கொண்டார். நேரு விசாரிக்க வேண்டும் அவரை என்ற வேண்டுகோள் அழுத்தி வைக்கப்பட்டதால் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விசாரணைக்குழு ஒன்று அமைப்பதோடு அமைதி காத்தார். என்ன ஆனாலும் கெய்ரோன் மற்றும் காங்கிரஸ் அசைக்க முடியாத சக்திகளாக இருந்தார்கள். 

இந்தி மட்டும் போதும் என்று பிரிக்கப்படாத பஞ்சாபில் இருந்த இந்துக்கள் சொன்னார்கள்,குருமுகி வரிவடிவம் கொண்ட பஞ்சாபியும் தேவை என்று சீக்கியர்கள் முழங்கினார்கள்,தாரா சிங்குக்கு பதிலாக பதே சிங் சிரோன்மணி அகாலிதள தலைவர் ஆகியிருந்தார்; மத ரீதியான தனி மாநில கோரிக்கையை மொழிரீதியான கோரிக்கையாக மாற்றியிருந்தார். காங்க்ரா என்கிற பகுதி மக்கள் ஹிமாச்சல பிரேதசத்தில் இணைய விரும்பினார்கள். இந்தி பேசும் மக்களுக்கு ஹரியானா,பஞ்சாபி பேசியவர்களுக்கு பஞ்சாப் மற்றும் காங்க்ரா ஹிமாசல பிரேதசம் போய் சேரட்டும் என்று 1966-ல் இந்திரா காந்தி பிரதமரானதும் பிரித்து தந்தார். 

1972 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சிரோன்மணி அகாலிதளம் வென்றது. அடுத்த தேர்தலில் தோற்றதும் மீண்டும் சிக்கலை கையில் எடுத்தார்கள்.அனந்த்பூர் சாகிப் தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். அதில் பாதுகாப்பு,அயல்நாட்டு உறவு மற்றும் நாணயம் ஆகியவற்றை தவிர மற்ற எல்லாவற்றையும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் விட்டுவிட வேண்டும் என்கிற சுயாட்சி கோருகிற தீர்மானம் எழுந்திருந்தது. கூடவே,தீர்மானத்தின் முதல் பக்கத்தில் தனி நாடு கிடைத்தாலும் பரவாயில்லை என்றொரு வரியை அமைதியாக சேர்த்திருந்தார்கள். 

எமெர்ஜென்சிக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பெருவெற்றியோடு சிரோன்மணி அகாலிதளம் பிடித்தது. நடுவே காலிஸ்தான் கோரிக்கை வேறு மீண்டும் துளிர்த்து இருந்தது. அறுபது வருடங்களுக்கு முன்னர் மின்டோ-மார்லி முன்னர் எழுப்பப்பட்ட கோரிக்கை அது. 

1971-ம் ஆண்டு ஜகஜித் சிங் சௌஹான் என்பவர் காலிஸ்தான் என்கிற நாடு பஞ்சாபியர்களுக்கு உருவாக உள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் இதழில் விளம்பரம் கொடுத்தார். இதற்கு பாகிஸ்தான் வேறு ஆசீர்வாதம் செய்திருந்தது. ஒன்பது ஆண்டுகள் கழித்து இந்திராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தோல்வி என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பி விட்டார். அவரின் தளபதி பல்பீர் சிங் சந்து பஞ்சாபில் இருந்தவாறு அதே அறிவிப்பை வெளியிட்டார். கூடவே தனி நாணயம் மற்றும் ஸ்டாம்புகள் வெளிவந்தன. இந்திரா அரசு கண்டும்,காணமல் இருந்தது. 

மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் மத்தியில் ஜனதா ஆட்சி கவிழ்ந்ததும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சிக்கலைப்பு நிகழ்த்தி இந்திரா அரசு தேர்தல் நடத்தியது. அதற்கு அது பிந்த்ரன்வாலேவை பஞ்சாபில் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தது. 

குர்பச்சன் சிங் என்பவர் நிரங்காரிகள் என்கிற மதப்பிரிவை துவங்கி சீக்கிய மதத்தை சுத்தம் செய்வதாக சொல்லி இந்து மதத்தோடு இணைந்து விட வேண்டும் என்று அவர் முழங்கினார். முடியை,தாடியை மழித்து விட்டு,டர்பனை கழட்டிவிட்டு சுத்தமாக அவர் அழைக்க அதை எதிர்த்து அகண்ட கீர்த்தனி என்கிற அமைப்புன் களமிறங்கியது. அதன் தலைவர் ஃபௌஜா சிங் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் மோதலில் இறந்து போனார்கள். கோர்ட் குர்பச்சன் சிங் நிரபராதி என்று விடுவித்தது. 

