நேருவின் ஆட்சி-பதியம் போட்ட 18 ஆண்டுகள் !


நேருவின் ஆட்சி- பதியம் போட்ட 18 ஆண்டுகள் புத்தகத்தைப் புத்தாண்டின் முதல் புத்தகமாக வாசித்து முடித்தேன். நேருவின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில் தேச விடுதலைக்குப் பாடுபட்ட காலத்தைப் பதிவு செய்துவிட்டு, சீனா,காஷ்மீர் சிக்கல்கள் ஆகியவற்றில் நேரு சொதப்பினார் என்று சொல்வதோடு நேருவின் ஆட்சிக்காலத்துக்கு முற்றும் போட்டு முடித்துவிடுவதே பெரும்பாலும் நடக்கிறது. நேருவின் இந்தப் பதினெட்டு ஆண்டுகால ஆட்சி பற்றித் தனியான புத்தகங்கள் வந்ததில்லை என்கிற பெரிய குறையை ஆசிரியர் தீர்க்க முயன்றிருக்கிறார். நூலின் உள்ளடக்கம் பற்றிப் பேசிவிட்டு பின்னர் விமர்சனங்களுக்குள் செல்கிறேன் :

தனியாக முஸ்லீம்களுக்கு ஒரு தேசம் என்று சொல்லி வெறுப்பை விதைத்து அறுவடை செய்த ஜின்னாவுக்கே நாட்டின் பிரதமர் பதவியைக் கொடுத்து சிக்கலைத் தீர்க்கலாம் என்று காந்தி சொன்ன பொழுது அதை நேரு ஏற்க மறுத்தார். கிருபாளினி, படேல் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி நேருவை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவதைக் காந்தி உறுதி செய்திருந்தாலும் எல்லாச் சமயத்திலும் அவர் சொல்வதே தான் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதை நேரு செய்து காண்பித்தார். இந்திய விடுதலையைப் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சர்ச்சில் முதலிய பலபேர் எதிர்க்க உப்பு சத்தியாகிரகத்தின் பொழுது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த இர்வின் உணர்ச்சியும், உண்மையும் கலந்த ஒரு உரையை நிகழ்த்தி நாடாளுமன்ற அனுமதி பெற்று தனியான தேசமாக இந்தியா உருவாவதை சாதித்தார்.

பிரிவினைக்குப் பிறகு தேசம் உருவாகிறது. நேரு விடுதலை நாளுக்குத் தயாராக வேண்டும். தேச விடுதலைக்கு முக்கியக் காரணமான காந்தி மதத்தின் பெயரால் வெட்டிக்கொண்டிருந்த மக்களிடையே அமைதியை கொண்டுவர போயிருந்தார். லாகூரில் இந்துக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வந்து சேர்ந்து கண்ணீர்விட்டு அழுத நேரு எப்படி மக்கள் முன் உரையாற்றப் போகிறோம் என்று உள்ளுக்குள் கலங்கிக்கொண்டு இருந்தார். எந்தத் தயாரிப்பும் இல்லாமல், வெறுப்பை விடுத்து சகோதரர்களாக இணைந்து புதுத் தேசம் படைப்போம் என்பதை ‘விதியோடு சந்திப்புக்கு ஒரு ஒப்பந்தம்’ உரையில் நேரு தேச மக்களின் மனதில் விதைத்தார். மவுண்ட்பேட்டனிடம் நேரு கொடுத்த அமைச்சரவை பட்டியல் என்று பெயரிடப்பட்ட உறைக்குள் வெறும் வெள்ளைத்தாள் தான் இருந்ததாம்.

சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைக்கும் பணியில் படேல், மேனன் ஆகியோர் ஈடுபட்ட பொழுது நேரு உறுதுணையாக இருந்தாலும் சமயங்களில் முரண்டும் பிடித்திருக்கிறார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நிஜாம் ஆண்டுகொண்டிருந்த ஹைதரபாத்தை உடனே தாக்குவது இந்திய முஸ்லீம்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் என்று அமைதி காத்த நேருவை மீறி அங்கே ரஸாக்கர்களின் அட்டூழியத்தை ஒழிக்கப் போலீஸ் நடவடிக்கை தேவை என்று படேல் வாதிட்ட பொழுது ‘நீங்கள் மதவாதி!’ என்று சொல்லிவிட்டு நேரு வெளியேறினார். பின்னர் ராஜாஜி கிறிஸ்துவக் கன்னியாஸ்திரிகள் வன்புணர்வுக்கு ரஸாக்கர்களால் உள்ளாக்கப்பட்டு இருப்பதாக அயல்நாட்டு தூதுவர் அனுப்பிய கடிதத்தைக் காண்பித்ததும் நிலைமையின் வீரியம் உணர்ந்து நேர்ந்த அவலங்களால் ஏற்பட்ட கண்ணீரை அடக்க முடியாமல் போலீஸ் நடவடிக்கைக்கு அனுமதி தந்தார் நேரு. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த ஜூனாகாத்தை ஜின்னா தந்திரமாகப் பெற்ற பின்னர் அதை இந்தியாவோடு இணைத்த பின்பு அங்கே வாக்கெடுப்பு நடத்தி இணைத்துச் சிக்கல்களை நேரு தவிர்த்தார்.

காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பகுதி பதான்கள் நுழைந்த நிலையில் இந்தியாவின் உதவியை ஹரிசிங் கேட்டதும் ராணுவத்தை நேரு அனுப்பி வைக்கலாமா வேண்டாமா என்று நீண்ட நெடிய கூட்டத்தை நடத்தி, போரைத் தவிர்க்கலாம், ரஷ்ய உதவி, ஆப்ரிக்க மாதிரிகள் என்று ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தார். ராய்புச்சர் என்கிற ஆங்கில அரசை சேர்ந்த ராணுவத் தளபதி பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று மிரட்டுவதும் நடந்தது. படேல் தீர்க்கமாகக் காஷ்மீர் நோக்கி ராணுவம் செல்லும் என்று சொன்னதோடு, ராய் புச்சர் பதவி விலகிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். காஷ்மீர் இந்தியா, பாகிஸ்தான் இரண்டு பிரதேசங்களுக்கு இடையே பிரிந்திருக்க வேண்டும் என்பதையே பிரிட்டன் விரும்பியிருக்கிறது. அடித்துக்கொண்டு கிடப்பார்கள் என்பது ஒருபுறம், காஷ்மீர் முழுமையாக இந்தியாவுக்குக் கிடைத்துவிட்டால் பாகிஸ்தானை அது விழுங்கிவிடும் என்றும் அஞ்சியிருக்கிறார்கள். காஷ்மீர் சிக்கலை ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்று உள்நாட்டு சிக்கலாக முடிந்திருக்க வேண்டிய அதைச் சர்வதேச சிக்கலாக நேரு மாற்றினார் என்பதோடு, வாக்கெடுப்புக்கு அவர் ஒத்துக்கொண்டார். பாகிஸ்தான் முழுமையாக விலகிய பிறகே வாக்கெடுப்பு என்பதைப் பாகிஸ்தான் கேட்கத்தயாராக இல்லை என்பதால் முதல் போர் முடியாத போராக இருக்கிறது.

காந்தியின் படுகொலைக்குப் பின்னர்ப் படேல், நேரு இணைந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தடை செய்யப்படுவதை உறுதி செய்ததன் மூலம் இந்தியா இந்து பாகிஸ்தான் ஆவதை தடுத்தார்கள். விடுதலைக்குப் பின்னர் ஜனநாயக ரீதியிலேயே தேர்தல் நடக்கவேண்டும் என்று சொல்லி கம்யூனிஸ்ட் பாணியிலான அரசையோ, ராணுவ அரசையோ, சர்வாதிகார போக்கையோ நேரு முன்னெடுக்காமல் உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்தி சாதித்தார்.

இந்துப் பெண்களுக்கு ஜீவனாம்சம், விவாகரத்து பெற உரிமை, சொத்துரிமை ஆகியவற்றை வழங்கும் இந்து பொதுச்சட்டங்களை நேரு நிறைவேற்ற முயன்ற பொழுது இந்து மதத்தின் காவலர்களாகச் சொல்லிக்கொள்ளும் ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அதை எதிர்த்தன. ஆனால், அவற்றை நிறைவேற்றி சீர்திருத்தங்களுக்குச் சட்டரீதியான முகம் கொடுத்தார் நேரு.

மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிவினை ஏற்படுத்திய ரணத்தால் முதலில் மறுத்த நேரு அதற்குப் பரவலான ஆதரவு இருந்ததால் அப்படியே அமைக்க ஜனநாயகரீதியில் ஒத்துக்கொண்டார். ‘நியாயமான முறையில் நியாயமான தேசத்தைக் கட்டமைத்தேன்.’ என்று நேரு சொன்னது பெரும்பாலும் உண்மையே. பழங்குடியினர், பட்டியல் ஜாதியினர் ஆகியோருக்கு உதவிகள் தேவை என்கிற எண்ணம் கொண்டிருந்தவர் நேரு. அதேசமயம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதைக்கூட அவர் விரும்பவில்லை. திறன் குறையும் என்று அவர் கருதினார். எனினும், அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீக்க அவர் முயற்சிக்கவில்லை. அதேசமயம் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற பரிந்துரையை அதைப் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவரே நிராகரித்ததால் கிடப்பில் போட்டார்கள்,

முழுமையாகச் சோஷலிசம் என்று பாயாமல் நேரு ஜனநாயக சோசலிசத்தை முன்னெடுத்தார் என்பதே உண்மை. அவரின் ஆரம்பகால வேகத்தைப் பார்த்துக் கம்யூனிஸ்ட்களே அஞ்சினாலும் அவர் அத்தனை வேகமாகச் சோசியலிசம் நோக்கிப் பயணப்படவில்லை என்பதே உண்மை. கல்வி, நிலப்பங்கீடு ஆகியவற்றில் மகத்தான சீர்திருத்தங்கள், தொழிலாளர்கள் மீது காவல்துறை பாயத்தடை என்று இயங்கிய நம்பூதிரிபாட் அரசை கலைக்கச் சொல்லி உத்தரவிட்ட நேருவின் செயல் அவரின் ஜனநாயகப்பண்பில் கரும்புள்ளியாக விழுந்தது.

