ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் உருவான லிங்கன் திரைப்படத்தை இன்றைக்கு பார்த்தேன். அடிமை முறையால் அடக்குமுறைகள் மற்றும் பெருந்துயரங்களுக்கு உள்ளான கறுப்பின மக்களுக்கு விடுதலை தருவதாக சொல்லி லிங்கன் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்திருந்தார். அடிமை முறையால் தங்களின் சொத்துக்களை பெரிய அளவில் பெருக்கி வைத்திருந்த தெற்கு மாகாணங்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தன. அடுத்து நடந்த உள்நாட்டுப்போர் நான்கு ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து கொண்டிருந்தது. லிங்கன் அடிமைகள் என்று யாருமில்லை என அறிவித்து விடுதலைப் பிரகடனத்தை அறிவித்தார். போர் நடந்து கொண்டிருந்த சூழலிலேயே தேர்தல் வந்தது. லிங்கன் வென்றார்.
தோல்வியை நோக்கி தெற்கு மாகாணங்கள் பயணப்பட்டு கொண்டிருந்த பொழுதே லிங்கன் ஒரு முடிவெடுத்து இருந்தார். அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் அடிமை முறை பற்றிய குறிப்பை நீக்கி அவர்களும் சமம் என்று அறிவிக்க வேண்டும் என்று அதற்கான சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார். அமெரிக்காவில் சட்டத்தை திருத்துவது சுலபம் கிடையாது. செனட் அங்கீகரிக்க வேண்டும்,அடுத்து மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு வரும். அங்கே மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோடு வென்றால் மட்டுமே சட்டத்திருத்தம் அடுத்த கட்டத்துக்கு செல்லும். அதற்கு பின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் அதை அங்கீகரிக்க வேண்டும். செனட்டில் லிங்கன் கட்சியினரே அதிகம் இருந்ததால் அங்கே சிக்கலில்லை. அதற்கு அடுத்த சபையில் மசோதாவை சட்டமாக்க நடந்த ஒரு மாத போராட்டம் தான் திரையின் களம்

முதல் காட்சியிலேயே போர்க்களம் தான் கண் முன் விரிகிறது. சகோதரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். கறுப்பின வீரர் இருவர் லிங்கனிடம் எப்படி குறைந்த அனுபவம் கொண்ட தங்கள் படை தெற்கு படைகளை எதிர்கொண்டது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அப்பொழுது ஒரு வீரன் எப்படி தாங்கள் இழிவாக நடத்தப்பட்டோம் என்று லிங்கனிடம் விவரித்தவாறே,”ராணுவத்தில் இப்பொழுது தான் சமமான ஊதியம் தருகிறார்கள். நாங்கள் ராணுவத்தில் உயர் பதவிகளுக்கு போவதற்கு காலமாகும். தளபதி ஆக இன்னமும் அறுபது ஆண்டுகள் ஆகும். வோட்டு உரிமை கிடைக்க இன்னுமொரு நூறாண்டுகள் ஆனால் அது நடக்கும் என்று தெரியும் !” எனக்கு என்கிறான்.
இருபது ஓட்டுகள் எதிர்க்கட்சியில் இருந்து தாவினால் மட்டுமே மசோதா வெல்லும் என்கிற சூழல். நேர்மைக்கு பெயர் போன லிங்கன் அவர்களுக்கு பதவிகள் கொடுத்து ஓட்டுக்களை பெற சொல்கிறார். எப்படியாவது சட்டத்தில் இருக்கிற இந்த அநீதியை நீக்கினால் வருங்கால சந்ததிகள் அடுத்த சமத்துவத்தை நோக்கிய நகர்வை நிகழ்த்துவார்கள் என்று அவர் நம்புகிறார். ஆனால்,தெற்கு படைகள் தோல்வியில் விளிம்பில் நின்று கொண்டிருந்தன. அவை சரணடைந்தால் சில ஓட்டுக்களை தருவதாக பேரம் பேசப்பட அதற்கும் சரி என்று ரிச்மான்ட் நோக்கி சபை உறுப்பினரை அனுப்பி வைக்கிறார்.
