சச்சின் சுயசரிதை-பாகம் 1 !


Sachin Tendulkar இன் சுயசரிதையின் சாரம் சுடச்சுட-பாகம் ஒன்று !
சச்சினின் சுயசரிதையான Playing it My Wayநூலைப்பற்றிய அறிமுகத்தின் முதல் பகுதி இது. இந்த அறிமுகங்களில் பெரும்பாலும்,ஏன்,எங்கேயும் விமர்சனங்கள் இருக்காது. முதல் பாகத்தில் 1996 உலகக்கோப்பை வரையிலும்,அடுத்ததில் 2003 உலகக்கோப்பை வரையிலும்,மூன்றாவது பாகத்தில் டெஸ்டில் நம்பர் ஒன் இடம் பெற்ற கதை வரையும்,மிச்சம் இறுதி பாகத்திலும் இடம்பெறும். போலாம் ஜூட் :

இந்த நூலை தன்னுடைய சக இந்தியர்களுக்கு சச்சின் சமர்ப்பணம் செய்திருக்கிறார். நூலின் மொழிநடை மிகவும் எளிமையாகவே இருக்கிறது. யாருக்காக எழுதுகிறோம் என்கிற தெளிவோடு நூலை கட்டமைத்து இருக்கிறார்கள். நவம்பர் 16 அன்று முடிவுக்கு வந்த அவரின் கிரிக்கெட் பயணத்தின் இறுதிக்கணத்தில் “பாஜி ! நீங்கள் இறுதியாக ஒரு முறை பிட்சுக்கு போகவேண்டும் என்பதை நினைவுபடுத்த சொன்னீர்கள்.” என்று கோலி சொல்வதோடு நூல் துவங்குகிறது.

“மகனே வாழ்க்கை என்பது ஒரு புத்தகம். அதில் பல பாகங்களும்,பாடங்களும் உள்ளன. நீ கிரிக்கெட் வீரனாக இருக்கப்போகிற காலத்தை விட,சாதாரண மனிதனாக இருக்கப்போகிற காலமே அதிகம். ஆகவே,ஒரு தந்தையாக ,”சச்சின் ஒரு நல்ல மனிதன்” என்று பிறர் சொல்வதையே ,”சச்சின் ஒரு மகத்தான வீரன் !” என்பதைவிட நான் விரும்புவேன்.” என்கிற அவரின் தந்தையின் வரிகள் அவரை செலுத்தியிருக்கிறது.

நான்கு குழந்தைகள் கொண்ட வீட்டில் கடைக்குட்டியான சச்சின் தன் அக்கா சவீதா காஷ்மீர் போன பொழுது வாங்கித்தந்த பேட்டே தனக்கான முதல் கிரிக்கெட் பரிசு என்பதையும் அவரின் அக்காவுக்கு திருமணமான பொழுது அவர் எப்பொழுதும் தன்னுடனே இருக்கவேண்டும் என்று விவரம் தெரியாமல் அடம் பிடித்ததையும் பதிந்திருக்கிறார். அவர் இருந்த காலனியில் பெரிய குழிதோண்டி அதை செய்தித்தாளால் மூடி,மண்ணை பரப்பி பிறர் விழுவதை கண்டு ரசிக்கிற கூட்டத்தில் தலைவரும் முக்கிய நபர். பாதசாரியின் மீது நான்காம் மாடியில் இருந்து தண்ணீரை ஊற்றுவதும் இதில் அடக்கம்.

நான்கு பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்த மிடில்க்ளாஸ் குடும்பத்தில் பிறந்த சச்சின் பெற்றோரின் துன்பம் புரியாமல் சைக்கிள் வேண்டும் என்று வெளியே போகாமலே சில நாட்கள் போராட்டம் செய்துகொண்டு மொட்டை மாடியில் இருந்தபொழுது புழைக்கதவில் எட்டிப்பார்த்து தலை அதில் மாட்டிக்கொள்ள எண்ணெயை தடவி ‘தலை’யை மீட்டுத்தடவி சைக்கிள் வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள். அதற்கு என்னானது என்பதை நூலில் படித்துக்கொள்ளுங்கள்.

