மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி அவர்களின் தாயார் வீணை வாசிப்பில் சிறந்த தேர்ச்சி கொண்டவர். சுப்புலட்சுமியின் பாட்டி அக்கம்மா வயலின் வாசிப்பில் புகழ் பெற்றவர். அங்கே இருந்தே அவரின் இசைப்பயிற்சி துவங்கியது. பெண்களுக்கு மேடைகள் இல்லை என்கிற அன்றைய வழக்கம் அவரின் இசை முன் தூள் தூளானது
ஐந்தாவதோடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொள்ள வேண்டிய சூழல் ஆசிரியர் அடித்ததால் ஏற்பட்ட கக்குவான் இருமலால் உண்டானது. இன்றைக்கு எல்லாம் ஓரளவிற்கு உயரம் போனால் கற்பது நின்றுபோகிறதே
வாழ்நாள் முழுக்க அனுதினமும் கற்றுக்கொண்டே இருந்தவர் அவர்.
.
காந்தியடிகள் தன்னுடைய பிரார்த்தனை கூட்டங்களில் எம்.எஸ். அவர்களையே மீரா பஜன் பாடச்சொல்வார். ஹரி தும் ஹரோ பாடலை மற்றவர் பாடி கேட்பதைவிட எம்.எஸ். அவர்கள் பேசிக்கேட்டாலே போதும் என்றார்.
அவரின் கணவர் சதாசிவம் திருமணமான ஆரம்பகாலத்தில் ”நீ பாடணும்… தர்மத்துக்காகப் பாடணும்” என்றார். அதற்கேற்ப எவ்வளவோ ஈட்டினாலும் அறக்காரியங்களுக்கு அளவில்லாமல் அள்ளிக்கொடுத்தார் அவர். யாரையும் திட்டி பழக்கப்படாதவர். ஐ.நா.சபையில் பாடினார் ,இந்திய சுதந்திரத்தின் பொழுது பாடினார்,உலகம் முழுக்கப் பாடினார். அப்பொழுதும் தன்னை ஒரு எளிய பெண்ணாக
தான் பாவித்து வாழ்ந்தார் .
ஐ.நா. சபையில் காஞ்சி பெரியவர் இயற்றிய மைத்ரீம் பஜத மற்றும் ராஜாஜி இயற்றிய ஆங்கிலப்பாடல் ஆகியவற்றை அவர் பாடினார். நியூயார்க் டைம்ஸ் இதழ் ,”இந்த இசை நிகழ்வு நினைவில் எப்பொழுதும் நிறைந்திருக்கும் !” என்று புகழாரம் சூட்டியது.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல்வேறு மொழிகளில் பாடிய அவர் உச்சரிப்பில் தனித்த கவனம் செலுத்துவார். ஒவ்வொரு மொழியிலும் கச்சிதமாக பாடவேண்டும் என்கிற கொள்கை கொண்டவர்.
மீரா படத்தின் முதல் ரீலில் சரோஜினி நாயுடுவே தோன்றி ,”இசைக்குயில் பட்டம் எம்.எஸ். அவர்களுக்கு உரியது. இந்த தலைமுறையில் இப்படியொரு மகத்தான கலைஞர் உருவாகி இருக்கிறார் என்று இந்தியாவே பெருமைப்படும் !” என்று சரியாகச்சொன்னார்.
மத்திய பிரேதசத்தில் நடந்த சம்மான் விருது வழங்கும் நிகழ்வுக்கு எம்.எஸ். மற்றும் சதாசிவம் ஆகிய இருவரும் போயிருந்தார்கள். ஒய்வு எடுத்துக்கொண்டு
இருக்கும் பொழுது யாரோ ஹிந்தியில் அழைப்பது தெரிந்து வெளியே வந்து பார்த்தார் சதாசிவம். ஒரு பழ வியாபாரி நின்று கொண்டிருந்தார். “அம்மா
பாடுறதை கேட்கணும். மீரா படத்தில் இருந்து ஒரே ஒரு பாட்டு பாடினால் போதும். !” என்று அவர் கேட்டுக்கொள்ள சதாசிவம் கண்ணசைக்க எம்.எஸ் பாடினார்.
அந்த பழ வியாபாரி கேட்டுகொண்டே இருந்தார். பாடி முடித்ததும் இரண்டு பழங்கள் அம்மாவின் கைக்கு மாறியிருந்தன. சதாசிவம்
சொன்னார்,”எல்லாவற்றையும் விட பெரிய சன்மானம் இதுதான் ” என்று. அந்த பழங்களை கண்களில் ஒற்றி எம்.எஸ்.அதை உறுதிப்படுத்தினார்
ரஷ்யாவில் எம்.எஸ் பாடப்போயிருந்த பொழுது விழா முடிந்ததும் ஒரு ரஷ்ய பெண்மணி கண்களில் நீர் கோர்க்க எம்.எஸ். அவர்களிடம் வந்து தன் இதயத்தின்
மீது கைவைத்து நெகிழ்ந்ததை குறிப்பால் உணர்த்திவிட்டு மலர்கொத்து ஒன்றை எம்.எஸ். அவர்களின் கையில் திணித்தார்
”நான் யார் போயும் போயும் இந்த இந்திய தேசத்தின் பிரதமர்-ஆனால் எம்.எஸ்.அவர்களோ இசை அரசி அல்லவா?”என நேரு சொல்கிற
அளவுக்கு அவரின் இசை இந்தியாவை கட்டிபோட்டது. பாரத ரத்னா பெற்ற முதல இசைக்கலைஞர் அவர்.
‘குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என்று பாடி தன்னுடைய கச்சேரிகளை முடிக்கும் வழக்கம் கொண்ட அவரின் இசை காலமெல்லாம் ஒலிக்கும்.