இந்தியன் ஆவது எப்படி ?


பவன் கே.வர்மா அவர்களின் BECOMING INDIAN நூலை வாசித்து முடித்தேன். இந்தியர்களாகிய நாம் நம்முடைய கலாசார வேர்களைப்பற்றிய புரிதல் இல்லாமலே இருக்கிறோம்,மேற்கை அதிலும் நம்மைவிட்டு அகன்று சென்ற ஆங்கிலேயரின் தாக்கத்தை இன்னமும் உள்வாங்கியே நகர்கிறோம் என்பதை இந்த நூலின் அடிநாதமாக அவர் வைத்துக்கொண்டு வாதிட்டிருக்கிறார். ஆதிக்க மனோபாவத்தை இப்படி கலாசாரத்தை தூக்கி பிடிப்பதன் மூலம் முன்னிறுத்துவது தன்னுடைய நோக்கமில்லை என்று முன்னுரையில் சொல்லிவிட்டே நூலுக்குள் அழைத்துச்செல்கிறார்.

ஆங்கில இலக்கியம் இந்தியாவில் தான் தனித்த பாடமாக ஆங்கிலேயர் ஆண்டுகொண்டிருந்த காலத்தில் கற்பிக்கப்பட்டது. அந்த நடைமுறை இங்கிலாந்தில் அப்பொழுது இல்லை. என்றாலும் ஆங்கிலத்தை இந்தியர்கள் சரியாக பேசுவது என்பது இன்றுவரை பெரும்பாலும் நடப்பது இல்லை. அவரவரின் தாய்மொழியில் பேசுவதை அவமானகரமனதாகவே நிறைய பேர் நினைக்கிறார்கள். இந்தியாவின் நவீன சீர்திருத்தவாதிகளுள் மிக முக்கியமானவரான ராஜாராம் மோகன் ராய் சமஸ்க்ருதத்தில் ஆழ்ந்த அறிவு கொண்டவராக இருந்தாலும் அதன் தத்துவங்களை விமர்சித்தே ஆங்கிலேயருக்கு கடிதம் எழுதினார். அவர் மேற்கின் சிந்தனைத்தாக்கம் இந்தியாவை மீட்கும் என்று நம்பினார். அறுநூறு பெண்கள் மட்டுமே இறந்ததாக ஆங்கிலேய பதிவேடுகள் குறிக்கும் சதியை நீக்க அவர் எடுத்த முன்னெடுப்பை ஆங்கிலேய அரசு ஊக்குவித்ததன் பின்னர் இருந்த அரசியல் இந்தியர்களை காட்டுமிராண்டி என்று காட்டுவது தான். இதையெல்லாம் ஆதாரமாக காட்டியே இந்திய மொழி எதையும் கற்காத இந்தியாவைப்பற்றி எந்த புரிதலும் இல்லாத மெக்காலே கல்விமுறையை வகுத்தார்.

இந்திய மொழியில் இருக்கும் இலக்கியங்கள் பற்றியோ,இங்கே நிலவிய கலாசார பன்முகத்தன்மையையோ கணக்கில் கொள்ளாமல் ஆங்கிலவழிக்கல்வியே உகந்தது என்றும் சிலருக்கு கற்பித்தால் போதும் அது மற்றவருக்கும் போய் சேர்ந்துவிடும் என்கிற எண்ணத்தை ஆங்கிலேயர் கொண்டிருந்தார்கள். இந்தியாவின் இலக்கிய அற்புதங்கள்,வேத நூல்கள் ஆகியவற்றை மேற்கில் மொழி பெயர்த்தவர்களும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்தார்கள். “இலக்கணம் எல்லாம் இவர்களுக்கு தேவையில்லை. ராபின்சன் க்ரூசோ நூல் ஒன்று போதும்.” என்றும் ,”சமஸ்க்ருதத்தில் உள்ள எல்லா நூல்களும் இங்கிலாந்தில் பள்ளிகளில் கற்பிக்கப்படும் சுருக்கப்பட்ட நூல்களுக்கு கூட இணையாகாது.” என்கிற அளவுக்கே மெக்காலேவின் புரிதல் இருந்தது. கிளார்க்குகளை இந்த கல்வி முறையின் மூலம் உருவாக்குவதே மெக்காலேவின் நோக்கமாக இருந்தது. மனப்பாடம் செய்கிற மந்தைக்கூட்டத்தை உருவாக்க மெக்காலே அடித்தளமிட்டார்.