இறந்து போன ஃபௌஜா சிங்கின் மனைவி களத்தில் குதித்தார் அவருக்கு ஆதரவாக சீக்கியர்கள் சுத்தமாக வேண்டும்,இந்தியாவில் இந்துக்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று முழங்கிய பிந்த்ரன்வாலே களத்துக்கு வந்தார். சிரோன்மணி அகாலிதளம் கட்சியை தோற்கடிக்க வேண்டிய சூழலில் இந்திரா அவரோடு கைகோர்த்து மேடையேறினார். மூன்று தொகுதிகளில் காங்கிரசுக்கு ஆதரவாக பிந்த்ரன்வாலே பிரச்சாரம் செய்தார். தீவிரப்போக்கை கைக்கொள்ள இளைஞர்களை அழைத்தார் ; தனிப்பிரிவு நான்கள் என்பதோடு காலிஸ்தான் நோக்கியும் பயணம் நகரும் என்பதை கோடிட்டு காட்டினார். 

அங்கே இருந்த பிந்த்ரான்வாலேவின் உடனிருந்தவர்கள் கொலைகள் செய்ய அஞ்சவே இல்லை. இவர் பேச்சுக்கு பின் ஏற்பட்ட கலவரத்தில் ஒரு பதினைந்து பேர் இறந்து போனார்கள் அவரின் தீவிரவாதப்போக்கை கண்டித்து எழுதிய பஞ்சாப் கேசரி ஆசிரியர் ஜக்ஜித் நாராயண் கொல்லப்பட்டார். அதற்கு காரணம் பிந்த்ரன்வாலே என்று எல்லாருக்கும் தெரியும். களம் புகுந்தது போலீஸ். அவரைக்கைது செய்யாமல் கொஞ்சம் இருங்கள் என்று ஹரியானா வரை போன போலீசுக்கு உள்துறை அமைச்சர் ஜெயில் சிங் உத்தரவு போட்டார். நானே இரண்டு வாரத்தில் சரண்டர் ஆகிறேன் என்று சொன்ன பிந்த்ரான்வாலேவை கைது செய்ய போலீஸ் போனதும் கலவரம் உண்டாகி அவரின் ஆதரவாளர்கள் தாக்கியதில் பதினோரு போலீஸ்காரர்கள் பலியானார்கள். அடுத்து ஒரு விமானம் கடத்தப்பட்டு அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது ; கோர்ட் போதிய ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்பட்டார் என்று விடுதலை செய்தது. 

அதுவரை அவரை வெறுத்த சீக்கியர்கள் மத்தியில் கூட அவர் நாயகர் ஆனார். சிரோன்மணி அகாலிதள தலைவர் லோங்கோவால் பொற்கோயில் வந்து தங்கிக்கொள்ள அவருக்கு வேண்டுகோள் விடுத்தார். ஏற்கனவே சிரோன்மணி கட்சியினர் 83 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று தங்களின் சட்டசபை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்திருந்தார்கள். பிந்த்ரன்வாலேவும் கிளம்பினார். காலிஸ்தான் கோரிக்கைக்கு அமெரிக்கா,கனடா மற்றும் இங்கிலாந்தில் இருந்து நிதி குவிந்தது ஒரு புறம். எக்கச்சக்க ஆயுதங்களோடு உள்ளே காத்துக்கொண்டு இருந்தார்கள். காங்கிரஸ் கூட்டாளி பிந்த்ரன்வாலே இப்பொழுது கட்சி மாறியிருந்தார். 

பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று இந்திரா முயற்சித்தார். இரண்டு நதிகளை பிரிவினையின் பொழுது இழந்து விட்டோம்,இருக்கிற மூன்று நதிகளை மற்ற இரு மாநிலங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறோம் அதெல்லாம் இனிமேல் சாத்தியமில்லை,ஹரியானா மற்றும் பஞ்சாபுக்கு பொதுவாக இருக்கும் சந்திகர் எங்களுக்கு மட்டும் வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொடுத்தார்கள். வன்முறையும் எகிறிக்கொண்டு இருந்தது. இந்துக்கள் மீதும்,எதிர்த்த சீக்கியர்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தன,பலர் கொல்லப்பட்டார்கள். பல்வேறு இடங்களில் கொள்ளை நடைபெற்றது. பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு அப்பாவி மக்கள் சுடப்பட்டு இறந்தார்கள் ; பயம் பஞ்சாபை பீடித்தது. 

