ஜெயித்த பில்கேட்ஸ்,ஸ்டீவ் ஜாப்ஸ்,பீட்டில்ஸ் சொல்லாத பாடம் !


மகத்தான வெற்றி பெற்றவர்கள் யாராக இருக்கிறார்கள் என்று உங்களைக் கேட்டால் என்ன சொல்வீர்கள் ? ஜீனியஸ்கள்,கடினமான சூழலில் ஓயாமல் உழைத்து முன்னேறியவர்கள் இப்படித்தானே ? இதைத்தாண்டியும் மகத்தான வெற்றி பெற்றவர்களுக்கு வேறு பல காரணிகள் உதவியிருக்கின்றன என்று மால்கம் கிளாட்வெல் தன்னுடைய ‘outliers’ புத்தகத்தில் வாதம் செய்கிறார்.

பில் கேட்ஸ் எப்படி மைக்ரோசாப்ட் என்கிற மகத்தான சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் என்று கேட்டால் அவர் ஒரு மேதை என்று தானே சொல்வீர்கள். பீட்டில்ஸ் இசைக்குழு அத்தனை காலம் உச்சத்தில் இருந்தது இசை மன்னர்களைக் கொண்டிருந்ததால் என்று எண்ணுகிறீர்களா ? மொஸார்ட் பிறவி மேதையாகக் கலக்கினார் என்பது தொடர்ந்து நமக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆசியர்கள் ஏன் அமெரிக்கர்களை விடக் கணிதத்தில் மேதையாக இருக்கிறார்கள் ? ஏன் கொரிய விமானங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின. இவற்றுக்கு எல்லாம் வெகு சுவாரசியமாக அதே சமயம் ஆய்வு முடிவுகளோடு பதில் சொல்கிறார் மால்கம்

ரோசேட்டோ என்கிற இத்தாலி பகுதி மக்கள் அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்தார்கள். அவர்களில் யாருக்குமே அறுபது வயது வந்தும் இதய நோய் என்று ஒன்று இல்லவே இல்லை. நோய்களால் இறப்பவர்கள் என்பதே அவர்களிடையே காணப்படவில்லை. அவர்களின் உணவு பழக்கம் ஏதேனும் வித்தியாசமாக இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை ! ஜீன்கள் தான் காரணமா என்று மற்ற இடங்களில் வாழ்ந்த ரோசேட்டோ பகுதி ஆட்களைச் சோதித்தால் அவர்கள் நோயால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். சரி அதுதான் இல்லை என்றால் வேறென்ன இருக்கும் என்று தேடிப்பார்த்தார்கள். இருக்கிற நிலப்பகுதி காரணமா என்று துருவினால் அருகில் இருந்த பகுதி மக்கள் பலமடங்கு இதய நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார்கள். தங்களின் கூட்டு வாழ்க்கை,தலைமுறைகளைத் தாண்டியும் இணக்கமான உறவு என்று ஒட்டுமொத்த அவ்வூர் சமூகமும் அவர்களின் உடல்நலத்தைத் தீர்மானித்தது என்பது தான் இறுதி முடிவாக வந்தது. அது போல எப்படி ஒரு மனிதனின் வெற்றியில் வெவ்வேறு அம்சங்கள் ஆட்சி செலுத்துகின்றன என்பதை மால்கம் விளக்க நம்மை அழைக்கிறார்.

கனடாவில் ஹாக்கி அணியில் வெற்றிகரமாக இருக்கும் இளம் வீரர்களின் பட்டியலை எடுத்தால் ஒரு ஆச்சரியமான அம்சம் இருந்தது. அவர்களில் நாற்பது சதவிகிதம் பேர் ஜனவரியிலும்,30 % நபர்கள் பிப்ரவரியிலும் பிறந்திருந்தார்கள். அடுத்து மார்ச் நபர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். காரணம் என்னவென்றால் ஜனவரி ஒன்று என்பதே கனடாவில் பயிற்சியில் சேர்வதற்கான வயதை நிர்ணயிக்கும் நாள். ஆகவே,அந்த நாளுக்குக் கிட்டே பிறந்த நபர்கள் அதிககாலம் பயிற்சி பெறும் வாய்ப்பை பெற்றார்கள். இங்கே மட்டும் தான் இப்படி என்று நீங்கள் எண்ணினால் ஸாரி. உலகின் வெவ்வேறு பாகங்களில் இருந்து இதேமாதிரியான எடுத்துக்காட்டுகளை மால்கம் தந்து மலைக்க வைக்கிறார். பயிற்சி அதிகம் என்றால் ஜெயிக்கும் வாய்ப்பும் அதிகம் ! “எது கொடுக்கப்பட்டதோ அது அதீதமாக அவனிடம் இருக்கும் !” என்கிற மத்தேயு வசனத்தை ஒத்திருப்பதால் இப்படி வாய்ப்புகள் வெற்றியை தீர்மானிப்பதை மத்தேயு விளைவு என்கிறார்கள்.

