காந்தி,அம்பேத்கர்-எல்லா காலத்துக்கும் எதிரிகள் இல்லை !


“ஒரு முக்கியமான கதையோடு என்னுடைய ‘காந்தியும்,அம்பேத்கரும்’ உரையைத் துவங்கலாம் என்று எண்ணுகிறேன். காந்தியின் 125 பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மணிபால் பல்கலையில் 1994 நான்காம் வருடம் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தியால் நடத்தப்பட்டது. பல்வேறு அறிஞர்கள் அதில் கலந்துகொண்டு பேசினார்கள். காந்தி எளிமையாக ஆடை அணிந்திருக்கும் படமும்,கையில் தென்ஆப்ரிக்காவில் குச்சி ஏந்தி நின்று கொண்டிருக்கும் இளவயது படமும் அங்கே பின்னணியில் இருந்தது. எல்லாரும் காந்தியை பலவாறு புகழ்ந்து உரையாற்றிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது தேவனூர் மகாதேவா என்கிற கவிஞர் மேடையேறினார். அவர் கம்பீரமான குரலில் ஒரு தலித் பெண் கவிஞர் எழுதிய கவிதை ஒன்றை சொன்னார். அதன் சாரம் என்ன தெரியுமா ?

அம்பேத்கர் ஆடையைப் பற்றி ஒரு கவிதை :

பணக்கார திவானின் மகனாக,பனியா ஜாதியில் பிறந்த காந்தி எளிமையான ஆடை அணிந்து விடுதலைக்குப் போராடினால் அதைத் தியாகம் என்பீர்கள். இதுவே ஒரு தலித் அப்படி ஆடை அணிந்தால் “ஐயோ பாவம் ! இவன் தலித். வேறென்ன இவனால் அணிய முடியும் ?” என்று சொல்வீர்கள். எங்கள் அண்ணல் அறிவால் உயர்ந்து அதனால் தான் இப்படிக் கம்பீரமாக உடை அணிந்து நிற்கிறார்” என்றார் அவர்.

ஏழைவீட்டு ஏந்தல் அம்பேத்கர் :

இந்தியாவின் விடுதலைப்போராட்ட காலத்தில் மிகமுக்கியமான தலைவர்கள் என்றொரு பட்டியலிட்டால் அதில் வரும் காந்தி,நேரு,படேல்,தாகூர்,அம்பேத்கர் இவர்கள் எல்லாரையும் கவனியுங்கள். காந்தியின் அப்பா திவானாக இருந்தவர்,நல்ல செல்வ வளம் மிகுந்த குடும்பம் அவருடையது.நேருவின் அப்பா மோதிலால் நேருவின் ஆடைகள் அவர் வக்கீல் தொழிலை விடும் வரை பாரீஸ் போய் வெளுக்கப்பட்டு வரும் என்பார்கள். தாகூரின் அப்பா இன்றைய வங்கதேசத்தின் பாதி நிலங்களுக்குச் சொந்தக்காரராக அன்றைக்கு இருந்தவர். படேலின் தந்தை பத்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர். அம்பேத்கரின் தந்தையோ ஆங்கிலேய ராணுவத்தில் மிகக்குறைவான சம்பளத்துக்கு வேலை பார்த்தவர். அம்பேத்கர் அவர்கள் குடும்பத்துக்கு 13 வது பிள்ளை. வறுமைக்கும்,ஜாதிய கொடுமைகளுக்கும் நடுவில் போராடி அவர் அற்புதமான உச்சங்களைத் தொட்ட வகையில் தனித்த தலைவராகத் திகழ்கிறார்.

அம்பேத்கரைப் பற்றி ஆய்வறிஞர் ஒருவரால் நன்கு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட நூலாக 1966 இல் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காகப் பென்சுல்வேனியா பல்கலையைச் சேர்ந்த எல்லினார் ஜெல்லாயிட் எழுதிய ,”அம்பேத்கர் மற்றும் மஹர் இயக்கம்” என்கிற நூல் அமைந்தது. அதை இந்தியாவில் வெளியிட அப்பொழுது எந்தப் பதிப்பகமும் தயாராக இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கலாம். காங்கிரஸ் அரசு தன்னுடைய கட்சியைச் சேர்ந்த விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களையே நினைவுகூர்ந்தது. அம்பேத்கரைப் பற்றிய அந்த அற்புதமான ஆய்வு நூலை அப்பொழுது யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது இன்றைக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

உத்வேகம் தரும் ஒரு பெயர் :

தன்னுடைய மரணத்துக்குப் பிறகு எல்லாருக்குமான தலைவராக அம்பேத்கர் திகழ்கிறார். ராஜாஜி ஐயங்கார்கள் நினைவில் நிறுத்தும் தலைவராக மட்டும் திகழ்கிறார்,போஸ்,தாகூர் வங்காளிகளின் தனிச்சொத்தாக மாறிவிட்டார்கள். நேரு பெயரை சொன்னாலே கடுப்பாகிற ஒரு தலைமுறையைக் காண்கிறோம் எப்படிக் காந்தி இன்றைக்கு நினைவுகூரப்படுகிறார் என்றொரு நண்பர் சொன்னார் ,”பழம் பெருச்சாளிகள் சாத்தியமில்லாத விஷயங்களை மூடிய அறைக்குள் அரசுப்பணத்தில் அமர்ந்து பேசுகிற விடுமுறை தினம்தான் காந்தி ஜெயந்தி. ஆனால்,அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கையின் முக்கிய நாட்களின் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளத் தலித் மக்கள் தங்களின் சொந்தக்காசை செலவு செய்துகொண்டு நாடு முழுக்க அவரின் பிறப்பிடம் நோக்கி வருகிறார்கள். அந்த விழாக்கள் பிரம்மாண்டமானதாக,நாள் முழுக்க நடப்பதாக இருக்கின்றன ” என்றார்.

இந்தியாவின் தெருக்கள் முழுக்க அம்பேத்கரின் சிலைகளைக் காணலாம்,அவரின் அடையாளங்கள்,நினைவுகள் விளிம்புநிலை மக்களுக்கு உத்வேகம் தருகின்றது. அம்பேத்கர் பொருளாதார மேதை,சட்ட வல்லுநர்,சமூகவியல் அறிஞர் என்று பல்வேறு முகங்கள் கொண்டவர் அவர் என்பது கடினமான சூழல்களில் இருந்து மேலெழும்பி சாதிப்பதற்கான எடுத்துக்காட்டாக இருக்கிறது.

உலகியல் அறிவு கொண்ட சுரண்டல் :

உலகிலேயே ஜாதிய முறை தான் உலகியல் அறிவை அதிகமாகக் கொண்ட சுரண்டல் முறையாக இருக்கிறது. காந்தி மற்றும் அம்பேத்கர் இருவருமே இந்த ஜாதி முறையை வெவ்வேறு வகைகளில் எதிர்கொண்டார்கள். அவர்கள் எப்படி மாறுபட்டார்கள் என்பதை நாம் காண்போம். முதலில் காந்தி எப்படியெல்லாம் ஜாதி அமைப்பை எதிர்கொண்டார் என்று பார்ப்போம். காந்தி 1920 நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டில் தலைமையுரை ஆற்றுகிற பொழுது ,”நாம் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற போராடுகிறோம். பெரும்பான்மை மக்களைச் சமமானவர்களாக நடத்தாமல் தீண்டாமைக் கொடுமையால் பிரித்து வைத்திருக்கும் வரை நமக்குச் சுயராஜ்யம் சாத்தியமே இல்லை ” என்றார்.

காந்திதான் முதன்முதலில் ஜாதி எதிர்ப்பை முன்னெடுத்தார் என்றில்லை. நான்கு வகையில் ஜாதி அமைப்பு அதற்கு முன்னரே எதிர்கொள்ளப்பட்டது.

இந்து மதத்துக்குள் இருந்து ஜாதி அமைப்பை பக்தி இயக்கங்கள் எதிர்கொண்டன. ஜாதியைக்கொண்டு பிராமணர்கள் எங்களை ஏமாற்றியது போதும். நடுவில் நீங்கள் எதற்கு ? இறைவனை நாங்கள் நேரடியாக அடைகிறோம் என்பது அவர்களின் பாணியாக இருந்தது. கபீரின் வாழ்க்கையோடு ஒருன் சம்பவத்தைச் சொல்வார்கள், காசியில் இறந்தால் முக்தி என்று வைதீகர்கள் சொல்லி வந்தார்கள். தன்னுடைய மரணப்படுக்கை நெருங்கிய பொழுது கபீர் காசியை விட்டு நீங்கி வைதீகர்களின் வாதத்துக்குச் சவால் விட்டார்.

ஜோதிபாய் புலே சாதியத்தை எதிர்த்ததோடு நில்லாமல்,பெண்களுக்குப் பள்ளிக்கூடங்கள் திறந்து அவர்களின் சமத்துவத்துக்குப் பாடுபட்ட முன்னோடி
தமிழகத்தில் ஜாதி அமைப்பை எதிர்த்து போராடிய அயோத்திதாசர் அம்பேத்கருக்கும் முன்னாலே புத்த மதத்துக்கு மாறினார்.

இந்து மதத்தின் சாதியமைப்பை எதிர்த்து இந்திய மண்ணில் தோன்றிய சீக்கிய,புத்த மதங்கள் எழுந்தன. அதில் பலர் சேர்ந்தார்கள்.

கிறிஸ்துவ,இஸ்லாம் மதங்களும் ஜாதிகளற்றதாகச் சொல்லிக்கொண்டு இந்திய மண்ணில் கால் பதித்தன. பதினைந்தாம்,பதினாறாம் நூற்றாண்டுகளில் இஸ்லாமில் ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமளவில் இணைய இந்தச் சமத்துவம் தந்த மதக்கோட்பாடுகளே காரணம். ஆனால்,இவற்றிலும் ஜாதி புகுந்து கொண்டது என்பது தான் நிதர்சனம்.

அழித்தோ,செரித்தோ நிற்கும் சாதியமைப்பு :

இந்து மதத்தின் சாதியமைப்பு ஒன்று இந்தச் சவால்களை உள்வாங்கிக்கொண்டது,அல்லது அழித்துத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. புத்த மதம் இந்தியாவில் இருந்து முழுக்கத் துடைத்து எறியப்பட்டதைப் பாருங்கள். பிரெஞ்சு மானுடவியல் அறிஞர் டுமான்ட் ஒரு கட்டுரையில் பிராமணர்கள் சைவமாக மாறியதே சைவ உணவு உண்ட புத்த மதத்தினரை விடத் தாங்கள் மேலானவர்கள் என்று காட்டி மீண்டும் சாதியமைப்பை நிலைநிறுத்தவே என்கிறார். சீக்கியர்களிலும் தலித்துகளை மசாபி என்று வகைப்படுத்தி ஒடுக்குகிறார்கள்,இருபதாம் நூற்றாண்டில் கூடக் கேரளாவில் சர்ச்சுக்களில் கிறிஸ்துவத் தலித்துகளுக்கு நுழைய அனுமதியில்லாமல் இருந்தது.

காந்தி தன் வாழ்நாளில் நீண்ட,மிகப்பெரிய,தீரமிகுந்த ஒரு போரை சாதியத்துக்கு எதிராகத் தொடுத்தார். தென் ஆப்ரிக்காவில் தன்னுடைய மனைவியைத் தலித் ஒருவரின் மலச்சட்டியை சுத்தப்படுத்த சொல்லி காந்தி கட்டாயப்படுத்திய சம்பவம் தெரியும். 1915 இல் அகமதாபாத்தில் ஆசிரமம் ஆரம்பித்து அங்கே ஒரு தலித் குடும்பத்தைத் தங்க வைக்கவே அவரின் வைணவப் பிரிவு ஆட்கள் அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார்கள். ஆசிரமத்துக்கு நிதி தந்து கொண்டிருந்த ஜாதி இந்துக்களால் அது நிறுத்தப்பட்டது. அப்பொழுது அம்பாலால் சாராபாய் தந்த நிதியால் ஆசிரமம் பிழைத்தது.

இக்காலங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்களை அவர் முன்னெடுக்கிறார். அதுவரை அவருக்குத் தீண்டாமை மற்றும் சாதியம் பற்றி இருந்த புரிதல் போதுமற்றது மற்றும் சாதியம் மிகக்கொடுமையாக மக்களைப் பாதித்திருக்கிறது என்பது அம்பேத்கருடன் நிகழ்த்திய உரையாடல்களின் மூலமே காந்தி உணர்ந்தார். அதற்குப் பின்னரே ஹரிஜன் சேவக் சங்கத்தை ஆரம்பித்து ஹரிஜன் என அவர் அழைத்த தலித்துகளுக்காக நிதி திரட்டினார். தீண்டாமையை எதிர்த்து இந்தியா முழுக்க பாத யாத்திரையை மேற்கொண்டார்.

காந்தியை திரிப்பது சுலபம் :

காந்தியின் எழுத்துக்கள் 90 தொகுதிகளில் விரிந்திருக்கிறது. காந்தியை தாங்கள் விரும்பியவாறு தவறான வகையிலே அவர் சொன்ன எதோ ஒரு கருத்தின் குறிப்பிட்ட வரியை உருவி எடுத்து அவரை மோசமானவராக அவரவரின் கருத்தியலுக்கு ஏற்ப சித்தரிக்க இயலும். காந்தியின் சாதியமைப்புக்கு எதிரான போராட்டம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்றது :

1915-1925-தீண்டாமையைக் காந்தி எதிர்த்தார். “தீண்டாமை பாவகரமான செயல். அதைப் பின்பற்றுகிற நீங்கள் எல்லாம் இந்து மதத்தின் ஜெனரல் டயர்கள் !”என்று கடுமையாகச் சாடினார். அதே சமயம் சாதியமைப்பு இத்தனை வருட காலமாக நீடித்திருக்கிறது என்றால் அதில் எதோ நியாயம் இருக்க வேண்டும். சாதியமைப்பில் இத்தனை வேறுபாடுகள் இல்லாமல் நான்கு வர்ணங்கள் மட்டும் இருக்க வேண்டும் என்பது அவரின் பார்வையாக இருந்தது
1920-30களில் சேர்ந்து உணவருந்தல்,கலத்தல் ஆகியனவற்றை ஜாதி வேறுபாடுகளைக் கடந்து செய்ய வேண்டும் என ஆதரித்தார்

நாற்பதுகளில் தலித் மற்றும் தலித் அல்லாதோர் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே என்னுடைய ஆசீர்வாதங்கள் அந்தத் திருமணத்துக்கு உண்டு என்றார். சாதியமைப்பை அழிக்கக் கலப்புத் திருமணம் அவசியம் என்கிற புரிதலுக்கு அவர் இறுதியில் வந்து சேர்ந்தார்.

பனியா காந்தியே ஒழிக ! :

1933-1934 காலத்தில் தீண்டாமைக்கு எதிராகக் காந்தி சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட பொழுது ஹிந்து மகா சபையினர் அவர் சென்ற இடமெல்லாம் கறுப்புக் கொடி காட்டினார்கள். புனாவில் மலத்தை எடுத்து அவர் மீது வீசினார்கள். “நீ பிராமணனும் இல்லை,உனக்கு சமஸ்க்ருதமும் தெரியாது. நீ எங்களின் சடங்கு,நம்பிக்கை,கலாசாரம்,முன்னோர் வழிக்காட்டுதல் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குகிறாயா பனியா ?” என்பதே பிராமணர்கள் முதலிய ஜாதி இந்துக்களின் பார்வையாக இருந்தது. ஒரு குண்டை பழமைவாதத்தின் நடுவே வீசியது போல இருந்தது காந்தியின் செயல் 1936 இல் காஞ்சி,காசி முதலிய பல்வேறு நகரங்களில் இருந்த இந்து மடாதிபதிகளை ஒன்று திரட்டியது. ஆங்கிலேய அரசுக்கு இப்படிக் கடிதம் எழுதினார்கள் ,”காந்தியையும் அவரைப் பின்பற்றுவர்களையும் சென்சஸ் கணக்கெடுப்பில் இந்து இல்லை என்று குறிக்க வேண்டும்” மெதுவாக,படிப்படியாக,மென்மையாகக் காந்தி சாதியத்துக்கு எதிராகப் போராடுவதாக அம்பேத்கர் காந்தியை விமர்சிக்க,ஜாதி இந்துக்களோ காந்தி மிகத்தீவிரமாகச் சாதியத்தை எதிர்ப்பதாகப் பொங்கினார்கள்.

அம்பேத்கரை ஆர்.சி.தத்,அரவிந்தர் ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்த பரோடா மன்னர் சாயாஜி கெய்க்வாட் ஆதரித்தார். கொலம்பியாவில் முனைவர் பட்டம் பெற்று மன்னரின் அவையிலே அம்பேத்கர் பணிக்குச் சேர்ந்தாலும் அங்கே அவரைத் தீண்டத்தகாதவர் என்று ஜாதி இந்துக்கள் விலக்கி வைத்தார்கள். மனம் நொந்து மீண்டும் முனைவர் பட்டம் பெற்று திரும்பிய அம்பேத்கர் சட்டப்பணியை ஆற்றியவாறே சமூகப்பணிகளிலும் தீவிரமாக அம்பேத்கர் ஈடுபட்டார். பம்பாய் சட்டக்கல்லூரி முதல்வராக இருந்த அம்பேத்கர் காந்தியை சந்திக்கக் கோரினார். பெரும்பாலும் காந்தியின் சந்திப்புகளைக் கச்சிதமாகத் தீர்மானிக்கும் அவரின் உதவியாளர்கள் இந்த முறை சொதப்பினார்கள்.

பிராமணர் அம்பேத்கர் :

மராத்தியர்களில் பிரமாணர்களின் பெயரில் கர் பின்னால் இருக்கும்  (டெண்டுல்கர், கவாஸ்கர், சவார்க்கார் ). அம்பேத்கர் என்று பெயர் இருந்தபடியால் அவரைப் பிராமணர் என்று எண்ணிக்கொண்டார்கள். ‘ஜாதிச்சிக்கல் மற்றும் தீர்வுகள் பற்றி உங்களோடு பேச வேண்டும் ” என்று தனக்குப் பிராமணர் என்று அறிமுகப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சொன்னதும் காந்தி கடுப்பானார். ஏற்கனவே பிராமணர்கள் தன்னை எதிர்க்கிற சூழலில் இப்படி யாரோ அதுவும் தன்னைவிட இருபத்தி மூன்று வயது இளைய ஒரு வழக்கறிஞர் தனக்குப் பிரசங்கம் செய்கிறாரே என்பது அவரின் எண்ணமாக இருந்தது. அப்பொழுது ஆரம்பித்த அவர்களின் போர் இறுதிவரை தொடர்ந்தது. ஏன் அறுபத்தி ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது.

தனித்தொகுதிகளை (தங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தாங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கும் உரிமையை ) ஆங்கிலேயர்கள் பட்டியல் ஜாதியினருக்கு அளித்த பொழுது காந்தி அவர்கள் இந்து மதத்தின் பிரிக்க முடியாத அங்கம் என்று எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். காந்தியின் உயிரைக் காக்க அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்துக்குச் சம்மதித்தார். தனித்தொகுதிகளை விட்டுக்கொடுக்க அம்பேத்கர் இசைய இடங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட்டின் முதல் தலைசிறந்த வீரரான பல்வாங்கர் பாலு பம்பாய் நகரசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சொன்ன அம்பேத்கரை எதிர்த்தே அவரை வேட்பாளராகக் காங்கிரஸ் நிறுத்தியது. “நம் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபடும் மகத்தான மனிதர் அம்பேத்கர். நானோ காங்கிரசின் சேவகன். அதனால் அவரை எதிர்த்து போட்டியிடுகிறேன்.” என்ற படேலின் வழிகாட்டலில் நின்ற பாலு சொன்னார். குறைவான ஓட்டு வித்தியாசத்தில் அம்பேத்கர் வென்றார்.

பல்வேறு கட்சிகளை ஆரம்பித்துக் காந்தியையும்,காங்கிரசையும் அம்பேத்கர் தொடர்ந்து எதிர்த்தார். பூனா ஒப்பந்த காலம் தவிர்த்து காந்தி,அம்பேத்கர் அவர்கள் காலங்களில் இணைந்து பணியாற்றவே இல்லை. வெள்ளையனே வெளியேறு இயக்க காலத்தில் ஆங்கில அரசின் வைஸ்ராய் செயற்குழுவில் அம்பேத்கர் உறுப்பினராக இருந்தார். இங்கே ஒரு சுவாரசியமான திருப்பம் வருகிறது. ‘நல்ல படகோட்டி’ நூலில் ராஜ்மோகன் காந்தி பதிவு செய்யும் வாய்வழியாகச் சொல்லப்பட்ட உண்மைச்சம்பவம் இது. விடுதலைக்குப் பிந்தைய அமைச்சரவை பட்டியலில் அம்பேத்கரின் பெயரில்லாமல் இருப்பதைப் பார்த்த காந்தி ,”விடுதலை இந்தியாவுக்கு,காங்கிரசுக்கு அல்ல !” என்று சொல்ல அதற்குப் பின்னரே சட்ட அமைச்சராக அம்பேத்கர் பெயர் இடம் பெற்றது.

காந்தி-அம்பேத்கர் சமரசம் :

இதற்கான ஆதாரங்களைத் தேடுகிற பொழுது சில சுவையான விஷயங்கள் புலப்பட்டன. நாற்பத்தி ஆறில் விடுதலை வருகிறது என்று தெரிந்ததுமே நாட்டின் உருவாக்கத்தில் பங்குகொள்ள விரும்புகிறார். தான் மற்றும் காந்தி இருவருக்கும் பொதுவான ஜெரால்ட் என்கிற நண்பரிடம் ,”நான் உரையாடலுக்குத் தயாராக இருக்கிறேன். காந்தி தான் ஆனால் அதைத் துவங்க வேண்டும் “என்று கடிதம் எழுதியிருக்கிறார் அம்பேத்கர். முன்னர்க் காந்தியை கடுமையாக அம்பேத்கர் விமர்சிப்பதாகச் சொல்லப்பட்ட எல்லாத் தருணத்திலும் காந்தி அம்பேத்கரை சாடவே இல்லை ,”அவர் தலைசிறந்த தேசபக்தர். சட்ட அறிவு மிக்க அவர். நாம் ஹரிஜனங்களுக்குச் செய்த அவமதிப்புகளுக்கு அவர் நம் தலையை உடைத்திருக்க வேண்டும்” என்று எழுதிய காந்தி இப்பொழுது பொறுமை இழந்திருந்தார். “அவர் என்னைப்பற்றிக் கடுமையான விமர்சனங்கள் வைப்பதாக அறிகிறேன். கோபம் மற்றும் வெறுப்பு கொண்டவராக இருக்கிறார். சமரசம் சாத்தியமா ?” என்று காந்தி கேட்டார். பின்னர் ராஜகுமாரி அம்ரீத் கௌர் காந்தி-அம்பேத்கர் இடையே ஒற்றுமையைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது “நீங்கள் அம்பேத்கரின் பக்கம் இருக்கும் நியாயத்தைக் கவனிக்க வேண்டும் !” என்று கடிதம் எழுதினார். ராஜகுமாரியும்,அம்பேத்கரும் ஒரே துணைக்’குழுவில் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

காந்தி-அம்பேத்கர் முரண்பாடுகள் :

காந்தி,அம்பேத்கர் வாழ்க்கையைச் சுருக்கமாகப் பார்த்த நாம் இப்பொழுது அவர்களின் பார்வையில் இருந்த முக்கிய வேறுபாட்டைக் காண்போம் :

தீண்டாமை,ஜாதி வேறுபாடு ஆகியவற்றை ஒழித்து இந்துமதத்தைக் காத்து,புத்துயிர் ஊட்ட வேண்டும். அதை நவீன மதமாகக வேண்டும் என்று காந்தி எண்ணினார். ஜாதிக்கொடுமை,தீண்டாமை இந்து மதத்தோடு பிணைந்து விட்ட ஒன்று,ஆகவே,இந்து மதம் நிராகரிக்கப்பட வேண்டும் என்பது அம்பேத்கரின் பார்வை.

அதிலும் கவிதா என்கிற ஊரில் குஜராத்தில் 1935 ஆதிக்க ஜாதியினரால் பல தலித்துக்கள் கொல்லப்பட்டது இந்து மதத்தின் மீதான ஒரளவு நம்பிக்கையையும் அம்பேத்கர் இழக்குமாறு செய்தது. மதம் மாறுவது என்று முடிவு செய்து சீக்கியம்,இஸ்லாம்,கிறிஸ்துவம் என்று இந்தியாவில் உயிரோடு இருந்த எல்லா மதங்களையும் தேடிப்பார்க்கையில் எல்லாவற்றிலும் தீண்டாமை இருப்பதில் வெறுப்புற்று இந்திய பகுதியில் உயிரோடு இல்லாத புத்த மதத்தைப் பல லட்சம் பேரோடு மரணத்துக்கு ஆறு வாரத்துக்கு முன் தழுவினார்.

இரண்டாவது பஞ்சாயத்துச் சுயராஜ்யம் என்பவை எல்லாம் காந்தியின் கனவுகள். நவீனமயமாக்கல்,தொழில்மயம் ஆகியன நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்கிற கனவில் அம்பேத்கர்,நேரு உடன்பட்டார்கள்.

மூன்றாவது தான் மிகமுக்கிய வித்தியாசம். அம்பேத்கர் அரசின் செயல்பாட்டை முக்கியமாகக் கருதினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையை வழங்குவதில் அரசு பெரும் பங்கு வகிக்க முடியும் என்று கருதினார். காந்தியோ அதிகாரம் எங்கே குவிந்தாலும் அது ஆபத்தானது என்று சந்தேகப்பட்டார். கிராமங்கள் தனித்த சுயாட்சி பெற்று திகழ வேண்டும்,அரசுக்கான பணிகள் குறைவாக இருக்க வேண்டும் என்றார் காந்தி. நெசவாளர் கூட்டமைப்பு,ஹரிஜன் சேவக் சங்கம்,காதி கிராம தொழிற்சாலை கூட்டமைப்பு என்று சிவில் சொசைட்டி அமைப்புகள்,அரசு சாரா நிறுவனங்கள் மீது காந்தி அதிக நம்பிக்கை வைத்தார். சுய ஊக்கம்,சுய கட்டுப்பாடு ஆகியனவே செலுத்த வேண்டும். அதிகாரங்கள் அதிகம் கொண்ட அரசில்லை என்பது காந்தியின் எண்ணம். உடல்நலம்,கல்வி,நலத்திட்டங்கள் ஆகியவை அரசின் பொறுப்புகளே என்பது அம்பேத்கரின் பார்வையாக இருந்தது.

புரட்சிகரச் சிந்தனை கொண்ட தலித்துகள் காந்தியை வெறுக்கிறார்கள். தேசியவாதிகள் என்பவர்கள் அம்பேத்கரை வெறுக்கிறார்கள். பொய் கடவுள்கள் என்று அறுநூறு பக்கத்தில் நூல் எழுதிய அருண் ஷோரி அதில் இரண்டு முக்கியமான குற்றச்சாட்டுகளை அம்பேத்கர் மீது அருண் ஷோரி வைக்கிறார். தேசியவாதிகள் பக்கம் சேராமல் அவர் ஆங்கிலேய அரசின் பக்கம் இணைந்தார் என்பது முதல் குற்றச்சாட்டு (வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற பொழுது அம்பேத்கர் வைஸ்ராயின் அதிகாரக்குழுவில் உறுப்பினராக இருந்தார் ),இரண்டாவதாக அவர் காந்தியை தீவிரமாக மற்றும் சமயங்களில் கடுமையான மொழியால் விமர்சித்தார் என்று குற்றஞ்சாட்டினார்.

