சாதனைகளின் வானத்தில் பறந்த தடகள வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் !


ஜெஸ்ஸி ஓவன்ஸ் உலகத்தடகள வரலாற்றில் தனிச் சரித்திரம். அவர் கறுப்பின குடும்பத்தில் அமெரிக்காவில் பிறந்தார். கடுமையான இனவெறியைச் சமாளிக்க முடியாமல் அவரின் பெற்றோர் பதினைந்து லட்சம் மக்களோடு, ஒன்பது பிள்ளைகளைக் காப்பாற்ற ஊர் மாறிப் போகும் சூழலில் அவர் வாழ்ந்தார்.

குழந்தை தொழிலாளியாய்

நிமோனியா மற்றும் சுவாசக்கோளாறுகள் சிறுவனாக ஜெஸ்ஸியை துன்புறுத்தின. வீட்டின் வறுமையைப் போக்கப் பருத்தி பொறுக்கும் வேலையை அவன் செய்தான். கடைச்சாமான்கள் டெலிவரி செய்வது,வண்டிகளில் சரக்கேற்றுவது என்று வேலை செய்து கொண்டே இளமைப்பருவம் கழிந்தது.

ஒருமுறை நெஞ்சில் பெரிய கட்டி ஒன்று கிளம்பி மூச்சு விடுவதைத் தடை செய்து கொண்டிருந்தது. அவரின் அம்மா கிச்சன் கத்தியை எடுத்துக்கொண்டார். அப்பா மகனைப் பிடித்துக்கொண்டார். தோல் பட்டை ஒன்றை அவன் வாயில் கடிக்க வைத்துவிட்டு கோல்ப் பந்து அளவில் இருந்த கட்டி அறுத்து நீக்கப்பட்டது.

தடகளத்தில் இளம் வயதிலேயே அவருக்கு ஆர்வம் இருப்பது சார்லஸ் ரிலே என்கிற பயிற்சியாளருக்குத் தெரிந்தது. பள்ளி முடிந்த பின்னர் எல்லாருக்கும் பயிற்சி என்றாலும் ஷு ரிப்பேர் பார்க்கும் கடையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஜெஸ்ஸி மட்டும் காலையில் தன்னிடம் பயிற்சிக்கு வர அனுமதித்தார் அவர்.

சாதனையாளர்

உயர்நிலைப் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் தேசிய சாதனைகளை முறியடித்து கவனம் குவித்தார் அவர். ஓஹியோ பல்கலையில் படிக்கச் சேர்ந்தபோது படிப்புச் செலவுக்காகப் பெட்ரோல் போடுபவராக,ஹோட்டலில் வெய்ட்டராக,லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்தார். அடுத்து பிக் டென் போட்டிகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்த தருணத்தில் படிக்கட்டுகளில் நண்பனோடு விளையாட்டாகக் குத்துச்சண்டை செய்துகொண்டு இருந்தபோது தடுக்கி விழுந்து முதுகில் பலத்த அடி ஏற்பட்டது.

வெந்நீர் தொட்டியில் ஒரு அரை மணிநேரம் இருந்து பார்த்தும் வலி குறையவில்லை. அதற்கு பிறகு கையைத் தூக்கலாம் என்று முயற்சி செய்தால் வலி உயிரை எடுத்தது. ஆடையைக்கூட மாற்றிக் கொள்ள பிறர் உதவி என்கிற சூழல். “போட்டியில் இருந்து விலகிக்கொள்கிறாயா ?” என்று கேட்டார்கள். “பின்வாங்கவெல்லாம் முடியாது !” என்று சொல்லிவிட்டு போட்டிகளில் கலந்து கொண்டு அசுரப்பாய்ச்சல் காட்டினார் அவர். நாற்பத்தி ஐந்து நிமிட இடைவெளிக்குள் மூன்று உலக சாதனைகளைப் புரிந்து ஒரு சாதனையைச் சமன் செய்தார்.