“காங்கிரசின் ஆட்சி முகலாயர் ஆட்சியை போன்றது ; நாற்பது சீக்கியர்களால் பத்தாயிரம் எதிரிகளை எதிர்கொள்ள முடிந்தது என்றால் நம்மால் முடியாதா ? அமைதி என்பதே நமக்கு இங்கே சாத்தியமில்லை. தனி நாடே இலக்கு “,என்றும்,”இந்துக்கள் உங்களை தேடிக்கொண்டு வந்தால் அவர்களின் தலைகளை டிவி ஆண்டெனாக்களை கொண்டு நசுக்குங்கள் !” என்றெல்லாம் பேசி பேசி வன்முறையை தூண்டிவிட்டார். இந்திரா எப்படியும் அமைதியாக முடித்துக்கொள்ளலாம் என்று இறுதிவரை பேச்சுவார்த்தைகள் நடத்திப்பார்த்தார். எதுவும் சாத்தியமில்லை என்று சொல்வது போல டி.ஐ.ஜி கொல்லப்பட்டார். ஜனாதிபதி பொற்கோயிலுக்கு போன பொழுது அவர் காதை உரசிக்கொண்டு குண்டு சென்றது. ராணுவம் நுழையலாம் என்று சிக்னல் தரப்பட்டது. ஜூன் மூன்றில் பொற்கோயில் சுற்றி வளைக்கப்படுவதற்கு முன்னர் லோங்கோவால் நிலவரி,தண்ணீர் மற்றும் மின்சார் பில்கள் கட்ட மாட்டோம்,மாநிலத்தை விட்டு தானியங்களை அனுப்பமாட்டோம் என்றெல்லாம் முழங்கினார். ஒரே நாளில் வேலை முடிந்துவிடும் என்று மிஷின் கன்களோடு போனவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கிடைத்த இடைவெளியில் எல்லாம் துப்பாக்கிகள் நீட்டிக்கொண்டு இருந்தன. மறைவிடங்கள்,சுட்டிவிட்டு தப்பிக்கும் வழிகள் என்று அனைத்தும் தெளிவாக இருந்தது. கூடவே குறுகிய இடைவெளிகளில் புகுந்து தாக்கிவிட்டு தண்ணி காட்டிகொண்டு இருந்தார்கள். எறிகுண்டுகள் வேறு பயமுறுத்தின. பஞ்சாபியான பிரார் வழிகாட்டிக்கொண்டு இருந்தார் எந்த சுபேக் சிங்குடன் இணைந்து வங்கதேச விடுதலையை சாதித்தாரோ அவர் எதிர் முகாமில் தலைமை தாங்கிக்கொண்டு இருந்தார். 

துப்பாக்கிகள் போதாது என்று வெகு செக்கிரம் புரிந்தது. டேங்குகள் தேவை என்று டெல்லிக்கு சொல்லப்பட்டது. பதிமூன்று டேங்குகள் வந்து சேர்ந்தன. அஅவர்களும் துப்பாக்கி சூட்டில் இறந்து போனார்கள். இறுதியில் நான்கு அதிகாரிகள்,79 வீரர்கள் மற்றும் 492 தீவிரவாதிகள் இறந்து போனதாக அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் சொல்லின. ஆனால் சில ஆயிரங்களில் இருக்கும் இறப்புகள் என்பது பொதுவான கருத்து.. 

கூடவே,ஹர்மீந்தர் சாஹிப் மற்றும் அகால் தக்த் என்கிற சீக்கியர்களின் புனிதமான பீடங்கள் சேதப்படுத்தப்பட்டு அவர்களின் புனித ஆலயமான பொற்கோயில் ரத்த நிலமாக மாறி ஆறாவடுவை உண்டாக்கி இருந்தது. அரசியல் பகடையில் முன்னேறி மேலே போன பிந்த்ரன்வாலே கூடவே மாணவர் அமைப்பின் தலைவர் அம்ரீக் சிங் இறந்து கிடந்தார்கள். சுபேக் சிங் வாக்கி டாக்கியோடு இறந்து கிடந்தார். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் முடிந்தது. அப்பொழுதைக்கு சிக்கல் ஓய்ந்தது போல இருந்தாலும் அமைதி திரும்ப பல ஆண்டுகள் தேவைப்பட்டது. நடுவில் பின்விளைவுகளாக இந்திரா காந்தியின் படுகொலை,சீக்கியர்கள் மீதான கலவரங்கள்,படுகொலைகள்  ஆகியன காத்திருந்தன. அரசியல் ஆடுகளத்தில் உயிர்கள் எத்தனை மலிவாக போயின என்பதன் நிகழ்கால உதாரணம் பஞ்சாப் சிக்கல்