ஏன் அம்பேத்கர் ஆங்கிலேயர் பக்கம் நின்றார் என்று கேட்டுக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் பிராமணர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. அவர்கள் கடந்தகாலத்தில் தலித்துகளை ஒடுக்கியாண்டார்கள். விடுதலைப் பிறகு அவர்கள் கையில் அதிகாரம் வந்த பின்னும் அதையே அவர்கள் செய்திருக்கக் கூடும். ஆகவே தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் செயலாற்றிய சீர்திருத்தவாதிகள் ஜோதிபாய் புலே,ஈ.வெ.ராமசாமி மற்றும் மூங்ராம் (பஞ்சாபின் ஆதி-தர்ம் இயக்கத்தின் தலைவர் ) ஆகியோர் ஆங்கிலேய அரசு காங்கிரசை விடக் குறைந்த தீமைகளைக் கொண்டது என்று நம்பினார்கள்.

அருந்ததி ராயை சரோவர் அணை உருவாக்கம் தொடர்பாக ‘இடதுசாரிகளில் ஒரு அருண் ஷோரி’ என்று ஐம்பது வார்த்தைகள் போதுமான இடத்தில் ஐயாயிரம் வார்த்தைகள் கொண்டு எழுதும் குணத்துக்காகத் தி ஹிந்துவில் கட்டுரை எழுதினேன். அம்பேத்கர்-காந்தி மோதல் பற்றி அவர் எழுதிய கட்டுரையில் காந்தி சொன்னவற்றில் தேவையானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்தும்,அவர் சொன்னதைத் திரித்தும் குறிப்பிட்டு என் கருத்தை நிரூபிக்கிறார்.

சமூகச் சீர்திருத்தங்கள்,பெண்களுக்கு ஓட்டுரிமை,அடிமை முறை ஒழிப்பு என்று உலகம் முழுக்க நடந்த எல்லா மாற்றங்களும் மேலே மற்றும் கீழே என்று இரு தரப்பு அழுத்தத்தாலே சாத்தியமாகி இருக்கின்றன. இரண்டாயிரம் வருடங்களாகச் சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மற்ற எந்தக் காலத்தை விடவும் இப்பொழுது கூடுதல் விடுதலை (அது போதுமானதாகக் கண்டிப்பாக இல்லை என்றாலும்) பெற்றிருக்கிறார்கள். காந்திக்கு பிறகு காந்தியவாதிகள் ஜாதி என்பதையே மறந்துவிட்டார்கள். தலித்துகளில் இருந்து அம்பேத்கர் போன்ற அறச்சீற்றம்,தனிமனித நேர்மை,அறிவு கொண்ட எண்ணற்ற நாயகர்கள் எழ வேண்டும்.

லிங்கன்,லிண்டன் ஜான்சன்,காந்தி-அம்பேத்கர் :

காந்தி,அம்பேத்கர் அவர்கள் காலத்தில் எதிரிகளாக இருந்திருக்கலாம் .சமூகச் சீர்திருத்தம் நிகழ எழுச்சி இருபக்கங்களில் இருந்தும் நடைபெற வேண்டும். குற்றஉணர்ச்சிக்கு உள்ளான லிங்கன் பிரெடெரிக் டக்ளஸ் முதலியோரின் விமர்சனங்களைக் காது கொடுத்துக் கேட்காமல் போயிருந்தால் அடிமைமுறை நீக்கப்பட்டு இருக்காது. சிவில் உரிமைகள் சட்டமாக லிண்டன் ஜான்சன்,மார்டின் லூதர் கிங்கின் அறச்சக்தி மற்றும் இயக்கம் ஆகியவற்றை ஏற்காமல் போயிருந்தால் மாறியிருக்காது. தங்கள் வாழ்நாள் அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் இன்றைய வரலாற்றுப் புள்ளியில் அவர்கள் அருவருக்கத்தக்க சமூக அமைப்பை குலைப்பதில் இணையான பணியைச் செய்தார்கள் என்று புரிந்துகொண்ட காந்தி மற்றும் அம்பேத்கர் இருவரையும் இணைத்துக்கொண்டு பயணிக்காமல் போனால் மாபெரும் தவறு மற்றும் அநியாயத்தை அவ்விரு மகத்தான ஆளுமைகளுக்குச் செய்தவர்கள் ஆகிறோம்.

மாட்டு வண்டியில் ஒரு மகத்தான பாடம் :

ஒரு கதையோடு முடிக்கிறேன். ஒரே மாட்டு வண்டியில் மாண்டியாவில் காந்தி, அம்பேத்கர், விஸ்வேஸ்வரய்யா வேடம் போட்ட (முதல் இருவரின் தாய்மொழி கன்னடம் இல்லையென்று தெரியும்,மூன்றாவது நபரின் தாய்மொழி தெலுங்கு-மொழிப்பற்று மிக்க உங்களிடம் சொல்கிறேன் மொழிகளைக் கடந்தும் நேசிக்க முடியும் ) கன்னடச்சிறுவர்கள் பயணம் செய்து கொண்டிருந்ததை ஒரு விடுதலை நாளன்று பார்த்தேன். அவர்கள் வெவ்வேறு கனவுகளைக் கொண்டிருந்தாலும் ஒன்றாகப் பயணம் செய்தார்கள். காந்தியின் மனசாட்சியை உலுக்குதல்,அம்பேத்கரின் சுய மரியாதையோடு, விஸ்வேஸ்வரய்யாவின் தொழில்நுட்ப அறிவைக் கொண்டு சமூகச் சேவையாற்றல் (இவர் அம்பேத்கரின் சிந்தனையான இட ஒதுக்கீட்டை எதிர்த்தார்,ஆனால்,தொழில்வளர்ச்சிக்கு அவர் சிந்தனைகள் அவசியம் ) ஆகியன இணைய வேண்டும். இந்த உரையில் நான் காந்தியவாதியாகவே அம்பேத்கரியவாதியை விட அதிகம் தோன்றினாலும் இருவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை. நன்றி !

– Ramachandra Guha

(சங்கர் அய்யர் ஏழாவது நினைவுச் சொற்பொழிவில் ராமச்சந்திர குஹா பேசிய உரையின் தமிழாக்கம் )

ஜெயித்த பில்கேட்ஸ்,ஸ்டீவ் ஜாப்ஸ்,பீட்டில்ஸ் சொல்லாத பாடம் !


மகத்தான வெற்றி பெற்றவர்கள் யாராக இருக்கிறார்கள் என்று உங்களைக் கேட்டால் என்ன சொல்வீர்கள் ? ஜீனியஸ்கள்,கடினமான சூழலில் ஓயாமல் உழைத்து முன்னேறியவர்கள் இப்படித்தானே ? இதைத்தாண்டியும் மகத்தான வெற்றி பெற்றவர்களுக்கு வேறு பல காரணிகள் உதவியிருக்கின்றன என்று மால்கம் கிளாட்வெல் தன்னுடைய ‘outliers’ புத்தகத்தில் வாதம் செய்கிறார்.

பில் கேட்ஸ் எப்படி மைக்ரோசாப்ட் என்கிற மகத்தான சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் என்று கேட்டால் அவர் ஒரு மேதை என்று தானே சொல்வீர்கள். பீட்டில்ஸ் இசைக்குழு அத்தனை காலம் உச்சத்தில் இருந்தது இசை மன்னர்களைக் கொண்டிருந்ததால் என்று எண்ணுகிறீர்களா ? மொஸார்ட் பிறவி மேதையாகக் கலக்கினார் என்பது தொடர்ந்து நமக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆசியர்கள் ஏன் அமெரிக்கர்களை விடக் கணிதத்தில் மேதையாக இருக்கிறார்கள் ? ஏன் கொரிய விமானங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின. இவற்றுக்கு எல்லாம் வெகு சுவாரசியமாக அதே சமயம் ஆய்வு முடிவுகளோடு பதில் சொல்கிறார் மால்கம்

ரோசேட்டோ என்கிற இத்தாலி பகுதி மக்கள் அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்தார்கள். அவர்களில் யாருக்குமே அறுபது வயது வந்தும் இதய நோய் என்று ஒன்று இல்லவே இல்லை. நோய்களால் இறப்பவர்கள் என்பதே அவர்களிடையே காணப்படவில்லை. அவர்களின் உணவு பழக்கம் ஏதேனும் வித்தியாசமாக இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை ! ஜீன்கள் தான் காரணமா என்று மற்ற இடங்களில் வாழ்ந்த ரோசேட்டோ பகுதி ஆட்களைச் சோதித்தால் அவர்கள் நோயால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். சரி அதுதான் இல்லை என்றால் வேறென்ன இருக்கும் என்று தேடிப்பார்த்தார்கள். இருக்கிற நிலப்பகுதி காரணமா என்று துருவினால் அருகில் இருந்த பகுதி மக்கள் பலமடங்கு இதய நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார்கள். தங்களின் கூட்டு வாழ்க்கை,தலைமுறைகளைத் தாண்டியும் இணக்கமான உறவு என்று ஒட்டுமொத்த அவ்வூர் சமூகமும் அவர்களின் உடல்நலத்தைத் தீர்மானித்தது என்பது தான் இறுதி முடிவாக வந்தது. அது போல எப்படி ஒரு மனிதனின் வெற்றியில் வெவ்வேறு அம்சங்கள் ஆட்சி செலுத்துகின்றன என்பதை மால்கம் விளக்க நம்மை அழைக்கிறார்.

கனடாவில் ஹாக்கி அணியில் வெற்றிகரமாக இருக்கும் இளம் வீரர்களின் பட்டியலை எடுத்தால் ஒரு ஆச்சரியமான அம்சம் இருந்தது. அவர்களில் நாற்பது சதவிகிதம் பேர் ஜனவரியிலும்,30 % நபர்கள் பிப்ரவரியிலும் பிறந்திருந்தார்கள். அடுத்து மார்ச் நபர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். காரணம் என்னவென்றால் ஜனவரி ஒன்று என்பதே கனடாவில் பயிற்சியில் சேர்வதற்கான வயதை நிர்ணயிக்கும் நாள். ஆகவே,அந்த நாளுக்குக் கிட்டே பிறந்த நபர்கள் அதிககாலம் பயிற்சி பெறும் வாய்ப்பை பெற்றார்கள். இங்கே மட்டும் தான் இப்படி என்று நீங்கள் எண்ணினால் ஸாரி. உலகின் வெவ்வேறு பாகங்களில் இருந்து இதேமாதிரியான எடுத்துக்காட்டுகளை மால்கம் தந்து மலைக்க வைக்கிறார். பயிற்சி அதிகம் என்றால் ஜெயிக்கும் வாய்ப்பும் அதிகம் ! “எது கொடுக்கப்பட்டதோ அது அதீதமாக அவனிடம் இருக்கும் !” என்கிற மத்தேயு வசனத்தை ஒத்திருப்பதால் இப்படி வாய்ப்புகள் வெற்றியை தீர்மானிப்பதை மத்தேயு விளைவு என்கிறார்கள்.

பள்ளிகளிலும் முன்னமே ஒரு வகுப்பில் சேர்கிற பிள்ளைகள் பெட்டராக ஜொலிக்கிறார்களாம்.
பில் ஜாய் சன் மைக்ரோ நிறுவனத்தை நிறுவியவர்களுள் ஒருவர். சிலிகான் பள்ளத்தாக்கில் பில்கேட்ஸ் அளவுக்கு மதிக்கப்படுகிற மேதாவி. அவர் பள்ளியில்,கல்லூரியில் மேதையாக இருந்தார் என்பதையும் அவர் கணினியே கதி என்று கிடந்தார் என்றும் அவர் வெற்றிக்கான காரணங்களாகச் சாதாரண நபர்கள் சொல்வார்கள். ஜாய் நுழைந்த காலத்தில் கணினியில் அட்டைகளில் ஓட்டை போட்டே கோடிங் செய்வது நடந்து வந்தது. ஒரு தவறு என்றால் உங்கள் அட்டை மற்றவர்களின் கோடிங் எல்லாம் முடிந்த பிறகே மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும். இந்தச் சூழலில் தான் ஜாய்ப் பிறந்தார். ஆனால்,கோடிங் மூலம் நேரப்பகிர்வை கணினியில் சாத்தியப்படுத்தலாம் என்கிற புரிதல் அப்பொழுது உண்டாகி இருந்தது. அந்த வசதி அப்பொழுது தான் நுழைந்து இருந்த மிச்சிகன் கல்லூரி அவருக்குக் கற்றல் இடமாக இருந்தது. ஒரு பக் வேறு இருந்து தொலைக்கப் பீஸ் கட்டாமல் வெகுநேரம் கோடிங் செய்கிற அதிர்ஷ்டம் ஜாய்க்குக் கூடுதலாகக் கிடைத்தது. ஜாய் திறமை மிகுந்தவர்,அவருக்கு வாய்ப்புகள் வந்து சேர்ந்தன,கூடவே அவரின் பத்தாயிரம் மணிநேரத்துக்கும் மேலான உழைப்பு கனிகளைத் தந்தது.

பீட்டில்ஸ் இசைக்குழு உலகின் தலைசிறந்த இசைக்குழுவாகப் பெயர் பெற்றார்கள் என்பது தெரியும். ஹாம்பர்க் என்கிற நகரில் ஒன்றரை வருடத்தில் 270 நாட்கள் அவர்கள் இசை நிகழ்ச்சி நடத்துகிற அளவுக்கு உழைப்பும்,தேடலும் அவர்களிடம் இருந்தது. முதல் வெற்றியை அவர்கள் பெறுவதற்கு முன்னர் ஆயிரத்தி இருநூறு தடவை இசை நிகழ்வுகளை அவர்கள் நிகழ்த்தி இருந்தார்கள். மொஸார்ட் ஒழுங்கான மாஸ்டர் பீஸ் இசைக்கோர்வைகளை வாசிக்க ஆரம்பிக்க அவருக்கு இருபத்தி ஒரு வயது ஆகியிருந்தது. அதற்குள் அவரும் பத்தாயிரம் மணிநேரம் உழைப்பைக் கொட்டியிருந்தார்.

பில் கேட்ஸ் என்னென்ன வாய்ப்புகளைப் பெற்றார் என்று பாருங்கள்.காலத்தைப் பங்கிடும் பண்பு கொண்ட கணினி கொண்டிருந்த பள்ளியில் அவருக்கு இடம் கிடைத்தது. c-cubed மற்றும் isi என்று வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து கணினியில் கோடிங் எழுதவும்,நேரத்தை செலவிட்டு கற்றுக்கொள்ளவும் அவருக்கு வாய்ப்பு வாய்த்தது. வாஷிங்டன் பல்கலை அவர் நடக்கும் தூரத்தில் இருந்தது, அங்கே காலை மூன்று முதல் ஆறு மணிவரை கணினியை பயன்படுத்திக்கொள்ளும் வசதி அவருக்குக் கிட்டியது. அவர் ஹார்வார்ட் பல்கலையை விட்டு விலகிய பொழுது ஏழு வருடங்கள் தொடர்ந்து ப்ரோக்ராம் அடித்துக்கொண்டிருந்தார்.

பத்தாயிரம் மணிநேரங்களைக் கடந்து உழைப்பது என்பது வெற்றிக்கான முக்கியமான ஒரு அடிப்படையாக இருக்கிறது என்பது புரிந்திருக்கும் தானே ? இன்னுமொரு ஆச்சரியமான சங்கதியையும் பார்க்கலாம். ஸ்டீவ் ஜாப்ஸ்,பில் ஜாய்,பில் கேட்ஸ்,பால் ஆலன்,எரிக் ஸ்மிடிட் எல்லாரும் பிறந்த வருடங்கள் எது தெரியுமா ? 1955-56 ! கணினி பலமணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தும் வாய்ப்புகளைத் திறந்து வைத்த காலத்தில் அவர்கள் நுழைந்து தங்களின் உழைப்பு மற்றும் திறமையை உடன் சேர்த்துக்கொண்டு சாதித்தார்கள்.

எல்லாக் காலத்திலும் இருந்த உலகின் டாப் பணக்காரர்கள் என்றொரு பட்டியல் போட்டால் அதில் இருக்கும் டாப் டென் அமெரிக்கர்களும் (அவர்களின் அன்றைய சொத்து மதிப்பை இன்றைய மதிப்புக்கு மாற்றிக் கணக்கிடுதல் செய்யப்பட்டது ) 1830-40 களில் பிறந்தவர்கள்.இது எப்படி வாய்ப்பாக மாறியது என்று கேட்டால்,அவர்கள் இளைஞர்களாக மாறியிருந்த பொழுது அப்பொழுது தான் ரயில்வே அமெரிக்காவில் நுழைந்திருந்தது,வால் ஸ்ட்ரீட் வளர்ந்து கொண்டிருந்தது. எல்லா வாய்ப்புகளோடு இவர்களின் தேடல் மற்றும் உழைப்பு சேர வெற்றிக்கனிகள் பணமாகக் குவிந்தன.

இதே போல அதிகபட்ச IQ கொண்ட லாங்கன் போல அதிகபட்ச IQ கொண்டவர்கள் ஏன் வாழ்க்கையில் பெரிதாகச் சாதிக்கவில்லை என்பதை எண்ணற்ற ஆதாரங்களோடு மால்கம் விளக்குகிறார். வெறும் மேதமைத்தனம் மட்டுமே வெற்றிகளைப் பெற்றுத்தராது. பொறுமையாகத் தொடர்ந்து முயல்தல்,வாய்ப்புகள் அமைதல்,கச்சிதமாக இருக்கிற சூழலுக்குள் முயன்று முன்னேறல்,ஓரளவுக்கு மேதைமை ஆகியவை வெற்றிகளைப் பெற்றுத்தரும் !

அமெரிக்காவுக்கு இங்கிலாந்தில் இருந்தோ,வேறு பகுதிகளில் இருந்தோ போனவர்களில் அதிகபட்ச வன்முறை குணம் கொண்டவர்களாக இருந்தவர்கள் கால்நடைகளை வளர்த்தவர்களே ! அவர்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு நகர வேண்டி இருந்தது. மற்றவர்களுடனும்,திருடர்களுடனும் போராடி தங்களின் விலங்குகளைக் காக்க வேண்டி இருந்தது. எல்லாம் அவர்களுக்கு ஒரு கவுரவம் பற்றிய பெருமையைத் தந்திருந்தது. இந்தக் குணத்தை வேற விஷயங்களில் சிக்கல் வரும் பொழுதும் அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

இங்கிலாந்தில் இருந்து நகர்ந்த நான்கு வகையான மக்களைக் கொண்டு அமெரிக்காவில் அவர்களின் பிற்காலத்தலைமுறைகள் நடந்து கொள்வதை டேவிட் பிஷர் என்பவர் வெற்றிகரமாக விளக்கி இருக்கிறார். உங்களின் வேர்கள் உங்களின் குணங்களில் தாக்கம் செலுத்தலாம். அதுவும் வெற்றியை பாதிக்கும்.

கொரியாவில் தொடர்ந்து விமான விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. காரணம் என்னவென்று கூர்ந்து பார்த்தால் ஆங்கிலத்தில் கட்டளைகளைக் கொண்டு சேர்க்கிற பொழுது தங்களின் தலைவர் தங்களைவிட உயர்ந்தவர் என்கிற மனோபாவத்தில் தெளிவாக அவர்கள் ஆபத்தைச் சொல்ல வராதது புரிந்தது. பிடித்துப் பிழிந்தும்,நீங்கள் சமம் என்கிற எண்ணத்தை விதித்தும் வெற்றிகரமாக விபத்துக்களைத் தடுத்திருக்கிறார்கள்.

சீனர்கள் மற்றும் ஜப்பானியர்கள் ஏன் கணிதத்தில் அதிகத்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் ? ஆங்கிலத்தில் இருப்பது போல எண்களுக்கு வெவ்வேறு சிக்கலான பெயர்கள் இல்லாமல் அவற்றின் பண்பை தெளிவாகக் காட்டும் வகையில் அவரவரின் தாய் மொழியில் எண்களின் பெயர்கள் அமைந்து உள்ளன. இது அவர்களுக்கு எண்கள் பற்றிய புரிதலை பெரிதாக வழங்குகிறது. இந்த இரண்டு தேசங்களிலும் நெல் விளைவித்தல் முக்கியத் தொழில். நெல்லை விளைவிப்பது தான் உலகிலேயே கடினமான உணவுப் பயிர் சாகுபடி என்பது அதிர்ச்சியான உண்மை. வருடம் முழுக்க ஓயாமல் நீங்கள் உழைக்கையில் தான் நல்ல மகசூல் கிடைக்கும். நாற்று நட்டு அதற்குப் பிறகு பயிரை விளைவிப்பதால் உழைப்பவன் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும்.

தண்ணீர் அளவு,களையெடுப்பு ஆகியவற்றையும் கவனமாகச் செய்ய வேண்டும். இந்த அடிப்படையிலேயே ஜப்பான் மற்றும் சீனாவில் வெயில்கால விடுமுறைகள் இரண்டு மாதங்களைத் தொடுவதே அரிதாக இருக்கிறது. அமெரிக்காவில் மூன்று மாதம் வரை ஜமாய்க்கிறார்கள். இந்த நாடுகளில் நெல் உற்பத்தி கடினமான ஒன்றாக இருப்பதால் நிலச்சுவான்தார்கள் அவர்களின் தொழிலாளிகளைச் சுரண்டுதல் மேற்கோடு ஒப்பிடும் பொழுது குறைவாக இருந்து வந்துள்ளது.
ஆசியர்களே நூலகங்களில் வெளிநாடுகளில் படிக்கப்போகும் பொழுது அதிகநேரம் செலவழிக்கிறார்கள். இவை விவசாயத்தின் வேர்களில் இருந்து வருகின்றன.

சீனாவில் வியர்வையும்,ரத்தமும் தான் உற்பத்தியை அதிகரிக்கும் என்பது பழமொழியாக இருக்கிறது. ரஷ்யாவில் கடவுள் கொடுத்த வரம் என்று சொல்லி சுணங்கிப் போகிறார்கள். ஆக,கலாசாரங்கள் உங்களின் பழக்கங்களில் தாக்கம் உண்டு செய்யவே செய்கிறது.
வாய்ப்புகள்,கடின உழைப்பு,அடிப்படையான கற்றல்,திறமை,பிறக்கின்ற காலம் எல்லாமும் சேர்ந்து தனித்த நாயகர்களை உருவாக்குகிறது என்று பேசுகிற OUTLIERS வெற்றி ஒன்றும் ஒற்றைப்படையாக ஒரே நாளில் குருட்டுத்தனமாக வந்துவிடுவதில்லை என்று புரியவைக்கும்.
விலை : 399
ஆசிரியர் : மால்கம் கிளாட்வெல்
பென்குயின் வெளியீடு

இந்நூல் தமிழில் ‘ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்’ என்று Siddharthan Sundaram அண்ணனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது

சச்சின் சுயசரிதை அறிமுகம்-4 !


ச்சின் சுயசரிதை அறிமுகத்தின் நான்காவது மற்றும் இறுதி பாகம் இது. முதலிடத்தை டெஸ்ட் போட்டிகளில் தக்கவைத்துக் கொண்டது துவங்கி ஓய்வு பெற்றது வரை இந்த இறுதிப் பக்கங்களில் சச்சின் பேசியிருக்கிறார்.

முதலிடத்தை டெஸ்ட் போட்டிகளில் பெற்ற பிறகு தென் ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளை இந்தியாவிலேயே எதிர்கொள்ள வேண்டிய சவால் காத்துக்கொண்டு இருந்தது. அதற்கு முன்னதாக வங்க தேசத்துடன் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்களைச் சச்சின் குவித்தார்.

தென் ஆப்பிரிக்கத் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் சரியாக ஆடவிட்டாலும், அடுத்த இன்னிங்சில் சதமடித்தது ஸ்டெயினை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையைச் சச்சினுக்குக் கொடுத்தது. அடுத்தப் போட்டியில் சேவாக், லஷ்மண், தோனி மற்றும் சச்சின் சதமடிக்க அணி 600 ரன்களைக் கடந்து அசத்தியது. போட்டியை மழையோடு போராடி வென்ற பின்பு ஹர்பஜன் பாதி மைதானத்தைச் சுற்றி வருகிற அளவுக்கு வெற்றி உற்சாகம் தருவதாக அமைந்தது.

ஒருநாள் தொடரில் நான்கு ரன்னில் ரன் அவுட் ஆனபொழுதும் இறுதி ஓவரில் பத்து ரன்களைச் சேஸ் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் லாங்க்வெல்ட் அடித்த அற்புதமான ஷாட்டைப் பவுண்டரி போகாமல் சச்சின் தடுத்தது இந்திய அணி ஒரு ரன்னில் வெல்ல உதவியது.

பறந்தன வலிகள், பிறந்தது இரட்டைச் சதம்: குவாலியரில் நடக்கவிருந்த போட்டிக்கு முன்னர் சச்சினுக்கு உடம்பு முழுக்க வலி ஏற்பட்டது. போட்டி நடக்கவிருந்த காலை வேளையில் ஒன்றரை மணிநேரம் பிஸியோ சச்சினுக்குச் சிகிச்சை தந்தார். ஆனால், களத்துக்குள் புகுந்ததும் சச்சினின் எல்லா வலிகளும் பறந்து போயின. 175 ரன்களைத் தொடும் வரை இரட்டை சதம் பற்றிய எண்ணம் சச்சினுக்கு வரவில்லை. இறுதியில் முதலில் ஆடிய வேகத்தோடு ஆடமுடியாமல் போனாலும், இடைவெளிகள் பார்த்து அடித்தும், தோனியை ஆடவிட்டும் இறுதி ஓவரில் இரட்டை சதம் கடந்து சாதித்தார் அவர், அவருக்கு வாழ்த்திய வந்த குறுஞ்செய்திகள் அனைத்துக்கும் நன்றி சொல்லி முடிக்க இரண்டு நாட்கள் ஆயின!

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்டில் கடைசி இரண்டு விக்கெட்களுடன் சேர்ந்து லஷ்மண் அணியைக் கரை சேர்த்தார். அடுத்தப் போட்டியில் சச்சின் சத்தத்தை நாதன் ஹாரிட்ஸ் பந்துவீச்சில் தொடர்ந்து இரண்டு சிக்சர்கள் அடித்துக் கடந்தார். 214 ரன்களை அடித்த சச்சினின் ஆட்டம் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

நியூசிலாந்து அணியுடனான போட்டியின்போது ஸ்கொயர் லெக் நோக்கி ஹைதராபாத்தில் நடந்த பொழுது எல்லாம் ரசிகர்கள் எழுந்து நின்று உற்சாகப்படுத்தியது ஆடுவதற்கு இடையூறாக இருந்தது என்று பதிகிறார். தென் ஆப்பிரிக்க அணியை அவர்கள் மண்ணில் எதிர்கொண்ட முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் சுருண்டு இரண்டாவது இன்னிங்சில் போராடி ஆடிக்கொண்டிருந்த பொழுது வெளிச்சம் மங்கத்தொடங்கிய பொழுது ஸ்டெயின் சச்சினிடம், “அடித்து ஆடுங்கள்” என்றதும், “வெளிச்சம் இருந்த பொழுது இந்தப் பாய்ச்சலை காட்டியிருக்க வேண்டியது தானே?” என்று பதிலடி கொடுத்தார் சச்சின்.