பள்ளிகளிலும் முன்னமே ஒரு வகுப்பில் சேர்கிற பிள்ளைகள் பெட்டராக ஜொலிக்கிறார்களாம்.
பில் ஜாய் சன் மைக்ரோ நிறுவனத்தை நிறுவியவர்களுள் ஒருவர். சிலிகான் பள்ளத்தாக்கில் பில்கேட்ஸ் அளவுக்கு மதிக்கப்படுகிற மேதாவி. அவர் பள்ளியில்,கல்லூரியில் மேதையாக இருந்தார் என்பதையும் அவர் கணினியே கதி என்று கிடந்தார் என்றும் அவர் வெற்றிக்கான காரணங்களாகச் சாதாரண நபர்கள் சொல்வார்கள். ஜாய் நுழைந்த காலத்தில் கணினியில் அட்டைகளில் ஓட்டை போட்டே கோடிங் செய்வது நடந்து வந்தது. ஒரு தவறு என்றால் உங்கள் அட்டை மற்றவர்களின் கோடிங் எல்லாம் முடிந்த பிறகே மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும். இந்தச் சூழலில் தான் ஜாய்ப் பிறந்தார். ஆனால்,கோடிங் மூலம் நேரப்பகிர்வை கணினியில் சாத்தியப்படுத்தலாம் என்கிற புரிதல் அப்பொழுது உண்டாகி இருந்தது. அந்த வசதி அப்பொழுது தான் நுழைந்து இருந்த மிச்சிகன் கல்லூரி அவருக்குக் கற்றல் இடமாக இருந்தது. ஒரு பக் வேறு இருந்து தொலைக்கப் பீஸ் கட்டாமல் வெகுநேரம் கோடிங் செய்கிற அதிர்ஷ்டம் ஜாய்க்குக் கூடுதலாகக் கிடைத்தது. ஜாய் திறமை மிகுந்தவர்,அவருக்கு வாய்ப்புகள் வந்து சேர்ந்தன,கூடவே அவரின் பத்தாயிரம் மணிநேரத்துக்கும் மேலான உழைப்பு கனிகளைத் தந்தது.

பீட்டில்ஸ் இசைக்குழு உலகின் தலைசிறந்த இசைக்குழுவாகப் பெயர் பெற்றார்கள் என்பது தெரியும். ஹாம்பர்க் என்கிற நகரில் ஒன்றரை வருடத்தில் 270 நாட்கள் அவர்கள் இசை நிகழ்ச்சி நடத்துகிற அளவுக்கு உழைப்பும்,தேடலும் அவர்களிடம் இருந்தது. முதல் வெற்றியை அவர்கள் பெறுவதற்கு முன்னர் ஆயிரத்தி இருநூறு தடவை இசை நிகழ்வுகளை அவர்கள் நிகழ்த்தி இருந்தார்கள். மொஸார்ட் ஒழுங்கான மாஸ்டர் பீஸ் இசைக்கோர்வைகளை வாசிக்க ஆரம்பிக்க அவருக்கு இருபத்தி ஒரு வயது ஆகியிருந்தது. அதற்குள் அவரும் பத்தாயிரம் மணிநேரம் உழைப்பைக் கொட்டியிருந்தார்.

