நளினி ஜமீலா-ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை !


நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை நூலை வாசித்து முடித்தேன். பாலியல் தொழிலாளிகள் பற்றி பலருக்கும் அருவருப்பான பார்வை உண்டு. சமூகத்தை சீரழிக்கும் அநியாயம் அது என்பதும்,குடும்பங்களை குலைத்துப் போடுவதையே அவர்கள் செய்கிறார்கள் என்பதும் நம்முடைய பொதுவான எண்ணங்கள். இது சமூகத்தின் பொதுப்பார்வை என்றால் பாலியல் தொழிலாளிகளின் பார்வை எப்படிப்பட்டது ? அவர்கள் ஏன் இந்த தொழிலுக்கு நுழைகிறார்கள் ? தன்னுடைய வாழ்க்கையின் மூலம் அவற்றுக்கு போகிற போக்கில் விடைகள் தருகிறார் நளினி

கேரளாவில் பல பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தில் பிறக்கிறார் அவர். அப்பா ராணுவத்தில் வேலை பார்த்து காயம் பட்டு வீடு வந்து சேர்கிறார். பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொள்கிறார். நளினியின் அம்மாவின் வருமானத்தை நம்பியே குடும்பம் இருக்கிறது. அப்பாவின் இயக்க செயல்பாடுகள் அம்மாவின் வேலையை பறிக்க பெரியாம்மாவின் சொல்படி குடும்பம் நடக்கிறது. மூன்றாவதோடு பள்ளி போகும் வாய்ப்பு சிறுமியாக அவருக்கு மறுக்கப்படுகிறது. வேறொரு தெருவில் போய் நின்று அதற்க்காக ஓயாமலஅடிக்கடி அலுத்து ஒரு கட்டத்தில் மாய்ந்து திரும்புகிறார். அண்ணனின் திருமணத்தில் சாட்சி கையெழுத்து போட்டதும் வீட்டை விட்டு மகளை அப்பா வெளியேற்றி ரேஷன் அட்டையை விட்டு பெயரை நீக்குகிறார். இனிமேல் இந்த உறவே வேண்டாம் என்று ஒரு திருமணம் செய்து கொள்கிறார் நளினி. அந்த திருமணத்தில் இரண்டு குழந்தைகள். மாமியார் கொடுமையால் மண்டை உடைவதும்,கணவன் ஓயாமல் அடிப்பதும் நடக்கிறது. ஒரு நாள் நோயால் அவன் இறந்து போகிறான். இரண்டு பிள்ளைகளை காக்க தினமும் ஐந்து ரூபாய் வேண்டும் என்று மாமியார் கேட்கிறார். இரண்டு ரூவாயே கூலித்தொழிலாளியாக சம்பாதிக்க முடியாது சூழலில் அந்த ஐந்து ரூபாயை கொடுத்து விடலாம் என்று இத்தொழிலுக்குள் நுழைகிறார்.

அவரின் பணத்தை கொண்டு மாமியார் பிள்ளைகளை வளர்க்கிறார். அதே சமயம் பிள்ளைகளை பெரும்பாலும் தூரத்தில் இருந்தே அவரால் பார்க்க முடிகிறது. இவரின் அன்னையோ இவரிடம் இருந்து வருகிற பணத்தை பிறர் குடும்பத்தை அழித்து வருகிற பாவப்பணம் என்று ஏற்க மறுக்கிறார். அதே சமயம் உனக்கான சேமிப்பை பார்த்துகொள் என்கிற அறிவுரையும் அம்மாவிடம் இருந்து வருகிறது.. ஒரு கட்டத்துக்கு மேல் இவரின் பணத்தை பெற்றுக்கொள்ளாமலே பிள்ளைகளை மாமியார் வளர்ப்பது நடக்கிறது.