டர்பனில் அடுத்தப் போட்டிக்கு சென்ற பொழுது மழை தூறியிருந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கே இது சாதகம் என்று அணியில் பரவலாகப் பேசப்பட்ட பொழுது, “இல்லை! எல்லாமும் சமமாகவே இருக்கிறது. நாம் ஜெயிக்க முடியும்” என்று சச்சின் ஊக்கப்படுத்தினார். அதற்கேற்ப 131 ரன்களுக்குத் தென் ஆப்பிரிக்க அணியைச் சுருட்டி அணி வெற்றியை பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டது.

அடுத்தக் கேப் டவுன் போட்டியில் இரண்டாவதாக இந்திய அணி ஆடிய பொழுது க்ரீசுக்கு வெளியே நின்றே சச்சின் பந்துகளைத் துவம்சம் செய்து கொண்டிருந்தார். அதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் வந்த கனவில் ஷார்ட் பிட்ச் பந்தை மார்னே மார்கல் வீசுவது போலவும், அதை கிரீஸுக்குள் இருந்து சிக்ஸருக்கு ஹூக் ஷாட் மூலம் அனுப்பிச் சதம் கடப்பது போலவும் கனவு வந்தது. அப்படியே நிஜத்திலும் நடக்கச் செய்தது. சிக்சர் மூலம் மார்கல் பந்தில் சதம் கடந்தவுடன் தோனியிடம், “இந்த ஷாட், சதம் இரண்டையும் ஏற்கனவே கனவில் அடித்துவிட்டேன்” என்றாராம்.

காயங்களோடு தயாரான கடைசிக்கனவு:
பின் தொடையை உலகக்கோப்பைக்கு முந்தைய ஒருநாள் போட்டித்தொடரில் சச்சின் காயப்படுத்திக்கொண்டார். அணியின் ஒவ்வொரு வீரரும் உடல் எடையைத் தியாகம் செய்து அணியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று சச்சின் உத்வேகப்படுத்தினார் தானே ஒரு மூன்று கிலோ இழந்து போட்டித் தொடருக்கு தயாரானார்.

2011 உலககோப்பை தன்னுடைய இறுதிக்கோப்பையாக இருக்கக் கூடும், இதை வென்றால் மட்டுமே உண்டு என்பதால் சச்சின் கவனமாக இருந்தார். யுவராஜ் சிங் இக்கட்டான மனக்குழப்பங்களில் இருந்த நிலையில் ஒரு டின்னருக்கு அவரை அழைத்து, “உனக்கு என்று இலக்குகளை வகுத்துக்கொண்டு அவற்றில் கவனம் செலுத்து. வெற்றி நமக்கே!” என்று உற்சாகப்படுத்தினார்.

வங்கதேச ஆட்டத்தில் சேவாக் நொறுக்க அணி வென்றது. பழைய மற்றும் புதிய மட்டைகளோடு ஆடிய இங்கிலாந்து போட்டியில் சச்சின் சதமடித்தாலும் ஆட்டம் டை ஆனது. தோனி தலைமையேற்று போட்டி டை ஆனால் அந்தத் தொடரின் கோப்பை அவருக்கே என்று ஆரூடங்கள் முளைக்க ஆரம்பித்தன. தென் ஆப்பிரிக்கப் போட்டியில் கடைசி ஓவரில் மண்ணைக் கவ்வியதும், “இவங்க தேற மாட்டாங்க” என்று முடிவுரை எழுதிவிட்டார்கள்.

கண்ணைமூடி பந்தை பார்த்த சச்சின்: மேற்கிந்திய தீவுகளுடனான போட்டிக்கு முன்னர் நெட்டில் பயிற்சி செய்கிற பொழுது சச்சின் ஒரு சோதனை செய்து பார்த்தார். பந்து வீச்சாளர் ஓடிவந்து பந்தை விடுவதற்குக் கையை மேலே கொண்டுவரும் வரை கவனித்துவிட்டுக் கண்ணை மூடி பந்தை ஆடுவது என்று ஆறு பந்துகளைக் கண் மூடி ஆடினார். கேரி கிறிஸ்டனிடம் இப்படிச் செய்ததைச் சச்சின் சொன்ன பொழுது, “அப்படியெல்லாம் எனக்குத் தூரத்தில் இருந்து பார்க்க தெரியவே இல்லையே சச்சின்” என ஆச்சரியப்பட்டார். சச்சின் தன்னுடைய இளம் வயதில் மழையில் ரப்பர் பந்துகளைக் கொண்டு தன்னைத் தாக்கும் வகையில் 18 யார்ட்களில் பந்து வீசச்சொல்லி பயிற்சி செய்வாராம்.

ஆஸ்திரேலியா அணியுடனான காலியிறுதியில் சச்சின் அரைச் சதம் கடந்த பின்பு கம்பீர்,  தோனி சீக்கிரம் அவுட்டாகி விடச் சச்சின் கண்களை மூடித் தரையில் படுத்தவாறு இறைவனை வெற்றிக்காக வேண்டிக்கொண்டிருந்தார். வெற்றி பெற்றுவிட்டோம் என்றதற்குப் பிறகே சச்சின் கண்களைத் திறந்தார்.

அடுத்துப் பாகிஸ்தான் அணியுடனான அரையிறுதிக்குக் காத்திருந்தார்கள். அமித் குமார் பாடிய, ’படே அச்சே லக்தே ஹெய்ன்’ என்கிற பாடலை ஓயாமல் ஒருவாரம் கேட்டு மனதளவில் தன்னைச் சாந்தப்படுத்திக் கொண்டு ஆடப் புகுந்தார். 85 ரன்களைப் பல கேட்சுகள் விடப்பட்டதன் உதவியோடு அடித்த பின்னர்ப் பாகிஸ்தானின் விக்கெட்டுகளை அணியினர் எடுத்துக்கொண்டே இருந்தார்கள். அப்ரிதி ஹர்பஜன் வீசிய ஃபுல் டாஸ் பந்தை மைதானத்துக்கு வெளியே அனுப்ப முயன்று அவுட் ஆனார். அந்த ஷாட்டைப் பத்தில் ஒன்பது முறை சிக்சருக்கு அப்ரிதி அனுப்பிவிடுவார். அன்று தவறிவிட்டது என்பது சச்சினின் கவனிப்பு. உலகக்கோப்பை முழுக்க சச்சின் சைவ உணவையே சாப்பிட்டார்.

வெற்றிக்குப் பின்பு மூன்றாவது முறையாக உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது அவர் கைவசம் வந்திருந்தது. அமீர்கான், வெற்றி பெற்ற அந்த இரவில் சச்சினை நேரில் பார்த்து வாழ்த்திவிட்டு சில கணங்கள் பேசிவிட்டு சென்றார்.

இறுதிப்போட்டிக்கு முன்னர் கடந்த உலகக்கோப்பையில் சொதப்பிய மோசமான நினைவுகள் நிழலாடின. மைக் ஹார்ன் அனைவரையும் அழைத்து எப்படிப் பூமியை எந்த மோட்டார் வாகன உதவியும் இல்லாமல் சுற்றி வந்தார் என்பதையும், வட துருவத்தை இருண்ட காலங்களில் அச்சமில்லாமல் கடந்தார் என்பதையும் விறுவிறுப்பாக விளக்கி “அதிக அழுத்தத்தில் அற்புதமான சாதனைகளை அச்சப்படாமல் செய்யலாம்” என்று புதுத் தெம்பை தந்தார். எந்த அணியும் சொந்த மண்ணில் கோப்பையை வென்றதில்லை என்கிற வரலாறு சிரித்தது.

இறுதிப்போட்டி ஆட்டத்தை பார்க்காத சச்சின், சேவாக்: ஸ்ரீசாந்த் உடல்நிலை முடியாமல், வெப்பத்தைத் தாங்க முடியாத நிலையிலும் ஹர்பஜன் மற்றும் சச்சின் உற்சாகத்தில் அன்று பந்து வீசினார். சேவாக் டக் அவுட்டாக, சச்சின் பதினெட்டு ரன்களில் ஸ்விங் ஆகாது என்று நினைத்து ஆடிய பந்தில் கேட்ச் கொடுத்து நகர அணி மீண்டும் தோற்றுவிடுமோ என்கிற அச்சம் சச்சினை ஆட்டிப்படைத்தது. அவரும், சேவாக்கும், தோனி, கம்பீர், கோலி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற காட்சியைக் காணவில்லை.

ஓரமாக அறையில் அமர்ந்து இறைவனிடம், “எங்கள் அணிக்கு எது சிறந்ததோ அதைக்கொடு” என்று வேண்டிக்கொண்டு இருந்தார்கள். பெரிய கொடுமை சேவாக்கை அவர் இருந்த நிலையிலேயே ஆட்டம் முடியும்வரை சச்சின் அமர வைத்திருக்கிறார். “நீ வென்ற பிறகு போட்டியை திரையில் நூறு முறை பார்த்துக்கொள்ளலாம். இப்பொழுது அதே இடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்” என்று சொல்லி அமரவைத்து விட்டாராம்.

காதில் பூ சூடி, கண்ணீர் சொரிந்து: யுவராஜை அழுது சச்சின் அனைத்துக்கொண்ட பின்பு அணியினர் சச்சினை தூக்கிக்கொண்டார்கள். “கீழே போட்டு விடாதீர்கள்” என்ற பொழுது பதான், “நாங்கள் கீழே விழுந்தாலும் உங்களை மேலேயே இருக்க வைப்போம்” என்றாராம். அஞ்சலி போட்டியை வீட்டிலேயே கண்டுவிட்டுக் கொண்டாடிக் கொண்டிருந்த மும்பை நெரிசலில் காரோட்டி வந்து சேர்ந்திருக்கிறார்.

அணியின் எல்லா வீரர்களிடமும் கையெழுத்தை ஷாம்பெயின் பாட்டிலில் சச்சின் வாங்கிக் கொண்டார். உடல்முழுக்கச் சாயம் பூசிக்கொண்டு சச்சினை ஊக்குவிக்கும் சுதீர் கௌதமை அந்த இரவில் அழைத்து அவருடன் படமெடுத்துக் கொண்டார் சச்சின். நள்ளிரவில் அஞ்சலி மற்றும் சச்சின் மதுவை ஊற்றி அருந்தியபடி இருவரின் காதுகளிலும் பொக்கேவில் இருந்த பூக்களைக் காதுகளில் சூடிக்கொண்டு இசைக்கு அந்த வெற்றி பொழிந்த இரவில் நடனமாடி தீர்த்திருக்கிறார்கள்.

ரப் னே பனாதே ஜோடி படத்தின் வரிகளான, “என்ன செய்வது என் நண்பனே! உன்னில் கடவுளைக் காண்கிறோம் நாங்கள்!” என்கிற வரியை கோலி, யுவராஜ், ஹர்பஜன் மூவரும் இணைந்து மண்டியிட்டு பாடி சச்சினை சங்கடப்பட வைத்தார்கள். அன்னையை அடுத்த நாள் காண வந்த பொழுது, வீட்டுக்குள் அவர் திலகமிட்டு வரவேற்றார். “இந்த முறை இறுதியாக உன்னை ஏமாற்றாமல் காப்பாற்றிவிட்டேன்” என்று சச்சின் உள்ளுக்குள் பூரித்தார்.

ஸாரி கேட்ட நடுவர்: இங்கிலாந்து தொடரில் ஜாகீர், யுவராஜ், ஹர்பஜன், சேவாக் ஆகியோர் காயத்தால் பெரும்பாலும் ஆடமுடியாமல் போனது ஒருபுறம் என்றால் இங்கிலாந்து அணி தொடர் முழுக்கச் சிறப்பாக ஆடியது. லார்ட்ஸ் மைதானத்தில் ஆடுவது எப்பொழுதுமே தனக்குச் சுலபமாக இருந்ததில்லை என்பதைச் சச்சின் ஒத்துக்கொள்கிறார். தான் உடல்நலமின்மைகளுக்கு நடுவே சச்சின் பார்மை மீட்டது போல ஆடிக்கொண்டிருந்த பொழுது தோனி அடித்த பந்து ஸ்வான் கையில் பட்டு சச்சின் நின்று கொண்டிருந்த பக்கமிருந்த ஸ்டம்ப்பை பெயர்த்தது, சச்சின் வெளியே நின்றிருந்தபடியால் அவுட் ஆனார்.

இறுதி டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் அடித்த நிலையில் தவறான அம்பையர் முடிவால் சச்சின் நூறு சதங்களைத் தொட முடியாமல் தள்ளிப்போனது. நடுவர் ராட் டக்கர் சச்சினிடம் வந்து அந்தத் தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு அவரின் நண்பர்கள் சச்சினை சதமடிக்க விடாமல் தான் தடுத்ததற்காகப் பெருங்கோபம் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லிவிட்டுப் போனார்.

சதமடிக்காமல் போனாலும் சுயநலம் தான்: மேற்கிந்திய தீவுகளுடனான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 76 ரன்கள் அடித்து அணியை வெற்றிபெற செய்த பின்னும் சச்சின் சதம் எங்கே என்று கேட்பதை விடுத்து, சச்சின் சுயநலத்துக்காக ஆடுகிறார் என்று எழுதினார்கள். “சதம் அடித்தால் தான் சுயநலம் என்கிறார்கள் என்றால் இங்கே அணியின் வெற்றிக்காக அரைச் சதம் அடித்த பொழுதும் விமர்சிக்கிறார்கள்” என்று புலம்புகிறார் லிட்டில் மாஸ்டர்.

கட்டைவிரல் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்த சூழலில் 94 ரன்களில் அவுட்டான டெஸ்ட் தொடரோடு ஓய்வெடுத்துக்கொள்ளச் சச்சின் சென்றார். ஆஸ்திரேலியா அணியுடனான தொடரில் அணியே சொதப்பிய நிலையில் சச்சின் 73, 32, 41, 80 என்று ஸ்கோர்கள் அடித்த பின்பும் சதம் தான் சச்சினுக்கு முக்கியமாகப் போனது என்று எழுதினார்கள். ஒருமுறை விக்கெட்டை பறிகொடுத்த பின்னர் ஹோட்டலுக்குச் சாப்பிடப் போய்க் கோபத்தை இரண்டு மெய்ன் கோர்ஸ் சாப்பிட்டு காட்டிய சச்சின் வருகிற வழியில் கிரெடிட் கார்டை வேறு தொலைத்துவிட்டார்!

ஐம்பது கிலோ குறைந்த சச்சின்: நூறாவது சதத்தை ஆசியக்கோப்பையில் வங்கதேசத்துடன் போராடி அடித்த சச்சின் அந்தப் போட்டியில் மூன்று பவுண்டரிகள் தொடர்ந்து வங்கதேச அணியின் அபாரமான பீல்டிங்கால் தடுக்கப்பட்டதைச் சொல்லி, அன்று அவர்கள் சிறப்பாக ஆடி வெற்றியை பறித்தார்கள் என்று சொல்கிறார். அணியோ சச்சின் சதமடித்த கொண்டாட்டத்தில் மூழ்கிப் போயிருந்தது. அந்தச் சதத்தைச் சச்சினுக்காகத் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையைத் தியாகம் செய்த அண்ணன் அஜித்துக்கு அர்ப்பணித்தார். ரமீஸ் ராஜா, “இப்பொழுது எப்படி உணர்கிறீர்கள் சச்சின்?” என்று கேட்ட பொழுது, “ஐம்பது கிலோ குறைந்தது போல லைட்டாக உணர்கிறேன்!” என்றார் சச்சின்.

நியூசிலாந்து, இங்கிலாந்து அணியுடனான தொடரில் முழுக்கச் சரியாக ஆடாமல் போனதும் இப்பொழுது ஓய்வு பெற வேண்டுமா என்று சச்சின் தன்னைத் தானே கேட்டுக்கொண்டார். பின்னர், “இன்னமும் நன்றாக ஆடுவதாகவே உணர்கிறாய். அடுத்த உலகக்கோப்பை வரை ஆடும் அளவுக்கு உன்னால் போகமுடியாது. ஆகவே, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுக” என்று மனது சொன்னபடி செய்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா உடனான தொடரில் 81 ரன்களைச் சென்னையில் அடித்துச் சிறப்பாகத் துவங்கினாலும் அடுத்தடுத்த போட்டிகளில் சச்சின் பெரிய ஸ்கோர்கள் அடிக்காமலே அவுட் ஆனார்.

தென் ஆப்பிரிக்கத் தொடரோடு 200வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த பொழுது இரண்டு டெஸ்ட் போட்டிகளை இந்தியாவில் கிரிக்கெட் வாரியம் மேற்கிந்திய தீவுகளோடு அறிவித்தது. சச்சின் வாரியத்திடம் இரண்டாவது டெஸ்ட் போட்டியை மும்பையில் வைக்கக் கோரிக்கை வைத்தார். அவரின் அன்னை அதுவரை அவர் ஆடி நேரில் பார்த்ததே இல்லை என்பதால் அன்றாவது அதைச் செய்ய வேண்டும் என்கிற விருப்பத்தால் அப்படிக் கேட்டுக்கொண்டார்.

அழைத்த தந்தை, அழுத மகன்: அர்ஜூன் அப்பொழுது தென் ஆப்பிரிக்காவில் இருந்தான், அவனுக்குப் போனில் அழைத்துத் தான் ஓய்வு பெறப் போவதை சச்சின் சொன்னார். சில நிமிடங்கள் கனத்த மவுனம். போன் வைக்கப்பட்டது. மகன் அழுது கொண்டிருக்கிறான் என்று தகப்பன் சச்சினுக்குத் தெரியும். மீண்டும் அர்ஜூனே அழைத்த பொழுது சச்சினுக்கு வார்த்தைகள் வரவில்லை. அர்ஜூன் தென் ஆப்பிரிக்காவில் தன்னுடைய நாட்கள் எப்படியிருக்கின்றன என்று மட்டும் பேசிவிட்டு அழைப்பை கட் செய்தான்.

ஓய்வு முடிவு தெரிந்த அன்று வீட்டைச் சுற்றி பலர் கூடிவிட்டார்கள். மும்பை கிரிக்கெட் அமைப்பின் மைதானத்தில் இருந்த எல்லாப் பணியாளர்களைச் சந்தித்து நன்றிகள் சொல்லி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அன்னை அமர வேண்டிய வசதிகளை எம்.சி.ஏ. அதிகாரிகளுடன் பேசி பெற்றுக்கொண்ட பின்பு இறுதியாக ரஞ்சிப் போட்டியில் ஆடினார் சச்சின். இறுதி இன்னிங்சில் 79 ரன்கள் அடித்து அணி வெற்றி பெறுவதை இறுதியாக ஒருமுறை உறுதி செய்தார்.

இறுதி முறையாக ஈடன் கார்டன்ஸ்: அருமையாக இரண்டு ஷாட்கள் ஆடிய பின்பு தவறான எல்பிடபிள்யூ முடிவால் சச்சின் ஆட்டமிழந்த அந்தப் போட்டியை அவருக்குச் சொல்லாமலே அஞ்சலி காண வந்து சேர்ந்திருந்தார். மூன்றே நாட்களில் போட்டி முடிந்தது. கொல்கத்தா வாரியம் சச்சினின் மெழுகு சிலையை நிறுவியிருந்தது. கொல்கத்தாவில் இருந்து கிளம்பும் பொழுது விமானத்தில் தான் யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும் என்கிற பட்டியலை கைப்பட எழுதிக்கொண்டார். இன்னும் பத்தே நாளில் பலவருட பந்தம் முடிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டார்.

தாஜ்மகால் பேலஸ் ஹோட்டலின் எல்லா மாடியிலும் சச்சினின் போஸ்டர்கள், படங்கள் தொங்கிக்கொண்டு இருந்தன. சச்சின் படம் போட்ட டி-ஷர்ட்களை அணியே அணிந்து கொண்டது. இறுதி டெஸ்ட் நவம்பர் 14 அன்று துவங்கியது. அன்னை தெரசாவுக்குப் பிறகு உயிருடன் இருக்கும் பொழுதே அரசு அஞ்சல் தலை வெளியிட்டது அவருக்கு என்கிற செய்தி வந்து சேர்ந்ததும் பேச்சற்று நின்றார்.

அம்மாவால் ஆடமுடியாமல் திணறிய சச்சின்: அணியினரிடம் அணியை முன்னிறுத்தி ஆடுங்கள், தேசத்தின் கனவுகளைச் சுமக்கிறீர்கள் என்று நினைவில் கொள்ளுங்கள் என்று இறுதியாக ஒருமுறை உற்சாகப்படுத்தினார். மூன்றரையை மணி கடந்திருந்தது. இந்திய அணி 77-2 என்று ஸ்கோருடன் இருந்தது. சச்சின் ஆடப்புகுந்தார். உடல்நலமில்லாத அன்னை பார்த்துக்கொண்டு இருந்தார். எல்லாரும் சச்சின் சச்சின் என்று மந்திரம் போல உச்சரித்துக் கொண்டு நின்றார்கள். ஒவ்வொரு ரன்னிலும் சச்சின் திளைத்தார். ஆனால், அன்றைய தினத்தின் இறுதி ஓவரில் சச்சினின் அம்மாவை மைதானத்தின் பெரிய திரையில் காட்டினார்கள். அவரோ இப்படி மஞ்சள் வெளிச்சம் பட்டுக் கூச்சப்பட்டார். அவரின் நாக்குச் சங்கடத்தில் வெளியே வந்துவிட்டது. மைதானத்தில் இருந்த அனைவரும் அந்த அன்னைக்காக எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினார்கள். சச்சின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவுட்டாகாமல் நின்றார்.

அர்ஜூன் அண்டர் 14 போட்டியில் ஆடப் போக வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. யுவராஜ் அவனுக்கு லிப்ட் கொடுத்து போட்டியைக்காண அழைத்து வந்திருந்தது சச்சினுக்கு இன்ப அதிர்ச்சி. ஆடிக்கொண்டிருக்கும் பொழுது தான் பால் பாயாக தன்னுடைய மகன் நிற்பதை அவர் கண்டார். அடுத்த நாள் பந்தை கட் செய்ய முயன்று சமியிடம் 74 ரன்களில் அற்புதமான கேட்ச்சில் அவுட்டாகி வெளியேறிய பின் என்ன தவறு செய்தார் என்பதை அர்ஜூனுடன் விவாதித்தார்.

சென்று வாருங்கள் சச்சின்: மூன்றாவது நாளில் அணியை வழிநடத்தும் பொறுப்பைச் சச்சினிடம் தோனி கொடுத்தார். “இந்த ஸ்டம்ப் எனக்கு வேண்டும்” என்று கடைசி விக்கெட் விழுந்ததும் சச்சின் சொன்னார். தோனி அவருக்கு நகர்கிற மரியாதையை அணியினரோடு இணைந்து கொடுத்தார். ஒரு பத்து நிமிடங்கள் சச்சின் கண்ணீர் விட்டு அழுதார். யார் கண்களையும் பார்க்காமல் அழுது கொண்டே கைகுலுக்கினார். லாரா சச்சினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள அறைக்கு வந்திருந்தார்.

மைக்கை வாங்கிக்கொண்டு சென்னையில் சிறப்புத் திறன் கொண்ட குழந்தை ஒருவர் அவருடைய பந்து வீச்சில் மூன்று பந்துகளை ஆடிய கணத்தை நெகிழ்வோடு சச்சின் பகிர்ந்து கொண்டு, எல்லாருக்கும் நன்றிகள் சொன்னார். பிட்ச்சுக்கு இறுதி முறையாக வணக்கம் செலுத்தினார் அவர்.
கோலி சச்சினின் அறைக்கு வந்தார்; அவர் கண் முழுக்கக் கண்ணீர், “என் அப்பா சிறப்பாக ஆடவேண்டும் என்று கட்டிவிட்ட கயிறுகள் இவை. மிகவும் நெருக்கமான யாருக்காவது அதைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். நீங்கள் தான் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று சச்சினின் கையில் கட்டிவிட்டு காலைத் தொட்டு கும்பிட்டுவிட்டு சச்சின் அழக்கூடும் என்று முன்னரே விடைபெற்றார்.

மாலையில் அழைத்த மன்மோகன்: மாலை மூன்று மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்திருந்தது. மன்மோகன் சிங் அழைத்திருந்தார். “இருபத்தி நான்கு வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துகள். உங்களுக்குத் தேசத்தின் மிக உயரிய பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்கிறது” என்றார். சச்சின் எல்லாக் கடவுள்களையும் அஞ்சலி வைத்திருக்கும் இருக்கைக்கு அழைத்துப் போய்க் கைகளை இருக்கையின் மீது வைத்து, “நீ ஒரு பாரத ரத்னாவை பார்த்துக்கொண்டிருக்கிறாய்” என்றார்.

இறுதிவரை வெல்டன் என்று சொல்லாத அச்ரேக்கர் இறுதியில் பாரத ரத்னா வென்றதும் “வெல்டன் மை பாய்” என்றுவிட்டார். சச்சினின் தந்தையை அவரின் சொந்த வீட்டில் வைத்து அழகு பார்க்க வேண்டும் என்கிற கனவு நினைவாகவே இல்லை. பதினொரு வயதில் ஆட ஆரம்பித்த சச்சினுக்கு அவரின் அப்பா சொன்ன அறிவுரை தான் எப்பொழுதும் செலுத்தியது, “உன் கனவுகளை விடாமல் துரத்து. வெற்றிக்கு குறுக்கு வழிகள் தேடாதே. பாதை கடினமானதாக இருக்கும், இருந்தும் துவளாதே”. இதுதான் இருபத்தி இரண்டு “யார்ட்”களுக்கு நடுவே நிகழ்ந்த சச்சினின் இருபத்தி நான்கு வருட கிரிக்கெட் வாழ்க்கை.

சச்சின் சுயசரிதை அறிமுகம் -3 !


ச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையான ‘பிளேயின் இட் மை வே’ புத்தக அறிமுகத்தின் மூன்றாவது பாகம் இது. சர்ச்சைகள் பலவற்றுடன் இந்த  பக்கங்கள் அமைந்திருக்கின்றன. டிராவிட் டிக்ளேர் செய்தது, கிரேக் சேப்பல் மீதான காட்டம், ஹர்பஜன் சிங் மீதான குற்றச்சாட்டு என்று அனல் பறக்கும் பகுதிகள் இவை…

2003 உலகக்கோப்பைக்கு இந்திய அணி போவதற்கு முன் நியூசிலாந்து தொடரில் விளையாடியது. அங்கே விளையாடிய இரண்டு டெஸ்ட்களிலும் தோல்வி என்பது ஒருபுறம் என்றால், ஒரு போட்டியில் மூன்றே நாட்களில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்றிருந்தார்கள். அடுத்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 100 ரன்னுக்குள் அணி ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் ஆஷிஷ் நெஹ்ரா ஒரு அரிதிலும் அரிய சாதனை புரிந்தார். ஒரே நாளில் இரண்டு இன்னிங்சிலும் பேட் மற்றும் பந்து வீசுகிற பெருமை அவருக்கு எதிரணியும் 94 ரன்களில் சுருட்டப்பட்டதால் ஏற்பட்டது. 2-5 என்று ஒருநாள் போட்டியையும் இந்திய அணி இழந்தது.