வீட்டில் மனைவி அவரை பாடுபடுத்துகிறார். சொந்த ஷூவை கூட தானே பாலிஷ் செய்து கொள்ளும்,முடிவெட்ட ஆள் கூட வைத்துக்கொள்ளாத லிங்கனுக்கு எப்படி நேர்மாறாக அவரின் மனைவி ஆடம்பரமாக இருக்கிறார் என்று காட்டப்படுகிறது. வில்லி என்கிற ஒரு மகனை போரில் இழந்த அவர் ராபர்ட் என்கிற அடுத்த மகனை போருக்கு அனுப்ப மாட்டேன் என்று உறுதிபட நிற்கிறார்.

ஸ்டீவன்ஸ் என்கிற சபை உறுப்பினர் முப்பது வருடங்கள் கறுப்பின மக்களின் சமத்துவத்துக்காக போராடுகிறார். அவர் லிங்கன் கட்சி உறுப்பினர். சட்டத்திருத்தம் சபையில் கொண்டு வரப்பட்டதும் எதிர்க்கட்சிகள் அவர் வாயால் அந்த சட்டத்திருத்தம் கறுப்பர்களுக்கு எக்கச்சக்க உரிமை வழங்கும் சூழ்ச்சியை கொண்டது என்று வெள்ளையர்களும் கருப்பர்களும் சமம் என்றும் அவர் வாயால் சொல்ல வைத்தால் சபையினருக்கு தோன்ற வைத்து தீர்மானத்தை காலி பண்ணிவிடலாம் என்று திட்டமிடுகிறார்கள். பொறுமையாக இருக்கும்படி லிங்கன் அவருக்கு அறிவுறுத்தி அனுப்புகிறார்.
காட்சி விரிகிறது. எதிர்க்கட்சி ஆள் அவரை நோக்கி ,”எல்லாரும் சமம் என்று நீங்கள் சொன்னீர்களே ? கறுப்பர்களும்,வெள்ளையர்களும் சமம் என்கிறீர்களா ?” என்று தூண்டிலை வீசுகிறார். “நான் அப்படி சொல்லவில்லை. சட்டத்தின் முன் எல்லாரும் சமம் என்றே சொன்னேன் !” என்று அவர் சொல்ல நிறைய பேர் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த முன்னாள் அடிமையான கெக்லி என்கிற பெண் கண்ணீர் ததும்ப வெளியே போகிறாள். இப்பொழுது ஸ்டீவன்ஸ் பதில் சொல்கிறார் ,”உங்களை மாதிரி இழிந்த பிறவிகள் அதிலும் உடம்பில் சூடான ரத்தம் பாயாமல் சாக்கடையும்,அழுக்கும் மட்டும் வழிந்து ஓடுபவர்களை காலால் கூட நசுக்க தகுதியற்ற உங்களை எப்படி சமம் என்று நான் சொல்ல முடியும். ஆனால்,நீங்களும் சட்டத்தின் முன் சமம் என்பது தானே உண்மை. அதைத்தான் சொன்னேன் !” என்கிறார். சபை ஆர்ப்பரிக்கிறது.

வெளியே அவரைப்பார்த்து “உங்களின் முப்பதாண்டு கால போராட்டத்தை இப்படி ஒரே வார்த்தையில் தீர்த்து விட்டீர்களே ?” என்று கேட்கப்படும் பொழுது ,”இல்லை இத்தனை இழப்பு,ரத்தம்.போராட்டம்.பல்லாயிரக்கணக்கான மக்களின் மரணம் எல்லாமும் எதை நோக்கி போனதோ அதை இழந்துவிட என் ஆவேசம் காரணமாக கூடாது !” என்று சொல்கிறார்.
பதவிகளை காட்டி பன்னிரெண்டு பேரை பெறுகிறார்கள். ஒருவரை தேர்தல் வழக்கில் இருந்து காத்து லிங்கனின் வழிகாட்டுதலில் ஸ்டீவன்ஸ் சபை உறுப்பினர் ஆக்குகிறார். அப்படியும் ஓட்டுகள் குறைகின்றன. லிங்கனே அப்படி மாற மறுக்கிற உறுப்பினர்களை வீட்டில் சந்திக்கிறார். அவர்களிடம் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுகிறார். “அடுத்து என்ன என்று பயமாக இருக்கிறது !”என்று கேள்வி வீசப்படும் பொழுது ,”அது எனக்கு தெரியாது. இந்த கணம் நமக்கானது. அதை நாம் சாதித்து முடிக்க வேண்டும்.” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறார்.
