நண்பர்களின் முன்னாள் காதலோடு நட்பாய் இருப்பது சுலபமில்லை;
பிரிந்த கதை கேட்டல் கூடாது.
தூர்ந்து போன நினைவுகளை கிளறக்கூடாது..
மீண்டும் சேருவீர்களா என்று அடிக்கடி துளைத்தல் தவிர்த்தல் நலம்…
கண்ணீர் விடுகையில், ‘அவன்/அவள் தானே காரணம்!’ என்று கொதித்தல் தவிர்க்கப் பழக வேண்டும்.
பைத்தியக்கார விடுதியின் புது இருக்கையில் அமர்ந்தபடி
தேநீர் அருந்துகையில் கத்தி ஒன்று ஏந்தி கையறுக்கிறேன் என்று அவர் சொல்கையிலும் புன்னகைக்க வேண்டும்.
‘நீ தான் என் ஒரே நண்பன்.’ என்கிற பொய்களை
உண்மையென்று நம்பி ரசிக்க வேண்டும்
கையருகே அலைபேசி வைத்துக்கொண்டு அழைப்பு வருகையில்
அலறிச் செல்ல வேண்டும்…
‘இத்தனை பாடுபடுகிறேன்’ என்று எங்கும் புலம்பாமல் பூத்தவாறே
சிரிக்கப் பழகிவிட்டால் இன்னும் சில நண்பர்களின் முன்னாள் காதலர்கள் உங்களை நாடிவரலாம்.
அல்லது காவலர் காலைத்தூக்கம் கெடுத்து குற்றப்பத்திரிக்கையில்
உங்களை இணைக்க எத்தனிக்கலாம்.