மூன்று காயங்கள், மூன்றாவது இடத்தில் ஆடச்சொன்ன கங்குலி: உலகக்கோப்பைக்கு தயாரான காலத்தில் கணுக்காலில் காயம், விரலில் பெரிய காயம், கூடவே பின்னந்தொடையில் பிடிப்பு என்று சச்சினுக்கு எக்கச்சக்க சோதனைகள். கணுக்கால் காயம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், காலின் பெரும்பாலான மேற்பகுதி சதை கட்டை கழட்டும் போது கூடவே ஒட்டிக்கொண்டு வருகிற அளவுக்கு ஆழமாக இருந்தது. பயிற்சி தருணங்களில் பெரும்பாலும் கலந்து கொள்ளாமலே தவிர்த்த சச்சினை மூன்றாவது வீரராக களமிறக்க அணியில் பெரும்பான்மையானோர் மற்றும் கங்குலி விரும்பினார்கள். சச்சின், அணி என்ன சொன்னாலும் தயார் என்றாலும் தனியாக சந்தித்த ஜான் ரைட் இந்த திட்டம் ஓகேவா என்று நேராக சொல்ல சொன்னதும், “காயங்கள் இருந்தாலும் முதலில் ஆடி அடித்து துவைக்கவே விருப்பம்” என்று சச்சின் சொல்ல கங்குலியை அதை ஏற்க வைத்தார் ஜான் ரைட்.

ஆஸ்திரேலியா அணியுடன் உலகக்கோப்பையில் லீக் ஆட்டத்தில் படுதோல்வி அடையவே வீரர்கள் மீது கடுமையான விமர்சனமும், வீடுகள் மீது தாக்குதலும் நடக்க சச்சின் அமைதி காக்கச்சொல்லி அறிக்கை விடுகிற அளவுக்கு போனது. குட்டி குட்டி அணிகளை அடித்த பின்பு இங்கிலாந்து காத்துக்கொண்டு இருந்தது. காடிக் இந்திய அணியை உசுப்பேற்றும் சங்கதிகளை சொல்லிக்கொண்டு இருந்தார். அதைப்படித்த இந்திய வீரர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். சச்சினுக்கு செய்தித்தாளை விளையாடும் காலங்களில் படிக்கும் பழக்கம் இல்லாததால் விஷயம் தெரியாது. காடிக் ஷர்ட் பந்தை வீசியதும் சிக்சருக்கு தள்ளினார் சச்சின். அடுத்த பந்து புல்லாக வரவே அதையும் பவுண்டரிக்கு தள்ளினார். பிளின்ட்டாப் பிரமாதமாக பந்து வீசி அணியின் ஸ்கோரை குறைத்தாலும் நெஹ்ரா பயங்கரமாக பந்து வீசி வெற்றியை உறுதி செய்தார். அடுத்த போட்டி பாகிஸ்தான் அணியுடன்.

ஒரு கோப்பை ஐஸ்க்ரீம், ஓயாத வெற்றி: பாகிஸ்தான் அணியுடனான போட்டி தான் இந்திய ரசிகர்களுக்கு இறுதிப்போட்டி. இந்த போட்டியில் வென்ற பிறகு இந்திய அணி இறுதிப்போட்டியில் தோற்றாலும் அவர்கள் மன்னித்து விடுவார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். 273 ரன்கள் அடித்த பிறகு ஒரு டீம் மீட்டிங் வைக்கலாமா என்று கங்குலி கேட்டார். சச்சின், “என்ன செய்ய வேண்டும் என்று எல்லாருக்கும் தெரியும். வேண்டாம்” என்றார்.

யாருடனும் பேசாமல், எதுவும் உண்ணாமல், “நடுவர்கள் களத்துக்குள் நுழைந்ததும் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு காதுகளில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு ஒரு கப்பில் நிறைய ஐஸ்க்ரீம், ஒரு வாழைப்பழம் ஆகியவற்றை சுவைத்து சாப்பிட்டுவிட்டு ஐஸ்க்ரீம் சுவை நாக்கின் நுனியில் இருக்க ஆடக்கிளம்பினார் சச்சின்.

சேவாக் எப்பொழுதும் ஆடத்துவங்கையில் அன்று மட்டும் சச்சின் ஆரம்பித்து வைத்தார். முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் பறந்தன. இரண்டாவது ஓவர் அக்தர் வீச, நிறைய வைட்கள் வீசப்பட்ட அந்த ஓவரில் சிக்சர், பவுண்டரி என்று தூள் பறந்தது. வக்கார் பந்து வீச வந்ததும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்று பாகிஸ்தான் வீரர்களுக்கு புரியும் வகையில் இந்தியில் தொடர்ந்து உற்சாகமாக பேசிக்கொண்டே ஆடி அடித்து கலக்கினார்கள். பிடிப்பு ஏற்பட்ட அதீத வலி தர சச்சின் சதமடிக்காமல் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து ஆடவந்த யுவராஜ் மற்றும் டிராவிட் கப்பலை கரை சேர்த்தார்கள்.

கண்ணீர் போக்க மழையே கருணை காட்டு- கடவுளை வேண்டிக்கொண்ட சச்சின்: பாகிஸ்தான் அணியுடன் ஏற்பட்ட பிடிப்பு சரியாக வேண்டும் என்று எடுத்துக்கொண்ட பானங்கள் மற்றும் ஜூஸில் கலந்து குடித்த உப்பு எல்லாம் வயிற்றை கலக்கி சச்சினை இலங்கையுடனான போட்டியில் சோதித்தது. ஆனாலும், வயிறு வலியோடு 97 ரன்கள் அடித்தார். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. அடித்து ஆடலாம் என்று முயன்று சச்சின் கேட்ச் ஆனார். நடுவில் மழை பெய்தபோது சச்சின் 97. தென் ஆப்பிரிக்க தொடரில் மழை பெய்து ஆட்டம் ரத்தானது போல ஆகவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டார். ஆனாலும், அணி தோற்றது. தங்கத்தால் ஆன பேட் அவருக்கு பரிசளிக்கப்பட்டது பற்றிய உணர்வே இல்லாத அளவுக்கு தோல்வி அவரை பிடுங்கித்தின்றது. ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி அடுத்து ஆடப்போன தொடரில் தொடர்ந்து சச்சின் சொதப்பிக்கொண்டே இருந்தார். எம்சிஜி மைதானத்தில் நடந்த போட்டியிலாவது சச்சின் அடித்து ஆடுவார் என்று அஞ்சலி அமைதியாக பார்க்க வந்திருந்தார். பந்து எட்ஜ் ஆகி கில்கிறிஸ்ட் கைக்குப் போவதை தானே பார்த்து அவுட்டானார். அடுத்த இன்னிங்சில் கங்குலியை முன்னரே களமிறங்க சொல்லி கேட்டுக்கொண்டதால் ஓரளவிற்கு ஆடினார் சச்சின். அடுத்த போட்டி ஸ்டீவ் வாக்கின் இறுதிப்போட்டி!

சீறிப்பாய்ந்த சிட்னி டெஸ்ட்: சிட்னியில் நடந்த அந்த போட்டியில் பந்து வீச்சாளர்களை தாக்கி ஆடுவதை விடுத்து, சச்சினை இயல்பான ஆட்டத்தை அண்ணன் அஜித் ஆடச்சொன்னார். கவர் டிரைவ் ஆட முயன்றே பெரும்பாலும் அதற்கு முந்தைய போட்டிகளில் அவுட்டாகி இருந்தபடியால் ஒரே ஒரு ஷாட் கூட ஆடிய பத்து மணிநேரத்தில் அடிக்காமல் கட்டுப்பாடாக சச்சின் ஆடினார். அவரை ஆஸ்திரேலியா அணியினர் ஜோக்குகள் சொல்லி வெறுப்பேற்றினாலும் அமைதியாக சச்சின் ஆடினார். அந்த இன்னிங்சின் போது முதல் நாள் மாலை ஒரு மலேசிய உணவகத்துக்கு சென்று நூடுல்ஸ், சிக்கன் மற்றும் சில டிஷ்கள் ஆர்டர் செய்தார். அன்று அவுட்டாகாமல் 73 ரன்கள் வரவே அடுத்த இரண்டு நாட்களும் அஞ்சலியுடன் அதே டேபிளில் அதே இடத்தில் அதே ஆர்டர்களை செய்து சாப்பிட்டார் சச்சின். அதற்கு பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “உங்களை மீடியாக்கள் இனி அவ்வளவு தான்” என்று எழுதினார்கள் தெரியுமா என்று கேட்கப்பட்ட போது, “அது எதையும் நான் படிப்பதில்லை” என்ற சச்சின், அவர் 241 அடித்த பின்பு புகழ்ந்து எழுதியதையும் படிக்கவில்லை. இரண்டுமே ஒன்றுதான் என்பதே தன்னுடைய பாணி என்கிறார்.

அடுத்த இன்னிங்சில் டிராவிட் மற்றும் சச்சின் ஆடிக்கொண்டிருந்த போது டிக்ளேர் செய்யலாமா என்று கங்குலி கேட்டு அனுப்ப, “துணைக்கேப்டன் டிராவிட் தான் சொல்லவேண்டும்” என்று சொல்ல தான் டிராவிட் நன்றாக ஆடிக்கொண்டிருந்தபடியால் பொறுமையாக செய்துகொள்ளலாம் என்று சொன்னார். போட்டி இறுதியில் டிராவில் முடிந்தது.

இன்சமாமுக்கு வலை விரித்துப் பிடித்த சச்சின்: பாகிஸ்தான் தொடரில் இன்சமாம் உல் ஹக் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை தலைக்கு மேலே தூக்கி அடித்து சிறப்பாக ஆடுவார் என்பதால் இறுதி ஒருநாள் போட்டிக்கு முன்னர் முரளி கார்த்திக்கிடம் சொல்லி மெதுவாக பந்து வீசச்சொல்லி போட்டிக்கு முன்னரே சொல்லிவிட்டார். இன்சமாமுக்கு நேராக லாங்ஆனில் நின்று கொள்வது, அவர் ஆட ஆரம்பித்ததும் சைட்ஸ்க்ரீன் நோக்கி நகர்ந்து கொள்வது என்றும் திட்டம் தீட்டப்பட்டது. இன்சமாம் அதை கவனிக்காமல் அடித்து கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஏன் இப்படி செய்தாய் டிராவிட்?: முல்தான் டெஸ்ட் போட்டியில் சேவாக் 300 ரன்களை கடந்த பிறகு சச்சின் 150 ரன்களை கடந்து ஆடிக்கொண்டிருந்தார். ரமேஷ் பவார் சச்சினிடம் வந்து ஆட்டத்தை சீக்கிரமாக முடிக்கப்பாருங்கள் என்று இரண்டாவது நாளின் ஆட்டத்தில் இறுதி செஷனின் ஆரம்ப அரைமணிநேரத்துக்கு பின்னர் சொன்னார். விலகி பல்வேறு இடங்களில் நிற்கும் பாகிஸ்தான் அணியின் முன் அவ்வளவுதான் அடிக்க முடியும் என்பது சச்சினின் வாதமாக இருந்தது. “எப்படியும் பாகிஸ்தானுக்கு 15 ஓவர்கள் தந்துவிடலாம்” என்று முடிவு செய்துகொண்டு அவர் ஆடினார். யுவராஜ் அவுட்டாகி விட, சச்சின் இரட்டை சதமடிக்க 6 ரன்கள் மட்டுமே தேவை என்கிற சூழலில் அடுத்து பார்த்தீவ் களம் புகுந்தார். ரமேஷ் பவார் தகவல் சொல்லிவிட்டு போனபிறகு சச்சினுக்கு ஒரே ஒரு பந்து கூட ஆட கிடைக்கவில்லை. அப்போது கங்குலிக்கு பதிலாக மாற்று கேப்டனாக இருந்த டிராவிட் டிக்ளேர் செய்தார். உள்ளே அறைக்கு போனதும் ஜான் ரைட் மற்றும் கங்குலி தாங்கள் அந்த முடிவில் பங்கேற்கவில்லை என்று மன்னிப்பு கேட்டார்கள். சஞ்சய் மஞ்சரேக்கர் அருமையான முடிவு அது என்று சச்சினிடம் சொன்ன போது பொரிந்து தள்ளிவிட்டார் அவர். டிராவிட், சச்சின் அறைக்கு வந்து அணியின் நலனுக்காகவே அவ்வாறு செய்ததாக சொன்னபோது, “ஒரே ஒரு ஓவர் தானே எனக்கு தேவைப்பட்டிருக்கும். நாம் முன்னரே திட்டமிட்டபடி தேநீர் இடைவேளைக்கு பின்னர் வெகு சீக்கிரமே அவர்களை ஆடவைத்திருக்கலாம். இது ஒன்றும் நான்காவது நாளில்லையே ?” என்று கேட்டார்.

நான்காவது நாள் சிட்னியில் மாலையில் சதத்தை நோக்கி டிராவிட் நகர்ந்தபோது கங்குலி மூன்று முறை தகவல் அனுப்பியும் தொடர்ந்து டிராவிட் ஆடியதை சச்சின் அப்போது நினைவுபடுத்தினார். “இத்தோடு இதை முடித்துக்கொள்வோம். இது நம் உறவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதே சமயம் கொஞ்ச நேரம் என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள்” என்று மட்டும் சொன்னார்.

படவா யுவராஜ்: நான்கு வருடம் கழித்து மொகாலியில் கம்பீர் மற்றும் யுவராஜ் இரண்டு பேரும் சதமடிக்க வாய்ப்பு இருந்த போது தோனி டிக்ளேர் செய்ய எண்ணிய போது சச்சின் தடுத்து அவர்கள் ஆடட்டும் என்று அனுமதித்தார். ஆனால், இருவரும் சதமடிக்கவில்லை, “படவா! உன்னை உதைக்கப்போறேன். சான்ஸ் வாங்கிக்கொடுத்தும் 86 இல் ரன் அவுட் ஆகிட்டு வர்றியா நீ?” என்று யுவராஜை கடிந்து கொண்டார்.

முல்தான் போட்டியில் மொயின்கானிடம் சவால் விட்டு அப்படியே அவரின் விக்கெட்டை சச்சின் “சிக்ஸர் அடிக்கிறேன் பார்” என்று அவர் சவால்விட்டும் தூக்கியிருக்கிறார்.

முட்டியில் திடீரென்று வலி ஏற்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணியுடனான இறுதி டெஸ்ட் போட்டியில் வான்கடேவில் டிராவிட்டுடன் இணைந்து ஆடி வெற்றிபெற உறுதி புரிந்தார். அந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முரளி கார்த்திக் அதற்கு பிறகு பந்து வீச இந்திய அணிக்கு தேர்வாகவேயில்லை.

முறிந்த முட்டி, முடிந்துவிடுமா கிரிக்கெட் வாழ்க்கை?:

முட்டியில் அறுவை சிகிச்சை செய்த பின்னர், சச்சின் ஐந்து மாதங்கள் வரை மட்டையை பிடிக்க முடியாது என்ற பொழுது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா இறைவனே என்று உள்ளுக்குள் புழுங்கியபடி பிளாஸ்டிக் மட்டையை கொண்டு வீட்டில் தொங்கிக்கொண்டிருந்த பந்தை அடித்து ஏக்கம் பொங்க காத்துக்கொண்டு இருந்திருக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து இலங்கை அணியுடனான போட்டியில் அடித்த முதல் இரு ரன்களையும் இரண்டு பவுண்டரிகளாக துவங்கிய போது மீண்டும் ஆடவாய்ப்பு கொடுத்ததற்கு இறைவனுக்கு நன்றி சொன்னார் சச்சின். 93 ரன்கள் அடித்திருந்தார். அடுத்த டெஸ்ட் போட்டியில் கவாஸ்கரின் சாதனையை சச்சின் கடந்தார். அப்பொழுது பெரும்பாலும் வெற்றியை சத்தம் போட்டுக் கொண்டாடாத சச்சின் அதை செய்தார்.

மீண்டும் காயம் ஏற்பட்டு தோள்பட்டை காயத்தில் இருந்து அறுவை சிகிச்சை செய்து மீண்டுவந்த பின்னர் 141 ரன்களை அடித்ததோடு காயம் பட்டு மீண்டவன் என்பதால் அவரிடம் தட்டிவிட்டு ரன் போவார்கள் என்று கணித்து ஒரு ரன் அவுட் எடுத்து தருகிறேன் என்று சொல்லி டாமியன் மார்ட்டினை அதேபோல அவுட்டாக்கவும் செய்தார்.

சே சேப்பல் : உலகக்கோப்பை வந்தது. சச்சினை மெதுவாக மற்றும் கீழாகவே பந்து வரப்போகும் மேற்கிந்திய தீவுகளில் மிடில் ஆர்டரில் இறங்கச்சொல்லி அணி கேட்டுக்கொண்டது. ஆனால், பந்துகள் எகிறி வந்தன. இரண்டுமுறை இன்சைட் எட்ஜ் ஆகி கேட்ச் மற்றும் போல்ட் ஆகி அணியின் தோல்விக்கு தானும் காரணமானார் சச்சின். சச்சின் மற்றும் இதர வீரர்களின் அர்ப்பணிப்பை கிரேக் சேப்பல் மற்றவர்களை போல மீடியா முன்னால் கேள்விக்கேட்க ஆரம்பித்தார். எண்டுல்கர் என்று இதழ்கள் தலைப்பு கொடுத்தன. வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஓபனிங் செய்ய வேண்டும் என்று சேப்பல் ஒருமுறை சொன்ன போது “அதை நான் ஆரம்பகாலத்தில் செய்து தோற்றுப்போனேன்” என்று அவர் மறுக்க “முப்பத்தி இரண்டு வயதுக்கு பின்னர் அணிக்குள் வருவது சுலபமில்லை” என்று அவருக்கு சேப்பல் எச்சரிக்கை தந்தார்.

கிரேக் சேப்பல் எல்லா மூத்த வீரர்களையும் மொத்தமாக பேக் செய்ய வாரியத்திடம் பேசியதோடு நில்லாமல் உலகக்கோப்பைக்கு சில மாதங்கள் முன்னர் வீட்டுக்கு வந்து அணித்தலைவர் பொறுப்பை சச்சின் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “வெற்றி பெற்றால் மீடியா முன்னர் தான் தோன்றுவதும், தோற்றுப்போனால் வீரர்களை அவமானப்படுத்துவதும் என்று செயல்பட்ட அவர் ரிங் மாஸ்டர் போலவே விளங்கினார், என் கிரிக்கெட் வாழ்க்கையின் மிக மோசமான நாட்கள் அவை” என்பது சச்சினின் குமுறல்.

கிரேக் சேப்பலின் சகோதரர் இயான் சேப்பல் சச்சினை சீக்கிரம் ஓய்வு பெறுக என்று நக்கலடித்து எழுதியதை இந்திய இதழ் ஒன்று தலைப்பு செய்தியாக்கியதை குறிப்பிட்டு இதே போல ஒரு இந்தியர் ஆஸ்திரேலிய வீரர் பற்றி எழுதினால் ஆஸ்திரேலிய இதழ்கள் வெளியிடுமா? என்று கேட்கிறார். கிரேக் சேப்பல் பற்றி வெகு காட்டமாக இயான் சேப்பலிடம் பேசியதோடு, “என் ஆட்டம் இன்னமும் முடிந்துவிடவில்லை இயான்! எதையும் மாற்றிக்கொண்டும் நான் ஆடவில்லை. அப்படியே இருக்கிறேன்” என்று எகிறியபோது இயான் ஒருமாதிரி ஆகிப்போனாராம்.

நள்ளிரவில் வந்த ரகசிய அழைப்பு: அந்த உலகக்கோப்பை தோல்விக்கு பின்னர் விவியன் ரிச்சர்ட்ஸ் நள்ளிரவில் சச்சினை அழைத்து, “சச்சின், நீங்கள் இன்னமும் வெகுகாலம் ஆடுவீர்கள். இன்னமும் கிரிக்கெட் உங்களிடம் பாக்கி இருக்கிறது. சோர்ந்து விடாதீர்கள்” என்று உற்சாகப்படுத்தியது திருப்புமுனையாக அமைந்தது. சைமன் டாஃபெல் இங்கிலாந்தில் சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்தற்கு மன்னிப்பு கேட்டார். அவர் அதற்கு முன்னர் தன் கால்களை சில இன்ச் நகர்த்தி ஆடிய போது உங்களிடம் எதோ வித்தியாசமாக காண்கிறேன் என்று கச்சிதமாக சொல்கிற அளவுக்கு கூர்மையாக கவனிக்கிற திறன் கொண்டவராக இருந்தார் என்று பதிகிறார்.

ஜாகீர் அந்த தொடரில் பேட் செய்ய வந்தபோது யாரோ இங்கிலாந்து வீரர் ஜெல்லி பீன்ஸ்களை சிதறி இருக்கிறார். அதை வீசிவிட்டு மீண்டும் ஜாகீர் ஆடவந்த போதும் அவை மீண்டும் விழுந்து கிடந்தன. கெவின் பீட்டர்சனிடம் கத்திவிட்டு விறுவிறுப்பாக அந்த போட்டியில் பந்து வீசிய ஜாகீர்கான் இந்திய அணியின் வெற்றிக்கு 5 விக்கெட்கள் கைப்பற்றி வித்திட்டார்.

நிறவெறியைத் தூண்டவில்லை ஹர்பஜன்-சாட்சியான சச்சின்:
மெல்பர்னில் நடந்த முதல் போட்டியில் சரியாக ஆடாமல் தோற்றாலும் அடுத்த போட்டிக்கு அணி தயாரானது. சைமண்ட்ஸ் மற்றும் ரிக்கி பாண்ட்டிங் தெளிவாக அவுட் ஆனபோதும் அந்த விக்கெட்களை நடுவர்கள் கொடுக்கவில்லை. அதிலும் சைமண்ட்ஸ் பேட்டில் பந்து பட்ட சத்தம் பார்வையாளர்கள் வரை கேட்டும் பக்னர் பாடம் செய்த மிருகம் போல நின்று கொண்டிருந்தார். இந்தியா ஆடியபோது ஹர்பஜன் அரைசதம் கடந்த பின்பு தொடர்ந்து சைமண்ட்ஸ் வம்புக்கு இழுத்தார். ஹர்பஜன் சைமண்ட்ஸ் தாயை இழுத்து திட்டுவதை ரொம்ப நேரம் கடுப்பேற்றிய பின்னர் செய்திருக்கிறார். சைமண்ட்சை குரங்கு என்று ஹர்பஜன் திட்டியதாக புகார் கொடுக்கப்பட்டது. அவருக்கு தடை விதிக்கப்பட்டதும் உடனிருந்த சச்சின் உட்பட அனைவரும் ஒட்டுமொத்த தொடரையே புறக்கணிப்பது என்று முடிவு செய்தார்கள். மீண்டும் அப்பீல் செய்து ஹர்பஜன் மீது தவறில்லை என்று சச்சினின் சாட்சியம் முடிவு செய்ய வைத்தது. நிறவெறியை தூண்டும் வகையில் ஹர்பஜன் பேசவில்லை என்பது சச்சினின் வாக்குமூலம். பந்து மட்டையை விட்டு வெகு தூரம் விலகியிருந்தும் டிராவிடுக்கு ஒரு அவுட் என்று பக்னரிடம் மற்றபடி நேர்மையானவர் என்று கருதப்பட்ட கில்கிறிஸ்ட் கேட்டார். “ஆடும் போது பந்து மட்டையில் பட்டு கேட்ச் ஆனால் போவது மட்டும்தான் நேர்மையா?” என்று சச்சின் கேள்வி கேட்கிறார். தோனிக்கு தவறான எல்பிடபிள்யூ வேறு பக்னர் கொடுத்தார். தரையில் தட்டி பிடித்த பந்துக்கு கேட்ச் வேறு கொடுத்து காமெடி செய்தார் இன்னொரு நடுவர் பென்சன். அணி தோற்றது.

பெர்த் போட்டி WACA எனும் சீறிவரும் களத்தில் நடைபெற்றது. டிராவிட், சச்சின் அரைசதம் அடிக்க இஷாந்த் ஓயாமல் பந்து வீசி விக்கெட்கள் கழற்ற அணி வென்றது. இறுதி டெஸ்ட் போட்டியில் அடிலெய்டில் ஆடுவதற்கு முன்னர் ஷார்ட் பிட்ச் த்ரோக்களை கேரி சச்சினுக்கு வீச அதைக்கொண்டு பயிற்சி செய்தார். அதே போல பிரட் லீயை எதிர்கொள்ள ஃபுல்லாக, வேகமாக பந்து வீசச்சொல்லியும் பிசி செய்தார். 153 ரன்களை சச்சின் அடித்தார். போட்டி டிரா ஆனது.

புலியை பிடித்து முடித்துவிட்டே போவோம்:
காமன்வெல்த் வங்கி தொடரான அதில் இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவோடு இணைந்து கொண்டது. 159 ரன்களுக்கு ஆஸ்திரேலியா சுருண்ட பின்னர் இந்தியா ஆடவந்த போது, “நான் இன்று நன்றாக உணர்கிறேன். உங்களுக்கு வேகமாக பந்து வீசப்போகிறேன்” என்று லீ, சச்சினிடம் சொன்னார். முழு வேகத்தில் வீசப்பட்ட பந்தை நேராக பவுண்டரிக்கு STRAIGHT DRIVE இல் சச்சின் அடித்தார். ஐந்தாவது பந்தையும் அதே வீரியத்தோடு அடித்து விளாசினார். அடுத்த போட்டியில் இலங்கையை வீழ்த்திய பின்னர் மூன்று இறுதிப்போட்டிகளில் பங்குகொள்ள தயாரானபோது பாண்டிங் இப்படி பேட்டி கொடுத்தார், “இரண்டே இரண்டு இறுதிப்போட்டிகள் தான் நடக்கும்!”

239 ரன்களை உத்தப்பா, ரோஹித், டோனி ஆகியோருடன் இணைந்து ஆடி சேஸ் செய்த சச்சின் தன்னை நோக்கி அதிபயங்கர வேகத்தில் ஹெல்மெட்டில் படுமாறு வந்த பந்தை லீ வீசியதும் அவரிடம் நகைச்சுவையாக, “எனக்கு ஏதேனும் ஆனால் என் மகன் அர்ஜூனுக்கு நீ தான் பதில் சொல்ல வேண்டும்” என்றாராம். லீ, அர்ஜூன் இருவரும் நண்பர்கள்.