சீனச்சிக்கலில் கிருஷ்ணமேனனை நம்பிக்கொண்டு என்ன நடக்கிறது என்றே கவலைப்படாமல் நேரு இருந்தார். சீனா பல்வேறு பகுதிகளில் நுழைந்து கையகப்படுத்தி இருந்த பொழுது சீனப்படைகளைத் தூக்கி எறிவேன் என்று நாடாளுமன்றத்தில் சவால் விட்டுக்கொண்டிருக்கிற அளவுக்கு அறியாமை கொண்டிருந்தார் அவர். கவுல், முல்லிக் முதலிய திறனற்ற தளபதிகள் ஜீப் ஊழலில் சிக்கிய கிருஷ்ணமேனனின் தயவில் களத்தில் நின்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரழக்க முக்கியக் காரணமானார்கள். தலாய்லாமாவை இந்தியாவுக்குள் அனுமதித்த நேரு சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் நம்பிக்கையை அவர் பெறவே இல்லை என்பதைச் சீனப் போர் நிரூபித்தது. போரில் இந்தியா சிக்குண்டு திணறிய பொழுது அமெரிக்காவே பேருதவி செய்தது. ஆயுதங்கள் தந்ததோடு நில்லாமல், விமானப்படையை அனுப்புவதாகவும் அது பயமுறுத்தியதும் சீனா போரை முடித்துக்கொள்ளக் காரணம்.

அணிசேராக்கொள்கையை உருவாக்கி சுதந்திரமான அயலுறவுக்கொள்கையை நேரு சாதித்தார். இந்தியை தென்னகத்தின் மீது திணிக்கிற வேலையை அவர் செய்யவில்லை. நீங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணை மொழியாகத் தொடரும் என்று அவர் உறுதியளித்தார். சீனப்போர் தோல்விக்குப் பின்னர்த் தான் பெருந்தோல்வி அடைந்த கே ப்ளான் வந்தது. இடதுகையில் பக்கவாதம், சீராகச் செயல்படாத சிறுநீரகம் இவற்றோடும் இந்திய மக்களுக்காக உழைத்த ஆளுமையாக நேரு திகழ்ந்தார். 150 பக்கங்களில் இத்தனை பெரிய வாழ்க்கையை அடக்கியதற்கு ஆசிரியருக்கு பூங்கொத்து. மேலும் பல இடங்களில் பின்புலத்தைத் தொட்டுவிட்டே நேரு கால அரசியலுக்கு வந்து அசத்துகிறார். நேரு பற்றி தமிழில் வந்த புத்தகங்களிலேயே ( மொழிபெயர்ப்பான இந்தியா காந்திக்குப் பிறகை தவிர்த்து ) சிறந்த புத்தகம் இதுவே.

சிக்ஸ்த்சென்ஸ் வெளியீடு
ஆசிரியர் : ரமணன்
பக்கங்கள் :152
விலை : 115

புத்தகத்தை வாங்க :
http://www.wecanshopping.com/products/நேருவின்-ஆட்சி.html
—————————————————————————————————

இனி விமர்சனங்கள் :
படேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்தார் என்று எழுதுகிற பகுதியில் நேரு எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எப்பொழுதும் சந்தேகத்தோடு பார்த்தார், அது சார்ந்து அவருக்கும் படேலுக்கும் இருந்த கருத்துப் பேதங்களைப் பதிவு செய்யவில்லை ஆசிரியர். படேல் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். தடைக்கு முழுக்காரணம் என்பது போன்ற பிம்பம் எழுகிறது. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்ற திலகர் பெண்ணின் மணவயதை ஏற்றியதை ஆதரிக்க மறுத்தது ஆச்சரியமே என்று எழுதுகிற ஆசிரியருக்கு திலகர் பசுவதைக்கு ஆதரவாகத் தீவிரமாக இயங்கியதும், அவரின் கணபதி, சிவாஜி விழாக்கள் மதரீதியாக மாறி இந்து-முஸ்லீம் கலவரங்களுக்கு வழிவகுத்தது தெரிந்திருக்கும். மத ரீதியாகப் பழமைவாதியாகவே அவர் இருந்தார் என்கிற பொழுது எப்படி இப்படி ஆச்சரியப்பட்டார் என்று தெரியவில்லை.

ஷேக் அப்துல்லா பகுதியில் ஒரு வரலாற்றுப் பார்வைக்குப் பதிலாக ஆசிரியரின் சொந்தப் பார்வையே மிகுந்துள்ளது வருத்தமான ஒன்று. ஷேக் அப்துல்லாவை துரோகி என்று சொல்கிற அளவுக்கு ஆசிரியர் சென்றுவிட்டார். அந்த வாதத்துக்குள் போக விரும்பாவிட்டாலும் ஜனசங்கம் காஷ்மீரில் செய்த குழப்பங்கள் அப்துல்லாவை தனிக் காஷ்மீர் என்பதை நோக்கி தீவிரமாகத் தள்ளியது என்பதையும் சமநிலையோடு ஆசிரியர் பதிவு செய்திருக்க வேண்டும். ஐந்தில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் என்பதையும், அவர்கள் நிலை ஹரிசிங் காலத்தில் மோசம் என்பதையும் பதிந்துவிட்டு ஷேக் அப்துல்லா கொண்டுவந்த நில சீர்திருத்தங்கள் காஷ்மீரை முஸ்லீம் தேசமாக மாற்றியது என்பது சாய்வான வாதம் இல்லையா ? ஷேக் அப்துல்லா மதச்சார்பின்மையைத் தூக்கிப் பிடித்துக் கலவரங்கள் என்பதை மத ரீதியாக நடக்காமல் தடுக்கிற முக்கியமான சக்தியாக அவர் காலத்தில் இருந்தார். தேர்தலில் தொகுதிகளை விரும்பியபடி வரைந்து கொண்டார் அவர் என்று எழுதும் ஆசிரியர் ஜனசங்கம் ஜெயித்திருக்குமே என்கிற ஆதங்கத்தோடு எழுதியதாகப் படுகிறது. பல தொகுதிகளில் எதிர் வேட்பாளர்கள் நிற்பதை தேர்தல் மனுக்களை நிராகரித்துத் தவிர்த்ததில் நேருவுக்குப் பங்கில்லை என்று மறுத்துவிட முடியாது. ஷேக் அப்துல்லா பக்கம் பட்ட பார்வை ஷ்யாம் பிராசத் முகர்ஜி பக்கமும் சென்றிருக்கலாம். நூலின் கனத்தை அசைக்கிறது இப்பகுதி.

அதே போலச் சீனாப் பக்கம் நேரு சாதகமாக இருந்தார் என்று எழுத வந்ததற்குக் கொரியப் போரில் அவர் செய்த விமர்சனத்தை எடுத்துக்காட்டாகக் காட்டியதற்குப் பதிலாக ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பு நாடாகச் சீனாவை ஆக்கச்சொல்லி கேட்டதையோ வேறு எதையோ குறிப்பிட்டு இருக்கலாம். இந்தியா கொரியப்போரில் இடதுசாரி அரசுகள் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளின் விமர்சனங்களை ஒருங்கே பெறுகிற அளவுக்கு நடுநிலையோடு செயல்பட்டது என்பது பலரின் பார்வை.

இட ஒதுக்கீட்டை நேரு விரும்பவில்லை என்பதை மட்டும் பதியும் ஆசிரியர், இட ஒதுக்கீடு தேவையே இல்லை என்று சொல்ல வந்து அதற்குத் தற்கால மருத்துவ மதிப்பெண்கள் எடுத்துக்காட்டைத் தருகிறார். நேரு காலத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் தேவைப்பட்டது என்று சொல்லித்தானே இடஒதுக்கீட்டுக்கான தேவையைப் பற்றிய வாதத்தை முன்வைப்பது சரியாக இருக்க முடியும்? நேரு கால வரலாற்றை எழுதுகிறோம் என்பதை அங்கே மறந்துவிட்டார் ஆசிரியர்.

சோஷலிசம் பற்றிய பக்கங்களில் நேரு அவ்வளவாகத் தீவிரமாகச் செயல்படுத்தாத நில சீர்திருத்தங்கள் பற்றியும், ஆரம்பக்கல்விக்கு அளிக்கப்படாத முன்னுரிமை பற்றியும் பேசவில்லை. அவர் காலத்தில் எழுந்த வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் இன்னமும் ஆழமாகப் பேசியிருக்க முயன்றிருக்கலாம். குறைந்தபட்சம் அவற்றைப் பற்றிக் குறிப்பிடவாவது செய்திருக்கலாம்.

விக்ரம் சாராபாய்-அறிவியல் நாயகன் !


