மாரட்-ஓவியமும் புரட்சி செய்யும் !


ஒரு ஓவியம் ஒரு புரட்சியில் மாபெரும் பங்குவகிக்க முடியுமா ?முடியும் என நிரூபித்தது ழான் பால் மாரட்டின் மரணத்தை சித்தரிக்கும் ஓவியம் .பிரெஞ்சு புரட்சிக்கான விதைகளாக பத்திரிகையின் எழுத்துக்களை மாற்றிய பிதாமகர் தான் இந்த மாரட்.

அவரை கத்தியால் சார்லோட் கோர்டே எனும் பெண் குத்திக்கொல்வதை சிதைக்கும் ஓவியம் தான் பிரெஞ்சு புரட்சி மாபெரும் அளவில் பரவுவதில் முக்கியமான பங்கு வகித்தது .பல மக்கள் புரட்சி என்கிற பெயரில் கொல்லப்படுவதையும் மன்னர் கொல்லப்படுவதையும் விரும்பாத கோர்டே இச்செயலை செய்ததாக கூறப்பட்டாலும் ,இந்த ஓவியம் புரட்சியின் வீரியத்தை அதிகப்படுத்தவே செய்தது .

அதிலும் மாரட் ஒரு வகையான சரும நோயால் பாதிக்கப்பட்டு குளியல் அறையில் இருந்தே எப்பொழுதும் இயங்கிக்கொண்டு இருந்தார். அவரை மனுகொடுக்க சந்திக்கிறேன் என்றுப் வந்து குளியலறையில் வைத்து குத்தி கொலை முடிக்கப்பட்டது. 

உண்மையில் அதற்கு முந்தைய தினம் தான் ஓவியர் மாரட்டின் வீட்டுக்கு போய் வந்திருந்தார். அந்த வீட்டின் குளியலறை,சுவர்கள்,மாரட் என்கிற இதழியலாளரின் பேனா ஆகியவை அவரின் நினைவில் அப்படியே இருந்தன. ஓவியம் தீட்டவேண்டும் என்று அவர் கேட்டுகொள்ளப்பட்டதும் அவர் மாரட்டின் உடலை பார்த்தார். அது அழுகிப்போய் இருந்தது.

டேவிட் அப்படி காட்சிப்படுத்தாமல் மாரட் இறந்து கொண்டு இருப்பது போலவும்,அவரின் கண்கள் படிப்படியாக மரணத்தை நோக்கி நகர்வதால் மூடிக்கொள்வது போலவும்,அவரின் தலை அவரின் தோளின் மீது படிவதும் அவரின் வலது கரம் நிலத்தை நோக்கி சரிவதைப் போலவும் ஓவியம் வரையப்பட்டு நடந்த சம்பவத்தின் உக்கிரத்தை வெளிப்படுத்தியது. மாரட் ஓவியத்தில் ஐந்து பிள்ளைகளை கணவனை போரில் இழந்த மனைவிக்கு உதவுவதற்காக கடிதம் தீட்டுவதும் காட்சிப்படுத்தப்பட்டு அவர் எத்தகு எளிமையானவர் என்பது புலப்படுத்தப்படுகிறது. 

டேவிட்டின் கைவண்ணத்தில் மலர்ந்த இந்த ஓவியம் ஆயிரம் சங்கதிகளை சொல்லாமல் சொல்கிறது .கத்தி அதிகாரம் ,மாரட் மாறாத பத்திரிகையாளன் ,ரத்தம் புரட்சிக்கான (சிந்தனை புரட்சி )நீர் என கொள்ளலாம் போல

கருப்பு காந்தி காமராஜர்


காமராஜரின் பிறந்தநாள் ஜூலை பதினைந்து . காலா காந்தி என்று அறியப்பட்ட பெருமனிதர் அவர்.
சங்கரர்,பட்டினத்தார் ஆகியோரால் கூட துறக்க முடியாத அன்னைப்பாசத்தை துறந்தவர் அவர். அம்மா அருகில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் உடன் வந்து ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று அவர்களை அருகேயே அண்ட விடவில்லை அவர். விதிகளை மீறி அம்மாவுக்கு குழாய் இணைப்பு கொடுத்த பொழுது,அதைத்தானே பிடுங்கி எறிந்து விட்டு ,”நான் பணம் கட்டி அனுமதி கேட்டேனா ? இதற்கு வரி கட்ட எனக்கு எங்க வக்கு இருக்கு?”என்று கேட்டார் அவர். 