வயிறு தொடை சேருமிடத்தில் வலி உயிரை எடுக்க தோனி, சச்சினை ஓய்வெடுக்க சொன்னார். மூன்றாவது இறுதிப்போட்டியில் பார்த்துக்கொள்ளலாம் என்பது அவரின் பார்வை இல்லை. “புலியை வேட்டையாடுவது என்று வந்துவிட்டால் அது வெளியே வந்திருக்கும் பொழுதே கொன்றுவிட வேண்டும்” என்றுவிட்டு களம் புகுந்தார் சச்சின். 91 ரன்கள் அடித்து அணியின் 258 ஸ்கோருக்கு வழிவகுத்தார். பிரவீன் குமார், ஹர்பஜன் அழகாக பந்துவீசி விக்கெட்டுகள் அள்ள அணி ரிக்கி சொன்னது போலவே இரண்டாவது இறுதிப்போட்டியோடு வேலைகளை முடித்தது. வயிறும், தொடையும் சேரும் இடத்தில் வலி பின்ன GILMORE’S GROIN என்கிற சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டு நாட்களில் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. மூன்று வாரங்கள் பிள்ளைகளை கட்டிப்பிடிக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் அவதிப்பட்டாலும் ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடருக்கு தயாராக வேண்டும் என்று மட்டுமே மனதில் ஓடியது.

அந்த தொடரோடு ஓய்வு என்று சொன்ன கங்குலி மொஹாலி போட்டியில் சதமடித்தார். கங்குலி எப்பொழுதெல்லாம் டென்சனாக இருந்தாரோ அப்பொழுது எல்லாம் சச்சின் வங்க மொழியில் எதையாவது பிதற்றி அவரை சிரிக்க வைப்பதை செய்வாராம். அந்த கங்குலி சதமடித்த மொகாலி போட்டியை 320 ரன்கள் வித்தியாசத்தில் அணி வென்றது. டெல்லி போட்டியில் கம்பீர், லக்ஷ்மண் இரட்டை சதமடிக்க போட்டி டிரா ஆனது. அந்தப் போட்டியில் கையில் காயம் ஏற்பட்டு கும்ப்ளே பதினொரு தையல்கள் போட்டுக்கொண்டதும் “நூறு சதவிகிதம் தரமுடியாத நான் அணியில் இருக்ககூடாது” என்று சொல்லி ஓய்வு பெற்றார். இறுதிப் போட்டியைக் காண கும்ப்ளே வரவேண்டும் என்று சச்சின் உட்பட அனைவரும் கேட்டுக்கொண்டனர். சச்சின் இறுதி டெஸ்டில் கொஞ்சம் அதிர்ஷ்டத்தோடு சதமடிக்க 8-1 என்று பீல்டிங்கை ஆஸ்திரேலிய அணிக்கு செட் செய்ய அறிவுரை வழங்கி விக்கெட்டுகள் கைப்பற்ற வழிவகுத்து தந்திருக்கிறார் சச்சின். கேரி கும்ப்ளே மற்றும் கங்குலிக்கு பிரிவு விழாவை சிறப்பாக செய்த அந்நாளில் அஞ்சலியின் 40வது பிறந்தநாள் என்றாலும் அன்போடு சகாக்களை அனுப்பி வைத்தார்.

ஐ.பி.எல். அனுபவங்கள்: ஐ.பி.எல். ஆரம்பித்தபோது அது ஹிட்டாகும் என்று தெரிந்திருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் இப்படி பரவும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும், அதன் தரமும் இத்தனை உச்சமாக இருக்கும் என்று நம்பவில்லை என்றும் ஒத்துக்கொள்கிறார். வாஸ்துவுக்காக எதிரணி வீரர்களின் அறையில் எல்லா பொருள்களும் குறிப்பிட்ட மாதிரி இருத்தல், நம்பிக்கையால் தங்கள் பாத்ரூமை எதிரணி பயன்படுத்த விடாமல் தடுக்க, ’பாத்ரூம் அவுட் ஆப் ஆர்டர்’ என்று எழுதி ஏமாற்றலை மீறியும் அதைப் பயன்படுத்தியது என்று எக்கச்சக்க வேடிக்கைகளை பகிர்ந்து கொள்கிறார். இந்திய இளம் வீரர்களுக்கு சர்வதேச வீரர்கள் அறிவுரை வழங்க இதுவொரு களம் என்கிற அதேசமயம் ட்வென்டி ட்வென்டி போட்டிகளுக்கு மட்டுமே இதிலிருந்து ஆட்களை எடுப்பது உசிதம் என்றும், ரஞ்சி, துலீப், இரானி போட்டிகளில் இருந்தே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான ஆட்களை எடுக்க வேண்டும் என்பது சச்சினின் பார்வை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட இறுதிப்போட்டியில் கையில் பதினொரு தையல்களோடு களம் புகுந்து நன்றாக ஆரம்பத்தில் ஆடியும் தோற்றுப்போனதை வருத்தத்தோடு பதிவு செய்வதோடு பொல்லார்டை தாமதமாக களமிறக்கியது தன்னுடைய தவறே என்று ஒத்துக்கொள்கிறார். 2013 ஏப்ரல் ஐ.பி.எல்-லின் போது கையில் நீர் கோர்த்துக் கொண்டதோடு, குதிகாலிலும் காயம் ஏற்பட இறுதி ஐ.பி.எல் போட்டியில் சிக்சர் அடித்த சந்தோசம் மற்றும் அணி கோப்பை வெல்வதை பார்த்துக்கொண்டு ஓய்வு பெற்று வெளியேறினார்.

டெஸ்டில் முதலிடம்: மும்பை தாக்குதலுக்கு பின்னர் நடந்த டெஸ்ட் போட்டியில் சென்னையில் 387 ரன்கள் துரத்தி எடுக்க வேண்டிய சூழலில் சேவாக் அடித்து ஆரம்பித்து வைக்க, சச்சின் ஒருபுறம் சிறப்பாக ஆடினார். இன்னொரு பக்கம் யுவராஜ் மான்டி பனேசர் பந்தை சற்றே தூக்கி அடிக்க முயல, “சென்னையில் இப்படித்தான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தூக்கி அடித்து தோல்வியை சுவைத்தேன். பொறுமை” என்று சொல்லி ஆடவைத்து இருவரும் சேர்ந்து வெற்றியை பெற்று மும்பை தாக்குதலில் இறந்த சகோதரர்களுக்கு சமர்ப்பணம் செய்தார். நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் 163 ரன்களை அடித்திருந்த நிலையில் வயிற்றுப் பிடிப்பு ஏற்பட்டு சச்சின் ஆடமுடியாமல் போனது. அப்படியே retired hurt ஆகி வெளியேறிய அவரிடம், “நீங்கள் ஒருநாள் போட்டிகளில் முதல் இரட்டை சதம் அடித்திருக்கலாமே பாஜி?” என்று கேட்க, “பந்தையே பார்க்க முடியவில்லை, என்ன செய்யட்டும். இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்” என்று சச்சின் சொல்ல, “இன்று அடித்து, இன்னொருமுறை அடித்தால் இரண்டு இரட்டை சதங்கள் சேர்ந்திருக்கும்” என்றுவிட்டு சேவாக் நடையை கட்டினார். நியூசிலாந்து தொடரில் பத்தரை மணிநேரம் கேரி கிறிஸ்டன் ஊக்கத்தோடு போராடி ஆடி டிரா செய்ய வைத்த கம்பீரை புகழ்வதோடு, ஜாகீர்கான் ஒரு கேட்ச் அவர் பக்கம் வந்ததும், “யாரும் வரக்கூடாது. என் கேட்ச் அது” என்றுவிட்டு பந்தை பிடிக்கப்போக காற்று வேகமாக வீசி பந்தை ஒரு பதினைந்து அடி தள்ளிக்கொண்டு போய்விட்டதாம். “பந்து அகப்பட்டுச்சா ஜாக்?” என்று கிண்டலடித்தார்களாம்.

அமிதாப் பச்சனுடன் விளம்பரங்களில் நடித்துக்கொண்டிருந்த போது சிறுவனான அர்ஜூன் சாப்பிட்டுவிட்டு அமிதாபின் உடையில் சாப்பிட்ட கையை துடைத்தபோது அவர் பெருந்தன்மையாக எதுவும் சொல்லவில்லையாம். இருபது வருடங்கள் கிரிக்கெட்டில் தொட்ட நாளன்று அஞ்சலி தனி ஜெட்டில் ஏறிவந்து சச்சினை தோனி முன் சந்தித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

760 ரன்களை அடித்துவிட்டு இந்திய அணியை டிரா நோக்கி இலங்கை நகர்த்திய போது சச்சின் போராடிக்கொண்டிருக்க, “இப்படி ஆடி சதமடிக்க வேண்டுமா? முடிவு வரப்போவதில்லையே சச்சின். ஆட்டத்தை முடித்துக்கொள்ளலாமா” என்று சங்ககாரா கேட்க, பொறுமையாக 7-2 என்று செட் செய்யப்பட்ட பீல்டிங்கில் சிறப்பாக ஆடி சதமடித்த பின்னர், “இப்பொழுது என்ன செய்யலாம்? ஆட்டத்தை முடித்துக்கொள்ளலாமா?” என்று சச்சின் திருப்பிக் கேட்டார். இதே போல ஒரு தருணம், ஒருநாள் போட்டியில் 96 ரன்களோடு சச்சின் எதிர்முனையில் இருந்தபோது தினேஷ் கார்த்திக்கின் மீது அழுத்தம் உண்டாக்கி சேஸ் செய்ய விடாமல் தடுக்கப் பார்க்க, “நீ அடித்து ஜெயிக்க வை! சதம் கிடக்கிறது!” என்று சொல்ல அப்படியே செய்து வெற்றியை பெற்றுத் தந்தார் தினேஷ். சேவாக் சதமடிக்க கூடாது என்று நோபாலை ரண்டீவ் வீசிய கதையையும் இணைத்து சச்சின் பதிவு செய்கிறார்.

இலங்கையுடனான இறுதி டெஸ்ட் போட்டியில் சேவாக் 293 ரன்கள் அடித்து கலக்க, 99 ரன்களில் பாய்ந்து ஏஞ்சலோ மாத்தீவ்சை ரன் அவுட்டாக்கிய பின்னர், இருபது வருடங்களுக்கு பிறகும் இந்த வயதான மனிதன் பீல்டிங் செய்வேன் என்று சச்சின் ஜோக்கடித்தார். அந்த போட்டியின் வெற்றி இந்திய அணிக்கு டெஸ்ட் முதலிடம் மற்றும் சச்சினுக்கு இருபதாண்டு காலத்தின் மறக்க முடியாத பரிசு இரண்டையும் இணைத்து தந்தது.

நேரு-ஒரு சமகாலத்தவரின் மதிப்பீடு !


வால்டர் கிராக்கர் நேரு பற்றி எழுதிய நேரு ஒரு சமகாலத்தவரின் மதிப்பீடு வாசித்து முடித்தேன். நேரு காலத்தில் இந்தியாவின் ஆஸ்திரேலியாவின் தூதுவராகப் பணியாற்றிய கிராக்கர் எழுதிய இந்த நூல் நேருவின் மரணத்துக்கு இரு வருடங்கள் கழித்து வெளிவந்தது. அப்பொழுது கடுமையான விமர்சனங்கள்,வரவேற்பு இரண்டையும் கலந்தே இந்த நூல் சந்தித்தது. இந்த நூல் நேருவை கொண்டாடித் தீர்க்கவில்லை என்பதோடு,நேருவின் வெற்றிகளாக இன்றைக்குப் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் ஒத்துப்போவதை அன்றே சொல்லியிருக்கிறது. அதே சமயம் நேருவின் மீது கூர்மையான விமர்சனங்களை வைக்கவும் நூல் தயங்கவில்லை. இந்த நூலை எழுதியவர் பனிப்போரில் ரஷ்ய மற்றும் அமெரிக்கச் சார்பில் இருந்து தள்ளியிருந்தவர் என்பதால் நேருவின் நடுநிலைமையைச் சரியாகவே கணித்திருக்கிறார். நூலின் மிகையான கணிப்புகளையும் காண்போம்

நேருவை நேரடியாக ஆறரை வருடங்களுக்கு மேல் காண்கிற வாய்ப்பை பெற்ற ஆசிரியர் அவருக்கு இயற்கை மீது இருந்த அளப்பரிய தாகத்தைப் பதிவு செய்கிறார். இரண்டு மாடிகள் இருந்த அவரின் வீட்டில் பல்வேறு மலர்களை வளர்ப்பது நேருவின் கவனமாக இருந்தது. நேரு போகிற பாதையில் எண்ணற்ற மக்கள் சாலையோரங்களில் தங்கி,குளித்து,உணவு உண்டு அங்கேயே வாழ்த்லை கண்டு கோபப்பட்டாலும் அவர்களின் நிலையை மாற்றுவது தங்களின் கடமை என்று செயல்பட்டாரே அன்றி அவர்களைக் கொடுமைப்படுத்துவதையோ,அங்கே இருந்து துரத்துவதையோ செய்ய என்றும் அனுமதிக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தானிய பிரதமர் முகமது அலி மீது கூட்டம் பாயப்போன பொழுது போலீசால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நேருவே முன்னால் பாய்ந்து மக்களைத் தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்.

நேருவுக்கு அவர் காலத்தில் இருந்த ஈர்ப்பு காந்திக்கு கூட இருந்திருக்கவில்லை என்கிறார் கிராக்கர். நேரு எல்லா அரசியல்வாதிகளைப் போலவே மக்களின் நடுவே கலந்தார்,குழந்தைகளைத் தூக்கி கொண்டார். அதே சமயம் அவர் காலத்தில் பெரிய ஊடகங்கள் இந்தியாவில் மக்களைச் சென்றடையவில்லை. நேரு இன்றைக்குச் செய்யப்படும் பி.ஆர். வேலைகளை அன்றைக்குச் செய்ய நேரம் கொண்டவராக இருக்கவில்லை. ஆனாலும்,அவர் மக்களின் நேசத்துக்கு உரியவராக இருந்தார் என்பது ஆசிரியரின் கவனிப்பு. நேரு அதே சமயம் தன்னுடைய பெரும்பாலான உரைகளை எந்தத் தயாரிப்பும் இல்லாமல் பேசினார்,அவர் சமயங்களில் ஒரு கூட்டத்தில் சொன்னதையே இன்னொரு கூட்டத்தில் வேறொரு பாணியில் சொல்வாராம். நேரு ஆங்கிலம்,ஹிந்துஸ்தானி இரண்டிலும் தெளிவாக உரையாற்றுகிறவராகத் திகழ்ந்துள்ளார்.

நேரு எந்தக் கிராம மக்களின் நம்பிக்கைகள்,மதம் ஆகியவற்றை விமர்சித்தாரோ அவர்களே தான் அவருக்குத் தொடர்ந்து ஓட்டுப் போட்டார்கள். நேருவின் வீட்டில் இந்து மதம்,இஸ்லாம்,கிறிஸ்துவம் என்று பல்வேறு தாக்கங்கள் இருந்தன. நேரு மதங்களின் கடவுள் நம்பிக்கை மற்றும் மறுபிறப்பை ஏற்காதவராக இருந்தாலும் மதப்பண்டிகைகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்ததில்லை. படேல்,ராஜாஜியுடன் சோசியலிசம் சிந்தனையிலும்.நேதாஜியுடன் பாசிசம் பற்றிய பார்வையிலும்,ஜின்னாவுடன் மதம் பற்றிய பார்வையிலும் அவர் முரண்பாடுகள் கொண்டவராக இருந்தார். காந்தியின் மத நம்பிக்கைகள்,அவரின் மதத்தைக்கொண்டு அரசியலை கட்டமைத்தல் ஆகியன அவருக்கு விருப்பமானவையாக இல்லை. அதே சமயம் ஆசிரியர் நேருவிடம் ,”காந்தியைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் ?” என்று கேட்ட பொழுது ,”அவரின் நல்லெண்ணம் ஈர்ப்பு ஆகியன அவர் முன் நாம் நிற்கிற பொழுது மற்ற எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகிறது. அவரின் செயலோடு ஒத்துப்போவது நிகழ்ந்துவிடும் !” என்று பதில் தந்தார்.
நேருவின் புத்தகங்களில் வெள்ளையர் மீதான விமர்சனங்கள் மற்றும் வெறுப்பின் விளிம்பு வரை போகிற போக்குக் காணப்படுகிறது என்று குறைபடுகிறார் கிராக்கர்.

நேருவின் புத்தகங்கள் போராட்டங்கள் செய்கிற நேருவை நமக்குக் காட்டுகின்றன,அவர் ஆட்சி செய்த காலங்களில் அவரின் சிந்தனை எப்படியிருந்தது என்று தெரியவில்லை என்பது வருத்தமானதே என்கிறார் ஆசிரியர் (நேரு எழுதிய முதலமைச்சர்களுக்கான கடிதங்களை இவர் கணக்கில் கொண்டிருக்கலாம் )
நேருவின் ஆகச்சிறந்த சாதனை பஞ்சாபிகள்,டோக்ராக்கள்,தமிழர்கள் ஆகியோருக்கு இந்தியா என்கிற நாட்டில் தங்களின் அடையாளங்களைக் கடந்து இந்தியர் என்று நினைப்பதற்கான ஒரு தேசியத்தைக் கட்டமைத்ததே ஆகும். அது மொத்தமும் திணிக்கப்பட்ட தேசியம் இல்லை. எடுத்துக்காட்டாக இஸ்லாமியர்கள் மீது கடுமையான போக்கு இருக்கவேண்டும் என்று பிரிவினைக்குப் பின்னர் எண்ணப்பட்ட பொழுது அவர்களுக்குச் சலுகைகள் மற்றும் கரிசனம் காட்டி இந்திய நீரோட்டத்தில் கலக்க செய்ய வேண்டும் என்பது நேருவின் பார்வையாக இருந்தது. அது இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகத் தொடர்ந்து செலுத்தியது.

நேரு எண்ணற்ற இந்திய ஆண்கள் மற்றும் பெண்களின் துயரத்தை போக்க வேண்டும் என்று கனவு கண்டார். அவர் இடதுசாரிகளின் கம்யூனிசத்தின் தீவிரத்தை வெறுத்தாலும் அவர்களை முழுதாக வெறுக்கவில்லை. அவர் மக்களின் வறுமையைப் போக்க தொழில்மயமாக்குதல் தீர்வு என்று நம்பினார். அவரின் சாதனைகள் அவரின் ஆட்சிக்காலத்தில் இந்திய மக்கள் தொகை பதினைந்து கோடி பெருகியது. ஆனாலும்,இந்த தேசத்தை இத்தனை வேறுபாடுகளைக் கடந்து ஒருங்கே வைத்திருந்தார். நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவர் தொடர்ந்து பாதுகாத்தார். ஒட்டுமொத்த ஐரோப்பியாவை ஆட்சி செய்வது போன்ற ஒரு பெரிய வேலையை அவர் சிறப்பாகவே செய்தார்.

நேருவின் அணிசேராக்கொள்கை தோல்வி என்று இன்று பலபேர் சொன்னாலும் கிராக்கர் கச்சிதமாக நேரு அந்தக் கொள்கையின் மூலம் இருபக்கம் இருந்தும் உதவிகள் பெறுவதை உறுதி செய்துகொண்டார் என்பதோடு,காஷ்மீரில் இந்தியா மீது போர் தொடுக்கக்கூடிய பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி கொடுத்ததைக் கவலையோடு பார்த்து வந்தார் என்பதையும் பதிகிறார். அமெரிக்காவின் அயலுறவு அமைச்சர் டல்லஸ்,அணிசேராமை என்பது பழமையானது,அறமற்றது,சாத்தியமற்றது என்று கருதினார். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டை விடச் சர்வாதிகார மையங்கள் அமெரிக்காவின் நலனுக்கு உகந்தவை என்று கருதினார்கள்.

நேரு இன்னொரு புறம் முஸ்லீம்களின் நம்பிக்கையைப் பெற இஸ்ரேலை விமர்சிக்கவும் செய்தார். கிராமங்களை நோக்கி தன்னுடைய கவனத்தை நேரு காந்தியின் வழியில் செலுத்தவேயில்லை. இந்திய மக்களின் வறுமையிலும் தன்னிறைவு என்பதை அழிக்கிற வேலையை அவரின் மையத்திட்டமிடல் செய்தது. எண்பது சதவிகித மக்களின் பசியைப் போக்க பெரிதான திட்டங்கள் அவர் வசமிருக்கவில்லை. கிராக்கர் அதிகத் தொழில்மயமாதல் உண்மையில் வேலை வாய்ப்பை குறைக்கவே செய்யும் என்கிறார். கிராமப்புற தொழில்களை முன்னேற்ற பெரிதான முன்னெடுப்புகளை நேரு செய்யத்தவறினார். மக்கள் இன்னமும் வறுமையில் இருக்கிறார்கள் என்பதைப் பல காலம் ஆய்வு செய்து அந்த வறுமையைப் போக்க முன்னர்த் திட்டம் வகுத்தவர்களே அறிக்கை கொடுக்கிற அளவுக்கு நேரு அசட்டையான ஆட்களை உடன் வைத்திருந்தார் என்பது இவரின் விமர்சனம். வங்க பஞ்சத்துக்குப் பிறகும் ஒழுங்கான உணவு சேகரிப்புத் திட்டங்கள் நேருவிடம் இருக்கவில்லை என்கிறார் கிராக்கர். இந்திய மாதிரிக்கு அமெரிக்க மற்றும் ரஷ்ய திட்டங்களை அவர் மாற்றத்தவறினார். பத்து கோடி மக்களுக்கு வேலை வாய்ப்புக்கு என்று பெரிய முன்னெடுப்புகளை நேரு எடுக்கவில்லை.

அதே சமயம் நேரு இப்படிச் செயல்படக் காரணம் நாட்டின் பரவலான வறுமை மற்றும் மிகப்பெரிய மக்கள் தொகை என்கிற வாதத்தை அவர் பக்கம் நிற்பவர்கள் வைக்கலாம். நேரு பெரும்பாலும் தனியாகவே நிறையத் திட்டங்களை முன்னெடுத்தார். அவர் பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்தபடியால் நேருவின் தவறுகளைச் சுட்டிக்காட்ட ஆளில்லாமல் நேரு மக்களுக்கு எது நல்லது என்று எண்ணினாரோ அவற்றைச் செய்தார்.
நேருவுக்கு யார் கடிதம் எழுதினாலும் இரண்டு நாட்களில் அதிகபட்சம் அவரிடம் இருந்து பதில் வந்திருக்கும். ஒரு நாளைக்குப் பதினெட்டு மணிநேரம் பல்வேறு பணிகளை ஓயாமல் செய்கிற பண்பு அவரிடம் இருந்தது. எழுபது வயதில் அவரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல அதிகாரிகள் திணறினார்கள். பதினெட்டு வருடகாலம் ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த நேரு அதற்கான செருக்கை பெரும்பாலும் கொண்டிருக்கவில்லை என்பது ஆச்சரியமே. கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மேற்கு ஆசியா வரை இப்படி இத்தனை காலம் ஜனநாயகப் பண்பை கொண்டிருந்த ஒரு அரசாக அவருடையதே இருக்கிறது என்று ஆச்சரியப்படுகிறார் கிராக்கர்

காஷ்மீர் சிக்கலில் நேருவைப் போட்டுத் தயவு தாட்சண்யம் இல்லாமல் அன்றைய மேற்கின் பார்வையில் தாக்கியிருக்கிறார் ஆசிரியர். அவர் உடனே வாக்களிப்பை நடத்தியிருக்க வேண்டும் என்றும்,பள்ளத்தாக்கில் அவருக்கு வெற்றி கிடைத்திருக்காது என்றும் ஷேக் அப்துல்லாவின் தாக்கம்,பாகிஸ்தான் ஐ.நாவின் வார்த்தைகளை மதிக்காதது ஆகியவற்றை இணைத்துப் பேசாமல் கடந்து போகிறார். நூல் எழுதப்பட்ட காலத்தில் இந்தப் பார்வைகள் உருப்பெறாமல் இருந்திருக்கலாம். அதே சமயம் ஜனசங்கம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். காஷ்மீர் சிக்கலை மேலும் குழப்பின என்றும் அவர் பதிகிறார். ஷேக் அப்துல்லாவை சிறைப்படுத்தினாலும் அவரின் மகனின் கல்வியைக் கவனித்துக்கொண்ட நேருவும்,அவரும் பத்து வருடகாலத்துக்குப் பின்னர்ச் சந்தித்த பொழுது என்ன பேசினார்கள் என்பது தெரிந்தால் மிகுந்த கவித்துவமாக இருக்கும் என்று தன் ஆவலை வெளிப்படுத்துகிறார்

சீனச்சிக்கலில் இரு நாடுகளும் தவறு செய்தன என்பதை நேர்மையோடு பதிகிறார். கிழக்கு இந்தியாவுக்கு,மேற்கு எனக்கு என்று சீனா கேட்டிருக்கலாம் என்று அன்றே சரியாக ஆரூடம் சொல்கிறார். திபெத்தை இந்தியா தாக்கி சீனாவிடம் இருந்து விடுவித்துத் தனித் தேசமாக மாற்றியிருக்கலாம் என்று சொல்கிறவர்களுக்கு அப்பொழுது காஷ்மீர் சிக்கலும்,அகதிகள் மறுவாழ்வும் நேருவின் முன்னால் பெரிய சிக்கலாக இருந்தன என்பதை நினைவுபடுத்துகிறார். இந்தியா ஒரு பக்கம் NEFA வில் தன்னுடைய பலத்தைப் பெருக்கிக்கொண்டு போக அக்சாய் சின்னில் சீனா சாலையை அமைத்தது. நாற்பதுக்கும் மேற்பட்ட செக் போஸ்ட்களை அமைத்து முன்னேறினால் சீனா வெளியேறிவிடும் என்று நேரு தவறாகக் கணக்கு போட்டார் ; சீனப் போர் நேருவின் கவுரவத்துக்குப் பெரிய அடியானது. அதே சமயம் நேரு சீனச்சிக்கலை தீர்க்க முழு மனதோடு முயன்றார் என்கிறார் கிராக்கர்
கிராக்கர் காலனியத்தின் தாக்கம் பற்றிப் பெரிய புரிதல் இல்லாதவர் என்றே தோன்றுகிறது.
ஆஸ்திரேலியா அவரின் மண் என்பதால் இந்தப் பார்வை இருக்கும் என்று படுகிறது.

