காந்தி,அம்பேத்கர்-எல்லா காலத்துக்கும் எதிரிகள் இல்லை !


“ஒரு முக்கியமான கதையோடு என்னுடைய ‘காந்தியும்,அம்பேத்கரும்’ உரையைத் துவங்கலாம் என்று எண்ணுகிறேன். காந்தியின் 125 பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மணிபால் பல்கலையில் 1994 நான்காம் வருடம் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தியால் நடத்தப்பட்டது. பல்வேறு அறிஞர்கள் அதில் கலந்துகொண்டு பேசினார்கள். காந்தி எளிமையாக ஆடை அணிந்திருக்கும் படமும்,கையில் தென்ஆப்ரிக்காவில் குச்சி ஏந்தி நின்று கொண்டிருக்கும் இளவயது படமும் அங்கே பின்னணியில் இருந்தது. எல்லாரும் காந்தியை பலவாறு புகழ்ந்து உரையாற்றிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது தேவனூர் மகாதேவா என்கிற கவிஞர் மேடையேறினார். அவர் கம்பீரமான குரலில் ஒரு தலித் பெண் கவிஞர் எழுதிய கவிதை ஒன்றை சொன்னார். அதன் சாரம் என்ன தெரியுமா ?

அம்பேத்கர் ஆடையைப் பற்றி ஒரு கவிதை :

பணக்கார திவானின் மகனாக,பனியா ஜாதியில் பிறந்த காந்தி எளிமையான ஆடை அணிந்து விடுதலைக்குப் போராடினால் அதைத் தியாகம் என்பீர்கள். இதுவே ஒரு தலித் அப்படி ஆடை அணிந்தால் “ஐயோ பாவம் ! இவன் தலித். வேறென்ன இவனால் அணிய முடியும் ?” என்று சொல்வீர்கள். எங்கள் அண்ணல் அறிவால் உயர்ந்து அதனால் தான் இப்படிக் கம்பீரமாக உடை அணிந்து நிற்கிறார்” என்றார் அவர்.

ஏழைவீட்டு ஏந்தல் அம்பேத்கர் :

இந்தியாவின் விடுதலைப்போராட்ட காலத்தில் மிகமுக்கியமான தலைவர்கள் என்றொரு பட்டியலிட்டால் அதில் வரும் காந்தி,நேரு,படேல்,தாகூர்,அம்பேத்கர் இவர்கள் எல்லாரையும் கவனியுங்கள். காந்தியின் அப்பா திவானாக இருந்தவர்,நல்ல செல்வ வளம் மிகுந்த குடும்பம் அவருடையது.நேருவின் அப்பா மோதிலால் நேருவின் ஆடைகள் அவர் வக்கீல் தொழிலை விடும் வரை பாரீஸ் போய் வெளுக்கப்பட்டு வரும் என்பார்கள். தாகூரின் அப்பா இன்றைய வங்கதேசத்தின் பாதி நிலங்களுக்குச் சொந்தக்காரராக அன்றைக்கு இருந்தவர். படேலின் தந்தை பத்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர். அம்பேத்கரின் தந்தையோ ஆங்கிலேய ராணுவத்தில் மிகக்குறைவான சம்பளத்துக்கு வேலை பார்த்தவர். அம்பேத்கர் அவர்கள் குடும்பத்துக்கு 13 வது பிள்ளை. வறுமைக்கும்,ஜாதிய கொடுமைகளுக்கும் நடுவில் போராடி அவர் அற்புதமான உச்சங்களைத் தொட்ட வகையில் தனித்த தலைவராகத் திகழ்கிறார்.

அம்பேத்கரைப் பற்றி ஆய்வறிஞர் ஒருவரால் நன்கு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட நூலாக 1966 இல் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காகப் பென்சுல்வேனியா பல்கலையைச் சேர்ந்த எல்லினார் ஜெல்லாயிட் எழுதிய ,”அம்பேத்கர் மற்றும் மஹர் இயக்கம்” என்கிற நூல் அமைந்தது. அதை இந்தியாவில் வெளியிட அப்பொழுது எந்தப் பதிப்பகமும் தயாராக இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கலாம். காங்கிரஸ் அரசு தன்னுடைய கட்சியைச் சேர்ந்த விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களையே நினைவுகூர்ந்தது. அம்பேத்கரைப் பற்றிய அந்த அற்புதமான ஆய்வு நூலை அப்பொழுது யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது இன்றைக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