தஞ்சை மருத்துவக்கல்லூரி எழுவதற்கு காமராஜரே காரணம். எண்பது லட்சம் அரசு தரட்டும்,இருபது லட்சம் நான் தருகிறேன் ; என் கட்டுப்பாட்டில் ஒரு மருத்துவக்கல்லூரி கட்டிவிடலாம். என்று ஒரு பணக்காரர் கேட்க,ரயில்வே செஸ் பணத்தில் இருந்து முழுமையாக ஒரு கல்லூரியை அரசுப்பொறுப்பில் கட்டி தனியார் நிழல் அதில் படாமல் காமராஜர் பார்த்துக்கொண்டார் 

ரேசனில் கேப்பை போடுறாங்க,அரிசி வாங்கிதாப்பா என்று முதல்வராக இருந்த காமராஜரிடம் சொந்த அம்மா கேட்ட பொழுது ,”ஊருக்கு ஒண்ணு உனக்கொண்ணா ? இதையே ஆக்கித்தின்னு !” என்றிருக்கிறார். அம்மா,விதவைதங்கை அவரின் பிள்ளைகள் என்று எல்லாரும் இருந்த குடும்பத்துக்கு மாதம் நூற்றிருபது ரூபாய் மட்டுமே அனுப்பி வந்திருக்கிறார். அதற்கு மேல் முப்பது ரூபாய் கேட்ட பொழுது கொடுக்க மறுத்திருக்கிறார் 
ராஜாஜியின் ஆட்சி குலக்கல்வி முறையை கொண்டு வர முயன்றதால் அவர் ஆட்சியை இழந்தார். தான் முதலமைச்சர் பதவியேற்க வேண்டும் என்றால் தன்னுடைய ஆதரவாளர்கள் அமைச்சர் பதவி கேட்க கூடாது என்பது காமராஜரின் நிபந்தனையாக இருந்தது. அப்படியே ராஜாஜி அவர்களின் அமைச்சரவையை வைத்துக்கொண்டார். 
யாரைப்பற்றியும் மேடையில் அவச்சொல் சொல்லி பேச விடமாட்டார். அவரின் கரங்கள் அப்படி பேசுபவரை செல்லமாக பதம் பார்க்கும். தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்!தனக்கு ஆங்காங்கே தரப்பட்ட சில்லறைகளை கூட தன்னுடன் வைத்துக்கொள்ளாமல் கட்சிக்கு இடம் வாங்க அதையும் கொடுத்து விட்டவர். அதிகபட்ச அவரின் ஆடம்பரம் உணவில் முட்டை

மதிய உணவுத்திட்டத்தை ஹரிஜன பள்ளிகளில் பின்பற்றுவது போல ஒப்பந்தாரர்களிடம் தரலாம்,நிதியில்லை என்று அதிகாரிகள் சொல்கிறார் . அரசே செய்யும் என்று அழுத்தி சொல்கிறார் கர்மவீரர். மத்திய அரசு அகலக்கால் என்று அனுமதி தர யோசிக்கிறது. மத்திய அரசு நிதி குறைவாக வரவே குறைந்த எண்ணிக்கை பள்ளிகளில் மட்டும் அமல்படுத்தலாம் என்று சொன்ன பொழுது அதையும் புறக்கணித்து எல்லா பள்ளிகளிலும் அமல்படுத்தி சாதிக்கிறார் கருப்பு காந்தி. நிதி போதாது என்ற பொழுது ,”இந்த அரசாங்கம் கையேந்தியாவது பிள்ளைகளின் பசி தீர்க்கும்.” என்று அவர் முழங்கினார். 

பொய்யான ஊழல் குற்றச்சாட்டை அவர் மீது வைத்த பொழுது ,”எனக்கு யானைக்கால் வியாதி அப்படின்னு அவனவன் சொன்னா நான் என் காலை தூக்கியா காமிச்சுக்கிட்டு இருக்க முடியும்னேன்!” என்று சொன்னவர். சட்டசபையில் எப்படி கச்சிதமாக பேச வேண்டும் என்று திமுகவுக்கு பாடம் எடுத்தவர் அவர். தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி கதை அவரில் இருந்தே துவங்குகிறது

காமராஜருக்கு ஆங்கிலம் தெரியாது என்பது தவறான தகவல். ஆங்கில நூல்களை வாசிக்கிற பழக்கம் அவருக்கு உண்டு. அதிகாரிகளின் கோப்புகளில் தவறு இருந்தால் அதை சரி செய்கிற அளவுக்கு அவர் ஆங்கிலம் அறிந்திருந்தார். சாஸ்திரி அவர்களுடன் கலந்து கொண்ட கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களிடம் ஆங்கிலத்தில் இக்கட்டான சூழலில் தானே ஆங்கிலத்தில் பதிலளித்து அசத்தியிருக்கிறார். 

காமராஜர் தோற்ற பொழுது எதிர்கட்சிகளின் மீது பழி போடவில்லை . “இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!’ “என்றவர். அப்பொழுது திமுகவினர் “கல்லூரி மாணவன் சீனுவாசனிடம் படிக்காத காமராஜர் தோற்றுப்போனார் “என்று போஸ்டர் அடித்தார்கள். பெரியார்,”படிக்காத காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த சீனுவாசன் வென்றார் !” என்று பதில் போஸ்டர் ஒட்டினார்


இறந்த பொழுது பத்து செட் கதர் சட்டைகள்,சில நூறு ரூபாய்கள் அவ்வளவு தான் அவரிடம் இருந்தது என்று நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். அரசாங்க பணத்தை அரசின் சாதனைகள் பற்றிய விளம்பரங்களுக்கு செலவு செய்ய மாட்டேன் என்று மறுத்த அதிசய மனிதரின் கொஞ்ச நஞ்ச நினைவுகளாது அறம் சார்ந்த அரசியலை ஞாபகப்படுத்தட்டும்

தேர்வு முடிவுகளோடு நெகிழவைக்கும் ஒரு கடிதம் !