ஆப்ரிக்காவின் விடுதலைக்கு நேரு பாடுபட்டதை விமர்சனப்பார்வையோடு அணுகி அங்கே ஆட்சிகளை ஏற்படுத்தினாலும் அவை நல்லாட்சியாக இருக்காது என்கிறவர் ஆப்ரிக்க மக்களைச் சுரண்டி,நிறவெறிக் கொண்டு செயல்பட்ட காலனிய ஏகாதிபத்தியம் பற்றி மூச்சு விட மறுக்கிறார். அதே போல நேருவின் கோவா முற்றுகையைக் கடுமையாக விமர்சிக்கிறார். என்னவோ போர்ச்சுகல் தன்னுடைய சொத்தை இழந்து கண்ணீர் வடிக்கிறது என்கிற அளவுக்குப் புலம்பித் தள்ளுகிறார். இந்தியா செய்தது அநியாயம் என்றும்,தனி மாநிலம் கேட்டு அங்கே இருந்த கோன் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தேர்தலில் வென்றதையும் பதிகிறார். ஜனநாயகத்தைக் கொண்டாடும் கிராக்கர் அதைத்தராத போர்துகீசியர்களின் வளர்ச்சி மாயத்தைக் கொண்டாடுகிறார். அங்கே நடந்த உள்ளூர் காங்கிரஸ் போராட்டங்களை ஒற்றை வரியில் கடந்து விடுகிறார். நேருவின் மீது தான் தவறு என்கிற தொனியில் அந்தப் பகுதி நீள்கிறது. உலக அமைதிக்காக நேரு எப்படியெல்லாம் பேசினார் என்று விவரித்துச் சொல்லிவிட்டு நேரு துரோகம் செய்துவிட்டார் என்று புலம்புகிறார். நேருவின் இந்தப் போக்கு இந்தியா காலனியத்துக்கு எதிரானது என்கிற எண்ணத்தை வலுப்படுத்தச் செய்யப்பட்ட செயல் என்பதைச் சரியாகக் கணிக்கிறார்

நேரு தானே சமைக்கிற பழக்கம் கொண்டவராகப் பல சமயங்களில் இருந்திருக்கிறார். செல்வச்செழிப்பான குடும்பத்தில் இருந்து வந்து வறுமையை நோக்கி அவர் வாழ்ந்து வந்தார். நேருவின் சகாக்கள் ஊழல் செயதாலும அவை ஆட்சியைச் செலுத்தும் இயல்பான நிகழ்வுகளே என்பது நேருவின் பார்வையாக இருந்தது. அவர்கள் மீது வழக்குகள் நடந்த பொழுது அதே சமயம் அவர்களைக் காப்பாற்ற அவர் முயலவில்லை.
நேருவை அறுபத்தி ஒன்றாம் வருடம் அவரின் மத நம்பிக்கையின்மையை மீறி ராமகிருஷ்ண மடத்தைக் கொல்கத்தாவில் திறந்து வைக்க அழைத்தார்கள். நேரு வெகு ஆடம்பரமாகக் கட்டப்பட்ட மடத்தைப் பார்த்து கொதித்து இப்படி உரையாற்றினார் ,
“ஆன்மிகம் என்கிற சொல்லை நான் போலியான ஆன்மிகம் அதிகமாக மிகுந்திருப்பதால் தவிர்த்தே வந்திருக்கிறேன். இந்தியா பசிகொண்டிருக்கும் ஒரு தேசம். ஆன்மிகம் என்கிற பெயரில் அன்றாடச் சிக்கல்களில் இருந்து ஓடுவது சரியில்லை. நான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். இந்தக் கூட்டத்தைத் துவங்கி வைக்க வேண்டியது என் கடமை. ஆகவே,அதை செய்கிறேன் !”

நேரு பெரும்பாலும் ஜனநாயகவாதியாகவே இருந்திருக்கிறார். தனக்கு நெருங்கிய ராஜ் குமார் அம்ரீத் ஒரு குறிப்பிட்ட வேலையை முடித்துத் தரச்சொல்ல ,”நான் என்ன சர்வாதிகாரியா ? எல்லாம் விதிப்படி நடக்கும் !”என்று பதில் தந்திருக்கிறார். நேருவுக்குப் பின்னர் இந்தியா உயிர்த்திருக்குமா என்கிற கேள்விக்கு அது கண்டிப்பாக நிலைத்தே இருக்கும்,நேருவின் ஜனநாயகம் அதைச் சாத்தியப்படுத்தும் என்று நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார் வால்டர் கிராக்கர்.

நேரு கொண்டு வந்த இந்த ஆட்சிமுறை அவர் சார்ந்த பிராமண வகுப்பை படிப்படியாக ஆட்சிபீடங்களை விட்டு அனுப்பும் மாயத்தை நிகழ்த்தும் என்கிற கணிப்பு அப்படியே நடந்திருக்கிறது.

தெற்கு இஸ்லாமியர்கள் மீது வெகு குறைவான வெறுப்பைக் கொண்டிருக்கிறது,அங்கே சுத்தம் வடக்கை விட அதிகம் இருக்கிறது,பல்கலைகள் ஒழுக்கம் கொண்டதாக,மேலான ஆட்சிமுறை கொண்டவையாக இருக்கின்றன. இந்து மறுமலர்ச்சியை அவை விரும்பவில்லை. ஆங்கிலம் இந்தியாவில் உயிர்த்திருக்கும் என்றால் அது தெற்காலே சாத்தியம் ! என்கிற அவரின் கணிப்பும் பெரும்பாலும் உண்மையாகி இருப்பது ஆச்சரியமே. ஊழலற்ற மண்ணாகத் தெற்கு இருக்கிறது என்ற அவரின் குறிப்பு மட்டும் பெரும்பாலும் பொய்யாகி இருக்கிறது ! நேரு பற்றிய சமகாலத்தவரின் பார்வையை அவசியம் வாசியுங்கள். எண்ணற்ற தோல்விகளோடும் நேரு உங்களை ஈர்க்கவே செய்வார்.
NEHRU A CONTEMPORARY’S ESTIMATE
WALTER CROCKER (1966)
RANDOM BOOK HOUSE INDIA
250
. .

சச்சின் சுயசரிதை பாகம்-2 !


Sachin Tendulkarசுயசரிதையான Playing it My Way அறிமுகத்தின் இரண்டாம் பாகம் இது. இதில் முதல் முறை கேப்டன் ஆனதுமுதல் நாட்வெஸ்ட் தொடர் வெற்றி வரை அடக்கம் :

மேற்கு மண்டலம்,மும்பை அணி ஆகியவற்றுக்கு ஏற்கனவே கேப்டனாக இருந்தபடியால் சச்சினுக்குக் கேப்டன் பொறுப்பு என்பது ஒன்றும் புதிதல்ல என்றாலும் இந்திய அணியின் தலைமைப்பொறுப்பு வித்தியாசமானது. கேப்டனின் ஒவ்வொரு நகர்வும் தலைப்புச்செய்தி ஆனது ஒருபுறம் என்றால்,ஐந்து மண்டலங்களில் இருந்தும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் இருந்தபடியால் தான் விரும்பிய அணி கிடைக்காமல் சச்சின் திண்டாடிய தருணங்கள் சில உண்டு. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளைத் தோற்கடித்து டைட்டன் கோப்பையைத் தூக்குவதில் சச்சினின் கணக்குத் துவங்கியது. அதிலும் இறுதிப்போட்டியில் 220 ரன்களைச் சேஸ் செய்த தென் ஆப்ரிக்க அணியைக் கட்டுப்படுத்த ராபின் சிங்கை ஐந்தாவது பந்து வீச்சாளராக ஆக்கி ஸ்டம்ப்பை நோக்கி மட்டுமே பந்தை வீசச்செய்து சிங்கிள்களைத் தடுத்து வெற்றிக்கனியை பறித்தார் சச்சின்.

முதல் டெஸ்ட் போட்டியில் நூற்றி எழுபது ரன்கள் தென் ஆப்ரிக்க அணிக்கு அகமதாபாத்தில் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஸ்பின்னர்களைக் கொண்டு தாக்குவார் என்கிற யூகத்தைப் பொய்யாக்கி சுனில் ஜோஷியை ரன் எடுக்காத மாதிரி பந்து வீசச் செய்தார். இன்னொரு புறம் மற்றுமொரு மித வேகப்பந்து வீச்சாளரான ஜவகல் ஸ்ரீநாத் பந்தை துல்லியமாக வீசி விக்கெட்டுகளைக் கழட்டினார். அணி அறுபத்தி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுவே அவரின் தலைமையின் உச்சப்புள்ளி. அதற்குப் பின்னர் நடந்தவை எல்லாம் பெரும்பாலும் சறுக்கல்களே

கங்குலி அடித்து ஆடுகிற பண்பு கொண்டவர் என்பது மற்றும் டிராவிட் எப்பொழுதும் நிதானமான ஆட்டத்தை ஆடுவதோடு,பெரும்பாலும் ஆப் ஸ்டம்புக்கு போகும் பந்துகளை ஆரம்பத்தில் விட்டு ஆடும் பாணி கொண்டவர் என்பதால் அவர்களை முறையே ஐந்து மற்றும் மூன்றாம் இடத்தில் ஆடவைக்கும் பாணியை முதன்முதலில் துவங்கி வைத்தவர் சச்சினே. அடுத்த டெஸ்ட்டை தோற்றாலும்,இறுதி டெஸ்டில் அஸார் சிறப்பாக ஆட அணி தொடரை வென்றது.
தென் ஆப்ரிக்கத் தொடருக்கு அடுத்து இந்தியா கிளம்பியது. அங்கே இருந்த சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள அணியினர் திணறினார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் டர்பனில் 66 ரன்களுக்கு அணி சுருண்டது. இரண்டாவது டெஸ்டில் கடுமையாகப் பயிற்சி செய்து சதமடித்த சச்சினை நேருக்கு நேராக எதிர்கொள்ளாமல் இன்னொரு புறம் ஆடிக்கொண்டிருந்த டோட்டா கணேஷ் என்கிற வீரரை ஆலன் டொனால்ட் வசைபாடிக்கொண்டே இருந்தார். ஆனால்,கணேஷ் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவே இல்லை. சச்சின் ஆலனிடம் ,”அவரின் தாய்மொழி கன்னடா. நான் பேசுவதே அ வருக்குப் புரியாது. நீங்கள் அவரைத்திட்டுவதைக் கன்னடத்தில் செய்தால் அவர் பதில் தருவார்.” என்றார் கூலாக. இறுதி டெஸ்டில் டிராவிட்,கங்குலி கலக்கி எடுக்க அணி வெற்றியின் விளிம்புக்கு வந்த பொழுது மழை வந்து கெடுத்தது.

மேற்கிந்திய தீவுகளுக்கு டெஸ்ட் தொடர் ஆடப்போன பொழுது மூன்று வேகப்பந்து வீச்சாளர்களைச் சச்சின் கேட்டும் தேர்வுக்குழு உதட்டை பிதுக்கியது. ஜவகல் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆரம்பத்தில் விக்கெட்கள்
எடுத்தாலும் அதற்குப் பின் பாடு திண்டாட்டம் ஆனது. இரண்டு போட்டிகளை டிரா செய்த நிலையில் மூன்றாவது போட்டியில் 120 ரன்கள் வெற்றிக்கு போதும் என்கிற சூழலில் அணி எண்பத்தி ஒரு ரன்னுக்கு அவுட்டகியது. கேவலமாக முப்பத்தி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. லக்ஷ்மனைத் தவிர யாரும் இரட்டை இலக்க ஸ்கோரை அடையவில்லை. சச்சினை நோக்கி விரல்கள் நீண்டன. அதற்கடுத்த ஒருநாள் போட்டித்தொடரையும் அணி இழந்தது. நல்ல அடித்தளம் அமைக்கப்பட்ட பிறகு கீழ் ஆர்டர் பேட்ஸ்மான்களை தூக்கி அடிக்காமல் சச்சின் ஆடச்சொல்லியும் அவர்கள் கேட்காமல் போய்த் தோல்வி வந்து சேர்ந்தது.

பாகிஸ்தானுடன் ஒரு தொடரை வென்ற பொழுதும்,இந்தியாவில் நடந்த தொடரில் தோற்றத்தோடு,ஸ்ரீலங்காவுடன் தொடரை டிரா செய்தார்கள். மீண்டும் ஸ்ரீலங்காவை இந்தியாவில் சந்தித்த பொழுது முதல் இரு போட்டிகளில் சச்சின் சரியாக ஆடவில்லை, அணியும் சொதப்பிக்கொண்டிருந்தது. நள்ளிரவில் மும்பையின் நெடுஞ்சாலையில் நண்பருடன் மில்க்ஷேக் சாப்பிட்டு மனதை திடப்படுத்திக் கொண்டு சச்சின் சதமடித்தும் அணி தோற்றது. நான்கு நாடுகள் தொடரில் எல்லாப் போட்டிகளிலும் அணி தோற்றது. அடுத்துப் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் சச்சினை நான்காவது வீரராகத் தேர்வுக்குழு களமிறங்க சொல்லியிருந்தது. ராபின் சிங்கை சேஸ் செய்ய முன்னதாகச் சச்சின் அனுப்பி வைத்தார். அவர் டக் அவுட்டாகி வந்தது சச்சின் மீது விமர்சனத்தைக் கிளப்பியது. அதே ராபின் பாகிஸ்தான் அணியுடன் அதே வருடம் நடந்த போட்டியில் அஸாரூதினால் இதே மாதிரி களமிறக்கப்பட்ட பொழுது அடித்துத் தூள் கிளப்பினார்.

மீண்டும் இலங்கையுடன் நடந்த தொடரில் ஒரு டெஸ்டில் வென்று,இறுதி டெஸ்டில் தோற்றதும் சச்சினிடம் எந்த முன் அறிவிப்பும் சொல்லாமல் கேப்டன் பதவியை விட்டு தூக்கினார்கள். செய்திகளின் மூலமே அந்த விஷயத்தைச் சச்சின் தெரிந்து கொண்டார். இப்படித் தனக்குள் சொல்லிக்கொண்டார் ,”என்னுடைய கேப்டன் பதவியைத் தான் நீங்கள் பறிக்க முடியும். எனக்குள் இருக்கும் கிரிக்கெட்டை அல்ல !”. நார்மலாகக் கூலாக இருக்கும் சச்சின் கேப்டன் பதவி இழந்த பின்பு சைட்ஸ்க்ரீன் சிக்கலால் அவுட்டான பொழுது தெரியாமல் வங்கதேச கிரிக்கெட் போர்ட் தலைவரை நோக்கி கத்தினார். பின்னர் அவர்கள் தோஸ்த் ஆகிவிட்டார்கள் என்பது தனிக்கதை.

1998 இல் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்தது. ஷேன் வார்னே சிறப்பான ஆயுதங்களோடு வருவார் என்று சச்சினுக்குத் தெரியும். ஷேன் வார்னேவுக்குப் பந்தை கூடுதலாகச் சுழற்றுவதால் அது மிதந்து சென்று பேட்ஸ்மேன் தொடமுடியாத அளவுக்கு விலகிச்செல்கிறது என்பதைச் சச்சின் உணர்ந்தார். ஆகவே,லெக் ஸ்டம்ப்புக்கு சற்று வெளியே நின்றுகொண்டு பந்துகளை எதிர்கொள்வது என்று முடிவு செய்தார். கிரீஸை விட்டு பெரும்பாலும் வெளியேறாமல் ஆடுவது,லெக் ஸ்டம்ப் அல்லது அதற்கு வெளியே பந்து வீச முயன்றால் மிட்விக்கெட் நோக்கி நேராகப் பேட்டை பயன்படுத்தி அடிப்பதை சச்சின் முடிவு செய்தார். இதனால் பந்து எட்ஜ் வாங்க வாய்ப்பு இருந்தாலும் அடித்து ஆடுவது என்று களம் புகுந்தார். பயிற்சி போட்டியில் லெக் ஸ்டம் பகுதிக்கு வெளியே பந்து வீசாததைக் கவனித்துக்கொண்டார். சென்னை டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் வார்னேவிடம் நான்கு ரன்னில் ஸ்லிப் கேட்ச் ஆகி சச்சின் அவுட் ஆனார். எதிரணி எழுபத்தி ஒரு ரன்கள் முன்னிலை பெற்றது. வெங்கட்ராகவன் இந்தியா அம்பேல் என்று கணித்து வீரர்களிடம் சொன்னார். ஒவ்வொரு வீரரும் எழுபத்தி ஐந்து ரன்கள் அடிக்க வேண்டும் என்று சச்சின் இலக்கை சொன்னார். ஆனால்,அவர் வரும் பொழுது முன்னிலை 44 ரன்கள் மட்டுமே. வார்னேவை கிழித்துத் தொங்க விட்டார் சச்சின். 155 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறவைத்தார்.

அடுத்த டெஸ்டில் வார்னேவை விக்கெட்டே எடுக்காமல் 147 ரன்கள் விட்டுக்கொடுக்க வைத்தார்கள். எந்த அளவுக்கு வெறிகொண்டு சச்சின் அடித்தார் என்றால் தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் தடுப்பாட்டம் ஆடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவர் வார்னேவை ஆதிக்கம் செலுத்த விடக்கூடாது என்கிற எண்ணத்தில் அந்த ஓவரில் நினைவேயில்லாமல் சிக்சர் அடித்தார். அடுத்த டெஸ்டில் அணி தோற்றாலும் தொடர் இந்தியா வசம் வந்தது. சச்சினின் சராசரி 111 !

ஸ்டீவ் வாக் உடன் சச்சினின் உறவு வெகு வேடிக்கையானதாக இருந்தது என்பதை நூலை வாசிக்கிற பொழுது தெரிகிறது. ஸ்டீவ் வாக் எதிரணி தீவிரமாகத் தாக்கும் பொழுது இன்னமும் பலமாக ஆடுவார் என்பதால் அவரை மனதளவில் பாதிக்க அவர் ஆடும் பொழுது இந்திய அணியில் ஒருவரும் பேசாமல் இருந்து அவரைச் சீக்கிரமாக அவுட் ஆக்கும் பாணியைப் பின்பற்றி இருக்கிறார்கள். பெப்சி கோப்பையின் போட்டியில் சச்சின் ஸ்டீவ் வாக்கை அவுட் ஆக்கி அணியை வெற்றியை நோக்கி திருப்பினார். “என் பந்துகளை எதிர்கொள்ள ஸ்டீவ் திணறுகிறார் என்றே எண்ணுகிறேன். இதே மாதிரியான அனுபவம் ஹன்சி க்ரோன்ஜேவிடம் ஏற்பட்டது.”

கோககோலா கோப்பையின் இறுதிப்போட்டிக்கு தேர்வாக வேண்டிய முக்கியமான போட்டியில் இந்திய அணிக்கு 17 ஓவர்களில் 138 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மணல் புயல் தாக்கியபடியால் சச்சின் திடகாத்திரமான ஆடம் கில்க்ரிஸ்ட் பின்னால் ஒளிந்து கொண்டார். அதற்குப் பின் வெறும் பதிமூன்று ஓவரில் 130 ரன்கள் என்று இலக்குச் சொல்லப்பட்டது. நூறு ரன்கள் அடித்தால் அடித்தால் தகுதி பெற்றுவிடும் அணி என்றார்கள். சச்சின் நூற்றி முப்பதே இலக்கு என்று களம் புகுந்து மணல் புயல் போல ஆடினார். அம்பையர் தவறாக அவுட் கொடுத்து அனுப்பியும் அணி

இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருந்தது. 272 ரன்கள் இலக்காக வந்தது. முதல் ஓவரில் சச்சின் ஐந்து பந்துகளைத் தடுத்து ஆடினார். முதல் ஐந்து ஓவரில் வெறும் 12 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தன. அடுத்த ஓவரில் பவுண்டரி அடுத்து வந்த பவுன்சரில் சிக்சர் என்று சச்சின் ஆரம்பித்து வைத்தார். வார்னே,டாம் மூடி என்று போட்டவர்கள் பந்தெல்லாம் எல்லைக்கோட்டை மட்டுமே எட்டின. அணி கோக கோலா கோப்பையை வென்றது. சச்சினின் 25 வது பிறந்தநாள் அன்று ! ஒலங்கா ஒரு ஷார்ட் பந்தால் சச்சினை அவுட்டாக்க அடுத்தப் போட்டியில் கண்ணை மூடிக்கொண்டு சுற்றி சதம் அடித்த பொழுது தான் தனக்குத் தூக்கம் வந்தது என்கிறார் சச்சின்
டான் பிராட்மனை அவரின் அழைப்பின் பெயரில் வார்னே மற்றும் சச்சின் சந்தித்த பொழுது ,”இன்றைய பீல்டிங் தரத்தில் நான் அவ்வளவு ரன்கள் அடிக்க முடியாது. ஆனாலும்,இந்த வயதில் ஆடினால் ஒரு 70 என்கிற சராசரியை தொடுவேன்.” என்று எண்ணுகிறேன் என்றாராம் பிராட்மன்.

சச்சினின் முதல் குழந்தை சாரா பிறந்தபொழுது மனைவியுடன் அதே அறையில் இருக்க வேண்டும் என்று சச்சின் கேட்டார். படுக்கை கிடையாது என்றவுடன் ஒரு விரிப்பை வாங்கிக்கொண்டு தன் மகளைத் தொட்டு சிலிர்த்தார் அவர். தன் இரு குழந்தைகள் பிறந்து அவரின் கைக்குக் கொண்டுவரப்பட்ட கணங்களை வீடியோவில் பதிவு செய்து வைத்திருக்கிறார் சச்சின். 1999 இல் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு நான்காவது இன்னிங்க்சில் 271 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டது. ஆறு ரன்களுக்கு இரண்டு விக்கெட்கள் விழுந்திருந்தன.

சச்சின் வந்ததும் இரண்டு பவுன்சர்கள் அவரை வரவேற்றன. வக்கார் சச்சின் அவற்றைத் தொடாமல் போனதும் ,”பந்து உன் கண்ணுக்குத் தெரிகிறதா ?” என்று கேட்டார். சச்சின் கூர்மையாக அவரைப் பார்த்தார். இருபது ரன்களோடு அன்றைய பொழுது முடிந்தது. டிராவிட்,நயன் மோங்கியா என்று எதிர்முனையில் ஓரளவுக்குக் கிடைத்த ஆதரவோடு சச்சின் 136 ரன்களை அடைந்தார். இதற்கு நடுவே முதுகு வலி அவரைப் பாடாய்ப் படுத்தியது. தேநீர் இடைவெளியில் முதுகு முழுக்கப் பனிக்கட்டிகளை வைத்து வலியை குறைத்துக்கொண்டு மீண்டும் ஆடவந்து வலி தாங்காமல் வேகமாக ஆட்டத்தை முடிக்கப்போய்க் கேட்ச் ஆனார். அணி பதினேழு ரன்களை வெற்றிக்குப் பெறவேண்டும் என்கிற புள்ளியில் நான்கு விக்கெட்கள் இருந்தும் தோற்றது. சச்சின் மனதளவில் மற்றும் உடளவில் சோர்ந்து போயிருந்தார். அவர் தானாக நேரில் போய் வாங்கிக்கொள்ளாத ஒரே ஆட்ட நாயகன் விருது அது என்பதிலேயே எவ்வளவு அவர் காயப்பட்டுப் போனார் என்று உணரலாம்

பாகிஸ்தான் அணியுடன் ஆசிய டெஸ்ட் சாம்பியன் போட்டியில் ஆடிய பொழுது மூன்றாவது ரன்னுக்கு ஓடிவரும் பொழுது பாதையில் அக்தர் நிற்க ஓடுவது தாமதமாக அக்ரம் சச்சினை ரன் அவுட் ஆக்கினார். அதற்கு அப்பீல் செய்து அக்ரம் வென்றார். ஈடன் கார்டன் ரசிகர்கள் கொதித்தார்கள். இந்தப் பண்பற்ற செயலால் மனம் புண்பட்டாலும் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்களைத் தானே நேரில் தோன்றி சமாதானம் செய்தார். “அக்தர் வேண்டும் என்று நிற்கவில்லை என்றே நான் நம்புகிறேன். அதே சமயம் அக்ரம் அப்பீலுக்குப் போயிருக்க வேண்டியதில்லை” என்பது அவரின் வாக்குமூலம். இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த தந்தைக்காக மது அருந்த சச்சின் அவரின் இறுதிக்காலத்தில் கம்பெனி கொடுத்தார். அவர் இறந்த பொழுது அப்பாவின் அம்மா அருகில் இருந்தபடியால் அவரை ஆறுதல் படுத்தி மவுனம் காத்தார். வெகுநாட்கள் கருப்பு கண்ணாடி அணிந்து கண்ணீர் வடிந்த,சிவந்த தன் முகத்தை மறைத்துக்கொண்டு உலகக்கோப்பையில் அடித்த சதம் அப்பாவுக்குச் சமர்ப்பணம் ஆனது.

மீண்டும் அணியின் கேப்டனாக ஆனார் சச்சின். அவர் அதற்குத் தயக்கம் தெரிவித்தாலும் தேர்வுக்குழு சச்சினோடு பேசிய அஜித் வடேகரோடு கலந்தாலோசித்து அந்த முடிவை எடுத்தது. அப்பொழுது சச்சினின் மகன் அர்ஜூன் பிறந்திருந்தான். அந்தச் சுட்டி சச்சின் வெளிநாடுகளில் ஆடும் பொழுது போனில் பேசவே மாட்டானாம். சச்சின் வீட்டுக்கு வந்தால் மூன்று நாட்களுக்கு அவருடன் சுற்றி அந்த டூவை பழமாக மாற்றிக்கொள்வார் ஜூனியர் சச்சின்.

கேப்டனான முதல் போட்டியில் அணி எண்பத்தி மூன்று ரன்களுக்கு டோனி நாஷின் பந்த் வீச்சில் சுருண்டு சொதப்பியது. அதற்கு ஈடுகட்டும் வகையில் இரண்டாவது இன்னிங்க்ஸில் அணி ஐநூறு ரன்கள் அடித்தது. அதில் டிராவிட்,சச்சின் கலக்கினார்கள். அவர்கள் ஒரு சாதுரியமான செயல் புரிந்தார்கள். க்றிஸ் கெய்ர்ன்ஸ் அபாரமாகப் பந்து வீசிக்கொண்டு இருந்தார். பந்தின் ஷைன் வெளிப்பக்கம் இருந்தால் பந்து பேட்ஸ்மேனுக்கு வெளிப்பக்கமும்,அது உள்பக்கம் இருந்தால் பந்து ஆடுபவரை நோக்கியும் வரும் என்பது பாலபாடம்.

க்றிஸ் பந்தின் ஷைன் தெரியாமல் கையால் மறைத்து வீசிக்கொண்டிருந்தார். ஆகவே,நான்-ஸ்ட்ரைக்கராக நிற்கும் சச்சினோ,டிராவிடோ பந்து வெளியே போகும் என்றால் இடது கையில் பேட்டையும்,உள்ளே வரும் என்றால் வலது கையிலும் ,சரியாகச் சொல்ல முடியாவிட்டால் இரண்டு கையிலும் பேட்டை பிடித்துக்கொள்வது என்று சிக்னல் வைத்துக்கொண்டார்கள். அப்படியே செய்து அவரைக் காயவிட்டார்கள். இவர்கள் எதோ சூழ்ச்சி செய்கிறார்கள் என்று உணர்ந்த க்றிஸ் பந்தை மாற்றி டிராவிடுக்கு வீசிவிட்டுச் சச்சினை நோக்கி திரும்பினார். ஏற்கனவே சிக்னல் கொடுத்துவிட்டு சச்சின் நல்ல பிள்ளையாக அமைதி காத்தார்.