விக்ரம் சாராபாய் என்கிற பெயரை உச்சரிக்கிற பொழுதே பெருமிதம்
கொள்ளவேண்டும் ஒவ்வொரு இளைஞனும்,இந்திய தேசத்தின் கனவுகளைக் கட்டமைத்த இளைஞர் கூட்டத்தில் அறிவியல் துறையில் மாபெரும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்
இவர். இவரின் திருமணத்தின் பொழுது இவர் வீட்டில் இருந்து கலந்து கொள்ள யாருமே இல்லை -வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காகப் போராடி எல்லாரும் சிறை
சென்று இருந்தார்கள் ,கேம்ப்ரிட்ஜில் படித்து முடித்து விட்ட
சி.வி.ராமனிடம் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்த இவர் தன் ஆய்வுகளைக் காஸ்மிக் கதிர்களைச் சார்ந்து செய்தார்.

நாட்டிற்கு அறிவியல் சார்ந்த பார்வை தேவை என நேரு வாதிட்ட பொழுது இந்திய விண்வெளி கழகத்தை அமைத்தார் சாராபாய் . அதற்காகத் தாராள நிதியை அரசிடம் இருந்து வாதாடிப்பெற்றார். பல்வேறு கனவுத்திட்டங்களுக்கான விதைகளை ஊன்றி, இளைஞர்களை அறிவியல் துறைக்கு வர ஊக்குவித்தார்.

ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் மறைவுக்குப் பின் இந்திய அணுசக்தி துறைக்கான பொறுப்பையும் ஏற்று
செயல்பட்டார் .கல்பாக்கத்தில் Faster Breeder Test Reactor
(FBTR),கொல்கத்தாவில் சைக்ளோட்ரான் திட்டம், இந்திய யூரேனிய கழகம் ஆகியவற்றையும் உருவாக்கி சாதித்தார். தும்பாவில் ராக்கெட் ஏவுதளமும் இவரால் உருவாக்கப்பட்டது

தனது குடும்பத்தினர் நிர்வகித்து வந்த சாராபாய் குழும நிறுவனத்திற்கு உதவும் பொருட்டு பரோடாவை மையமாகக் கொண்டு `Operations Research Group (ORG)’ என்கிற சந்தை ஆய்வு (Market Research) நிறுவனத்தை 1963 ல் ஆரம்பித்தார். ரீடெயில் ஆடிட் என்கிற சந்தை ஆய்வு முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்திய முன்னோடி நிறுவனம் இது.

இன்றைக்கு உலகஅளவில் கவனம் பெறும் இந்திய மேலாண்மை மையங்களுள் முதன்மையான ஐ.ஐ.எம். அகமதாபாத் இவரின் உருவாக்கமே. அன்றைய குஜராத் முதல்வர் ஜீவராஜ் மேத்தா ஆதரவில் கஸ்தூரிபாய் லால்பாய் அவர்களோடு இணைந்து ஐ.ஐ.எம். மை நிறுவினார். மத்திய, மாநில அரசுகள், உள்ளூர் தொழிலதிபர்கள், போர்ட் அமைப்பு, ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு இதனை நிறுவினார்.

விண்வெளிப்பயணங்கள் மாதிரியான
விலை மிகுந்த பயணங்கள் இந்தியா மாதிரியான ஏழை நாட்டுக்கு தேவையா என்கிற கேள்விக்கு இப்படிப் பதில் சொன்னார் சாராபாய் :

“முன்னேற்றப்பாதையில் தற்போது தான் பயணிக்க ஆரம்பித்திருக்கிற ஒரு தேசத்துக்கு விண்வெளிப்பயணம் தேவையா என்று வினாக்கள் எழும்புகின்றன. இரு
வேறு எண்ணங்கள் இல்லாமல் உறுதியாக நாங்கள் இந்தப் பயணத்தை முன்னெடுத்து இருக்கிறோம். நிலவை நோக்கியோ,கோள்களைக் கண்டறியவோ, மனிதர்களை விண்ணுக்குக் கொண்டு செல்லும் பணக்கார நாடுகளோடு போட்டி போடுவதற்கான கனவுகள் இல்லை இவை ! பொறியியல் மற்றும் விஞ்ஞான நுணுக்கங்களைச் சராசரி மனிதனின் சிக்கலை தீர்ப்பதிலும் ,சமூகப் பிரச்சனைகளைச் சரி செய்வதற்காகவும் தான் இந்தக் கனவு அமைப்பு. உலகச் சமூகத்துக்கு எந்த வகையிலும் பின்தங்கிவிடக்கூடாது என்பதை
கருத்தில் கொண்டு தேசத்தின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு அர்த்தமுள்ள இது !”

ஐம்பத்தி இரண்டு வயதில் மறைந்து போன இந்தத் தீர்க்கதரிசியின் கனவுகளின் வெற்றிகள் தான் இன்றைக்கு இந்திய விண்வெளி மற்றும் அணுசக்தியில் பெற்று இருக்கும் இடம் .

தோனியின் மவுனமான வெற்றி!


தோனிக்கு வாய்ப்புகளை அள்ளித்தந்த சூழலோ, தங்கத்தட்டில் கிரிக்கெட் நுழைவோ அவருக்குச் சத்தியமாகத் தரப்படவில்லை. பீகார் அணியில் அவர் ஆடி,  அணி தோற்றுப் போன போட்டிகளின் கதைகள் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். இரவுகளில் கண்கள் சிவக்க டிக்கெட்களைப் பரிசோதித்துவிட்டு, பயிற்சிக்கு போன பொழுதுகளை அவரின் ஆறு சதங்கள் சொல்லிவிடாது.

இலங்கையுடனான தொடரில்தான் இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். பந்தையே சந்திக்காமல் டக் அவுட்டாகி ஒரு நாள் போட்டி அவரை அன்போடு வரவேற்றது. டெஸ்ட் போட்டியும் பூமெத்தையாக அமையவில்லை. ஐந்து விக்கெட்டுக்களை 109 ரன்களுக்கு அணி இழந்திருந்த சூழலில், ‘தோனி ஆடிவிட்டு வா!’ என்று அனுப்பி வைத்தார்கள். மலைகளின் மீது ஏறி, ஏறி உரமேறி இருந்த கால்கள் சளைக்காமல் அன்று கைகளோடு இணைந்து போராடியது. முப்பது ரன்கள் அடித்திருந்த தோனிதான் கடைசி ஆளாக நடையைக் கட்டியிருந்தார்.

விட்டேனா, தீர்க்கிறேனா பார் என்று பாகிஸ்தான் கொக்கரித்துக் கொண்டிருந்த பைசலாபாத் டெஸ்டில், பாலோ ஆனைத் தவிர்க்கவே நூறுக்கும் மேலே ரன் அடிக்க வேண்டிய சூழல். சிரித்தபடி, ஆளைக் கொல்கிற அளவுக்கு அழுத்தம் இருந்தாலும் ‘எல்லாம் ஆல்ரைட்!’ என்கிற அதே முகபாவனையோடு வெறும் 93 பந்துகளில் சதமடித்து அணியைத் தோனி கரைசேர்த்தபொழுதுதான் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

பதினொரு தையல்களோடு கும்ப்ளே கிரிக்கெட் வாழ்க்கை போதும் என்று கையசைத்து விடைபெற்ற பொழுது, எல்லா வகையான கிரிக்கெட்டிலும் அணித்தலைமை தோனி வசம் வந்திருந்தது. வெற்றியைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதுபோல அணி அடித்து ஆடியது.

கிரேக் சேப்பல் உண்டாக்கிவிட்டுப் போயிருந்த சீனியர்கள் வெளியே போங்கள் கோஷத்துக்கு முடிவுகட்டி, “எல்லாரும் முக்கியம் பாஸ்!” என்று தோனி அமைதியாக ஒருங்கிணைத்துக் கொண்டே போனதில் அணி முதலிடத்தை நோக்கி முன்னேறியது. இலங்கையுடனான தொடரில் அமைதியாக இரண்டு சதங்கள் அடித்துக் கூல் கேப்டன் கைகொடுக்க, அணி நம்பர் ஒன்னாக ஒன்றரை ஆண்டுகள் கோலோச்சியது. கிறிஸ்டன் அப்பொழுது ஏற்பட்ட உணர்வை இப்படிச் சொன்னார், “தோனி மட்டும் உடன் வருவார் என்றால்போருக்குக் கூடப்போகத் தயார்.”

தோல்வியில் இருந்து அணியைக் காக்க பேட்டிங் செய்வது, அசராமல் விக்கெட் கீப்பிங் செய்து ஸ்டம்பிங், கேட்சுகள் அள்ளுவது, ஏழாவது விக்கெட்டாக வந்தாலும் சதமடிப்பது எல்லாமும் செய்து முடித்த பின்பு, “நான் ஒன்னுமே பண்ணலைப்பா!” என்கிற மாதிரியான அந்தப் பாவனையில் தான் எத்தனை வசீகரம்?

உச்சத்துக்குப் பிறகு உன்னைக் கீழே தள்ளும் உலகம் என்பது போல வெளிநாட்டுக்குத் தலைமை தாங்கி போன போட்டிகளில் எல்லாம் அடித்துத் துவைத்தார்கள். தொடர்ந்து எட்டுத் தோல்விகள் வந்து சேர்ந்த பொழுது தோனியை காய்ச்சி எடுத்தார்கள். புதிய அணியை நிர்மாணிக்கிறபொழுது நிலநடுக்கங்கள் எழத்தான் செய்யும் என்று அவருக்குத் தெரியும். சொந்த மண்ணில் தோல்வியைச் சுவைக்காத அணி இங்கிலாந்திடம் தொடரையே இழந்த பொழுது தோனி தோற்றுவிட்டார் என்று முடிவுரை எழுதினார்கள்.

