மனித நேயர் ரிச்சர்ட் அட்டன்பரோ


ரிச்சர்ட் அட்டன்பரோ இங்கிலாந்து தேசத்தில் பிறந்த மனித நேயர். அவரின் தாய், தந்தை இருவரும் தொழிலாளர் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தார்கள். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை விமர்சிக்கும் போக்கு அவருக்கு அதனால் இளம்வயதிலேயே கிளைவிட்டு இருந்தது. அவரின் வீட்டிலேயே ஹிட்லரின் யூத வெறுப்புக்கு பலியான குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் அவரின் சகோதரிகளாக வளர்ந்து வந்தார்கள். அவரின் தந்தை ஒரு கல்லூரியின் முதல்வர் என்றாலும் இவருக்கு பல்கலைப்படிப்பு படிக்கும் வாய்ப்பு அமையவில்லை. நாடகங்களில் மின்ன ஆரம்பித்தார். இன்றுவரை விடாமல் ஓடிக்கொண்டு இருக்கும் அகதா கிறிஸ்டியின் எலிவளை நாடகம் முதலில் ஆரம்பமான பொழுது இவர் தான் அதில் நாயகன்.

ஒரு கால் நூற்றாண்டு காலம் நடிப்பில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார். சில கோல்டன் க்ளோப் விருதுகளும், ஆஸ்கரும் அவரின் நடிப்புக்காக வந்து சேர்ந்திருந்தது. மிக அசாதாரணமான வேடங்களில் அவர் நடிப்பதை தவிர்த்தார். எளிமையான மனிதர்கள் அசாதரணமான சூழல்களில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை அற்புதமாக திரையில் கொண்டு வருகிற தேர்ந்த நடிகராக அவர் இருந்தார். எந்த ஷாட்டிலும் ரிச்சர்ட் தெரியமாட்டார். அந்த கதாப்பாத்திரம் மட்டுமே தெரியும் !

காந்தியின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்று இருவர் முயன்று அது கைவிடப்பட்டு இருந்தது. மோதிலால் என்கிற அயலுறவு அதிகாரி அட்டன்பரோவை அழைத்து அவரை காந்தியின் வாழ்க்கையை திரையில் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவர் லூயிஸ் பிஷரின் காந்தி பற்றிய வாழ்க்கை வரலாற்றை படித்து நெகிழ்ந்து போனார். அதை வேறு யாரையேனும் கொண்டு படமாக்கிவிட முடிவு செய்தார். . நேரு, இந்திரா காந்தி, மவுன்ட்பேட்டனின் மனைவி என்று பலரை சந்தித்து தகவல்கள் சேகரித்தார். சத்யஜித் ரேவின் THE CHESS PLAYERS திரைப்படத்தில் ஆங்கிலேய அதிகாரியாக நடிக்க வந்த பொழுதும் படத்துக்கான தேடல் தொடர்ந்தது. “என் வாழ்வின் மைல்கல் ரேவின் இயக்கத்தில் நடித்தது !” என்று சொல்லிவிட்டு வந்தவருக்கு டேவிட் லீன் காந்தியின் வாழ்க்கையை படமாக்க முயல்வது தெரியவந்தது. அவர் எடுப்பார் என்று இவர் எண்ணிக்கொண்டு இருக்கும் பொழுதே லாரன்ஸ் ஆப் அரேபியா படத்தை அவர் இயக்க ஜாலியாக சென்றுவிட்டார். விக்ரமாதித்தியன் போல அவரின் முன்னர் போய் நின்று ,”காந்தி படம் இயக்கலாம் வாருங்கள் !” என்று இவர் கேட்க அவரும் இவரையே நாயகன் ஆக்கலாம் என்று முடிவு செய்தார்.

லீன் வேறொரு பட வாய்ப்பு வந்து விலகினார். மோதிலால் இறந்து போனார். இந்தியாவில் எமெர்ஜென்சி வந்து சேர்ந்தது. இந்தியாவுக்கு போக முடியாத சூழலில் அவரின் கனவுக்கு பதினெட்டு வயது ஆகியிருந்தது. நடிப்பு அவருக்கு ஆயாசம் தந்து கொண்டிருந்தது. எப்போதுடா விடலாம் என்று யோசிக்கிற அளவுக்கு இருபத்தி ஐந்து வருடங்கள் கடந்து விட்டிருந்தது. படங்கள் இயக்க ஒப்புக்கொண்டு இயங்க ஆரம்பித்தார். காந்தி படம் இயக்க சாதகமான சூழல் வந்ததும் இந்திராவின் அனுமதியுடன் படவேலையை ஆரம்பித்தார். ஏற்கனவே நடித்த படங்களின் மூலம் கிடைத்த ஒட்டுமொத்த வருமானத்தையும் இதில் கொட்டினார். வீட்டில்ன் உள்ள பொருட்கள் அடமானத்துக்கு போயின. “கேஸ் பில் கூட கட்டமுடியாமல் கஷ்டப்பட்டேன் !” என்கிற அளவுக்கு வறுமை நெருக்கிக்கொண்டு இருந்தது. காந்தி படம் தயாராகிய பொழுது அதன் பட்ஜெட் இருபத்தி இரண்டு மில்லியன். மூன்று லட்சம் எக்ஸ்ட்ராக்கள் காந்தியின் இறுதி ஊர்வலத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருந்தது. இவ்வளவு பணத்தை எடுக்க முடியுமா என்று கேலி பேசினார்கள். யாரோ அவ்வளவாக கேள்விப்படாத பென் கிங்க்ஸ்லியை காந்தியாக ஆக்கியிருந்தார். திரையில் காந்தி தோன்றியதும் அதன் பின் நடந்ததும் காந்தியின் வாழ்வைப்போலவே வரலாறு. இருபது மடங்கு வசூலை அப்படம் அள்ளியது