இரண்டாவது முறை கேப்டனாக இருந்த காலத்தில் கபில் தேவ் அணியின் பயிற்சியாளராக இருந்தார். அவர் அணியை நடத்துவது கேப்டனின் வேலை என்று முக்கியமான முடிவுகளில் இருந்து ஒதுங்கியே இருந்தார் என்று ஒரு வரியில் சச்சின் சொல்லிவிட்டு கடந்து போகிறார். அதே சமயம் அதற்கு முன்னால் இந்தியா கண்ட மிகச்சிறந்த வீரர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களில் அவர் முதன்மையானவர் என்று சொல்லிவிட்டே இந்த வருத்தத்தைப் பதிகிறார்.
ஆஸ்திரேலியா தொடரை அணியின் மோசமான ஆட்டம்,மற்றும் தன்னுடைய தவறான அவுட்கள் மற்றும் ஆட்டம் ஆகியவற்றால் இழந்த பின்பு வென்றிருக்க வேண்டிய போட்டிகளில் அவரின் அறிவுரையை மீறி தங்களுக்குத் தோன்றியதை செய்த வீரர்கள் எல்லாமும் சேர்ந்து தோல்விகளைப் பரிசளிக்க (உதாரணமாக 195 ரன்களைச் சேஸ் செய்த பாகிஸ்தான் அணி 71/6 என்ற நிலையில் இருந்தது. கடைசி ஓவரில் இறுதியில் வென்றது. மிதவேகப்பந்து வீச்சாளர்களைத் தன்னிடம் கேட்காமல் மெதுவான பந்தை வீசவேண்டாம் என்று கேட்டுக்கொண்டும் அதைச் செய்து பீல்டர்கள் இல்லாத பவுண்டரி அடிக்கவிட்டு வெற்றியை கோட்டைவிட்டார்கள்).

கங்குலியிடம் பதவியைக் கொடுக்கச் சொல்லி சச்சின் சொன்னார். டிராவிட் பதவியை விட்டு விலகியதும்,அனில் கும்ப்ளே ஓய்வு பெற்றதும் பதவி வந்த பொழுதும் கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்த சச்சின் அப்பொறுப்பை டோனிக்கு வழங்கச் செய்தார்.

தான் கண்ட கேப்டன்களில் சிறந்தவர் நாசர் ஹூசைன். ஆஸ்திரேலியா அணியில் மீண்டும் அணியை மீட்டெடுப்பதில் ஈடுபட்டிருக்கும் மைக்கேல் கிளார்க் சிறந்தவர் என்று பதிகிறார். முதல்முறை கேப்டனாக இருந்த பொழுது ஒவ்வொரு தொடரில் ஒரு தோல்வி ஏற்பட்டாலும் தன்னுடைய பதவி ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டது என்றும்,ஒழுங்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் பதிகிறார். தன்னுடைய மகனிடம் ஏழு வயது வரை கிரிக்கெட் பற்றிப் பேசியதில்லை என்றும்,உலகக்கோப்பையில் அவுட் ஆகி அணி தோற்க தானும் காரணமான பொழுது வகுப்பில் யாரேனும் வம்புக்கு இழுத்தால் அமைதியாக இரு ; “அடுத்த முறை நன்றாக ஆடி வெற்றிவாகை சூடித்தருவார் என் அப்பா என்று சொல் !” என்று மகனிடம் சொல்லியும் வம்புக்கு இழுத்த நண்பனின் முகத்தில் பன்ச் விட்டதை வருத்தத்தோடு பதிகிறார்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு டெஸ்ட் ஆடவந்த பொழுது முதல் போட்டியில் தான் மெக்ராத் மற்றும் கில்லஸ்பியை டிராவிட் பிரித்துக்கொண்டு ஆடி தண்ணி காட்டியதை பதிகிறார். பதினைந்து யார்ட்கள் ஓடிப்போய்ச் சச்சினின் கேட்ச்சை ரிக்கி எடுக்க ஆஸ்திரேலிய ஒரே ஒரு போட்டியில் வென்றால் உலகச் சாதனை புரிய காத்திருந்தது. டிராவிட் மற்றும் லக்ஷ்மண் கொல்கத்தாவில் மோசமான முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்துக்குப் பிறகு அற்புதமாக அணியை மீட்க ஆஸ்திரேலியா அணி சேஸ் செய்ய வந்தது. தேநீர் இடைவெளியின் பொழுது நான்காம் நாளில் மூன்றே விக்கெட்கள் போயிருக்கக் சச்சினிடம் பந்து தரப்பட்டது. கில்க்ரிஸ்ட்,ஹெய்டன் அவுட்டாக்கிய சச்சின் கூக்ளியை வார்னேவுக்குப் போடப்போய் அது நடுப் பிட்ச்சில் தவறிக்குத்தி வார்னேவை குழப்பி அவரை வீழ்த்தியது.

ஸ்டீவ் வாக் அடுத்த டெஸ்ட் போட்டியில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த பொழுது சில வார்த்தைகளைச் சொல்லி கவனத்தைத் திருப்பினார். ஒரு பந்தில் அடித்துவிட்ட ரன் ஓடிய ஸ்டீவ் வாக்கை நோக்கி பயந்து அந்தப் பக்கம் போகிறீர்களே என்கிற தொனியில் சச்சின் கிண்டலடிக்க வாக் கோபமுற ஆரம்பித்தார். ஹர்பஜன் வீசியபந்து அவர் காலில் பட LBW அப்பீலை ஹர்பஜன் செய்யக் கவனம் சிதறியிருந்த ஸ்டீவ் வாக் பந்தைக் கையால் தொட்டு நகர்த்தினார். பந்தை கையாண்ட குற்றத்தை சொல்லி அவரை அவுட்டாக்கினார்கள். அந்தப் போட்டியில் ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹர்பஜன் மற்றும் சமீர் திகே அணி வெற்றி பெறுவதைத் திக் திக் தருணங்களோடு உறுதி செய்தார்கள். உலகச் சாம்பியனை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி சாதித்த இந்திய அணி அடுத்து நடந்த ஒருநாள் போட்டித்தொடரில்

ஸ்டீவ் வாக் வந்த பொழுது மிட்விக்கெட் பீல்டரிடம் இங்குத் தான் ஸ்டீவ் வாக்கை நான் அவுட் ஆக்கி காண்பிப்பேன் என்று சச்சின் சவால் விட ,”இது ஒன்றும் உன்னுடைய தோட்டமில்லை தம்பி” என்று வாக் பதில் சொன்னாலும் அவரின் பந்து வீச்சில் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஸ்டீவ் வாக். !

பெருவிரலில் மேற்கிந்திய தொடரில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த பொழுது ரன் ஓடுகையில் க்ளிக் என்று சத்தம் கேட்க சச்சின் கவலைப்படாமல் ஆடிய பின்னர்ப் பிஸியோவிடம் காலை காண்பித்தார். அப்பகுதி உடைந்திருந்தாலும் அங்கே சுற்றிக்கொண்டு இறுதிப்போட்டியில் ஆடும்வரை என் காலின் நிலவரம் என்னவென்று சொல்லவேண்டாம் என்று வேண்டிக்கொண்டார் சச்சின். அங்கே டக் அவுட் ஆனார். SESAMOID எலும்பு சேதமாகி இருந்ததால் அறுவை சிகிச்சை தேவை என்றார்கள்,ஆனால்,அது கிரிக்கெட் வாழ்க்கையையே பாதிக்கும் என்கிற சூழலில் டொலக்கியா என்கிற மருத்துவர் சச்சினை மீட்டார்.

தென் ஆப்ரிக்க அணியை அவர்கள் மண்ணில் எதிர்கொண்ட பொழுது மகாயா நிட்டினி ஷார்ட் லென்த்தில் பந்தை ஆடுபவரை நோக்கி கொண்டுவரும் வேகத்தைக் கணித்து ஸ்லிப்பில் UPPER CUT ஆடும் பாணியைத் துவங்கினார். அது பவுண்டரி,சிக்ஸர் என்று பறந்து 155 ரன்களைப் பெற்றுத்தந்தது. பந்திலிருந்த புல்லை நீக்க போய்ப் பந்தை சேதப்படுத்தியதாக மற்றும் அணியினர் ஆக்ரோஷமாக அப்பீல் செய்ததாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அபாண்டமாக மைக் டென்னிஸ் கள நடுவர்கள் கூட அப்பீல் செய்யாத பொழுது வைத்ததாகவும்,ஐ.சி.சி. எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போனாலும் தென் ஆப்ரிகா மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியங்கள் அவரை அடுத்தப் போட்டிக்கு ரெபரியாக இருக்கவிடவில்லை. ஐ.சி.சி. அப்படி நடந்த டெஸ்ட் போட்டி செல்லாது என்று அறிவித்தது. இப்படியொரு குற்றச்சாட்டை ஏன் அவர் விசாரிக்காமல் வைத்தார் என்பது புரியவேயில்லை. அதைத் தவிர்த்திருக்கலாம்,இத்தனை கசப்பு உண்டாகியிருக்கிறது என்கிறார் சச்சின்.

இங்கிலாந்துடன் அடுத்து வந்த தொடரில் லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே பந்தை வீசியும்,விக்கெட்டை சுற்றி பந்தை செலுத்தியும் கைல்சை கொண்டு சச்சினை சாய்க்க நாசர் ஹூசைன் திட்டமிட்டார். சச்சின் முதலில் ஸ்டம்ப் ஆனாலும்,அடுத்தடுத்து 76,88,103,90 என்று அடித்துக் கலக்கினார்.” ஹாரி ராம்ஸ்டன் என்கிற ஹோட்டலில் பெரிய மீன்,ப்ரெட்,சிப்ஸ்,வெண்ணெய் ஆகியவற்றை ஒரே மூச்சில் சாப்பிடுபவருக்குத் தலைமை செப்பே சான்றிதழில் ஹாரிஸ் செலஞ்ச் வெற்றியாளர் என்று கையெழுத்திடுவது வழக்கம். சச்சின் சிப்ஸை தவிர மற்ற அனைத்தையும் தின்று முடிக்கச் செப் கையெழுத்து போட்டுத் தந்திருக்கிறார்.

பிளின்ட்டாப் பந்து வீச்சை அடுத்த ஹெடிங்லி போட்டியில் தானே சமாளித்துக் கங்குலியை சச்சின் காப்பாற்ற ,”நாம் ஒருவழியாகப் பிளின்டாப்பை சமாளித்தோம் !” என்று கங்குலி சொல்ல ,”ஆமாம் ! நீ மட்டும் தான் சமாளித்தாய்” என்று சச்சின் சொல்ல ஒரே புன்னகை ட்ரஸ்ஸிங் அறையில்.
ஒவ்வொரு பந்து வீச்சாளரையும் எப்படிக் கணித்து வைத்திருந்தார் என்று எடுத்து வைக்கிறார். பழைய பந்தை சாய்வாக ஹில்பெனாஸ் போடவந்தால் அது பவுன்சர்,பந்து வீசும் கரத்தை இருமுறை ஸ்விங் செய்து அக்தர் வீசினால் அது கூடுதல் வேகத்தோடு வரப்போகும் பந்து,முரளிதரனின் கடடைவிரல் மேலே இருந்தால் அது தூஸ்ரா பந்து ! பிற்காலத்தில் ஹர்பஜன் எப்படி தூஸ்ரா வீசுவது என்று முரளிதரனிடம் கேட்ட பொழுது சச்சின முன்னமே கணித்தது சரியாக இருந்தது !

சச்சினை சிரமப்படுத்திய பந்துவீச்சாளர்கள் என்று வரும் பெயர்கள் இரண்டும் அதிகம் அறிமுகமில்லாத நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளின் பந்து வீச்சாளர்கள் பெயர்களை நூலில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் ஏன் தொல்லை கொடுத்தார்கள் என்பதும் சுவையான அம்சம்.
நாட்வெஸ்ட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வென்றுவிடும் என்கிற சூழலில் அவர்கள் ஷேம்பெயின் பாட்டில்களை ஆர்டர் செய்திருக்கிறார்கள். ஆனால்,இந்திய அணி வென்றதும் அந்தப் பாட்டில்களைக் கேட்டு அனுப்பி எல்லாரும் குடித்துத் தீர்த்திருக்கிறார்கள். அதே போல அன்று சட்டையைக் கங்குலி கழட்டி,சுழற்றி கலக்கினாலும் அதைப்பற்றி எப்பொழுது சச்சின் அவரிடம் பேச முயன்றாலும் கங்குலி கூச்சப்பட்டே விலகுவாராம். நாளை பரபரப்பான 2003 உலகக்கோப்பை !

 

லாலு-சீரியஸ் ஆன காமெடி அரசியல்வாதியின் வாழ்க்கை !


சங்கர்ஷன் தாகூர் எழுதிய SUBALTERN SAHEB என்கிற லாலுவின் வாழ்க்கை வரலாற்று நூலை வாசித்து அதிர்ந்து போனேன். லாலு பிராசத் யாதவ் கொஞ்சம் நிலம்,சில மாடுகள் கொண்ட எழ்மையான குடும்பத்தில் பிறந்தார். அவரின் சகோதரர்கள் பாட்னா கால்நடை மருத்துவக்கல்லூரியில் கிளார்க் வேலை பார்த்து வந்ததால் அங்கே கொண்டு போய் வைத்துப் படிக்கவைக்கலாம் என்று தம்பியை அழைத்துக்கொண்டு போனார்கள். சுமாராகப் படித்த லாலு,கல்லூரியில் மாணவர் அரசியலில் ஈடுபட்டார். அப்பொழுது எழுந்த மாணவர் எழுச்சியில் கலந்து கொண்டார். சித்தாந்த விளக்கம்,சோசியலிச விளக்கம் முதலியவற்றில் சற்றும் கலந்து கொள்ள விரும்பாத அவர் பெயர் மட்டும் வந்தால் போதும் என்று எண்ணினார். மாணவர் சங்கத்தேர்தலில் தோற்றதும் கால்நடை மருத்துவக்கல்லூரியில் கிளார்க்காக ஆகிவிட்டார். இந்திரா மற்றும் பீகாரில் நடந்து வந்த காட்டாட்சிக்கு எதிராக மாணவர்கள் சங்கர்ஷ் சமிதி என்று திரண்ட பொழுது லாலு சட்டமன்றம் நோக்கி ஒரு குழுவை முன்னடத்தி சென்றார். போலீஸ் தடியடி என்றதும் ஆள் காணாமல் போய்விட்டார். கூலாக வீட்டில் மட்டன் பிரியாணியை அவர் சமைத்துக்கொண்டிருக்க அங்கே பன்னிரண்டு பேர் இறந்து போனார்கள். அடுத்த நாள் லாலு மீது போலீஸ் தடியடி,அவர் காயம் என்று தானே செய்தி அனுப்பித் தலைப்புச் செய்தி ஆகியிருந்தார்.

இந்திரா எதிர்ப்பு அலையாக வந்த தேர்தலில் எம்.பி. ஆனபின்னர் தனக்கான வாய்ப்பு எப்பொழுது வரும் என்று காத்துக்கொண்டு இருந்தார்.வி.பி.சிங் காங்கிரசுக்கு எதிராகப் புரட்சி செய்து வெளியேறிய பின்னர் அவரை ஜனதாக் கட்சிகளின் தலைவராக ஆக்க முனைப்பாக இயங்கினார். தானும் எம்.பி. ஆனார். அவர் கொண்டு வந்த மண்டல் கமிஷன் அறிக்கை அமலாக்கத்தைத் தங்களின் சாதனையாக முன்னிறுத்திக்கொண்டார். சந்திரசேகருக்கு வி.பி.சிங்கை பிடிக்காது என்பதால் அவருடன் கூட்டணி போட்டுக்கொண்டார். சுந்தர் தாஸ் என்கிற தலித்தை முதல்வராக ஆக்க வி.பி.சிங் விரும்பிய பொழுது அவரை எதிர்த்து லாலுவும்,ரகுநாத் ஜா என்கிற சந்திரசேகரின் ஆளும் நிற்கவே லாலு ஓட்டுபிரிப்பில் வென்று ஜனதா கட்சியின் சட்டமன்ற தலைவர் ஆகி மாநில முதல்வர் ஆனார்.

தன்னுடைய முதல்வரான ஆரம்பகாலங்களை முன்னர்த் தங்கியிருந்த இடத்திலேயே அமைத்துக்கொண்டார். பதவி ஏற்பை மக்கள் முன் நடத்தினார்,மக்களின் சிக்கல்களை நேருக்கு நேர் சென்று கேட்டு சீர் செய்தார். சொந்த மகனை அரசாங்க மருத்துவமனை வரிசையில் நின்று வைத்தியம் பார்த்தார். மாட்டுக்கொட்டகையில் உட்கார்ந்து கொண்டு அமைச்சரவை கூட்டத்தைப் பார்த்தார். அதிரடி ரெய்டுகள் நடத்தி அங்கேயே பலருக்குப் பதவி நீக்க ஆணைகள் கொடுத்தார். ஐந்து லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்ததோடு,சார்வாகப் பள்ளிகள் ஆரம்பித்துத் தொழிற்பயிற்சிகளை ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தந்தார். தன்மானம் என்றால் என்னவென்பதை பிற்படுத்தப்பட்ட மக்கள் உணரும் தருணத்தைத் தந்தார்.

ஒரே ஒரு மதக்கலவரம் தலையெடுத்த பொழுது கலவர பூமியான பீகாரில் இருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் இனிமேல் இப்படி நடக்கக்கூடாது என்று உத்தரவு போட்டு தானே களம் புகுந்து கலக்கினார். அத்வானி பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோயில் கட்டவேண்டும் என்று கிளம்பிய யாத்திரையைத் தடுத்து கைது செய்து பெயர் வாங்கிக்கொண்டார். இஸ்லாமியர்கள்,பிற்படுத்தப்பட்ட மக்களில் யாதவர்கள் மற்றும் தலித்துகள் ஆகியோரின் ஓட்டுவங்கியில் ஓட்டிவிடலாம் என்பது அவரின் கனவாக இருந்தது.

“சமோசாவில் உருளைக்கிழங்கு உள்ளவரை லாலு ஆட்சியில் இருப்பேன் !” என்று முழங்கிய லாலு பெரும்பாலான பதவிகள் மற்றும் அதிகாரங்களைத் தன்னுடைய சாதியினருக்கே வழங்கினார். மதக்கலவரங்கள் நடக்காமல் போனாலும் ஜாதிக்கலவரங்கள் பன்மடங்கு பெருகின. ரன்வீர் சேனா மற்றும் இடதுசாரி தீவிரவாத இயக்கங்கள் என்று பிரிந்து ஆதிக்க மற்றும் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் மோதிக்கொண்டு செத்த பொழுதெல்லாம் பெருத்த பொதுக்கூட்டத்தைக் கலவரங்கள் நடந்த பின் கூட்டி ,”என் அன்பான ஒடுக்கப்பட்ட மக்களே ! உங்களுக்கு நான் இருக்கிறேன். உங்களுக்காகக் கண்ணீர் சிந்துகிறேன். நாம் உயர்சாதியினரின் சதிகளை முறியடிப்போம் !” என்பார். மக்கள் கண்ணீர் வடிப்பார்கள். ஒரு வேளை சோறு போடுவார்கள். அவ்வளவு தான். மீண்டும் கொலைகள்,போராட்டங்கள் தொடரும். கோயில்,குளங்கள் என்று அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தைப் பிரித்துக்கொடுக்கலாம்,அடிமை வேலைகளைத் தீவிரமாகத் தடை செய்யலாம் என்றெல்லாம் கம்யூனிஸ்ட்கள் திட்டம் தீட்டிக்கொடுத்தால் காதைக் குடைய அந்தத் தாள்களை வாங்கிக்கொள்வார்.

கொலைகாரர்கள்,கொள்ளைக்காரர்கள்,கடத்தல் மன்னர்கள் கோலோச்சும் பூமியாகப் பீகார் மாறியது. கடத்தல்கள் பல்லாயிரங்களில் நடக்கிற அளவுக்கு நிலைமை மோசம். சட்டம்,ஒழுங்கு என்று பேசினால் லாலுவோ இன்னமும் அதிக மாடுகளை வளர்ப்பது எப்படி,சாணம் எப்படிச் சிறந்த கிருமி நாசினி என்று வகுப்புகள் எடுத்துக்கொண்டு இருப்பார். ஐ.ஏ.எஸ் அதிகாரியையே வெட்டிக்கொன்றார்கள் என்றால் மற்றவர்கள் நிலையை யோசித்துக்கொள்ளலாம். அடுத்து வந்த தேர்தலில் சேஷன் கடுமை காட்டினார். நான்கு முறை தேர்தல் தள்ளிப்போயின ,”சீறிவரும் காளையான சேஷனை தொழுவ மாடுகளோடு கட்டி அடக்குகிறேனா இல்லையா பாருங்கள் !” என்று கோஷம் எழுப்பியவாறே மூன்று மாத இடைவெளியில் நன்றாகப் பிரச்சாரம் செய்து தேர்தலில் வென்றார். நடுவில் குர்மிக்களின் தலைவராக நிதிஷ் பிரிந்து சமதா கட்சியைத் துவங்கி இருந்தார்.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கு வெளியே வந்தது. ஜெகநாத் மிஸ்ரா என்கிற காங்கிரஸ் முதல்வர் காலத்தில் இருந்தே நடந்து வந்த கூத்து அது. பல கோடிகளை எந்தச் செலவும் செய்யாமல் அள்ளிக்கொள்ளும் பணியைச் செவ்வனே செய்தார்கள். லாலு அதைத் தொடர்ந்தார். என்ன சில பத்துக் கோடிகளில் இருந்து ஐநூறு கோடிக்கு மேல் அதிகாரப்பூர்வமாகக் காணாமல் போயிருந்தது பணம். சுப்ரீம் கோர்ட் பாய்ந்து அடித்தது. வழக்குகள் பாய்ந்தன.

உபேந்திர நாத் மிஸ்ரா என்கிற நேர்மையான அதிகாரி வழக்கை வேகப்படுத்தினார் ,”நாம் இருவரும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர். பிராமணச் சதியை ஒழிப்போம் வாருங்கள். என்னுடன் கூட்டணி சேருங்கள்.” என்றெல்லாம் லாலு பேசிப்பார்த்தார். ம்ம்ஹூம்ம் ! ஒன்றும் நடக்கவில்லை. தேவ கவுடா,குஜ்ரால் என்று பிரதமர்கள் மாறினாலும்,தான் கொண்டு வந்த குஜ்ராலை மிரட்டியும் வழக்கில் இருந்து விடுதலை பெற முடியாமல் படிப்பறிவு இல்லாத ராப்ரியை பல போலி கையெழுத்துக்களைப் போட்டு முதல்வர் ஆக்கிவிட்டு தானே ஆட்சி நடத்தினார். மக்களைக் காண்பதோ,நலத்திட்டங்கள் தொடர்வதோ எதுவும் நிகழவில்லை. வழங்கப்பட்ட அரசாங்க வேலைகளுக்குச் சம்பளம் என்பது கிடையவே கிடையாது

.

பிரிந்த எதிராளிகளால் அடுத்தச் சட்டமன்ற தேர்தலிலும் வென்றார். என்றாலும் மீண்டும் ஊழல் வழக்குகளிலேயே நேரம் செலவழித்து மக்களைக் கண்டுகொள்ளவே இல்லை. குடும்பம் வளர்ந்து,வாரிசு அரசியல்,குண்டர்கள் ராஜ்ஜியம் செழிக்கவே ,”இத்தனை பிள்ளைகள் ஏன் நீங்கள் பெற்றீர்கள். காங்கிரசுக்கு மாற்று என்று விட்டு நீங்களும் அதே வாரிசு அரசியலை செய்யலாமா ?” என்று கேட்கப்பட்ட பொழுது ,”நான் ஏன் அத்தனை பிள்ளைகள் பெறக்கூடாது என்று நீங்கள் அப்பொழுது சொல்லவில்லையே ! மக்கள் விரும்புகிறார்கள். நாட்டு நலனுக்காக என் குடும்பத்தினர் அரசியலுக்கு வருகிறார்கள்.” என்ற லாலுவை வழக்குகள் துரத்துகின்றன. தோல்விகள் நிறைத்தாலும் தற்பொழுதும் அவரின் அடுத்தச் செயல்பாடு என்ன என்று கூர்மையாகக் கவனிக்கப்படுகிறது. லாலுவை அப்படியே காலி என்று எழுதிய பொழுதெல்லாம் மீண்டுவந்து எதையாவது செய்தே இருக்கிறார். பொறுத்திருப்போம்

சச்சின் சுயசரிதை-பாகம் 1 !


Sachin Tendulkar இன் சுயசரிதையின் சாரம் சுடச்சுட-பாகம் ஒன்று !
சச்சினின் சுயசரிதையான Playing it My Wayநூலைப்பற்றிய அறிமுகத்தின் முதல் பகுதி இது. இந்த அறிமுகங்களில் பெரும்பாலும்,ஏன்,எங்கேயும் விமர்சனங்கள் இருக்காது. முதல் பாகத்தில் 1996 உலகக்கோப்பை வரையிலும்,அடுத்ததில் 2003 உலகக்கோப்பை வரையிலும்,மூன்றாவது பாகத்தில் டெஸ்டில் நம்பர் ஒன் இடம் பெற்ற கதை வரையும்,மிச்சம் இறுதி பாகத்திலும் இடம்பெறும். போலாம் ஜூட் :

இந்த நூலை தன்னுடைய சக இந்தியர்களுக்கு சச்சின் சமர்ப்பணம் செய்திருக்கிறார். நூலின் மொழிநடை மிகவும் எளிமையாகவே இருக்கிறது. யாருக்காக எழுதுகிறோம் என்கிற தெளிவோடு நூலை கட்டமைத்து இருக்கிறார்கள். நவம்பர் 16 அன்று முடிவுக்கு வந்த அவரின் கிரிக்கெட் பயணத்தின் இறுதிக்கணத்தில் “பாஜி ! நீங்கள் இறுதியாக ஒரு முறை பிட்சுக்கு போகவேண்டும் என்பதை நினைவுபடுத்த சொன்னீர்கள்.” என்று கோலி சொல்வதோடு நூல் துவங்குகிறது.

“மகனே வாழ்க்கை என்பது ஒரு புத்தகம். அதில் பல பாகங்களும்,பாடங்களும் உள்ளன. நீ கிரிக்கெட் வீரனாக இருக்கப்போகிற காலத்தை விட,சாதாரண மனிதனாக இருக்கப்போகிற காலமே அதிகம். ஆகவே,ஒரு தந்தையாக ,”சச்சின் ஒரு நல்ல மனிதன்” என்று பிறர் சொல்வதையே ,”சச்சின் ஒரு மகத்தான வீரன் !” என்பதைவிட நான் விரும்புவேன்.” என்கிற அவரின் தந்தையின் வரிகள் அவரை செலுத்தியிருக்கிறது.

நான்கு குழந்தைகள் கொண்ட வீட்டில் கடைக்குட்டியான சச்சின் தன் அக்கா சவீதா காஷ்மீர் போன பொழுது வாங்கித்தந்த பேட்டே தனக்கான முதல் கிரிக்கெட் பரிசு என்பதையும் அவரின் அக்காவுக்கு திருமணமான பொழுது அவர் எப்பொழுதும் தன்னுடனே இருக்கவேண்டும் என்று விவரம் தெரியாமல் அடம் பிடித்ததையும் பதிந்திருக்கிறார். அவர் இருந்த காலனியில் பெரிய குழிதோண்டி அதை செய்தித்தாளால் மூடி,மண்ணை பரப்பி பிறர் விழுவதை கண்டு ரசிக்கிற கூட்டத்தில் தலைவரும் முக்கிய நபர். பாதசாரியின் மீது நான்காம் மாடியில் இருந்து தண்ணீரை ஊற்றுவதும் இதில் அடக்கம்.

