சாந்தி ஸ்வரூப் பட்னாகர்-அறிவியலோடு ஒரு அற்புத வாழ்க்கை !


சாந்தி ஸ்வரூப் பட்னாகர் இந்திய அறிவியல் ஆளுமைகளில் முதன்மையானவர். பரமேஸ்வரி சஹா பட்னாகர், பார்வதி தம்பதிக்கு அவர் மகனாகப் பிரிக்கப்படாத இந்தியாவின் பேராவில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தாலும் இவரின் அப்பா அரசுப் பணிகளுக்குப் போக மறுத்து பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றிப் பல ஏழைக்குழந்தைகளுக்குக் கல்வி புகட்டினார். அவர் சாந்தி ஸ்வரூப் பத்து மாத சிறுவனாக இருக்கும் பொழுது குடும்பத்தைக் கடும் வறுமையில் விட்டுவிட்டு இறந்து போனார். பட்நாகரின் அன்னையின் தந்தை அப்பொழுதே பொறியியலில் படம் பெற்றார். இவரின் கல்விக்கான வேலைகளை அவர் பார்த்துக்கொண்டார். அறிவியலில் அவரிடம் இருந்து ஆர்வம் தொற்றிக்கொள்ளப் பதினேழு வயதில் கார்பன் பேட்டரிக்களில் இருக்கும் மின்முனைகளுக்கு மாற்றாகக் கரும்புச்சக்கைகள், கரிம பொருட்களை அழுத்தத்தில் வெப்பமூட்டி மின்முனைகள் தயாரிப்பது பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதினார்.

பார்மன் கிறிஸ்துவக்கல்லூரியில் லாகூரில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பயின்றார். நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞர் காம்ப்டனின் சகாவான பெனடே எனும் பெயர் கொண்ட பேராசிரியர் இவருக்கு ஆசிரியராக அமைந்தார். முதுகலையில் வேதியியல் பட்டத்தை அதே கல்லூரியில் பெற்ற பட்னாகர் பெனடேவின் கீழ் ஆய்வுகள் செய்தார். முதுகலைப் பட்ட ஆய்வை , ’நீரின் பரப்பு இழுவிசையின் மீது பரப்புக் கவரப்பட்ட வாயுக்களின் தாக்கம்’ என்கிற தலைப்பில் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் போய் மேற்படிப்புப் படிக்கக் கப்பல் பயணம் போனவர், முதல் உலகப்போரால் அமெரிக்காவுக்குச் செல்லும் எல்லாக் கப்பல்களும் ராணுவ வீரர்களால் நிரம்பியிருந்ததால் இங்கிலாந்திலேயே படிக்க முடிவு செய்தார். அங்கே மூவிணை, ஈரிணைத் திறன் கொண்ட கொழுப்பு அமிலங்களின் உப்புகள் எண்ணெய்களில் கரைவதால் அவற்றின் பரப்பு இழுவிசையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து DSc பட்டம் பெற்றார்.

ஆரம்பித்து ஐந்து வருடங்களே ஆகியிருந்த பனராஸ் இந்து பல்கலையில் மூன்று வருடங்கள் பேராசிரியராகப் பணியாற்றிய பின்னர், பஞ்சாப் பல்கலையில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் வேலை பார்த்தார். இந்தக்காலத்தில் கூழ்ம மற்றும் காந்த வேதியியல் துறைகளில் எண்ணற்ற ஆய்வுகள் செய்தார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். இவற்றோடு நில்லாமல் தொழிற்துறை சார்ந்த சிக்கல்களிலும் அறிவியல் அறிவை பயன்படுத்தித் தீர்வுகள் கண்டார் அவர். அட்டாக் எண்ணெய் நிறுவனம் எண்ணெயை நிலத்தில் இருந்து தோண்டி எடுக்க ஒருவகையான மண்ணைப் பயன்படுத்திக்கொண்டு இருந்தது. உப்புத்தண்ணீர் அதன் மீது பட்டால் அப்படியே கெட்டியாகி அதற்கு மேல் தோண்ட முடியாதவகையில் அடைத்துக்கொண்டு அந்த மண் சிக்கல் தந்தது. பட்னாகர் இந்தியப்பசை ஒன்றை அதில் கலந்து சிக்கலைத்தீர்த்தார். 1925-ல் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அவருக்கு ஒன்றரை லட்ச ரூபாயை அந்த நிறுவனம் தர முன்வந்தது. அதில் பைசா கூடத் தன் பெயருக்கு வாங்கிக்கொள்ளாமல் அப்படியே பெட்ரோலியத் துறை ஒன்றை பஞ்சாப் பல்கலையில் உருவாக்க பட்னாகர் கொடுத்துவிட்டார்.
கே.என்.மாத்தூர் எனும் சக விஞ்ஞானியுடன் இணைந்து வெவ்வேறு சேர்மங்களின் வேதியியல் பண்புகளைக் கண்டறியும் ‘Bhatnagar-Mathur light interference
Balance’-ஐ உருவாக்கினார்கள். அதை வியாபார ரீதியாகவும் பெரிய வெற்றி பெறுவதை உறுதி செய்தார்கள். மெக்மில்லன் நிறுவனத்தில் ‘Physical
Principles and Application of Magneto-chemistry’ என்கிற மிக முக்கியமான பாடப்புத்தகத்தை இருவரும் எழுதினார்கள். அது பல்வேறு சர்வதேச பல்கலைக்கழகங்களில் பாடநூலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எமல்ஷன் எனப்படும் நீர்மப்பொருட்களில் இரு வகையான திரவங்கள் பிணைந்திருக்கும். எடுத்துக்காட்டுக்குப் பாலில் கொழுப்பும், நீரும் பிணைந்து இருக்கிறது. அவற்றை ஆனாலும் பிரிக்க முடியும். இந்த எண்ணெய்யில் நீர் இருக்கிற எமல்ஷன்கள், நீரில் எண்ணெய் இருக்கும் எமல்ஷன்கள் ஆகியவற்றை நீரில் எண்ணெய் இருக்கும், எண்ணெயில் நீர் இருக்கும் எமல்ஷன்களாக மாற்றும் தலைகீழ் முறையை இவரே உலகுக்கு நேர்,எதிர்மின்னோட்டங்கள் கொண்ட மின்முனைகள் மூலம் செய்யமுடியும் என்று நிரூபித்தார்.