உத்வேகம் தரும் ஒரு பெயர் :

தன்னுடைய மரணத்துக்குப் பிறகு எல்லாருக்குமான தலைவராக அம்பேத்கர் திகழ்கிறார். ராஜாஜி ஐயங்கார்கள் நினைவில் நிறுத்தும் தலைவராக மட்டும் திகழ்கிறார்,போஸ்,தாகூர் வங்காளிகளின் தனிச்சொத்தாக மாறிவிட்டார்கள். நேரு பெயரை சொன்னாலே கடுப்பாகிற ஒரு தலைமுறையைக் காண்கிறோம் எப்படிக் காந்தி இன்றைக்கு நினைவுகூரப்படுகிறார் என்றொரு நண்பர் சொன்னார் ,”பழம் பெருச்சாளிகள் சாத்தியமில்லாத விஷயங்களை மூடிய அறைக்குள் அரசுப்பணத்தில் அமர்ந்து பேசுகிற விடுமுறை தினம்தான் காந்தி ஜெயந்தி. ஆனால்,அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கையின் முக்கிய நாட்களின் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளத் தலித் மக்கள் தங்களின் சொந்தக்காசை செலவு செய்துகொண்டு நாடு முழுக்க அவரின் பிறப்பிடம் நோக்கி வருகிறார்கள். அந்த விழாக்கள் பிரம்மாண்டமானதாக,நாள் முழுக்க நடப்பதாக இருக்கின்றன ” என்றார்.

இந்தியாவின் தெருக்கள் முழுக்க அம்பேத்கரின் சிலைகளைக் காணலாம்,அவரின் அடையாளங்கள்,நினைவுகள் விளிம்புநிலை மக்களுக்கு உத்வேகம் தருகின்றது. அம்பேத்கர் பொருளாதார மேதை,சட்ட வல்லுநர்,சமூகவியல் அறிஞர் என்று பல்வேறு முகங்கள் கொண்டவர் அவர் என்பது கடினமான சூழல்களில் இருந்து மேலெழும்பி சாதிப்பதற்கான எடுத்துக்காட்டாக இருக்கிறது.

உலகியல் அறிவு கொண்ட சுரண்டல் :

உலகிலேயே ஜாதிய முறை தான் உலகியல் அறிவை அதிகமாகக் கொண்ட சுரண்டல் முறையாக இருக்கிறது. காந்தி மற்றும் அம்பேத்கர் இருவருமே இந்த ஜாதி முறையை வெவ்வேறு வகைகளில் எதிர்கொண்டார்கள். அவர்கள் எப்படி மாறுபட்டார்கள் என்பதை நாம் காண்போம். முதலில் காந்தி எப்படியெல்லாம் ஜாதி அமைப்பை எதிர்கொண்டார் என்று பார்ப்போம். காந்தி 1920 நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டில் தலைமையுரை ஆற்றுகிற பொழுது ,”நாம் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற போராடுகிறோம். பெரும்பான்மை மக்களைச் சமமானவர்களாக நடத்தாமல் தீண்டாமைக் கொடுமையால் பிரித்து வைத்திருக்கும் வரை நமக்குச் சுயராஜ்யம் சாத்தியமே இல்லை ” என்றார்.

காந்திதான் முதன்முதலில் ஜாதி எதிர்ப்பை முன்னெடுத்தார் என்றில்லை. நான்கு வகையில் ஜாதி அமைப்பு அதற்கு முன்னரே எதிர்கொள்ளப்பட்டது.

இந்து மதத்துக்குள் இருந்து ஜாதி அமைப்பை பக்தி இயக்கங்கள் எதிர்கொண்டன. ஜாதியைக்கொண்டு பிராமணர்கள் எங்களை ஏமாற்றியது போதும். நடுவில் நீங்கள் எதற்கு ? இறைவனை நாங்கள் நேரடியாக அடைகிறோம் என்பது அவர்களின் பாணியாக இருந்தது. கபீரின் வாழ்க்கையோடு ஒருன் சம்பவத்தைச் சொல்வார்கள், காசியில் இறந்தால் முக்தி என்று வைதீகர்கள் சொல்லி வந்தார்கள். தன்னுடைய மரணப்படுக்கை நெருங்கிய பொழுது கபீர் காசியை விட்டு நீங்கி வைதீகர்களின் வாதத்துக்குச் சவால் விட்டார்.