அண்ணன் ஆஸ்திரேலியாவை அன்போடு அவர் வரவேற்றார். நாற்பது வருடங்களில் முழுவதும் தோற்கடிக்கப்பட்ட வரலாறு இல்லாத அந்த அணியை 4-0 என்று துவைத்துத் தொங்கவிட்டார்கள். தோனி எப்பொழுதும் போல ஓரமாக நின்றுகொண்டார். வெளிநாட்டு மண்களில் அதிகபட்ச தோல்விகளைப் பெற்ற தலைவர் என்று விமர்சிக்கப்படுகிற தோனி மிக அதிகபட்ச டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றிருக்கிறார் என்பதையும், வெற்றி சதவிகிதம் 45 என்று இருப்பதையும் இணைத்தே பேசவேண்டும். அடுத்த இடத்தில் இருக்கும் கங்குலி தலைமையில் ஆடிய இந்திய அணி 42.9 % வெற்றிகளைச் சுவைத்திருக்கிறது.

இன்னம் ஆறு விக்கெட்டுகளைக் கழற்றி இருந்தால் முன்னூறு கைப்பற்றல்கள், கூடவே 124 ரன்கள் அடித்திருந்தால் ஐயாயிரம் ரன்களைத் தொட்டிருக்கலாம் என்கிற சூழலில், “போதும்!” என்று விடை பெறுகிற தோனியின் இலக்கு உலகக்கோப்பை என்பது அவரை ஆழமாகக் கவனிக்கிறவர்களுக்குப் புரியும்.

சச்சின், உலகமயமாக்கல் இந்தியாவில் நுழைந்த சூழலில், பல்வேறு வன்முறைகள், வலிகளுக்கு நடுவே தன் ஆட்டத்தின் மூலம் ஆறுதல் தந்தார் என்றால், “நான் இருக்கிறேன் பார்!” என்று அறிவித்துக்கொண்டு இருக்காமல் அர்ப்பணிப்போடு செயல்படுவதும் வெற்றிகளைத் தரும் என்று தோனி அறியச் செய்தார்.

அணியை அமைதியான ஆளுமையால் இறுகப் பிணைத்து வெற்றிகளைப் பெறமுடியும் என்கிற பாடத்தைத் தோனி நடத்தினார். நடுத்தரக் குடும்பத்தில் இருந்து மென்மையான புன்னகை, தீர்க்கமான ஆட்டத்தின் மூலம் உன்னதங்களை அடைய முடியும் என்கிற நம்பிக்கையையும் அவர் சேர்த்தே தந்துவிட்டுப் போயிருக்கிறார்.

நான்கு ஓவர்கள், நான்கு விக்கெட்கள் மீதமிருந்த நிலையில், வருடம் முடிகிற தருணத்தில் வரலாறு ஒன்றையும் முடித்துக்கொள்வது ஆர்ப்பரிப்பு இல்லாமல் பாயும் சூரியக்கதிர் போன்ற தோனிக்கு எளிமையான விஷயமாக இருக்கலாம். ரசிகர்களுக்கு அப்படியிருக்காது. வெற்றிகளின்பொழுது ஓரமாக ஒரு ஸ்டம்ப்பை மட்டும் ஏந்திக்கொண்டு போகும் அவர் தற்பொழுது எல்லாரின் இதயங்களையும் எடுத்துக்கொண்டு மவுனமாகவே போகிறார். அறிவிப்பை அவர் சார்பாக நம்மையே அறிவிக்க வைத்திருப்பதில் இருக்கிறது அவரின் மவுனமான வெற்றி.

கவாஸ்கர் சொன்ன அந்த வரிகள்தான் அடுத்த உலகக்கோப்பையில் தோனியிடம் நாமும் கேட்கிறோம் , “எனக்கு இன்றைக்குச் சாவு என்றால், 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி அடித்த இறுதி சிக்ஸரை மீண்டுமொரு முறை பார்த்துவிட்டு சாகவேண்டும்.” நூறு கோடி பேரின் பெரும்பாலான நம்பிக்கைகளை மெய்ப்பித்த நீங்கள் இதையும் மீண்டுமொரு முறை செய்து முடிப்பீர்கள்.

சகாப்தங்கள் முடிவதில்லை !

ரோமைன் ரோலண்ட் எனும் மனிதநேயர் !


ரோமைன் ரோலண்ட் எனும் மாபெரும் மனிதநேயர் மறைந்த தினம் டிசம்பர் முப்பது.
பிரான்ஸ் தேசத்தில் 1844 இல் பிறந்த இவர் தத்துவத்தில் பட்டம் பெற்றார்; ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். எனினும் காலப்போக்கில் ஆசிரியர் தொழில் மீது வெறுப்பு உண்டானது; மாணவர்களை அரட்டி,உருட்டி மிரட்டும் அது  அவரின் கனிவான சுபாவத்துக்கு ஒத்துவராத பண்பாக இருந்தது.

வேலையை உதறிவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார் .அவரின் ஆரம்பகால நாடகங்கள் பெரிய
வரவேற்பை பெறவில்லை; அவரை டால்ஸ்டாயின் எழுத்து ஈர்த்தது. பீத்தோவனின் இசைக்கோர்வை அவரை ஈர்த்தது; ஓயாத உழைப்புக்காரர் ஆன மைக்கேலாஞ்சேலோவும்
தான். மூவரின் வாழ்க்கை வரலாற்றையும் அற்புதமான நூல்கள் ஆக்கினார் .

அவருக்கு இந்தியாவின் ஆன்மீகத்தின் மீது காதல் வந்தது; இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் கொண்டார் .தாகூரை அவர் அவர் தேசத்தில் சந்தித்த
பொழுது ,”நீங்கள் விவேகானந்தரை படித்தால் இந்தியாவைப் புரிந்துகொள்ளலாம்.” என சொல்லப்படவே இவர் அவரின் நூல்களை வாசிக்க ஆவல் கொண்டார் .இவருக்கு ஆங்கிலம் தெரியாது; பெரும்பாலான நூல்கள் ஆங்கிலத்தில் இருந்தன . இவரின்  சகோதரியின் உதவியோடு அவற்றைப் படித்து நெகிழ்ந்து போனார் .The Life of Ramakrishna andSwami Vivekanandas Life and Gospels.என்கிற அற்புதமான நூலை எழுதினார் .

ரோலண்ட் குறுகிய மனப்பான்மை கொண்டு நாடுகள் சண்டைப்போடுவதைக் கண்டு மனம்
நொந்தார் . இரண்டு வெவ்வேறு துருவங்கள் எனக்கருதப்படும் மனிதர்கள் அன்பால் இணைய முடியாதா? எனக் கேள்வி எழுப்பிக்கொண்டார் . அதை JEAN-CHRISTOPHE என்கிற தன் நாவலுக்குக் கருப்பொருள் ஆக்கினார்; கதையின் நாயகன் ஒரு ஜெர்மன் இசைக்கலைஞன் அவன் இக்கட்டான சூழல்களிலும் பிரான்ஸ் தேசத்து இளைஞன் ஒருவன் மீது நட்பு பாராட்டுகிறான் -நாடுகளைக் கடந்து அன்பால் மனிதர்கள் இணைய முடியும் என அடித்துச் சொன்ன ரோலண்டுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது

காந்தியை மிகவும் நேசித்தார். அவரைச் சந்தித்த பொழுது காந்தி தன்னை முத்தமிட்ட தருணத்தைப் புனித பிரான்சிஸ் மற்றும் டொமினிக் ஆகியோரின்  முத்தத்தோடு ஒப்பிட்டு சிலாகித்தார் .காந்தியை பெரும்பாலும் நம் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு ஜீவனாக மட்டுமே பார்க்கிறோம்; ஆனால்,ரோலண்ட்  அப்படிப் பார்க்கவில்லை,உலகம் முழுக்க உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுக்கிற ஒரு மனிதராகத் தான் அவரை அவர் பதிவு செய்கிறார் . அதை ஜெயகாந்தன் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். காந்தியை  பற்றிய இவரின் நூல் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. உலகமே பாசிசம் கண்டு அஞ்சிக்கொண்டு இருந்த பொழுது இவர் வன்முறையின்மையை (PACIFISM ) காந்தியின்  வழியில் வலியுறுத்தினார் .

2014 ஒரு பார்வை


28,000 முறை இந்த வருடம் என் தளம் பார்வையிடப்பட்டுள்ளது. 72 நாடுகளில் இருக்கும் தமிழர்கள் கட்டுரைகளை வாசித்துள்ளார்கள். நேரு, காந்தி, PK திரைப்படம், கிண்டி பொறியியல் கல்லூரி, வீரமாமுனிவர் பற்றிய கட்டுரைகள் மிக அதிகபட்ச பார்வையிடுதலை பெற்றிருக்கின்றன. இருநூற்றி எண்பத்தி மூன்று பதிவுகள் எழுதி சேர்த்திருக்கிறேன். உங்களின் வாசிப்புக்கு நன்றி

Click here to see the complete report.

பெரியார் எனும் பேராசான் !


