சாகாவரம் பெற்ற HeLa என்கிற ஹென்றியாட்டா லேக்ஸ்!


அறுபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஒரு இயல்பான நாளில் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனைக்குக் கறுப்பினப் பெண்மணியான ஹென்றியாட்டா லேக்ஸ் வந்திருந்தார். உலகைப் புரட்டிப் போட போகும் ஒன்று தனக்குள் வளர்ந்து கொண்டிருப்பது அவருக்கு அப்பொழுது தெரியாது. வறுமையான சூழலில் தெற்குப் பகுதியை விடுத்து வடக்கு நோக்கி நகர்ந்த எண்ணற்ற குடும்பங்களில் ஹென்றியாட்டாவின் குடும்பமும் ஒன்று. ஆறாவது கிரேட் வரை முடித்த ஹென்றியாட்டாவும் அவளின் கணவனும் கடுமையான வேலைகளைச் செய்தே பசியாறிக்கொண்டு இருந்தார்கள். மூன்று குழந்தைகள், வேசிகளிடம் நேரத்தை கழித்த கணவன் கொடுத்த சிபிலிஸ் எல்லாமும் பாடுபடுத்திக் கொண்டு இருந்தன.

பால்டிமோரில் இருந்த ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனை ஏழை மக்களுக்கு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் நம்பிக்கை தந்த இடம். ஜான் ஹாப்கின்ஸின் தந்தை அடிமை முறையை லிங்கன் நீக்குவதாக அறிவிப்பதற்கு ஐம்பது வருடங்களுக்கு முன்பே அடிமைகளை விடுவித்தவர். ஜான் ஹாப்கின்ஸ் எழுபது லட்சம் டாலர் சொத்துக்களைத் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் ஒரு மருத்துவமனையை ஆரம்பிக்க ஏழை, எளியவர்களுக்கு ஆரம்பிக்க எழுதி வைத்துவிட்டுப் போனார். அங்கே தான் ஹென்றியாட்டா நின்று கொண்டிருந்தார்.

அவரைச் சோதித்துப் பார்த்துக் கழுத்தில் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்தார்கள். பாதிக்கப்பட்ட பகுதியை அறுவை சிகிச்சையின் மூலம் கிழித்து அங்கே ரேடியத்தைத் தைத்து அனுப்பி வைத்தார்கள். டேலிண்டே என்கிற மருத்துவர் புற்றுநோய் ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அன்றைய சூழலில் இலவசமாக மருத்துவம் பார்க்க வருகிற மக்களே பெரும்பாலும் மருத்துவர்களின் சோதனை எலிகளாக இருந்தார்கள். அவர் திசு வளர்ப்புத் துறையின் தலைவராக இருந்த ஜார்ஜ் ஓட்டோ கையிடம் கேன்சர் நோயாளிகளின் திசுக்களைப் பெற்று ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கை அவர்களும் ஆய்வு நோக்கில் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று அவற்றைத் தொடர்ந்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அப்படி ஹென்றியாட்டாவின் புற்றுநோய் திசுக்களை எடுத்து பத்திரப்படுத்தி அவற்றின் திசுக்களை எடுத்து வளர்ப்பு ஊடகத்தில் வளரவிட்டார். அங்கே தான் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. மற்ற செல்கள் மெதுவாக வளரும் பண்பு கொண்டிருந்த சூழலில் HeLa என்று பெயரிடப்பட்ட ஹென்றியாட்டாவின் செல்கள் அதிவேகமாக வளர்ந்தன. கண்ணாடிக் குடுவைகளில் மட்டுமே மற்ற செல்கள் வளர்ந்த பொழுது ஊடகம் இருந்தால் மட்டுமே போதும், வளர்ந்து தள்ளுகிறேன் என்று HeLa செல்கள் வேகம் காட்டின. பிரமித்துப் போனார் ஜார்ஜ் கை. விஷயத்தை உலகுக்குச் சொன்னார். கேட்டவர்களுக்கு எல்லாம் HeLa செல்களை விமானத்தின் மூலம் லாப நோக்கமில்லாமல் அனுப்பிக்கொண்டே இருந்தார்.
ஒன்றரை மாத இடைவேளையில் ஹென்றியட்டாவின் புற்றுநோய் வேகமெடுத்து அவர் இறந்து போக நேர்ந்தது. அவரின் கணவரிடம் உங்களின் மனைவியின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்வது உங்கள் பிள்ளைகளுக்குப் பயன்படும் என்று சொல்லி அதே HeLa செல்களைப் போல மற்ற புற்றுநோய் பாதித்த பகுதிகளின் செல்களும் நடந்து கொள்கின்றனவா என்று பார்க்க திசுக்களைச் சேகரித்தார் ஜார்ஜ் கை. இல்லை! அப்படி அவை வேகமாகவோ, எங்கேயுமோ வளரவில்லை.