இங்கிலாந்தில் தேர்வு முடிவுகளோடு பள்ளி மாணவர்களுக்கு இணைக்கப்பட்ட கடிதம் இது :

இந்த கடிதத்தோடு உங்களின் தேர்வு முடிவுகள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த சிக்கலான தேர்வு வாரத்தில் நீ காட்டிய அளவில்லாத அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியைக்கண்டு நாங்கள் பெரிதும் பெருமைப்படுகிறோம்.

ஆனால்,இந்த தேர்வுகள் உன்னை தனித்தவராகவும்,சிறந்தவராகவும் ஆக்கும் பண்புகளை முழுமையாக எடை போடாது என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். இந்த வினாத்தாள்களை தயாரிப்பவர்கள்,இவற்றை திருத்துபவர்கள் ஆகிய ஒவ்வொருவருக்கும் உங்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் தனித்தனியாக தெரியாது. உங்களை உங்கள் ஆசிரியரோ,பெற்றோரோ,நான் அறிய முயல்கிற மாதிரியோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. நீ அற்புதமாக ஒரு இசைக்கருவியை மீட்டுவாய் என்றோ,பிரமிக்க வைக்கிற வகையில் ஓவியம் வரைவாய் என்றோ அல்லது அழகாக நடனம் ஆடுவாய் என்றோ அவர்களுக்கு தெரியாது.

உன் நண்பர்களுக்கு நீ எவ்வளவு முக்கியமானவர் என்றோ,உன்னுடைய ஒரு புன்னகை அவர்களின் ஒரு நாளை எவ்வளவு சிறப்பானதாக ஆக்கிவிடும் என்றோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. நீ கவிதையோ,பாடலோ எழுதுவாய் என்றோ அல்லது விளையாட்டுகளில் பங்கு பெறுகிறாய் என்றோ அல்லது சிலசமயங்களில் பள்ளி முடிந்த பின்னர் உன்னுடைய குட்டித்தம்பி அல்லது தங்கையை கவனித்துக்கொள்கிறாய் என்றோ அவர்களுக்கு தெரியாது. நீ கச்சிதமான ஒரு இடத்துக்கு பயணம் போய் வந்திருக்கிறாய் என்றோ,ஒரு சிறந்த கதையை அசந்து போகிற வகையில் உனக்கு சொல்லத்தெரியும் என்றோ, முக்கியத்துவம் வாய்ந்த நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களோடு நேரம் செலவிட்டாய் என்றோ அவர்களுக்கு தெரியாது. நீ நம்பிக்கைக்குரியவன்,கருணையானவன் அல்லது யோசிக்கக்கூடியவன் என்பதோ,நீ ஒவ்வொரு நாளும் உன்னுடைய பெஸ்ட்டை தர முயல்கிறாய் என்பதோ அவர்களுக்கு தெரியாது. இந்த முடிவுகள் எதோ சிலவற்றை சொல்கின்றன,ஆனால்,அவை உன்னைப்பற்றி எல்லாவற்றையும் சொல்லவில்லை.

இந்த முடிவுகளை கொண்டாடுங்கள்,இவற்றை பற்றி பெருமிதப்படுங்கள். அதே சமயம் நீ சாமர்த்தியசாலியாக இருப்பதற்கு எண்ணற்ற வழிகள் இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்

தமிழுக்காக உழைத்த ஜப்பானிய பேரறிஞர் சுசுமு ஓனோ


சுசுமு ஓனோ 1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் டோக்கியோவில் கக்குசியூவின் பல்கலைக்கழகத்தில்பேராசிரியராகப் பணியாற்றினார். ஜப்பானிய மொழியோடு கொரிய மற்றும் ஆஸ்திரனேசிய மொழிகள் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் என்று ஆய்வுகள் செய்த அவர் அப்படி எதையும் கண்டறிய முடியாமல் திண்டாடிய பொழுது தான் திராவிட மொழிகள் கண்ணில் பட்டன.