சமாதானம் பேசவந்த தெற்கு ஆட்களை வாஷிங்க்டன் வரச்சொல்கிறார். அவர்களின் அமைதி உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு விட்டால் தீர்மானம் தள்ளிப்போகும் அதை சமரசம் என்று சபையினர் பார்ப்பார்கள் என்று லிங்கனுக்கு தெரியும். அதே கணம் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த அவர் மறுக்கவில்லை.
பேச்சுவார்த்தை சீக்கிரம் முடிந்து இணைந்து விட்டால் அவர்கள் சட்டத்தை தோற்கடிப்பார்கள் என்றும் அவருக்கு தெரியும். “சமாதான உடன்படிக்கையா ? சட்டத்திருத்தமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.மக்கள் உங்களை வேறு யாரைவிடவும் நேசிக்கிறார்கள். இந்த சட்டத்திருத்தம் தேவையா?” என்று அயலுறவு அமைச்சர் கேட்கிறார். லிங்கன் அசரவில்லை. அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்குள் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றிவிட முனைகிறார். அவரை சர்வாதிகாரி.துரோகி என்கிற வசைகளுக்கு நடுவே சட்டத்திருத்தத்தை சபையில் நிறைவேற்றிவிட ஓயாமல் உழைக்கிறார்.
அவரின் மகன் ராபர்ட் போர்க்கள காட்சிகளை பார்த்து ராணுவத்தில் இணைந்து நாட்டுக்காக போராடுவேன் என்று உறுதிபட சொல்லிவிடுகிறான். லிங்கன் அனுமதி தருகிறார். அவரின் மனைவி அவரை வார்த்தைகளால் வாட்டி எடுக்கிறார். அழுது அவரை ஏற்கனவே பல்வேறு மனஉளைச்சலுக்கு நடுவே குத்தி கிழிக்கிறார். கொதித்து பொங்கும் லிங்கன்,”நான் எப்பொழுதும் தனியனாகவே இருக்கிறேன். இப்படியே இருந்து விட்டுப்போகிறேன். அவன் பாதை அவனுக்கு. உன் பாதை உனக்கு. என் பாதை எனக்கு. விட்டுவிடு !”என்று குமுறித்தீர்க்கிறார். மனைவி சட்டத்திருத்தம் வெற்றி பெறாமல் போகட்டும் ; அப்புறம் உங்களுக்கு இருக்கிறது என்று மேலும் அச்சுறுத்துகிறார்.
முகம் வாடி,மனம் நொந்து லிங்கன் நிற்கிறார். தெற்கு பிரதிநிதிகள் அமைதி தேடி வருகிறார்கள் என்று தெரிந்தால் என்னாகும் என்கிற கவலை வேறு அவரை வாட்டிக்கொண்டு இருந்தது. ஓட்டளிப்பு நெருங்கி வருகையில் மாளிகைக்குள் நுழையும் கணம் அவரின் அந்த கறுப்பின பணிப்பெண் கெக்லி “நாளை அந்த சட்டத்திருத்தம் கண்டிப்பாக நிறைவேறும். என் மகனை நான் போரில் இழந்திருக்கிறேன். நான் அவளின் தாய் என்றே என்னை அறிய விரும்புகிறேன். நீங்கள் எங்களை எப்படி பார்க்கிறீர்கள் ?” என்று கேட்கிறார்.
“நாம் அனைவரும் கவலை பூண்டு,ஒதுக்கப்பட்டு,துன்பங்களுக்கு உள்ளாகிய மனிதர்கள் தான். எல்லாருக்கும் கவனிப்பும்,விடுதலையும் தேவைப்படுகிறது. உன்னை என் சக மனுஷி என்று மட்டும் தான் தெரியும்.” என்று அவர் கண்கள் நிறைய சொல்கிறார்.