பாலியல் தொழிலுக்குள் நுழைந்த முதல் நாளே படுக்கையில் மென்மையாக நடந்து கொண்ட ஒரு போலீஸ் அதிகாரி தான் வருகிறார். அந்த மென்மையான இரவு முடிந்த பின்பு அவரை போலீசை வர வைத்து ஜீப்பில் ஏற்றியது நளினிக்கு ஆண்களுக்குள் மென்மையான முகமும் வைத்துக்கொண்டு கோரமான இன்னொரு முகமும் இருக்கும் என்பது தெளிவாக புரிகிறது. ஒரு குறிப்பிடட்ட குழுவில் இருந்த தொழில் செய்த பொழுது இருட்டில் மட்டுமே எல்லாம் முடித்து அனுப்புவார்கள். முகமே காட்ட மாட்டார்கள். ஒரு திரைத்துறை நபர் கட்டாயப்படுத்தி கேட்கவே இவரின் முகம் காட்டப்பட்டு இருக்கிறது. “நீ எவ்வளவு அழகாகயிருக்கிறாய்.” என்று அவர் பாராட்டிய மாதிரி பெரும்பாலும் யாரும் செய்வதில்லை அது ரம்மியம் தந்தது என்கிறார் நளினி.

அடுத்து இன்னொரு கல்யாணம் அதிலும் துரோகம் செய்த கணவன் என்று நகர்ந்து இறுதியில் ஷாகுல் என்கிறவர் காட்சிக்குள் வருகிறார். பன்னிரெண்டு ஆண்டுகள் அவர்களுக்குள்ளான உறவு நீடிக்கிறது. தன்னுடைய மகள் அந்த வீட்டில் பருவம் அடைந்ததும் அவளிடம் ஷாகுல் அவளின் தந்தை இல்லை என்பதையும்,இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் புரிய வைக்கிறார் அவர். ஏற்கனவே இருந்த உறவின் மூலம் பிறந்த பெண்ணை அடுத்து திருமணம் செய்து கொண்ட கணவன் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்குவது சமூகத்தில் இயல்பாக நடப்பது அதிலிருந்து என் மகளை காப்பாற்றினேன் என்று வாக்குமூலம் கொடுக்கிறார். “நீ ஒருத்தனை காதலிக்கிறதுக்கும் அவன் விருப்பத்துக்கு நீ இணங்கி போறதுக்கும் வித்தியாசம் இருக்கு. மாட்டிக்காதே !” என்று மகளுக்கு வழி காட்டுகிறார். பல்வேறு விஷயங்களை மனம்விட்டு இருவரும் பேசுகிறார்கள். அம்மாவின் தொழில் பற்றி தெரிந்தாலும் மகள் அதைப்பற்றி அன்னையிடம் ஒரு வார்த்தை பேசுவதில்லை.

கல்லீரல் நோய் ஓயாத குடியால் நளினிக்கு ஏற்படுகிறது. கணவனுடன் சிக்கல்கள் வேறு பெரிதாகிக்கொண்டே போகின்றன. மகளை அழைத்து கொண்டு பள்ளி வாசலில் மூன்று அடுக்கில் பெண்களை படுக்க வைத்து மகளை காமுகர்களிடம் இருந்து காப்பாற்றி,பிச்சை எடுத்து வளர்க்க முயல்கிறாள். பின் எதுவும் வழியில்லை என்று தோன்றிய உடன் மீண்டும் தொழிலுக்குள் நுழைகிறார். இந்த மாதிரி வாழ்க்கையை பாலியல் தொழிலிலேயே கழிக்கும் இவர்களுக்கு என்ன சமூகப்பார்வை இருக்க போகிறது என்கிற எண்ணத்தை அவர் விவரிக்கும் சம்பவங்கள் உடைத்து நொறுக்கின்றன. நர்மதையில் அணை கட்டுவதை எதிர்த்து போராடும் மேதா பட்கரின் அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்டு போராட்டங்கள் செய்த ஆதிவாசிப்பெண் அம்மு இறுதியில் சில பேரால் கொடூரமாக கொல்லப்பட்ட பொழுது அது தற்கொலை என்று முடிக்கப்படுகிறது. அதே போல ஆதிவாசி மக்கள் கொல்லப்பட்ட பொழுது சி.கே.ஜானுவுடன் இணைந்த போராட இவர்கள் போன பொழுது கம்யூனிஸ்ட்கள் கூட பாலியல் தொழிலாளிகள் இங்கே எல்லாம் வர வேண்டுமா என்கிற ரீதியில் அணுகி காயப்படுத்தியிருக்கிறார்கள்.