பெரிய வணிகரின் மகனாக வாழ்ந்த பெரியார் ஜாதிய அடக்குமுறைகளைத் தன்னுடைய இளம்வயதிலேயே கண்ணுற்றார். காசிக்கு வீட்டில் கோபித்துக்கொண்டு போன போது பசியோடு மடங்களுக்குள் உண்ணச்சென்ற பொழுது ஜாதி பார்த்து உணவிட்ட கொடுமை அவரை ஏகத்துக்கும் பாதித்தது.
காங்கிரஸ் கட்சிக்குள் ராஜாஜியால் கொண்டு வரப்பட்ட பெரியார், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நீதிமன்றம் செல்லாமல் இழந்தார். பல ஏக்கர் மரங்களில் கள் இறக்குவதை நிறுத்தி அவற்றை வெட்டிச்சாய்த்தார். ஊர் ஊராகச் சென்று கதர் விற்றார். காங்கிரஸ் நிதியுதவியோடு நடந்த சேரன்மாதேவி குருகுலத்தில் சமபோஜனம் மறுக்கப்பட்டது. காங்கிரசில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது எல்லாமும் அவரைக் காங்கிரசை விட்டு வெளியேற்றியது.

சுயமரியாதை இயக்கம் துவங்கினார். மக்களை விட்டு வெகுதூரம் நகர்ந்திருந்த ஜஸ்டிஸ் கட்சியை அண்ணாவுடன் இணைந்து கைப்பற்றிச் சீர்திருத்தினார். திராவிடர் கழகமாக அக்கட்சி உருவெடுத்தது. முதல்வராக எத்தனையோ அழைப்புகள் வந்த பொழுதும் ஏற்க மறுத்து தேர்தல் அரசியலை விட்டு விலகியே நின்றார்.

பெண் விடுதலையைத் தீவிரமாக முன்னெடுத்தார். பெண்களைக் காந்திய இயக்கத்தின் மூலம் முதலில் அரசியலுக்குள் கொண்டு வருவதில் ஆரம்பித்த அவர் அதற்குப்பின்னர் திராவிட இயக்கத்திலும் அதைத் தொடர்ந்தார். காந்தி மக்கள் தொகை ஏறுவதைத் தடுக்கப் பிரம்மச்சரியம் கடைபிடிக்கச் சொன்ன பொழுது பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள வேண்டும் என்றும், கர்ப்பப்பையை எடுத்துவிடவேண்டும் என்று இவர் முழக்கமிட்டார்.

இளையவராக இருந்தாலும் வாங்க, போங்க என்றே அழைப்பார். நேருக்கு நேராக விமர்சிப்பதை வரவேற்றார். பேசிக்கொண்டு இருக்கும்போது வரும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்வது அவரின் வழக்கம். மேடையில் பேசிக்கொண்டு இருந்தபோது தொடர்ந்து ஒருவர் வினாக்களைத் தொடுத்துக்கொண்டே இருந்தார். பெரியாரும் பதில் சொல்லிக்கொண்டே வந்தார். இறுதியில் அவரின் பேனா தீர்ந்துபோனது. பெரியார் தன்னுடைய பேனாவை எடுத்து நீட்டினார்.

இட ஒதுக்கீட்டுக்கு தீவிரமான ஆதரவு, சுய மரியாதைத் திருமணங்களை ஊக்குவித்தது, பெயருக்குப் பின்னிருந்த ஜாதிப்பெயர் நீக்கம் என்று மிக முக்கியமான முன்னெடுப்புகளின் தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தத்தின் தனித்த தலைவராக அவர் திகழ்கிறார்.

எதிர்ப்பு அரசியலை தீவிரமாக முன்னெடுத்தவர். நடிகர்களால் நாட்டுக்கு வரும் பயனை விடத் தீங்கே அதிகம் என்றும், கூத்தாடிகள் என்றும் விமர்சித்தார். ‘யாரைத்தான் எதிர்க்கவில்லை!’ என்று அவரே சொல்கிற அளவுக்குத் தீவிரமாக இயங்கியவர். இந்தி எதிர்ப்பு, குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, பிரமாணர் களின் ஆதிக்க எதிர்ப்பு என்று நீண்டன அவரின் போராட்டங்கள்.

கடவுள் வாழ்த்துப் பாடினால் எழுந்து நிற்பார். திரு.வி.க அவரைப்பார்க்க வந்தபோது அவருக்கு விபூதி அணிய தானே பாத்திரத்தை நீட்டினார். சில கோயில்களின் அறங்காவலராகச் சிறப்பாகப் பணியாற்றினார். வாழ்நாள் முழுக்க அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் எதிர்த்த ராஜாஜி இறந்தபோது கண்ணீர்விட்டு அழுது, வாய்க்கரிசி போடக்கேட்ட மாண்பாளர்.

காங்கிரசை விட்டு விலகிய பின்னர்க் காந்தியை ஓயாமல் எதிர்த்த பெரியார், மதவாதியான கோட்சேவால் மதவெறியை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்த காந்தி இறந்தபோது தீபாவளிக்குப் பதிலாகக் கோட்சே தூக்கிலிடப்பட்ட தினத்தைக் கொண்டாட வேண்டும் என்றதோடு, ‘சுடப்பட்டவர் சுயமரியாதைக்காரர் காந்தியார்’ என்று குறிப்பிட்ட அவர் காந்திஸ்தான் என்று இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும்.’ என்றும் எழுதினார்.
பெரியார், புத்துலகின் தீர்க்கதரிசி, தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, தேவையற்ற சடங்குகள், அடிப்படையற்ற பழக்கங்களின் தீவிரமான எதிரி” என்று யுனெஸ்கோ புகழாரம் சூட்டியபோது அதை ஏற்றுக்கொள்ள வெட்கப்படுவதாகச் சொன்னார்.

தன்னுடைய இறுதிக் காலத்தில் ஹெர்னியாவால் இறங்கிச் சரியும் குடல், வயிற்றில் பைப் போட்டு சிறுநீர் கழிக்க வேண்டிய சூழலிலும் பகுத்தறிவோடும், சுய மரியாதையோடும் தமிழர்கள் திகழ எண்ணற்ற உரைகளை நிகழ்த்திஅறிவு வெளிச்சம் பாய்ச்சினார் அவர்.

பெரியார் இறந்தபோது எந்த அரசுப் பதவியிலும் இல்லாததால் அவருக்கு எப்படி அரசு மரியாதை செய்வது என்று அதிகாரி கேட்டார். முதல்வர் கலைஞர் இப்படிப் பதில் சொன்னார் , “காந்தி அவர்களும் எந்தப் பதவியிலும் இல்லாமல் இருந்தாலும் அவர் தேசப்பிதா என்பதால் மரியாதைகள் செய்யப்பட்டது இல்லையா? தமிழ் நாட்டின் தந்தை பெரியார்!” என்று சொல்லி சகல மரியாதை களோடு அவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹாவின் ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ புத்தகத்தில் இடம் பெறும் இரண்டு தமிழர்களில் பெரியாரும் ஒருவர். இப்படிப் பெரியாரின் பணிகளை அவர் குறிப்பிடுகிறார் , “அறுபத்தி ஏழில் தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியைக் காங்கிரசிடம் இருந்து கைப்பற்றியது. அதற்குப் பின்னர் அது இன்றுவரை ஆட்சிக்கு வரவே இயலவில்லை. பெரியாரின் கருத்தியல் மற்றும் அமைப்புரீதியிலான தீவிரமான செயல்பாட்டு அடிப்படைகளே இதற்குக் காரணம். நிச்சயமாகப் பெரியார் தன்னுடைய கனவான தமிழர்களுக்குத் தனி நாடு என்பதற்கு இந்திய அரசுக்குள் அதிகச் சுயாட்சி என்பது ஈடாகாது என்றே எண்ணியிருப்பார்”.- புத்தக கண்காட்சிக்கு வரவிருக்கும் நூலில் இருந்து ஒரு கட்டுரை

பார்க்கக் கூடாத படமா ‘PK’ ?


திரையரங்கம் போய் பார்க்கிற இரண்டாவது ஹிந்தி திரைப்படம் ‘PK’. படம் சிறப்பாக இருக்கிறது என்று விமர்சனங்கள் தொடர்ந்து வந்ததால் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமில்லாமல் போய் அமர்ந்தேன். எனக்குள் இருந்த வரலாற்று மற்றும் மானுடவியல் மாணவனுக்கு தலைவாழை விருந்தாக இந்த கமர்ஷியல் படம் அமைந்திருக்கிறது. ரசிகர்கள் பல இடங்களில் கைதட்டி,குதூகலித்து கடைசியாக ஒரு படத்தை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. படம் வெகு விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் போவதால் அதைப் பற்றிய விவரிப்பை இந்த கட்டுரையில் பெரும்பாலும் செய்யப்போவதில்லை.

ஒரு குழந்தை எந்த அடையாளமும் இல்லாமல் தனக்குள்ளும்,சக மனிதர்களுக்குள்ளும் இருக்கும் மனிதத்தை மதங்களை கடந்து தேடினால் என்னாகும் ? கடவுளின் தரகர்கள், தூதுவகள் என்று சொல்லிக்கொள்பவர்களை நோக்கி நீங்கள் கேள்விகள் கேட்டிருக்கிறீர்களா ? படிக்காதவர்களை மந்தைகள் என்று விமர்சிக்கும் எத்தனை பேர் சாமியார்வசமும், மூட நம்பிக்கைகளிலும் ஊறிப்போய் இருக்கிறோம் ? இந்தக் கேள்வியை வெவ்வேறு வகைகளில், ராங் கால் என்கிற அம்சத்தின் மூலம் வெற்றுக்கிரகவாசியான PK வைக்கிறான்.