அவற்றோடு ஜப்பானிய மொழி மிக நெருந்கிய தொடர்பு கொண்டிருப்பதை அவர் கண்டார். கிமு ஐநூறு வாக்கிலேயே தமிழகம் மற்றும் ஜப்பான் இடையே ஆன தொடர்பு உண்டாகி இருக்கும் என்று அவர் உறுதிபட குறித்தார். மேலும் யாயோய் எனும் ஜப்பானிய கல்லறைகள் மற்றும் அதே காலத்து தமிழக கல்லறைகள் புதைத்தல் முறைகளில் ஒத்திருப்பதை அவர் குறித்தார். ஒலி, சொற்கள், இலக்கணம், இலக்கியம், தொல்பொருள் ஆய்வு, நாட்டுப்பாடல்கள் என்று இரு நாட்டவருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை அவர் பட்டியலிட்ட பொழுது ஆச்சரியம் அதிகரித்தது,

மொழியியல் துறையில் சிறந்து விளங்கிய ஓனோ இன்னமும் சிறப்பாக ஆய்வுகள் செய்ய தமிழ்நாட்டின் பேராசிரியர் பொற்கோவிடம் தமிழ் கற்று ஆய்வுகளை மேற்கொண்டார். ஜப்பானிய மொழி திராவிட மொழிகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டது என்று அறிவித்தார். . ஜப்பானியக் கவிதைத் தொகுதிகளான மன்போசு, கொளிக்கி ஆகியன சங்கத்தொகை நூல்களில் உள்ள அகப்பாடல்களோடும் புறப்பாடல்களோடும் மிக நெருங்கிய இலக்கிய உறவுகளைப் பெற்றுள்ளது என்பதை அவர் கண்டறிந்தார்.

ஜப்பானிய அறுவடைத் திருவிழாவிவான . “ரோவிசுட்சு’க்கும்,நம்மூரின் பொங்கலுக்கும் ஏறத்தாழ 17 ஒப்புமைகளை டாக்டர் சுசுமோ ஓனோ சுட்டிக் காட்டினார். இவ்விரு விழாக்களும் 3 நாட்கள் தொடர்ந்து நடக்கின்றன. ஜனவரி 14-ஆம் தேதி துவங்கி 3 நாட்கள் நடந்து நிறைவு பெறுகின்றன. ஜப்பானியர்கள் அறுவடைத் திருநாளில் “ஹோங்காரா’ என்று ஒலி எழுப்புவது போல தமிழர் “பொங்கலோ பொங்கல்’ என்று ஒலி எழுப்புகிறார்கள். தமிழில் உள்ள “ப’ ஒலி ஜப்பானில் “ஹ’ ஒலியாக மாறுவதையும், தமிழின் லகர ஒலி ஜப்பானில் ரகர ஒலியாக மாறுவதையும் விளக்கி, பொங்கல் என்பது ஹோங்காரா என்று ஜப்பானிய மொழியில் மாறியதாக டாக்டர் சுசுமோ ஓனோ வாதிட்டார். ஐநூறு வேர் சொற்கள் இரு மொழிக்கும் பொருந்தி வருவதையும் கண்டறிந்து சொன்ன ஓனோவின் ஜப்பானிய தமிழ் மொழி தொடர்பு குறித்த நூல் முப்பது வருடகால ஆய்வில் எழுந்து இருபது லட்சம் பிரதிகள் விற்றது !

தமிழ் மொழி மற்றும் ஜப்பானிய மொழி ஆகியவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமை சார்ந்து அவர்கள் செய்த அந்த ஆய்வு வெகுகாலம் நகர்ந்தது. அப்போது எண்பது வயதில் இருந்த ஓனோ, “நான் அறுபது வயதிலேயே இறந்திருக்க வேண்டியவன். தமிழ் கொடுத்த ஆற்றல்தான் என்னை இத்தனை தூரம் உயிரோடு வைத்திருந்திக்கிறது. உயிர் தந்த மொழி தமிழ்” என்று கண்ணீர் மல்க அந்த ஆய்வு முடிகிறபோது சொன்னது வரலாறு. அவரின் நினைவு தினம் இன்று

அவனை நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது :


எல்லாக் குற்றங்கள் நடக்கும்
இடத்திலும் அவன் இருப்பான் ;
உங்கள் கரங்கள் பற்றி
பாவம் நீங்கள் என்று கண்ணீர் துடைத்து
பொய்க்கவலை சிரிப்பு சிரிப்பான்.
அவன் தான் காரணம் என்று தெரியும்
ஒன்றும் செய்ய முடியாது.
பெருங்குரலெடுத்து அழ வைப்பான்
பாவங்கள் செய்ய விட்டு புனித நூல்கள் பரிசளிப்பான்
கைகளில் காப்பி கோப்பை திணிப்பான் ;
அதில் விஷம் ஊற்றி காதல் தேக்கி
அவன் பருக சொல்கையில்
எதிர்ப்பே இல்லாமல் அள்ளிக்குடிப்போம்,
அவன் நம் கைபிடித்து கறைகள் சமைப்பான்
வண்ணக்கோலம் இதுவென்று நம் மனதை நம்ப வைப்பான் !
எதிராளிகளின் கிடங்குகளை வெடிமருந்தால் நிரப்பி விட்டு
போரில் உங்கள் தளபதியாகி தனித்து நின்று
குழப்பங்கள் பரிசளிப்பான் ;
காய்கறி நறுக்கல் போல
நாய்களின் வால் குறைக்க பழக்கிவிட்டு
நவீனம் என்று பதித்திடுவான் ;
கூடாரங்களின் கூண்டுப்புலிகளை
பூதங்கள் என்று பரப்பிவிட்டு
கலவரம் மூட்டிவிட்டு உடன்படிக்கைகள்
தயாரித்து தூங்கி கழிவான் ;
பெருநகர நெரிசலில் குழந்தையை விளையாட விட்டதாக சொல்லிவிட்டு
அவன் சிகரெட் புகைக்கையில்
தொலைந்த பிள்ளையை பதறித்தேடி நீங்கள்
கண்டுபிடிக்கையில் அது அவனுக்கு முத்தம் தந்து பதறடிக்கும் ;
அவன் தானே எதையும் செய்வதில்லை
அவன் யாரையும் கொல்வதில்லை
எந்த போரிலும் வெல்வது அவன் நோக்கமில்லை
அவன் சாத்தானுமில்லை,கடவுளுமில்லை
அவன் யாருமில்லை,
அவன் அவனே இல்லை
அவன் பட்டங்கள் நம்மை சுமக்க விட்டு நகர்ந்து நின்று கணிக்கிறான்
அவனை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது

கல்லறைக்கால காதல் கவலைகள் !


Funeral Blues:
எல்லா கடிகாரங்களையும் நிறுத்துங்கள் ,தொலைபேசிகளை துண்டித்து விடுங்கள்
கொழுப்பு மிகுந்த எலும்புத்துண்டை வீசி நாய் குரைப்பதை நிறுத்துங்கள்
பியானோக்களை,மேளங்களை அமைதிப்படுத்துங்கள்
சவப்பெட்டியை கொண்டுவாருங்கள் ; துக்கம் கொண்டாடுபவர்கள் வரட்டும்

தலைக்கு மேலே விமானங்கள் வட்டமிட்டு முனகட்டும்
வானில் “அவர் இறந்துவிட்டார் !” என்கிற வரியை கிறுக்கட்டும்
புறாக்களின் வெள்ளை கழுத்தில் அலங்காரத்துணிகள் சுற்றப்படட்டும்
போக்குவரத்து காவலதிகாரிகள் கருப்பு பஞ்சு கையுறைகள் அணியட்டும்

அவனே என்னுடைய கிழக்கு,என்னுடைய தெற்கு,என்னுடைய வடக்கு மற்றும் மேற்கு
என் வேலை வாரமும்,ஞாயிற்றுக்கிழமையும் ஓய்வெடுக்கட்டும்
என் மதியம்,என் நள்ளிரவு,என் பேச்சு,என் பாடல் ;
நான் என் காதல் இறுதிவரை இருக்கும் என்றிருந்தேன் ; நான் தவறிழைத்து விட்டேன்

நட்சத்திரங்கள் இப்பொழுது தேவையில்லை ; அவை எல்லாவற்றையும் வெளியே அள்ளி வீசுங்கள்
நிலவை மூட்டை கட்டி அனுப்புங்கள் ; சூரியனை சுக்குநூறாக்குங்கள்
பெருங்கடலை ஊற்றி விடுங்கள்,காடுகளை கழித்து விடுங்கள்
இவையெதுவும் எந்த நலத்துக்கும் வரப்போவதில்லை ! – W. H. Auden
தமிழில் : பூ.கொ.சரவணன்

காணாமல் போன கதைகள் !


வெயில் அடர்ந்த காலங்களில்
தூசி பூசிய சாலைகளின்
சரித்திரத்தில் மண்டிக்கிடக்கிறது
அந்த கதைகள் ;
..

கடன்காரர்கள் முகமெங்கும்
விழித்து கவிந்து போன
சிறுமலர் சிறுமியின் சுவர் கிறுக்கல்களை
வண்ணம் பூசி அழித்த கதை

புவனா அக்காவின் சைக்கிள் கம்பிகளில்
மாட்டிக்கொண்ட காதலை பைக் கொடுத்து
தீர்த்த கதை ;

சத்தம் போட்டு சிரித்த கணத்தில்
கற்பு தொலைந்தாக தீர்மானிக்கப்பட்டு
தீக்குளிப்புக்குள்ளான உலகநாயகியின்
பெருஞ்சிரிப்பு மழை பொழியும் இரவுகளிலும்
கேட்கிறது ஆண்களிருக்கும் ஊர்கள் எங்கும்

வெளிக்கி போன இடத்தில்
மிருகங்களின் பசி மலத்தோடு விண்மீன்கள் மணந்த
இரவினில் ஆறுகையில்
இடிந்து போன கனவுகளின்
பாதைகளில் கிணற்று நீரளவு கண்ணீர் ததும்புவதை
ஒவ்வொரு அதிகாலை வேளையிலும் ஞாபகப்படுத்தும்
ஒதுக்குப்புறங்களில்
ஓய்ந்து மூச்சிரைக்கும்
மௌனக்கதைகளின் வன்மம் நாசி எங்கும்
பரவிக்கிடக்கின்றன