பாலியல் தொழிலாளி எப்பொழுது எங்கே இறப்பார் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவருக்கு பாதுகாப்பின்மை உண்டு, இந்த கையறு நிலையோடு தான் அவர்கள் வாழ்க்கையை கழிக்கிறார்கள். ஒரு ஆண் பிணம் கரையோரம் கிடந்த பொழுது அதனருகே ஆணுறை இருக்க பாலியல் தொழிலாளி ஒருவர் சம்பந்தப்பட்டு இருப்பார் என்கிற பாணியில் அந்த பெண்ணை தேடியே இவர்களை போலீஸ் துன்புறுத்தி இருக்கிறது. ஒரு முறை நீதிபதியின் மனைவியை தள்ளி நிற்குமாறு ஒரு பொது இடத்தில் இயல்பாக ஒரு பெண் சொல்லிவிட ,இவளெல்லாம் என்னை சொல்வதா என்று இருபத்தி ஆறு இடங்களில் அவர்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டார்கள். அதை டி.வியில் இவர் அம்பலப்படுத்துகிறார். சேவா என்கிற சமூக சேவை அமைப்பின் தோழர்களோடு பயணம் போகிறார்கள் சில பெண்கள். பணம் திருடு போனதும் அவர்கள் தான் திருடியிருப்பார்கள் என்று சோதனை செய்ய முனைகிறார்கள். கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரே எல்லாரும் சோதனைக்கு உள்ளாகிறார்கள். எப்படி பொதுப் புத்தி ஆட்டிப்படைக்கிறது என்று சாட்டையாக பதிகிறார். வேசி என்பதை வசீகரமனவள் என்று பொருள் சொல்லும் நளினி தங்களில் பல பேர் ஆண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதையும்,குடும்பங்களை பேணுவதையும் கூட கொச்சைப்படுத்துவதை சொல்லி நகர்கிறார். மகள்களை இந்த பக்கம் வராமல் பார்த்துக்கொள்வதையே இவர்களில் பலரும் விரும்புகிறார்கள். ஆனால்,சமூகம் எங்கே நம்பத்தயாராக இருக்கிறது ?

இந்த சுய சரிதையில் ஒரு உன்னதமான நாவலுக்கான கணங்கள் அம்மாவின் இறப்பின் பொழுது வருகின்றன. நளினியின் அம்மா பொட்டு வைத்துக்கொண்டால் அத்தனை அழகு. அவளுக்கு வேலை இருந்தவரை நளினி எங்கேயும் போய் வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை. அவளை தொழிலுக்கு வந்த பிறகு எப்பொழுதாவது தான் பார்க்க முடிந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் அவளின் வாழ்க்கையின் ஒரே அன்பின் ஆதரமான அன்னையை பார்க்கக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது. அவள் இறந்த பொழுது பார்க்க கூட போகவில்லை அவர். அதை அப்படியே சொல்லிவிட்டு போனாலும் அதில் ஒரு கேவல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
சினிமாவில் ஒரு பாத்திரம் இறந்து போனதை குழந்தை போல ஏற்றுக்கொள்ள முடியாமல் அடுத்த காட்சியில் அது உயிரோடு உலாவுவதை பார்க்க வருகிற அதே நளினி காலக்கரங்களில் எப்படி மாறிப்போகிறார் என்பதை சொல்லி புரியவைக்க முடியாது.