இயல்பாக கிளைபரப்பும் விதை போல் அல்லாமல்,பல்வேறு பாகங்கள் இணைக்கப்படும் இயந்திரம் போலவே இந்திய பிள்ளை ஒருவரின் சிந்தனைப்போக்கு வளர்க்கப்படுகிறது. பாரசீகத்தின் மீது தீராக்காதல் கொண்டு உருது மொழியில் எழுதிய மிர்சா காலிப்பை பற்றி ஒரு ஒழுங்கான புத்தகம் கூட இல்லாததை ஆசிரியர் வருத்தத்தோடு பதிவு செய்கிறார். இந்தியாவின் எத்தனையோ எண்ணற்ற கவிஞர்களை பற்றியும் நம்முடைய தலைமுறைகளுக்கு அறிமுகமே இல்லாமல் கடத்திவிடுகிற நாம் நிறவெறி கொண்டிருந்த கிப்ளிங் முதல் ஆங்கிலேய நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் ஆகியோரை மறக்காமல் கற்பிக்கிறோம். ஆங்கிலேயர்களை அப்படியே பிரதியெடுக்கிறோம்.

இந்திய மொழிகளில் எழுதப்படும் பெரும்பாலான நூல்கள் விற்பனையில் சாதனை புரிவதே இல்லை. இந்தியில் எழுதப்படும் நூல்கள் பெரிய வாசகப்பரப்பை பெறுவதில்லை. சிதகாந்த் என்கிற ஒரிய கவிஞர் ஞானபீட விருது பெற்றவர். அவரின் கவிதை நூல் எண்ணூறு பிரதிகள் என்கிற விற்பனை அளவோடு நின்று போயிருக்கிறது. ஆங்கிலத்தில் எழுதும் மேற்கின் ஆசிரியர்களின் நூல்கள் இந்தியப்பத்திரிக்கைகளில் இடம்பெற்று விற்பனையிலும் சாதனை புரியும். நம்மூரின் அனந்தமூர்த்தி,மகாஸ்வேதாதேவி ஆகியோரின் நூல்கள் ஆங்கிலத்துக்கு போனாலும் அதைப்பற்றி இங்கிலாந்தின் இதழ்கள் மூச்சு கூட விடாது.

தாய்மொழி வழிக்கல்வி அவசியம் என்று காந்தியடிகள் முழங்கினார். நேருவோ ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பது தவறில்லை என்றார். ஆசிரியர் ஒரு தீர்வு சொல்கிறார். ஆறாம் வகுப்பு வரை எல்லாரும் அன்னை மொழியிலேயே படிக்க வேண்டும். அதற்கு பிறகு ஆங்கிலத்தை கொண்டு வந்தால் போதுமானது. அது வெற்றிகரமாக படேல் வித்யாலாயா என்கிற பள்ளியில் செயல்படுகிறது என்கிறார். அடுத்து தான் அவரின் வேலையை காட்டுகிறார் –பிள்ளைகளை இந்தியையும் படிக்க வைக்கவேண்டும் என்கிறார்.

இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளின் அன்னை என்று சம்ஸ்க்ருதத்தை குறிப்பிட்டு அதை கொண்டு தங்களின் வேர்களை மீட்க முயலும் மேற்கில் இருக்கும் இந்தியர்களை கொண்டாடுகிறார் அவர். அதே சமயம் அந்தக்கூற்று உண்மையில்லை என்று மறந்தும் பதிய மறுக்கிறார். இந்தியாவில் கிருஷ்ணர் என்கிற இறைவனின் பல்வேறு குணங்கள் கொண்டாடப்படுகிறது அவர் ஒருவரே என்கிறவர் பல்வேறு வழிபாட்டு முறைகள் இணைந்தே அவர் உருவானார் என்பதை பதிய மறுக்கிறார். அதனால் அவரை வழிபடும் முறைகளும்,கதைகளும் மாறுபடுகிறது என்பதை கவனத்தில் அவர் கொள்ளவில்லை. எல்லா பண்டிகைகளுக்கு கீழேயும் ஒரு ஒற்றுமை நாதம் வழிந்தோடுகிறது என்று சொல்கிறார். காதலர் தினத்தை எதிர்க்கும் வலதுசாரிகளை சமாளிக்க அவர் தரும் யோசனை அபாரமானது ; கிருஷ்ணரின் சிருங்கார ரசம் ததும்பும் லீலைகளை முன்னிறுத்தி அதை எதிர்க்க வேண்டும் என்பதே அவரின் வாதம். “அது இறைவனின் செயல். அது சாதாரணர்களுக்கு இல்லை “ என்கிற வாதம் வந்தால் என்ன சொல்வாரோ தெரியவில்லை.

இந்தியர்களின் கட்டிட மற்றும் கலைத்துறையின் மீதும் ஆங்கிலேயர்களுக்கு பெரிய ஆர்வமிருக்க வில்லை. அவை முழுக்க கிரேக்கத்தின் தாக்கத்தில் இருந்தே எழுந்தன அல்லது அவை எந்த அழகியல் தன்மையோ கொண்டவை இல்லை என்பதே அவர்களின் பெரும்பான்மைப்பார்வையாக இருந்தது. விக்டோரியா மகாலை உருவாக்க இந்தியர்களை பணியில் கொண்டு வரலாம் என்று கர்சனுக்கு யோசனை சொல்லப்பட்ட பொழுது “நல்ல இடவசதி கொண்ட வகையில் அதை அமைக்கும் திறமை இந்தியர்களுக்கு இல்லை !” என்றார் அவர். ரோமில் இருந்த பரந்த பார்தேனன் கட்டிடத்தை விட பலமடங்கு அதிக பரப்பு கொண்ட கட்டிடங்களை கோல்கொண்டாவில் இந்தியர்கள் கட்டினார்கள் என்பது அவருக்கு தெரியாமல் போயிருக்கலாம்.

லுட்டியன்ஸ் அவர்களிடம் டெல்லியை நிர்மாணிக்கும் பொறுப்பு தரப்பட்டது. அவர் காசியில் இருந்த ஆலயங்கள் மற்றும் புத்த மடாலயங்களை குழந்தைத்தனமானது என்றும்,எலிபெண்டா குகையில் இருந்த கலைப்படைப்புகளை எப்படி விநாயகரைக்கொண்டு எல்லாம் அழகிய படைப்புகள் எழும் என்றும்,தாஜ்மகால் நிலவொளியில் சொட்டை விழுந்தது போல காட்சியளிக்கிறது என்று சொல்லி மேற்கின் பாணியில் அந்த நகரத்தை நிர்மாணித்தார். பழைய மற்றும் புது டில்லியை இணைக்கலாம் என்கிற வாதத்தை அவர் ஏற்க மறுத்து இன்றைய பல சிக்கல்களுக்கு வழிவகுத்தார்.

கார்புசியர் சந்திகரை வடிவமைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார். அவரை பாரீஸ் நகரத்தில் கட்டிடங்கள் அமைக்கும் பொறுப்பை கொடுத்து அதில் பிரான்ஸ் நாட்டின் கலாசார பாரம்பரியம் பற்றிய புரிதல் அவருக்கில்லை என்று சொல்லி விளக்கினார்கள். அவர் இங்கே கட்டிய அந்த நகர் மேற்கின் பிரதியாக இருந்தது. இந்தியாவின் அளவில்லா கட்டிடக்கலையின் அற்புதங்கள் அவர் கண்ணில் படவில்லை. இந்தியர்களை கருப்பர்கள் என்றும்,சிந்திக்க தெரியாத முட்டாள்கள் என்கிற பார்வையுமே இந்தியாவை ஆண்ட பெரும்பாலான ஆங்கிலேயர்களுக்கு இருந்தது.