பில் கேட்ஸ் என்னென்ன வாய்ப்புகளைப் பெற்றார் என்று பாருங்கள்.காலத்தைப் பங்கிடும் பண்பு கொண்ட கணினி கொண்டிருந்த பள்ளியில் அவருக்கு இடம் கிடைத்தது. c-cubed மற்றும் isi என்று வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து கணினியில் கோடிங் எழுதவும்,நேரத்தை செலவிட்டு கற்றுக்கொள்ளவும் அவருக்கு வாய்ப்பு வாய்த்தது. வாஷிங்டன் பல்கலை அவர் நடக்கும் தூரத்தில் இருந்தது, அங்கே காலை மூன்று முதல் ஆறு மணிவரை கணினியை பயன்படுத்திக்கொள்ளும் வசதி அவருக்குக் கிட்டியது. அவர் ஹார்வார்ட் பல்கலையை விட்டு விலகிய பொழுது ஏழு வருடங்கள் தொடர்ந்து ப்ரோக்ராம் அடித்துக்கொண்டிருந்தார்.

பத்தாயிரம் மணிநேரங்களைக் கடந்து உழைப்பது என்பது வெற்றிக்கான முக்கியமான ஒரு அடிப்படையாக இருக்கிறது என்பது புரிந்திருக்கும் தானே ? இன்னுமொரு ஆச்சரியமான சங்கதியையும் பார்க்கலாம். ஸ்டீவ் ஜாப்ஸ்,பில் ஜாய்,பில் கேட்ஸ்,பால் ஆலன்,எரிக் ஸ்மிடிட் எல்லாரும் பிறந்த வருடங்கள் எது தெரியுமா ? 1955-56 ! கணினி பலமணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தும் வாய்ப்புகளைத் திறந்து வைத்த காலத்தில் அவர்கள் நுழைந்து தங்களின் உழைப்பு மற்றும் திறமையை உடன் சேர்த்துக்கொண்டு சாதித்தார்கள்.

எல்லாக் காலத்திலும் இருந்த உலகின் டாப் பணக்காரர்கள் என்றொரு பட்டியல் போட்டால் அதில் இருக்கும் டாப் டென் அமெரிக்கர்களும் (அவர்களின் அன்றைய சொத்து மதிப்பை இன்றைய மதிப்புக்கு மாற்றிக் கணக்கிடுதல் செய்யப்பட்டது ) 1830-40 களில் பிறந்தவர்கள்.இது எப்படி வாய்ப்பாக மாறியது என்று கேட்டால்,அவர்கள் இளைஞர்களாக மாறியிருந்த பொழுது அப்பொழுது தான் ரயில்வே அமெரிக்காவில் நுழைந்திருந்தது,வால் ஸ்ட்ரீட் வளர்ந்து கொண்டிருந்தது. எல்லா வாய்ப்புகளோடு இவர்களின் தேடல் மற்றும் உழைப்பு சேர வெற்றிக்கனிகள் பணமாகக் குவிந்தன.

இதே போல அதிகபட்ச IQ கொண்ட லாங்கன் போல அதிகபட்ச IQ கொண்டவர்கள் ஏன் வாழ்க்கையில் பெரிதாகச் சாதிக்கவில்லை என்பதை எண்ணற்ற ஆதாரங்களோடு மால்கம் விளக்குகிறார். வெறும் மேதமைத்தனம் மட்டுமே வெற்றிகளைப் பெற்றுத்தராது. பொறுமையாகத் தொடர்ந்து முயல்தல்,வாய்ப்புகள் அமைதல்,கச்சிதமாக இருக்கிற சூழலுக்குள் முயன்று முன்னேறல்,ஓரளவுக்கு மேதைமை ஆகியவை வெற்றிகளைப் பெற்றுத்தரும் !

அமெரிக்காவுக்கு இங்கிலாந்தில் இருந்தோ,வேறு பகுதிகளில் இருந்தோ போனவர்களில் அதிகபட்ச வன்முறை குணம் கொண்டவர்களாக இருந்தவர்கள் கால்நடைகளை வளர்த்தவர்களே ! அவர்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு நகர வேண்டி இருந்தது. மற்றவர்களுடனும்,திருடர்களுடனும் போராடி தங்களின் விலங்குகளைக் காக்க வேண்டி இருந்தது. எல்லாம் அவர்களுக்கு ஒரு கவுரவம் பற்றிய பெருமையைத் தந்திருந்தது. இந்தக் குணத்தை வேற விஷயங்களில் சிக்கல் வரும் பொழுதும் அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

இங்கிலாந்தில் இருந்து நகர்ந்த நான்கு வகையான மக்களைக் கொண்டு அமெரிக்காவில் அவர்களின் பிற்காலத்தலைமுறைகள் நடந்து கொள்வதை டேவிட் பிஷர் என்பவர் வெற்றிகரமாக விளக்கி இருக்கிறார். உங்களின் வேர்கள் உங்களின் குணங்களில் தாக்கம் செலுத்தலாம். அதுவும் வெற்றியை பாதிக்கும்.