.போலியோவுக்கான தடுப்புமருந்து கண்டுபிடிப்பு அவசியம் என்கிற அளவுக்கு அமெரிக்காவே போலியோ பீதியில் உறைந்திருந்த காலம் அது. ஜோனஸ் சால்க் ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருந்தார். அதைப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய ஒரே மாதிரியான செல்கள் தேவைப்பட்டன. மின்னிசோட்டா பல்கலையில் ஆய்வு மாணவராக இருந்த வில்லியம் ஷெரர் என்கிற ஆய்வாளர் போலியோ வைரஸை HeLa செல்களின் மீது செலுத்திய பொழுது அவை அவற்றை ஏற்றுக்கொண்டு வளர்ந்தன. அதிர்ந்துபோன அவர் எக்கச்சக்க HeLa செல்களை உற்பத்தி செய்யச்சொன்னார். அதைக்கொண்டு ஜோனஸ் சால்க்கின் தடுப்பு மருந்தை பெரிய அளவில் உற்பத்தி செய்து மக்களிடம் சோதிக்க முடியும் என்கிற அவரின் ஐடியாவை ஜார்ஜ் கையும் வரவேற்றார். அவ்வளவு பெரிய அளவில் செல்களை உருவாக்க என்ன செய்வது என்று அரசு யோசித்தது. டஸ்கீ பல்கலையிடம் பொறுப்பை ஒப்படைத்தார்கள்.

அமெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டில் கூட மருத்துவச் சோதனைகள், மருந்துகளைச் சோதித்தல் ஆகியவற்றுக்குக் கறுப்பின மக்களைப் பயன்படுத்தும் போக்கு இருந்தது. நிறவெறி தந்த கருப்பு நிறம் கொண்டவர்கள் கேவலம் என்கிற எண்ணம் மற்றும் அவர்களின் வறுமை ஒரு கருப்பு அத்தியாத்தை எழுத வைத்தது. டஸ்கீ பல்கலையில் முப்பதுகளில் சிபிலிஸ் எனப்படும் பால்வினை நோய் எப்படிப் படிப்படியாக ஒரு மனிதனை பாதிக்கிறது என்று உணர பல நூறு ஏழை கருப்பினததவர்களைப் படிப்படியாகச் சாகவிட்டு மாணவர்களுக்குப் பாடம் எடுத்தார்கள். அவர்களுக்குச் சூடான சாப்பாடு, ஊர் சுற்றிக் காட்டல், இறந்த பிறகு அடக்கம் செய்யப் பணம் ஆகியவற்றை உறுதி செய்து வாயைக் கட்டிப்போட்டார்கள். பெனிசிலின் மருந்து சிபிலிஸ் நோயை குணப்படுத்தும் என்று தெரிந்தும் கள்ள மவுனம் காத்து செவ்வனே ஆய்வு செய்தார்கள்.