இந்தியாவின் மதுபானி ஓவியங்கள்,சாவ் ஓவியங்கள் என்று பல்வேறு வகையான பாரம்பரிய முறைகள் இருக்க மேற்கின் முறையில் ஓவியங்களை பிரதியெடுக்கும் பாணியும் இங்கே தொடர்ந்து காணப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு இனக்குழுக்களை குற்றப்பரம்பரையினர் என்றே ஆங்கிலேயர் குறித்தார்கள். இந்தியாவில் நாடகங்களிலும் பெரிதாக இந்தியத்தன்மையோடு வரும் நாடகங்கள் குறைவாகவே உள்ளன. அதே போல நாட்டியத்திலும் மேற்கின் புதிய அம்சங்களை சேர்க்கிறோம் என்று எப்படிப்பட்ட சூழலில் என்னென நயங்களோடு நாட்டியங்கள் அமைக்கப்பட்டன என்பதை மறந்து இயந்திரத்தனமாக நாட்டியங்கள் அமைக்கப்படுகின்றன.

பிரான்ஸ் புது அலையை சினிமாவில் தந்தது,நியோ ரியலிசத்தை இத்தாலி தந்தது நாம் சினிமாவுக்கு என்ன தந்தோம் ? பாலிவுட் என்று ஹாலிவுட் போல பெயர் வைத்துக்கொண்டு ஓயாமல் அங்கே இருந்து படங்களை சுட்டுத்தள்ளுகிறோம். இந்தியாவின் மகாஹிட் படம் எனப்படும் ஷோலே ஒவ்வொரு பிரேமும் NORTHWEST FRONTIER படத்தில் இருந்து சுடப்பட்டது. இசையிலும் இப்படிப்பட்ட பிரதி எடுப்புகள் ஏராளம். இந்த மண்ணின் நாட்டுப்புறப்பாடல்கள் மக்கள் இசைக்கோர்வைகள் பாரம்பரிய இசைப்பாடல்கள் ஆகியவற்றை திரையில் கொண்டுவருவதில் பெரும்பாலும் தோற்றே போயிருக்கிறோம். மேற்கின் பிரதியாக ஆனால் நன்று என்கிற மனோபாவம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் இங்கிலாந்தில் ஒரு தனிமனிதனின் வருமானம் மூன்றரை மடங்கு பெருகியது. இந்தியாவிலோ அது 0.14 என்கிற அளவுக்கே உயர்ந்தது. அறுபதாயிரம் பேரை முதல் உலகப்போரில் அவர்களுக்காக இழந்தோம். இரண்டாம் உலகப்போரில் இருபத்தைந்து லட்சம் பேர் போரிட்டார்கள். வெறும் பதினெட்டு ரூபாய் சம்பளம் தரப்பட்டது. ஆங்கிலேய வீரனின் சம்பளம் 75 ரூபாய் ! அறுபதுகளில் இங்கிலாந்தில் இங்கே இருந்து போன மக்கள் மீது நிறவெறித்தாக்குதல்கள் நடைபெற்றன.

“கருப்பர்கள் அருகில் இருக்க வேண்டுமென்றால் தொழிலாளர் கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்கிற அளவுக்கு பிரசாரங்கள் எழுந்தன. பன்முகத்தன்மையை தொழிலில் வளர்ந்த்தும் அவர்கள் ஓரளவுக்கு உள்வாங்கிக்கொண்டார்கள். என்றாலும் பலர் இன்னமும் ஆங்கிலேயராக தங்களைக்காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள். பிரான்சில் தங்களின் மத அடையாளங்களை காட்டக்கூடாது என்று இஸ்லாமியர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு சொல்கிற அதே அரசு கிறிஸ்துவர்களுக்கு அப்படிச்சொல்வதில்லை. கிறிஸ்துவ நாடாக இல்லாமல் போனதால் மதச்சார்பற்று இருந்தாலும் துருக்கியை ஐரோப்பிய யூனியனில் சேர்ப்பதில்லை. இப்படி அடுக்கிக்கொண்டே போகும் ஆசிரியர் பல்வேறு இனக்குழுக்கள் தங்களின் தனித்த அடையாளங்களை காத்துக்கொள்ள வேண்டும் அது அவசியம் அவர்களை அப்படியே நாம் பிரதியெடுக்கும் வரை நம்மால் உண்மையான விடுதலை பெற்றவர்களாக மாற முடியாது என்கிறார். WESTPHALIA அறிக்கையின் மூலம் தனித்த நாடுகளை ஒற்றைப்படையான கலசாரம்,மொழி ஆகியவற்றின் மூலம் கட்டமைத்த மேற்கின் பாரம்பரியம் நமக்கு ஒத்து வராது என்று சொல்கிறார்.