சொந்த விஷயமான மதத்தைப் பற்றி பொது வெளியில் பேசுகிறீர்கள். ஏன் ஆணுறையை யாரும் உரிமை கொண்டாட மறுக்கிறீர்கள் என்று PK கேட்க, உடலுறவு சொந்த விஷயம் என்று பதில் சொல்கிறார் நாயகி. அப்படி ;என்றால் ஏன் உடலுறவு கொள்ளப்போவதை பெரிய விழா எடுத்துச் சொல்கிறீர்கள் ? என்று அப்பாவியாக கேட்கையில் விசில் பறக்கிறது.

டீ விற்பவனையும், கடவுளை விற்பவனையும் ஒப்பிட்டு பேசும் இடம் இன்னுமொரு கவிதை. அங்கே பெருத்த மூலதனம் தேவை,இங்கே ஒரு கல்,குங்குமம் போதும். அங்கே ஆட்கள் ஆறஅமர அருந்தி ரசிக்க வேண்டும்,இங்கே துரத்திக் கொண்டே இருப்பது தான் வியாபார டெக்னிக். அங்கே நிமிர்ந்து நின்று வேண்டியதை பெறுவீர்கள், இங்கே பயத்தை மூலதனமாக்கி குனிந்து, குனிந்தே வாழ்க்கை கடக்க வைக்கப்படுகிறது.

நமக்குள் இந்த மதத்தவர் இப்படித் தான் என்கிற முத்திரைகள் ஆழமாக பதிந்து போயிருக்கின்றன. பேஷன் என்கிற அணிகிற ஆடைகள்,அடையாளங்களை கொண்டே ஒரு மதத்தினை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்கிற எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியானவர்கள் என்பது எவ்வளவு அபத்தமானது. இவர்கள் ஏமாற்றுவார்கள், சாமியார்கள், தேவ விசுவாசம் சொல்பவர்கள் எல்லாம் புனிதர்கள் என்று நாம் ஏன் நம்புகிறோம் ? உலகை படைத்ததாக நீங்கள் நம்பும் கடவுள் அப்படியெல்லாம் செய்ய வைப்பாரா ?

பகுத்தறிவை பயன்படுத்த ஏன் சாமியார்கள் முன் மறந்து போகிறோம். நம்முடைய உளவியல், சொந்த சிக்கல்களுக்கு கோயில்களில், தர்காக்களில், சர்ச்சுகளில், ஆசிரமங்களில் தவங்கிடக்க சொல்லித் தரப்படுகிற நமக்கு ஏன் அந்த சிக்கலை எதிர்கொள்ள சொல்லித்தரப்படுவதில்லை. எல்லா சிக்கலையும் தீர்க்க வல்ல கடவுளின் தூதர்கள் ஏன் நம்மிடம் பணம் பிடுங்குகிறார்கள் ? இப்படி எக்கச்சக்க கேள்விகளை இந்த படம் எழுப்பிச் செல்கிறது.

. வன்மம் கொண்டு மனிதர்களை கொன்று கொண்டே இருந்தால் வெறும் ரத்தம் தோய்ந்த செருப்புகள் மட்டுமே மிஞ்சும் என்கிற குரல் பெஷாவர் சம்பவத்துக்கு பிறகு வரும் படம் என்பதால் அதோடு பொருந்திப் போவதாக தோன்றியது எனக்கு

வெவ்வேறு மதங்களின் செயல்பாடுகள்,கலாசாரங்கள் மாறுபட்டு நிற்கின்றன. அவை எந்த அன்பின் அடிப்படைக்காக எழுந்தனவோ அதை விடுத்து அடையாளங்களை நம் மீது சுமையாக திணிக்கும் வன்முறையை எதிர்த்து யோசித்து இருக்கிறீர்களா ? படத்தில் சிரித்துவிட்டு வீட்டில் லேபிள்களை கழற்றி வைத்துவிட்டு சிந்திக்க இந்த படம் வழிகோலும்.

இந்து மதத்தை மட்டுமே இந்தப்படம் குறிவைத்து தாக்குவதாக சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதைவிடத் தீவிரமான கேள்விகளை OMG படம் எழுப்பிய பொழுது இவர்கள் பாதுகாவலர் வேடம் தரிக்க மறந்து போனார்கள். படத்தில் கிறிஸ்துவம், இஸ்லாம், சீக்கிய மதம் ஆகியவற்றின் செயல்பாடுகளும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டே இருக்கிறது. படம் மனிதம் மனதில் ஒட்டிக்கொண்டு இருக்கும் தலைமுறையை நோக்கி எடுக்கப்பட்டு இருக்கிறது.
படத்தைப் பார்த்து சிரிக்கவோ, கொஞ்சமாக கண்ணீர் விடவோ, ஒற்றை அடையாளத்தை தூக்கிப் பிடிக்கிற நம்முடைய நாடகத்தனமான போக்கின் மீதான கேள்விகள் துளைத்தாலோ, சாமியார்களை சரமாரியாக கேள்விகளால் குடைய வேண்டும் என்றோ- இவற்றில் எதோ ஒன்று கூட தோன்றாமல் போனால் நல்ல மருத்துவரைப் பார்க்கவும். அன்பு செய்வதை மறந்துவிட்ட மதமெனும் பேய் பிடித்த அனைவருக்கும் அன்பு செய்ய கற்றுத்தருகிறான் PK

‘பாரத ரத்னா’ மாளவியா வாழ்க்கை வரலாறு !


பண்டித மதன் மோகன் மாளவியா இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றிய முக்கிய ஆளுமைகளில் ஒருவர். இந்து தேசியத்தை முன்னிறுத்தி ஹிந்து மகாசபையைத் துவங்கி வைத்தவர். பாகவத சொற்பொழிவுகள் நிகழ்த்தும் குடும்பத்தில் பிறந்த அவர் சம்ஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்றதோடு நில்லாமல் ஆங்கிலக் கல்வியையும் பெற்றார். பின்னர் அரசாங்கத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் இந்தியர்களுக்குச் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று அவர் ஆற்றிய உரை பரவலான கவனத்தை ஈர்த்தது. காங்கிரசின் முக்கிய முகங்களில் ஒருவராக அவர் மாறுவதற்கான வாய்ப்புகளை அது வழங்கியது. ஹிந்துஸ்தான் இதழின் ஆசிரியராக ஆனவர் அதற்குப் பின்னர்ச் சட்டம் பயின்றுவிட்டு திரும்பினார்.

காசியில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். பல லட்சம் ரூபாய் நிதியை அலைந்து திரிந்து திரட்டினார். அன்னிபெசன்ட் அவர்களும் மத்திய இந்துப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்கும் கனவில் இருந்தார். இரண்டு கனவுகளையும் இணைத்து தனியார் முயற்சியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வி தரும் நிலையமாகப் பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தார்கள்.

காந்தியடிகளின் ஒத்துழையாமை போரில் பங்கு பெற்றுச் செயல்பட்டாலும் இஸ்லாமியர்களை இணைத்துக்கொண்டு பணியாற்றும் கிலாபத் இயக்கத்துக்கு எதிராக அவர் இருந்தார். செளரி சௌரா சம்பவத்தால் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திய பொழுது அந்தக் காவல் நிலைய எரிப்புச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை வாதாடி அவர் மீட்டார்.

ஆங்கிலேய அரசு சட்டசபைகளுக்குள் இந்தியர்களுக்கு இடம் வழங்க ஆரம்பித்த பொழுது அதில் மாளவியாவும் இடம் பெற்றார். உருதுவைப் போலச் சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட ஹிந்தியும் நீதிமன்றங்களில் பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டங்கள் நடைபெற்ற பொழுது அதில் இவர் பங்குகொண்டார். அது அப்போராட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசியது. உருது பரவலாகப் பயன்பாட்டில் இருந்தாலும், அதைக் காயஸ்தர்கள் ஆதரித்தாலும் மத ரீதியாக மொழியை அணுகி மாளவியா சார்ந்திருந்த குழு செயல்பட்டதால் அஞ்சுமான் தாரிக் இ உருது என்கிற உருது மொழி பாதுகாப்பு இயக்கம் துவங்கப்பட்ட மத ரீதியான அரசியலுக்கான வேர்கள் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திற்கு முன்பே விதைக்கப்பட்டு விட்டது. வங்கப்பிரிவினையால் நாட்டின் பல்வேறு பகுதிகள் கொதித்துக்கொண்டு இருந்த சமயத்தில் மாளவியா ஆங்கிலேய அரசு இந்து பல்கலை ஒன்றை துவங்குவதைக் கரிசனத்தோடு அணுகியதும், ஹிந்திக்குக் கொடுக்கப்பட்ட சம அந்தஸ்தும் அவரை த்ருப்திபடுத்தின. எல்லாவற்றுக்கும் மேலாகச் சட்டசபையில் அவருக்கும் இடம் தரப்பட்டு இருந்தது. அங்கே குரல் எழுப்பினால் போதும், இறங்கிப் போராட வேண்டிய காலமில்லை இது என்பது அவரின் பார்வையாகச் சுதேசி இயக்க காலத்தில் இருந்தது.

