அம்பேத்கர் மற்றும் காந்தி-ஒரே இலக்கு கொண்ட இரண்டு எதிரிகள் !


அம்பேத்கர் மற்றும் காந்தி-ஒரே இலக்கு கொண்ட இரண்டு எதிரிகள்- Ramachandra Guha
இரண்டு முக்கியமான இந்தியர்கள் காந்தி மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் தொலைநோக்குப் பார்வை எதிரேதிரானவையா அல்லது ஒன்றுக்கொன்று ஈடுசெய்து கொள்வையாக இருந்தனவா என்று ஆராய்வோம்.

இன்றைக்கு எதிரிகள் என்று முன்னிறுத்தப்படும் படேல் மற்றும் நேரு காங்கிரஸில் வாழ்நாள் முழுக்க சகாக்களாக இருந்தார்கள். ஆனால்,காந்தி மற்றும் அம்பேத்கர் ஒரே கட்சியில் உறுப்பினர்களாக எப்பொழுதும் இருந்ததில்லை. இருபதுகளில் அண்ணல் அம்பேத்கர் கல்வி கற்று திரும்புவதற்கு முன்னரே காந்தி காங்கிரஸ் முன்னின்று நடத்திய விடுதலைப்போரின் தலைமையை ஏற்றிருந்தார். காந்தியைச் சுற்றி ஒரு பெரிய ஒளிவட்டம் இருந்தது. அவரை பலரும் மகாத்மா என்று அழைத்தார்கள். ஆனால்,மறைந்த டி.ஆர்.நாகராஜ் எழுதியது போல காந்தியின் ராமனுக்கு அனுமனாகவோ,சுக்ரீவனாகவோ இருக்க மறுக்கிற சுயமரியாதை கொண்டவராக அம்பேத்கர் இருந்தார். அம்பேத்கர் தன்னுடைய சொந்த அரசியல் பாதையை காந்தி மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு எதிராக சுதந்திரமாக அமைத்துக்கொண்டார். முப்பதுகள் முதல் நாற்பதுகள் வரை காந்தியை மிகக்காட்டமாக அம்பேத்கர் விமர்சித்தார். காந்தியின் ஹரிஜனங்களை முன்னேற்றுவது என்கிற பார்வை நாட்டாண்மை தனமாகவும்,ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கருணை காட்டும் செயலாகவும் அவர் பார்த்தார். காந்தி தீண்டாமைக் கறையை நீக்கி இந்துமதத்தை சுத்தப்படுத்த விரும்பினார். அம்பேத்கரோ ஒட்டுமொத்தமாக இந்து மதத்தை நிராகரித்தார். சமமான குடிமகன்களாக இந்து மதத்தை விட்டு மற்றொரு நம்பிக்கைக்கு தலித்துகள் மாறவேண்டும் என்று அவர் எண்ணினார்

அம்பேத்கர் மற்றும் காந்தி தங்களின் காலத்தில் நிச்சயமாக அரசியலில் எதிரெதிர் நிலையில் நின்றார்கள். அவர்களின் மரணத்துக்கு பிறகு அறுபது ஆண்டுகள் கழித்தும் நாம் அவர்கள் இருவரையும் அப்படியே காணவேண்டுமா ?? வலதுசாரி மற்றும் இடதுசாரி கருத்தியலில் நம்பிக்கை உள்ளவர்கள் அப்படித்தான் முன்னிறுத்துகிறார்கள்.

1996 இல் அருண் ஷோரி ஒரு நெடிய புத்தகத்தை அம்பேத்கரை’பொய் கடவுள்’ என்று நிராகரித்து எழுதினார்.
அதில் இரண்டு முக்கியமான குற்றச்சாட்டுகளை அம்பேத்கர் மீது அருண் ஷோரி வைக்கிறார். தேசியவாதிகள் பக்கம் சேராமல் அவர் ஆங்கிலேய அரசின் பக்கம் இணைந்தார் என்பது முதல் குற்றச்சாட்டு (வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற பொழுது அம்பேத்கர் வைஸ்ராயின் அதிகாரக்குழுவில் உறுப்பினராக இருந்தார் ),இரண்டாவதாக அவர் காந்தியை தீவிரமாக மற்றும் சமயங்களில் கடுமையான மொழியால் விமர்சித்தார் என்று குற்றஞ்சாட்டினார்