திருமணமாகி போகையில்
ஊர் விட்டு நகர்ந்தவர்கள் சிலவற்றை
தூக்கிப்போகிறார்கள்
போர் சூழ்ந்து பிரிகையில்
குப்பைக்கூளங்களில் சிலவற்றை புதைக்கிறார்கள் ;
அழுகை பெருக்கெடுக்கையில்
அடுக்குமாடி முத்தம் தரும் இடைவெளி கூட அற்ற
இடுக்குகளில் செருகிவிட்டு சிரிக்கிறார்கள் ;
சிலவற்றை பிணவறைகளில் மலர்க்கொத்துக்களோடு உதிர்த்து விட்டு நகர்கிறார்கள் ;
பெருங்கோபம் பற்றிக்கொண்டு வருகையில்
கதைகள் ஊர் மாறி,தெருமாறி,உருமாறி
நசுங்கிச் செல்கின்றன.
கதைகள் ஓய்வதில்லை,சொல்ல வேண்டியவர்கள் பேச அனுமதிக்கப்படுவதே இல்லை

சஞ்சய் காந்தி-பதைபதைக்கும் செல்லப்பையன் கதை !


R Muthu Kumar அண்ணனின் எழுத்தில் சஞ்சய் காந்தி வாழ்க்கை வரலாற்றை வாசித்து முடித்தேன். ஒரு முப்பத்தி ஐந்து வயதுக்குள் சஞ்சய் காந்தி இந்திய அரசியல் களத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகளை நூலை வாசிக்கிற பொழுது நம்மாலும் உணர முடிகிறது.

பெரோஸ் காந்தியை விட்டு நேருவுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு இந்திரா விலகி இருந்த காலங்களில் தந்தையின் பாசம் கிட்டாமல் அம்மாவின் செல்லத்தில் வளர்கிற பிள்ளையாகவே சஞ்சய் இருந்தார். பள்ளியில் மந்தமான மாணவனாக இருந்த அவர் அரிதிலும் அரிதாக கூட பிரகாசமான எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை. டூன் பள்ளியில் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த பிள்ளையை ராஜீவை பிரிய நேர்ந்த பொழுது வேறொரு பள்ளிக்கு மாற்றி அடிக்கடி பார்க்கிற பாசக்கார அம்மாவாக இந்திரா இருந்தார். உண்மையில் செல்லம் கொடுத்து கெடுக்கிற அம்மாவாக இருந்தார்.

அவரின் பெயர் கார் திருட்டில் அடி பட்ட பொழுதும் சரி,கல்லூரியே போகாமல் இங்கிலாந்தில் ரால்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பயிற்சிக்கு போன இடத்தில் அடிக்கடி காரை விதிகளை மீறி ஒட்டி போலீஸ் வசம் போன பொழுதும் இந்திராவின் அதிகாரமே சஞ்சயை காப்பாற்றியது. கார் மெக்கானிக் ஒருவரின் நட்பால் அரைகுறையாக தெரிந்திருந்த கார் அறிவோடு மலிவு விலை கார் தயாரிக்கிறேன் என்று கிளம்பினார் சஞ்சய். பல்வேறு கம்பெனிகள் கலந்து கொண்ட போட்டியில் உள்நாட்டு பொருட்களை கொண்டே கார் தயாரிப்பு இருக்கும்,ஆறாயிரம் சொச்சம் மட்டுமே விலை என்கிற உறுதியோடு ஒப்பந்தம் பெற்றார் அவர். ஐந்து கார்கள் கூட அதிலிருந்து ஒழுங்காக வெளியே வரவில்லை. விலையை பத்தாயிரம் தாண்டி ஏற்றினார். கூடவே ஹரியானாவில் அரசாங்க நிலம் மலிவு விலையில் அவரின் தொழிற்சாலைக்கு தரப்பட்டது. அதற்கு மேல் ஒன்றுமே உற்பத்தி செய்யாத அவருக்கு எழுபத்தி ஐந்து லட்சம் ருபாய் கடனை வங்கிகள் அள்ளித்தந்தன. எல்லாம் இந்திரா ஆசிகள். ரிசர்வ் வங்கி சஞ்சய் கம்பெனிக்கு கடன் தரக்கூடாது என்று உத்தரவு போடுகிற அளவுக்கு சலாம் போட்டார்கள். கார் தயாரிக்கிறேன் என்று சொன்ன நிறுவனத்தை கொண்டு சஞ்சய் தன் காலத்தில் தயாரித்தது சாலை உருளைகள் மட்டும் தான்.