ஜோதிபாய் புலே சாதியத்தை எதிர்த்ததோடு நில்லாமல்,பெண்களுக்குப் பள்ளிக்கூடங்கள் திறந்து அவர்களின் சமத்துவத்துக்குப் பாடுபட்ட முன்னோடி
தமிழகத்தில் ஜாதி அமைப்பை எதிர்த்து போராடிய அயோத்திதாசர் அம்பேத்கருக்கும் முன்னாலே புத்த மதத்துக்கு மாறினார்.

இந்து மதத்தின் சாதியமைப்பை எதிர்த்து இந்திய மண்ணில் தோன்றிய சீக்கிய,புத்த மதங்கள் எழுந்தன. அதில் பலர் சேர்ந்தார்கள்.

கிறிஸ்துவ,இஸ்லாம் மதங்களும் ஜாதிகளற்றதாகச் சொல்லிக்கொண்டு இந்திய மண்ணில் கால் பதித்தன. பதினைந்தாம்,பதினாறாம் நூற்றாண்டுகளில் இஸ்லாமில் ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமளவில் இணைய இந்தச் சமத்துவம் தந்த மதக்கோட்பாடுகளே காரணம். ஆனால்,இவற்றிலும் ஜாதி புகுந்து கொண்டது என்பது தான் நிதர்சனம்.

அழித்தோ,செரித்தோ நிற்கும் சாதியமைப்பு :

இந்து மதத்தின் சாதியமைப்பு ஒன்று இந்தச் சவால்களை உள்வாங்கிக்கொண்டது,அல்லது அழித்துத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. புத்த மதம் இந்தியாவில் இருந்து முழுக்கத் துடைத்து எறியப்பட்டதைப் பாருங்கள். பிரெஞ்சு மானுடவியல் அறிஞர் டுமான்ட் ஒரு கட்டுரையில் பிராமணர்கள் சைவமாக மாறியதே சைவ உணவு உண்ட புத்த மதத்தினரை விடத் தாங்கள் மேலானவர்கள் என்று காட்டி மீண்டும் சாதியமைப்பை நிலைநிறுத்தவே என்கிறார். சீக்கியர்களிலும் தலித்துகளை மசாபி என்று வகைப்படுத்தி ஒடுக்குகிறார்கள்,இருபதாம் நூற்றாண்டில் கூடக் கேரளாவில் சர்ச்சுக்களில் கிறிஸ்துவத் தலித்துகளுக்கு நுழைய அனுமதியில்லாமல் இருந்தது.

காந்தி தன் வாழ்நாளில் நீண்ட,மிகப்பெரிய,தீரமிகுந்த ஒரு போரை சாதியத்துக்கு எதிராகத் தொடுத்தார். தென் ஆப்ரிக்காவில் தன்னுடைய மனைவியைத் தலித் ஒருவரின் மலச்சட்டியை சுத்தப்படுத்த சொல்லி காந்தி கட்டாயப்படுத்திய சம்பவம் தெரியும். 1915 இல் அகமதாபாத்தில் ஆசிரமம் ஆரம்பித்து அங்கே ஒரு தலித் குடும்பத்தைத் தங்க வைக்கவே அவரின் வைணவப் பிரிவு ஆட்கள் அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார்கள். ஆசிரமத்துக்கு நிதி தந்து கொண்டிருந்த ஜாதி இந்துக்களால் அது நிறுத்தப்பட்டது. அப்பொழுது அம்பாலால் சாராபாய் தந்த நிதியால் ஆசிரமம் பிழைத்தது.

இக்காலங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்களை அவர் முன்னெடுக்கிறார். அதுவரை அவருக்குத் தீண்டாமை மற்றும் சாதியம் பற்றி இருந்த புரிதல் போதுமற்றது மற்றும் சாதியம் மிகக்கொடுமையாக மக்களைப் பாதித்திருக்கிறது என்பது அம்பேத்கருடன் நிகழ்த்திய உரையாடல்களின் மூலமே காந்தி உணர்ந்தார். அதற்குப் பின்னரே ஹரிஜன் சேவக் சங்கத்தை ஆரம்பித்து ஹரிஜன் என அவர் அழைத்த தலித்துகளுக்காக நிதி திரட்டினார். தீண்டாமையை எதிர்த்து இந்தியா முழுக்க பாத யாத்திரையை மேற்கொண்டார்.