அடுத்த இருபது வருடங்களுக்குள் அவரை ஒத்த இடதுசாரியான அருந்ததி ராய் ஒரு புத்தகம் அளவுக்கு பெரிய கட்டுரையில் காந்தியை பொய் மகாத்மா என்று நிராகரித்தார். காந்தி ஜாதி அமைப்பை நியாப்படுத்திய பழமைவாதி என்றும்,தன்னுடைய பார்வையை உறைபனி வேகத்தில் மிகப்பொறுமையாக அவர் மாற்றிக்கொண்டார் என்றும் சொன்னார். அருண் ஷோரி மற்றும் அருந்ததி ராய் இருவரும் வரலாற்றை கருப்பு வெள்ளையில் காண்கிறார்கள். அவர்களுக்கு நாயகர்கள் மற்றும் வில்லன்கள் மட்டுமே காணக்கிடைக்கிறார்கள்.

ஏன் அம்பேத்கர் ஆங்கிலேயர் பக்கம் நின்றார் என்று கேட்டுக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் பிராமணர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. அவர்கள் கடந்தகாலத்தில் தலித்துகளை ஒடுக்கியாண்டார்கள். விடுதலைப் பிறகு அவர்கள் கையில் அதிகாரம் வந்த பின்னும் அதையே அவர்கள் செய்திருக்க கூடும். ஆகவே தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயலாற்றிய சீர்திருத்தவாதிகள் ஜோதிபாய் புலே மற்றும் மூங்ராம் (பஞ்சாபின் ஆதி-தர்ம் இயக்கத்தின் தலைவர் ) ஆகியோர் ஆங்கிலேய அரசு காங்கிரசை விட குறைந்த தீமைகளை கொண்டது என்று நம்பினார்கள்

அருந்ததி ராயோ காந்தியின் கருத்துக்களில்  தனக்குத் தேவையானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்தும்,அவர் சொன்னதை திரித்தும் குறிப்பிட்டு காந்தியை மெதுவாக எதிர்வினை ஆற்றியவராக காட்டுகிறார். கவனத்தோடு செயல்பட்ட அறிவுஜீவிகளான டெனிஸ் டால்டன்,மார்க் லிண்ட்லே,அனில் நவ்ரியா ஆகியோரு காட்டியபடி காந்தி சீராக ஜாதியமைப்பை விமர்சிப்பவராக மாறினார். ஆரம்பத்தில் அவர் தீண்டாமையை மட்டும் தாக்கினார்,அதன் பின்னர் சேர்ந்து பழகுதல்,கூட்டாக உணவு உண்ணுதல் ஆகியவற்றையும் தன்னுடைய ஆலய நுழைவுப் போராட்டங்களின் வழியாக அவர் வலியுறுத்தினார். மேலும் அவரின் ஆசிரமத்தில் தலித்துக்களை திருமணம் செய்துகொண்ட ஆதிக்க ஜாதியினரின் திருமணத்தை மட்டுமே தான் அங்கீகரிப்பேன் என்று சொல்லி சாதியமைப்பின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கினார்.

தீண்டாமையை நீக்க காந்தி நடத்திய இயக்கம் வலுவற்றதாக இன்றைய இடதுசாரிகளுக்கு தோன்றலாம். ஆனால்,அவர் காலத்தில் அதுவே மிகவும் தைரியம் மிகுந்த செயலாக கருதப்பட்டது. இந்து பழமைவாதத்தின் மையத்தை அது தாக்கியது

சங்கரச்சாரியர்கள்  சமஸ்க்ருதத்தை ஒரளவுக்கு தெரிந்துகொண்ட ஒரு சாதாரண பனியா இந்து மதத்தின் நூல்களில் கட்டாயமாக சொல்லப்பட்ட தீண்டாமையை எதிர்ப்பதா என்று கோபப்பட்டார்கள். காலனிய அதிகாரிகளுக்கு எழுதிய விண்ணப்பத்தில் காந்தியை இந்து மதத்தை விட்டு நீக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார்கள். 1933-34, இல் காந்தி தீண்டாமையை எதிர்த்து பயணம் போன பொழுது இந்து மகாசபை உறுப்பினர்கள் புனேவில் அவருக்கு கருப்பு கொடி காட்டியதோடு நில்லாமல்,மலத்தை முகத்தில் எறிந்தார்கள். ஜூன் 1934 இல் காந்தி மீது கொலை முயற்சியும்  நடைபெற்றது