அம்பேத்கர்,காந்தி-சுய மரியாதை,நவீனத்துவம் இணைந்து பயணிக்க வேண்டிய தலித்தியம் !


The flaming feet and other essays என்கிற D. R. Nagaraj அவர்களின் நூலை தூக்கம் தொலைத்து படித்து முடித்தேன். தலித்திய இயக்கத்தை பற்றிய பார்வைகளை மறுவாசிப்பு செய்வதையும்,காந்தி-அம்பேத்கர் உரையாடலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இணைத்து பேசும் காத்திரமான இந்த நூல் வெறும் இருநூற்றி சொச்சம் பக்கங்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். அம்பேத்கரும்,காந்தியும் மோதிக்கொண்டார்கள் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு அவசியம் அவர்கள் இருவரின் கருத்தியல்களையும் இணைத்துக்கொண்டு தற்கால சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம். 

காந்தி இந்து மதத்துக்குள் இருந்து கொண்டு அதிலும் குறிப்பாக ஆலயங்களுக்குள் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழைவதன் மூலம் அவர்களை சாதியத்தின் சமத்துவ மறுப்பில் இருந்து விடுவிக்கலாம் என்று எண்ணினார். எரவாடா சிறையில் உண்ணா நோன்பு இருக்கிற அந்த புள்ளியில் அவரை சந்திக்க ஒரு தலித் இளைஞன் வருகிறான். அவனைக்கொண்டே போராட்டத்தை ஆரஞ்சு சாறு குடித்து முடிக்கலாம் என்று காந்தியின் செயலர் மகாதேவ் தேசாய் எண்ணுகிறார். ஆனால்,காந்தியை சந்தித்துவிட்டு சென்ற அந்த இளைஞன் மீண்டும் அவரை சந்திக்க வரவே இல்லை. காந்திக்கு தங்களின் நிலையை மாற்ற வேண்டும் என்கிற விருப்பம் இருந்தாலும் அங்கே தான் ஒரு புனித பரிகாசத்துக்கு உள்ளாவதை அவன் உணர்ந்தான். அங்கேயே தலித் இயக்கத்தின் புரட்சிக்குரல் எழுந்துவிடுகிறது என்கிறார் ஆசிரியர். 

கோயிலில் இருக்கும் ஆன்மிகம் மற்றும் அது தரும் பெருமிதம் அதனோடு இணைந்த கலாசார வேர்கள் ஆகியன ஒடுக்கப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையும் பொழுது மாற்றத்தை கொண்டு வரும் என்று காந்தி நினைத்தார். மேலும் இந்த சாதிய முறை கிராம பொருளாதரத்தை காக்கிறது,அது தேவை. அதில் இருக்கிற செயல்பாட்டு நெறிமுறை சிக்கலுக்காக அதை முற்றாக நிராகரிக்க கூடாது என்கிற பார்வை அவருக்கு ஆரம்பத்தில் இருந்தது. அண்ணல் அம்பேத்கர் எந்த அமைப்பு அவர்களை ஒடுக்குகிறதோ அதனுள்ளே இருந்தே எப்படி வழிபடுவது என்கிற கேள்வியை எழுப்பினார். சுய புனிதப்படுத்துதல் என்பதை காந்தி குறிக்கலாம்,ஆனால்,சுய மரியாதையை இழந்து ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ முடியாது என்று காந்தியின் பார்வையில் இருந்த குறைபாட்டை சுட்டிக்காட்டினார். மேலும்,சாதிய அமைப்பை கிளர்ச்சி செய்து தகர்ப்பதே ஒட்டுமொத்த விடுதலைக்கு வழி என்று அவர் எண்ணினார். 