சென்னின் அடையாளம் மற்றும் வன்முறை நூலில் வரும் ஒருவருக்கு பல்வேறு அடையாளங்கள் உள்ளன என்கிற வாதத்தை மறுத்துப்பேசும் ஆசிரியர் தனித்த அடையாளத்தோடு இருப்பது அவசியம் என்று அழுத்தமாக வாதிடுகிறார். உரையாடல்கள் நிகழ்ந்து பல்வேறு அடையாளங்கள் இணைவதை பற்றி அவர் பேசவே இல்லை. கூடவே பாரம்பரியம் என்று பேசுகிற பொழுதும்,அதன் சாரத்தை சமயங்களில் எடுக்கிற பொழுதும் அதில் ஜாதிப்பெருமையும் இணைந்தே எழுவதை தடை செய்ய முடியாது. அது ஆதிக்கத்தின் வரலாறாக இருக்கிற பொழுது,ஒற்றை அடையாளத்தை நோக்கி வலதுசாரிகள் நகர்த்துகிற பொழுது அவற்றுக்கும் இந்தியனாக மாறு என்கிற இவரின் இந்த அழுத்தத்துக்கும் நூலிழை வித்தியாசமே உண்டு என்பதை இன்னமும் அழுத்தமாக பதிய அவர் தவறியிருக்கிறார்.

இந்திய கலாசாரம் என்று ஓயாமல் பேசும் அவர் தமிழின் தனித்த பண்புகள் பற்றியோ அதன் அற்புதமான இலக்கியங்கள் பண்பாடு பற்றியோ அதன் கட்டிடக்கலை பற்றியோ எந்தக்குறிப்புகளையும் தரவில்லை. ஏன் தெற்கின் எந்த மொழியைப்பற்றியும் பெரும்பாலும் குறிப்புகள் இல்லை. கர்நாடக இசை மற்றும் பரதநாட்டியம் மட்டும் எட்டிப்பார்க்கின்றன. வள்ளுவர் மட்டும் ஒரே ஒரு இடத்தில எட்டிப்பார்க்கிறார். இந்தியத்தன்மை என்பதை வடக்கின் பண்புகளை மட்டும் காத்துக்கொள்வதாக அர்த்தப்படுதப்பட்டுவிடக்கூடாது என்கிற கவனத்தோடும்,இவை வலதுசாரிகளின் கரங்களை பலப்படுத்தும் முயற்சிகளுக்கான வாதங்களாக முன்வைக்கப்படுவதும் நிகழ்கிறது என்பதை இணைத்துப்புரிந்து கொண்டு இந்த நூலை வாசிப்பது நல்லது.. காந்தியின் வாழ்க்கையில் ஆங்கிலேயர் முன்னரும் தரையில் அமர்ந்த உண்டு அந்த சம்பவத்தை பதிவு செய்து நம்முடைய வேர்களை பற்றிய புரிதலும்,பெருமிதமும் நமக்கு இருக்க வேண்டும் என்கிறார். இந்த வரிகளே நூலின் சாரம் ,”என் வீட்டின் கதவுகள்,ஜன்னல்களை மூடிக்கொண்டு நான் வசிக்க விரும்பவில்லை. எல்லா நாடுகள் மற்றும் நிலங்களின் கலாசாரங்கள் இதன் வழியாக வீசுவதையே நான் விரும்புகிறேன். அதே சமயம் என் வேர்கள் யாராலும் அடித்துச்செல்லப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன் !”
பவன் கே.வர்மா
BECOMING INDIAN
ஐநூறு ரூபாய்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s