காந்தியை திரிப்பது சுலபம் :

காந்தியின் எழுத்துக்கள் 90 தொகுதிகளில் விரிந்திருக்கிறது. காந்தியை தாங்கள் விரும்பியவாறு தவறான வகையிலே அவர் சொன்ன எதோ ஒரு கருத்தின் குறிப்பிட்ட வரியை உருவி எடுத்து அவரை மோசமானவராக அவரவரின் கருத்தியலுக்கு ஏற்ப சித்தரிக்க இயலும். காந்தியின் சாதியமைப்புக்கு எதிரான போராட்டம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்றது :

1915-1925-தீண்டாமையைக் காந்தி எதிர்த்தார். “தீண்டாமை பாவகரமான செயல். அதைப் பின்பற்றுகிற நீங்கள் எல்லாம் இந்து மதத்தின் ஜெனரல் டயர்கள் !”என்று கடுமையாகச் சாடினார். அதே சமயம் சாதியமைப்பு இத்தனை வருட காலமாக நீடித்திருக்கிறது என்றால் அதில் எதோ நியாயம் இருக்க வேண்டும். சாதியமைப்பில் இத்தனை வேறுபாடுகள் இல்லாமல் நான்கு வர்ணங்கள் மட்டும் இருக்க வேண்டும் என்பது அவரின் பார்வையாக இருந்தது
1920-30களில் சேர்ந்து உணவருந்தல்,கலத்தல் ஆகியனவற்றை ஜாதி வேறுபாடுகளைக் கடந்து செய்ய வேண்டும் என ஆதரித்தார்

நாற்பதுகளில் தலித் மற்றும் தலித் அல்லாதோர் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே என்னுடைய ஆசீர்வாதங்கள் அந்தத் திருமணத்துக்கு உண்டு என்றார். சாதியமைப்பை அழிக்கக் கலப்புத் திருமணம் அவசியம் என்கிற புரிதலுக்கு அவர் இறுதியில் வந்து சேர்ந்தார்.

பனியா காந்தியே ஒழிக ! :

1933-1934 காலத்தில் தீண்டாமைக்கு எதிராகக் காந்தி சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட பொழுது ஹிந்து மகா சபையினர் அவர் சென்ற இடமெல்லாம் கறுப்புக் கொடி காட்டினார்கள். புனாவில் மலத்தை எடுத்து அவர் மீது வீசினார்கள். “நீ பிராமணனும் இல்லை,உனக்கு சமஸ்க்ருதமும் தெரியாது. நீ எங்களின் சடங்கு,நம்பிக்கை,கலாசாரம்,முன்னோர் வழிக்காட்டுதல் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குகிறாயா பனியா ?” என்பதே பிராமணர்கள் முதலிய ஜாதி இந்துக்களின் பார்வையாக இருந்தது. ஒரு குண்டை பழமைவாதத்தின் நடுவே வீசியது போல இருந்தது காந்தியின் செயல் 1936 இல் காஞ்சி,காசி முதலிய பல்வேறு நகரங்களில் இருந்த இந்து மடாதிபதிகளை ஒன்று திரட்டியது. ஆங்கிலேய அரசுக்கு இப்படிக் கடிதம் எழுதினார்கள் ,”காந்தியையும் அவரைப் பின்பற்றுவர்களையும் சென்சஸ் கணக்கெடுப்பில் இந்து இல்லை என்று குறிக்க வேண்டும்” மெதுவாக,படிப்படியாக,மென்மையாகக் காந்தி சாதியத்துக்கு எதிராகப் போராடுவதாக அம்பேத்கர் காந்தியை விமர்சிக்க,ஜாதி இந்துக்களோ காந்தி மிகத்தீவிரமாகச் சாதியத்தை எதிர்ப்பதாகப் பொங்கினார்கள்.