கொரியாவில் தொடர்ந்து விமான விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. காரணம் என்னவென்று கூர்ந்து பார்த்தால் ஆங்கிலத்தில் கட்டளைகளைக் கொண்டு சேர்க்கிற பொழுது தங்களின் தலைவர் தங்களைவிட உயர்ந்தவர் என்கிற மனோபாவத்தில் தெளிவாக அவர்கள் ஆபத்தைச் சொல்ல வராதது புரிந்தது. பிடித்துப் பிழிந்தும்,நீங்கள் சமம் என்கிற எண்ணத்தை விதித்தும் வெற்றிகரமாக விபத்துக்களைத் தடுத்திருக்கிறார்கள்.

சீனர்கள் மற்றும் ஜப்பானியர்கள் ஏன் கணிதத்தில் அதிகத்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் ? ஆங்கிலத்தில் இருப்பது போல எண்களுக்கு வெவ்வேறு சிக்கலான பெயர்கள் இல்லாமல் அவற்றின் பண்பை தெளிவாகக் காட்டும் வகையில் அவரவரின் தாய் மொழியில் எண்களின் பெயர்கள் அமைந்து உள்ளன. இது அவர்களுக்கு எண்கள் பற்றிய புரிதலை பெரிதாக வழங்குகிறது. இந்த இரண்டு தேசங்களிலும் நெல் விளைவித்தல் முக்கியத் தொழில். நெல்லை விளைவிப்பது தான் உலகிலேயே கடினமான உணவுப் பயிர் சாகுபடி என்பது அதிர்ச்சியான உண்மை. வருடம் முழுக்க ஓயாமல் நீங்கள் உழைக்கையில் தான் நல்ல மகசூல் கிடைக்கும். நாற்று நட்டு அதற்குப் பிறகு பயிரை விளைவிப்பதால் உழைப்பவன் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும்.

தண்ணீர் அளவு,களையெடுப்பு ஆகியவற்றையும் கவனமாகச் செய்ய வேண்டும். இந்த அடிப்படையிலேயே ஜப்பான் மற்றும் சீனாவில் வெயில்கால விடுமுறைகள் இரண்டு மாதங்களைத் தொடுவதே அரிதாக இருக்கிறது. அமெரிக்காவில் மூன்று மாதம் வரை ஜமாய்க்கிறார்கள். இந்த நாடுகளில் நெல் உற்பத்தி கடினமான ஒன்றாக இருப்பதால் நிலச்சுவான்தார்கள் அவர்களின் தொழிலாளிகளைச் சுரண்டுதல் மேற்கோடு ஒப்பிடும் பொழுது குறைவாக இருந்து வந்துள்ளது.
ஆசியர்களே நூலகங்களில் வெளிநாடுகளில் படிக்கப்போகும் பொழுது அதிகநேரம் செலவழிக்கிறார்கள். இவை விவசாயத்தின் வேர்களில் இருந்து வருகின்றன.

சீனாவில் வியர்வையும்,ரத்தமும் தான் உற்பத்தியை அதிகரிக்கும் என்பது பழமொழியாக இருக்கிறது. ரஷ்யாவில் கடவுள் கொடுத்த வரம் என்று சொல்லி சுணங்கிப் போகிறார்கள். ஆக,கலாசாரங்கள் உங்களின் பழக்கங்களில் தாக்கம் உண்டு செய்யவே செய்கிறது.
வாய்ப்புகள்,கடின உழைப்பு,அடிப்படையான கற்றல்,திறமை,பிறக்கின்ற காலம் எல்லாமும் சேர்ந்து தனித்த நாயகர்களை உருவாக்குகிறது என்று பேசுகிற OUTLIERS வெற்றி ஒன்றும் ஒற்றைப்படையாக ஒரே நாளில் குருட்டுத்தனமாக வந்துவிடுவதில்லை என்று புரியவைக்கும்.
விலை : 399
ஆசிரியர் : மால்கம் கிளாட்வெல்
பென்குயின் வெளியீடு

இந்நூல் தமிழில் ‘ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்’ என்று Siddharthan Sundaram அண்ணனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s