Ramesh Tendulkar

டென்னிஸ் வீரர் மெக்கன்ரோ மீது பெரிய மோகம் கொண்டு டென்னிஸ் ஆடிக்கொண்டும்,கிரிக்கெட் பக்கமும் கொஞ்சம் கண் பதித்த சச்சின் எது தன்னுடைய இறுதித்தேர்வு என்று அல்லாடிக்கொண்டிருந்த பொழுது தேவ் ஆனந்த் நடித்த கைட் படத்தை காலனிவாசிகள் டிவியில் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்க திருட்டு மாங்காய் பறிக்கப்போய் தொப்பென்று விழுந்ததற்கு தண்டனையாக கிரிக்கெட் பயிற்சிக்கு அச்ரேக்கரிடம் சேர்க்கப்படுவதில் முடிந்தது.

அறுபத்தி ஐந்து ரூபாய் ஆரம்பகட்ட பீஸ் ,மாதம் பத்து ரூபாய் என்றுகட்டிவிட்டு அச்ரேக்கரிடம் சச்சின் சேர்ந்தார். உடனே சச்சினை சேர்த்துக்கொள்ளவில்லை அவர். முதல்முறை பேட் செய்யும் பொழுது சொதப்பியவருக்கு அவரின் அண்ணனே இன்னொரு வாய்ப்பு வாங்கித்தந்து மீண்டும் ஆடவைத்து சேர்த்துவிட்டார். ஒரே ஒரு கிரிக்கெட் உடையை வைத்துக்கொண்டு ஒரே நாளில் மூன்று முறை பயிற்சிக்கு போகவேண்டி இருந்ததால் பால்கனியில் துவைத்து காயப்போட்டு அணிந்து போவது சச்சினின் வழக்கம். ஒரே நாளைக்கு இருமுறை துணியை துவைக்க வேண்டியதால் ஈரமான பாக்கெட்டோடு தான் எப்பொழுதும் பயிற்சிக்கான பயணம்.
சச்சின் அவரின் செல்ல வீரன் ஆனதும் பீஸ் என்பதை வாங்கிக்கொள்ளாமல் வடாபாவ்,ஜூஸ் வாங்கித்தந்து ஊக்குவிக்கும் மற்றொரு தந்தையாக அவர் மாறியிருந்தார்.

முதல்முறையாக க்ளப்புக்கு ஆடிய ஆட்டத்தில் சச்சின் டக் அவுட்,அடுத்த போட்டியும் அவ்வாறே. மூன்றாவது போட்டியில் 24 ரன்கள் அடித்தாலும் எக்ஸ்ட்ராக்களை சேர்த்து முப்பது ரன்களுக்கு மேல் இவர் கணக்கில் வந்தால் சச்சினின் பெயர் செய்தித்தாளில் வரும் என்றோ ஸ்கோரர் இவரின் அனுமதியோடு ஸ்கோர்கார்டை மாற்றி எழுதினார். அதற்கு கடுமையாக அச்ரேக்கர் கடிந்து கொள்ள அன்றுமுதல் இறுதிவரை நேர்மையற்ற முறையில் கிரிக்கெட் ஆடக்கூடாது என்பதை உறுதியாக கடைபிடித்தேன் என்று பதிகிறார்.
அண்டர் 15 அணியில் ஒரு ரன் அவுட்டால் இடம் கிடைக்காமல் போய் பேருந்துக்கு காசில்லாமல் வீட்டுக்கு நடந்தே போன ஆரம்பகால வாழ்க்கை தான் அவருக்கு கிடைத்திருக்கிறது. அறுபது நாட்களில் ஐம்பத்தி ஐந்து போட்டிகளை விடாமல் ஆடுகிற அளவுக்கு பேய் போல பயிற்சி செய்திருக்கிறார். அப்படியே உணவு மேசையிலேயே உறங்கி எழுந்து ஆடப்போன காலங்கள் தான் அவரை செதுக்கியிருக்கிறது. அறுபது முதல் எழுபது பேர் சுற்றி நிற்க வீசப்படும் பந்தை எதிர்கொண்டு அவுட்டாகாமல் இருந்தால் ஸ்டம்ப்பில் இருக்கும் ஒரு ரூபாய் உனக்கே என்கிற போட்டியில் அடிக்கடி வெல்வது அவரின் பழக்கமாக இருந்திருக்கிறது.