தெற்கில் பிரமாணர் அல்லாதோரின் அரசியல் முகமான நீதிக்கட்சி 1944 தேர்தலில் தோற்றதும் அம்பேத்கர் இப்படி பதிகிறார்,”எந்த பிரமாணியத்தை எதிர்ப்பதாக அவர்கள் சொல்லிக்கொண்டார்களோ அவர்களை போலவே நாமம் அணிந்தே இவர்கள் இரண்டாவது பிராமணர்கள் போல நடந்து கொண்டார்கள். மேலும் அரசாங்க அமைப்புகளில் வேலை பெற்றால் மட்டும் போதும் என்று அவர்கள் பத்து சதவிகித மக்களுக்கு மட்டும் இயங்கி கிராமப்புறத்தில் இருந்த மிச்ச ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை கணக்கில் கொள்ளாமல் போய் இயக்கத்தை நீர்க்க விட்டுவிட்டார்கள். 

காந்தியின் ஹரிஜன் இயக்கத்தில் காந்திக்கு மனதார ஒப்புமை இருந்ததாக கொண்டாலும் அவரை பின்பற்றியவர்கள் அதற்கு தயாராக இல்லையென்பதே உண்மையாக இருந்தது. அவருக்கும்,அவரின் தொண்டர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களுக்கு மிகப்பெரிய இடைவெளி இந்த தலித்கள் பற்றிய போராட்டத்தில் இருந்தது. பூனா ஒப்பந்தத்தில் காந்தி தன்னுடைய விடாப்பிடியான போக்கின் மூலம் வென்றது போல இருந்தாலும் அது பலமற்ற அடித்தளத்தில் இருக்கிறது என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். அரசின்மைவாதியான காந்தி பூனா ஒப்பந்தத்தின் மூலம் அரசின் மைய நீரோட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். மேற்கின் தத்துவங்களை உள்வாங்கிய அண்ணலோ இந்த இந்துக்களோடு இணைந்து இயங்கவே முடியாது என்று தனித்த பிரிவாக எழ வேண்டும் என்று விரும்பினார் 

நவீனத்துவம் அதிலும் மேற்கின் தொழில்மயம் மனிதத்தன்மை அற்று இருக்கிறது மற்றும் அதில் அவமானங்கள் மற்றும் அவலங்கள் அதிகம் என்ற காந்தி அதே பண்போடு கிராமப்புறங்கள் ஒடுக்கப்பட்ட மக்களை நடத்தியதை கவனிக்க மறந்தார். அதை அம்பேத்கர் அவருக்கு உணர்த்தினார். காந்தியின் கிராம மக்களின் ஆன்மிகம் சார்ந்த பிடிப்பு மற்றும் அவர்களின் வேரோடு கூடிய இணக்கம் ஆகியவற்றை அம்பேத்கர் உள்வாங்கிக்கொண்டார். 

காந்தி தீண்டாமை ஒழிப்பில் கவனம் செலுத்தினார். அது அமைப்புக்குள் இருந்து கொண்டே மனசாட்சியை தட்டி எழுப்பி நிகழ வேண்டிய ஒன்று என்று அவர் நம்பினார். தீண்டாமை சிக்கல் இந்து மதத்துக்கு உரியது அதில் மற்றவர்கள் தலையிடக்கூடாது என்கிற பார்வை அவருக்கு இருந்தது. அம்பேத்கரோ எல்லா மத மக்களும் தங்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தரலாம் என்று முழக்கமிட்டார். காந்தியின் இந்து மதத்துக்குள் இருந்தே மாற்றங்களை பெறுவது என்பதில் தாங்கள் குகனைப்போல அடி பணிகிற ஒருவராகத்தான் பெரும்பாலும் கொள்ளப்படுவோம்,தீரா பக்தி மற்றும் சேவை என்று சொல்லி மேலெழும்பும் உரிமைகள் மறுக்கப்படும் தாங்கள் ராமனாக மாறமுடியாது என்கிற காந்தியின் மாதிரியின் போதாமையில் அண்ணலுக்கு புரிதல் இருந்தது. 