மிசிசிப்பியில் இன்னமும் கொடுமையாகக் கறுப்பின பெண்களுக்கு அவர்கள் அனுமதியில்லாமலே கருத்தடை செய்வதை நிகழ்த்தினார்கள். மருத்துவம் பயிலும் மாணவர்கள் கருத்தடை செய்து பயிற்சி செய்யக் கறுப்பின பெண்களின் கருப்பைச் சோதனைக்களமாக அனுமதியின்றி மாரியன் கொடுமைகள் நடந்தன. இவற்றுக்குப் பிராயசித்தம் தேடுவது போல டஸ்கீ பல்கலையில் HeLa செல்களை வளர்த்து போலியோ தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் பொறுப்பு கறுப்பின ஆய்வாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அப்படிப் பெறப்பட்ட மருந்து பல லட்சம் மக்களைக் காப்பாற்றியது.

HeLa செல்கள் உலகம் முழுக்க ஆய்வுகளில் பயன்பட ஆரம்பித்தது. ஹெச்.ஐ.வி,, புற்றுநோய் ஆய்வுகள், அம்மை நோய்கள், மூளைக்காய்ச்சல் என்று எல்லாவற்றுக்கும் இந்தச் செல்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டன. விண்வெளிக்கு அமேரிக்கா விண்கலத்தை அனுப்பிய பொழுது இந்தச் செல் இருந்த வயல்கள் கூடவே போயின. வான்வெளியில் அதிவேகமாக வளர்ந்து இந்தச் செல்கள் அதிர்ச்சி தந்தன. அணுசக்தி செல்கள் மீது என்ன தாக்கம் ஏற்படுத்துகிறது என்று அறியவும் இதே செல்களைப் பயன்படுத்தினார்கள்.
சௌத்தம் என்கிற ஆய்வாளர் இந்தச் செல்களைக் கொண்டு செய்த வேலை இன்னமும் அதிர்ச்சி ரகம், புற்றுநோயால் தான் HeLa செல்கள் இப்படி வேகமாக வளர்கின்றன என்று உணர்ந்த கொண்ட அவர் அந்தச் செல்களை மக்களில் செலுத்தி ஆய்வு செய்ய முடிவு செய்து ,’கேன்சர் ஆய்வு செய்ய இருபத்தி ஐந்து பேர் தேவை.’ என்று விளம்பரம் கொடுத்தார்.

HeLa செல்களை அது புற்றுநோயின் தன்மை கொண்டு வேகமாக வளரக்கூடியது என்பதை மறைத்து செலுத்தினார். பின்னர் உண்மை தெரிந்து பலர் அதிர்ந்தார்கள். புற்றுநோயாளிகளில் முன்னூறு பேருக்கும், சாதாரண மக்களில் முன்னூறு பேருக்கும் இந்தக் கேன்சர் செல்களைச் செலுத்தி ஆய்வு செய்து அதிர்ச்சி கொடுத்த அவரைப் பெரிதாகத் தண்டிக்காமல் விடுதலை செய்தார்கள்.

ஹென்றி ஹாரிஸ், ஜான் வாட்கின்ஸ் எனும் இரு ஆய்வாளர்கள் எலியின் க்ரோமோசோம்களோடு HeLa செல்களைக் கலந்து செய்த பொழுது HeLa செல்கள் படிப்படியாக இறப்பதைக் கண்டார்கள். இதன் விளைவாக மனித குரோமோசோம் வரைபடம் என்கிற அற்புதம் சாத்தியமானது.
ஜார்ஜ் கை தான் HeLa செல்கள் உலகுக்கு அறிமுகம் ஆவதற்குக் காரணம் என்றாலும் அவர் அதை லாபம் சம்பாதிக்கும் ஒரு மூலதனமாகப் பார்க்கவில்லை. அந்தச் செல்களைக் கொண்டு தான் செய்த பல்வேறு ஆய்வுகளைப் பற்றி ஆய்வுத்தாள்கள் வெளியிட சொன்னதற்குக் கூட அவர் மறுப்பே தெரிவித்தார். எளிமையான வாழ்க்கை வாழ்ந்து அவர் இறந்துபோனார். ஆனால், HeLa செல்களுக்கு எக்கச்சக்க கிராக்கி இருப்பதை உணர்ந்த Biological associates நிறுவனம் அதைத்தயாரித்துக் கோடிகளை ஈட்டியது. அடுத்து இன்விட்ரோஜென், பையோவிட்டேகர் நிறுவனங்களும் இந்தக் கொள்ளையைத் தொடரவே செய்தன. இந்த வருமானத்தில் பைசா கூட ஹென்றியட்டாவின் கஷ்டப்படும் குடும்பத்திற்குப் போய்ச்சேரவில்லை.