எமர்ஜென்சி அலகாபாத் தீர்ப்பால் கொண்டு வந்தார் இந்திரா. டெல்லியை சுத்தப்படுத்துகிறேன் ஏழைகளின் சிக்கல்கள் குடிசைகளில் இருக்கிறது என்று சொல்லி பல்லாயிரக்கணக்கான குடிசைகள் தரைமட்டம் ஆகின. அதை எதிர்த்த அப்பாவி முஸ்லீம்கள் நூற்றி ஐம்பது பேர் துர்க்மான் கேட்டில் துப்பாக்கிக்கு பலியானார்கள். குடும்ப கட்டுப்பாடு நாட்டுக்கு நல்லது என்று சொல்லி வாரத்துக்கு ஆயிரம் என்கிற அளவுக்கு அள்ளிக்கொண்டு போய் குடும்ப கட்டுப்பாடு செய்தார்கள். எழுபத்தி ஐந்து ரூபாய்,ஒரு டின் நெய் என்று மக்களை ஆசை காட்டி பல லட்சம் பேரை இந்த திட்டத்துக்குள் தள்ளினார்கள். கல்யாணமாகாத இளைஞர்கள்,விருப்பமில்லாதவர்கள் எல்லாரும் அள்ளிக்கொண்டு போய் கத்தரிப்புக்கு உள்ளானார்கள். அதை எதிர்த்து முசபார்நகரில் போராடிய எளியவர்கள் முப்பது பேர் துப்பாக்கிகளுக்கு மீண்டும் பலியானார்கள். ஐ.ஏ.எஸ் அதிகார்கள் அவருக்கு முழு ஏவல் செய்கிற அற்புதத்தை துளி முணுமுணுப்பு இல்லாமல் செய்தார்கள்.

இளைஞர் காங்கிரஸ் என்கிற பெயரில் மாமூல் பெறவும்,பொறுக்கித்தனம் செய்யவும் நிறைய பேர் பழகிக்கொண்டார்கள். அதே போல கட்சியிலும் சஞ்சய்க்கு சாமரம் வீசியவர்கள் மட்டுமே நிலைக்க முடிந்தது.

தேர்தல் வந்தது. ஓயாமல் பிரச்சாரம் செய்த சஞ்சய் எழுபத்தி ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்று இருந்தார். அமேதிக்கு உட்பட்ட ஐந்து சட்டசபை தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்று இருந்தாலும் இவரை மட்டும் மக்கள் தோற்கடித்து இருந்தார்கள். “கழுதை நின்றால் கூட சஞ்சய்யை தோற்கடித்திருக்கும் என்கிற அளவுக்கு சஞ்சயின் புகழ் பரவி இருந்தது. ஜனதா அரசு வழக்குகள் போட்டது. டெல்லி ஆளுநர் கிஷன் சந்த் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்,இவரின் மாமனார் மர்மமான முறையில் இறந்து போனார். எல்லாம் சஞ்சயை காக்க என்று ஊர் சொன்னது. அடுத்த தேர்தலில் சஞ்சயின் ஆதரவாளர்கள் நூற்றி ஐம்பது பேர் வென்றிருந்தார்கள். விமானம் ஒட்டுகிறேன் என்று கிளம்பிய அவர் மண்டை நொறுங்கி இறந்து போயிருந்தார். நாடு ஓரளவுக்கு தப்பித்தது

கிழக்கு வெளியீடு
பக்கங்கள் :142
விலை : நூறு

சில்வஸ்டர் ஸ்டால்லோன் வாழ்க்கை


ஹாலிவுட்டின் அற்புதமான ஹீரோக்களில் சில்வஸ்டர் ஸ்டால்லோன்னுக்கு தனி
இடம் உண்டு. எக்கச்சக்க ஹிட்களை தொடர்ந்து கொடுக்கும் அவரின் வாழ்க்கையில் அவர் சந்தித்த சவால்கள்,போராட்டங்கள் எல்லாமும் கேட்பவரை
உத்வேகப்படுத்தும்.

அவரின் முகத்தின் வலது பாகம் செயலிழந்து இருந்தது. அவரின் பேச்சு தெளிவாக
இருக்காது. ஹாலிவுடில் நடிக்கலாம் என்று வாய்ப்புகள் தேடிப்போனால் நிராகரிப்பே அவருக்கு பெரும்பாலும் பரிசாக கிடைத்தது. நியூ ஜெர்ஸி பேருந்து டெர்மினலில் பல மூன்று வாரம் தங்க இடமில்லாமல் தூங்கிக்கொண்டு
இருந்தார் அவர். வறுமை வாட்டியெடுக்க தன்னுடைய செல்ல நாயை வெறும் இருபத்தைந்து டாலருக்கு விற்றார் அவர்

முகமது அலியின் குத்துச்சண்டை போட்டியை பார்த்ததும் தான் அவருக்கு ராக்கி படத்துக்கான கதை தோன்றியது. அதோடு பலரின் கதவுகளை தட்டினார். கதை
பிடித்திருந்தாலும் நீ நடிக்க கூடாது என்று சொல்லி ஒன்னே கால் லட்ச டாலரில் துவங்கி மூன்று லட்சம் டாலர் வரை சம்பளம் பேசினார்கள். ஆனால்,நான் நடிப்பேன் என்று உறுதியாக அவர் நிற்க வெறும் முப்பத்தைந்து
ஆயிரம் டாலர் மட்டுமே அவருக்கு சம்பளம் என்றானது. அவரின் செல்ல நாயை அதில் பதினைந்தாயிரம் டாலரை செலவு செய்து கண்டுபிடித்து படத்தில் நடிக்க
வைத்தார். படம் இருநூறு மில்லியன் டாலர்களை அள்ளியது. தோல்விகளுக்கு துவண்டு விடாமல் தொடர்ந்து முன்னேறுவது தான் வாழ்க்கையை அழகாக்குகிறது
இல்லையா ?