காங்கிரசின் சட்டசபைக்குள் நுழைவதில்லை என்கிற காங்கிரசின் முடிவை மறுத்து 1923 சுயராஜ்யக்கட்சியைச் சித்தரஞ்சன்தாஸ், மோதிலால் நேரு ஆகியோருடன் மாளவியாயும் இணைந்து ஆரம்பித்தார். அடுத்து வந்த தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை ஐக்கிய மாகாணங்கள், வங்கத்தில் பெற்றார்கள். கிலாபத் இயக்கத்தினரும் முனிசிபல் தேர்தல்களில் சுயராஜ்யக் கட்சியில் இணைந்து வென்றிருந்தார்கள்.

1924-ல் கோஹத் பகுதியில் நடந்த மதக்கலவரங்களில் எண்ணற்ற ஹிந்துக்கள் கொல்லப்பட்டார்கள். காந்தி அமைதி திரும்ப இருபத்தி ஒரு நாள் உண்ணா நோன்பு இருந்தார். அதே போல மாப்ளா கிளர்ச்சி ஆங்கிலேயருக்கு எதிராக ஆரம்பத்தில் தோன்றினாலும் அது மதச் சாயம் அடைந்து ஹிந்து-முஸ்லீம் கலவரமாக உருவெடுத்து பரவலான வன்முறைகள் இந்துக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படுவதில் போய் முடிந்தது. சுயராஜ்யக்கட்சியைச் சேர்ந்த சித்தரஞ்சன் தாஸ் இந்து-முஸ்லீம்கள் இடையே கொண்டு வந்திருந்த அமைதி உடன்படிக்கையை மீறி வங்கம் ரத்தமயமானது. இந்து மகாசபையை உண்டாக்கி இருந்த மாளவியா உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதில் முக்கியப் பங்காற்றினார். வன்மம் ஐக்கிய மாகாணங்களில் பரவி ஐக்கிய மாகாணத்தில் 1926-31 வருடங்கள் வரையான காலத்தில் மட்டும் எண்பத்தி எட்டு மதக்கலவரங்கள் நடந்தன. அதன் சூடு குறையாமல் பார்த்துக்கொள்ளும் வேலையை மாளவியா செய்தார்.

மே 1926-ல் மசூதிகள் முன்னால் இசை இசைப்போம் என்று இந்துக்கள் முழங்க ஆரம்பித்தார்கள். பத்து நிமிடங்கள் மட்டுமாவது தொழுகை செய்யும் பொழுது இசையை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அலகாபாத் இஸ்லாமியர்கள் வேண்டிக்கொண்ட பொழுது 1915-ல் கும்பமேளாவின் பொழுது ஆரம்பித்த ஹிந்து மகாசபையினை மூலம் அதைக் கடுமையாக எதிர்த்தார் மாளவியா. எப்பொழுதும் தொழுகையைச் சத்தமாகச் செய்யக்கூடாது என்று கறாராகக் குரல் கொடுத்தார். சங்கதன் மற்றும் சுத்தி இயக்கங்கள் இந்து மதத்தைக் காக்க கிளம்பியதாகச் சொல்லிக்கொண்டு செயலாற்றின. ஹிந்து மகாசபை மற்றும் சனாதன தர்ம சபை இணைந்து செயல்படுகிற வேலையை மாளவியா பார்த்துக்கொண்டார். மோதிலால் நேரு மதச்சார்பின்மையோடு எல்லாரையும் இணைத்துக்கொண்டு நகர வேண்டும் என்று சொன்னதால், தேர்தலின் பொழுது, “மாட்டுக்கறி உண்பவர். இஸ்லாமியர்கள் பக்கம் நிற்பவர். இந்து மதத்தின் துரோகி !” என்று அவருக்கு மதச்சாயம் பூசினார் மாளவியா. ஹிந்து மகாசபையே சுயராஜ்யக் கட்சியின் முகமாகப் பல்வேறு இடங்களில் மாறிப்போனது. ஹிந்து தொகுதிகளில் பெருவெற்றி பெறுவதையும் அவர்கள் வடக்கில் சாதித்தார்கள். ‘ஹிந்தி,ஹிந்து,ஹிந்துஸ்தான்’ என்கிற கோஷத்தை மிக வலுவாக முன்னெடுக்கிற போக்கை ஆரம்பித்து வைத்தார் மாளவியா.

காந்தி-அம்பேத்கர் இடையே பூனா ஒப்பந்தம் கையெழுத்து ஆவதில் முக்கியப் பங்காற்றினார் அவர். உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நானூறுக்கும் மேற்பட்ட நபர்களோடு சிறை சென்றார் அவர். அதே வருடம், ‘இந்தியப் பொருட்களை மட்டும் வாங்குங்கள்’, என்கிற திட்டத்தை முன்னெடுத்தார். அதே போல ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் இந்து மதத்துக்குள் சேர்க்க அவர்களுக்கு மந்திர தீட்சை கொடுத்து அவர்களின் ஜாதி போய்விட்டதாக அறிவித்தார் அவர். கலாராம் ஆலயத்துக்குள் இருநூறு தலித்துகள் நுழையும் நிகழ்வை முன்னின்று அவரே நடத்தினார்.

இவர்  ‘தி லீடர்’ என்கிற  ஆங்கில இதழைத் துவங்கினார். அதே போல திவாலாக இருந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழின் ஆசிரியராகி அதன் விற்பனையை உயர்த்தி, ஹிந்தியிலும் அந்த இதழ் வருவதை உறுதி செய்தார்.

1934-ல் சைமன் கமிஷனுக்குப் போட்டியாக இஸ்லாமிய தலைவர்கள் டெல்லி பரிந்துரைகளைக் கொண்டு வந்தார்கள். அதில் சிந்தை தனி மாகாணம் ஆக்குதல், வட கிழக்கு மாகாணத்தைத் தனி மாகாணமாக நடத்துதல், மூன்றில் ஒரு பங்கு இடங்கள் இஸ்லாமியர்களுக்கு மத்திய சட்டசபையில் ஒதுக்குதல், இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும் பஞ்சாப் மற்றும் வங்காள மாகாணங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு என்று அவர்களின் கோரிக்கைகள் நீண்டன.

இதையெல்லாம் சேர்த்துக்கொண்டு கூடவே தனித் தொகுதிகள் உள்ளிட்ட இன்ன பிற கோரிக்கைகளையும் இணைத்துக்கொண்டு ஜின்னா பதினான்கு அம்ச அறிக்கையை உருவாக்கினார். இதற்கு இணையாகக் காங்கிரசின் சார்பாக நேரு கமிட்டி அறிக்கை வந்தது. மேலே இருந்த டெல்லி பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரே ஒரு நிபந்தனை விதித்தது நேரு அறிக்கை. தனித்தொகுதிகளை லீக் விட்டுவிட வேண்டும் என்பதுதான் அது! ஜின்னா அதற்கு இசைந்தாலும் கட்சிக்குள் இருந்த மதவாதிகள் அதை ஏற்க மறுத்தார்கள்.

இன்னொரு புறம் ஹிந்து மகா சபை, சீக்கிய லீக் ஆகியனவும் முஸ்லீம்களுக்கு விட்டுக்கொடுக்கிறார்கள் என்று எதிர்க்க ஆரம்பித்தார்கள். மும்பை காங்கிரஸ் 1934-ல் கூடியது, “காங்கிரஸ் எல்லா மதத்தவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற கட்சியாகவே திகழ்கிறது. நாங்கள் தனித்தொகுதிகளை ஏற்கவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை.” என்றது. மாளவியா கடுப்பாகி இது இஸ்லாமியர்களை ஊக்குவிக்கும் போக்கில் இருக்கிறது என்று தேசிய கட்சியை அதே வருடத்தில் ஆரம்பித்துத் தேர்தலில் நின்று வெறும் பன்னிரெண்டு இடங்களில் தன் கட்சியை வெல்ல வைத்தார். பிரிட்டிஷ் அரசு பல்வேறு தரப்பு கோரிக்கைகளை நிறைவேற்றியது மற்றும் உடல்நலமின்மை ஆகியவற்றால் தீவிர அரசியலில் இருந்து அவர் விலகினார்.

இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்து உள்ளது.

யாருக்கும் சோதனை எலிகள் இல்லை நீங்கள் !


‘யாருடைய எலிகள் நாம்’ என்கிற அண்ணன் சமஸ் அவர்களின் கட்டுரைத்தொகுப்பை நான்கு நாட்களில் வாசித்து முடித்தேன். கட்டுரைத்தொகுப்பிற்குள் நுழைவதற்கு முன்னரே இவையெல்லாம் எடிட் செய்யப்படாத கட்டுரைகள்,அந்தந்த நிறுவனங்களின் ஊடகக்கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றப்பட்ட வடிவத்தில் கட்டுரைகள் இங்கே இடம் பெறவில்லை என்று சொல்வதில் இருந்தே சூடு பிடிக்கிறது நூல்.

இப்படித்தான் என்று ஓரிரு தலைப்புகளில் இந்தக் கட்டுரைகளை வகைப்படுத்த முடியாது என்பதே எப்படிப்பட்ட ஒரு பெரிய முயற்சியை ஒரு ஆளாக தமிழ் வாசிப்புச் சூழலில் அண்ணன் முன்னெடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். எம்.ஜி.ஆர்.,ஜெ.,கருணாநிதி என்று எல்லாரையும் காய்ச்சி எடுக்கும் கட்டுரைகளை வரிசையாக படித்துக்கொண்டு வரும் பொழுதே இவர் எந்த ஒரு சித்தாந்த வகைக்குள்ளும் அடக்கக்கூடியவர் இல்லை,இவர் ஒரு அணியின் ஆளுமை இல்லை என்பதையும் புரிந்து கொள்ள ஆரம்பித்து இருப்பீர்கள். மன்மோகன் மீது ஒரு பக்கம் காட்டமான விமர்சனங்கள் தெறித்து விழும் பொழுதே,மோடி பலூனில் ஊசி இறக்கும் வேலையையும் பேனா செய்து முடித்திருப்பதை காணவியலும்.