ஏன் ஹென்றியாட்டாவின் செல்கள் மட்டும் இப்படி ஓயாமல் அறுபது ஆண்டுகளைக் கடந்தும் வளர்ந்தவண்ணம் உள்ளன? அவரின் கேன்சர் திசுக்களைச் சோதித்துப் பார்த்ததில் பதில் கிடைத்தது. HPV எனப்படும் HUMAN PAPILLOMA VIRUS மனித டி.என்.ஏ.வைத் தாக்குகிறது. அது புற்றுநோயை உற்பத்தி செய்யக்கூடிய புரதங்களைத் தயாரிக்கும் டி.என்.ஏ.வை மனித உடம்பில் இணைக்கிறது. அப்படிப்பட்ட HPV தாக்குதலுக்கு ஹென்றியட்டா உள்ளாகி இருக்கிறார். மனித செல் பிரியும் பொழுது டெலோமியர் எனப்படும் குரோமோசோம் முனைகள் சுருங்கிக்கொண்டே போகும். வயதாக வயதாக டெலோமியர்கள் நீளத்தில் வெகுவாகச் சுருங்கிவிடும். ஆனால், இந்த HPV பாதிப்பால் HeLa செல்கள் மட்டும் telomerase என்கிற நொதியால் ஓயாமல் டெலோமியர்களை வளர்த்துக்கொண்டே இருக்கிறது. அதனால் செல்களும் ஓயாமல் வளர்ந்தவாறே உள்ளன.

அவரின் குடும்பத்து உறுப்பினர்களுக்கு ஹென்றியாட்டா இறந்து இருபத்தி இரண்டு வருடங்கள் கழித்து உலகம் முழுக்க பல்வேறு செல்களில் HeLa செல்கள் கலந்துள்ளன என்று உணரப்பட்டதும் டி.என்.ஏ. சோதனைகளுக்காக லேக்ஸ் குடும்பத்து உறுப்பினர்களின் ரத்தம் கேட்கப்பட்ட பொழுதுதான் அவர்களுக்கு அந்த செல்கள் எப்படி உலகம் முழுக்க பயன்பட்டிருக்கின்றன என்று புரிந்தது. ஜெர்மனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் HeLa செல்களின் ஒட்டுமொத்த ஜீனோமை (எங்கே எந்த ஜீன் இருக்கிறது ) என்கிற விவரத்தை குடும்பத்தினர் அனுமதியில்லாமலே வெளியிட்டார்கள். இதில் உள்ள சிக்கல் அவரின் வாரிசுகளின் சொந்த வாழ்க்கை மற்றும் உடல்நலம் பற்றி உலகமே அறிந்துகொள்ளும் ஆபத்து உண்டு என்பதுதான். தற்பொழுது அவரின் குடும்பத்தினர் மற்றும் அமெரிக்க உடல்நல மையம் இரண்டுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின்படி இனிமேல் HeLa செல்களை பயன்படுத்த விரும்பும் ஆய்வாளர்கள் ஆறு உறுப்பினர் கமிட்டியிடம் அனுமதி வாங்கவேண்டும். அதில் இரண்டு ஹென்றியாட்டா குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் இருப்பார்கள். செய்யப்படும் ஆய்வுகளில் நன்றி என்று ஹென்றியாட்டா குடும்பத்தினர் பெயரும் குறிப்பிடப்படவேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

நம்முடைய அன்றாட மருந்துகளில் துவங்கி நமக்குப் பயன்படும் பல்வேறு மருத்துவ ஆய்வுகள் வரை அனைத்திலும் அமைதியாகக் கலந்து இருக்கிறாள் ஹென்றியாட்டா லேக்ஸ்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s