அடுத்த நாள் ஓட்டளிப்பு நடைபெறுகிறது. முதல் முறையாக சபைக்குள் கறுப்பின மக்கள் பார்வையாளர் மாடத்தில் அமர்கிறார்கள். அவர்களை வரவேற்று சபாநாயகர் பேசியதும் பலர் கைதட்டுகிறார்கள். தெற்கு பிரதிநிதிகள் அமைதி தேடி வந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரங்களோடு இருப்பதாக எதிர்க்கட்சி ஆள் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதைக்கேள்விப்பட்டு லிங்கன் கட்சியின் பழமைவாதிகளும் சட்டத்திருத்த வாக்கெடுப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். லிங்கனை நோக்கி ஓடி வருகிறார்கள். தெற்கு பகுதி பிரதிநிதிகள் சமாதானம் வேண்டி வரவில்லை ; அப்படியொரு நிகழ்வு நடைபெறாது ! என்று எழுதியிருந்த அறிவிப்பில் கையெழுத்து கேட்கிறார்கள். அது பொய் என்றும்,அப்படி அதில் கையெழுத்திட்டால் அவரை தேசத்துரோக குற்றம் சொல்லி தண்டிக்கவும் முடியும் என்று எச்சரிப்பை மீறி லிங்கன் கையெழுத்திட்டு அனுப்புகிறார்.
ஓட்டளிப்பு தொடர்கிறது. டெலிகிராப்பில் ஓட்டளிப்பு நிலவரம் மக்களுக்கு தெரிந்து பல் கடித்து காத்திருக்கிறார்கள். தாவல்கள் மற்றும் புறக்கணிப்புகள் நிகழ்கிறது. ஓட்டளிப்பு முடியும் சமயம் சபாநாயகர் தானும் ஓட்டளிப்பதாக சொல்கிறார். “அது நடைமுறையில்லை !”என்று எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். “இது நடைமுறையை பற்றிய விஷயம் அல்ல. ஏற்கனவே இப்படி ஓட்டளிப்பு நடந்திருக்கிறது. இது வரலாறு நண்பரே !”என்று ஆம் என்று வாக்களிக்கிறார். முடிவுகள் முழுதாக அறிவிக்கப்படும் முன்னர் காட்சி லிங்கன் தன் மகனோடு நிற்கிற காட்சி நோக்கி பயணிக்கிறது. அவர் வெளிச்சம் பாயும் சாளரத்தின் ஊடாக நிற்கிறார். மக்கள் கொண்டாடுகிறார்கள். இரண்டு ஓட்டு வித்தியாசத்தில் தீர்மானம் வெல்கிறது. சமத்துவமின்மை சட்டத்தை விட்டு வெளியேற்றப்படுகிறது.

ஸ்டீவன்ஸ் சட்டத்திருத்தத்தின் மூலப்பிரதியை நாளை தருவதாக சொல்லி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருகிறார். “ஏன் நீ வரவில்லை !” என்று தன்னுடைய வீட்டில் இருக்கும் கறுப்பின பெண்மணியிடம் காதல் பொங்க கேட்கிறார். அவரோ,”உங்கள் வீட்டு வேலைக்காரி அங்கே வந்தால் உங்களை ஏசுவார்கள் !” என்கிறார்.படுக்கையில் இருவரும் படுத்துக்கொள்கிறார்கள். கண்ணில் கண்ணீர் பொங்க சட்டத்தின் வரிகளை அவரின் காதலி வாசிக்கிறார் ; இவர் வழிமொழிகிறார். லிங்கன் முன்னால் நடக்க அவரின் அந்த பின்பாதியை அவரின் கறுப்பின உதவியாளர் கண்கள் நிறைய காண்கிறார். லிங்கன் சுடப்படுகிறார். அதற்கு முன்பே தெற்கு பகுதி மக்களுக்கு தண்டனை கிடையாது என்று உறுதி தருவதோடு அடிமை முறையை நீக்கும் சட்டத்திருத்தத்தை மாநிலங்கள் ஏற்கும் என்பதை உறுதி செய்கிறார். அவர் அதற்கு பின் சுடப்படுகிறார். “with malice toward none and charity for all” என்கிற அவரின் பேச்சோடு திரை இருள்கிறது. சமத்துவம் நோக்கிய வெளிச்ச வரலாறு நமக்குள் புகுகிறது
டேனியல் டே லீவிஸ் அப்படியே லிங்கனை திரையில் கொண்டு வந்திருக்கிறார். எந்த சலனமும் இல்லாமல் அவர் காட்சிகளில் வாழ்வதை பார்க்கிற பொழுதே லிங்கனே முன்னால் நடமாடுவது போன்றே பிரமிப்பு உண்டாகிறது. அவசியம் பாருங்கள்