காந்தியின் இயக்கம் அவர் கட்சியிலேயே வரவேற்பை பெறாமல் இருந்தது. படேல்,நேரு,போஸ் ஆகியோர் காந்தி சமூக சீர்திருத்தத்தை ஓரத்தில் வைத்துவிட்டு முதலில் நாட்டு விடுதலைக்கு போராட வேண்டும் என்று எண்ணினார்கள்

இந்த முரண்பாடுகளுக்கு பின்னரும் நேரு மற்றும் படேலை இந்தியாவின் முதல் அமைச்சரவையில் அம்பேத்கர் இருக்குமாறு ஒத்துக்கொள்ள வைக்கும் பணியை காந்தி கச்சிதமாக செய்தார். விடுதலை தேசத்துக்கு வந்ததே அன்றி,காங்கிரசுக்கு மட்டுமானதில்லை அது என்று தெளிவுபடுத்தினார். கட்சி வேறுபாடுகளை கடந்து திறமையின்  அடிப்படையில் முதல் அமைச்சரவை அமைய வேண்டும் என்பது அவரின் பார்வையாக இருந்தது. இவ்வாறுதான் அம்பேத்கர் சட்ட அமைச்சர் ஆனார்.

காந்தி-அம்பேத்கர் உறவைப்பற்றி தெளிவான மற்றும் அறிவுப்பூர்வமான ஒரு நூலை தேடுபவர்கள் டி.ஆர்.நாகராஜின் பற்றியெரியும் பாதங்களை வாசிக்க வேண்டும். இன்றைய காலத்தில் காந்தி மற்றும் அம்பேத்கரின் பார்வையை இணைக்க வேண்டிய அவசரத்தேவை இருக்கிறது என்று அவர் வாதிடுகிறார். அது முழுக்க சரி. சமூக சீர்திருத்தம் நிகழ எழுச்சி  மேல் மற்றும் கீழ் ஆகிய இருபக்கங்களில் இருந்தும் நிகழவேண்டும். குற்றஉணர்ச்சிக்கு உள்ளன லிங்கன் பிரெடெரிக் டக்ளஸ் முதலியோரின் விமர்சனங்களை காது கொடுத்து கேட்காமல் போயிருந்தால் அடிமைமுறை நீக்கப்பட்டு இருக்காது. சிவில் உரிமைகள் சட்டமாக லிண்டன் ஜான்சன் மார்டின் லூதர் கிங்கின் அறச்சக்தி மற்றும் இயக்கம் ஆகியவற்றை ஏற்காமல் போயிருந்தால் மாறியிருக்காது. தங்கள் வாழ்நாள் அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் இன்றைய வரலாற்று புள்ளியில் அவர்கள் அருவருக்கத்தக்க சமூக அமைப்பை குலைப்பதில் இணையான பணியை செய்தார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

காந்தி அளவுக்கு எந்த உயர்ஜாதி இந்துவும் தீண்டாமையை கேள்விக்குள்ளாக்கவில்லை. தலித்துகளில் இருந்து எழுந்த மிகப்பெரும் தலைவர் அம்பேத்கர் அவர்கள் தான். சட்டம் தீண்டாமையை நீக்கினாலும் இன்னமும் அக்கொடுமை இந்தியாவின் பல்வேறு பாகங்களில் தொடர்கிறது. இக்கொடுமைகளை ஒழிக்க நாம் காந்தி மற்றும் அம்பேத்கர் இருவரிடம் இருந்தும் பாடங்களைப் பெற வேண்டும்

மூலம் :

http://www.hindustantimes.com/…/they…/article1-1278935.aspx…

தமிழில் : பூ.கொ.சரவணன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s