“நாங்கள் மன அமைதி பரிவை தருகிறோம். எங்களின் நேரத்தை செலவழிக்கிறோம். அதற்கு பணம் தரக்கூடாது. தவறு என்றால் எப்படி ?” என்று கேட்கும் அவர் பாலியல் தேடலில் இருவருக்கும் விருப்பம் இருக்கிறது அது சமூக அமைதிக்கு குந்தகம் இல்லை என்கிற வரை ஏன் எங்கள் மீது காவல்துறை பாயவேண்டும் ? என்று கேள்வி எழுப்புகிறார். பல ஆண்கள் மனைவியிடம் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்தும் கலவி பற்றி பேச யோசிக்கிறார்கள். பல பேர் இவர்களை வெறுமனே பேசி மன ஆறுதல் உறுவதற்காக காண வருகிறார்கள். “லைசன்ஸ் முறையை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை,மீண்டும் அரசாங்கா நடைமுறை சிக்கல்களில் மாட்டிக்கொண்டு அவதிப்படுவோம் எங்களை இன்னமும் கொஞ்சம் பரிவோடு நோக்கினால் போதும்.” என்கிற நளினி எப்படி ஜ்வாலாமுகிகள் அமைப்பின் மூலம் தங்களுக்கு அபராதம் மட்டும் விதித்து தங்களை மட்டும் குற்றவாளியாக்கும் கோர்ட் நடைமுறையில் சம்பந்தப்பட்ட மற்றவர்களை வழக்கை நடத்தி நிற்க வைத்தோம் என்று பதிகிற பொழுது அழுக்கு படிந்த சமூகப்’பார்வை சிரிக்கிறது. ஆவணப்படம் எடுக்கிறவராக,அவர்களின் உரிமைகளுக்கு போராடுபவராக இருக்கும் அவர் எப்படி தாங்கள் கடுமையான வன்முறைக்கு காவல் துறை மற்றும் காமுகர்களால் உள்ளாக்கப்படுகிறோம் என்பதை சொல்கிற பொழுது மனம் கனத்துப்போகிறது. வேறென்ன செய்ய முடியும் ?லாரி ஓட்டுனர் ஒருவர் தான் ஆண்மகன் என்று காட்ட இவரை வண்டியில் ஏற்றிக்கொண்டு முக்கிய இடங்களின் வழியாக சுற்றியிருக்கிறார். ப்ளஸ் டூ தேர்வில் தோற்றுப்போய் கடும் வசைகளுக்கு ஆளான பெண்கள்,வரதட்சணை போதவில்லை என்று மனைவியை தொழிலுக்கு அனுப்பிய கணவன்கள்,படித்து விட்டு வேலையில்லாமல் இந்த பக்கம் வந்தவர்கள் என்று அத்தனை முகங்கள். பல பெண்களின் ப்ரோக்கராக இருப்பதே அவர்களின் கணவன் தான். அவன் குடிப்பதற்கும்,சுகமாக வாழ்வதற்கும் தங்களை இவர்கள் தேய்க்க வேண்டி இருக்கிறது.

“துப்புரவுத்தொழிலாளி மறுவாழ்வு அப்படின்னு மூச்சே விட மாட்டீங்க. அவன் இல்லைனா அழுக்கெலாம் ஊர் முழுக்க நிரம்பி ஊரே நாறிப்போகும் இல்லையா ? எங்களோட மறுவாழ்வுனு யாரும் மூச்சை திறக்க மாட்டீங்க. ஆனா,நாங்க இல்லைனா ஊரே நாறிப்போகும். அதனால நாங்க மட்டும் வேணுமில்ல ?” என்று கேள்வி கேட்கிற நளினியின் வாழ்க்கையில் யார் மீதான குறைபாடுகளும் இல்லை,இப்படி வாழ்க்கை போனதே என்கிற புலம்பல் இல்லை,அவர்களின் வெளியில் நின்று அவர்களின் உலகை புரிந்து கொள்ள வைக்கிற இந்த புத்தகத்தை படித்த பின் அவர்கள் மீதான பார்வை கண்டிப்பாக மாறும்.

மூலத்தின் சாரம் மாறாமல் தமிழில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் Yoosuf Kulachal. அவசியம் வாசியுங்கள்.

காலச்சுவடு வெளியீடு

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s