கைல்ஸ் மற்றும் ஹாரிஸ் ஷீல்ட் ஆகிய இரண்டு கோப்பைகளுக்கும் விளையாடிக்கொண்டு இருந்த காலத்தில் 125 அடித்த ஒரே ஒரு போட்டியில் மட்டும் அவர் அவுட்டாகி இருக்கிறார். அந்த ஆட்டத்தில் அவர் விக்கெட் இழந்தது கவித்துவமான காட்சி. கேட்கும் இயந்திரம் அணிந்துகொண்டு ஒரு ஆப் ஸ்பின்னர் பந்தை வீசியிருக்கிறார். அது சச்சினை பீட் செய்து கிரீசுக்கு வெளியே கொண்டுவந்திருக்கிறது. விக்கெட் கீப்பர் பந்தை ஒரு கணத்தில் மிஸ் செய்ய ஸ்டம்பிங் வாய்ப்பு பறிபோயிருக்க வேண்டிய சூழலில்,மீண்டும் க்ரீசுக்குள் நுழையாமல் சச்சின் வெளியே நிற்க விக்கெட் கீப்பர் அவுட் செய்து முடித்தார். “அது கருணையினால் அல்ல. அவர் வீசியது நல்ல பந்து. அதற்கான மரியாதை அது. அவ்வளவே !” என்கிறார்.

சுனில் கவாஸ்கரின் பேட்கள் தான் சச்சினுக்கு சொந்தமாக கிடைத்த முதல் பேட்.. அதை கவாஸ்கரின் உறவினர் ஹேமந்த் கேன்க்ரே சச்சினின் ஆட்டத்தை பார்த்து அச்ரேக்கரின் பரிந்துரையின் பெயரில் பரிசளித்து இருக்கிறார். கட்டாக்கில் மும்பை அணிக்காக ஆடுகிற பொழுது மைதானத்தில் எல்லாரின் ஷூக்களை இன்னொருவர் மீது வீசி விளையாடும் விஷமமான ஆட்டத்தை துவங்கி வைத்தது டெண்டுல்கர் தான். பாகிஸ்தான் அணி இந்தியாவில் உலகக்கோப்பை ஆடவந்த பொழுது இம்ரான் கான் அணியில் மாற்று வீரராக பீல்டிங் செய்து கபில் தேவ் அடித்த பந்தை கேட்ச் செய்யவெல்லாம் சச்சின் முயன்றிருக்கிறார்.

இரானி கோப்பையில் பதினைந்து வயதில் ROI அணிக்காக டெல்லியை எதிர்த்து விளையாடிய அன்று சச்சின் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். அணியின் மற்ற விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன. ஒன்பதாவது விக்கெட் சரிந்ததுடன் ஆட்டம் முடிந்திருக்க வேண்டும். காரணம் குருஷரன் சிங் என்கிற வீரருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. கையில் கட்டோடு சச்சின் என்கிற சிறுவனுக்காக அவர் ஒரே கையில் ஆடி தன் அண்ணன்,அப்பா முன்னால் சதமடிக்க வைத்தார். அதற்கு நன்றிக்கடனாக அவர் எப்பொழுது நல்லெண்ண போட்டியில் ஆட அழைத்தாலும் சச்சின் போக மறுப்பதில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை சந்தித்த சச்சின் சொதப்பி எடுத்தார். இருபத்தி நான்கு பந்துகள் ஆடினாலும் எந்த திருப்தியும் ஏற்படவில்லை. பவுன்சர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவரை வரவேற்றன. ரவி சாஸ்திரி ,”முதல் இருபது நிமிடங்கள் பொறுமையாக ஆடு !” என்று அறிவுரை சொல்ல அது அவருக்கு பெரிதும் உதவியது.

சியால்கோட்டில் நடந்த போட்டியில் வக்கார் யூனுஸ் வீசிய பந்தை தவறாக கணிக்க அது நன்றாக மேலெழும்பி ஹெல்மெட்டில் பட்டு மூக்கை பதம் பார்க்க ரத்தம் சொட்ட சச்சின் உள்ளே போனார் ,”குழந்தைகள் போய் பால் மட்டும் குடித்தால் நல்லது” என்று போஸ்டர்கள் காட்டப்பட்டன. திரும்பி வந்தார் சச்சின். அடுத்தடுத்து இரண்டு பந்துகள் பவுண்டரிக்கு பறந்தன. அரை சதம் கடந்தார் அவர்.
காட்சிப் போட்டியாக நடந்த ட்வென்டி ட்வென்டி போட்டியில் ஒரே ஓவரில் காதிரை போட்டு பின்னி எடுத்த சச்சின் நான்கு சிக்ஸர்களை விளாசித்தள்ளியதை அவர் வர்ணனையில் வாசிக்க வேண்டும்.