நாம் அகதிகள் :


நான் இசையாலான இடத்தில் இருந்து வருகிறேன்
என் பாடலுக்காக அங்கே என்னை சுடுவார்கள்
எங்கள் நிலத்தில் தன்னுடைய சகோதரனாலேயே
என் சகோதரன் கொடுமைப்படுத்தப்பட்டான்

நான் அழகிய இடத்தில் இருந்து வருகிறேன்
என் தோலின் நிறத்துக்காக என்னை அங்கே வெறுக்கிறார்கள்
நான் பிரார்த்தனை செய்யும் முறை அவர்களுக்கு பிடிப்பதில்லை
அவர்கள் கட்டற்ற கவிதையை தடை செய்கிறார்கள்

நான் அழகிய பகுதியில் இருந்து வருகிறேன்
இங்கே பெண்கள் பள்ளிக்கு போக முடிவதில்லை
சொல்வதை அப்படியே அங்கே நம்ப சொல்லித்தருகிறார்கள்
மேலும் சிறுவர்களும் தாடிகள் வளர்க்க வேண்டும் என்கிறார்கள்

நான் பழைய பெருங்காட்டில் இருந்து வருகிறேன்
அது இப்பொழுது வயலாகி விட்டது என்று எண்ணுகிறேன்
நான் ஒரு காலத்தில் அறிந்திருந்த மக்கள்
இப்பொழுது யாரும் அங்கில்லை

நாம் யார் வேண்டுமானாலும் அகதி ஆகலாம்
யாரும் பாதுகாப்பாக இல்லை
ஒரே ஒரு பைத்தியக்கார தலைவன் போதும்
அல்லது வராத மழையால் கிடைக்காமல் போன உணவு போதும்
நாம் எல்லாம் அகதிகம் ஆகலாம்
நாம் அனைவரும் போகச்சொல்லப்படலாம்
நாம் யாரோ ஒருவரால்
யாரோ ஒருவராக இருப்பதற்கு வெறுக்கப்படலாம்

நான் அழகிய பிரேதசத்தில் இருந்து வருகிறேன்
ஒவ்வொரு வருடமும் பள்ளத்தாக்குகள் வெள்ளத்தால் நிறையும்
ஒவ்வொரு வருட புயலும் நாங்கள்
தொடர்ந்து நகரவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கும்

நான் ஒரு ஆதி இடத்தில் இருந்து வருகிறேன்
என் ஒட்டுமொத்த குடும்பமும் அங்கே பிறந்தது
நான் அங்கே போக விரும்புகிறேன்
அங்கே உண்மையில் வாழ நான் ஆசைப்படுகிறேன்

சுட்டெரிக்கும் மணல் சூழ்ந்த பகுதியில் இருந்து நான் வருகிறேன்
அங்கே தோலை கருப்பாக்க சுற்றுலாப்பயணிகள் வருவார்கள்
தரகர்கள் துப்பாக்கிகள் விற்க விரும்புவார்கள்
நான் உங்களுக்கு அவை என்ன விலை என்று மட்டும் சொல்ல முடியாது

எனக்கு இப்போது தேசமில்லை என்று என்னிடம் சொல்லப்படுகிறது
நான் ஒரு பொய் என்று எனக்கு அறிவிக்கப்படுகிறது
நவீன வரலாற்று புத்தகங்கள் என் பெயரை
மறந்துவிடலாம் என்று எனக்கு தெரிவிக்கப்படுகிறது

நாம் அனைவரும் அகதிகள் ஆகலாம்
சில சமயங்களில் ஒரு நாள் மட்டுமே ஆகலாம்
சில சமயங்களில் ஒரு கைகுலுக்கல் மட்டுமே போதுமானது
அல்லது கையொப்பம் இடப்பட்ட ஒரு தாள் போதும்.

நாமனைவரும் அகதிகளில் இருந்தே வந்தோம்
யாரும் எளிமையாக தோன்றிவிடவில்லை
யாரும் போராடாமல் இங்கே வந்துவிடவில்லை
பின்னர் ஏன் பயத்தோடு நாம் வாழ்ந்திட வேண்டும்
வானிலை மற்றும் இன்னல்கள் பற்றி எண்ணியவாறு
நாம் எல்லாரும் எங்கிருந்தோ இங்கு வந்தோம்.- Benjamin Zephaniah