சுய சுத்திகரிப்பில் ஈடுபடும் சாதி இந்துக்களின் சடங்காக தாங்கள் மாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்து கற்பி,ஒன்று சேர்,கிளர்ச்சி செய் என்று சுய மரியாதையை ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டிருக்க வேண்டும் என்று அழுத்தி அம்பேத்கர் இயங்கினார். காந்தி தோல் வேலைகளில் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்கள் இயல்பட வேண்டும்,அவர்களின் மரபார்ந்த தொழில்நுட்பங்கள் காலனியாதிக்கத்தில் காணமல் போயின என்றார். அவரின் வாதத்தில் ஒரு புறம் நியாயம் இருந்தாலும்,பல்வேறு தொழில்கள் அவர்களை இழிவுபடுத்தும் வேலைகளை செய்தமையால் அவற்றை விடுக்க வேண்டும் என்கிற அம்பேத்கரின் வாதத்தில் ஆழமிருந்தது. காந்தியின் எல்லாரையும் இணைத்துக்கொள்ளும் மதம்,அம்பேத்கரின் பொருளாதாரம் ஆகிய இரண்டும் இருவரின் உரையாடலில் இடம் மாறிக்கொண்டன. 

முழுக்க அமைப்பை உடைத்துவிட்டு போவது என்பது ஒரு புறமாக மட்டுமே இயங்குவதாக ஒற்றைப்படையாக போய் விடுகிறது உள்ளிருந்தபடியே யார் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார்களோ அவர்களிடமும் மாற்றங்களை கொண்டு வர பாடுபட வேண்டும் என்கிற காந்திய சிந்தனையை தற்கால தலித் இயக்கங்கள் சில உள்வாங்கி இருக்கின்றன. கர்நாடக தலித் சங்கர்ஷ் சமிதி ஆதிக்க சாதியினரின் வீடுகளின் முன் குவளையில் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்கும் போராட்டத்தை நிகழ்த்தினார்கள் என்பதை இணைத்து ஆசிரியர் பேசுகிறார். இப்படிப்பட்ட நகர்வுகள் அவசியம் என்கிறார்.

சோசியலிசம்,ஜனநாயகம்,நீதி ஆகிய மேற்கின் கருத்தாக்கங்களை உள்வாங்கி வந்த அம்பேத்கர் அங்கே இருந்த சாதிய அமைப்புமுறை ஆதிக்க சாதியினர் சொல்வதே வேதம்,உங்களுக்கு உரிமைகள் என்று எதுவும் கிடையாது,நீங்கள் இந்த அமைப்புக்குள்ளேயே உழல வேண்டும் என்கிற பார்வையை தந்திருந்தது. அவற்றை இதிலிருந்து முழுமையாக எதிர்ப்பதன் மூலம் மட்டுமே மீள முடியும் என்று அண்ணல் எண்ணினார். ஒரு கிராமப்புற சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவின் ஒரு நபர் ஏதேனும் ஒரு தவறு செய்தால் ஒட்டுமொத்த சமூகத்தையும் தண்டிக்கும் ஆதிக்க சாதியினர் அதே போக்கை தங்கள் சமூகத்து நபர் தவறு செய்கிற பொழுது கைக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் மேலெழும்புவதை பல்வேறு வகைகளில் அவர்கள் மறுக்கிறார்கள்,எதிர்க்கிறார்கள். பண்டைய பழமொழிகள் ஜாதிய வெறுப்பை பல்வேறு இடங்களில் பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறது. மைசூரில் ஒரு பஞ்சம் ஏற்பட்ட பொழுது பிராமணர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து இயங்குவதை விட இறப்பதே மேல் என்று அழுத்தமாக இருந்ததை பதிகிறார் ஆசிரியர். இப்படிப்பட்ட இறுக்கமான சூழல்களை கலப்பு திருமணங்களின் மூலம் தற்கால தலித் இயக்கங்கள் எதிர்கொள்வது அவசியமாகிறது. அம்பேத்கரின் அடிப்படைகளான சுய மரியாதையை ஏந்திக்கொண்டு காந்தியின் எல்லாரையும் இணைத்துக்கொண்டு இயங்குதல் என்கிற உரமும் நல்ல வளமான சமூகத்துக்கு அவசியமாகிறது. 