நியூசிலாந்து அணியுடனான போட்டியில் இரண்டு பவுண்டரிகள் அடித்த பிறகு தவறாக கணித்து தூக்கி அடித்து அவுட்டாக அவரின் கேட்ச்சை பிற்கால கோச் ஜான் ரைட் எடுக்க சச்சின் அழுதுகொண்டே முதல் சதத்தை மிஸ் செய்தார். “நீங்கள் அந்த கேட்ச்சை விட்டிருக்க வேண்டும் ஜான் !” என்று பிற்காலத்தில் சொன்னார்.
“முதல் சதத்தை எப்படிக் கொண்டாடுவது என்று தெரியாமல் கூச்சப்பட்டேன் நான்” என்பதும் சச்சினின் வாக்குமூலம். சச்சினுக்கு அந்த போட்டியின் சதத்துக்காக வழங்கப்பட்ட ஷேம்பெயின் பாட்டிலை அப்பொழுது பதினெட்டு வயது நிறையாததால் ஓபன் செய்யாமல் சாராவின் முதல் பிறந்தநாளின் பொழுது திறந்திருக்கிறார். அந்த போட்டிக்கு பின்னர் வீட்டிலிருந்து வந்த அழைப்பில் பேசக் காத்துக்கொண்டிருந்தவர்கள் எண்ணிக்கை நாற்பது !

WACA மைதானத்தில் எகிறி வரும் பந்தை BACKFOOT இல் நின்று மென்மையாக ஆடி சதமடித்த போட்டியில் பந்தை ஒருமுறை தூக்கி பந்து வீச்சாளரிடம் கொடுக்கப்போன பொழுது ஆலன் பார்டர் ,”பந்தை தொட்டால் தொலைந்தாய் !” என்று எச்சரித்ததை இறுதிவரை சச்சின் பின்பற்றினார்.

மெர்வ் ஹூக்ஸ் என்கிற கிடாமீசை கொண்ட வீரரை வேங்கடபதி ராஜூவை அனுப்பி மீசையைப் பிடித்து இழுக்க சொல்லி சச்சின் முதலிய இளசுகள் பட்டாளம் ஊக்குவித்தது. அவரும் அதை செய்ய ஹூக்ஸ் சிரித்துக்கொண்டே அமைதியாக இருந்துவிட்டார்.
அஞ்சலியுடனான காதல் அத்தியாயங்கள் நூலின் முதல் பாகத்தின் ஹைலைட் எனலாம். இங்கிலாந்து தேசத்து அன்னை,குஜராத்தி தந்தைக்கு பிறந்த அஞ்சலி ஆரஞ்சு மற்றும் நீலவண்ண உடையில் ஏர்போர்ட்டில் இவரைப் பார்த்து பின்தொடர்ந்து இருக்கிறார். இவரும் கண்டதும் ஈர்ப்பு ஏற்பட்டு உடன் அண்ணன் இருந்தபடியால் அமைதியாக திரும்பியிருக்கிறார். அதற்கு பின்னர் அவரே லேண்ட்லைன் எண் வாங்கி சச்சின் வீட்டுக்கு அழைக்க அந்த அழைப்பை சச்சினே எடுத்துப் பேச அங்கே துவங்கியது காதல் பாதை.

இவரின் வீட்டுக்கு பெண் ரிப்போர்டர் போல வந்து லூட்டி அடித்துவிட்டு அவர் போயிருக்கிறார். ஆறு மாதகாலம் ஆஸ்திரேலியா போன காலத்தில் அழைக்காமலே இருந்துவிட்டு தேர்வு நாளன்று அழைத்து அஞ்சலிக்கு அவர் வாழ்த்து சொல்ல அங்கே கண்ணீரும்,காதலும் பொங்கிப் பாய்ந்திருக்கிறது. மாநிலளவில் முதலிடம் பெற்று மேற்படிப்பும் படிக்கப் போன அஞ்சலி அந்த அழைப்பில் சச்சினிடம் ,”நான் பெயில் ஆகிடுவேன்.” என்று சொல்லியிருக்கிறார். சச்சினின் அழைப்பு மிகப்பெரிய ஊக்கத்தை தந்தது என்று பின்னர் அவர் சொல்லியிருக்கிறார்.