உலகப்போர் சமயத்தில் பட்னாகர் உருவாக்கிய உடையாத கொள்கலன்கள் அமெரிக்க ராணுவம் வரை பயன்பட்டுப் புகழ்பெற்றது. அந்தப் பாத்திரங்களில் திரவங்களை மிக அதிகமான உயரத்தில் இருந்து விமானங்களில் இருந்து வீசுவது சாத்தியமானது. பன்னிரண்டு மணிநேரம் வரை எரியக்கூடிய வத்திப்பெட்டியை விடச் சற்றே பெரிய கேஸ் ஸ்டவ்வை அவர் உருவாக்கினார். கம்பளி உடை போன்ற கதகதப்பைத் தரும் பருத்தி ஆடையை அவர் தயாரித்தார். விஷ வாயுக்களில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்களையும் அவர் உருவாக்கினார்.

1-4-1940 அன்று அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆணையத்தைத் தன்னுடைய முயற்சிகளால் ராமசாமி முதலியார் ஆங்கிலேய அரசை உருவாக்கச்செய்த பொழுது அதை வழிநடத்த பட்னாகரையே அழைத்தார். இந்த அமைப்புக் காய்கறிகளில் இருந்து எண்ணெய், எரிபொருள் தயாரிப்பது, ராணுவ ஆயுதங்களுக்குப் பிளாஸ்டிக் உறைகள் தயாரிப்பு, வைட்டமின் உருவாக்கம், பைரித்ரியம் க்ரீம் உருவாக்கம் ஆகியவற்றில் வருட நிதி ஒதுக்கீடான ஐந்து லட்சத்தைக் கொண்டு செயல்பட்டது. தொழிற்துறை தேவைகளைப் பூர்த்திச் செய்ய இன்னுமொரு அமைப்பை இதன் கீழேயே துவங்கவேண்டும் என்று ராமசாமி-பட்னாகர் இணை கேட்டுக்கொள்ளத் தொழிற்துறை ஆய்வு பயன்பாட்டு கமிட்டி உருவாக்கப்பட்டு வருடத்துக்குப் பத்து லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இவ்வளவு நிதியைக் கையாள ஆய்வுகளுக்கு என்று தனித்த கவனம் செலுத்தும் சுயாட்சி கொண்ட அறிவியல் மற்றும் தொழிற்துறை கவுன்சில் (CSIR) உருவாக்கப்பட்டது. அதன்கீழே மேலே சொன்ன இரண்டு அமைப்புகளையும் கொண்டுவந்தார்கள். விடுதலைக்குப் பின்னர் நேரு தன்னுடைய நேரடி கவனிப்பின் கீழ் CSIR அமைப்பை கொண்டுவந்தார். பட்னாகர் நூற்றுக்கணக்கான அறிவியல் அறிஞர்களை இணைத்துக்கொண்டு தான் உயிருடன் இருந்த அடுத்தப் பதிமூன்று ஆண்டுகளில் இந்தியா முழுக்க உலகத்தரமான பன்னிரெண்டு ஆய்வகங்களை வேதியியல், இயற்பியல், தோல் ஆய்வு, உலோகவியல், எரிபொருள் ஆகியவற்றில் செய்ய உருவாக்கினார். அதனோடு மேலும் ஒரு பன்னிரெண்டு ஆய்வகங்களுக்கான திட்டங்களை வகுத்துத் தந்துவிட்டு இறந்துபோனார்.

இந்த அமைப்புப் போகக் கழிவுகளில் இருந்து பிளாஸ்டிக் தயாரிக்கப் பாலிமர் வேதியியல் துறையைப் பூனாவிலும், மோனோசைட்டை கேரளாவில் இருந்து பிரித்தெடுக்க இந்திய அபூர்வ தனிமங்கள் அமைப்பை அவர் உருவாக்கினார். தேசிய ஆய்வு வளர்ச்சிக் கழகத்தை அவர் துவங்கி தொழிற்துறை சார்ந்த பொருட்களை ஆய்வுகளின் மூலம் உருவாக்கும் அமைப்பாக அதை மாற்றினார். மத்திய அரசில் கல்விச் செயலாளருக்கு ஆலோசகராகவும் அவர் திகழ்ந்தார். பல்வேறு தனியார் நிறுவனங்களை இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பில் ஈடுபடச்செய்வதை அவர் உறுதி செய்தார். தன்னுடைய எழுத்துக்கள், காப்புரிமைகள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த வருமானம் எதையும் தனக்கு என்று வைத்துக்கொள்ளாமல் முழுக்க இந்திய அறிவியல் ஆய்வுகளுக்கே வழங்கிவிட்ட அவர் இந்திய அறிவியலின் வேக வளர்ச்சிக்கான அடித்தளமிட்டவர்களில் முக்கியமானவர். அவரின் பெயரால் CSIR ஆய்வுகளில் சிறந்து விளங்கும் அறிவியல் அறிஞர்களுக்கு விருது வழங்குகிறது.

Advertisements

One thought on “சாந்தி ஸ்வரூப் பட்னாகர்-அறிவியலோடு ஒரு அற்புத வாழ்க்கை !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s