நீர்,நிலம்,காடு ஆகியவை சார்ந்த வடிவமைப்பு உரிமைகள்,சமூக இடங்களில் ஒன்றாக புழங்க உரிமை மற்றும் சமூக விழாக்களில் இணைந்து பங்குபெறும் உரிமைகள் என்று தலித்துகளுக்கான உரிமைகள் மூன்று வகையாக பகுக்கலாம். இதில் மூன்றாவது உரிமையை மறுப்பதிலும்,வன்முறையை கட்டவிழ்ப்பதிலும் எண்ணற்ற ஆதிக்க சாதியினர் ஈடுபடுகிறார்கள். இப்படி எண்ணற்ற சிக்கல்கள் சாதி அமைப்பால் ஏற்படுவது கொண்டிருந்த சமூகத்தில் தற்போது கூடுதலாக் இன்னுமொரு ஆபத்து வந்துள்ளதை கவனிக்க அறிவு ஜீவிகள் மறுக்கிறார்கள். அது நவீனத்துவம். அதை கொண்டு ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. சூழலியலை காலி செய்கிற பொழுது ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரை எதிர்க்க வைத்து அதிகார மையங்கள் காரியம் சாதிப்பதை செய்கின்றன. அறிவியல்,தொழில்நுட்பம்,முதலீட்டு அமைப்புகள் நவீனத்துவம் என்கிற பெயரில் எண்ணற்ற ஒடுக்கப்பட்ட மக்கள்.பழங்குடியினரை அழிக்கிறது. அவர்களின் நிலத்தை விட்டும்,கலாசார பிணைப்பை விட்டும் காணடிக்கிறது. உள்ளூர் மட்டத்தில் வெவ்வேறு முகங்கள் கொண்டு இயங்கும் முதலாளித்துவத்தின் கோரங்களை விமர்சிக்க அறிவுஜீவிகள் முன்வர வேண்டும். அது ஒடுக்கப்பட்ட மக்களை ஜாதிய படிநிலையில் இருந்து கலாசாரம் மற்றும் அடையாளம் அற்றவர்களாக ஆக்கியிருக்கிறது என்று மட்டுமே சொல்லி இழப்பின் பெருவலியை கடக்க முயல்கிறோம். மிக நெடிய செறிந்த கலாசாரம் கொண்ட பவுத்தத்தை சாதி இந்து அமைப்புக்கு மாற்றாக அண்ணல் கைக்கொண்டதை கவனிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் பல்வேறு தொழில்நுட்பங்களில்,கலைத்தொழில்களில் சிறந்து விளங்கினர். அவற்றை மீட்பதும் அவசியமே. சாதிய அமைப்பை காலி செய்கிறது என்று நாம் நம்புகிற நவீனத்துவமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநியாயங்களை செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும். 

கல்வி,அறிவியல்,பொருளாதாரம் என்று ஆதிக்க சாதியினர் நவீனத்துவதை ஒடுக்கப்பட்ட மக்களை பின்னுக்கு தள்ள பயன்படுத்துகிற போக்கும் நிலவுகிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக மட்டுமே பிந்தங்கியிருந்தார்கள் என்பதை என்பதை மறைத்து அவர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒரே மாதிரியான சிக்கல் கொண்டவர்கள் என்று பேசுவது வலி நிறைந்த வரலாற்றை உண்மையை மறைக்கும் போக்கே. ஆன்மீக பிரதிநித்துவங்கள் முழுக்க தவறானவை என்று பேசாமல் அவற்றின் ஒடுக்கப்பட்ட மக்களின் கலாசாரத்தோடு இணைதல்,அழித்தல் மற்றும் தேர்ந்தெடுத்த அமைதியை கூர்ந்து பதிவு செய்ய வேண்டும். 

தொழில்நுட்பம் செய்யும் பல்வேறு கொலைகளுக்கு,நவீனத்துவம் மக்களை அழிக்கும் அவலங்களுக்கு எதிராக,மண்ணுக்காக,சூழலியலுக்காக,அணைகள் கட்டவும், வளர்ச்சியை உருவாக்கவும்,தனிமங்கள் எடுக்கவும் மண்ணில் இருந்தும்,காடுகளில் இருந்தும் விரட்டப்படுவதில் பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களே என்பதை உணர்ந்து இதற்கு எதிராகவும் குரலெழுப்ப தவறுவது தகாது என்கிறது நூல். காந்தியின் இந்த நவீனத்துவம் மீதான விமர்சனத்தோடு அண்ணலின் அடிபணியமாட்டேன் என்கிற ஆதாரமும் சேருகிற பொழுதே மாற்றங்கள் நிஜமாகும்

Permanent Black வெளியீடு 
டி.ஆர்.நாகராஜ் 
விலை : 399
தமிழில் : 
தீப்பற்றிய பாதங்கள் – டி.ஆர். நாகராஜ்
புலம் புதிய வெளியீடு
பக்கங்கள்: 452 / கெட்டி அட்டை
விலை ரூ. 350