நான்கு பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்த மிடில்க்ளாஸ் குடும்பத்தில் பிறந்த சச்சின் பெற்றோரின் துன்பம் புரியாமல் சைக்கிள் வேண்டும் என்று வெளியே போகாமலே சில நாட்கள் போராட்டம் செய்துகொண்டு மொட்டை மாடியில் இருந்தபொழுது புழைக்கதவில் எட்டிப்பார்த்து தலை அதில் மாட்டிக்கொள்ள எண்ணெயை தடவி ‘தலை’யை மீட்டுத்தடவி சைக்கிள் வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள். அதற்கு என்னானது என்பதை நூலில் படித்துக்கொள்ளுங்கள்.

Ramesh Tendulkar

டென்னிஸ் வீரர் மெக்கன்ரோ மீது பெரிய மோகம் கொண்டு டென்னிஸ் ஆடிக்கொண்டும்,கிரிக்கெட் பக்கமும் கொஞ்சம் கண் பதித்த சச்சின் எது தன்னுடைய இறுதித்தேர்வு என்று அல்லாடிக்கொண்டிருந்த பொழுது தேவ் ஆனந்த் நடித்த கைட் படத்தை காலனிவாசிகள் டிவியில் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்க திருட்டு மாங்காய் பறிக்கப்போய் தொப்பென்று விழுந்ததற்கு தண்டனையாக கிரிக்கெட் பயிற்சிக்கு அச்ரேக்கரிடம் சேர்க்கப்படுவதில் முடிந்தது.

அறுபத்தி ஐந்து ரூபாய் ஆரம்பகட்ட பீஸ் ,மாதம் பத்து ரூபாய் என்றுகட்டிவிட்டு அச்ரேக்கரிடம் சச்சின் சேர்ந்தார். உடனே சச்சினை சேர்த்துக்கொள்ளவில்லை அவர். முதல்முறை பேட் செய்யும் பொழுது சொதப்பியவருக்கு அவரின் அண்ணனே இன்னொரு வாய்ப்பு வாங்கித்தந்து மீண்டும் ஆடவைத்து சேர்த்துவிட்டார். ஒரே ஒரு கிரிக்கெட் உடையை வைத்துக்கொண்டு ஒரே நாளில் மூன்று முறை பயிற்சிக்கு போகவேண்டி இருந்ததால் பால்கனியில் துவைத்து காயப்போட்டு அணிந்து போவது சச்சினின் வழக்கம். ஒரே நாளைக்கு இருமுறை துணியை துவைக்க வேண்டியதால் ஈரமான பாக்கெட்டோடு தான் எப்பொழுதும் பயிற்சிக்கான பயணம்.
சச்சின் அவரின் செல்ல வீரன் ஆனதும் பீஸ் என்பதை வாங்கிக்கொள்ளாமல் வடாபாவ்,ஜூஸ் வாங்கித்தந்து ஊக்குவிக்கும் மற்றொரு தந்தையாக அவர் மாறியிருந்தார்.

முதல்முறையாக க்ளப்புக்கு ஆடிய ஆட்டத்தில் சச்சின் டக் அவுட்,அடுத்த போட்டியும் அவ்வாறே. மூன்றாவது போட்டியில் 24 ரன்கள் அடித்தாலும் எக்ஸ்ட்ராக்களை சேர்த்து முப்பது ரன்களுக்கு மேல் இவர் கணக்கில் வந்தால் சச்சினின் பெயர் செய்தித்தாளில் வரும் என்றோ ஸ்கோரர் இவரின் அனுமதியோடு ஸ்கோர்கார்டை மாற்றி எழுதினார். அதற்கு கடுமையாக அச்ரேக்கர் கடிந்து கொள்ள அன்றுமுதல் இறுதிவரை நேர்மையற்ற முறையில் கிரிக்கெட் ஆடக்கூடாது என்பதை உறுதியாக கடைபிடித்தேன் என்று பதிகிறார்.
அண்டர் 15 அணியில் ஒரு ரன் அவுட்டால் இடம் கிடைக்காமல் போய் பேருந்துக்கு காசில்லாமல் வீட்டுக்கு நடந்தே போன ஆரம்பகால வாழ்க்கை தான் அவருக்கு கிடைத்திருக்கிறது. அறுபது நாட்களில் ஐம்பத்தி ஐந்து போட்டிகளை விடாமல் ஆடுகிற அளவுக்கு பேய் போல பயிற்சி செய்திருக்கிறார். அப்படியே உணவு மேசையிலேயே உறங்கி எழுந்து ஆடப்போன காலங்கள் தான் அவரை செதுக்கியிருக்கிறது. அறுபது முதல் எழுபது பேர் சுற்றி நிற்க வீசப்படும் பந்தை எதிர்கொண்டு அவுட்டாகாமல் இருந்தால் ஸ்டம்ப்பில் இருக்கும் ஒரு ரூபாய் உனக்கே என்கிற போட்டியில் அடிக்கடி வெல்வது அவரின் பழக்கமாக இருந்திருக்கிறது.

கைல்ஸ் மற்றும் ஹாரிஸ் ஷீல்ட் ஆகிய இரண்டு கோப்பைகளுக்கும் விளையாடிக்கொண்டு இருந்த காலத்தில் 125 அடித்த ஒரே ஒரு போட்டியில் மட்டும் அவர் அவுட்டாகி இருக்கிறார். அந்த ஆட்டத்தில் அவர் விக்கெட் இழந்தது கவித்துவமான காட்சி. கேட்கும் இயந்திரம் அணிந்துகொண்டு ஒரு ஆப் ஸ்பின்னர் பந்தை வீசியிருக்கிறார். அது சச்சினை பீட் செய்து கிரீசுக்கு வெளியே கொண்டுவந்திருக்கிறது. விக்கெட் கீப்பர் பந்தை ஒரு கணத்தில் மிஸ் செய்ய ஸ்டம்பிங் வாய்ப்பு பறிபோயிருக்க வேண்டிய சூழலில்,மீண்டும் க்ரீசுக்குள் நுழையாமல் சச்சின் வெளியே நிற்க விக்கெட் கீப்பர் அவுட் செய்து முடித்தார். “அது கருணையினால் அல்ல. அவர் வீசியது நல்ல பந்து. அதற்கான மரியாதை அது. அவ்வளவே !” என்கிறார்.

சுனில் கவாஸ்கரின் பேட்கள் தான் சச்சினுக்கு சொந்தமாக கிடைத்த முதல் பேட்.. அதை கவாஸ்கரின் உறவினர் ஹேமந்த் கேன்க்ரே சச்சினின் ஆட்டத்தை பார்த்து அச்ரேக்கரின் பரிந்துரையின் பெயரில் பரிசளித்து இருக்கிறார். கட்டாக்கில் மும்பை அணிக்காக ஆடுகிற பொழுது மைதானத்தில் எல்லாரின் ஷூக்களை இன்னொருவர் மீது வீசி விளையாடும் விஷமமான ஆட்டத்தை துவங்கி வைத்தது டெண்டுல்கர் தான். பாகிஸ்தான் அணி இந்தியாவில் உலகக்கோப்பை ஆடவந்த பொழுது இம்ரான் கான் அணியில் மாற்று வீரராக பீல்டிங் செய்து கபில் தேவ் அடித்த பந்தை கேட்ச் செய்யவெல்லாம் சச்சின் முயன்றிருக்கிறார்.

இரானி கோப்பையில் பதினைந்து வயதில் ROI அணிக்காக டெல்லியை எதிர்த்து விளையாடிய அன்று சச்சின் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். அணியின் மற்ற விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன. ஒன்பதாவது விக்கெட் சரிந்ததுடன் ஆட்டம் முடிந்திருக்க வேண்டும். காரணம் குருஷரன் சிங் என்கிற வீரருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. கையில் கட்டோடு சச்சின் என்கிற சிறுவனுக்காக அவர் ஒரே கையில் ஆடி தன் அண்ணன்,அப்பா முன்னால் சதமடிக்க வைத்தார். அதற்கு நன்றிக்கடனாக அவர் எப்பொழுது நல்லெண்ண போட்டியில் ஆட அழைத்தாலும் சச்சின் போக மறுப்பதில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை சந்தித்த சச்சின் சொதப்பி எடுத்தார். இருபத்தி நான்கு பந்துகள் ஆடினாலும் எந்த திருப்தியும் ஏற்படவில்லை. பவுன்சர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவரை வரவேற்றன. ரவி சாஸ்திரி ,”முதல் இருபது நிமிடங்கள் பொறுமையாக ஆடு !” என்று அறிவுரை சொல்ல அது அவருக்கு பெரிதும் உதவியது.

சியால்கோட்டில் நடந்த போட்டியில் வக்கார் யூனுஸ் வீசிய பந்தை தவறாக கணிக்க அது நன்றாக மேலெழும்பி ஹெல்மெட்டில் பட்டு மூக்கை பதம் பார்க்க ரத்தம் சொட்ட சச்சின் உள்ளே போனார் ,”குழந்தைகள் போய் பால் மட்டும் குடித்தால் நல்லது” என்று போஸ்டர்கள் காட்டப்பட்டன. திரும்பி வந்தார் சச்சின். அடுத்தடுத்து இரண்டு பந்துகள் பவுண்டரிக்கு பறந்தன. அரை சதம் கடந்தார் அவர்.
காட்சிப் போட்டியாக நடந்த ட்வென்டி ட்வென்டி போட்டியில் ஒரே ஓவரில் காதிரை போட்டு பின்னி எடுத்த சச்சின் நான்கு சிக்ஸர்களை விளாசித்தள்ளியதை அவர் வர்ணனையில் வாசிக்க வேண்டும்.

நியூசிலாந்து அணியுடனான போட்டியில் இரண்டு பவுண்டரிகள் அடித்த பிறகு தவறாக கணித்து தூக்கி அடித்து அவுட்டாக அவரின் கேட்ச்சை பிற்கால கோச் ஜான் ரைட் எடுக்க சச்சின் அழுதுகொண்டே முதல் சதத்தை மிஸ் செய்தார். “நீங்கள் அந்த கேட்ச்சை விட்டிருக்க வேண்டும் ஜான் !” என்று பிற்காலத்தில் சொன்னார்.
“முதல் சதத்தை எப்படிக் கொண்டாடுவது என்று தெரியாமல் கூச்சப்பட்டேன் நான்” என்பதும் சச்சினின் வாக்குமூலம். சச்சினுக்கு அந்த போட்டியின் சதத்துக்காக வழங்கப்பட்ட ஷேம்பெயின் பாட்டிலை அப்பொழுது பதினெட்டு வயது நிறையாததால் ஓபன் செய்யாமல் சாராவின் முதல் பிறந்தநாளின் பொழுது திறந்திருக்கிறார். அந்த போட்டிக்கு பின்னர் வீட்டிலிருந்து வந்த அழைப்பில் பேசக் காத்துக்கொண்டிருந்தவர்கள் எண்ணிக்கை நாற்பது !

WACA மைதானத்தில் எகிறி வரும் பந்தை BACKFOOT இல் நின்று மென்மையாக ஆடி சதமடித்த போட்டியில் பந்தை ஒருமுறை தூக்கி பந்து வீச்சாளரிடம் கொடுக்கப்போன பொழுது ஆலன் பார்டர் ,”பந்தை தொட்டால் தொலைந்தாய் !” என்று எச்சரித்ததை இறுதிவரை சச்சின் பின்பற்றினார்.

மெர்வ் ஹூக்ஸ் என்கிற கிடாமீசை கொண்ட வீரரை வேங்கடபதி ராஜூவை அனுப்பி மீசையைப் பிடித்து இழுக்க சொல்லி சச்சின் முதலிய இளசுகள் பட்டாளம் ஊக்குவித்தது. அவரும் அதை செய்ய ஹூக்ஸ் சிரித்துக்கொண்டே அமைதியாக இருந்துவிட்டார்.
அஞ்சலியுடனான காதல் அத்தியாயங்கள் நூலின் முதல் பாகத்தின் ஹைலைட் எனலாம். இங்கிலாந்து தேசத்து அன்னை,குஜராத்தி தந்தைக்கு பிறந்த அஞ்சலி ஆரஞ்சு மற்றும் நீலவண்ண உடையில் ஏர்போர்ட்டில் இவரைப் பார்த்து பின்தொடர்ந்து இருக்கிறார். இவரும் கண்டதும் ஈர்ப்பு ஏற்பட்டு உடன் அண்ணன் இருந்தபடியால் அமைதியாக திரும்பியிருக்கிறார். அதற்கு பின்னர் அவரே லேண்ட்லைன் எண் வாங்கி சச்சின் வீட்டுக்கு அழைக்க அந்த அழைப்பை சச்சினே எடுத்துப் பேச அங்கே துவங்கியது காதல் பாதை.

இவரின் வீட்டுக்கு பெண் ரிப்போர்டர் போல வந்து லூட்டி அடித்துவிட்டு அவர் போயிருக்கிறார். ஆறு மாதகாலம் ஆஸ்திரேலியா போன காலத்தில் அழைக்காமலே இருந்துவிட்டு தேர்வு நாளன்று அழைத்து அஞ்சலிக்கு அவர் வாழ்த்து சொல்ல அங்கே கண்ணீரும்,காதலும் பொங்கிப் பாய்ந்திருக்கிறது. மாநிலளவில் முதலிடம் பெற்று மேற்படிப்பும் படிக்கப் போன அஞ்சலி அந்த அழைப்பில் சச்சினிடம் ,”நான் பெயில் ஆகிடுவேன்.” என்று சொல்லியிருக்கிறார். சச்சினின் அழைப்பு மிகப்பெரிய ஊக்கத்தை தந்தது என்று பின்னர் அவர் சொல்லியிருக்கிறார்.

கிரிக்கெட் பற்றி ஆரம்பத்தில் ஒன்றுமே தெரியாமல் இருந்த அஞ்சலி பின்னர் படிப்படியாக தேறிக்கொண்டே வந்தார். சச்சினின் வீட்டில் அவர்களின் காதலை சொல்லி நிச்சயத்தார்த்தம் நோக்கி கொண்டு செல்லும் பொறுப்பு அஞ்சலி வசமே வந்தது. காரணம் சச்சினுக்கு சரளமாக பேசவராது என்பது தான். அதே போல கடலை போட ஆரம்பித்த ஆரம்பகாலங்களில் ரொம்பவும் சச்சின் தடுமாறி இருக்கிறார். ஆங்கிலம் அவ்வளவு சரளமாக அப்பொழுது பேசவராது என்பது தான் காரணம்.

சச்சினுக்காக தன்னுடைய பிரகாசமான மருத்துவ வாழ்க்கையை அஞ்சலி தியாகம் செய்தார். சச்சின் சொல்வது போல அவரே அவர் வாழ்வின் சிறந்த பார்ட்னர்ஷிப் !
கவுண்டி கிரிக்கெட் ஆடிய பொழுது நேராக இடம் போய் சேர ட்ராபிக் போலீஸ் வண்டியை பின்தொடர்ந்து சென்றிருக்கிறார். அப்பொழுது பத்து கிலோமீட்டர் கூடுதலாக ஒட்டியதற்காக அவர் வண்டியை நிறுத்திய காவலர் கவுண்டி கிரிக்கெட்டுக்கு ஒப்பந்தமான முதல் அயல்நாட்டு வீரர் என்று தெரிந்ததும் கண்ணியமாக அனுப்பிவிட்டார்.

ஹீரோ கப் போட்டியில் சச்சின் இறுதி ஓவர் வீசி வெற்றியை பெற்றுத்தந்தது தெரியும். அந்த போட்டியில் ஒரு கீரிப்பிள்ளை மைதானத்தில் அடிக்கடி எட்டிப்பார்த்ததாம். அது எட்டிப்பார்க்கும் பொழுதெல்லாம் தென் ஆப்ரிக்க அணியில் ஒரு விக்கெட் விழுந்தது !
நவ்ஜோத் சித்துவுக்கு கழுத்து சுளுக்கிக்கொண்ட நியூசிலாந்து அணியுடனான போட்டியில் தானே கேட்டு வாங்கி துவக்க ஆட்டக்காரராக களம் புகுந்து சச்சின் ஆடியது ருத்ரதாண்டவம்.

1994 இல் மேற்கிந்திய அணிகளுடனான ஒரு நாள் போட்டித்தொடரில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் டக் அவுட்டாக சச்சின் அவ்வளவுதான் என்று பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்தார்கள். இறுதிப்போட்டியில் அறுபத்தி ஆறு ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தவர் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் அரை சதமடித்து மற்றொரு தொடரையும் வெல்ல காரணமானார்.

1996 ஆம் வருட உலகக்கோப்பையில் ஜூரத்துடன் ஆடிய கென்யா அணியுடனான போட்டியில் எழுபது ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் சேஸ் செய்த பாகிஸ்தானின் அமீர் சொஹைல் சிறப்பாக ஆடி வெங்கடேஷ் பிரசாத்தின் பந்தை பவுண்டரிக்கு விளாசிவிட்டு அவரை வசைபாடினார். அதற்கு பதிலடி அடுத்த பந்தில் அவர் போல்ட் ஆனது. மேலும் இரண்டு விக்கெட்களை வெங்கி கைப்பற்றினார்.

ஸ்ரீலங்கா அணியுடனான போட்டியில் ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணைக்கொண்டு இடப்பட்ட பிட்ச்சை சரியாக கணிக்காமல் சேஸ் செய்ய முடிவு செய்து இந்திய அணி தோற்று வெளியேறியது. அடுத்து இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு சச்சின் வசம் வந்திருந்தது. அந்தக் கதை நாளை !

தனியாகத்தான் எல்லாம் செய்கிறோம் நாம் !


ஒரு கோப்பையில்
எதையோ ஊற்றி அருந்துவது
உலர மறுக்கும் திரவம் கோர்த்த
உடைகளை அறுத்து நெய்வது
பெருகும் சூரிய ஒளியில் கட்டாயமாகத் தரப்பட்ட
ஒரு முத்தத்தை ஆவியாக்குதல்
கன்னத்தில் பதிக்கப்பட்ட காயங்களின்
களிம்புகளைப் பிடுங்கி எடுத்தல்
கொலைக்கான கருவிகளைக் கூர்பார்த்து
தன்னையே கொன்று விடல்
பதிந்து போன பிணங்களின் நினைவிடத்தில்
மறைந்து நின்று மலர்த்தூவல்
எங்கோ பொழிந்த மழையைக் கடத்திவந்த
நகத்தைக் கடித்து உண்ணல்
சிரித்தபடியே தொலைத்துவிட்ட
உறவின் ஒற்றைவரி முகம் தேடி,
முகவரி நாளில் அலைதல்
எல்லாம் தனியாகத்தான் செய்கிறோம் நாம்
யாரிடமும் எதையும் சொல்வதில்லை
சொல்லிப்புரிவதில்லை உன் ரகசியங்கள் யாருக்கும் !

தாவரவியல் ராணி ஜானகி அம்மாள் !


ஜானகி அம்மாள் உலக அறிவியலில் தனித்த இடம் பெற்றவர். கேரளாவில் உள்ள தெள்ளிச்சேரி நகரில் பதினொரு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்தை முறையே சென்னையின் WCC கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரியில் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலையில் எம்.எஸ். மற்றும் முனைவர் பட்டத்தைப் பெற்றார். இந்தியாவிலேயே அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் என்கிற பெருமையைப் பெற்றார். இந்தியா திரும்பி வந்து திருவனந்தபுரம் பல்கலையில் பேராசிரியராகப் பணியாற்றிய பின்னர்க் கரும்பு உற்பத்தி மையத்தில் கோவையில் பணிக்குச் சேர்ந்தார். அங்கே C A பார்பர் மற்றும் T S வெங்கட்ராமன் ஆகிய அறிவியல் அறிஞர்கள் இந்திய சூழலுக்கு ஏற்ற பல்வேறு கரும்பு கலப்பினங்களை உருவாக்கி பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் கரும்பு உற்பத்தியை பலமடங்கு பெருக்கினார்கள். வெவ்வேறு இரு மடங்கு எண்ணிக்கையில் க்ரோமோசோம் எண்ணிக்கை கரும்பின் வெவ்வேறு வகைகளில் காணப்படுவதையும் அவற்றைக் கொண்டு நமது தேவைக்கேற்ற கரும்பு வகைகளை உருவாக்க முடியும் என்றும் தன் ஆய்வுகள் மூலம் அவர் நிரூபித்தார்
SG6332 என்கிற கரும்பு வகையை அவர் தன்னுடைய கலப்பு சோதனைகளின் மூலம் உருவாக்கினார். அது மிகவும் சுவைமிகுந்தாகவும் இந்திய மண்ணில் சிறப்பாக வளரும் தன்மை கொண்டதாகவும் இருந்தது.

உலகப்போர் சமயத்தில் இங்கிலாந்தில் பத்து ஆண்டுகள் ஜான் இன்ஸ் மையம் மற்றும் ராயல் தோட்டக்கலை குழுமத்தில் பணியாற்றினார். அங்கே இருக்கும் பொழுது COLCHICINE ஐ நீரில் கலந்து முளைக்கும் விதைகளில் தெளிக்கிற பொழுது குரோமோசோம் எண்ணிக்கை இரு மடங்ககை பெரிய வடிவம் கொண்ட இலைகளும்,வெவ்வேறு வகையான தடித்த இதழ்கள் கொண்ட மலர்களும் உருவாவதைக் கண்டார். அப்படி அவர் உருவாக்கிய மக்னோலியா மலர்களுக்கு மக்னோலியா கோபுஸ் ஜானகி அம்மாள் என்று பெயரிட்டார்கள்.

மிச்சிகன் பல்கலைக்கழகம் உலகம் முழுக்க உள்ள மலர்களின் பெயர்களைத் தொகுக்க முடிவு செய்த பொழுது கபிலரின் சங்கப்பாடலில் வரும் நூறு மலர்களை அப்பட்டியலில் இணைக்க அவர் பரிந்துரைத்தார். மனிதனால் பயிரடப்படும் செடிகளின் க்ரோமோசோம் அட்லஸ் என்கிற கடினமான உழைப்பில் எழுந்த புத்தகத்தை C D டார்லிங்க்டன் என்கிற அறிஞரோடு இணைந்து அவரே உருவாக்கினார். அதில் பல்லாயிரக்கணக்கான இந்திய செடிகள் இடம்பெறவும் அவர் காரணமானார்.

இந்தியாவின் பழங்குடிகள் அதிலும் கேரளா மற்றும் திருநெல்வேலி மலைப்பகுதிகளில் உள்ள பழங்குடிகளின் மருத்துவப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் தாவரங்கள் பற்றி மிகப்பெரும் ஆய்வுகளைச் செய்தார். எப்படி வெவ்வேறு கலப்பினங்களை அவர்கள் உருவாக்கி சாதிக்கிறார்கள் என்று அவர் அறிவியல் ரீதியாக நிரூபித்தார். மேற்கு தொடர்ச்சி மலைகளின் மழைக்காடுகளில் உள்ள தாவரங்களின் வகைப்பாட்டியலை உருவாக்கினார். வடகிழக்கு இமயமலையின் தாவரங்கள் அதிகமான வகைகளில் அமைந்திருப்பதற்குக் காரணம் அதன் குளிர்ந்த மற்றும் ஈரப்பதம் மிகுந்த தட்பவெப்பத்தில் வெவ்வேறு பண்புகள் கொண்ட தாவரங்கள் கலப்பதற்கான வாய்ப்புகள் வறண்ட குளிர்ப்பிரதேசமான வடமேற்கு இமயமலையை விட அதிகம் என்று உறுதிபட நிறுவினார். மேலும் பர்மிய,சீன மற்றும் மலேசிய தாவர இனங்கள் எப்படி இந்தியச்சூழலில் கலந்து பல்வகைத் தாவர வகைகளை உருவாக்கின என்பதை உயிரணுவியல் ரீதியாக விரிவாக விளக்கினார்.

உயிரணுவியல் மற்றும் மரபணுவியல் ஆகியவற்றில் பெரிய அறிவு கொண்டிருந்த அவர் நேரு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியா திரும்பி அறிவியல் முன்னேற்றத்தில் பங்குகொண்டார். இந்திய தாவரவியியல் அளவையியல் மையத்தில் பணியாற்றிய அவர் அலகாபாத் மற்றும் ஜம்முவில் ஆய்வு மையங்களை ஏற்படுத்தினார். ஜம்மு புதினா,ஊமத்தை,அருகம்புல்,கருணைக்கிழங்கு,கத்தரி இனங்களின் உயிரணு மற்றும் மரபணுக்கள் பற்றிய முழுமையான ஆய்வுகளை அவர் செய்தார். ஸ்விட்சர்லாந்தில் அவர் தேனீக்களின் கூடுகளைக் கொண்டு சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கமுடியும் என்று கண்டறிந்து சொன்னதை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சாலைகளில் மாசைக் கட்டுப்படுத்த தேனீக்களின் கூடுகளைப் பயன்படுத்துகிறார்கள். தாவரங்கள் பல்வேறு வகைகளாகப் பல்கிப்பெருக தேனீக்களின் பங்களிப்பு என்ன என்பது பற்றியும் அவர் மகத்தான ஆய்வுகள் செய்தார்

.

மக்கள்,தாவரங்கள் மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகிவற்றுக்கு இடையே உள்ள உறவு மற்றும் தொடர்புகள் பற்றி முறையான ஆய்வுகள் செய்த அவர் இந்திய வேளாண் அறிஞர்கள் தீவிரமாகத் தேசநலன் மற்றும் வளர்ச்சி என்கிற பெயரில் முன்னெடுத்த பசுமைப் புரட்சி முதலிய பல்வேறு முன்னெடுப்புகளை எதிர்த்தார். பொருளாதார,தேசிய,தத்துவ ரீதியாகத் தாவரங்களை அணுகாமல் சூழலியல்,புவியியல் ஆகியவற்றின் மூலமே அவர் அணுகினார். மனிதனின் மகத்தான கலாசாரப் பரிணாமத்தை தாவரங்களின் உயிரணு மற்றும் மரபணுக்களைக் கொண்டு விளக்கிட முடியும் என்று அவர் உறுதிபடச் செயல்பட்டார்.

ஓய்வுக்குப் பின்னரும் மதுரவாயிலில் தீவிரமான ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார். அவர் எண்பத்தி நான்கு வயதில் மரணமடைவதற்கு இரண்டு வாரங்கள் முன்பு வரை ஆய்வுகள் செய்தவண்ணம் இருந்தார். பூமியையே ஆய்வுக்களமாக ஆக்கிக்கொண்ட அவரின் இறுதி ஆய்வுத்தாள் அவரின் மரணத்துக்குப் பின்னர் வெளிவந்தது. இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது பெற்ற அவரின் பெயரால் வகைப்பாட்டியலில் அற்புதமான பங்களிப்பு செய்வோருக்கு விருது வழங்கப்படுகிறது. இறுதிவரை திருமணமே செய்துகொள்ளாமல் மக்களுக்கான,மரங்களுக்கான அறிவியலில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அவர் இறுதிவரை புகழ் வெளிச்சம் தேடாத எளிமையான வாழ்க்கையையே அமைத்துக்கொண்டார். இன்று அவரின் பிறந்தநாள்