கிரிக்கெட் பற்றி ஆரம்பத்தில் ஒன்றுமே தெரியாமல் இருந்த அஞ்சலி பின்னர் படிப்படியாக தேறிக்கொண்டே வந்தார். சச்சினின் வீட்டில் அவர்களின் காதலை சொல்லி நிச்சயத்தார்த்தம் நோக்கி கொண்டு செல்லும் பொறுப்பு அஞ்சலி வசமே வந்தது. காரணம் சச்சினுக்கு சரளமாக பேசவராது என்பது தான். அதே போல கடலை போட ஆரம்பித்த ஆரம்பகாலங்களில் ரொம்பவும் சச்சின் தடுமாறி இருக்கிறார். ஆங்கிலம் அவ்வளவு சரளமாக அப்பொழுது பேசவராது என்பது தான் காரணம்.

சச்சினுக்காக தன்னுடைய பிரகாசமான மருத்துவ வாழ்க்கையை அஞ்சலி தியாகம் செய்தார். சச்சின் சொல்வது போல அவரே அவர் வாழ்வின் சிறந்த பார்ட்னர்ஷிப் !
கவுண்டி கிரிக்கெட் ஆடிய பொழுது நேராக இடம் போய் சேர ட்ராபிக் போலீஸ் வண்டியை பின்தொடர்ந்து சென்றிருக்கிறார். அப்பொழுது பத்து கிலோமீட்டர் கூடுதலாக ஒட்டியதற்காக அவர் வண்டியை நிறுத்திய காவலர் கவுண்டி கிரிக்கெட்டுக்கு ஒப்பந்தமான முதல் அயல்நாட்டு வீரர் என்று தெரிந்ததும் கண்ணியமாக அனுப்பிவிட்டார்.

ஹீரோ கப் போட்டியில் சச்சின் இறுதி ஓவர் வீசி வெற்றியை பெற்றுத்தந்தது தெரியும். அந்த போட்டியில் ஒரு கீரிப்பிள்ளை மைதானத்தில் அடிக்கடி எட்டிப்பார்த்ததாம். அது எட்டிப்பார்க்கும் பொழுதெல்லாம் தென் ஆப்ரிக்க அணியில் ஒரு விக்கெட் விழுந்தது !
நவ்ஜோத் சித்துவுக்கு கழுத்து சுளுக்கிக்கொண்ட நியூசிலாந்து அணியுடனான போட்டியில் தானே கேட்டு வாங்கி துவக்க ஆட்டக்காரராக களம் புகுந்து சச்சின் ஆடியது ருத்ரதாண்டவம்.

1994 இல் மேற்கிந்திய அணிகளுடனான ஒரு நாள் போட்டித்தொடரில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் டக் அவுட்டாக சச்சின் அவ்வளவுதான் என்று பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்தார்கள். இறுதிப்போட்டியில் அறுபத்தி ஆறு ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தவர் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் அரை சதமடித்து மற்றொரு தொடரையும் வெல்ல காரணமானார்.

1996 ஆம் வருட உலகக்கோப்பையில் ஜூரத்துடன் ஆடிய கென்யா அணியுடனான போட்டியில் எழுபது ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் சேஸ் செய்த பாகிஸ்தானின் அமீர் சொஹைல் சிறப்பாக ஆடி வெங்கடேஷ் பிரசாத்தின் பந்தை பவுண்டரிக்கு விளாசிவிட்டு அவரை வசைபாடினார். அதற்கு பதிலடி அடுத்த பந்தில் அவர் போல்ட் ஆனது. மேலும் இரண்டு விக்கெட்களை வெங்கி கைப்பற்றினார்.

ஸ்ரீலங்கா அணியுடனான போட்டியில் ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணைக்கொண்டு இடப்பட்ட பிட்ச்சை சரியாக கணிக்காமல் சேஸ் செய்ய முடிவு செய்து இந்திய அணி தோற்று வெளியேறியது. அடுத்து இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு சச்சின் வசம் வந்திருந்தது. அந்தக் கதை நாளை !

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s