அம்பேத்கரை ஆர்.சி.தத்,அரவிந்தர் ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்த பரோடா மன்னர் சாயாஜி கெய்க்வாட் ஆதரித்தார். கொலம்பியாவில் முனைவர் பட்டம் பெற்று மன்னரின் அவையிலே அம்பேத்கர் பணிக்குச் சேர்ந்தாலும் அங்கே அவரைத் தீண்டத்தகாதவர் என்று ஜாதி இந்துக்கள் விலக்கி வைத்தார்கள். மனம் நொந்து மீண்டும் முனைவர் பட்டம் பெற்று திரும்பிய அம்பேத்கர் சட்டப்பணியை ஆற்றியவாறே சமூகப்பணிகளிலும் தீவிரமாக அம்பேத்கர் ஈடுபட்டார். பம்பாய் சட்டக்கல்லூரி முதல்வராக இருந்த அம்பேத்கர் காந்தியை சந்திக்கக் கோரினார். பெரும்பாலும் காந்தியின் சந்திப்புகளைக் கச்சிதமாகத் தீர்மானிக்கும் அவரின் உதவியாளர்கள் இந்த முறை சொதப்பினார்கள்.

பிராமணர் அம்பேத்கர் :

மராத்தியர்களில் பிரமாணர்களின் பெயரில் கர் பின்னால் இருக்கும்  (டெண்டுல்கர், கவாஸ்கர், சவார்க்கார் ). அம்பேத்கர் என்று பெயர் இருந்தபடியால் அவரைப் பிராமணர் என்று எண்ணிக்கொண்டார்கள். ‘ஜாதிச்சிக்கல் மற்றும் தீர்வுகள் பற்றி உங்களோடு பேச வேண்டும் ” என்று தனக்குப் பிராமணர் என்று அறிமுகப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சொன்னதும் காந்தி கடுப்பானார். ஏற்கனவே பிராமணர்கள் தன்னை எதிர்க்கிற சூழலில் இப்படி யாரோ அதுவும் தன்னைவிட இருபத்தி மூன்று வயது இளைய ஒரு வழக்கறிஞர் தனக்குப் பிரசங்கம் செய்கிறாரே என்பது அவரின் எண்ணமாக இருந்தது. அப்பொழுது ஆரம்பித்த அவர்களின் போர் இறுதிவரை தொடர்ந்தது. ஏன் அறுபத்தி ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது.

தனித்தொகுதிகளை (தங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தாங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கும் உரிமையை ) ஆங்கிலேயர்கள் பட்டியல் ஜாதியினருக்கு அளித்த பொழுது காந்தி அவர்கள் இந்து மதத்தின் பிரிக்க முடியாத அங்கம் என்று எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். காந்தியின் உயிரைக் காக்க அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்துக்குச் சம்மதித்தார். தனித்தொகுதிகளை விட்டுக்கொடுக்க அம்பேத்கர் இசைய இடங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட்டின் முதல் தலைசிறந்த வீரரான பல்வாங்கர் பாலு பம்பாய் நகரசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சொன்ன அம்பேத்கரை எதிர்த்தே அவரை வேட்பாளராகக் காங்கிரஸ் நிறுத்தியது. “நம் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபடும் மகத்தான மனிதர் அம்பேத்கர். நானோ காங்கிரசின் சேவகன். அதனால் அவரை எதிர்த்து போட்டியிடுகிறேன்.” என்ற படேலின் வழிகாட்டலில் நின்ற பாலு சொன்னார். குறைவான ஓட்டு வித்தியாசத்தில் அம்பேத்கர் வென்றார்.

பல்வேறு கட்சிகளை ஆரம்பித்துக் காந்தியையும்,காங்கிரசையும் அம்பேத்கர் தொடர்ந்து எதிர்த்தார். பூனா ஒப்பந்த காலம் தவிர்த்து காந்தி,அம்பேத்கர் அவர்கள் காலங்களில் இணைந்து பணியாற்றவே இல்லை. வெள்ளையனே வெளியேறு இயக்க காலத்தில் ஆங்கில அரசின் வைஸ்ராய் செயற்குழுவில் அம்பேத்கர் உறுப்பினராக இருந்தார். இங்கே ஒரு சுவாரசியமான திருப்பம் வருகிறது. ‘நல்ல படகோட்டி’ நூலில் ராஜ்மோகன் காந்தி பதிவு செய்யும் வாய்வழியாகச் சொல்லப்பட்ட உண்மைச்சம்பவம் இது. விடுதலைக்குப் பிந்தைய அமைச்சரவை பட்டியலில் அம்பேத்கரின் பெயரில்லாமல் இருப்பதைப் பார்த்த காந்தி ,”விடுதலை இந்தியாவுக்கு,காங்கிரசுக்கு அல்ல !” என்று சொல்ல அதற்குப் பின்னரே சட்ட அமைச்சராக அம்பேத்கர் பெயர் இடம் பெற்றது.