எட்டு ஆஸ்கர்களை காந்தியின் வாழ்க்கையை திரையில் கடத்தியதற்காக வென்ற பொழுது அவர் தன்னடக்கத்தோடு இப்படி சொன்னார் ,”காந்தி நாம் இருவர் ஒத்துப்போகாமல் போனால் வன்முறையை கையில் எடுப்பதை விட வேறு வழிகளில் நம்முடைய சிக்கல்களை தீர்க்க முயலவேண்டும் என்று நம்பினார்.” அதையே நானும் நம்புகிறேன். ஜூராசிக் பார்க் படத்தில் தோன்றினார். ஒரு படத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக கூட நடித்தார். உலகப்போர் சமயத்தில் எர்னெஸ்ட் ஹெமிங்க்வே இத்தாலியில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக இருந்த பொழுது அங்கே இருந்த நர்சுடன் அவருக்கு உண்டான காதலை திரையில் ‘IN LOVE AND WAR’என்கிற படத்தின் மூலம் இவரின் கற்பனை சேர்த்து சொன்னார். சாப்ளினின் வாழ்க்கையை நெடிதாக திரையில் கொண்டு வந்த பொழுது மக்கள் உதட்டை பிதுக்கினார்கள். சர்ச்சிலின் இளமைப்பருவதையும் திரையில் பதிவு செய்தார். நார்னியா நாவல் எழுதிய சி.எஸ்.லீவிஸ் என்கிற ஏற்கனவே திருமணமாகி மணவாழ்வில் கசப்பை தேக்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருந்த ஜாய் க்ரிஷாம் என்கிற பெண்ணுடன் காதல் பூண்டு இணைந்த கதையை SHADOWLANDS என்கிற பெயரில் வடித்தார். அதில் க்ரிஷாம் கேன்சரால் பாதிக்கப்பட்டு அவரைவிட்டும்,உலகத்தை விட்டும் ஒட்டுமொத்தமாக விலகும் பொழுது லீவிசின் கடவுள் மீதான நம்பிக்கை அசைக்கப்படுவதை திரையில் மென்மையாக கடத்தினார்.

ஸ்டீவ் பிக்கோ எனும் கறுப்பின மக்களுக்காக தென் ஆப்ரிக்காவில் நிற வெறியர்களுக்கு எதிராக போராடிய அற்புதமான போராளி ,”BLACK IS BEAUTIFUL” என்கிற கோஷத்தோடு மக்களை ஒருங்கிணைத்து அவர்கள் சமம் என்று உணரவைக்கிறார். அவரை விடாமல் கைது செய்கிற அதிகாரமையம் இனிமேலும் விட்டு வைக்கக்கூடாது என்று முடிவு செய்து போலீஸ் காவலில் அவரை கொன்று விடுகிறது. “கைது செய்து சிறையில் வைத்திருந்த பொழுது உண்ணாநிலை போராட்டம் நடத்தி அவர் இறந்து போனார் என்று ஜோடித்தார்கள். பிக்கொவின் நெருங்கியநண்பரும்,பத்திரிக்கையாளரான வெள்ளையர் டொனால்ட் வுட்ஸ் உண்மையை வெளிப்படுத்தினார். இந்த கண்ணீர் வரவைக்கும் வாழ்க்கையை CRY FREEDOM என்கிற பெயரில் திரையில் அட்டன்பரோ கொண்டுவந்து அந்த கதறலை கேட்க வைத்தார்.

அதிகார பீடங்கள்,அடக்குமுறை,வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக என்னுடைய படங்கள் குரல் கொடுத்திருக்கின்றன என்கிற திருப்தி எனக்குண்டு என்ற ரிச்சர்ட் அட்டன்பரோ சுனாமியில் தன்னுடைய பேத்தி,மகள் ஆகியோரை கண் முன்னால் இழந்த பின்னர் பிறருக்கு உதவ ஒரு மில்லியன் டாலர் நிதி திரட்டினார். அவரின் சில படங்கள் மகத்தான தோல்வி கண்டிருக்கின்றன. ஒரு பக்க உண்மையை மட்டுமே திரையில் காட்டுகிற,தன் நாயகர்கள் மீது அதிக மென்மையான பார்வை கொண்டவராக இருக்கிறார் என்று அவரை காய்ச்சி எடுத்திருக்கிறார்கள். அவரின் ஒரு படம் திரையரங்கையே பார்க்காமல் வீடியோவாக மட்டுமே மக்களிடம் போய் சேர்ந்து தோல்விமுகம் காட்டியது. அவர் தன் வாழ்க்கையின் செயல்களால் மட்டுமே அவற்றுக்கு பதில் சொன்னார். அவர் நடிகர், ஆஸ்கர் இயக்குனர் என்பதையெல்லாம் தாண்டி மனிதர்களுக்காக வாழ்ந்த மகத்தான ஆளுமை என்று அறியப்படுவார்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s