தொன்னூறுகளில் சூழலியல் நிருபர்கள் தாரளமயமான சூழலில் வேலையை விட்டு அனுப்பப்பட்டார்கள் அல்லது ஸ்டாக் மார்க்கெட் பற்றி செய்தி சேகரிக்கும் பணிக்கு மாற்றப்பட்டார்கள். அன்றில் இருந்து இன்றுவரை தீவிரமான சூழலியல் சார்ந்த பார்வையை வெகுஜன ஊடகங்களில் முன்னெடுப்பது குறைந்து போயிருக்கும் சூழலில் பூச்சிகள்,புலிகள்,காண்டாமிருகங்கள்,நதிகள்,சேது கால்வாய் திட்டம்,வெப்ப அரசியல் என்று பலவற்றை வெகு தீவிரமாக தொட்டுச்செல்லும் முனைப்பு கட்டுரைகளில் வெளிப்படுவது ஆரோக்கியமான ஒன்று.

மக்கள் மீதான கரிசனம்,ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை என்பவையே கட்டுரைகளின் போக்கை தீர்மானித்தாலும் வெகு தீவிரமான எந்த பக்கத்தையும் எடுப்பதை கட்டுரைகளில் தவிர்க்கவே செய்கிறார். அதற்கு காரணம் எல்லார் பக்கமும் கொஞ்சமேனும் நியாயம் இருக்கவே செய்கிறது என்கிற பார்வை காரணமாக இருக்கலாம். காஷ்மீர் சிக்கலில் இந்தியாவை விட்டு வெளியேறுவது சாத்தியமில்லை,அதற்குள்ளேயே சுயாட்சியை வழங்க வேண்டும் என்பது ஒரு சோறு பதம். சீனாவை முந்துவது என்கிற பெயரில் பண்டைய போர் பாணியில் இருப்பதை விட இணைந்து செயல்படல் எனும் நவீன வெளியுறவுக்கொள்கை மாதிரிகளை உள்வாங்கியே தன்னுடைய கட்டுரைகளை அவர் கட்டமைத்து இருக்கிறார். வெளியுறவுக்கொள்கை சார்ந்த கட்டுரைகளில் ‘வரலாற்றில் நம்முடைய இடம் என்ன ?’ என்கிற கட்டுரை எழுப்பும் கேள்விகள் எல்லாருக்கும் ஆனவை. எகிப்து போராட்டங்களின் பொழுது அமைதி காத்த நம்மை,முக்கியமான போராட்டங்களின் பொழுது எல்லாம் மவுனம் சாதிக்கும் நாம் எப்படி நினைவுகூரப்படுவோம் என்று இந்தியாவை நோக்கி எழுப்பப்படும் அந்த கேள்வி நேருவிய இந்தியனின் குரலே.

ஈழப் போராட்டங்கள் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் மாற்றுக்குரலாக ஒலிக்கின்றன. அவற்றோடு முரண்படலாம்,உங்களிடம் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். ஆனால்,அவற்றை அபத்தம் என்று நிராகரித்து நகர்வது வரலாற்றின் படிப்பினைகள் நம்மை இன்னம் எட்டவில்லை என்பதன் கொடூரமான நினைவுபடுத்தலாக அமையக்கூடும்.

இந்தக்கட்டுரைகளின் ஆகச்சிறந்த அம்சமாக நான் கருதுவது இவை விமர்சித்துவிட்டு மட்டும் நகரவில்லை. தீர்வுகளை முன்வைக்கின்றன. தேசிய போக்குவரத்துக் கொள்கை வேண்டும் என்று எரிபொருள் சிக்கனக்கட்டுரை பேசுகையில்,மாநிலங்களுக்கு மேலும் உரிமை தர ராஜ்ய சபையை வலுப்படுத்த வேண்டும் என்பது கட்டுரை எழுதப்பட்டதற்கு பின்னர் வந்த புன்ச்சி கமிஷன் அறிக்கையோடு ஒத்துப்போவதே தீர்வுகள் இருக்கிற அமைப்புக்குள்ளேயே தீர்வு தேடும் போக்கின் அழகை எடுத்துச் சொல்கின்றன. மதிய உணவு திட்டம் போலவே காலை உணவுத்திட்டமும் வேண்டும் என்பதில் தான் எழுதுபவனின் மனித நேயம் வெளிப்படுகிறது.

வளர்ச்சியை தரமுடியாத இந்திய அரசுகளின் தோல்விகள் எப்படி தாக்கரேக்களுக்கு வழிவிட்டு உள்ளது என்பதை எழுதும் தருணத்தில் நமக்கான எச்சரிக்கை மணி காத்துக்கொண்டு இருக்கிறது. கசாபைப் பற்றிய கட்டுரையில் காட்டுமிராண்டித்தனத்துக்குகாட்டுமிராண்டித்தனமே பதில் இல்லை என்பதை மட்டும் சொல்லிவிட்டு போயிருந்தால் அது இன்னுமொரு கட்டுரையாக மாறியிருக்கும். உள்துறை,வெளியுறவுத்துறை,பாதுகாப்புத்துறை,ஊடகங்கள் என்று எல்லாரின் தவறுகளை பட்டியலிட்டு ஒரு மாபெரும் வாதத்தில் எதிராளியை யோசிக்க வைக்க இவர் எடுக்கும் முயற்சிகளே கட்டுரையை தனித்து தெரிய வைக்கிறது.

மோடி,மன்மோகன்,தமிழ்த்தேசியவாதிகள்,இந்திய தேசியக்காவலர்கள்,திராவிட இயக்கத்தினர்,இந்துத்துவவாதிகள்,இடதுசாரிகள் என்று எல்லரை நோக்கியும் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. “என்னை விட்டு விடாதீர்கள் சங்கர் !” என்று நேரு சொன்னதை தனக்கு சொன்னதாக சமஸ் அண்ணன் எடுத்துக்கொண்டார் போல !

நீதித்துறைக்கு மட்டும் எதற்கு எழுபதுக்கும் மேற்பட்ட விடுதலை நாட்கள் என்று கேள்வி கேட்பதும்,கருப்புச்சட்டங்கள்,என்கவுன்டர் மீதான சரமாரித்தாக்குதலும் சக மனிதனின் மீதான நேசத்தை காட்டுகிறது என்றால் நம்முடைய மனசாட்சியை உலுக்கிக்கொள்ளும் செயலை வெவ்வேறு கட்டுரைகளில் விதைத்தவாறே அவர் நகர்கிறார். உலகத்தமிழ் மாநாட்டின் தோல்விகளுக்கு கருணாநிதி அரசு மட்டுமா காரணம்,நீங்களும் தான் என்பதில் ஆரம்பித்து கல்வித்துறை,சில்லறை வணிகம்,குன்ஹா கட்டுரை வரை இந்தப் போக்கு நீள்கிறது. ஆனாலும்,பெரிய திமிங்கலங்கள் மீது பாய்வது இப்படி சிறுமீன்கள் மீது பாய்வதில் மட்டுப்படுகிறதோ என்கிற சின்ன வருத்தம் உண்டாவதை தவிர்க்க முடியவில்லை.

முல்லைப்பெரியாறு,காவிரி,தெலங்கானா பற்றிய கட்டுரைகளில் நான்கு முதல் எட்டு பக்கத்துக்குள் பெரிய வரலாறு ஒன்றை அடக்கும் அரும்பெரும் பணியை கச்சிதமாக அண்ணன் செய்திருப்பதில் இருக்கிற கடும் உழைப்பை என்னால் உணர முடிகிறது. எந்திரன் என்றொரு எகாதிபத்தியன் எப்படி ரஜினி மாதிரியான பிரம்மாண்ட நடிகரின் படங்கள் சிறு படங்களை நசுக்கிக் கொள்கிறது என்பதை படம் பிடிப்பது தற்போதைய லிங்கா படத்துக்கும் பொருந்தும்.

ஜாதி,மதங்கள் பற்றிய கட்டுரைகளின் பார்வை நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள உதவுபவை. வெறுமனே ஒரு பக்கத்தை மட்டும் பேசாமல்,இன்னொரு பக்கத்தை கட்டுரையின் ஏதேனும் ஒரு பகுதியிலேனும் சொல்லிவிடும் பண்பு அரிதிலும் அரிதானது. ‘கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்ப்பது தான் நம்முடைய நிலையா ?’ என்று கேள்வி கேட்கிற சமஸ் அவர்கள் அதற்கு, ‘இல்லை பதிலும் உண்டு எங்களிடம் !’ என்று பேனாவால் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். யாருடைய எலியாகவும் மாறாமல் சுயமாக சிந்திக்க கதவுகளைத் திறந்துவிடும் கட்டுரைத்தொகுப்பு இது.

புத்தகத்தை வாங்க, தொடர்புக்கு:
thuliveliyeedu@gmail.com
samasbooks@gmail.com
9444204501

— with சமஸ் Samas.