காந்தி-அம்பேத்கர் சமரசம் :

இதற்கான ஆதாரங்களைத் தேடுகிற பொழுது சில சுவையான விஷயங்கள் புலப்பட்டன. நாற்பத்தி ஆறில் விடுதலை வருகிறது என்று தெரிந்ததுமே நாட்டின் உருவாக்கத்தில் பங்குகொள்ள விரும்புகிறார். தான் மற்றும் காந்தி இருவருக்கும் பொதுவான ஜெரால்ட் என்கிற நண்பரிடம் ,”நான் உரையாடலுக்குத் தயாராக இருக்கிறேன். காந்தி தான் ஆனால் அதைத் துவங்க வேண்டும் “என்று கடிதம் எழுதியிருக்கிறார் அம்பேத்கர். முன்னர்க் காந்தியை கடுமையாக அம்பேத்கர் விமர்சிப்பதாகச் சொல்லப்பட்ட எல்லாத் தருணத்திலும் காந்தி அம்பேத்கரை சாடவே இல்லை ,”அவர் தலைசிறந்த தேசபக்தர். சட்ட அறிவு மிக்க அவர். நாம் ஹரிஜனங்களுக்குச் செய்த அவமதிப்புகளுக்கு அவர் நம் தலையை உடைத்திருக்க வேண்டும்” என்று எழுதிய காந்தி இப்பொழுது பொறுமை இழந்திருந்தார். “அவர் என்னைப்பற்றிக் கடுமையான விமர்சனங்கள் வைப்பதாக அறிகிறேன். கோபம் மற்றும் வெறுப்பு கொண்டவராக இருக்கிறார். சமரசம் சாத்தியமா ?” என்று காந்தி கேட்டார். பின்னர் ராஜகுமாரி அம்ரீத் கௌர் காந்தி-அம்பேத்கர் இடையே ஒற்றுமையைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது “நீங்கள் அம்பேத்கரின் பக்கம் இருக்கும் நியாயத்தைக் கவனிக்க வேண்டும் !” என்று கடிதம் எழுதினார். ராஜகுமாரியும்,அம்பேத்கரும் ஒரே துணைக்’குழுவில் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

காந்தி-அம்பேத்கர் முரண்பாடுகள் :

காந்தி,அம்பேத்கர் வாழ்க்கையைச் சுருக்கமாகப் பார்த்த நாம் இப்பொழுது அவர்களின் பார்வையில் இருந்த முக்கிய வேறுபாட்டைக் காண்போம் :

தீண்டாமை,ஜாதி வேறுபாடு ஆகியவற்றை ஒழித்து இந்துமதத்தைக் காத்து,புத்துயிர் ஊட்ட வேண்டும். அதை நவீன மதமாகக வேண்டும் என்று காந்தி எண்ணினார். ஜாதிக்கொடுமை,தீண்டாமை இந்து மதத்தோடு பிணைந்து விட்ட ஒன்று,ஆகவே,இந்து மதம் நிராகரிக்கப்பட வேண்டும் என்பது அம்பேத்கரின் பார்வை.

அதிலும் கவிதா என்கிற ஊரில் குஜராத்தில் 1935 ஆதிக்க ஜாதியினரால் பல தலித்துக்கள் கொல்லப்பட்டது இந்து மதத்தின் மீதான ஒரளவு நம்பிக்கையையும் அம்பேத்கர் இழக்குமாறு செய்தது. மதம் மாறுவது என்று முடிவு செய்து சீக்கியம்,இஸ்லாம்,கிறிஸ்துவம் என்று இந்தியாவில் உயிரோடு இருந்த எல்லா மதங்களையும் தேடிப்பார்க்கையில் எல்லாவற்றிலும் தீண்டாமை இருப்பதில் வெறுப்புற்று இந்திய பகுதியில் உயிரோடு இல்லாத புத்த மதத்தைப் பல லட்சம் பேரோடு மரணத்துக்கு ஆறு வாரத்துக்கு முன் தழுவினார்.

இரண்டாவது பஞ்சாயத்துச் சுயராஜ்யம் என்பவை எல்லாம் காந்தியின் கனவுகள். நவீனமயமாக்கல்,தொழில்மயம் ஆகியன நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்கிற கனவில் அம்பேத்கர்,நேரு உடன்பட்டார்கள்.