ஹிட்லரும் ரூஸ்வெல்ட்டும்

1936 ஆம் வருட ஒலிம்பிக் போட்டிகள் உலகம் முழுக்க போர் மேகம் சூழ்ந்த சூழலில் ஜெர்மனியில் நடைபெற்றது. ஆரிய இனமே உயர்ந்தது என்று சொல்லி மற்ற மக்கள் போட்டிகளில் வெல்ல லாயக்கற்றவர்கள் என்ற பார்வை கொண்டவராக ஹிட்லர் இருந்தார். ஜெஸ்ஸி ஓவன்ஸ் அந்த ஒலிம்பிக்கில் மாயாஜாலம் காட்டினார். நூறு மீட்டர், இருநூறு மீட்டர், உயரம் தாண்டுதல் ஆகிய மூன்றிலும் தங்கம் அள்ளினார். ரிலே போட்டிக்கு நான்கு அமெரிக்க வீரர்கள் ஓடத்தயாராக இருந்தார்கள்.

அதில் இருவர் யூதர்கள். ஹிட்லர் என்ன நினைப்பாரோ என்று யோசித்த அதிகாரிகள் ஜெஸ்ஸி மற்றும் இன்னொரு வீரரை மாற்றாக களத்தில் இறக்கினார்கள்.அவர்கள் உலக சாதனையோடு தங்கமும் வென்றார்கள். அமெரிக்கா வென்ற பதினோரு தங்க பதக்கங்களில் ஆறு கறுப்பின வீரர்கள் வென்றவை. ஹிட்லர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் வென்றபோது கை குலுக்காமல் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நிறவெறியோடு அவர் நடந்து கொள்கிறார் என்று சொல்லப்பட்டது. அமெரிக்கா திரும்பினார் ஜெஸ்ஸி. அவரை யாரும் வரவேற்கவோ,வாழ்த்து சொல்லவோ வரவில்லை.

எந்த அரசாங்க அமைப்புகளும் கண்டுகொள்ளவில்லை. “என்னை ஹிட்லர் தவிர்த்தார் என்று சொல்கிறீர்கள். அமெரிக்க ஜனாதிபதியும் அதையே செய்கிறார்.” என்று குமுறினார். “என்னால் பேருந்தின் முன்பக்கம் இப்போதும் போக முடியவில்லை; நான் என் நிறத்தால் எடை போடப்படுகிறேன். நினைத்த இடத்தில் என்னால் வாழ முடியவில்லை. எதுவுமே மாறவில்லை.” என்று அவருக்கு நடந்த அநியாயங்களை சொன்னார்.

வறுமையும் பெருமையும்

வருமானம் எதுவுமில்லாமல் கால்பந்துப் போட்டிகளுக்கு நடுவே ஆடுகளத்தில் குதிரைகள், மோட்டார் பைக்குகள், நாய்கள் ஆகியவற்றோடு போட்டி போட்டு ஓடிப் பணம் சம்பாதித்தார். “நான் ஒரு ஒலிம்பிக் சாம்பியனாக இருந்து கொண்டு குதிரைகளோடுப் போட்டி போடுவது அவமானம் என்கிறார்கள். இதைவிட வேறு வழி எனக்குத் தெரியவில்லை. நான் தங்கப் பதக்கங்களை உண்ண முடியாது. இது நேர்மையான வழிதான். நான் சாப்பிட எனக்கு இதுதான் வழியாக இருக்கிறது.” என்று பதிலடி கொடுத்தார்.

அதற்கு பின்னர் தன்னுடைய வெற்றிக் கதைகளை உத்வேகமூட்டும் பேச்சுக்கள் மூலம் கொண்டு சேர்த்தபோது மக்கள் பிரமித்தார்கள். வறுமையை விட்டு மீண்டு வந்து அவர் சாதித்தார். அவருக்கு அமெரிக்காவின் உயரிய விருது பிறகு வழங்கப்பட்டது. “நல்லதை மட்டும் கண்டறியுங்கள். அவை உங்களைச் சுற்றி இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து வெளிப்படுத்துங்கள். நீங்கள் நல்லவற்றை நம்ப ஆரம்பிப்பீர்கள்!” என்றார் அவர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s