மூன்றாவது தான் மிகமுக்கிய வித்தியாசம். அம்பேத்கர் அரசின் செயல்பாட்டை முக்கியமாகக் கருதினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையை வழங்குவதில் அரசு பெரும் பங்கு வகிக்க முடியும் என்று கருதினார். காந்தியோ அதிகாரம் எங்கே குவிந்தாலும் அது ஆபத்தானது என்று சந்தேகப்பட்டார். கிராமங்கள் தனித்த சுயாட்சி பெற்று திகழ வேண்டும்,அரசுக்கான பணிகள் குறைவாக இருக்க வேண்டும் என்றார் காந்தி. நெசவாளர் கூட்டமைப்பு,ஹரிஜன் சேவக் சங்கம்,காதி கிராம தொழிற்சாலை கூட்டமைப்பு என்று சிவில் சொசைட்டி அமைப்புகள்,அரசு சாரா நிறுவனங்கள் மீது காந்தி அதிக நம்பிக்கை வைத்தார். சுய ஊக்கம்,சுய கட்டுப்பாடு ஆகியனவே செலுத்த வேண்டும். அதிகாரங்கள் அதிகம் கொண்ட அரசில்லை என்பது காந்தியின் எண்ணம். உடல்நலம்,கல்வி,நலத்திட்டங்கள் ஆகியவை அரசின் பொறுப்புகளே என்பது அம்பேத்கரின் பார்வையாக இருந்தது.

புரட்சிகரச் சிந்தனை கொண்ட தலித்துகள் காந்தியை வெறுக்கிறார்கள். தேசியவாதிகள் என்பவர்கள் அம்பேத்கரை வெறுக்கிறார்கள். பொய் கடவுள்கள் என்று அறுநூறு பக்கத்தில் நூல் எழுதிய அருண் ஷோரி அதில் இரண்டு முக்கியமான குற்றச்சாட்டுகளை அம்பேத்கர் மீது அருண் ஷோரி வைக்கிறார். தேசியவாதிகள் பக்கம் சேராமல் அவர் ஆங்கிலேய அரசின் பக்கம் இணைந்தார் என்பது முதல் குற்றச்சாட்டு (வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற பொழுது அம்பேத்கர் வைஸ்ராயின் அதிகாரக்குழுவில் உறுப்பினராக இருந்தார் ),இரண்டாவதாக அவர் காந்தியை தீவிரமாக மற்றும் சமயங்களில் கடுமையான மொழியால் விமர்சித்தார் என்று குற்றஞ்சாட்டினார்.

ஏன் அம்பேத்கர் ஆங்கிலேயர் பக்கம் நின்றார் என்று கேட்டுக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் பிராமணர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. அவர்கள் கடந்தகாலத்தில் தலித்துகளை ஒடுக்கியாண்டார்கள். விடுதலைப் பிறகு அவர்கள் கையில் அதிகாரம் வந்த பின்னும் அதையே அவர்கள் செய்திருக்கக் கூடும். ஆகவே தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் செயலாற்றிய சீர்திருத்தவாதிகள் ஜோதிபாய் புலே,ஈ.வெ.ராமசாமி மற்றும் மூங்ராம் (பஞ்சாபின் ஆதி-தர்ம் இயக்கத்தின் தலைவர் ) ஆகியோர் ஆங்கிலேய அரசு காங்கிரசை விடக் குறைந்த தீமைகளைக் கொண்டது என்று நம்பினார்கள்.

அருந்ததி ராயை சரோவர் அணை உருவாக்கம் தொடர்பாக ‘இடதுசாரிகளில் ஒரு அருண் ஷோரி’ என்று ஐம்பது வார்த்தைகள் போதுமான இடத்தில் ஐயாயிரம் வார்த்தைகள் கொண்டு எழுதும் குணத்துக்காகத் தி ஹிந்துவில் கட்டுரை எழுதினேன். அம்பேத்கர்-காந்தி மோதல் பற்றி அவர் எழுதிய கட்டுரையில் காந்தி சொன்னவற்றில் தேவையானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்தும்,அவர் சொன்னதைத் திரித்தும் குறிப்பிட்டு என் கருத்தை நிரூபிக்கிறார்.

சமூகச் சீர்திருத்தங்கள்,பெண்களுக்கு ஓட்டுரிமை,அடிமை முறை ஒழிப்பு என்று உலகம் முழுக்க நடந்த எல்லா மாற்றங்களும் மேலே மற்றும் கீழே என்று இரு தரப்பு அழுத்தத்தாலே சாத்தியமாகி இருக்கின்றன. இரண்டாயிரம் வருடங்களாகச் சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மற்ற எந்தக் காலத்தை விடவும் இப்பொழுது கூடுதல் விடுதலை (அது போதுமானதாகக் கண்டிப்பாக இல்லை என்றாலும்) பெற்றிருக்கிறார்கள். காந்திக்கு பிறகு காந்தியவாதிகள் ஜாதி என்பதையே மறந்துவிட்டார்கள். தலித்துகளில் இருந்து அம்பேத்கர் போன்ற அறச்சீற்றம்,தனிமனித நேர்மை,அறிவு கொண்ட எண்ணற்ற நாயகர்கள் எழ வேண்டும்.

லிங்கன்,லிண்டன் ஜான்சன்,காந்தி-அம்பேத்கர் :

காந்தி,அம்பேத்கர் அவர்கள் காலத்தில் எதிரிகளாக இருந்திருக்கலாம் .சமூகச் சீர்திருத்தம் நிகழ எழுச்சி இருபக்கங்களில் இருந்தும் நடைபெற வேண்டும். குற்றஉணர்ச்சிக்கு உள்ளான லிங்கன் பிரெடெரிக் டக்ளஸ் முதலியோரின் விமர்சனங்களைக் காது கொடுத்துக் கேட்காமல் போயிருந்தால் அடிமைமுறை நீக்கப்பட்டு இருக்காது. சிவில் உரிமைகள் சட்டமாக லிண்டன் ஜான்சன்,மார்டின் லூதர் கிங்கின் அறச்சக்தி மற்றும் இயக்கம் ஆகியவற்றை ஏற்காமல் போயிருந்தால் மாறியிருக்காது. தங்கள் வாழ்நாள் அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் இன்றைய வரலாற்றுப் புள்ளியில் அவர்கள் அருவருக்கத்தக்க சமூக அமைப்பை குலைப்பதில் இணையான பணியைச் செய்தார்கள் என்று புரிந்துகொண்ட காந்தி மற்றும் அம்பேத்கர் இருவரையும் இணைத்துக்கொண்டு பயணிக்காமல் போனால் மாபெரும் தவறு மற்றும் அநியாயத்தை அவ்விரு மகத்தான ஆளுமைகளுக்குச் செய்தவர்கள் ஆகிறோம்.

மாட்டு வண்டியில் ஒரு மகத்தான பாடம் :

ஒரு கதையோடு முடிக்கிறேன். ஒரே மாட்டு வண்டியில் மாண்டியாவில் காந்தி, அம்பேத்கர், விஸ்வேஸ்வரய்யா வேடம் போட்ட (முதல் இருவரின் தாய்மொழி கன்னடம் இல்லையென்று தெரியும்,மூன்றாவது நபரின் தாய்மொழி தெலுங்கு-மொழிப்பற்று மிக்க உங்களிடம் சொல்கிறேன் மொழிகளைக் கடந்தும் நேசிக்க முடியும் ) கன்னடச்சிறுவர்கள் பயணம் செய்து கொண்டிருந்ததை ஒரு விடுதலை நாளன்று பார்த்தேன். அவர்கள் வெவ்வேறு கனவுகளைக் கொண்டிருந்தாலும் ஒன்றாகப் பயணம் செய்தார்கள். காந்தியின் மனசாட்சியை உலுக்குதல்,அம்பேத்கரின் சுய மரியாதையோடு, விஸ்வேஸ்வரய்யாவின் தொழில்நுட்ப அறிவைக் கொண்டு சமூகச் சேவையாற்றல் (இவர் அம்பேத்கரின் சிந்தனையான இட ஒதுக்கீட்டை எதிர்த்தார்,ஆனால்,தொழில்வளர்ச்சிக்கு அவர் சிந்தனைகள் அவசியம் ) ஆகியன இணைய வேண்டும். இந்த உரையில் நான் காந்தியவாதியாகவே அம்பேத்கரியவாதியை விட அதிகம் தோன்றினாலும் இருவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை. நன்றி !

– Ramachandra Guha

(சங்கர் அய்யர் ஏழாவது நினைவுச் சொற்பொழிவில் ராமச்சந்திர குஹா பேசிய உரையின் தமிழாக்கம் )

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s